PDA

View Full Version : புரிந்து கொள்வாயா அம்மா.....!சிவா.ஜி
27-07-2008, 04:21 PM
பெத்தவ இருக்காளா இல்ல போயிட்டாளான்னு பாக்க வந்தியா? எப்படியோ உன் பொண்டாட்டி சம்மதிச்சுட்டிருக்காளே...?"

ஆதங்க நெருப்பை மனதுக்குள் அடக்கிக்கொண்டாலும், இப்படியான சில வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு தன்னைப் பார்க்க வந்திருக்கும் மூத்த மகனைத்தான் கிரிஜாம்மா அப்படி வரவேற்றார்.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசற? உன் மருமக சுயநலம் பிடிச்சவத்தான். ஆனா அவ வரையில அவ சரி. நீ எப்படி உன் பிள்ளைக்காக கவலைப் படறியோ அப்படித்தான் அவளும் தன்னோட பிள்ளைங்க எதிர்காலத்தை நெனைச்சு கவலை படறா. அவ அனுமதி குடுத்து நான் இங்க வரமுடியாதுதான். இருந்தாலும் வராம இருக்க முடியுமா?"

சலிப்பையும், வருத்தத்தையும் வார்த்தைகளில் சேர்த்து சொன்ன பார்த்திபனைப் பார்த்து,

"அப்படி கஷ்டப்பட்டு அவளுக்குத் தெரியாம நீ ஏம்ப்பா இந்த கிழவியைப் பாக்க வரணும்? அதான் உன் தம்பி இருக்கானே என்னைப் பாத்துக்க. நீ உன் குடும்பத்தைப் பாருப்பா. எனக்கென்ன சாகப்போறக் கட்டை. கொஞ்சநாள் உன் கூடவும் இருந்துட்டேன். பேரன் பேத்திகளை ஆசைதீர கொஞ்சிட்டேன். இனிமே எனக்கென்ன வேணும்?"

"அம்மா, தம்பியைப் பத்திதாம்மா பேச வந்தேன். அவன் போய்கிட்டிருக்கிற பாதை சரியில்லம்மா. வேலைக்கு ஒழுங்கா போறதில்ல. சாயந்தரமானா டாஸ்மாக்லதான் இருக்கான். நேத்துகூட அங்க ஏதோ தகராறு பண்ணிட்டு லாக்கப்புல இருக்கான். அவன்கூட சுத்திக்கிட்டிருக்கற பையன் தான் சொன்னான். ஏம்மா இப்படி பண்றான் அவன்?"

இளைய மகன் கருணாகரன் இப்போது போலீஸ் லாக்கப்பில் இருக்கிறான் என்று கேட்டதும் பெத்தவள் பதறிவிட்டாள். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல்,

"அவனைப் பத்தி நான் கவலைப்பட்டுக்கிறேன், நீ உன் வேலையைப் பாரு. நேரமாச்சு உன் பொண்டாட்டி உன்னைத் தேடுவா நீ கிளம்பு" நிர்தாட்சண்யமாய் அவனிடம் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.

அடிபட்ட வலியுடன் சற்று நேரம் பெற்றவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான் பார்த்திபன். தன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது பழைய கசப்பான நிகழ்வுகள் காட்சிகளாய் மனதில் ஓடியது.

அப்பா இருந்தவரை அவன் மனைவி கிருஷ்ணவேணியும் ஒழுங்காகத்தானிருந்தாள். தனியார்த் துறையில் நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மாமனாரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொண்டாள். அந்த மூலவருக்கு கிடைத்த மரியாதையோடு சேர்ந்து அம்மா என்ற உப கடவுளுக்கும் கிடைத்தது. அவர் இறந்ததும், அம்மா என்ற ஜீவன் அண்டிப்பிழைக்கும் ஜீவனாக அவள் கண்களுக்குத் தெரியத் தொடங்கியதும் அந்த அலட்சியப் போக்கு அவளுக்கு வந்துவிட்டது.

போதாதற்கு பார்த்திபனின் தம்பி கருணாகரனும் இவனுடைய உழைப்பிலேயே உட்கார்ந்து சாப்பிடுகிறானென்ற ஆத்திரமும்,அவனைக் கண்டிக்காமல், எப்போதும் அவனை ஆதரித்தே பேசும் கிரிஜாம்மாவின் கண்மூடித்தனமான பாசம் தந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, அவனிடம் எதுவும் பேச தைரியமில்லாமல்( தடிப்பான வார்த்தைகளில் எடுத்தெறிந்து பேசிவிடுவான்) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி என்ற ரீதியில் கிரிஜாம்மாவை எடுத்ததற்கெல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இளைய மகனுக்கு ஏதாவது வேலை வாங்கித் தரும்படி நச்சரித்துக்கொண்டே இருப்பார். பார்த்திபனும் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டான்.

“பத்தாங்கிளாஸ்கூட தாண்டாதவனுக்கு எந்த வேலையை வாங்கித் தருவது, அவனை பத்தாவதாவது முடிக்கச் சொல்லுங்கள். பிறகு ஐ.டி.ஐ-யிலாவது சேர்த்துவிடலாம். ஏதோ ஒரு தொழிற்கல்வி கற்றுக்கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும் அவனும் பிழைத்துக்கொள்வான்” என்று. அதற்கு அவர்,

“20 வயசு ஆகுது இதுக்குமேல அவனைப் படி படின்னு சொன்னா படிக்கப்போறானா? இந்தப் படிப்புக்கே ஏதாவது ஒரு வேலையை வாங்கிக்கொடு”
என்று பிடிவாதமாக சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த நச்சரிப்பு தாங்கமுடியாமல் ஒரு கூரியர் அலுவலகத்தில் தெரிந்தவரிடம் சொல்லி டெலிவரி பாய் வேலை வாங்கிக் கொடுத்தான். அதிலும் ஒரு வாரத்துக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்கும் அவனை ஆதரித்துதான் பேசினார். சைக்கிளில் அதிகதூரம் சுற்றினால் உடல் சூடாகிவிடுகிறது. அவனும்தான் என்ன செய்வான் என்று. ஏதாவது கடையாவது வைத்துக் கொடு என்று மீண்டும் தொந்தரவு செய்யத் தொடங்கினார்.

இந்த விஷயத்தில்தான் மருமகளுக்கும் அவருக்கும் மிகப்பெரிய சண்டையே வந்தது.

"இங்க பாருங்க. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தை இப்படி ஊதாரித்தனத்துக்கு செலவு பண்ண நான் விட மாட்டேன். நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவ கல்யாணத்துக்கு நகை சேக்கனும், பையன் படிப்புக்கும் பணம் தேவைப்படுது. அதனால நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்" என்றதும்,

"ஆமாம்மா, உனக்கு மட்டும் உன் பிள்ளைங்க ஒசத்தி எனக்கு இல்லையா. உன் புருஷனை படிக்க வெச்சோம். இப்ப நல்ல நிலைமையில இருக்கான். அந்தப்பையன் மட்டும் என்ன பாவம் செஞ்சான். அவனும் இந்த வயித்துல பொறந்த பையன் தானே. அவனுக்கு இப்ப அப்பாவுக்கு அப்புறம் அண்ணனை விட்டா யார் இருக்காங்க? இவன் செய்யாம வேற யார் செய்வாங்க? நல்லாதான் மகுடி ஊதற..."

என்ற கிரிஜாம்மாவின் அந்த கடைசி வாக்கியம் மருமகளை ஆத்திரப்படவைத்துவிட்டது. .வார்த்தைகள் தடித்து, கூச்சலும் குழப்பமுமாய், கடைசியில்,

"உங்க சீமந்தப் புத்திரனைக் கூட்டிக்கிட்டு நீங்க எங்கயாவது போயிடுங்க. எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க"

என்று மருமகள் கத்திய கத்தலில், அதிர்ச்சியாகி, மௌனமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டார். கிரிஜாம்மா. கருணாகரன் வந்ததும் தன் சாமான்களை எடுத்துக்கொண்டு பார்த்திபன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் வீட்டைவிட்டுப் போய்விட்டார்.

கருணாகரன் அவனாகவே ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு வரும் சொற்ப சம்பளத்திலும், இரண்டுமூன்று வீடுகளில் பாத்திரம் துலக்குவதில் கிடைத்த பணத்திலும்தான் வீறாப்பாக வாழ்ந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் பார்த்திபன் அங்கே போயிருந்தான்.
எண்ணங்கள் மனதைக் குடைய வீடு வந்து சேர்ந்தான் பார்த்திபன்.

பார்த்திபனை அனுப்பிவிட்டு காவல் நிலையத்துக்குப் போன கிரிஜாம்மா அந்த அதிகாரியின் கையைக் காலைப் பிடித்து அழுது கேட்டுக்கொண்டதில் ஒரு எச்சரிக்கையுடன் கருணாகரனை அவருடன் அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழிந்த நிலையில் வேலை செய்துகொண்டிருந்த வீட்டில் துலக்கிக்கொண்டிருந்த பாத்திரங்களின் மீது மயங்கி சரிந்தார் கிரிஜாம்மா.இரத்தக்கொதிப்பு அதிகமாகி, சோர்வடைந்து விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் வேலைக்குப் போக இயலவில்லை என்றதும் அவர்களும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்.

கருணாகரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலைக்கும் சரிவரப் போகாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிந்தவன் இரண்டு நாட்களாக வீட்டுக்கும் வரவில்லை. அம்மாவின் உடல் நிலையைக் கேள்விப்பட்ட பார்த்திபன் மருத்துவரை அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தியம் பார்க்க வைத்தான். தான்தான் அனுப்பியதாகச் சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொண்டான். கருணாகரன் பணம் கொடுத்ததாய் சொல்லச் சொல்லி வேண்டிக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அம்மாவைப் பார்க்கப்போன பார்த்திபனை வார்த்தைகளாலே வேதனைப் படுத்தினார் கிரிஜாம்மா.வீட்டில் சமையலுக்கான எல்லாப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்ததைக் கவனித்த பார்த்திபன் வருத்தத்தோடு வெளியே வந்தான். தன் வண்டியில் அமர்ந்து சிறிது தூரம் போயிருப்பான்...முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டே அவனை வண்டியை நிறுத்துமாறு சாடைக் காட்டிக்கொண்டே ஓடி வந்தான்.

"சார் நீங்க கருணாவோட அண்ணன்தானே, கருணாவை போலீஸ் கைது பண்னிட்டாங்க சார். மூணு நாளைக்கு முன்னால ஒரு தகராறுல ஒருத்தனை பாட்டிலை ஒடச்சி வயித்துல குத்திட்டான் சார். அந்த ஆள் இப்ப ஆஸ்பத்திரியில இருக்கான். உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. ஆனா கருணாவுக்குத்தான் ரிமாண்ட் குடுத்துட்டாங்க.இப்ப ஜெயில்லதான் சார் இருக்கான்."

சொல்லிவிட்டு வந்தவேலை முடிந்ததாய் போய்விட்டான். பார்த்திபனுக்கு திடுக்கென்றிருந்தது. அடுத்த நாளே ஒரு வக்கீலைப் பார்த்து அவனுக்காக வாதாட ஏற்பாடு செய்தான்.ஜெயிலில் கருணாகரனைப் போய்ப் பார்த்தான். அம்மாவுக்கு எதுவும் தெரிய வேணான்னா என்று சின்னக் குழந்தையைப் போல அவன் அழுததைப் பார்த்து, பார்த்திபனுக்கு வந்த கோபம்கூட மறைந்துவிட்டது.

ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகளுடன் கிரிஜாம்மா வீட்டை அடைந்த பார்த்திபன், அவர் நன்றாக தூங்குவதைப் பார்த்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை சத்தமில்லாமல் அங்கே வைத்துவிட்டு வெளியேறிவிட்டான். அடுத்த நாள் அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறதென்று பார்க்க அவர் வீட்டுக்கு வந்தவனை, வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு,

"அங்கயே நில்லுடா. தாய்க்கு தலைமகன்னு சொல்வாங்க. ஆனா இங்க ஒருத்தி தலைசுத்தி விழுந்து கெடக்காளே அவளை வந்துப் பாக்கனுன்னு உனக்குத் தோணுச்சா? சாப்பாட்டுக்கு வழியில்லாம என்ன செய்யப்போறேன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தேன். பாரு நீங்க ஊதாரின்னு சொன்ன என் பையன் தான் மளிகை சாமானெல்லாம் வாங்கிட்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்கான். ஊரைச் சுத்தினாலும் அவனுக்குத்தாண்டா அம்மாமேல அக்கறை இருக்கு. நீ பொண்டாட்டி முந்தானையில் ஒளிஞ்சிக்கோ. இங்க எதுக்கு வந்த? இனிமே இந்தப் பக்கம் வராத" என்று சொல்லிவிட்டு கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

லேசாக சிரித்தபடியே மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சரிம்மா. உன் சின்ன மகன்தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்ததாவே நினைச்சுக்க. உன் நம்பிக்கையை நான் ஏன் கெடுக்கனும். அவன் ஜெயில்லருந்து வர்றவரைக்கும் உன்னோட இந்த நம்பிக்கையை காப்பாத்துறேன். அவன் இப்ப திருந்திட்டான். ஆனா இந்த நேரத்துல,உனக்கு அவனைப் பத்தி சொல்லி அவன் மேல தப்பான அபிப்பிராயம் ஏற்படுத்த நான் விரும்பல.திரும்பவும் வருவேம்மா மளிகை சாமானோட, நீ தூங்கும்போது..........

இளசு
27-07-2008, 09:58 PM
ஒரு தாய்ப் பிள்ளைகள்..

ஒரு கண்ணில் வெண்ணெய்.. மறு கண்ணில் சுண்ணாம்பு..

நடக்குமா? நடக்கத்தான் செய்கிறது நிஜத்தில்..

நல்லவன் செய்யும் சிறு தவறுகள் பெரிதாகவும்..
அல்லவன் செய்யும்/ செய்ததாய் நம்பும் சிறுநன்மைகள் பெரிதாகவும்...

உலகம் இப்படித்தான்!

தாய் என்ற மரம்..
நிலைத்துச் செழித்த கொடியை விட
இளைத்து அல்லாடும் கொடியையே
அதிகம் தாங்கிப் பிடிக்கும்!

நல்ல கதைக்கு நன்றி சிவா!

mukilan
28-07-2008, 12:01 AM
அம்மாக்கள் அன்பிலே பேதம் காட்டுவதில்லை. ஆனால் அண்ணன் கூறியுள்ளபடி இளைத்த மகன் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்துவது தவிர்க்கமுடியாததாகப் போய்விடுகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மனம் விட்டுப் பேசினாலே பாதி தீர்வு கிட்டிவிடும். காலம் என்ற அற்புத மருந்து மீதி தீர்வைத் தந்துவிடும். அம்மா புரிந்து கொள்வார்:D.

ஒவ்வொரு முறையும் வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து தெள்ளிய நீரோடை போல நீங்கள் சொல்ல வந்த கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது சிவா.ஜி அண்ணா.திகில் கதைகள், சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூற முனையும் சிறுகதைகள், கவிதைகள், தலைமுறை வேறுபாடுகளை மையமிட்ட கதைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் இயங்கும் உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றிபெறட்டும் அண்ணா.:icon_b:

அறிஞர்
28-07-2008, 12:23 AM
சிவா.ஜியின் படைப்பில் அடுத்த கதை ஒளிர்கிறது...

பாசமுள்ள, குடும்ப அக்கறையுள்ள மூத்த மகன்...
புரிந்துக் கொள்ள மறுக்கும் தாய்.....
இந்த போராட்டம்... முடிவுக்கு வரும் நாள்..
உண்மையான மகிழ்ச்சி வரும் நாள்

வாழ்த்துக்கள் சிவா..

சிவா.ஜி
28-07-2008, 04:14 AM
தாய் என்ற மரம்..
நிலைத்துச் செழித்த கொடியை விட
இளைத்து அல்லாடும் கொடியையே
அதிகம் தாங்கிப் பிடிக்கும்!

இதைத்தான் நான் அத்தனை நீட்டி முழக்கிச் சொன்னேன். நான்கு வரிகளிகளில் நிஜத்தைப் பதித்துவிட்டீர்கள். எப்போதும்போல பிரமிப்புடன் நான். நன்றி இளசு.

சிவா.ஜி
28-07-2008, 04:16 AM
எல்லாப் பிரச்சினைகளுக்கும் மனம் விட்டுப் பேசினாலே பாதி தீர்வு கிட்டிவிடும். காலம் என்ற அற்புத மருந்து மீதி தீர்வைத் தந்துவிடும். அம்மா புரிந்து கொள்வார்

இங்குதான் முகிலன், வீண்பிடிவாதம், முரண்டுபிடிக்கும் குணம் தற்காலிக வெற்றியை அடைகிறது. அந்த பிடிவாதத்தை தளர்த்தினாலே எல்ல்லாம் சரியாகிவிடும். மிக்க நன்றி முகிலன்.

சிவா.ஜி
28-07-2008, 04:18 AM
இந்த போராட்டம்... முடிவுக்கு வரும் நாள்..
உண்மையான மகிழ்ச்சி வரும் நாள்

உண்மைதான் அறிஞர். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஆயுள் குறைவுதான். நிச்சயம் புரிந்துகொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியான நாளும் வரும். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அறிஞர்.

விகடன்
31-07-2008, 05:42 AM
பொறுப்பான அண்ணன், தன்னை நம்பி வந்த மனைவியினிடத்திலும் பெற்ற தாயினிடத்திலும் படும் பாட்டை மனத்திரையில் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அவன் மனைவியின் சுபாவத்தையும் தவறாக எண்ண முடியாது. தலைப்பிள்ளை நல்ல ஸ்தானத்தில் இருக்கிறான். இளையவன் அப்படி இல்லை என்பதன் விளைவாக, அவனையும் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்ற காரணத்தால், உரிமையுடன் மூத்த மகனை உதவக் கேட்பதையும் குறை சொல்ல இயலாது. மொத்தத்தில் மத்தளமாகிய மூத்த புதல்வனின் கதை.

பாராட்டுக்கள் சிவா. ஜி.

சிவா.ஜி
31-07-2008, 05:52 AM
கதையின் சாராம்சத்தை, சில வரிகளில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள் விராடன். அவரவருக்கு, அவரவரது நிலையில் சில நியாயங்கள்....ஆனால் புரிந்துகொள்ளலில் சில தயக்கங்கள்.
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி விராடன்.

Keelai Naadaan
03-08-2008, 03:58 AM
இங்குதான் முகிலன், வீண்பிடிவாதம், முரண்டுபிடிக்கும் குணம் தற்காலிக வெற்றியை அடைகிறது. அந்த பிடிவாதத்தை தளர்த்தினாலே எல்ல்லாம் சரியாகிவிடும். மிக்க நன்றி முகிலன்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல வீண்பிடிவாதத்தை விட வேண்டும். அது எல்லோராலும் முடிவதில்லை. அல்லது அவர்கள் விரும்புவதில்லை.
குடும்பங்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
எப்போதும் போல் இளசு அவர்களின் பின்னூட்டம் மிக அருமை.

சிவா.ஜி
03-08-2008, 06:17 AM
உண்மைதான் கீழைநாடன். பிடிவாதத்தை விட விரும்புவதில்லை என்பது கசப்பான உண்மைதான். நிறைய பிரச்சனைகளுக்கு அதுதான் காரணமாயிருக்கிறது. நன்றி.

MURALINITHISH
14-08-2008, 08:46 AM
இப்படிதான் நிறைய வீடுகளில் உருப்படாத பிள்ளைகளுக்கு பாசம் காட்டி கெடுக்கிறார்கள்
ஆனாலும் தாய் மனது என்பது கஷ்டப்படும் பிள்ளையைதான் முதலில் நேசிக்கும் அதனால்தானே அவள் கடவுளுக்கு இணையாக பேசபடுகிறாள்

சிவா.ஜி
14-08-2008, 11:04 AM
உண்மையான கருத்து முரளிநிதிஷ். கஷ்டப்படும் பிள்ளையின் தவறுகளைக்கூட மன்னித்து அவனுக்கு ஆதரவாகத்தானிக்கும் அந்த தாயின் மனது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
16-08-2008, 04:10 PM
தாயின் ஆதங்கத்தில் தவறேது. இருவரும் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்பதில் கண்மூடித்தனமாக இருந்துவிட்டாள் போலும்...

இவ்வாறான சம்பவங்களை கண்ணால் கண்டிருக்கிறேன்... நன்றாக உள்ளது சிவா அண்ணா...

சிவா.ஜி
17-08-2008, 04:04 AM
தாயின் ஆதங்கத்தில் தவறேது. இருவரும் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்பதில் கண்மூடித்தனமாக இருந்துவிட்டாள் போலும்...

இவ்வாறான சம்பவங்களை கண்ணால் கண்டிருக்கிறேன்... நன்றாக உள்ளது சிவா அண்ணா...
அந்தஸ்து அடைய வேண்டும்தான், ஆனால் அதற்காக நீங்கள் சொன்னதைப்போல கண்மூடித்தனமாக இருந்ததுதான், மூத்தவனுக்கும் அவருக்குமான புரிதல் குழப்பம்,இல்லையா அன்பு? பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி.