PDA

View Full Version : புது பூமி உருவாக்குவோம்



ஆதி
24-07-2008, 10:32 AM
அரசுகளும் அதிகாரங்களும்
மாறுகின்றன - ஆனாலும்
அடிமைகளாகத்தான் இருக்கிறோம் நாம்

நாட்டுத்தலைவர்கள்
நாட்டை தொகுதிகளாக
பிரித்துவிட்டார்கள்..

தேர்தலுக்குமுன் ஓட்டுக்களாகவும்
தேர்தலுக்குபின் நோட்டுக்களாகவும்
நம்மை கணக்கு வைக்கிறார்கள்..

வேட்பாளர்களை போல
வாக்காளர்களையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..

நாமும்
குடத்துக்கும் சேலைக்கும்
ஒவ்வொரு ஐந்தாண்டையும்
அடகு வைத்தோம்..

வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட
வாக்குறுதிகள் ஒருவரை ஒருவர்
தாக்குவதுக்காக பயனாகிறதே தவிர
காக்கப்படுவதில்லை..

எப்போதாவது பெய்கிற மழையாய்
தரப்படுகிற மானியங்கள்
வறண்ட ஆற்று மணலின்
வறட்சியை நனைக்காத
துளிகளாய்தான் தூறுகின்றன..

விளிம்பிநிலை மனிதனின்
விரலுக்கு மோதிரமா கேட்டோம்
வீக்கம் வராத பொருளாதரம் தான் கேட்டோம்

சேறில்லா சாலையா கேட்டோம்
தாருள்ள சாலைதான் கேட்டோம்

எப்போதும் இயலாதென்றாலும்
வெள்ளம் வருகிற
போதாவது நதிநீர்
பங்கீட்டை கேட்டோம்..

உழைக்க ஒரு வேலை
உடுத்த இரண்டாடை
படுக்க ஒரு வீடு
இவைதான் கேட்டோம்..

எது கிடைத்தது இதில் ?
என்ன கொடுத்தார்கள் நமக்கு ?
எதுவுமில்லை..

காஷ்மீரில் இருந்து
கச்சதீவு வரை
நம் உயிருக்கு
காப்பீடு இல்லை..

தேர்தல் தீப்பெட்டி
வாக்கு சீட்டு தீக்குச்சி
அதில் நாம்
ஜனநாயகத்தை
கொளுத்திவிட்டோம்

ஜனநாயகம்
அழுக்கை தூய்மையாக்கும்
அசுர துவைப்பு துறை
அதை நாம்
சகதியாக்கிவிட்டோம்..

சரி,
ஆனவை ஆகட்டும்..

விழாமல் எவனும் எழுந்ததில்லை
எழாமல் எவனும் வென்றதில்லை

இங்கு
கத்திகள் சாதிக்காததை
கட்சிகள் சாதித்துவிடுகின்றன
அதனால்
நமக்கு வேண்டியதை
நாமே பூர்த்தி செய்ய

சமாதனத்துக்கு ஒரு கட்சி
சமத்துவத்திற்கு ஒரு கட்சி

என்றிரண்டு கட்சி துவங்குவோம்..

தேவையானதை நிறைவேற்றுவோம்
தேவையற்றதின் கறையகற்றுவோம்..

கையேந்தும்
களவாடும் மனிதரில்லாத
புது பூமி உருவாக்குவோம்..

சிவா.ஜி
24-07-2008, 10:50 AM
நிச்சயம் ஆக்குவோம் ஆதி. ஆக்கப்பூர்வமான சிந்தனை. அவலத்தைச் சொல்லி, அதற்கு மாற்றையும் சொன்ன நல்ல கவி வரிகள். வார்த்தைகளின் வீரியம் உள்வரைச் சென்று தாக்குகிறது.

வாக்கு.......இதுதானே ஒரு சாதாரணக் குடிமகனின் பிரம்மாஸ்திரம். அதையே அரசியல்வாதிகளின் அடுக்கு மொழிக்கு அடகு வைத்தால்....என்ன செய்வது? சிந்திக்க வைத்த சிறந்த கவிதை. பாராட்டுகள் ஆதி.

சுகந்தப்ரீதன்
24-07-2008, 12:54 PM
கையேந்தும்
களவாடும் மனிதரில்லாத
புது பூமி உருவாக்குவோம்..
கட்சிகளின் காட்சிகளை காட்சிபடுத்தி கடைசி பத்தியில் கட்சிதமாய் சொல்லிவிட்டாய்...சொல்லவந்ததை..!!

வாழ்த்துக்கள் நண்பா...!!
புதியபூமி உருவாகுமா..என்பதைவிட உருவாக்கவிடுவார்களா என்பதுதான் இன்றைய அரசியல் அரங்கத்தில் இன்றைய அரசியல் அரங்கத்தில் மிகப்பெரிய வினாக்குறியாக உள்ளது..!!

நம்பிக்கையுடன் நடைப்போடும் உன் எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள்...!! வளர்க வளமுடன்..!!

ஆதி
24-07-2008, 05:32 PM
நிச்சயம் ஆக்குவோம் ஆதி. ஆக்கப்பூர்வமான சிந்தனை. அவலத்தைச் சொல்லி, அதற்கு மாற்றையும் சொன்ன நல்ல கவி வரிகள். வார்த்தைகளின் வீரியம் உள்வரைச் சென்று தாக்குகிறது.

வாக்கு.......இதுதானே ஒரு சாதாரணக் குடிமகனின் பிரம்மாஸ்திரம். அதையே அரசியல்வாதிகளின் அடுக்கு மொழிக்கு அடகு வைத்தால்....என்ன செய்வது?

உண்மைதான் அண்ணா, சிலர் அந்த அஸ்திரத்தை அடகு வைக்கிறார்கள்.. சிலர் அதன் வல்லமை என்னென்று அறியாமலே ஏனோதானோ என்று பயன்படுத்துகிறார்கள்.. இன்னும் சிலரின் புத்திக்கு பரசுராமரி சாபமாய் தேவையான சமயத்தில் புத்தி மழுங்கடிக்கப் பட்டு அஸ்திரத்தின் மந்திரம் மறக்கடிக்கப்படுகிறது..

ஆனால் இவையாவும் மாறும் நிலைவரும்.. அப்போது வாக்குகிடும் விரல்களில் வைக்கப்படுகிற கரும்புள்ளி போலி அரசியல் வாதிகளின் முகத்திலும் குத்தப்படும்.. அவர்களின் சட்டை பிடித்து கேள்வி கேட்டு ஜனயாகதின் தராசுகள் அவர்களின் ஆட்சிகளை சாகும்வரை தூக்கிலிடும்..

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அண்ணா..

இளசு
24-07-2008, 05:47 PM
பாராட்டுகள் ஆதி!

நம் சமூகக் குளத்தின் சில துளிகளே அரசியல்வாதிகள்..

துளிகள் விஷமென்றால்
குளமும் விஷமே!

தனிமனித ஒழுக்கம் மேம்பட்டால்தான்
மெல்ல மெல்ல மேலே எல்லாம் சரியாகும்..

தரை உளுத்துக்கொண்டிருக்க
கூரை மட்டும் மா(ற்)றுவதா??

அமரன்
25-07-2008, 11:52 AM
அண்ணன் வழியில் நான்...
அண்ணன் சொன்ன தனி மனித மாற்றத்துக்கு ஆதியின் பொருள் ஆதாரமாகுமா?

எம் இருப்பை தக்கவைப்பதில்தான் குறியாக இருக்கிறோம். அதுதானே தற்போதைய அவசியமும்..

இருக்கும் கட்சிகளின் ஆதிக்கத்தை அழிக்க எருக்கம்பாலாகவும்
இரு கட்சிகள் முளைத்துச் செழிக்க எருவாகவும் பயன்படும்
ஒரு நெருப்பு போதும் புதுப் பூமி ஆக்க. அதன்பின் காக்க
நீறு பூத்திருக்கும் அந்த நெருப்பின் மீது படட்டும் ஆதியின் அனல்காற்று.