PDA

View Full Version : கவியரசர் பிறந்தநாள் இன்றுஆதி
31-07-2008, 12:22 PM
கவியரசருக்கு ஒரு கவிதை

வருத்தத்தில் இருந்தாலும் வடிந்து போகா
..வறுமையினில் இருந்தாலும் வழியும் மையல்
நெருக்கத்தில் இருந்தாலும் பிரிவு துய்கும்
..நெஞ்சங்க ளானாலும் காதல் மேவும்
பருவத்தில் இருந்தாலும் பனிக்கும் பெண்கள்
..பார்வைகளில் நனைந்தாலும் உன்றன் பாடல்
பொருந்தாமல் போனதில்லை புதைந்து இங்கு
..உன்னில்புண் ணாற்றாதார் யாரு மில்லை


இதமான பாட்டெழுதி எங்கள் நெஞ்சில்
..இடம்மீதி இல்லாமல் நிரம்பி விட்டாய்
மிதமான உணர்வுகளை மெல்ல தூண்டி
..மெதுவாக மீட்டிவிட்டாய்; கவியில் பாட்டில்
பதமான வார்த்தைகளை பயன்ப டுத்தி
..பாமரர்க்கும் தத்துவங்கள் புரிய வைத்தாய்
நிதம்நூறு கோப்பைகளில் மலரில் மூழ்கி
..விதமான அனுபவங்கள் பெற்று தந்தாய்


கிளிகளோடும் கிண்ணம்நி ரம்பி பொங்கும்
..கிரக்கத்தோ டுமிருக்கும் போதில் தான்நான்
விழிமூட வேண்டுமென்றாய் வாழ கூடா
..வாழ்க்கைவாழ்ந்தேன் என்றாய் உன்னை பற்றி
ஒளிக்காமல் கோடிசொன்னாய் உந்தன் பாட்டை
..உதவாத பாடலென்றாய் ஆனால் எம்மில்
அழியாத பாடலானாய் கவியா விற்கும்
..அரசனானாய் மரணமற்ற இறைவ னானாய்...

poornima
31-07-2008, 02:04 PM
மரபுகள் தோறும் பேர்நிற்று வாழப்போகும் மகாகவிஞனை மரபுக்கவிதைக் கொண்டே வாழ்த்தியிருக்கும் தொனி அழகு அழகு ஆதி அவர்களே..பைந்தமிழ்மொழியில் இதைப் படிக்க என்னே பரவசம் என்னே இனிமை என்னே கருத்துச் செறிவு..உங்களுக்காக இதோ ஒரு வெண்பா(ம்)

காலத்தால் நின்றுவாழும் கண்ணதாசன் நற்பண்பை
ஆழமாய் ஓர்பாட்டில் ஆதி-நண்பர் தந்தே
கவிபாடி மன்றத்தில் கல்வெட்டாய் வைக்க
புவிதோறும் நிற்கும் புகழ்.

அறிஞர்
31-07-2008, 04:43 PM
பதமான வார்த்தைகளை பயன்ப டுத்தி
..பாமரர்க்கும் தத்துவங்கள் புரிய வைத்தாய்

அழியாத பாடலானாய் கவியா விற்கும்
..அரசனானாய் மரணமற்ற இறைவ னானாய்...
அழகான கவி.. கவியரசரை பற்றி...

அவர் சாதித்து காட்டினார்...
நல்ல கவிஞர்...

வாழ்த்துக்கள் ஆதி..

சிவா.ஜி
31-07-2008, 04:46 PM
”எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”

கவியரசர் எழுதிய வரிகள். எத்தனை சத்தியமான ஒன்று. இசை இவ்வுலகத்தில் இருக்கும் வரை இருக்கும் அவர் புகழ். அமரத்துவம் நிறைந்த அமிர்த வரிகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் விட்டுப்போன கண்ணதாசன்......வாழ்வியலின் எல்லா படிமங்களையும் சொன்னதாசன்.....தமிழரனைவரின் நெஞ்சில் நின்னதாசன்.

அந்த உயர் கவிக்கோர் அருங்கவியெழுதிய ஆதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

shibly591
01-08-2008, 05:18 AM
இதமான பாட்டெழுதி எங்கள் நெஞ்சில்
..இடம்மீதி இல்லாமல் நிரம்பி விட்டாய்
மிதமான உணர்வுகளை மெல்ல தூண்டி
..மெதுவாக மீட்டிவிட்டாய்; கவியில் பாட்டில்
பதமான வார்த்தைகளை பயன்ப டுத்தி
..பாமரர்க்கும் தத்துவங்கள் புரிய வைத்தாய்
நிதம்நூறு கோப்பைகளில் மலரில் மூழ்கி
..விதமான அனுபவங்கள் பெற்று தந்தாய்

அருமையான கவிதை....

கவியரசரை கண்முன்னே நிறுத்திவிட்டுப்போகிறது கவிதை...காரணம் கவிதையிலுள்ள உயிர்ப்பு..

வாழ்த்துக்கள்

ஆதி
01-08-2008, 08:15 AM
அழகான கவி.. கவியரசரை பற்றி...

அவர் சாதித்து காட்டினார்...
நல்ல கவிஞர்...

வாழ்த்துக்கள் ஆதி..

நன்றி அறிஞர் அண்ணா வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்..

தீபா
01-08-2008, 09:11 AM
கவியரசரைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் புகழ் பற்றி பூசிக்கொண்டே இருக்கலாம்.

பாடினால்/??

அதன் இனிமை தான் என்னே!!

திருகாத பாடல்களைத் தந்து திரும்ப வைத்தவனை உருகாதவனும் உருகி நின்று வாழ்த்தி வழிந்தோடுவானே!. அதைப் போன்றுதான் ஆதி நீங்கள் உருகி வழிந்தோடுகிறீர்கள். இப்பாடல் கண்டும் கழிந்தோடுபவர்கள்தான் உண்டோ?

அருமை..

இளசு
02-08-2008, 11:51 PM
தொட்டதெற்கெல்லாம் மேற்கோள் காட்ட என்னில் என்றும்
உள்ளுறைபவர்.

வயலில் வேலை செய்பவனுக்கும் வானொலிமூலம் செவிக்குத் தமிழ் எடுத்துச் சென்றவர்.

வாழ்வின் எந்தச் சூழலுக்கும் பொருந்தும் ஏதாவதொரு பாடல்
என்னிடம் இருந்து வந்திருக்கும் என்று சொன்னவர்..

நான் இறந்தால் நீ எப்படி அழுவாய் எனப் பார்க்க விரும்பினேன் -
மறைந்ததாய் சேதி அனுப்பி , வந்த நண்பனை வரவேற்ற குழந்தை மனசுக்காரர்..

சங்கப்பாடலின் நகல் இது எனக் குற்றம் சொன்னால்..
ஏன் உனக்கு என்னால் சுமை.. இவை இவை என் ஊற்றுகளின் கண்கள்
என இன்னும் எடுத்துத் தந்த வலிமைத் தோள்காரர்..

எத்தனை சொல்லலாம் நம் கவியரசர் பற்றி..

அழகாய் எல்லாம் சொன்ன ஆதிக்கு பாராட்டுகள்..
ஆதிக்கு வெண்பா வீசிய பூர்ணிமாவுக்கு நன்றி..

ஆதி
24-06-2013, 10:02 AM
கவியரசரின் பிறந்தநாளான இன்று மீண்டும் கவியரசருக்காக எழுதிய என் கவிதையை மேலெழுப்புகிறேன்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேம்
புவியினில் நானோர் புகழுடை தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரியென்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என்வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவி வாளுக்கு பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்
இல்லாயின் எமர் இல்லந் தட்டுவேன்
வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லாதன சில சொல்லிட முனைவேன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!

வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடு மேடாக
மாறாதிருக்க யான் வனவிலங்கு அல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன் கவிதைகள் ஐந்தாம் தொகுதி

கவிதையின் தலைப்பு காலக்கணிதம்

கவிஞன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான கவிதை

காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன் - நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்