PDA

View Full Version : மாறுபட்ட 14வது மக்களவை



அறிஞர்
28-07-2008, 02:41 PM
முற்றிலும் மாறுபட்ட 14வது மக்களவை

புதுடெல்லி, ஜூலை 28: முன்னெப்போதும் இல்லாத வகையில் 14வது மக்களவையில் பல வித்தியாசமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன

நாடாளுமன்ற சரித்திரத்தில் சபாநாயகராக இருப்பவரை, அவரது சொந்த கட்சியினரே கட்சியில் இருந்து வெளியேற்றியதாக தகவல் இல்லை. இப்போதைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை பதவி விலகுமாறு மார்க்சிஸ்ட் வலியுறுத்தியது. ஆனால், அவர் பதவி விலகாததால், கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
சபாநாயகரை எதிர்த்து இதுவரையில் எதிர்க்கட்சியினர் நாள் முழுக்க அவை நடவடிக்கையை புறக்கணித்தது இல்லை. ஆனால், சோம்நாத்தை எதிர்த்து பா.ஜ. தலைமையில் எதிர்க்கட்சியினர் ஒருநாள் முழுவதும் அவையை புறக்கணித்தனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கக்கூறி தங்களுக்கு தலா ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பா.ஜ. எம்.பி.கள் மக்களவையில் குற்றம்சாட்டிய சம்பவம், நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தின்போது நடந்தது.
கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளானவர்கள் அமைச்சரவையில் இருப்பதாக கூறி அவர்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று அவையை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்ததும் இந்த அவையில்தான் நடந்துள்ளது.
மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக 10 எம்.பி.கள் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
இதற்கு முன் 1951ம் ஆண்டு எச்.ஜி.முத்கல் என்ற எம்.பி., மும்பை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தில் இருந்து லஞ்சம் பெற்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவரது ராஜினாமா கடிதமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
‘டிவி’ மீடியாக்களின் லஞ்ச பொறியில் சிக்கிய 4 எம்.பி.களுக்கு மக்களவையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.பி. ஒருவர் தன்னுடைய மனைவி என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணுடன் நாடாளுமன்ற குழு சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று மக்களவையில் வாங்கிக் கட்டிக்கொண்டார். இதேபோல் ஆட்கடத்தல் வழக்கில் பா.ஜ. எம்.பி. பாபுபாய் கட்டாரியா சிக்கி கைதானார்.
கொலை குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மத்திய அமைச்சராக இருந்த சிபுசோரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது அவர் மீண்டும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்.
மக்களவை எம்.பி.கள் பப்பு யாதவ், முகமது சஹாபுதீன் ஆகியோர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையிலேயே இருக்கின்றனர். மொத்தத்தில் 14வது மக்களவை மற்றவற்றில் இருந்து வேறுபட்டதாகவே இருக்கிறது.நன்றி - தினகரன்