PDA

View Full Version : பாழடைந்த கட்டிடங்கள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-07-2008, 07:42 PM
பேருந்துக் கண்ணாடிகளின்
இருக்கையோர பார்வைகளில்
கடந்து செல்லும்
ஒற்றைப் பாழ் கட்டிடங்கள்
கண்களை கடந்த
அரைமணி நேரம் கழிந்தும்
நினைவுகளை விட்டு கடப்பதில்லை

ஜமீன்களாய் வாழ்ந்த ஜனங்கள்
ஜந்துக்களாய் அழிந்த
ஜனரஞ்சகக் கதைகளாய்

லோல் பட்டும்
லோன் பட்டும்
தங்களைக் குனித்து
கட்டிடத்தை நிமிர்த்திய
மத்தியத் தரத்தவர்களின்
மிஞ்சி நிற்கும் வடுக்களாய்

புகுந்து விட்ட புதியனக்களுக்காக
கழிக்கப்பட்ட பழையனக்களாய்
விழுந்த கூனுடன்
தன் காலத்தையவர்களை தேடும்
குடு குடு கிழவனாய்

கொழுப்பெடுத்து பாதியும்
விதி முடிந்து மீதியுமாய்
தானாய் செத்த
அல்லது
செத்தொழிக்கப்பட்டவர்களுக்காய்
அபிஸ்டையென்றும்
பீடையென்றும்
முத்திரையிடப்பட்ட
கெட்ட சகுனங்களாய்

இத்தனை கொடுமை கண்டும்
முகவரி இழக்காமல்
காலம் கடந்த புதியவர்களுக்கு
என்றும் புதுமையாய் வியக்கும்
காலம் கடக்காத பழமையாய்

ஊன உடல்களாயினும்
எதிர்த்த காற்றுக்கு மண்டியிடா
துணிவாய் மோதும்
ஊனமில்லா உறுதிகளாய்

காப்பாற்றவியலா
இழுத்துக்கொண்டிருப்பவனின்
இறுதி சொட்டு பாலைப் போல்
எந்த பலனுமளிக்கா
ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி
நானும் கடன் கழிக்கிறேன்
கண்ணில் பட்ட பாவத்திற்காய்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

அக்னி
26-07-2008, 08:07 PM
நேற்றுப் புதியவையாய் இருந்த
கட்டடங்கள்,
இன்று பாழடைந்தவையாய்...

நாளை அகழ்வாராய்ச்சியில்
மீண்டும் புதுப்பிக்கப்படும்,
பெறுமதி மிக்கவையாய்...

நேற்றும் இன்றும் நாளையும்
தீர்மானிப்பது
மனிதன் தானே...

பாராட்டுக்கள் ஹஸனீ...

அறிஞர்
26-07-2008, 09:01 PM
நேற்று வாழ்ந்த ஜமீன்களின் வீடு
இன்று பாழடைந்த வீடு...

பலவற்றை சிந்திக்க வைக்கும் வரிகள்..

அருமை ஹஸனீ

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 06:51 AM
மிக்க நன்றி அறிஞர் அவர்களே.

poornima
27-07-2008, 07:06 AM
கொழுப்பெடுத்து பாதியும்
விதி முடிந்து மீதியுமாய்
தானாய் செத்த
அல்லது
செத்தொழிக்கப்பட்டவர்களுக்காய்
அபிஸ்டையென்றும்
பீடையென்றும்
முத்திரையிடப்பட்ட
கெட்ட சகுனங்களாய்கவிதையின் முழுவீச்சும் இந்த மையத்திலிருந்து புறப்பட்டதாய் உணர்கிறேன்.. நல்ல கவிதை.. பாராட்டுகள்.

இன்றைக்கும் ஊரில் எப்போதோ முன்னோர்கள் கட்டிப்போட்ட பழம்பெரும் பிரம்மாண்ட வீடுகளில் ஓரிரு ஆட்கள் மட்டுமே இருந்து வெறுமையாய் உலாவருவதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.. அந்த மனிதர்களின் வாக்குமூலங்களில் மட்டுமே அந்த மனிதர்கள் வாழ்ந்த வாழ்வையும் - பெருமையையும் அறிய முடிகிறது.வெள்ளை அடிக்க கூட வசதி இல்லாமல் உள்ள பெரிய வீடுகளும் பாழ்பட்டு நிற்கும் அவலங்களைப் பார்த்திருக்கிறேன்.

உங்கள் இப்பதிவைப் படித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று
நினைவுக்கு வந்து போனது.

வாழ்ந்து கெட்டவனின்
வீட்டை விலைக்கு
வாங்கும்போது
உற்றுக் கேள்
கொல்லைப்புறத்திலிருந்து
வரும் விசும்பல் ஒலிகளை...

இளசு
27-07-2008, 07:24 AM
குறைந்தது ஒரு பெருமூச்சு
அதிகமாய் ஒரு சிறுகுறிப்பு..
இவையே என்னால் முடியும்
முன்னாள் மாளிகை கடக்கும்போது..

ஜூனைத் மனதில்... அடடா..
எத்தனை எண்ண வீச்சுகள்..
பாராட்டுகள்!

பூர்ணிமாவின் அழகான பின்னூட்டம் அருமை!

-------------------------------------------

தமிழில் அடிக்கடி பிழையாய் எழுதப்படும் சில சொற்களும் - சரியானவையும் உங்களுக்காக -

1) கட்டிடம் - கட்டடம்
2) சிகப்பு - சிவப்பு
3) சுதந்திரம் - சுதந்தரம்..

இப்படி பள்ளியில் படித்ததாய் நினைவு..

ஏன் சில சொற்களை ''மருவி'' நாம் அனைவருமே எழுதுவது இப்படி ஆழமாய் நிலைத்தது என வியக்கிறேன்..

அக்னி
27-07-2008, 09:18 AM
1) கட்டிடம் - கட்டடம்
2) சிகப்பு - சிவப்பு
3) சுதந்திரம் - சுதந்தரம்..

1, 3 ஐ நான் இதுவரை தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளேன்.
நன்றி அண்ணா...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 09:24 AM
வாழ்ந்து கெட்டவனின்
வீட்டை விலைக்கு
வாங்கும்போது
உற்றுக் கேள்
கொல்லைப்புறத்திலிருந்து
வரும் விசும்பல் ஒலிகளை...

என் முழுக் கவிதையும் உங்கள் கவிதையில் அடங்கி விட்டதே. மிக்க நன்றி பூர்ணிமா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 09:24 AM
சரியான சுட்டிக்காட்டல்கள். மிக்க நன்றி இளசு அண்ணா.