PDA

View Full Version : சிட்டுக் குருவி..!



பூமகள்
31-07-2008, 12:46 PM
சிட்டுக் குருவி

http://img26.picoodle.com/img/img26/3/7/31/poomagal/f_2446866874cm_ea1b479.jpg

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் சாய்வு நாற்காலியை எப்படி இயக்குவதென்றே தெரியாமல் அப்படியே வெகு நேரம் காத்திருந்து.. அருகில் அமர்ந்தவர்.. செய்வதைப் பார்த்து.. வெகு இயல்பாக நானும் அந்த கருவியை கூடும் மட்டும் அழுத்திப் பிடித்து பின் சாய்த்துக் கொண்டேன்..

மாலையானதால் ஆங்காங்கே போடப்பட்ட வெளிச்சக் கீற்றுகளோடு.. சன்னலோரக் காற்று.. மென் புயலாக முகத்தில் அடித்தது..

சன்னலின் விளிம்பில் தலை சாய்த்து மனம்… பின்னோக்கி ஓட.. பேருந்து முன்னோக்கி… மெல்ல நகரத் துவங்கியது..

நகரத்தில் நடப்பட்ட நாற்றாயிருந்தாலும்… ஆணி வேர் கிராமத்தின் வயல்களில் இழையோடி இருப்பதை மறுக்க முடியாது..

நடுநிலைப் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற போது..

பாட்டி தந்த அச்சு கருப்பட்டியின் இனிப்பும்.. ஆப்பிள் பழத்தின் வடிவில் வாங்கிக் கொடுத்த பண்டமும் இன்னும் நாவில் தித்திக்கிறது… அந்த இனிப்புச் சுவைக்காக மட்டுமல்ல… மணக்க மணக்க பச்சை வெங்காயம்.. கருவேப்பிலை.. கொத்தமல்லி நறுக்கி… நிலக்கடலையோடு பொரியில் இட்டுக் கை மணம் சேர்த்து கலக்கி பாசத்தோடு பரிமாறும் பாட்டியினை நோக்கி ஓடும் மழலை மனம்…

இன்று வரை பாட்டியின் கை மணத்தில் ஒருவரும் பொரி கலக்க வரவில்லை.. ஒவ்வொருமுறை பொரி சாப்பிடுகையிலும் பாட்டி நினைவு கண்ணில் நிழலாட.. அம்மா சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பதுண்டு..

கிராமிய மணம் நாசியில் இறங்க என் ஒவ்வொரு கோடை விடுமுறையும் குதூகலத்தோடு ஆரம்பமாகும்..

பாட்டி வீட்டில் பெரிய ஆசாரத்தில் நெடுந்தூண்கள் நிற்க… மேலே வேயப்பட்ட பெரிய ஓட்டு அடுக்குகள்..

அதற்கு எதிர்புறம் வலது ஓரத்தில்.. சின்ன குடில் போன்ற தென்னங்கீற்றினால் வேயப்பட்ட சிறிய சுண்ணாம்புக் கல் மண் சுவர் கொண்ட அந்த சமையலறை…

என் இப்போதைய தாவர தவிப்புக்கு வித்திட்டவர் பாட்டி தான்.. வீட்டின் முற்றம் தொடங்கி.. எங்கு நோக்கினும் பச்சை பட்டாடை அணிந்து.. தாவர இளந்தளிர்கள் என் பாட்டி நோக்கி சிரிப்பதாய் உணர்வேன்..

பாட்டியின் கையில் தொட்டு நட்டால் போதும்.. பெரியவர் கை பிடித்து நடை பழகும் குழந்தை போல.. பாட்டியின் விரல் தடவுதலில் சிலிர்த்து தளிர்விடும்..

கேழ்வரகு அரைகல்லில் வைத்து அரைத்த வண்ணமே.. பாட்டி சொல்லும் கதையில்.. பெரும் பகுதி இன்று மறந்தே விட்டிருந்தேன்..

அங்கு சிதறும் தானியத்தைப் பொறுக்கி உண்ணவே.. நிறைய குருவிகள் சிமெண்ட் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ளும்..

கண்டும் காணாதது போல் நான் அந்த சிட்டுக் குருவிகளையே பார்த்திருப்பேன்.. இதற்காகவே… ஒரு நாள் முழுக்க அந்த குருவிக்கு அரிசி வைத்து அரிசி வைத்து.. அரைப்படி அரிசி காலியாக்கி.. திட்டு வாங்கிய அனுபவம் நிறைய..

அழகிய சிறகுகள் சட சடக்க.. அது கொத்தித் தின்னும் அழகு பார்க்கவே காத்திட்டு இருந்த நாட்கள் அதிகம்..

குருவி எங்கு தூங்கும்?? மழை வந்தா எப்படி நனையாம இருக்கும்..?? குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு…? இப்படி பலவாறு எண்ணி எண்ணி தூங்காமல் தவித்த என் மனத்தோடு மழையில் நடுங்கும் இரவும் சேர்த்துத் தவித்தது அதிகம்…

குருவி எப்போதும் என்னோடே வைத்துக் கொள்ள ஒரு ஆலோசனை.. பாட்டி முந்தானை பிடித்து அழுது அடம்பிடித்து வெற்றி கரமாக ஒரு குட்டி மாஸ்டர் ப்ளேன் அரங்கேறத் தயாரானது.

கோதுமை புடைக்கும் முறத்தை.. ஒரு தட்டுக் குச்சி வைத்து நிற்க வைத்து.. அந்த குச்சியில் நீண்ட மெல்லிய சணல் கயிறு கட்டி.. தூரத்தில் நான் பிடித்த படி இருக்க…

அந்த முறத்தின் அடியில் நிறைய அரிசி பறப்பியிருக்க… குருவி வரும் வரை கயிறு பிடித்த கையோடு அசையாமல் சிலையாகியிருந்தேன்..

குருவி அரிசி கொத்துகையில்.. முறம் கொண்டு உடன் கதவடைத்து அதனை நான் பிடித்து செல்லமாய் வளர்க்க ஒரு பெரிய திட்டம்.. கண்ணில் சிறகடித்தது..

இப்படி செய்து முன்பு ஊரில் சிலர்.. குருவியைச் சுட்டு சாப்பிட்டிருக்கிறார்களாம்.. கேட்கையிலேயே அவர்கள் மேல் கடும் கோபம் மூண்டது.. சின்ன குருவி சாப்பிட்டு தான் இவர்கள் பசி ஆறுமா??!! ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள்?? என்று ஆதங்கம் மேலெழ மனதைத் தேற்றி.. குருவிக்காக காத்திருந்தேன்..

நல்லவேளை எங்கள் பாட்டி வீட்டில் சுத்த சைவம்.. மேற்கண்ட எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று மனம் நிம்மதியடைந்தது..

குருவி மெல்ல ஒன்று ஒன்றாக வந்தமர்ந்தது.. என்றைக்கும் இல்லாமல்.. முறத்தினுள் அரிசி இருக்கவே கொஞ்சம் தயங்கியது..

இப்படியே தினமும் வைத்தால் குருவி வந்து கொத்தும்.. பின்பு நீ பிடித்து வளர்க்கலாம் என்று.. பாட்டி அனுபவ மொழி உதிர்த்தார்..

நாட்கள் ஓடினவே தவிர.. என் கைக்கு சிட்டுக் குருவி எட்டவே இல்லை..
விடுமுறை முடிந்து.. வீடு திரும்பியதும்.. முதல் வேலையாக அரிசி தேடி எங்கள் வீட்டின் முன்பிருக்கும் மதில் சுவர் துவக்கத்தின் மேல் அரிசி வைத்தேன்.. குருவிக்கு தண்ணீர் தாகமெடுக்குமே… உண்கையில் விக்கினால்.. அதனால்.. கொஞ்சூண்டு தண்ணீரில் நனைத்து நனைந்த அரிசியைப் பறிமாறினேன்..

திண்ணையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்க.. ஒரு குருவி வந்து அழகாய் கொத்தியது.. வில்லன் காக்கா வந்து… குருவியை விரட்டி அடித்து.. தான் கொத்திக் கொண்டு போனது கண்டு.. காக்காவை நான் விரட்ட… கூடவே குருவியும் ஓடியது..

சில நாட்கள் இப்படியே செய்து வர…

அரிசி வைக்க மறந்த நாட்கள்.. வீட்டின் வெகு அருகில் இருக்கும் மாதுளை மரத்தின் கொம்பில் வந்தமர்ந்து என்னை தனது குரலால் அழைக்கும்..

எத்தனை குருவிகள் தன் மதுர மொழியால் காற்றை மயக்கினாலும்.. ஏனோ என் அன்பு தோழியாகிப் போன இந்த குருவியின் குரல் மட்டும்.. எப்போதும் தனியாக எனக்கு கேட்கும்..

கேட்ட மாத்திரத்தில்.. ஓடிச் சென்று அரிசி எடுத்து வந்து மதில் சுவற்றின் மேல் வைக்க.. காத்திருந்து.. மாதுளை கிளை தாண்டி.. முல்லை கொடி அமர்ந்து.. மெல்ல மெல்ல தாவி வந்து கொத்தும் அழகே அழகு தான்..

எனக்கும் என் குருவிக்குமான பிணைப்பு இப்படியாக இறுகத் துவங்கியது.. இடைவெளிகள் குறையத் துவங்கின.. எனைக் கண்டு ஒரு பாசப் பார்வையை.. நேச கலவையை.. தன் குரலால்.. விழியால் அலகால் தூவி விட்டுப் போகும்..

குருவியை எப்படி நான் தோழியெனக் கண்டு கொண்டேன்… காரணம் இருக்கிறது.. அது எதிரிலிருக்கும் இருபதாண்டு கால வேப்பமரத்தில் தங்கி முட்டையிட்டு.. தனது குஞ்சுகளோடு என்னை பார்க்க வந்தது..
நான்கு குருவி குஞ்சுகளோடு அது வந்து அமர்ந்த போது… எனக்குள் ஏற்பட்ட உணர்வு.. தாய்மையை விஞ்சி நின்றது..

சிவந்த வாய் பிளந்து கொத்த தெரியாமல் ஆ… ஆ என்று அம்மாவிடம் காட்ட… அம்மா கொத்தி அதன் அலகால் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் அழகு.. காண கண் கோடி வேண்டும்..

இந்த அழகு காணவே வீட்டில் அரிசி இல்லாத கடினமான காலத்திலும்.. அம்மாவுக்குத் தெரியாமல்.. அரிசி மூட்டையின் சணல் பை துளாவி.. ஒட்டியிருக்கும் அரிசித் துணுக்குகளை எடுத்து வந்து போடுவேன்.. ரேசன் அரிசி.. நாம் சாப்பிட முடியும்.. ஆனால்.. அப்போது பிறந்த குஞ்சுகள் எப்படி விழுங்கும்.. என்ற பதைப்பு மனசில் வரும்.. ஆகவே.. நல்ல அரிசி.. எல்லாம் படையலுக்கு போகும்..

அம்மாவைக் கூப்பிட்டு அவர்களையும் ரசிக்க வைத்திருந்தேன்.. நான் வைக்காட்டியும் அம்மா கொண்டு வந்து வைக்கத் துவங்கினார்கள்..

கொஞ்ச காலத்தில் குஞ்சு குருவிகள் பெரிதாகின.. தனது குடும்பத்தோடு வந்து என்னை நலம் விசாரித்துப் போகும் ஒரு நேசமான குருவி குடும்பத்தோடு நான் பிணைந்திருந்தேன்.

ஒரு நாள்.. வெடிச் சத்தம் கேட்கவே.. பதறி அடித்து வெளிப்பட்டேன்.. அடுத்தடுத்து வந்த வெடிச் சத்தத்தில்.. தீபாவளி பண்டிகை இல்லை.. கிரிக்கெட் வெற்றி இல்லை.. அரசியல் தலைவர் விடுதலை இல்லை.. கோவில் திருவிழா இல்லை.. வீதியில் யாரும் இறைபதவி அடையவும் இல்லை.. என்ன விசேசமாக இருக்குமென குழம்ப…

குழப்ப ரேகைகள் முகத்தில் படரும் முன்… திபு திபுவென ஆட்கள் ஓடி வந்தனர்.. எங்கள் பெரிய கதவு தாண்டி.. உள்ளே வந்து.. இந்தப் பக்கமா தான் இருக்கும்.. வா என்று சத்தம் போட்டபடி வீட்டின் சுற்றுப் புறச் சந்தின் வழியே ஓடினர்..

கொஞ்ச நேரத்தில்.. இங்க இல்லை.. வா அங்கெங்காவது இருக்குமென ஒருவருக்கொருவர் சொல்லி திரும்ப வந்த வழியே ஓடினர்..

நிலைமை எனக்கு விளங்காமலிருக்க.. அம்மா உடனே பதறிச் சொன்னார்.. துப்பாக்கி வைத்து குருவி வேட்டை செய்திருக்கிறார்கள் என்று..

படபடக்கும் நெஞ்சோடு சுற்றும் முற்றும் பார்க்க… என் வீட்டு சுவரை ஒட்டி போடப்பட்ட கற்களின் இடுக்கில்.. ரத்தம் வழிந்த படி… என் பாசமிகு சிட்டுக் குருவி சுருண்டுகிடந்தது..

கண்கள் பனிக்க.. அதனை எடுத்து..
மெல்லிய விரல்களால்.. இறகுகளைத் தடவிக் கொடுத்தேன்..
ரத்தம் வழிந்த பிசுபிசுப்பு கைகளில் ஒட்டிக் கொண்டது..

இதயத்தில் யாரோ வேல் பாய்ச்சி துலாவிய வலி படர்ந்தது..

அழுதழுது.. இறுதியாக இறுதி ஊர்வலம் செய்ய… அதற்கு மிகப் பிடித்த மாதுளை மரத்தின் அடியில் நன்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது..

சாலையின் மின் கம்பங்களில் எங்கேனும் அங்கொன்று இங்கொன்றாக காணக் கிடைக்கும் குருவிகளின் சிறகடிப்பைக் காணுகையில்..

அந்த பாசமிகு குருவியின் ஸ்நேக மொழியையும் அதன் பாசமான இறகுகள் தொட்ட அந்த பிசுபிசுக்கும் என்னை விட்டு அகலாமல் இன்னும் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..!!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பின் குறிப்பு:

சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில்.. எங்கள் ஊரில் உள்ள மொத்தம் 72 வார்டு இடங்களில் 52 வார்டு இடங்களில் குருவி இனமே அழிந்துவிட்டதாம்..

அடுக்குமாடி குடியிருப்புகள்.. விவசாய நிலங்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள்.. விவசாய பூமிகள் வீடுகளாதல்.. ஓட்டு வீடுகள் எல்லாம் ஆர்.சி கட்டிடங்களாதல்.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவும் பழக்கம் போய்… நேரே பாதாழ சாக்கடைக்கு சமையல் அறையிலிருந்தே அனுப்பப்படும் கழிவு நீர்.. இதனால் வாசலில் கழுவையில் எறியப்படும் சில சோற்று பருக்கைகள் கூட குருவிக்கு கிடைக்காமல் போகும் நிலை.. இப்படியான மாற்றங்கள் மூலம்.. குருவி இனம்.. தங்க வசதியின்றி.. உண்ண உணவின்றி.. அந்த இனமே அழிந்துவிட்டதாம்..

படித்ததும் மனம் கனத்துப் போனது.. என்னுள் இருக்கும் குருவி மீதான அதீத பாசம்.. என்னை இப்படைப்பை எழுத வைத்தது..

எத்தனை ஆர்.சி வீடுகள் கட்டினாலும்.. குருவிகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏற்ற வகையில்.. சின்ன சின்ன பொந்துகள்.. அமையும் படி வடிவமைத்தால் மிஞ்சியிருக்கும் குருவி இனமேனும் பெருகும்..

கதை என்ற தகுதி இதற்கு உண்டா இல்லையா.. நான் தேறினேனா இல்லையா என்பதை தெரியாவிடினும் உலகில் உணவின்றி இடமின்றி இறந்து போன அத்தனை குருவிகளுக்கும் என் இப்படைப்பு சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.

விகடன்
31-07-2008, 01:18 PM
சிட்டுக்குருவி..
பழக்கப்படாத ஓர் இடத்தில், புதிய நபரிடம் உணவிற்காக அது துள்ளித் துள்ளி மரம் தாவும் அழகினை விவரித்த நடை, மனதைக் கொள்ளை கொள்கின்றது.
சாக்குப்பையின் மூலையில் சிக்கியிருக்கும் அரிசிப் பருக்கைகளை தேடி எடுத்துப் போடுவதை கற்பனை செய்து பார்க்கிறேன்... தித்திக்கும் நினைவுகளாய் எத்தனை பேர் மனக்களை வருடிச் சென்றிருக்கும் இந்தச் செயல்....
குருவிதனை பிடித்து சிறையிலடைக்காமல் பாட்டி சொன்ன அறிவுரைக்கேற்ப அதனை சுகந்திரமாக பழக்கப்படுத்திக்கொண்ட முறை ஒவ்வோர் உயிரிலும் வைத்திருக்கும் பாசத்தை காண்பிக்கின்றது.

சிட்டுக் குருவியென்றாலும் உயிர் இழப்பு மனதை வருத்தும் செயல் என்பதை சொல்லி நிற்பதையும்,
மனிதர்களில் உயிரில் அன்பை வைத்து சந்தோஷமடைபவர் இருக்கையில் அதனை பறித்து குதூகலிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உணர்த்தியதும் அழகே.

கதைக்கு வழங்கப்பட்ட வர்ணணைகள் பிரமாதம்.
பாராட்டுக்கள் பூமகள்.

mukilan
31-07-2008, 04:30 PM
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரைப் போலவே பாடிய குருவிகள் மரித்துப் போகக் கண்டு மணம் வாடிய பாமகள்.

கதைக்காக எடுத்துக் கொண்ட அருமையான கரு பூவின் சிந்தனையில் தெரியும் மாற்றத்தைப் பறை சாற்றுகிறது.

குருவியோடு சிநேகம் கொண்ட பாரதியார் வறுமையிலும் தன் மனைவி செல்லம்மாள் பாடுபட்டுக் கொணர்ந்த அரிசிகளைச் சிட்டுக் குருவிகளுக்கு கொடுத்து மகிழ்வாராம். அது போலல்லவா நீ அரிசியை வாறிக் கொடுத்திருக்கிறாய்.

நம் வாழ்வியல் முறையோடு ஒன்றிப் பிணைந்தவை சிட்டுக் குருவிகள். குருவிகளின் சினேகம் அலாதியானதுதான். சிறு குருவிகளைச் சுட்டுக் கொல்ல மனம் படைத்தவர்களும் இங்கே தான் இருக்கிறார்கள்.

அழிந்துவரும் இனங்களில் வனவிலங்குகள்தான் இருந்தன என்றால் சிட்டுக்குருவிகளுமா? சுற்றுச்சூழல் சமநிலை குறையும் பொழுது சமன்படுத்த இயற்கை அதன் போக்கில் அவ்வப்பொழுது அதன் சீற்றத்தை காட்டும்போது அதைக் குறை கூற நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

உன் தெளிந்த நடையும், வர்ணனையும் அருமை. :icon_b:

என் மனங்கனிந்த பாராட்டுகளும் 1000 -இ-காசுகளும் (நீ கொடுத்ததுதான்:D)

பூமகள்
31-07-2008, 04:48 PM
மனிதர்களில் உயிரில் அன்பை வைத்து சந்தோஷமடைபவர் இருக்கையில் அதனை பறித்து குதூகலிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உணர்த்தியதும் அழகே.
கதைக்கு வழங்கப்பட்ட வர்ணணைகள் பிரமாதம்.
பாராட்டுக்கள் பூமகள்.
மனம் படபடக்கும் நெஞ்சோடு.. எனது படைப்பைப் பகிர்ந்து விட்டு அமர்ந்திருக்க.. முத்து முத்தான கருத்துகளை முதல் பின்னூட்டத்தில் ஊக்கமாகக் கொடுத்த விராடன் அண்ணாவுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.! :icon_rollout:

உங்களின் பாராட்டு கிட்டியது கண்டு மிகுந்த உவகை அடைகிறேன்..!! :)

பூமகள்
31-07-2008, 04:55 PM
குருவியோடு சிநேகம் கொண்ட பாரதியார் வறுமையிலும் தன் மனைவி செல்லம்மாள் பாடுபட்டுக் கொணர்ந்த அரிசிகளைச் சிட்டுக் குருவிகளுக்கு கொடுத்து மகிழ்வாராம். அது போலல்லவா நீ அரிசியை வாறிக் கொடுத்திருக்கிறாய்.
ஆனாலும்பாரதியாரோடு என்னை ஒப்பிட்டது மிக மிக அதிகம் முகில்ஸ் அண்ணா..!! :icon_rollout:

உன் தெளிந்த நடையும், வர்ணனையும் அருமை. :icon_b:
என் மனங்கனிந்த பாராட்டுகளும் 1000 -இ-காசுகளும் (நீ கொடுத்ததுதான்:D)
நான் எதை நினைத்து எழுதினேனோ அவையனைத்தும் கருத்துப் பெட்டகமாக உங்கள் பின்னூட்டத்தில்...!!
அகம் மகிழ்ந்தேன் முகில்ஸ் அண்ணா..!!

சந்தடி சாக்கில் நான் கொடுத்த ஈ-பணம் எனக்கே கொடுத்த உங்கள் சமயோஜித சிந்தை கண்டு வியந்தேன்..!!

தகுந்த சரியான படைப்பாளிக்குக் கொடுக்கும் படி சொன்னதை மனதில் நிறுத்தி தான் எனக்கு கொடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..!!

ஐ-கேஷ் அள்ளித் தந்த வள்ளல் முகில்ஸ் ஜிக்கு எனது நன்றி கலந்த வந்தனங்கள்..!!

Keelai Naadaan
31-07-2008, 05:00 PM
அழகான வர்ணனையுடன் கூடிய பிற உயிர்களை நேசிக்க சொல்லும் கதை. சிட்டுக்குருவியின் படமும் மிக அழகாய்.
இந்த சிட்டுக்குருவிகள் நடந்து நான் பார்த்ததே இல்லை. பந்து போல குதித்துக்கொண்டு நகரும் அழகே அழகு.
நகரங்களில் இப்போதெல்லாம் பறவைகளையே அதிகம் பார்க்க முடியவில்லை.
தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாய் கதை தந்தமைக்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
31-07-2008, 06:12 PM
சிட்டுக்குருவிகளைக்காணும்போதே மனம் விட்டுவிடுதலையாகி அவற்றோடு சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். பூமகளின் இந்த குருவியின் மீதான நேசம் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருக்கிறது.

நகரத்தில் நடப்பட்ட நாற்றானாலும் கிராமத்தில் ஊன்றியிருக்கும் ஆணிவேர்.....” அழகான சொல்லாடல். கதை முழுதுமே வர்னனைகள் மிளிர்கின்றன. குருவிக்கும் தனக்குமான பந்தத்தை அடுக்கடுக்கான சம்பவங்களால் பிணைத்திருப்பதைப் படிக்க அருமையாக இருக்கிறது.

முறம் வைத்து குருவி பிடிக்கும் வித்தையைப் படித்து நம் பால்ய காலத்துக்கு பயணம் போகிறது மனது.

ஏதேனும் ஒரு குருவியை உடன் வைத்து வளர்க்கவேண்டுமென்ற ஆவலின் முடிவில்....கைக்கு கிடைத்ததோ உயிரற்ற குருவியின் உடல்தான். இப்போது அவள் ஆசை பட்டபடி குருவி கையில் வந்துவிட்டது.....ஆனால் உயிரைத் தொலைத்துவிட்டு....நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது அந்த சின்னச் சிட்டின் நொடிப்பொழுது மரணம்.

நல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பூமகள்
31-07-2008, 06:30 PM
இந்த சிட்டுக்குருவிகள் நடந்து நான் பார்த்ததே இல்லை. பந்து போல குதித்துக்கொண்டு நகரும் அழகே அழகு.
தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாய் கதை தந்தமைக்கு பாராட்டுக்கள்
சிட்டுக் குருவிக்கு என்னைப் போல் இன்னொரு ரசிகர் கண்டு அகம் மகிழ்ந்தேன்..!!

நகரத்தில் எங்கே அதற்கு உணவும் உறைவிடமும் அமைந்திருக்கிறது அண்ணா... அப்படி இருந்தால் தானே உயிர் வாழும்??

மீண்டும் என்று சிட்டுக் குருவி கூட்டத்தைக் காண்பேனோ தெரியவில்லை..!!

உங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் கீழை நாடான் அண்ணா. :)

அமரன்
31-07-2008, 07:14 PM
எல்லா உயிர் மீதும் அன்பு செலுத்துங்கள் என்பது அடிப்படைக் கோட்பாடு. அந்தக்கோட்டை தாண்டி அவ்வப்போது செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். கட்டாயங்களால் காயங்களும் சில இழப்புகளும் ஏற்படுவதை முற்றாகத் தவிர்க்கமுடியாது. குறைப்பதுக்கு முயற்சிக்கலாம். சிறகறுந்த சிட்டுக்குருவி போல் துடிக்கும் இயற்கை மீதான பூமகள் போன்ற பற்றாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

அடுக்கு மாடி வீடுகளில் கூட குருவிகள் கூடு கட்ட அனுமதிப்போரும் உண்டு.. கட்டிய கூட்டைப் பிரித்து உயிர்பெயர்ப்பவர்களும் உண்டு.. குருவி கூடு கட்டாதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பவர்கள் உண்டு.. தேவைகளும் ஆளுக்காள் மாறுபடுகிறதல்லவா?

உங்கள் மென்னுள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்.. சொற்கட்டு சொக்க வைக்குது.. அழகிய நடை அசர வைக்குது.. உங்கள் மனவோ(வா)ட்டத்துடன் ஒட்டி வருகிறது மனது.. உங்களது இன்னொரு படைப்பு நிழலாடுவதை தடுக்க இயலவில்லை.

meera
01-08-2008, 03:18 AM
பூவின் கைவண்ணத்தில் சிறகடிக்கும் சிட்டுகுருவி அருமை.

அழகான,அளவான வர்ணனை.கிராமத்தின் மணம் தெரிகிறது உன் கதை வண்ணாத்தில்.பாசமிகு பாட்டி, இனிய இயற்க்கை காற்று, பச்சைபசேல் செடி கொடிகள் இவை அனைத்துக்கும் ஏங்க வைக்கிறது உன் கதை ஓட்டம்.

இறுதியில் ஓர் உயிரின் இழப்பு மனதை உருகவைத்தது. ஆனால் ஆராம்பமும் முடிவும் ஒரு பிணைப்பின்றி இருப்பதாய் ஓர் உணர்வு.

தங்கை புரிந்துகொள்வாள் என்று நம்புகிறேன். நிறைய எழுத நிச்சயம் மெருகேறும். பாராட்டுகள் பூ.

செல்வா
01-08-2008, 08:54 AM
ரொம்ப நல்லாருக்குப் பூமகள்...
நல்ல நடை... சிவா அண்ணா கூறியது போன்ற வர்ணனைகள் அருமை.
முறம் வைத்து குருவி பிடிக்கும் கலை எனக்குப் புதிது...
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நடந்து போகும் போது நாம் சற்று கவனித்தாலே கண்ணில் படும் உயிர்கள் ஏராளம். இந்தப் பாலைநிலத்தில் இப்படி என்றால் பசுமை நிறைந்த நமது ஊரில்...
மனதையும் கண்களையும் சற்றுத் திறந்து வைத்தாலே நெஞ்சையள்ளும் பலப்பல படைக்கலாம்... என்பதைச் சுட்டிக்காட்டிய பூமகளுக்கு வாழ்த்துக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
01-08-2008, 10:53 AM
எப்பவும் தங்களுக்கு குழந்தை மனது. குருவிக்கும் சேர்ந்து என் வாழ்த்துக்கள்

பூமகள்
01-08-2008, 05:05 PM
சிட்டுக்குருவிகளைக்காணும்போதே மனம் விட்டுவிடுதலையாகி அவற்றோடு சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். பூமகளின் இந்த குருவியின் மீதான நேசம் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருக்கிறது.
நல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
என்னோடு சிட்டாகப் பறந்து கதையோடு சிறகடித்த அன்பு சிவா அண்ணாவின் தேற்றுதல் கண்டு ஆனந்தமடைகிறேன்..

நன்றிகள் பலப்பல அண்ணா. :)

பூமகள்
01-08-2008, 05:23 PM
அடுக்கு மாடி வீடுகளில் கூட குருவிகள் கூடு கட்ட அனுமதிப்போரும் உண்டு.. கட்டிய கூட்டைப் பிரித்து உயிர்பெயர்ப்பவர்களும் உண்டு.. குருவி கூடு கட்டாதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பவர்கள் உண்டு.. தேவைகளும் ஆளுக்காள் மாறுபடுகிறதல்லவா?
தேவைகளுக்காக... உயிர்களின் சமச்சீர் பாதிக்க விடலாமா?? இதுவே என் கேள்வி..
இயற்கைத் தாயின் மடியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அதன் இருப்பை முற்றிலும் அழிக்க மற்ற எந்த உயிரிக்கும் உரிமை இல்லையே..! இயற்கைச் சீற்றங்கள் தவிர்த்து.. ஏனைய உயிர்களால் ஓர் இனமே காணாமல் போகுமளவு அழிக்கப்படுவது... எவ்வித நியாயமாக இருக்கும்?

சிலப் பல..சூழல்.. சிக்கல்களை உருவாக்குவதும் மனிதர்கள் தானே??

உங்கள் மென்னுள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்.. சொற்கட்டு சொக்க வைக்குது.. அழகிய நடை அசர வைக்குது.. உங்கள் மனவோ(வா)ட்டத்துடன் ஒட்டி வருகிறது மனது.. உங்களது இன்னொரு படைப்பு நிழலாடுவதை தடுக்க இயலவில்லை.
இவையெல்லாம் கொஞ்சம் தட்டிக் கொடுக்க சொல்கிறீர்களா.. நிஜமாகவே சொல்கிறீர்களா குழம்பியிருக்கிறேன்..
என் இன்னொரு கதை போலவே அமைந்து விட்டதா??
கதைப் பிண்ணனி.. ஒரே வகையாகிவிட்டதைத் தவிர்க்க இயலவில்லை.. அடுத்த முறை வேறு முறையில் முயற்சிக்கிறேன் அமரச் சிகரன் ஜி..!! :)

உங்கள் கருத்தாழ்ந்த பின்னூட்டம் பார்க்க வெகு நேரம் காத்து சிவந்த பூவிழி ஏமாற்றத்தோடு திரும்ப.. நான் சென்றபின்.. கருத்திட்டு வியப்பாக்கியிருக்கிறீர்கள்.. :rolleyes:

கண்டதும் மெல்லிய புன்னகை என்னில் பூப்பதை உணர்ந்திருப்பீர்களே...!! :icon_rollout: :)

பூமகள்
01-08-2008, 05:52 PM
ஆனால் ஆராம்பமும் முடிவும் ஒரு பிணைப்பின்றி இருப்பதாய் ஓர் உணர்வு.தங்கை புரிந்துகொள்வாள் என்று நம்புகிறேன். நிறைய எழுத நிச்சயம் மெருகேறும். பாராட்டுகள் பூ.
பயணத்தில் தொடங்கி... பயணத்தின் சாலையில் பின்னோக்கிய பார்வை தான் கதை... இறுதி வரியில்.... மீண்டும்.. சாலையோர காட்சி பகர்ந்து.. பயணப்பட்டுக்கொண்டே இருப்பதாக முடித்திருக்கிறேன்..!!

கொஞ்சம் தெளிவாக எழுதத் தவறியது புரிகிறது..!!
எழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன்.. எப்போதாவது அரிதாகவேனும் ஒரு "மாஸ்டர் பீஸ்" உருவாகாதா என்ற ஏக்கத்தோடே...!!

தொடர்ந்து என் எழுத்துகளச் செதுக்க முயலும் உங்களைப் போன்ற உறவுகள் அன்பால் தான் இந்த அளவுக்கு என் விரல்கள் எழுத்துகள் எழுத பழகியிருக்கிறது..!

தொடர்ந்து குட்டுவும் தட்டவும் செய்யுங்கள் மீரா அக்கா.. நன்றிகள்..!! :)

பூமகள்
02-08-2008, 11:10 AM
ரொம்ப நல்லாருக்குப் பூமகள்...
மனதையும் கண்களையும் சற்றுத் திறந்து வைத்தாலே நெஞ்சையள்ளும் பலப்பல படைக்கலாம்... என்பதைச் சுட்டிக்காட்டிய பூமகளுக்கு வாழ்த்துக்கள்.
இந்த டயலாக்கை வேறொரு பதிவில் கண்ட நினைவு... ஹீ ஹீ.. பூமகளுக்கு பதில்.. "சிகரன்" அவர்களின் பெயர் அமர்ந்திருந்தது..!!
ரசித்துப் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றிகள் செல்வா அண்ணா...!! :)
உங்க முட்செடி படிக்க எத்தனிக்கும் போதெல்லாம் ஏதோ வேலைப்பளு அழுத்தும்..
விரைவில் உங்கள் படைப்புகள் படிக்க காலத்தை வேண்டிக் கொண்டிருக்கிறேன்..!!:icon_rollout:

எப்பவும் தங்களுக்கு குழந்தை மனது. குருவிக்கும் சேர்ந்து என் வாழ்த்துக்கள்
ரொம்ப நாள் கழித்து மன்றம் வந்த சகோதரர் ஈஸ்வரன் அவர்களுக்கு என் வந்தனங்கள்..!
உங்களின் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன்.. நன்றிகள் சகோதரரே..!:)

இளசு
02-08-2008, 11:22 AM
பளபளக்கும் விழிகளுடன் பாமகளுக்கு அண்ணனின் பாராட்டுகள்!

தி.ஜா கதைகளில் அழகிய வர்ணனைகள் வரும். காலை, மாலை,இரவில்
பொருத்தமான பறவையொலிகள்...புள்ளிசைப் பின்னணியில் கதை நகரும்.

சாக்குக்குருவி, தூக்கணாங்குருவி,சிட்டுக்குருவி,காடைக்குருவி.... என..

எத்தனை விதங்கள்.. எத்தனை தனிக்குணங்கள்..

இவ்வினங்கள் அழிந்து வருவதன் ஆழ்மனக் கவலையை
அழகிய சொல்லோவியமாய் வடித்த ஆற்றலுக்கு வந்தனம்!

கதையோட்டமும், சொல்லிய விதமும் இதம்..பதம்.. வாழ்த்துகிறேன்!

நடுப்பகலிலும் பறவையொலி கேட்கும் நகரங்கள் நாமும் காணும் நாள் வரவேண்டும்..!

(இப்போது நான் வசிக்கும் இடத்தில் இது நிகழ்கிறது..)

மனிதனும் மற்ற உயிர்களும் - எல்லாரும் சேர்ந்து வாழத்தான் இந்த பூமி
என்பதை எல்லாரும் உணர்ந்து கடைபிடிக்கும் நாள் வரவேண்டும்..!

பூமகள்
02-08-2008, 11:29 AM
பெரியண்ணாவின் பளபளக்கும் விழிகள் கண்டு அகம் மகிழ்கிறேன்..!!

சாதம் குழைவின்றி.. பதமாய் பக்குவமானதை.. முக்கியமானவர் சொல்லும் வரை.. பதைக்கும் மனம்..

இப்போது அந்த பதைப்பு நீங்கி.. சில்லிடுகிறது..!

மகிழ்ச்சியான நாளாக எனது ஒவ்வொரு நாளும் உங்களின் எழுத்துகள் பார்த்தே மாறுகிறது..!!

கடைசி இரு வரிகளில்.. என் கதையின் நோக்கம் அத்தனையும் அடக்கம்..!!

நெகிழ்ந்தேன் அண்ணலே..! :)