PDA

View Full Version : உள்ளம் கேட்குமே அதிகமென்றுஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
31-07-2008, 05:58 PM
என் விழித்தலுக்கு முன்பாகவே
என் கவலைகள் விழித்துக்கொள்கின்றன

ஒவ்வொரு கதிரவக் கதிரிலும்
ஒராயிரம் சோதனைகள் பாய்வதாய்
ஒரு பிரமிப்பு உள்ளுக்குள்

சொல்லி வைத்தாற் போல்
ஒவ்வொரு எட்டுக்களிலும் தோல்வி
வரிந்து கட்டி துரத்துகிறது

இன்னுமொரு முறை
இதுதான் கடைசி முறையென்று
ஓராயிரமாவது முறையாய்
ஏதோவொன்று என்னை முடுக்குகிறது

நீராழத்திற்குள் சென்றுவிட்ட
நீச்சல் படிக்காதவனாய்
அவ்வப்போது மேலெழும்பி
சுவாசித்து
பின் அமுங்கிப்போகும்
மரண விளையாட்டுக்கள்தான்
என் நிஜ வாழ்க்கையிலும்

கூடிப் பறக்கும் பறவைகள்
ஓடித் திரியும்
கால்நடைகளெல்லாம்
என் காதில் உபதேசமிட்டுச் செல்லும்
கீழான நிலைக்கு
தள்ளப்பட்டதைப் போன்ற
பிரமை அடிக்கடி நிகழ்கிறது

எல்லாம் அச்சுப்பிசகாமல்
சரியாய் தொடர்ந்து கொண்டிருந்தாலும்
என் உலகம் மட்டும்
அப்படியே நிற்கிறது

வருடிச்செல்லும் தென்றலும்
பச்சைப்பசேல் தாவரங்களும்
என் உலகில் மட்டும்
மறைந்து போயிருக்கின்றன

சூரியன்கள் அற்ற இருள்களும்
வசந்தம் மறந்த
இலையுதிர் காலங்களும்தான்
என் உலகை
ராஜ்ஜியமிட்டுக் கொண்டிருக்கின்றன.

எல்லாம் முரண்படும் என் உலகில்
எல்லாம் என் விரல் சொடுக்குகளில்
நடந்தேறிக் கொண்டிருப்பதைப்போன்ற
கர்வம் மட்டும் எனக்குள் நீங்காமல்.

சிரத்தையுடன் தொடர்ந்தாலும்
நம்மை முந்தவியலா நிழல் போல்
எல்லாம் இருந்தும்
இல்லாத ஒன்றை நோக்கிய பயணங்கள்
நம் கால்களை விட்டு
பிற தோள்களில் பயணிக்கும் வரை
முற்றுப் பெற போவதில்லை.

பூமகள்
31-07-2008, 06:26 PM
தோல்விகளின் தழுவலிலேயே..
காலம் கரைந்து கொண்டிருக்க...

வெற்றியின் வாசற்படிகள்..
கண்ணுக்கு சிக்காமலே...!!

பலரின் வாழ்க்கையில்
இவை நிஜம்..!!

தோல்விகள் இல்லாத
வெற்றி யாருக்கும் சுவைக்காது..!!

தோல்விகளே நம்மைப் புடம் போட
தகுந்த தட்பவெட்பமெனச் சொல்வேன்..!!

புடம் போட்ட தங்கம்
ஜொலிப்பதைப் போல...

மனிதர் மின்ன...
மருந்தாக தோல்விகள்
கட்டாயம் தேவை..!!

கவிதை வரிகள் நிஜமான வலி சொல்கிறது..!!
கவிநாயகராகி உணர முடிகிறது..!!


பாராட்டுகள் ஜூனைத் அண்ணா..!!

shibly591
01-08-2008, 05:16 AM
தெளிவான வரிகளுடனே...அழகான கவிதை..ஆனாலும் வலிக்கச்செய்கிறது

அதுவே இக்கவிதையின் வெற்றி...

வாழ்த்துக்கள் நண்பரே....

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
01-08-2008, 08:26 AM
மிக்க நன்றி சகோதரர் ஷிப்லிக்கும் சகோதரி பூமகளுக்கும்.

இளசு
03-08-2008, 12:22 AM
கடைசி வரியில் மரண ஊர்வலம் சொன்ன விதம் அசர வைத்தது..


மரணம் மட்டுமே என்னை நிறுத்தும் என்ற உறுதி போதுமே!
பாதை கரடு முரடானாலும் - பயணம் தொடர...

மனவெறுமையை இத்தனை சொல்லடுக்கில் நிரப்பிய
வளமைக்கு வாழ்த்துகள்..

தாவரங்கள், விலங்கினங்களிடமும் பாடம் கற்கலாம் என்பதைத் தவிர
மற்ற வரிகள் அத்தனையையும்
மன அழற்சி கொண்டவர் பார்வையில் மறுக்காமல் ஏற்கலாம்..

கவிதைக்குப் பாராட்டுகள் ஜூனைத்!

poornima
03-08-2008, 07:05 AM
//நம் கால்களை விட்டு
பிற தோள்களில் பயணிக்கும் வரை
முற்றுப் பெற போவதில்லை.
//

இதே வரிகளை எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட வந்தால் ஏற்கனவே இளசு அவர்கள் அதையே தம்பின்னூட்ட ஆரம்ப வரிகளாய் குறிப்பிட..

மேலே என்ன சொல்ல இந்த கவிதையைப் பற்றி..?

ஆமாம் நண்பர் சுனைத் ஹஸ்னி அவர்களே என்ன உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவைகளில் துக்க ஃபிலாசபியே மணக்கிறது.முதலில் உங்களை சுடருக்கு அழைக்க வேண்டும்