PDA

View Full Version : கால் விரித்து ஓடிய காவிரி!!lenram80
28-07-2008, 07:54 PM
மலை கடந்து
பல குகை குடைந்து
தரை கடைந்து
தமிழகம் அடைந்து
அக மகிழ்ந்தது ஒரு காலம்!

இன்று
மேட்டுரில் முட்டி பிரண்டு
வழி நெடுக அழுது புரண்டு
தஞ்சையில் நாக்கும் வறண்டு
ஞாபகம் இல்லை கடலில் உருண்டு!

கல்லணை ஒரு குள்ளனை பார்ப்பது போல் பார்க்கிறது!
அன்று அதன் கழுத்தில் மாலை போட்டவள் -
இன்று அதன் பாதங்களில் பூ போடுவதால்!

ஆகஸ்டு 15,
சுதந்திரம் கொடுத்தது நாட்டுக்கு!
சுதந்திரம் எடுத்தது என் தமிழ் பாட்டுக்கு!

அன்று நான் கால் விரித்து ஓடிய காவிரி!
இன்று நான் கை விரித்து நடக்கும் கால்விரி (1/4)!

அன்று நான் நன்னீர் கடல்!
இன்று நான் கண்ணீர் திடல்!

என் கரை ஓரம்
அன்று - புண்ணியம் பெற்ற மரங்கள்!
இன்று - 'புண்' ணியம் கொண்ட மரங்கள்!

அன்று நான் வேர் அறுத்ததால்
மரங்கள் கொடுத்த சாபமா
இப்படி நான் காயக் காரணம்?

அன்று என் பாதத்தை சூரியனோ, சந்திரனோ பார்த்ததில்லை!
பூ வாடை கொண்ட நீரால் பூ ஆடை கொண்டேன்!

இன்று ஆடை இல்லாத ஆப்பிரிக்கத் தாய் போல்
கானல் நீரில் ஆடை கொண்டு
கண்ணீரால் என் உடல் நனைக்கிறேன்!

தலை குளிக்கிறேன் குடகு மலையில்!
கால் நனைக்க முடியவில்லை வங்க அலையில்!

தலையில் நயாகரா!
காலில் சகாரா!

தற்காலத்திலும் கற்(கால) நாடக மனிதர்களே!
அரசியலுக்காக பந்தாடுவது என்ன விதி?
தமிழக உணர்வுகளை மதி!
நான் ஆறு கோடி மக்களின் ஜீவ நதி!

அறிஞர்
28-07-2008, 10:31 PM
தலையில் நயாகரா!
காலில் சகாரா!"!
அன்றைய காவிரி...
இன்றைய காவிரி....

அரசியலால் வறட்சி....

அழகான வரிகள்.....

திருச்சியில் காவிரியை காணும்பொழுது.. இது போன்ற தாக்கம் ஏற்பட்டுள்ளது....

வாழ்த்துக்கள் லெனின்..

சிவா.ஜி
29-07-2008, 04:43 AM
காவிரியை நம்பி இருக்கும் விவசாயிகளின் கண்ணீர்தான் இனி உப்பு வெள்ளமாய் கரைபுரண்டு ஓட வேண்டியிருக்குமோ என அஞ்ச வைக்கிறது அண்டை மாநிலத்தாரின் அநியாய அத்துமீறல்கள். அடாத மழை விடாது பெய்து அந்த அணைகளை உடைக்காதா? காவிரியின் தடைகளைக் களையாதா என எண்ண வைக்கிறது. காய்ந்த காவிரிக்கு கவி பாடிய லெனினுக்கு, கரைபுரண்டோடும் காவிரியையும் பாட வாழ்த்துகள்.

இளசு
29-07-2008, 06:43 AM
காதலல்லாக் கவிதை பாடிய லெனினுக்கு சிறப்பு வாழ்த்துகள்!

எத்தனை முறை வறண்ட நதிகளைப் பார்த்து கண் துளிர்த்திருக்கிறேன்..

நன்னீர்க்கடல்!
காலில் சகாரா!

சொற்தேர்வும் வீச்சும் - கருத்தை கூர்மையாய் இறக்குகின்றன..

நதிகள் இணைப்பு, சமச்சீர் பங்குதான் - தீர்வு..
ஆனால் நிச்சயம் நடக்கவிட மாட்டார்கள் நம்மவர்கள்..

அசையா அச்சம் என் அடிமனதில்!

ஆதி
29-07-2008, 09:24 AM
ஆற்று தூநீர் ஆரல் தேடி
குருகு பறக்கும் தீயனல் காடு

வாழ்த்துக்கள் லெனின்..

அமரன்
29-07-2008, 01:03 PM
காவிரியைக் கண்டதில்லை - உங்களால்
கா விரியக் கண்டேன்... உண்டேன்.. கவலை கொண்டேன்..

இயற்கையை தனியுடமை ஆக்கும் கொள்கைகளையும் கொள்ளையரையும் அழிக்காதுவிட்டால் இந்த அவலம் இன்னும் பரவும்..

சுகந்தப்ரீதன்
29-07-2008, 01:29 PM
மூத்த தலைமுறை எங்களுக்கு சொல்லும்... முன்பெல்லாம் இவ்வளவு உயரத்துக்கு அகலத்துக்கு காவேரியில தண்ணி போகும்ன்னு... அதையெல்லாம் அப்படியே கற்பனையிலதான் காணமுடியுது இன்றைக்கு எங்களால...!!

வருசத்துக்கு ஒருமுறை வெள்ளம் வரும்போது மட்டும்... கற்பனைக்கு உயிர் கிடைக்கும்... அவ்வளவே..!! காவேரி தாய்மடியில் வாய்ந்த பிள்ளையடின்னு பாடுன காலமெல்லாம் போயி காவேரி தாய்மடியை தேடும் காலமடின்னு பாடவேண்டி வருமோன்னு பயமாயிருக்கு..!!

நல்ல கவிதை லெனின் அண்ணா.. வாழ்த்துக்கள்..!!

பூமகள்
29-07-2008, 01:39 PM
காவிரி தோழியை ஒவ்வொரு முறை தரிசிக்கையிலும்...
இவ்வகை ஏக்கம் நெஞ்சில் துளிர்க்கும்..

கண்கள் ஏனோ பயணத்தில் இருந்தும்.. அங்கேயே நிலைக்கும்..!

நல்ல காற்று..
நல்ல நீர்.. எல்லாம் இங்கே இனி
ஆக்சிஜன் கஃபேயிலும்..
நன்னீர் லிட்டர் இத்தனை என்றும் விலை பேசப்படும்..

காசுள்ளவர்க்கு நல்ல காற்று.. நன்னீர்..!

கடலுக்கும் நிலத்துக்கும் எல்லைக் கோடுகள் போல்..
வானுக்கும்.. இனி எல்லைக் கோடுகள் வரையப்படும்..!

'நமது' என்ற சொல் மறந்து
'எனது' என்ற சொல்லே நிலைக்கும்..!!

பெரியண்ணா சொன்னது போல்..

சமச்சீர் பங்கீடு ஆறுகளில் வர
சமதானப் புறா என்று பறக்கும்??!!

ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்
நா வறண்ட காவிரி போலவே..!

காதல் விடுத்து சமூக கவிதை இத்தனை ஆழமாய் எங்களில் விதைத்தமைக்கு பாராட்டுகள் லெனின் அண்ணா..

ஷீ-நிசி
29-07-2008, 02:39 PM
சில வரியமைப்புகளெல்லாம் மிக பிரமாதம்... வாழ்த்துக்கள் லெனின்!

lenram80
29-07-2008, 11:47 PM
என்னோடு காவிரியில் கால் வைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!!
அறிஞர்
கிஷோர்
சிவா.ஜி
இளசு
ஆதி
அமரன்
சுகந்தப்ரீதன்
பூமகள்
ஷீ-நிசி

குறிப்பு: நண்பர்களே! என்னைப் பொருத்த வரையில், காதல் கவிதைகள் கவிஞரின் 'கற்பனை'களை தெரிவிக்க அதிகமான சந்தர்ப்பங்களைக் கொடுக்கும். பொதுக் கவிதைகள் அவனின் 'கருத்து'க்களை தெரிவிக்க அதிகமான சந்தர்ப்பங்களைக் கொடுக்கும். கருத்துக்களை மேடை பேச்சாளனும் சொல்லலாம். கற்பனைகளை கவிஞன் சொல்லலாம். காதல் இன்னும் கவிதைகளிலேயே தானே இருக்கிறது. மேடை போட்டு காவிரியைப் பேசலாம். காதலை பேசுவது என்பது நடைமுறையில் இல்லை. எனவே தான், அதிகமாக காதல் கவிதை எழுதுகிறேன்.
சந்தர்ப்பம்படும் போதேல்லாம், கருத்துக் கவிதைகளையும் உதிர்ப்பேன்.