PDA

View Full Version : தலை எழுத்து.



அமரன்
31-07-2008, 04:56 PM
தமிழர் கல்வி கலை பண்பாட்டு மேம்பாட்டுக் கழகம் என்ற பெயர்கொண்ட வளாகத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அந்தக் கல்யாணமண்டபம். ஏறத்தாழ ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தை தனி ஒருவனாகச் சுத்தம் செய்து கதிரைகளை ஒழுங்காக்கியபடி இருந்தான் கதையின் நாயகன் பொம்மன். ஜேர்மனியன்.. கழக வளாகக் கடைநிலை ஊழியர்களின் மேலாளன். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனை விட்டு விட்டு மண்டபத்தின் மேடைக்குப் போவோம்.


மேடையில் மூவர்... நடுநாயகமாக இருப்பவன் செல்வா. கழகத்தின் நிர்வாக இணைப்பாளர்களில் ஒருவன். லண்டனில் அமைந்துள்ள தாய்க்கழகத்திலிருந்து ஜெர்மனிக்கு பயிற்சிப்பட்டறை நடத்த வந்திருந்தான். கடந்த இருவாரமாக இடைவிடாது நடந்த பட்டறையின் மிச்சமாக அவன் முகத்தில் களைப்பும் மேசையில் சில கோப்புகளும் இருந்தன. களைப்புக் கூட களை கொடுக்கும் முகமாக அமைந்திருந்தது செல்வாவின் சிறப்பு. அந்தச்சிறப்புடன் பட்டறை பற்றி அறிக்கை தயாரித்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜெர்மன் கழகப்பொறுப்பாளரும் துணைப்பொறுப்பாளரும் அவனுக்கு உதவியபடி இருந்தார்கள். அப்பப்போ பட்டறையின் பூரண வெற்றிக்கு கட்டியம் சொல்லும் செயற்றிட்ட அமுலாக்கம் தொடர்பான ஆலோசனைகள் மோதிக்கொண்டன. மோதல் அதிகரித்த போது குரலில் அதிகாரம் கலந்து உத்தரவுகளைக் கொடுத்தான்.

எல்லாம் முடிந்த எல்லாரும் போனபின்னர் மண்டபத்தில் செல்வாவும் பொம்மனும் மட்டும்.. அவர்கள் பேசிக் கொள்ளும் அரைகுறை தமிழும் உடைந்த டொச்சும் உங்களைக் கொல்லாதிருக்க உரையாடல் பெயர்ப்புடன் தொடர்வோம்..
பட்டறையை இன்று முடித்தே ஆகவேண்டிய நிலை. அதனால் மதியபோசனம் செல்வாவின் பசியை அடக்கவில்லை. அன்னபூரணன் (அன்னபூரணிக்கு எதிர்பால்) பொம்மனைக் கேட்டான்.

பொம்மன்.. சாப்பிட என்ன இருக்கு..

மத்தியானக் கறிகளும் புட்டும் இருக்கு..

புட்டு எப்பத்தையான்..

பின்னேரத்தான்... வழக்கமான கடையிலதான் எடுத்தனான்.. நல்லா இருகும் செல்வா..

சரி வா.. சாப்பிடுவம்..

சாப்பிடும்போது பொம்மனிடம் கேட்கவென பிடித்து வைத்த கேள்விகளை திறந்துவிட்டான் செல்வா..

உனக்கு வீடு சொந்தம் எதுவுமே இல்லையா பொம்மன்..

இல்லை செல்வா. எங்கே எப்படிப் பிறந்தேன் என்று தெரியாது. ஆனால் தெரிவோரத்திலும் நிலக்கீழ் ரயில் தரிப்புகளிலும் வளர்ந்தேன் என்று மட்டும் தெரியும்.. அங்கிருந்துதான் இங்கே கூட்டி வந்தாங்க.. எந்நாடு செய்யாததை நீங்கள் செய்ததுதான் என் வாழ்க்கை.. உங்களுடந்தான் என் வாழ்க்கை..

கழகம் தொடர்புபட்ட அனைத்து வேலைகளிலும் அவன் காட்டிய ஈடுபாடு செல்வாவின் நெற்றியில் போட்ட முடிச்சு அவிழ்தது. கழுத்தில் விழுந்து பேச்சை நிறுத்தியது.. ஆழமான அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான் செல்வா. இடைக்கிடை சாப்பிட்டார்கள். மற்றப்படி பலதும் பத்தும் பேசினார்கள். பேசிப் பேசி நேரம் அதிகாலை ஆகிவிட்டிருந்தது. காலை எட்டுமணிக்கு செல்வாவுக்கு பிளைட். இப்ப உறங்கினாத்தான் சரி. அதை பொம்மனிடம் சொல்லி விட்டு தனது தொலைபேசி இலக்கச் சுட்டிப்புத்தகத்தை கொடுத்தான்..

பொம்மன் உன் பேரையும் அலைபேசி இலக்கத்தையும் இதுல எழுது.

எனக்கு எழுதத்தெரியாது - எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் சொன்னான் பொம்மன்..

செல்வாவின் மனதில் திடீரென்று ஒரு பிரவாகம்.. பழகிய யாவருக்கும் நினைவுப் பரிசு கொடுத்துப் பழக்கப்பட்டவன். பொம்மனுக்கு எதுவும் கொடுக்க இயலவில்லை என்ற குறுகுறுப்புடன் இருந்தவன் சுறுசுறுப்பானான்..

வா... உன் பேரை உனக்கு எழுதப்பழக்குகிறேன்..


அவனது மறுமொழிக்கு காத்திருக்காது கோப்பிலிருந்த ஒரு வெற்றுக்காகிதத்தை உருவி எடுத்து பொம்மன் என்பதை தமிழில் எழுதினான் செல்வா. எழுதிய தாளைக் கையில் கொடுத்தபோது மலங்க மலங்க முழித்தான் பொம்மன். ம் எழுது... என்ற செல்வாவின் மந்திரத்தில் கட்டுண்டு பேனையை கையில் எடுத்தான். ஏதோ ஒன்று உடலில் பாய்ந்த உணர்வை வெளிப்படித்தினான். அதை எப்படிச் சொல்ல... அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல.. இப்படியானவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.

சில நிமிடங்கள் செலவழித்து எழுதியபின்னர் தாளைத் திருப்பித்தந்தான். கோணல் மாணலாக தூறல் மழை மண்ணில் தீட்டிய ஓவியம் போல அவனது பெயர் தமிழில் மின்னியது. செல்வாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் முகத்தில் மலர்ந்த புன்னைப்பூவால் பொம்மனின் முகத்தோட்டம் மலர்ந்தது. மின்னலடித்தது.. அந்த மின்னலில் செல்வாவின் கண்கள் இருட்டுக் கட்டின.. பார்வையைத் திருப்பி தாளின் மறுபுறத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட அளவில் அவனது பெயரை எழுதினான் செல்வா.. அதை மீண்டும் பொம்மனிடம் கொடுத்தான்..

இதுக்கு மேல கன தரம் எழுதிப்பழகு.. பிறகு வடிவாக எழுத வரும்.

சொல்லி விட்டு செல்வா படுக்கப் போய்விட்டான்.. அசதியோ இல்லை திருப்தியோ ஏதோ ஒன்று நல்ல உறக்கத்தைக் கொடுத்தது.. ஆனாலும் நேரம் சதி செய்தது.. அலார அரக்கன் அடித்து எழுப்ப துடித்து எழுந்தான்..

தயாராகி வெளியே வந்தபோது பொம்மன் விழிப்பாக இருந்தான். கண்மடல் திறந்து இரவுதனைக் குடித்திருப்பான் போலும். செவ்வந்தியாக நிறந்திருந்தன அவனது கன்கள். அவன் கையில் இருந்த காகிதம் கலகலத்தது. காத்திருந்தவன் போல் காகிதத்தை காட்டினான்.. செல்வாவின் எழுத்துக்கு மேலாக பல கோடுகள்.. பொம்மனை ஆழமாகப் பார்த்தான்.. அடுத்த பக்கம் பாருங்கள் என்று சொன்னது போல உணர்ந்தான். திருப்பினான்.. மணிமணியாக பொம்மன் நிறைந்திருந்தான்.. இதனால்த்தான் காகிதம் கலகலத்ததோ என்று நினைத்துக்கொண்டான்.. பார்வையாலே தட்டிக்கொடுத்தான்.. பொம்மனிடம் பேனாவை நீட்டினான்.. பெட்டியை எடுத்துக்கொண்டு பேனாவை வாங்காமலே புறப்பட்டான் செல்வா.. தன் பெயரை விரல்களால் தடவியபடி செல்வா சென்ற திக்கை பார்த்தபடி நின்றான் பொம்மன்..

அறிஞர்
31-07-2008, 06:17 PM
சிலர் கையெழுத்தில்.. தலையெழுத்தே இருக்கும் என்பர்..

சிலருடன் சிலநேரம் பழகினாலும்.. பழக்கத்தின் தாக்கம் பலநாள் தொடரும்...

வாழ்த்துக்கள் அமரன்...
(கதையை புரிந்துக்கொள்ள சற்று கடினப்பட்டேன்)

பாரதி
01-08-2008, 01:33 AM
அசத்தல் அமரன்!

இதில் பொம்மனுடைய அல்லது செல்வாவினுடைய மனம் அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர்த்த நீங்கள் முயன்ற விதம் அழகு. படிக்காத நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அவரது பெயரை எழுத சிறுவயதில் நான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். பழகும் நேரத்தில் அவர் அடிக்கடி அதையே எழுதிக்கொண்டிருந்ததையும் ஓரளவுக்கு திருத்தமாக எழுதிய பின்னர் அவர் கண்ணில் தெரிந்த பரவசமும்....அவற்றை விளக்க வார்த்தைகள் இல்லை.

அன்பால் மொழியை ஊட்டிய செல்வாவை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

பூமகள்
01-08-2008, 04:59 AM
ஏனோ படித்ததும்..
கண் கலங்கிவிட்டது அமரன் அண்ணா..!! :traurig001::traurig001:

பொம்மன் என்ற ஒரு புல்லாங்குழலுக்கு இசை மீட்டக் கற்றுக் கொடுத்த வித்தக கதாநாயகரை எண்ணி மகிழ்ந்தேன்..!! :)

பிரமாதமான கதையோட்டம்..:icon_b:


நெற்றியில் அவிழ்ந்த முடிச்சு.. கழுத்தை இறுக்கியது..
கோணல் மாணலாக மண்ணில் தூரல் தீட்டிய ஓவியம்..
இரவுதனைக் குடித்த கண் மடல்கள்..


என ஒவ்வொரு வாக்கிய அமைவும் எதை சொல்ல... எதை விட என்று சொல்ல முடியாத அளவுக்கு... மனதைக் கட்டிப் போட்டுவிட்டது..

மிகச் சிறந்த கதைக் கரு..!! :icon_b::icon_b:
பாராட்ட மட்டும் மாட்டேன்... 1000 ஐ-கேஷ் கொடுத்து என்னாலான மரியாதையையும் செலுத்தியே தீருவேன்..!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் அப்புச்சி முதியோர் கல்வியில் படித்து அரைகுறையாக... படிக்கத் தெரிந்திருந்தார்..

மேசையில் இருக்கும் செய்தித் தாளில் சில முக்கிய செய்திகளின் தலைப்புகளை நான் கவனிக்கிறேனா என்று பார்த்து பின் அவர் வாய் விட்டு.. மெல்ல முணுமுணுப்பதைக் காணாதது போல் கண்டு இன்புறும் என் மனம்..

காது கேட்காததால்.. மாமா இந்த ஊரில் இருக்கிறார்.. இங்கு வருவார்.. என்பது போன்ற பெயர் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்க... ஒரு வெள்ளைத் தாளில்.. பெரிய எழுத்துகளில் எழுதி.. அதைப் படிக்கக் கொடுப்போம்..

மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டி அவர் மனத்துக்குள் உதடுகள் அசையப்படித்து.. பின் சத்தமாக இந்த ஊரா என்று கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் பிரகாசம் மாதிரி எந்த விளக்குகளும் இன்னும் ஒளி சிந்தக் கற்றுக் கொள்ளவில்லையென்பேன்..

அவர் பெயரை எழுதி படிக்கக் கொடுத்து.. அதை அவர் படித்துக் காட்டி வெட்கப்பட்டு சிறு குறுநகை புரிவதைப் பார்க்கவே அடிக்கடி எழுதிக் காட்டியிருக்கிறேன்..

இந்த கதை பல நினைவுகளை அசைபோட வைத்தது..

நெஞ்சில் விதைக்குமளவு கதை எழுதும் உங்களுக்கு ஏதும் பரிசு தந்தாக வேண்டும்..

எனது சார்பாக... கதைகளில் பல சிகரங்களைத் தொட்டு வரும் உங்களுக்கு "சிகரன்" என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமைப் படுகிறேன்..
இப்படி அழைக்க அனுமதிப்பீர்கள் தானே??

சிவா.ஜி
01-08-2008, 05:42 AM
சின்ன சம்பவம்....ஆனால் சொல்லியவிதம், கவிதையாய் மின்னுகிறது. கருவோ கண்களுக்குள் நுழைந்து இதயத்தை அசைக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவனென்றால் அந்த யாருமில்லா பொம்மனுக்கு எழுத்தை கற்றுக்கொடுத்த செல்வாவும் உயர்ந்து நிற்கிறார். வசீகர வர்ணனைகளால் வசியப்படுத்திய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அமரன்.

சிவா.ஜி
01-08-2008, 05:43 AM
மூன்றாவது பத்தியில் பொம்மனும், செல்வாவும் இருமுறை வருகிறது. திருத்திவிடுங்கள் அமரன்.

மதி
01-08-2008, 07:49 AM
அழகான வரிகளில் எளிமையான நிகழ்வை சொல்லியிருக்கிறீர்கள்....
செல்வாவும் பொம்மனும் அனுபவித்த உணர்வுகள் தெள்ளியதாய் புரிந்தது..

பாராட்டுக்கள்

தீபா
01-08-2008, 08:12 AM
சில இடங்களில் மின்னல் தெறிக்கிறது.
சில இடங்களில் கண்ணை நெறிக்கிறது.

அமரன்

நீங்கள் நல்ல கதை சொல்லி. ஆங்கிலக் கலப்பினம் இல்லாத தெள்ளுத்தமிழ் கதை சொல்லத் தெரிந்த கதை சொல்லி.

சின்னக் குருத்தை நன்றாக விருத்தி எழுதும் போது எழும் கருத்துத் துளை அவ்வளவாகத் தெரியவில்லை என்பது உண்மை.

இன்னும் நிறைய படையுங்கள்.... இதைப் போன்று எங்கள் மனதைக் குடையுங்கள்..

செல்வா
01-08-2008, 08:26 AM
ரொம்ப நல்லாருக்கு அமரன்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
கருவும்.... கதையும் அதைக் கொண்டு சென்ற முறையும் அருமை.
சிறிய நிகழ்வையும் அரிய கதையாக்கும் கலை உனக்கிருக்கிறது.
மேலும் பலப்படைக்க வாழ்த்துக்கள்.
சிவா அண்ணா சொன்ன திருத்தத்தைச் செய்துவிடு.

நீ கூறிய திரைக்காட்சிகளை எல்லாம் நான் பார்க்கவில்லையே அப்புறம் எப்படிப் புரிந்து கொள்வது....?

அமரன்
01-08-2008, 04:54 PM
என் மனப்பாறை சிதறல்களை சிற்பமாக்கும் உளிகள்
தம் மனம் போன்று சிந்திய அற்புத ஓசைத்துளிகள்...
நிறைத்த நெஞ்சுடன் நன்றி நவில்கிறேன்..

திரும்பத் திரும்பத் திருத்தியும்
திருந்தாத சிறுவனெனை
பொருந்தும் படி
விரும்பியபடி விளிக்கலாம்..

எப்படி அழைத்தாலும்
நான் நானாக இருக்கும்
வரத்தையும் தந்துவிடுங்கள்..

இளசு
02-08-2008, 11:30 AM
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் -

இந்த வரியின் முழு வீச்சைக் கண்டேன்!

என் நேச முத்தங்கள் அமரா!

அமரன்
02-08-2008, 03:06 PM
அண்ணனின் வார்த்தைகள் கரும்புச் சாற்றை வார்க்கின்றன. நன்றி அண்ணா.

யவனிகா
02-08-2008, 06:37 PM
மனமலர் திறந்து
உணர்வு உறிஞ்சிக் குடித்த
பட்டாம் பூச்சியாய்
இரவுமுழுதும்
தலைக்குமேல் படபடத்துவிட்டு
விடியலில் கனவுக்குள்
சிறகு மடிக்கப்போகிறது
இந்தக் கதை....
மடித்த சிறகுகளுக்குள்
பொம்மனின் பெயரை
குறுக்கி வைத்துக் கொண்டு
நானும் சிரிப்பேனாயிருக்கும்....,
உறக்கத்தில்....!!!

வாழ்த்துக்கள் அமரன்.

mukilan
03-08-2008, 05:53 PM
எழுத்தறியாத ஒரு ஏழைச்சிறுவனுக்கு எழுதக் கற்றுக்கொடுத்ததைவிட வேறென்ன பரிசை செல்வா கொடுத்துவிட முடியும். அயராத முயற்சியால் தன் பெயரெழுதக் கற்றுக் கொண்ட பொம்மன் போன்றோர் முறையான கல்வி கற்றால்...?

வேறுபட்ட கதைக்களம்.... சிறந்த கதைக்கரு என முற்றிலும் மாறுபட்ட இந்தச் சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் அம(பா)ரன்.

விகடன்
04-08-2008, 04:42 AM
படிப்பை தவறவிட்டவனிற்கு குறைந்த நேரத்தில் இயன்றளவு பயந்தரும் வகையில் படிப்பித்திட்ட செல்வாவின் செயலும், அந்த பாடந்தனை எதுவித களைப்போ, கூச்சமோ இன்றி ஊக்கத்துடன் படித்திட்ட பொம்மனின் கதை அருமை அமரா.
இறுதிவரி படிக்கும்வரை அழகாகத் தெரிந்த கணினித்திரை ஏனோ தெரியவில்லை அந்த இறுதிவரிமட்டும் மங்கலாகவே தெரியலாயிற்று.

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பார்கள். இங்கே செல்வா அந்த இடத்தில்.


பாராட்டுக்கள் அமர்

aren
04-08-2008, 04:58 AM
இதுவரை இது என்னவென்று படிக்கத்தெரியாத ஒருவன் தன்னுடைய பெயரை தமிழில் அழகாக எழுதக்கற்றுக்கொண்டான். அவனுடைய எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை அழகாக எழுதி எங்களை அப்படியே கதையில் லயிக்க வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

அமரன்
08-08-2008, 01:35 PM
ஜாம்பவான்களின் பாராட்டால் "பார்" ஆட்டம் போடுகிறது மனம்.. நன்றி அனைவருக்கும்.

Keelai Naadaan
16-08-2008, 10:29 AM
எழுது[/SIZE][/FONT]... செல்வாவின் மந்திரத்தில் கட்டுண்டு பேனையை கையில் எடுத்தான். ஏதோ ஒன்று உடலில் பாய்ந்த உணர்வை வெளிப்படித்தினான். அதை எப்படிச் சொல்ல... அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல.. இப்படியானவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்த வரிகளை எப்படி சிந்தித்தீர்கள் அமரன்?. வெகுவாக ரசித்தேன். கல்வியை தருவதை விட சிறந்த சன்மானம் என்ன இருக்க முடியும்?
அழகாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
16-08-2008, 12:50 PM
ஊக்க மருந்துக்கு நன்றி கீழைநாடான்..
எல்லாம் கண்ணுறும் காட்சிகளில் களாவடியதுதான்.. கதைக்கான கருகூட அப்படித்தான்... சுற்றுலா காலத்தில் சுருட்டியது. உவகைகள் பலவகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16932)உண்மைச்சம்பவம்.. அதை வைத்து பின்னியது கதை..

செல்வா
17-08-2008, 09:41 AM
அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல..

இப்ப எப்படியிருக்கு குருவே..... :)

அமரன்
17-08-2008, 01:05 PM
இப்ப எப்படியிருக்கு குருவே..... :)
அழகாலதான் நீ எனக்குக் குரு..

நிரன்
09-02-2009, 01:02 PM
விடாமுயற்சியாக இரவு முழுவதும் கண்விழித்து கையெழுத்தைப்பழகி விடியும் போது அவன் தலையெழுத்தையே மாற்றிவட்டான் பெம்மன்

கடைசி வரிகளில் ஆழமாகக் கருத்தை ஒழித்த வைத்து கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கீர்கள்


வாழ்த்துக்கள் அண்ணா!

samuthraselvam
11-02-2009, 08:56 AM
ஒருவருக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொடுத்து, அதை அவர் சிறப்பாக செய்யும் போது மனதுக்கு இருக்கும் மகிழ்ச்சி உள்ளதே.... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் உபயோகப்படுத்தி இருக்கும் வார்த்தைகள் அழகு.

அமரன்
02-03-2009, 09:18 PM
பின்னூட்டி உற்சாகப்படுத்திய நிரனுக்கும் லீலுமாவுக்கும் நன்றி.