PDA

View Full Version : பொய்யான கவிதைpoornima
30-07-2008, 08:36 AM
பொய்யான கவிதை...

தினம் ஒரு
கவியெழுதும் தோழியை
திகைத்துப் பார்க்கிறேன்
ஆச்சரியத்தில்...

சிந்தனைகளின் ஊற்றை
வார்த்தை வடிகால்களில்
வடிகட்டி அனுப்புகிறேன்
கர்வமற்று சொல்கிறாள்
சந்திப்புகளின் போது...

சொல்லும் பொருளும்
சொக்க வைக்கின்றன
சொல்கிறார்கள்
கவிதையைப் படித்து
சிலாகித்தவர்கள்

படிமங்களும்
தொன்மங்களும்
அவள் கவிதைகளின்
துடிப்பான ஜீவன்கள்

கவிதைகளால்
கவரப்பட்டவனுடன்
அமைந்த அவள் வாழ்வு
கவிதைகளைப் போலவே
பொய்யாய் போக

இப்போதெல்லாம்
படித்துப் பார்க்காமலேயே
அழிக்க வேண்டியிருக்கிறது
அவள் கவிதைகளை..

இதயம்
30-07-2008, 08:46 AM
பெரும்பாலும் கவிதைகளென்பவை பொய்களின் ஒட்டுமொத்த தொகுப்பே..!! இங்கு வித்தியாசமாக பொய்யான கவிதையென சொல்லியே புனைந்திருக்கிறார் கவிஞர்.

உங்களின் பொய்யான கவிதை உண்மையிலேயே இரசிக்க வைக்கிறது பூர்ணிமா..!. பாராட்டுக்கள் !!

shibly591
30-07-2008, 09:30 AM
கொள்ளை அழகு..கூடவே கொஞ்சம் கவலை

பாராட்டுக்கள்....

ஆதி
30-07-2008, 09:43 AM
யதார்த்தம் என்பது
எப்போதும் பெண்கவிஞர்களுக்கே
சாத்தியமாகிறது்..
ஔவை முதல்
ஓன் நோ கோமச்சி வரை

ஆண் கவிஞர்களைவிட
பெண் கவிஞர்கள்
என்னில் தாக்கம் அதிகம்
ஏற்படுத்திவிடுகிறார்ரகள்..

நம் மன்றத்திலும்
அத்தகைய சில கவிஞர்கள்
இருக்குறார்கள்
அந்த வரிசையில்
இப்போது நீங்களும்..

கவிதை மிக
மென்மையாய் நகர்ந்து
இறுதியில்
வலிய பாரத்தை
மனதினுள் நிர்மாணித்துவிட்டது..

lenram80
30-07-2008, 08:32 PM
பறக்க நினைப்பது - ஆசை...
பறப்ப முயற்சிப்பது - மடமை...

கவிதை ஒரு கொம்புள்ள குதிரை. கவிதை என்பது கனவு.
கற்பனைகளுடன் வாழமுடியாது. நிஜங்களுடன் தான் வாழ வேண்டும்.

கொம்புள்ள குதிரைக்கு ஏங்காமல், நிஜக் குதிரையுடன் உங்கள் தோழியை சவாரி செய்ய சொல்லுங்கள்.

உங்கள் தோழியின் படைப்புகளை படிக்காமலேயே அழிகாதீர்கள். அவை ஆசைகள்.

அறிஞர்
30-07-2008, 09:19 PM
கவிதைகளால்
கவரப்பட்டவனுடன்
அமைந்த அவள் வாழ்வு
கவிதைகளைப் போலவே
பொய்யாய் போக

இப்போதெல்லாம்
படித்துப் பார்க்காமலேயே
அழிக்க வேண்டியிருக்கிறது
அவள் கவிதைகளை..
வாழ்த்துக்கள் பூர்ணிமா..
லெனினின் கருத்தும் என்னுடையதும்...

கற்பனை, பொய்யுடன் வாழ இயலாது..
அதை மெய்யென நம்பினால்... முடிவு பரிதாபம் தான்.

poornima
31-07-2008, 06:37 AM
வெறுமனே நன்று என்றெல்லாம் சொல்லிப் போகாமல் தம் தம் சிந்தனை ஓட்டத்துடன் இந்த கவிதையைப் பார்த்த அன்புக்குரிய

இதயம்
ஷீப்லி
ஆதி
லென்ராம் (லெனின்)
அறிஞர்

உங்களுக்கு நன்றிகள். கவிதை பிறந்த கதையை பின் சற்று
விரிவாகவே எழுதுகிறேன். அப்போது கிடைக்கலாம் நண்பர் லெனின்
பின்னூட்டத்திற்கான விளக்கங்கள்.

சிவா.ஜி
31-07-2008, 07:49 AM
கவிதையில் பொய் அழகு. வாழ்க்கையே பொய்யானால் அவலம். கவி எழுதும் மனது எத்தனை மென்மையானதென்று அனைவரும் அறிவார்கள். அந்த மென்னுள்ளத்திற்கு ஏற்பட்ட வாழ்க்கையே பொய்யாய்ப் போய்விட்டது வலிமிகுந்தது. அந்த வலியை உங்கள் வார்த்தைகளில் காட்டி, வாசிப்பவரையும் உணரவைத்துவிட்டீர்கள் பூர்ணிமா. பாராட்டுகள்.

poornima
31-07-2008, 08:27 AM
கவிதைப் பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி.. அதுதான் நான் குறிப்பிட வந்தது.இதே கவிதையை படிமங்கள் வைத்து நவீன கவிதையாய் கூட என்னால் எழுத முடியும்.ஆனால் சொல்ல வந்த விஷயம் மாறிவிடுமோ என்பதற்காகத்தான் எளிய வார்த்தைகளித் தேர்ந்தெடுத்தேன்.

இளசு
02-08-2008, 11:42 PM
காதலியாய் இருக்கும்போது - கவின், கவிதை, வனப்பு, ரசனை..
இல்லாளானபின் இவை இல்லாமல் போய்விட்ட நிலை!

இதை ஆணின் பார்வையில் -
சிந்துபைரவியில் பாலசந்தர் பதித்திருப்பார்..
லதா மங்கேஷ்கர் கஸல் இசையில் மூழ்கிய கணவன்
மிக்ஸியில் அவன் பயணத்துக்கு பொடி அரைக்கும் மனைவி..

லட்சிய ரசனைகளுக்கும் சுடும் நிதர்சனத்துக்கும் இடைவெளிகள் இருக்கும்.

தேடல்களில் பல இறுதிவரைத் தேடல்களாகவே இருக்கும்!

இடைவெளிகள் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பிலும்
தேடியது நிச்சயம் கிட்டும் என அடிநாத அதிர்விலும்
காலம் உருண்டபடி ஓடி முடியும்..

பின், இன்னொரு கவிஞை/கவிஞன், இன்னொரு கவிதை என
காலம் புதிதாய் பிறந்தது போல் நடிக்கும்..


கவிதைக்கு வாழ்த்துகள் பூர்ணிமா...

பென்ஸ்
03-08-2008, 12:00 AM
நீண்ட நாட்களுக்குப் பின் கவிதை படிக்க மன்ற வந்து படித்த முதல் கவிதை...
கவிதை வாசித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய அதீத சோகம்...

இந்த கவிதையை வாசித்து மட்டுமே செல்கிறேன்...
கருத்து சொல்ல முடியா அளவு குழப்பம், யாரையும் நியாயபடுத்த மனம் வரவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்...
இந்த வரிகளும், இந்த கவிதைகளும் எனக்கு நிச்சயம் பரிச்சயமானவை.
இல்லை என்று மறுப்பிருந்தால்...
என் "டேஜா-வூ" என்று விட்டு விடலாம்...
மிக அருமை...

ஒரு கவிதை இப்படிதான் விமர்சிக்கப்பட வேண்டும் என்று
மீண்டும் மீண்டும் சொல்லிப் போகும் என் அன்பின் இளசு
கவிதையை இப்படியும் பார்க்கலாம் என்ற லெனின்...
பாராட்டுக்கள் உங்களுக்கும்...

poornima
03-08-2008, 06:52 AM
தேடல்களில் பல இறுதிவரைத் தேடல்களாகவே இருக்கும்!

இடைவெளிகள் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பிலும்
தேடியது நிச்சயம் கிட்டும் என அடிநாத அதிர்விலும்
காலம் உருண்டபடி ஓடி முடியும்..

பின், இன்னொரு கவிஞை/கவிஞன், இன்னொரு கவிதை என
காலம் புதிதாய் பிறந்தது போல் நடிக்கும்..
என்ன ஒரு அழகான நிதர்சன பார்வை.. இந்த கவிதை பலருக்குப் பல பரிமாணங்களைத் தோற்றுவித்திருக்கிறது என்பதையே இந்த கவிதையின் வெற்றியாக கருதுகிறேன்.

கவிதையின் கடைசி வரிகள் படிக்காமலேயே அழித்துவிடுகிறேன் என்று நான் சொன்னதில் ஒரு சின்ன தொன்மம் ஒளிந்திருக்கிறது.எந்த கவிதைக்காக தன்னைப் பிடித்திருக்கிறது என்று கைப்பிடித்தவன் விரும்பினானோ அவனே கவிதைகளை வெறுக்கும் சூழல் வந்து விலகிப் போகிறான்..

எனவே நல்ல கவிதைகள் எழுத தோன்றினாலும் தோழி இப்போது முனைவதில்லை.வெறுமே பகிர்ந்துகொள்கிறாள்.அதைத் தான் அப்படி கொஞ்சம் சூசகமாய் எழுதி வைத்தேன்..

மிக அழகான புரிதல்களால் பின்னூட்டமிட்ட இளசு அவர்களுக்கு நன்றி.காலம் புதிதாய் பிறந்தது போல் நடிக்கும் என்ற உங்களின் வரிகள் சுஜாதாவின் நல்ல கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டது என்ற
வரிகளை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன.

poornima
03-08-2008, 06:58 AM
நீண்ட நாட்களுக்குப் பின் கவிதை படிக்க மன்ற வந்து படித்த முதல் கவிதை...
கவிதை வாசித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய அதீத சோகம்...

விசித்தழும் பெண்களின் கண்ணீருக்கு ஆயிரம் காரணங்கள்

இந்த கவிதையை வாசித்து மட்டுமே செல்கிறேன்...
கருத்து சொல்ல முடியா அளவு குழப்பம், யாரையும் நியாயபடுத்த மனம் வரவில்லை.
தெளிவாக இருக்க முயற்சி செய்கிறீர்கள்..:-) நன்றி

ஒன்று மட்டும் நிச்சயம்...
இந்த வரிகளும், இந்த கவிதைகளும் எனக்கு நிச்சயம் பரிச்சயமானவை.
இல்லை என்று மறுப்பிருந்தால்...
கவிதையா - எழுதியவரா-கவிதையில் குறிப்பிடப்படுபவரா..? தெளிவாக சொல்லுங்கள்நன்றி.. உங்களது மன ஓட்டத்தை பின்னூட்டமாக்கியதற்கு

பென்ஸ்
03-08-2008, 02:39 PM
நன்றி.. உங்களது மன ஓட்டத்தை பின்னூட்டமாக்கியதற்கு

நான் கவிதையை கவிதையாக மட்டுமே வாசிக்க விரும்புபவன்....

இதே அழுத்ததிலும், நடையிலும் மன்றத்தில் எப்போதோ கவிதைகள் வாசித்ததாய் நியாபகம்.
இந்த பயனாளர் இதற்கு முன் மன்றம் பரிச்சியமானவரோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்...