PDA

View Full Version : புறக்கணிப்பு....!சிவா.ஜி
23-07-2008, 10:54 AM
எட்டு வருடம் ஆகிறது இந்த அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி. அங்கு குடியிருந்த எல்லோருமே மேல் நடுத்தர மக்கள். தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தின் பராமரிப்பிலிருந்து, கலை இலக்கிய விழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவதுவரை நேர்த்தியாக செய்துகொண்டு வந்தார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பு தான் சிவராமன் தன் குடும்பத்துடன் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு வசிக்க வந்தார். நல்ல சாரீரம் அவருக்கு. நல்ல தமிழறிவு. அவரே பாட்டுக்களை எழுதி அதற்கு மெட்டமைத்து பாடுவார். அழகான கவிதைகளும், கதைகளும் எழுதுவார். பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில். வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவார்கள். பேரன், பேத்திகளின் பிரசவத்துக்கு மட்டும் வந்து போனார்கள். இதுவரை அந்த பேரன் பேத்திகளின் புகைப்படத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது.

சிவராமன் அந்த எண்ணங்களின் பாரத்தை தன் இசையிலும், தமிழிலும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். சரோஜாம்மா அதிகம் பேசாதவர். கணவருக்குப் பணிவிடை செய்வதையே தன் முழுநேரத் தொழிலாய் செய்து வருகிறார். இவரும் முடிந்தவரை தன் மனைவிக்கு பல சமயங்களில் உதவி செய்து அவரின் பளுவைப் பங்குபோட்டுக்கொள்வார்.

அதுவரை தன் எழுத்துக்களுக்கு தன் மனைவி சரோஜா மட்டுமே வாசகியாய் இருந்தார். இங்கு வந்தபிறகு அவர் மட்டுமல்ல அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருமே இவருடைய ரசிகர்கள்ஆகிவிட்டார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு இளைஞர்களும், இளைஞிகளும் ஆலோசனைக் கேட்க இவரிடம் வருவார்கள். அவர்கள் எழுதியதை மனதாரப் பாராட்டி அதில் சில நுணுக்கமான திருத்தங்களைச் செய்து அவற்றை ஜொலிக்கச் செய்வதால், இவர்மேல் அனைவருக்கும் நல்ல அபிப்பிராயம். சொஸைட்டியின் செயலாளர் கமலனும் இவருடைய பாட்டுக்கு ரசிகர்.

அன்று செயலாளர் கமலன் வந்திருந்தார். அந்த ஆண்டு சொஸைட்டியின் சார்பில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில் சிவராமன் ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்றும், ஆண்டுமலரில் அவரது கதையும், கவிதைகளும் இடம் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சிவராமன் சந்தோஷமாய் சம்மதித்தார்.

ஆண்டுவிழாக் குழுவினர் எல்லா ஏற்பாடுகளையும் நல்லமுறையில் செய்து வந்தார்கள். விழாவுக்கான நாள் நெருங்கி வரும்போது ஒரு கூட்டத்தைக் கூட்டி எந்தெந்த நிகழ்ச்சிகளை வைத்துக்கொள்ளலாம் என்றும், ஆண்டுமலரில் எந்தெந்த படைப்புகளைப் போடலாம் என்றும் உறுப்பினர்களின் பரிந்துரைகள் கேட்கப்பட்டது. அன்று சிவராமனுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் மருத்துவமனைக்கு போகவேண்டியிருந்தது. அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண்டுமலர் அச்சாகி வந்துவிட்டது. அந்த மலரின் ஒரு பிரதியும், விழாவுக்கான அழைப்பிதலும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதுவரைத் தன் எந்தப் படைப்புமே அச்சில் வந்திராத காரணத்தால் அவருக்கு தன் எழுத்தை அச்சில் பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. திருத்தி வந்த விடைத்தாளைப் பார்க்கும் பதட்டத்துடன் கூடிய ஆர்வத்தில் அந்த மலரை புரட்டினார். இரண்டாம் பக்கத்திலிருந்த பதிவுகளின் பட்டியலில் அவருடைய பெயரைக் காணவில்லை. சரி பட்டியலில் விட்டுப் போயிருக்கும் உள்ளே இருக்கும் என்ற நம்பிக்கையில் புரட்டினார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டப் புரட்ட....அவருடைய படைப்புகளைக் காணாமல்...கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வடிந்துகொண்டிருந்தது. கடைசி பக்கம் வரைப் பார்த்துவிட்டு, மலரை மூடி வைத்தார். ஆயாசமாய் சாய்ந்துகொண்டார்.

ஏன் என் படைப்புகள் ஒன்றுமே இல்லை. சரி மற்ற படைப்புகளைப் படித்துப் பார்ப்போம் என்று வாசித்தார். சிறந்த படைப்புகள் இல்லாமலில்லை, அதே சமயம் அவற்றுக்கு இணையாக என் படைப்புகளும் இருக்கிறதே?.அப்படியென்றால் இதில் ஏன் இல்லை? ஏன் இப்படி? தெரியாமல் நடந்ததா...? இல்லை தெரிந்தே ஒதுக்கிவிட்டார்களா...? மனதுக்குள் சங்கடமான பல கேள்விகள் முளைத்தன.

விழா அழைப்பிதழைப் பார்த்தார். நிகழ்ச்சி நிரலிலும் இவர் பெயர் இல்லை. மனம் வலித்தது. எதற்கு இந்த ஒதுக்குதல்? அவருக்குப் புரியவில்லை. பண்பட்டவர்தான். இருந்தாலும் அவரால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரே போய் கமலனைக் கேட்டாலென்ன? எண்ணம் தோன்றியதும் அதை உடனே செயல்படுத்தினார்.

"சார்..என்னோட கதையோ, கவிதையோ எதுவுமே இந்த மலர்ல வரலையே...அதுமட்டுமில்ல விழாவுல நான் பாடனுன்னு சொன்னீங்க...ஆனா என் பேர் எந்த நிகழ்ச்சியிலயும் இல்லையே ஏன் சார்?"

தர்மசங்கடத்துடன் கமலன் நெளிந்தார்.

"சிவராமன் சார்...உங்களுக்கேத் தெரியும் நம்ம சொஸைட்டியில எந்த முடிவா இருந்தாலும் கமிட்டி மீட்டிங் போட்டு அஜெண்டா பாஸ் பண்ணித்தான் எடுப்போம். நீங்க அன்னிக்கு கூட்டத்துக்கு வரலை. எந்த உறுப்பினருமே உங்க கவிதையையோ, கதையையோ பரிந்துரைக்கலையே. அப்படி இருக்கும்போது நான் எப்படி சார்....?"

"சார் நிஜமாவா சொல்றீங்க...? யாருமேவா பரிந்துரைக்கல? ஆனா என் கவிதையையும், கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லாருக்கு, இதை பத்திரிக்கைக்கு அனுப்பினா கண்டிப்பா வரும், நிச்சயமா இந்தப் படைப்பு நம்ம ஆண்டுமலர்ல வரனுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா சார். அப்ப யாருமே மனசார அதை சொல்லலையா சார்..? அந்த விஜயா மேடம் கூட சார் நீங்க என்னோட அண்ணனா பொறக்கலையேன்னு வருத்தமா இருக்கு. அவ்ளோ நல்லாருக்கு உங்க எழுத்துன்னு சொன்னது.....எல்லாமே பாசாங்கா சார்?"

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கடத்துடன் தரை நோக்கினார் கமலன். சிவராமன் தொடர்ந்து,

"அது போகட்டும் சார். ரெண்டு மூணு பேரோட கதை, கட்டுரைன்னு வந்திருக்கு. ஆனா அவங்க இந்த சொஸைடியை விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆகுது. அவங்க படைப்புகளே வந்திருக்கும்போது, இப்ப இருக்கறவங்களோடது ஏன் சார் வரக்கூடாது? அந்த கதையும், கட்டுரையும் நல்லால்லன்னு சொல்ல வரல. அருமையாத்தான் இருக்கு. அதுக்காக...இப்ப இங்க இருக்கறவங்களை ஒதுக்கிட்டு இல்லாதவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறது எனக்கு அவ்ளவு சரியாப் படல சார்"

'சார் நீங்க இப்பதான் வந்தீங்க. அவங்களும் நாங்களும் ஆரம்பத்துலருந்தே இந்த சொஸைட்டியில இருக்கோம். இதோட வளர்ச்சிக்காக அவங்க நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க"

"இருக்கட்டுமே சார். அதுக்காக வேணுன்னா ஒரு பக்கத்துல அவங்களுக்கு நன்றி சொல்லிடலாமே?"

"சரி விடுங்க சார். புக் பிரிண்ட் ஆகி வந்துடிச்சி. நீங்க வேணுன்னா தொகுப்பாளாரா இருங்களேன். விழா நிகழ்ச்சியைத் தொகுத்தளியுங்களேன். நன்றி நவிலல்ல உங்க பேரையும் சேர்த்து நன்றி சொல்லிடறோம்..."

சிவராமன் பார்த்துவிட்டுப் போன பார்வையில், அடி பட்டதைப் போல தளர்ந்துவிட்டார் கமலன்.

தன் குடியிருப்புக்கு வந்த சிவராமன் தளர்வாய் இருப்பதைப் பார்த்த சரோஜாம்மா...குளிர்ச்சியாய் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரருகில் நின்றார். மோரை வாங்கிக் குடித்துவிட்டு...பாதி தம்ளர் இருக்கும்போதே தாங்க முடியாதவராய் தன் மனக்குறையை மனையிடம் சொன்னார். கேட்டு முடித்த சரோஜாம்மா...ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு அஞ்சலுறையுடன் வந்தார். அதை அவரிடம் கொடுத்தார். பிரித்துப் படித்த சிவராமன் முகமெல்லாம் பிரகாசமாகி..

"எப்படி சரோஜா இது நான் அனுப்பவேயில்லையே" என்றார்.

"நான் தாங்க அனுப்பி வெச்சேன். உங்க எழுத்து இங்க இருக்கிற 150 பேருக்காக மட்டுமில்லைங்க, இந்த உலகம் பூரா இருக்கிற தமிழர்களுக்காகவும்தான். இப்ப இது ஆனந்த விகடன்ல வந்திருக்கு. நாளைக்கு மத்த பத்திரிக்கைகள்லயும் வரும். நீங்க கவலைப் படாதீங்க. திறமைக்கு சிபாரிசு தேவையில்லை."

"ஆயிரத்துல ஒரு வார்த்தை" வயது மறந்து தன் இணையை அணைத்துக்கொண்டார் சிவராமன்.

தீபா
23-07-2008, 01:05 PM
திறமைக்கு சிபாரிசு தேவையில்லை... இது உங்களுக்காக திரு.சிவா.ஜி.

ஒரு படைப்பு எங்கேனும் வெளியாகிறதென்றால் அதன் துடிப்பு படைப்பாளியின் இதயத்தோடு ஒத்து துடிக்கும். யாரேனும் பாராட்ட, மனக்கவிழ்ப்பு அவிழ்ந்து உற்சாகம் புரண்டோடும். ஆனால் புறக்கணிப்பின் மனக்கணிப்பு இருவகையில் இருக்கலாம். ஒன்றாவது, தன் படைப்பின் தரம் சார்ந்து, தரக்குறைவினால் வரவில்லையோ என்று நினைத்தேகும்போது சற்றேறக்குறைய ஆறுதல் கொடுக்கும். மற்றொன்று இக்கதை வாயிலானது.

ஒரு சிறந்த படைப்பின் நிராகரிப்பு நெஞ்சில் அழுத்தம் உண்டாக்கும் என்பதில் சந்தேகமென்ன.

ஆனால் இக்கதைப்படி நட்டம் யாருக்கு? அவ்வாண்டுமலர் வெளியிட்டவர்களுக்கா? அல்லது மிகச் சிறந்த வித்தகர் சிவராமனுக்கா? மேலும் அவ்வடுக்குமாடி மக்கள் தங்களின் சுயமுன்னேற்றத்திற்காகத்தான் நுணுக்க பிழைகளைக் களைக்கவந்தார்கள் எனும் போது, கூடி வாழ்தலின் நன்மையும் மன உளைச்சலையும் புண்படுத்தியிருக்கிறார்கள் என்பது தவறே என்ன?

மிக அருமையான கதை. இயல்பான பிறழாத நடை...
சிவராமன் போல, சிவாவின் கதைகளும் ஆ.வியில் வரும் நாட்கள் தொலைவிலில்லை.

சிவா.ஜி
23-07-2008, 01:17 PM
தென்றல் உங்கள் பின்னூட்டத்தின் ரசிகன் நான். மேலோட்டக் காட்சியை மட்டும் கண்டுவிட்டு இடும் பின்னூட்டமல்ல உங்களுடையது. இங்கும் அப்படியே. இந்தவித புறக்கணிப்புகள் கலைத்துறையில் மட்டுமல்ல..எங்கும் வியாபித்திருக்கிறது.

நீங்கள் சொன்னதைப் போல நட்டம் புறக்கணிக்கப்பட்டவருக்கல்ல....புறக்கணித்தோருக்கு.

மிக்க நன்றி தென்றல்.

மதி
23-07-2008, 03:10 PM
முதலில் அழகான கதைக்கு வாழ்த்துகள் சிவாண்ணா..

எப்படி உங்களால அழகாக வார்த்தைகளை கோர்த்து எழுத முடிகிறது? படைப்பாளிகள் என்றென்றும் தெரிந்தே புறக்கணிக்கப்படுவதில்லை. சில நேரம் அவர்தம் படைப்புகள் சிலர் பார்வையில் படாமல் போவதுண்டு... சில நேரங்களில் தவறுகள் நேரவும் வாய்ப்பிருக்கிறது..

ஆயினும் அவரின் வருத்தங்கள் எனக்கு புரியவில்லை.... இது புறக்கணிப்பு என்ற வகையில் சேருமா என்றும் தெரியவில்லை.

ஆயினும் உங்கள் கதை சொல்லும் திறமை உண்மையிலேயே அருமை.

அமரன்
23-07-2008, 04:49 PM
என்னைப் பொறுத்தமட்டில் படைப்பாளிகள் எல்லாரும் திருப்திக்காத்தான் படைக்கிறார்கள். அந்த திருப்திருப்தியில் படைப்புப் பற்றிய கணிப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. படைப்பு தொடர்பான கணிப்பை இருவகைப்படுத்தலாம்.

புறக்கணிப்பு
அகக்கணிப்புபடைத்தவற்றை பிறர் பார்வைக்கு வைக்கும் படைப்பாளி திருத்தத்துடன் பணத்தையும் புகழையும் எதிர்பார்த்து திருப்தியை அகலப்படுத்த முயல்கிறான். அகக்கணிப்புடன் திருப்திப்படுபவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் சமூகத்துக்கு ஆபத்து குறைவு.

புறக்கணிப்பை எதிர்பார்க்கும் இவர்களில் பலருக்கு எதையும் ஏற்கும் பக்குவம் இருப்பதில்லை. இவ்வகையினரில் "புறக்கணிப்பு" அதிக தாக்கம் செலுத்துகிறது.

பக்குவம் இருக்கும் சிலர் தமது கருத்துகள் பிழை திருத்தப்பட்டு மாற்றங்களை நிகழ்த்தும் வண்ணம் கூர்மையாக்கப்பட்டு பிறரை அடைவதை கருத்தாகக் கொண்டவர்கள். (நம்ம மன்றப் படைப்பாளிகள் பலர் இவ்வகையினர்) பொருள், புகழ் போன்றவற்றை எதிர்பார்ப்பதில்லை. தம் ஆக்கங்களின் தரத்தை பிறருடன் ஒப்புநோக்குவதில்லை.

இவர்களுக்கு ஆக்கங்கள் பிரசுரிக்கப்படாதிருப்பது பொருட்டாக இருந்தாலும் நல்ல சேதி சமூகத்தை சென்றடையும் வாய்ப்பு குறைந்துவிட்டதே என்பதுதான் பொருட்டின் பொருளாக இருக்கும்.

புறக்கணிப்பை எதிர்பார்த்திருந்த சிவராமனுக்கு புறக்கணிப்பு ஏற்படுத்திய அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகள் தனியுடமையா.. பொதுவுடைமையா என்பதை பொறுத்து உள்ளது அவர் தொடர்பான கணிப்பு.. அந்தக்கணிப்பின் கனம்தான் இந்தக்கதையின் தனம்..

பாராட்டுகள் சிவா..

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள உங்கள் ஆக்கங்கள்.
அவற்றில் தக்கவைத்திருக்கும் தெவிட்டாத தனித்தன்மை..
அசரவைக்கும் இவற்றின் சூட்சுமம் அறிய ஆவல்.

பூமகள்
23-07-2008, 05:11 PM
வாவ்..... பின்னூட்டமிட யோசித்து பார்த்தால்.. அமரன் அண்ணா தெள்ளத் தெளிவாய் கதையாராய்ச்சி செய்து முடித்துவிட்டார்..

அமரன் அண்ணா... இது போல் விமர்சனம் நிறைய கொடுங்கள்... பின்னாடியே தொடர்வோம்.. ஒவ்வொரு பதிவாக..!! :D:D

இதற்கு மேல் நானென்ன சொல்ல??!!

அப்படியே ஒற்றுகளோடு ஒப்பி.. வழிமொழிகிறேன்..!!

மன்றத்தின் தனித் தன்மையாக விளங்குபவர்களின் மிகப் பெரும் சகலகலாவல்லவராக இருப்பவர் சிவா அண்ணா தான்..

பணிப் பளுவுக்கு மத்தியில் இவரின் தமிழ்மன்றம் மீதான அன்பு மழையும் பாசப் பிணைப்பும்... சொல்லிலடங்காது..

எப்படி இவருக்கு மட்டும் இத்தனை சிந்தனைகள் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறதென பலமுறை நினைத்து பூரித்ததுண்டு..

ஒவ்வொருமுறையும் "என் அண்ணன்" என்ற பெருமிதம் அடைந்திருக்கிறேன்... இப்போதும் அவ்விதமே..!

அமரன் அண்ணாவின் விமர்சனம் கண்டு பூவினுள் சந்தோசப்பூ பூத்திருக்கிறது..

பாராட்டுகள் சிவா அண்ணா. :)

இளசு
23-07-2008, 05:31 PM
இந்தக் கதை என் மனதில் ஓர் அசௌகரியமான நெருடலையும்
குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது சிவா..!

நல்லவற்றை காலம் உயர்த்தும்..
தாமதங்கள் நிரந்தரமல்ல..

குளத்துமீன்கள் எல்லாமும்
கடல்மீன்களாகவே
குளம் விரும்புகிறதாய் என் கணிப்பு...

வேறென்ன சொல்ல?

(புறக்கணிப்பு - இருவகையில் சொல்லாடிய என் இளவல் அமரனுக்கு
செல்ல முத்தங்கள்..)

அமரன்
23-07-2008, 05:50 PM
ஏதோ ஒரு சோர்வு.. நீக்க மன்றம் நாடிவந்தேன்..
அண்ணனின் அன்பு முத்தம் செய்துமுடித்தது..
சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த சிவாவுக்கு நன்றி.

இளசு
23-07-2008, 08:35 PM
ஒருவருக்கொருவர் சோர்வை நீக்குவதும், சொந்தம் கொண்டாடுவதும்
மன்றவயலில் நற்பயிராய் விளைந்த நல்விளைவுகள் அமரா!

இணைய வைத்த மன்றத்துக்கு நன்றி!

mukilan
23-07-2008, 09:50 PM
அங்கொருபக்கம் தொடர்கதை.. இங்கோ தினம் தினம் சிறுகதை. கலக்குங்க சிவா அண்ணா. இவ்வளவு ஆற்றலா? ஆற்ற்லுடன் அறிவும் கூடினால்...
புறக்கணிக்கப்பட்ட சிவராமனின் மனம் ஒரு படம் வரைந்துவிட்டு அன்னையின் பாராட்டுதலுக்கு காத்து நிற்கும் குழந்தையின் மனம் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

தென்றல் கூறியுள்ளபடி சிவராமனின் சிறுகதைமட்டுமல்ல எங்கள் சிவா அண்ணனின் சிறுகதைகளையும் ஆ.வி, குமுதத்தில் காண ஆசை.

அறிஞர்
23-07-2008, 10:32 PM
புறக்கணிக்கப்பட்டவருக்கு நல்ல ஆறுதல் மனைவி..
வேறு என்ன வேண்டும் இந்த உலகில்......

சிவா.ஜி
24-07-2008, 04:39 AM
நன்றி மதி. உத்திரவாதம் கொடுக்கப்பட்டு எந்தவித சரியான காரணங்களும் இல்லாமல் அது நிறைவேற்றப்படாதபோது...புறக்கணிப்புதானே மதி.

சிவா.ஜி
24-07-2008, 04:41 AM
அமரன். ஆச்சர்ய பார்வையில் அசந்து நிற்கிறேன். உங்கள் புற கணிப்பு விளக்கத்தைப் பார்த்து. விளக்கமாய் ஏற்புரை இட தற்சமயம் இயலவில்லை. பின்னர் இடுகிறேன். நிறைய சொல்லவேண்டும். நன்றி அமரன்.

சிவா.ஜி
24-07-2008, 04:43 AM
நன்றி பூமகள். எழுத்து என் வேலையல்ல. எண்ணுவதே எழுத்தாகிறது. காண்பதே கருவாகிறது. இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சிவா.ஜி
24-07-2008, 04:45 AM
புரிதலுக்கு நன்றி இளசு. குளத்து மீன்கள் என்றுமே கடல் மீன்களாக முடியாது. நல்ல நீரில் உப்புநீர் சேர்ந்தால் அது உப்பு நீராகத்தான் ஆகுமேத் தவிர நல்ல நீராய் இருக்காது. கடல்மீன்களின் ஆதிக்கத்தில் குளத்துமீன்கள் மூச்சுமுட்டி மரித்துவிடும்.

சிவா.ஜி
24-07-2008, 04:47 AM
மிக்க நன்றி முகிலன். நிச்சயம் என் எழுத்துக்கள் வெகுஜன ஊடகத்துக்கு ஏற்றதல்ல. ஆசைப்பட்டு அனுப்பினாலும் நிராகரிக்கப்படுவது நிச்சயம். எனவே நான் ஆசைப்படவில்லை. உங்களின் ஊக்க வார்த்தைகளே மனைதை நிறைக்கிறது. இது போதும்.

சிவா.ஜி
24-07-2008, 04:48 AM
நன்றி அறிஞர். துவளும்போது சாய ஒரு துணையின் தோளிருக்கும்போது வலியின் வீரியம் வெகுவாகக் குறைகிறதென்பது சர்வ நிச்சயம்.

யவனிகா
24-07-2008, 05:13 AM
விரலுக்குள்ள எழுத்துங்க மையை ஊத்திகிட்டு கண்ணியைத் தட்ட ஆரம்பிப்பீங்களோ....

சிவா அண்ணாவோட..விஸ்வரூபம் ஆச்சர்யப்பட வைக்குது...தூங்கும் போதும் யோசிப்பீங்களோ...ஏதாவது கனவுன்னு வந்தா டக்குன்னு அதையும் கண்ணியில் தட்ட ஆரம்பிச்சிடுவீங்களோ....திறம்பட செய்கிறீர்கள்..பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரு நாளைக்கு எத்தனை நேரம் தட்டச்சுவீர்கள்? உங்களைப் பார்த்தால் காதில் புகை வருகிறது. சரி இந்தக்கதையில் ஏதாவது பொடி இருக்கா...தங்காச்சி தெரியாமல் அச் அச் அச் ன்னு தும்ம ஆரம்பிச்சு விட்டேன்.

சரிண்ணா...ஒரு ராஜ பாட்டை போட்டு உங்க பார்வைல நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு கதை எழுது ராஜான்னு டக் டக்குன்னு நடக்கறீங்க...உங்கஸ்பீடுக்கு நடக்க முடியாட்டாலும் அப்பப்ப பின்னாலயே ஒடி வந்து பாத்து ஒரு சல்யூட் வெச்சிட்டு போறேன்...!!!

சிவா.ஜி
24-07-2008, 06:17 AM
இப்படி கூட வர்றதுக்கு வித்தகர்களே தயாராய் இருக்கும்போது பயணத்தின் சுமை தெரியாமல் பயணிக்க முடியும். நீங்க சொன்னதும் சரிதான். நிறைய நேரம் தட்டச்சத்தான் செலவு பன்றேன். வேற எந்தவிதமான பொழுதுபோக்கும் இயலாத நிலையில சிந்தனைகள் உருவாவதை தடுக்க முடியவில்லை. உருவானதும் அதைக் கருவாக்கி உறவுகளுடன் பகிர்ந்துக்காம இருக்க முடியவில்லை. நன்றி யவனிகா.

MURALINITHISH
26-08-2008, 08:49 AM
திறமை எங்கு மதிக்க பட வில்லையோ திறமைக்கு நட்டம் இல்லை அந்த திறமையை மதிக்காதவர்களுக்கே நட்டம் ஊர் குருவியாய் மனம் பறக்க ஆசை பட்டது ஆனால் அவனில் பாதி அவனை வானத்தில் பறக்க வைத்து விட்டது

சிவா.ஜி
26-08-2008, 06:34 PM
இங்கு அவனில் பாதி செய்ததை....அவனியும் செய்யும். புறக்கணிப்போருக்கே இழப்பு. மிகச் சரியான கருத்து முரளி. பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி.