PDA

View Full Version : ஓவியங்கள் - மெசொபொடாமியா - முன்னுரை



ஆதவா
22-07-2008, 02:22 PM
மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையிலும் ஓவியங்கள் பல பரிமாணங்களைத் தொட்டு வருகிறது. இதன் நீட்சி நாளை எப்படி இருக்கும் என்று நாம் அறியோம். ஆனால் கடந்த கால வளர்ச்சியின் படித்துறை எப்படியெல்லாம் இருந்தது என்றும் அதன் போக்கினை மாற்றியவர்கள் யாவர் என்றும் இன்றைய ஊடகங்களின் வழி நாம் அறிந்து கொள்ளலாம்.

அப்படி நான் அறிந்து கொண்டதை இங்கே பகிர்ந்துகொள்வதற்கு முன்னர் எனக்கு தகவல் அளித்து உதவி செய்த இணையத்திற்கும், புத்தகங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்னபிற அனைத்து காரணிகளுக்கும் நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.

தொல்லோவியங்கள்

மனிதன் என்று தோன்றினானோ அன்றே தோன்றிய கலைகளில் ஓவியக்கலையும் ஒன்று. சுமாராக கி.மு இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓவியக் கலைக்கான விதை விதைக்க ஆரம்பித்தாகிவிட்டது. ஆதி காலத்தில் ஓவியங்கள் குகைகளிலும் பாறைகளிலும் கற்கால மனிதர்களால் வரையப்பட்டது. அக்காலத்தில் உடலோவியங்களும் பிரசித்தி. தத்தம் சடங்களின் நிமித்தம் உடலோவியங்களை ஆதிகால மனிதர்கள் வரைந்துகொண்டார்கள் அல்லது பூசிக் கொண்டார்கள். தமிழில் தொய்யில் என்று பழங்காலத்தே குறிப்பிடப்படுவதைக் காணலாம். ஆதி ஓவியங்கள் பிரான்சின் Lascaux குகைகள், தென்னாப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளில் உள்ள ப்லம்பாஸ் (Blombos) குகைகள் மற்றும் ஸ்பெயின் போன்ற மிகச்சில இடங்களில் காணலாம். ஆதிமனிதன் தூரிகையின்றி கைகளினாலோ அல்லது நயமான தூரிகை போன்ற பொருட்களினாலோ வரைந்திருக்கலாம். பெரும்பாலும் சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ண பொடிகளை உபயோகித்திருக்கிறான். சில ஓவியங்கள் கரிக்கட்டைகளை மிருகங்களின் கொழுப்புடன் குழைத்து வரைந்திருக்கிறான். இன்று வரையிலும் அழியாத ஓவியங்கள் வரைய எவ்வித ஓவியம் தக்கவைக்கும் காரணிகள் அல்லாமல் வரைந்திருக்கிறான் என்பது எத்தனை ஆச்சரியமான விசயம்?

பெரும்பான்மை ஓவியங்கள் விலங்கினங்களைக் குறிப்பதாக இருக்கிறது. காட்டெருமைகள், குதிரைகள், ஏன் பறவைகளைக் கூட விட்டுவைக்காமல் அதி தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள் ஆதி மனிதர்கள். குகைகளில் காணப்படும் பெரும்பான்மை ஓவியங்கள் விலங்குகளாக இருப்பதற்கு அன்றைய வாழ்நிலை சூழல், மிருகங்களின் மேலுள்ள அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது அக்காலத்திய சடங்குகள் அல்லது இயற்கை நிமித்தம் காரணமாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர்கள் குகைகளின் உட்புறம் ஆழமாக சென்று வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

http://farm4.static.flickr.com/3048/2694416863_d8bfedf8f3_o.jpg

மேற்காணும் ஓவியம் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லாஸ்காக்ஸ் குகை ஓவியம். இது கி.மு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையிலான காலகட்டத்தில் வரையப்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகின் முதல் முழுமை ஓவியமாக இது இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுவே முதல் அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. பழைய காலத்தை ஆராயும் அறிவியல் சிலசமயம் உத்தேச முடிவுகளை மட்டுமே எடுக்கமுடிகிறது. ஆய்வாளர்கள் சொல்லுவது என்னவெனில் லாஸ்காக்ஸ் ஓவியங்களுக்கு முந்திய ஓவியங்கள் இயற்கையாலோ அல்லது காலம் தக்கவைக்கும்படியான நிரந்தர வர்ணங்களை உபயோகிக்காமலோ ஓவியங்கள் அழிந்துபட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆயினும் வீனஸ் என்ற ஓவியம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். அந்த ஓவியம் ஆறு மீட்டர் உயரத்துடன் முகமில்லா ஓவியமாக விளங்குகிறது. இதுவும் சிவப்பு நிறப் பொடியால் வரையப்பட்டது. இதே போன்றொரு இன்னொரு ஓவியமும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

லாஸ்காக்ஸ் போன்ற குகை ஓவியங்களை பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிய மனிதன் வரைந்திருக்கலாம். மேலும் விலங்குசார் ஓவியங்களோடு அக்காலத்திய ஆயுதங்களையும் நாம் காணலாம். இவ்வகையான குகை ஓவியங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்படுவதால் தொன்மை உலகம் இன்னும் விரியும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இயற்கை சார் பிக்மெண்ட் வர்ணங்களை ஆதி மனிதன் உபயோகித்திருப்பது நினைவு கூறத் தக்கது. தொல்லோவியங்கள் பலவித வர்ணங்களில் வரையப்படவில்லை. இயற்கையிடமிருந்து எடுக்கப்பட்ட அடர் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களே பிரதான வர்ணங்களாக இருக்கின்றன. இத்தனை வருடங்களிலும் இவை அழியாமல் இருப்பதைக் காணும் பொழுது அவன் உபயோகித்த வர்ணங்களின் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. இது சிற்சில ஆராய்வுகளுக்குப் பின் அம்மனிதன் இவ்வகை வர்ணக் கலவைகளை உபயோகப்படுத்தியிருக்கக் கூடும்.

ஓவியத்துடன் சிற்பக் கலையும் இக்காலத்தில் (கி.மு. 30000 ) வளர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓவியத்தோடு நாம் செல்லுகிறோமாகையால் சிற்பக் கலை பற்றி பிறிதொருநாள் பார்க்கலாம்.

இத்தொல்லோவியங்கள் குறித்து வரும் கட்டுரைகளில் மேலும் விரிவாகக் காணலாம்.

தொடரும்...

mukilan
22-07-2008, 02:40 PM
தொல்லோவியங்களை தேடி நாடி பிடித்துப் பார்க்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் ஆதவா. நீங்கள் கதை, கவிதைகளுடன் ஓவியக்கலையிலும் விற்பன்னர் என்று தெரியும். உங்களின் சில ஓவியங்களைக் கண்டுள்ளேன்.

பிடித்த கலையை ஆராய்வது என்பது மிகவும் இனிய பணி. அதை தொய்வில்லாமல் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை கொடுத்த அறிய தகவல்களைப் போன்று மேலும் பல தகவல்களைக் கொடுக்கவேண்டும் என்பது என் அவா! மீண்டும் என் வாழ்த்துக்கள்.

ஆதவா
22-07-2008, 03:29 PM
தொல்லோவியங்களை தேடி நாடி பிடித்துப் பார்க்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் ஆதவா. நீங்கள் கதை, கவிதைகளுடன் ஓவியக்கலையிலும் விற்பன்னர் என்று தெரியும். உங்களின் சில ஓவியங்களைக் கண்டுள்ளேன்.

பிடித்த கலையை ஆராய்வது என்பது மிகவும் இனிய பணி. அதை தொய்வில்லாமல் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை கொடுத்த அறிய தகவல்களைப் போன்று மேலும் பல தகவல்களைக் கொடுக்கவேண்டும் என்பது என் அவா! மீண்டும் என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி முகிலன்.. இது நான் தெரிந்துகொண்டதை தெரிவிக்கும் பகுதி. ஓவியங்களைப் பற்றி எனக்கு மறந்துவிட்டது.. சிறுவயதில் நான் ஓவியம் வரைவதில் வல்லவனாக இருந்தேன். இப்பொழுது என் கைகள் தூரிகைகளைத் தொட்டு பல வருடங்கள் ஆகின்றன... இன்று என் மனக்கண்களுக்குத் தெரிவது வெறுமை மட்டுமே~! இத்தொடர் ஓவியங்களின் ஆதி முதல் அந்தம் வரை நான் என்ன அறிந்தேனோ அதை மட்டுமே கொடுக்கும் முயற்சியாக இருக்கும். தொடரின் முடிவில் நான் கணிணியில் வரைந்த ஓவியங்களை மட்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.. எனக்குத் தெரிந்த ஓவியர் ஒருவர் இம்ப்ரஷனிசம் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் உதித்த தொடரிது. இதற்காக இணையத்தில் தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்..

அன்புடன்
ஆதவன்

ஓவியன்
25-07-2008, 07:25 AM
தான் பார்த்தவற்றையும் நினைத்தவற்றையும் மற்றவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த மனிதன் எடுத்துக் கொண்ட வலிமையான மொழி ‘ஓவியம்'

அந்த வலிய மொழி கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஆதவனின் முயற்சிக்கு என் மனதார்ந்த வாழ்த்துக்கள்...!!

தொடருங்க ஆதவா...!!

ஆதவா
25-07-2008, 07:41 AM
மிக்க நன்றி ஓவியன்.. உங்கள் ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்களேன்.. :)
--------------------------------------

மேற்கண்ட தகவல்களை ஒரு முன்னுரையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தொல்லோவியங்கள் குறித்து இனி மேலும் தெரிந்துகொள்ள எத்தனையோ தகவல் உண்டு. இன்னும் சொல்லப் போனால் கட்டுரையே இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.

மேற்சொன்னதன்படி குகை ஓவியங்களே முதன்முதலில் வரையப்பட்ட ஓவியங்கள். மொழி பரவா காலத்தில் ஓவியம் ஒரு மொழியாக இருந்திருக்கிறது. இக்குகை ஓவியங்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரிந்துகொள்வோமே!! அத்தோடு குகையோவியங்கள் சில இணையத்தில் காணக் கிடைக்கின்றன. அவற்றையும் இங்கே இடுவதால் கட்டுரை படிப்பதுடன் அதனோடு சென்று வந்த அனுபவமும் கிட்டும்.

குகை ஓவியங்கள் :

குகை ஓவியங்கள் குறித்த முன்னுரை படித்திருப்பீர்கள். ஆகவே இங்கே மேலும் விளக்க விரும்பவில்லை. என்றாலும் ஆரம்ப காலத்தில் இருந்த குகைகளைப் பற்றியும் குகை ஓவியங்களைப் பற்றியும் நடுவே அதன் ஓவியர்கள் (?) பற்றியும் நாம் தெரிந்துகொள்ளலாமே?

ப்ளாக்வாட்டர் ட்ரா (Blackwater Draw) :

சுமார் ஒன்றரை மில்லியன் வருடங்களுக்கு முன் உலகம் முழுமையும் பனியால் உறைந்து பனிக்காலமாக (Ice age) இருந்தது நீங்கள் அறிவீர்கள். ஐஸ் ஏஜ் முடிந்த வருடங்களில் பூமி உலர்ந்து புதிய பரிணாமப் பாதையை நோக்கி அடியெடுத்து வைத்தது. இச்சமயத்தில் வடக்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஆதிவாசிகள் அல்லது பழங்குடி மனிதர்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். இவ்வேட்டையர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இதற்கான சான்றுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள் அப்படியான ஒரு இடம் தான் ப்ளாக் ட்ரா. இக்குகை கிழக்கு மெக்ஸிகோவில் காணப்படுகிறது இக்குகையின் வயது பத்தாயிரம் வருடத்திலிருந்து மூவாயிரம் வருடம் வரை இருக்கலாம். வேட்டையாடுதலுக்கு இவ்விடம் சிறந்ததாக இருந்தது. பெரும் விலங்கினங்கள் தண்ணீர் தேடி இங்கே வர, வேட்டையர்களுக்கு நல்ல வேட்டையாகப் போனது.

இவ்விடத்தில் ப்ளாக் வாட்டர் ட்ரா பற்றி எழுதும்பொழுது அன்று நிலவிய க்ளோவிஸ் கலாச்சாரம் பற்றி சிறுகுறிப்பு எழுதியாகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த மெக்ஸிகோ வேட்டையர்களைத்தான் க்ளோவிஸ் என்று அழைக்கிறார்கள் ப்ளாக் வாட்டர் ட்ராவுக்கு மிக அருகில் குடில் அமைத்து வாழ்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் சைபீரியாவில் இருந்து வடக்கு அமெரிக்கா நோக்கி புலம் பெயர்ந்தவர்கள். இயற்கையின் சீதோஷணம் காரணமாகவோ அல்லது பெரும் விலங்குகளை வேட்டையாடவோ (உணவுக்காக) இவர்கள் இடம் மாறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ப்ளாக்ட்ரா குகை அக்காலத்திய வேட்டை பொருட்களைப் பற்றி நமக்குத் தெரிவிக்கிறது. நன்கு உறுதியான கூர்மையான கற்களைக் கத்தியாக உபயோகப்படுத்தி விலங்குகளை வேட்டையாடினார்கள். உபயோகப்படுத்துவதற்கு எளிதான கற்கத்திகளை பயன்படுத்தினார்கள். ப்ளாக்ட்ராவில் அவ்வகையிலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருபுறமும் கூறான கற்கள், ஈட்டியைப் போன்று நீண்ட கற்கள், கத்தியைப் போன்று, இன்னும் பல வகையிலும் உள்ளன. கூறான பாகங்களைத் தவிர கைப்பிடி நழுவிவிடாதபடி செதுக்கியிருக்கின்றனர். இவர்களின் பிரதான வேட்டை மிருகங்களாக காட்டெருமையும் மமத் எனப்படும் யானைகளும் இருந்திருக்கின்றன.

ஃபெல்ஸ் : (Fells)

ப்ளாக்ட்ரா போலவே ஃபெல்ஸும் ஒரு வரலாறைத் தக்கவைத்திருக்கிறது. கி.பி 1936 ல் நடந்த ஆராய்வின் போது கிடைத்த தகவலின் படி ஃபெல்ஸ் குகை தென்னமெரிக்க நாட்டில் பல வருடங்களுக்கு முன்பே (10000 வருடங்கள்) மக்கள் நடமாட்டம் இருந்ததை ஆதாரத்தோடு காண்பிக்கிறது. மனிதனின் நடமாட்டம், கால்தடங்கள், உபயோகித்த ஆயுதங்கள் என பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஆசியாவிலிருந்து அமெரிக்க கண்டங்களை அடைந்த முதல் இனத்தவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் முதல் பதினையாயிரம் வருடங்களுக்கு முன்னமே, பிளாக்ட்ரா வாட்டருக்குப் புலம்பெயர்ந்ததைப் போலவே இவர்களும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தெற்கு அமெரிக்க பகுதிகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் முன்பு சொன்னதைப் போல உலகம் ஒரு புதிய இயற்கை மாறுதலை எதிர்நோக்கி சென்றுகொண்டிருந்தது. அம்மாறுதலே ப்ளாக்ட்ரா மற்றும் ஃபெல்ஸ் போன்ற இடத்திற்கு ஆசிய நாட்டவரை வரவைத்திருக்கிறது. ஃபெல்ஸ் தெற்கு அமெரிக்காவில் சிலியில் படகொனியா என்ற இடத்தில் காணப்படுகிறது. இவ்விரண்டு குகை ஓவியங்கள் நமக்குக் காணக்கிடைக்கவில்லை. காலப்போக்கில் அழிந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

ஒருநிமிடம்

சைபீரியா இருப்பது ஆசியாவில், அலாஸ்காவோ அமெரிக்க நாடு. இங்கே எப்படி புலம்பெயர்வு நடைபெறும்?

அது அடுத்த பதிவில்..

தொடரும்...

இளசு
25-07-2008, 08:39 PM
வாழ்த்துகள் ஆதவா..

ஓவியம் பற்றிய ஆதிச் செய்திகளைச் சொல்வதுடன்
மனித இன வரலாற்றையும் சேர்த்தே சொல்கிறாய்..

இரண்டையும் பிரிக்க முடியாதல்லவா?
ஓவியன் சொன்னதுபோல் .. ஓவியமே ஆதியனின் முதல் மொழி!

இரண்டு எருமைகள் காட்டில் என்னைத் துரத்தின என
குகை வந்து கர்ப்பிணி இணைக்கு விளக்க
படம் வரைந்துதானே அவன் ''சொல்ல'' முடியும்!

தொடர்க ஆதவா..

(ஒன்றரை மில்லியன் ஆண்டுக்கு முன் ஐஸ் ஏஜ்..
சட்டென பத்தாயிரம் ஆண்டு வயசான குகை
என ஒரு கால இடறல் கண்டேன் ஆதவா..
இடையில் ஏதேனும் வரிகளைச் சுருக்கினாயா?)

செல்வா
26-07-2008, 04:57 AM
அருமையானத் தொடர். சிறுவயதில் ஓவியம் வரைகிறேன் பேர்வழி என்று ஏதேதோ கிறுக்கி... ஒன்றும் சரிவராமல் அதற்கும் எனக்கும் ரொம்பத் தூரம் என்று விட்டு விட்டேன். ஆனாலும் ஓவியங்களின் மேல் உள்ளக் காதல் இன்னும் தீரவில்லை.
ஓவியக்காதலோடு வரலற்றுக் காதலும் சேர்ந்து கொண்டால் ... அதுதான் உங்கள் தொடரில் எனக்குச் சுவாரசியம் கொடுப்பது. தொடர்ந்து கொடுங்கள்.... தொடர்ந்து வருகிறோம்.
(கோரல்டிரா திரி மாதிரி பாதில விட்டுடக்கூடாது.. சரியா?)

ஆதவா
31-07-2008, 09:17 AM
வாழ்த்துகள் ஆதவா..

ஓவியம் பற்றிய ஆதிச் செய்திகளைச் சொல்வதுடன்
மனித இன வரலாற்றையும் சேர்த்தே சொல்கிறாய்..

இரண்டையும் பிரிக்க முடியாதல்லவா?
ஓவியன் சொன்னதுபோல் .. ஓவியமே ஆதியனின் முதல் மொழி!

இரண்டு எருமைகள் காட்டில் என்னைத் துரத்தின என
குகை வந்து கர்ப்பிணி இணைக்கு விளக்க
படம் வரைந்துதானே அவன் ''சொல்ல'' முடியும்!

தொடர்க ஆதவா..

(ஒன்றரை மில்லியன் ஆண்டுக்கு முன் ஐஸ் ஏஜ்..
சட்டென பத்தாயிரம் ஆண்டு வயசான குகை
என ஒரு கால இடறல் கண்டேன் ஆதவா..
இடையில் ஏதேனும் வரிகளைச் சுருக்கினாயா?)

அந்த வரிகளை நானும் கவனித்தேன் அண்ணா. சட்டென இறங்கிவிட்டேன். மற்றபடி, ஐஸ் ஏஜ் முடிந்த பிறகு எழுந்த சமுதாயத்தை பற்றி மட்டுமே என் கட்டுரை சொல்கிறது.. ஆனால் காலம் என்று கணக்கிட்டால், நமக்கு 15000 - 10000 வருடங்கள்,,,

மிக்க நன்றி அண்ணா.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.


அருமையானத் தொடர். சிறுவயதில் ஓவியம் வரைகிறேன் பேர்வழி என்று ஏதேதோ கிறுக்கி... ஒன்றும் சரிவராமல் அதற்கும் எனக்கும் ரொம்பத் தூரம் என்று விட்டு விட்டேன். ஆனாலும் ஓவியங்களின் மேல் உள்ளக் காதல் இன்னும் தீரவில்லை.
ஓவியக்காதலோடு வரலற்றுக் காதலும் சேர்ந்து கொண்டால் ... அதுதான் உங்கள் தொடரில் எனக்குச் சுவாரசியம் கொடுப்பது. தொடர்ந்து கொடுங்கள்.... தொடர்ந்து வருகிறோம்.
(கோரல்டிரா திரி மாதிரி பாதில விட்டுடக்கூடாது.. சரியா?)

நன்றி செல்வா.. தொடர்ந்து வருவேன். ஏனெனில் இது பல நாட்கள் நான் கண்முழித்து படித்த செய்திகளின் தொகுப்பு.. நிச்சயம் முடிக்காமல் எந்த வேலையும் இல்லை..

கோரல்ட்ரா இத்தொடர் முடிந்து கொடுக்கிறேன்... :)

ஆதவா
31-07-2008, 09:24 AM
பெரிங் பாலம்:

பெரிங் பாலம் சுமார் ஆயிரம் மைல்கள் நீளம் கொண்ட நிலப்பரப்பு. இப்பாலம் (இயற்கை கட்டிய பாலம்) இன்றைய அலாஸ்காவையும் கிழக்கு சைபீரியாவையும் இணைக்கும் பகுதியாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் அதாவது பனிக்காலத்தில் (ice age) இருந்தது. இப்பகுதி தற்போது பனியால் சூழப்பட்டு பாலம் மூடிக் கிடக்கிறது. காரணம், தொடர்ந்து வரும் பனித்தூறலாலும் பனிசூழ்ந்த அலாஸ்காவிலிருந்து வரும் தென்மேற்குக் காற்றாலும் பாலம் மூடிவிட்டது. மனித இனம் கண்டம் விட்டு கண்டம் நகர்ந்த முதல் நிகழ்வும் இங்கு நிகழ்ந்ததுவே!!.

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/art/350px-Beringia_land_bridge-noaagov.gif

மேற்கண்ட அசை படத்தில் இப்பாலத்தின் காலவரலாறும் அது எப்படி மூடியது என்று தெளிவாகச் சொல்லுகிறது.
பனிக்காலத்தில் தப்பிய மனித இனம் இவ்வழியாக அலாஸ்காவில் புகுந்தனர். காலப்போக்கில் பனிசூழ்ந்து இணைப்புப் பாலமாகிய பெரிங் பாலம் காணாமல் போயிற்று, இதைப் போன்றே மாறுதல்கள் உலகின் பல இடங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இதன் கால அளவும் உத்தேசமாகவே குறிக்கப்பட்டுவருகிறது. ஒரு சிலர் முப்பதாயிரம் வருடங்கள் என்றும் சிலர் பன்னிரண்டாயிரம் முதல் முப்பத்தையாயிரம் வரையிலும் என்று குறிப்பிடுகிறார்கள். என்றாலும் பெரிங் இயற்கைப் பாலம் இருந்தது என்னவோ உண்மைதான். மனித இனத்தின் முதல் இடம்பெயர்தலும் இதன் வழிதான் என்று குறிக்கிறார்கள் ஆராய்வாளர்கள்.

லாஸ்காக்ஸ் குகையோவியம் :


http://farm4.static.flickr.com/3092/2709672609_18fcb9ec33.jpg?v=0

உலகில் மொழிகளை எழுதிவைக்கும் புது பரிமாணம் தோன்றிய காலம் பனிக்காலம் முடிந்த பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு அதாவது இன்றைக்கு சுமார் பதினைய்யாயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஓவியர்கள் ஒரு குழுக்களாகத் தோன்றினார்கள். ஆம் இப்படித்தான் சொல்லவேண்டும். குகை ஓவியங்கள் என்ற வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் தொல்லோவியங்களின் ஓவியர்கள் யார் யார் என்று தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவரே அல்ல என்று நம்மால் உறுதியாக யூகிக்க முடியும் அல்லவா? இம்மனிதர்கள் நியண்டர்தால் மனிதர்கள் அல்ல. ஒரு புதிய உலகிற்கு பாதை வகுத்து தந்த மனிதர்கள். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான படிக்கல்கள் ஆங்காங்கே அடிக்கி வைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் இருவகையிலான மொழிகள் எழுந்தன. இவை குரல்களால் எழுந்தவை அல்ல. கரங்களால் எழுந்தவை. ஒன்று வண்ணங்களை வைத்து எண்ணங்களைத் தீட்டுவதும் எண்ணங்களை செதுக்குவதும். இவற்றிற்கு முன்பு சொன்ன ப்ளாக்ட்ரா, ஃபெல்ஸ் போன்ற குகைகள் தேவைப்பட்டன. பழங்குகைகள் பற்றி அறிந்த நாம், இனி பழங்குகைகள் ஓவியக்கூடமாக மாறியதெப்படி என்பதையும் அறிந்தாகவேண்டுமல்லவா? ஓவியங்கள் குகைகள் நெடுகிலும் சுவர்களிலும் மேற்புறங்களிலும் வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வகை ஓவியங்கள் பரைய்டல் (parietal) ஓவியங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆதி ஓவியர்கள் இக்குகைகளை தத்தம் சடங்குகளுக்காக பயன்படுத்தினார்கள் இது ஒரு வகை.. மற்றொன்று மொபைலரி (mobilary) சிறு சிறு செதுக்கப்பட்ட பொருட்களை தம் இருப்பிடத்தில் புதைத்து வைத்திடுவது..இரண்டாம் வகை அக்காலத்திய பொருட்களை நமக்குக் காட்டுகிறது. அதோடு, கால நிர்ணயம், அக்காலத்திய எண்ணத்திறள் என்று பல ஆராய்வுகளுக்கும் பயன்படுகிறது.

முன்னுரையில் சிறு சிறு குறிப்புடன் லாஸ்காக்ஸ் குகையோவியங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இந்த குகையோவியம் தென்மேற்கு பிரான்ஸ் நாட்டில் இருக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் இன்னும் சில இடங்களில் காணப்பட்டாலும் லாஸ்காக்ஸ் அனைத்திலும் முக்கிய குகையோவியங்களாக இருக்கின்றன. பழங்காலத்திய மனித வாழ்நிலைகளை பறைசாற்றும் ஓவியங்கள் கொண்ட குகைகளாகத் திகழ்கிறது. மேலும் இவ்வோவியங்கள் தலைசிறந்த ஓவியர்கள் வரைந்ததைப் போன்று திகழ்வது குறிப்பிடத்தக்கது. இக்குகை ஓவியங்களில் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்னவெனில் ஒரு மனிதனின் ஓவியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. பெரும்பாலும் கற்கால ஓவியங்களில் மனித உருவம் இருக்காது, பெரும்பான்மை ஓவியங்கள் சுற்றுச்சூழலில் நிலவும் விலங்குகளை மையமாக வைத்தே வரையப்பட்டிருக்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஓவியங்கள் இக்குகைகளில் காணக்கிடைக்கிறது. இதில் தொள்ளாயிரம் ஓவியங்கள் விலங்குகளாக வகைபிரிக்கப்பட்டிருக்கின்றன. குதிரைகள் அடங்கிய ஓவியங்கள் மட்டுமே முந்நூற்றி அறுபத்தி நான்கு இருக்கின்றன. மான்கள் (சாது) தொண்ணூறு காணப்படுகின்றன. எருமைகள் அல்லது மாடுகள் சுமார் நூறு ஓவியங்கள் இருக்கின்றன. மேலும் பறவை, கரடி, காண்டாமிருகம், மாயானை (mammoths) நரி, சிங்கம் என்று பலதரப்பட்ட மிருகங்களையும் இங்கே ஓவியங்களாகக் காணலாம். இவ்விலங்குகளுக்குப் பின்புலத்தில் எந்த ஒரு புல்தரையும் தாவரங்களும் காட்டு மரங்களும் வரையப்படவில்லை. விலங்கோவியங்கள் அனைத்தும் தனிப்பட்டு நிற்கின்றன. மிக மென்மையான காக்கி வர்ணங்களை மிக அழகாக உபயோகப்படுத்தி வரைந்திருக்கிறார்கள். விலங்குகள் வரையப்பட்ட கோணங்களும் மிக அருமையாகவே இருக்கின்றன. அதன் கொம்புக்கிளைகள் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றன. லாஸ்காஸ்க் குகையோவியங்கள் பெரும்பாலும் குகை வாசலில் வரையப்பட்டிருக்கவில்லை. குகையின் ஆழச்சென்று பார்க்கவேண்டியிருக்கிறது. சில குகைகளில் அதுவும் சிரமமாகவே இருக்கிறது.

லாஸ்காக்ஸ் ஓவியங்கள் சூரிய ஒளியில் வரைந்ததாக இருக்காது. குகையினுள் இயற்கை தீபம் செல்ல வாய்ப்பில்லை. தீப்பந்தங்களை உபயோகப்படுத்தி வரைந்திருக்கலாம் என்பது யூகம். இயற்கையாகக் கிடைக்கும் பிக்மெண்ட் பொடிகளை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் இப்பழங்காலத்து ஓவியர்கள். இவர்களின் பிரதான வர்ணங்கள் சிவப்பு, மஞ்சள், காக்கி, கருப்பு மற்றும் ஊதா. தூரிகைகள் இன்றித்தான் வரையப்பட்டிருக்கின்றன எனில் கருநிற ஓரங்கள் முடிகளை தூரிகை ஆக்கப்பட்டிருக்கலாம். மற்ற பகுதிகள் இயற்கையிலேயே கட்டியாக கிடைக்கும் வர்ணங்கள் அல்லது பதனிடப்படாத வர்ணத் துண்டுகளை உபயோகப்படுத்தியிருக்கலாம்.

இக்குகையின் வயது உத்தேசமாக பதினையாயிரம் வருடங்களுக்கும் மேல்.. இக்குகை 1940 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பதினைந்து வருடங்கள் கழித்து மக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. பின்னர் மனித வருகையினால் எழும் கார்பன் - டை - ஆக்ஸைட், ஓவியங்களைத் துன்புறுத்தவே, அப்பகுதிக்குத் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் இன்றளவும் ஓவியங்கள் தக்க முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

http://farm4.static.flickr.com/3142/2710468572_57c1dc053a.jpg?v=0


தொடரும்.....

செல்வா
31-07-2008, 10:08 AM
தொடருங்கள் ஆதவா...
மிக சுவாரசியமாகச் செல்லுகிறது தொடர். ஆமா... நம்ம ஊரில இந்த மாதிரி எதாவது இருக்கா....
சித்தன்னவாசல் பத்தி படிச்சிருக்கேன். அதப்பத்தியும் சொல்லுவீங்க தானே..
காத்திட்டுருக்கேன்.

அசைபடம்னு சொன்னீங்க எதை?

ஆதவா
05-08-2008, 07:44 AM
தொடருங்கள் ஆதவா...
மிக சுவாரசியமாகச் செல்லுகிறது தொடர். ஆமா... நம்ம ஊரில இந்த மாதிரி எதாவது இருக்கா....
சித்தன்னவாசல் பத்தி படிச்சிருக்கேன். அதப்பத்தியும் சொல்லுவீங்க தானே..
காத்திட்டுருக்கேன்.

அசைபடம்னு சொன்னீங்க எதை?

ஓவியங்கள் பொறுத்தவரையிலும் இந்தியா அவ்வளவு பிரசித்தி இல்லை.. எவ்வித புதுமையும் இல்லை.. குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் ஒருசிலரே இருக்கிறார்கள்... இந்தியாவிலும் உண்டு.. அதை பிற்பாடு தொடருவேன்..

Lascaux ஓவியங்கள் சில.....

http://farm4.static.flickr.com/3292/2734860404_d80e4f7c88.jpg?v=0

வேட்டையாடுவது குறித்து.... மான்களின் கொம்புகளை கவனியுங்கள். மனிதர்கள் அதன் மேல் அம்பிடுவதையும் அம்புகள் துளைத்து நிற்பதையும் மனிதர்களையும் எவ்வளவு அழகாக கொடுத்திருக்கிறார்கள் இவ்வோவியர்கள்....!!

http://farm4.static.flickr.com/3173/2734027223_c7e83532b9.jpg?v=0
எருமையைப் போலத் தெரிகிறதா!!! வர்ணங்களோம் நெளிவு சுழிவுடன் ஓடும் ஓவியமும் வியக்க வைக்கிறது...

http://farm4.static.flickr.com/3191/2734025247_cb86153636.jpg?v=0

Narathar
05-08-2008, 09:32 AM
மிக அருமையான திரி ஆதவா.............
எனக்கு பந்தி பந்தியாக எழுதி பாராட்ட தெரியாது! வரவும் வராது....

ஒரு வரியில் சொல்லிவிடுகின்றேன்.........

மிக்க அருமை மிக்க அருமை

தொடருங்கள்!

ஆதவா
06-08-2008, 12:37 PM
http://farm4.static.flickr.com/3269/2737720609_294d49b176.jpg?v=0
லாஸ்காக்ஸ் ஓவியங்கள் குறித்த பல தகவல்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதே போன்றதொரு கற்கால ஓவியர்களின் ஓவியக்கூடமே சாவெட் (Chauvet or Chauvet-Pont-d'Arc ) குகையோவியங்கள். Laboratory of Climate and Environmental Science (LSCE) செய்த ஆய்வின் படி (radio carbon dating) கிட்டத்தட்ட முப்பதாயிரம் வருடங்களுக்கு முந்திய குகை இது என்று வியக்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்களும் பழங்கால ஓவியங்கள் குறித்த ஆர்வலர்களும். கற்காலத் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்நிலையும் பண்டைய கலாச்சார மிச்சங்களையும் நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது சாவெட் குகையோவியங்கள். அம்மனிதர்கள் லாஸ்காக்ஸ் ஓவியங்கள் போல விலங்குகளையும் அது சண்டையிடுவது, வேட்டையாடுவது போன்ற செயல்பாடுகளை அப்படியே பதித்திருக்கிறார்கள்.

தெற்கு பிரான்சில் நதிமேல் இயற்கை அமைத்திருக்கும் Pont-d'Arc எனும் அழகிய இடத்தில் அமைந்திருக்கும் சாவெட் குகைகள் 1994 ஆம் ஆண்டுவாக்கில் உலகுக்குத் தெரியவந்தது. இக்குகை 1700 அடி நீளமுடையது. ஹால் போன்ற மூன்று பெரும் பகுதி இக்குகையினுள் காணப்படுகிறது. அதனை இணைக்கும் இடைப்பாலமும்காணப்படுகிறது. தரைப்பகுதியில் மனித சுவடுகளும் விலங்குகளின் பாதச்சுவடுகளும், குகைகளில் வாழும் கரடிகளின் மண்டையோடுகளும் எலும்புகளும் அக்கரடிகள் குகைச் சுவர்களின் சுரண்டிய ஓவியங்களும் நமக்கு கற்காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது. சிறு குழந்தையின் பாதச்சுவடு ஒன்று இக்குகையில் விட்டுச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தொல்லியல் ஆய்வாளர்கள் இக்குகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களின் நேர்த்தி கண்டு வியக்கிறார்கள். சுமார் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்கினங்களை அத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள் என்பது சாதாரணமா என்ன. இன்றைக்கு முற்றிலும் அழிந்துபோன விலங்குகளின் ஓவியங்களும் கூட அங்கே பரவிக் காணப்படுகிறது.

http://farm4.static.flickr.com/3287/2737721177_4b10df0093.jpg?v=0
http://farm4.static.flickr.com/3173/2737722627_befbcce7f4.jpg?v=0
குகையோவியங்களில் பிரசித்தி பெற்ற சாவெட், ஓவியங்களின் நேர்த்திக்கும் புகழ்பெற்றது.. பல நூறுக்கும் மேலான விலங்குகள் இங்கே வரையப்பட்டிருக்கின்றன. பல விலங்குகள் பண்டைய குகை ஓவியங்களில் வரையப்படாத விலங்குகளாய் அதாவது புதிய விலங்குகளாக பதிக்கப்பட்டிருக்கின்றன. இக்குகையின் சுற்றுப்புறம் முழுவதிலும் காட்டு விலங்குகளான சிங்கம், கரடி, மாயானை (mammoths) புலி, ஆந்தை, காண்டாமிருகம், கழுதைப்புலி ஆகியன காணப்படுகின்றன. ஓவியங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக (overlap) வரையப்பட்டிருக்கின்றன. இவ்வகை விலங்கினங்கள் வேட்டையாடப்படுவது அரிதாக இருந்திருக்கிறது. லாஸ்காக்ஸ் குகையோவியங்கள் போல இங்கும் மனித முகங்கள் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே! ஆனால் வீனஸ் என்று அழைக்கப்படும் ஒரு தேவதையின் ஓவியம் காணப்படுகிறது. அக்காலத்திய மனிதர்களின் தெய்வமாக இருக்கலாம். உடலின் மேல்பாதி காட்டெருதாகவும் கீழ்பாதி பெண்ணுறுப்பும் கால்களை உடைய மனித உடலாகவும் வரையப்பட்டிருக்கிறது. இந்த விலங்குகளை வரைவதன் மூலம் தமக்கு சக்தி கிடைப்பதாக இம்மனிதர்கள் கருதுவதாக ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.

சாவெட் குகை ஓவியங்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதலாவது சிவப்பு ரகம். சிவப்பு வர்ணத்தில் வரையப்பட்டிருக்கும் இதில் கருப்பு வர்ணம் மிகக் குறைவான அளவில் இருக்கிறது,. இரண்டாவது கருப்பு ரகம். இந்த ரகம் கருப்பு வர்ணத்தை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கிறது.. சிவப்பு ரக ஓவியங்கள் முகப்பிலும் சற்று உள்ளே கருநிற வகை ஓவியங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவ்விரு ஓவியங்களும் சமகாலத்தில் வரையப்பட்டிருக்கலாம். ஆனால் வேறுபாடுகள் பல உண்டு. அதன் வடிவத்திலும் எடுத்துக் கொண்ட பொருளிலும் (theme) குறியீடிலும் வித்தியாமளிக்கிறது. சிவப்புரகம், புள்ளிகள், கையால் பதிக்கப்பட்ட அச்சுகள், அடைப்புக்குறி வடிவ கீற்றல்கள் , விலங்குகளின் நிழல் வடிவங்கள் போன்றவற்றைக் கொண்டு திகழ்கிறது. கருப்பு ரகம், விலங்குகளின் அங்க அவையங்கள், அசைவுகள், போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. சிவப்பு ரக ஓவியங்களைக் காட்டிலும் கருநிற ஓவியங்கள் அதிக நேர்த்தியைக் கொண்டுள்ளன. அதன் வீச்சுக்கள் இயற்கையாக அமைந்துள்ளன.

சிவப்பு ரக ஓவியங்கள் :

தொல்லியியல் ஆய்வின்படி சிவந்த ரக ஓவியங்கள் சுமார் முப்பதாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்று கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் கருநிற புள்ளிகள் ஆங்காங்கே பரவிக் காணப்படுகிறது. சில இடங்களில் ஒரே ஒரு புள்ளி மட்டும் தனியே இருக்கிறது. சில இடங்களில் புள்ளிகள் மொத்தமாக இட்டுவைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவத்தில் வரையப்பட்டிருக்கிறது. இவை வர்ணத் தெறிப்புகளாகவும் இருக்க வாய்ப்புண்டு கரங்கள் பதித்த அச்சும் பல இடங்களில் பரவிக்காணப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் பல தொல்லோவியங்களில் இவ்வகை கரங்கள் காணப்படுகின்றன. சில நேர்முறை அச்சுக்களாகவும் (Positive) சில எதிர்முறை அச்சுக்களாகவும் (Negative) இருக்கின்றன. பறவைகள் அல்லது பட்டாம்பூச்சிகளைப் போன்றதொரு குறியீடுகளையும் வரைந்திருக்கிறார்கள், இதைப்போன்றதொரு குறியீடுகள் வேறெந்த குகையோவியங்களில் இல்லை. சிலுவை போன்ற குறீயீடுகளும் செவ்வக வடிவத்தில் சிலுவைக் (இருபரிமாண)கோடுகளும் வரையப்பட்டிருக்கின்றன. " + " கூட்டல் குறிகளைப் போன்றது. இது லாஸ்காக்ஸ் ஓவியங்களிலும் காணப்படுகிறது. இந்தக் கூட்டல் குறிகள் ஒரு செவ்வகத்தின் மூலையை அழுகுபடுத்தும்படி அழுத்தி வரைந்திருக்கலாம்.

http://farm4.static.flickr.com/3105/2737716015_1f7f7441b1.jpg?v=0

சிவப்பு ரக ஓவியங்களில் குறிகள், புள்ளிகளை விடுத்து, விலங்குகினங்களும் காணப்படுகின்றன. ஆயின் மிகச்சாதாரண மிருகங்களான குதிரை, காட்டெருது, மான் போன்றவைகளே காணப்படுகின்றது. இவை இக்குகையோவியங்களின் ஆதிக்காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். இந்த ரக ஓவியங்களில் பெரும்பாலனாவை அனுபவம் வாய்ந்த ஓவியர்களால் வரையப்பட்டிருக்கவேண்டும். அதன் வரை நடை மெச்சும்படி இருக்கிறது. ஓவியர்கள் தனது ஓவியத்தை நன்கு விளங்கும்படியும், முப்பரிமாண முறையிலும் வரைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, நான்கு கால்களைக் கொண்ட ஒரு மிருகத்திற்குப் பின்னால் இருக்கும் மிருகத்தை நல்ல அடுக்கோடு வரைந்திருப்பது... இவ்வகை தத்ரூபங்கள் கருப்புரக ஓவியங்களில் பரவிக் காணப்படுகிறது. இவர்கள் முதலில் இருபரிமாண முறையில் நிழல்வடிவம் அல்லது வடிவ எல்லைக் கீற்றுகளை வரைந்து பின் கால்களை பக்கவாட்டில் ஒழுங்குபடுத்தி வரையும் முறையினர். பெருத்த கொம்புடைய காட்டுமான்களின் (Megaloceros தமிழில் என்ன?) நிழல்வடிவம் அதிஅற்புதமாக வரையப்பட்டிருக்கிறது.

கருப்புரக ஓவியங்கள் :

இவ்விரு ஓவியங்களுக்கிடையேயான வித்தியாசங்கள் அவ்வளவு ஒன்றும் இல்லை. குறிப்பிடத்தக்க குறியீடுகளையும், நிழல்வடிவ விலங்குகளின் ஓவியங்களையும் கொண்ட சிவப்புரக ஓவியங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த கருப்பு ரகம் முப்பரிமாண ஓவியங்களையும், விலங்குகளின் அங்கவய அசைவுகளையும் சற்று கூடுதலான ஓவியங்களுடன் காட்டுகிறது.

கருப்புரக ஓவியங்களிலும் சில குறியீடுகள் காணப்படுகின்றன. குகையின் மத்தியிலிருந்து ஒரு சுவரின் இறுதி வரையிலும் காணப்படுகின்றன. சில அலைவடிவ குறிகள் விலங்குகளின் ஓவியங்களோடு பிணைந்திருக்கின்றன. காண்டாமிருகங்கள் கிட்டத்தட்ட எல்லா குகையோவியங்களிலும் காணப்படுகின்றன. சிவப்பு ரக ஓவியங்களைக் காட்டிலும் கருநிற ரக காண்டாமிருக ஓவியங்கள், நேர்த்தியிலும், வரையப்பட்ட கீற்றுகளின் ஒழுங்கிலும் அசைவிலும், பரிமாணத்திலும் முன்னணியில் இருக்கிறது. சில ஓவியங்கள் சிவப்பு ரகத்தைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றன. பொவிட் (Bovid) எனப்படும் விலங்குகளை இங்கே காணலாம். இது குதிரை போன்றதொரு தோற்றமளிக்கக் கூடியது. விலங்குகளின் கொம்புகளும் அதன் கிளைகளும் லாஸ்காக்ஸ் ஓவியங்கள் போலவே துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன. கொம்புகள் பக்கவாட்டில் தெரியும்படி இருக்கின்றன. காட்டெருதுகள் ஐரோப்பிய தொல்லோவியங்களில் முக்கியமாக இடம்பெறும் விலங்கு. சாவெட்டிலும் இருப்பது ஆச்சரியமல்ல. காட்டுப்பூனைகள், யானைகள், புலி, குதிரை, கழுதைப்புலி, பெருங்கொம்பு மான்கள் (Megaloceros), சிறுத்தை என்ற பலவும் வரைந்து தள்ளியிருக்கிறார்கள். ஆந்தைகளும் காணப்படுகிறது. ஆனால் குறைவான அளவே இருக்கின்றன. ஆந்தை போன்ற செதுக்கலும் சாவெட்டில் உண்டு.

கீழ்காணும் செதுக்கலில் ஒரு ஆந்தை தென்படுகிறது.

http://farm4.static.flickr.com/3086/2738556002_82ca20c8dc.jpg?v=0
ஒன்றின்மேல் ஒன்றாக வரையப்பட்ட இக்குதிரை ஓவியங்களைப் போலவே பல்வேறு மிருகங்களும் ஒன்றின்மேல் ஒன்றாக வரையப்பட்டிருக்கின்றன. இது சாவெட் குகையோவியங்களில் மட்டுமல்ல. அக்காலத்திய மற்ற ஓவியங்களிலும் இம்முறை பிரதிபலிக்க வரைந்திருக்கிறார்கள்.

கீழ்காணும் ஓவியம் குதிரைக்கூட்டங்கள்..

http://farm4.static.flickr.com/3088/2737718343_e9404d2e90.jpg?v=0

சாவெட் ஓவியர்கள் நன்கு கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். சுவர்களை நன்கு சுரண்டிவிட்டு பின் வரைந்திருக்கிறார்கள். சில
ஓவியங்கள் இத்தன்மையால் தான் முப்பரிமாண முறையில் ஜொலிக்கிறது. இலகுவான வரைபலகை போன்றதோரு தோற்றத்தை சுவர்களில் இருத்தி அவர்கள் வரைந்திருக்கும் முறை, பிற்காலத்திய ஓவியர்களுக்கு முதல்படியாக இருந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆதவா
19-08-2008, 01:30 PM
http://farm4.static.flickr.com/3049/2778167026_6419098507.jpg?v=0

http://farm4.static.flickr.com/3028/2778167030_9a9a684f28.jpg?v=0

பண்டைய ஓவியக்கலை வளர்ச்சியுற்றிருந்த மத்திய ஐரோப்பியாவில் மேலுமொரு குகையோவியமே அல்டமிரா குகையோவியங்கள்.

வடக்கு ஸ்பெயினின் முக்கிய குகையோவியங்களில் முதன்மையாக அல்டமிரா குகையோவியங்கள் திகழ்கிறது. சுமார் 16,000 முதல் 9000 வரையிலான பண்டையமக்கள் அல்டமிராவைச் சுற்றிலும் வாழ்ந்திருக்கிறார்கள். தொல்லோவியங்களில் பிரசித்தி பெற்ற அல்டமிரா, ஸ்பெயினின் சாண்டாண்டர் (Santander) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டு உள்ளூர் வாசிகளால் (வேட்டையர்கள்) இக்குகை கண்டுபிடிக்கப்பட்டது.

கடல்மட்டத்திலிருந்து 156 மீட்டர் உயரத்திலிருக்கும் அல்டமிரா, சஜா (Saja) ஆற்றுக்கு மிக அருகில் (சுமார் இரண்டு கி.மீ) அமைந்திருக்கிறது. குகையின் உள் செல்லும் பாதையின் உயரம் இரண்டு முதல் பன்னிரண்டு மீட்டர்கள் வரையிலும் அகலம் ஆறு முதல் இருபது வரையிலும் இருக்கின்றது. ஆகமொத்த குகையின் சராசரி உயரம் பதினொரு மீட்டர்கள் மட்டுமே!

பல்வேறு சுற்றுப்பாதைகளும் குறு அறைகளும் நிறைந்திருக்கும் இக்குகையின் முகப்பு அறை சுமார் 38 மீட்டர்களுடன் மொத்தம் 296 மீட்டர்கள் நீளத்தில் அமைந்திருக்கிறது. இக்குறும்பாதைகள் S வடிவ வளைவாகக் காணப்படுகிறது. ஆரம்பகாலத்தில் காட்டுப்பறவைகளின் கூடாரமாகவே இக்குகை விளங்கியது. சுமார் பதின்மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்பு முறிந்த ஒரு காட்டுமரத்தால் உருண்ட பாறைக்கற்கள் குகை வாயிலை மூடிவிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. குகையைச் சுற்றிலும் வெகு நேர்த்தியாக இயற்கை பொறுத்தியிருக்கும் மலைகளும் மரங்களும் மிக ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதே பிராணிகளின் விருப்பஸ்தலமாக இது அமைய ஏதுவாக இருந்திருக்கும். மலைகளுக்கு நடுவே அமையப்பெற்றிருப்பதால் அல்டமிராவில் காற்று மற்றும் (மழை) நீரினால் எழும் விளைவுகளினால் சற்றே ஓவியங்கள் மாறியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

அல்டமிரா மக்களின் கட்டுப்பாடுகளற்ற காட்டுவாழ்க்கையும் தரம்மிக்கதாகவே அமைந்திருக்கின்றன.. ஊசிகள், கலவைக் கரண்டிகளைப் போன்ற அகன்ற கையுள்ள கரண்டிகள், தோல்களை மிருதுவாக்கும் உபகரணங்கள், முற்கத்திகள் என பலவகையிலும் கருவிகளை உபயோகப்படுத்தி முன்னேற்றம் மிகுந்த மக்களாகத் திகழ்ந்துள்ளனர்.வியக்கவைக்கும் தரமும் எதிர்பார்ப்பை நிறைக்கும் வண்ணங்களுமாக ஒரு கைதேர்ந்த ஓவியர்களால் மட்டுமே வரையமுடியும் என்று தோன்றும்படியான ஓவியங்கள் நிறைந்து கிடைக்கின்றது அல்டமிராவில். மத்திய ஐரோப்பியா மற்றும் ஸ்பெயினின் பண்டைய நாகரீக மிச்சங்கங்களாக இக்குகை விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

அல்டமிரா ஓவியங்களின் பிரதானம் காட்டெருதுகளின் பால் இருந்திருக்கிறது. வேட்டைக்கு மிகமுக்கிய விலங்கான காட்டெருது, அக்காலத்திய முக்கிய அசைவ பதார்த்தங்களில் ஒன்று. மேலும் காட்டெருதுகளின் தோல்களும் எலும்புகளும் அதன் பிடறிமுடிகளும் பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்பட்டிருக்கின்றன.

சாவெட் ஓவியங்களில் காணப்படுவதைப் போல மனிதக் கரங்களின் எதிர்முறை அச்சு இங்கும் காணப்படுகிறது. குகையின் சுவர்புறத்தில் கையை வைத்து வர்ணங்களைத் தெளித்து எதிர்முறை அச்சுக்களை (Negative) உருவாக்கியிருக்கிறார்கள். சில கோட்டோவியங்களாகவும் நிழற்கீற்றுகளாகவும் உள்ளன இக்குகையின் பிரமாதமே அதன் மேற்புற ஓவியங்கள்தான். குகையின் மேற்புறத்தில் (பக்கவாட்டில் அல்ல ceiling ல் ) வரையப்பட்டிருக்கும் காட்டெருதுகளின் ஓவியங்களே பிரசித்தி. பதினைந்து பெரும் காட்டெருது ஓவியங்களும் வெகு சில விலங்கினங்களும் வரையப்பட்டிருக்கின்றன. எந்த விலங்கினங்களுக்கும் பின்புலமாக இயற்கை அமைப்புகளை ஓவியங்களின் முன்னிருத்தியிருக்கவில்லை. ஏனைய லாஸ்காஸ், சாவெட் குகையோவியங்களைப் போலவே

குகை மேற்புறப்பூச்சுக்களைத் தவிர்த்துவிட்டு பார்க்கையில் குகையின் முகப்பு முதல், சுவற்றில் சிவந்த ஒற்றை ஓவியங்கள் நிழல்வடிவக் கீற்றுக்களான நான்கு குதிரை ஓவியங்கள், ஒரு ஆடு, பல கைகள், என பல்வேறு வகைகள் உள்ளன. பல வடிவங்கள் சந்தேகத்திற்குரிய வகையிலும் புரியாத (நவீன ஓவியங்களைப் போல அல்ல) சின்னங்களாகவும் இருக்கின்றன. ஒரு சில ஒன்றின்மேல் ஒன்றான Overlap வகையில் பழையன ஓரளவு அழிக்கப்பட்டோ,அழித்தோ வரையப்பட்டிருப்பதாலோ, அல்லது இனம்தெரியாத வர்ணக்கலப்பினால் எழுந்த ஓவியமாகவோ இருக்கலாம். எளிதில் விளங்கமுடியவில்லை. வெகு சில வடிவங்கள் தரைக்கு வெகு அருகிலும் வரையப்பட்டிருக்கின்றன.ஓவியங்கள் பல்வேறு திசைகளில் பரிணமிக்கின்றன. குதிரைகள், அடர்சிவப்பு மான்கள் என வகைகள் குறைவென்றாலும் பார்ப்பதற்கு நிறைவு. விலங்குகளின் அளவுகள் பெரியதாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சிவந்தமானின் (Red Deer) வரையளவு 2.20 மீட்டர்கள்!!

அடுத்த வியத்தகு ஓவியங்கள் கற்களின் மேல் பூசப்பட்டிருக்கும் மயிரோவிய வர்ணக் கம்பளிகள். தூரிகை இழைகள் இழைத்திருக்கும் மெல்லிய கீற்றுகள். இன்று விற்பனைக்கிருக்கும் மெல்லிய தூரிகைகள் இல்லாத அக்காலத்தில் மிக அழகாக மிருகங்களின் பிடறிமயிர்கள், கண்கள் இடறி விழும் அளவுக்கு வரையப்பட்டிருப்பது ஆச்சரியப்படவைக்கிறது. அடர்சிவப்பு, சிவப்பு மற்றும் கருநிறங்களை உபயோகித்து இவ்விழைகளைத் தீட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகக் கிடைக்கும் துத்தநாகத் தாதுக்கள், அகர் (Ochre) எனப்படும் இயற்கை வர்ணங்கள் (Pigments) , கரிக்கட்டைகள், ஆகியவற்றைக்கொண்டு ஓவியங்கள் குகை நெடுகிலும் வரையப்பட்டிருக்கின்றன. ஓவியங்களின் முப்பரிமாணத்தன்மைக்கும் அதன் உண்மைவடிவம் கொண்டுவர எத்தனிக்கவும் Ochre இயற்கை வர்ணங்களை தண்ணீரில் கலந்து மங்க வைத்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இது அவ்வோவியத்தின் உண்மைத்தன்மை மாறாமல் கிடைக்க ஏதுவாகிறது. மேலும் ஓவியங்களின் வெளிப்புறத்தில் தடித்த கீற்றுகள் தருவதன் மூலம் முப்பரிமாணத்தை நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்கள். குகையில் வரைய குறைந்தளவே கிளம்பும் புகை கொண்ட தீப்பந்தங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாஸ்காக்ஸ் குகையோவியங்களைப் போலவே மனித சுவாச வெளிப்பாட்டினால் விளைந்த மாசுக்கேட்டினால் பார்வையாளர்களின் அனுமதி வெகுவாகக் குறைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட இக்குகைக்கு நாம் செல்லவேண்டுமானால் மூன்றுவருடம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

இங்கே காணப்படும் சுவற்றோவியங்கள் வெறும் சின்னங்களாக மட்டுமல்லாது, ஸ்பெயின் நகர கலாச்சாரத்திற்கு உட்பட்டதாகவும் வாழ்வியலில் கலந்திட்ட அடையாளங்களாகவும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அல்டமிரா அமைப்பும் ஓவியமும் அதன் அருகே வாழ்ந்திருந்த பண்டைய மக்களின் நாகரீகத்தையும் சற்றே வெளிப்படுத்தியிருக்கிறது. அந்நாட்டு சுற்றுலாத்துறையினர் இக்குகையின் (Bison) ஓவியத்தை தங்களது சின்னமாகவே வைத்திருக்கிறார்கள். ஸ்பானிஷ் சிகரெட்டுகளிலும் பைசன் சின்னம் காணப்படுகிறது. அந்நாட்டு இலக்கியங்களிலும் திரைப்பாடல்களிலும் புத்தகங்கங்களிலும் அல்டமிரா இடம்பெறுகிறது.

அல்டமிரா சில குறிப்புகள் :

1. ஜூன் முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் முதல் மே மாதங்கள் வரையில் இக்குகை திறந்து வைக்கப்படுகிறது. காலை 9.30 முதல் மாலை 7.30 வரை.

2. வாரத்திற்கு 160 பேர் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சில முக்கிய தினங்களில் குகை மூடிவைக்கப்படுகிறது.

3. பெரியவர்களுக்கு 2.40 யூரோவும், பதினெட்டுக்கும் குறைவான வயதுடையவர்களுக்கு இலவசமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்கும், ஆராய்வாளர்களுக்கும் கட்டணத்தில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

4. சர்வதேச கண்காட்சி தினத்தன்றும் (18 மே) கொலம்பஸ் தினத்தன்றும் (12 அக்) Constitution தினத்தன்றும் (06 டிச) முற்றிலும் இலவசமாகவே அநுமதியளிக்கப்படுகிறது.

5. மின்விளக்கினை உபயோகப்படுத்தி ஓவியங்களைக் கண்டு மகிழலாம்

முகவரி :

Altamira,
E-39330 Santillana del Mar,
Cantabria,
Tel: +34-942-818005,
Fax: +34-942-840157.

ஆதவா
21-08-2008, 09:48 AM
மேலும் சில குகையோவியங்கள் :

லாஸ்காக்ஸ், சாவெட், மற்றும் அல்டமிரா குகைகள் பற்றி ஓரளவேனும் தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். குகையோவியங்களில் பிரசித்தி பெற்ற இவைகளைப் போன்றே பலநூறு குகைகள் உள்ளன. இக்கட்டுரையின் நீளம் அதிகம் என்பதாலும் இன்னும் பல விசயங்கள் இதில் பேசப்படும் என்பதாலும் ஏனைய குகையோவியங்களைக் குறித்து சிறு சிறு குறிப்புகள் தருகிறேன்.

Rouffignac

சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே புழக்கப்பட்ட குகை Rouffignac. புகழ்பெற்ற சாவெட் ஓவியங்கள் அடங்கிய பிரான்ஸில் அமைந்திருக்கிறது இக்குகை. பழங்காலத்திய ஓவியங்கள் பல இக்குகையில் அடங்கியிருக்கின்றன. கி.பி 1575 இலிருந்து ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொல்லோவியங்கள் குகையைச் சுற்றிலும் உட்புறத்திலும் நிறைந்து காணப்படுகின்றன. இக்குகையின் பிரதான ஓவியங்கள் மாயானைகள் (மமத்) இதனாலேயே இக்குகை, நூறு மாயானைகளின் குகை (the Cave of the Hundred Mammoths) என்று அழைக்கப்படுகிறது.

Niaux

கலைகளின் தலைநகர் பிரான்ஸின் மற்றுமொரு குகை நியக்ஸ். Vicdessos ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக்குகை உலகப்புகழ்பெற்ற குகையோவியங்கள் நிரம்பிய குகையாகும்.

குகைக்கு முந்நூற்றைம்பது மீட்டர் தொலைவில் பெரும் பாறாங்கல் ஒன்று செங்குத்தாக அமைந்திருக்கிறது. சுற்றிலும் சிவப்பு மற்றும் கருப்பு வர்ணங்களில் புள்ளிகளும் சிறுகோடுகளுமாக வரையப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே அமைந்திருக்கும் பல ஓவியங்கள் குழப்பமான வகையைச் சார்ந்தவை. அதன் அர்த்தங்கள் இன்னும் புரிபடவில்லை. சிலர், புள்ளிகள் பெண் சின்னமாகவும், சிறுகோடுகள் ஆண்சின்னமாகவும் கருதுகிறார்கள். சில இடங்களில் குவியலாக இச்சின்னங்கள் காணப்படுகின்றன.

இங்கே நம்மை மிகவும் ஈர்ப்பது கருப்பு மண்டபம். வியக்கவைக்கும் குதிரை மற்றும் காட்டெருது ஓவியங்கள். இங்கே பார்வையிடுதல் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. ஒருநாளைக்கு இருபது நபர்கள் வரை மட்டுமே அநுமதிக்கிறார்கள். அதுவும் நாற்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே!

Geißenklösterle

ஜெர்மனியில் அமைந்திருக்கும் Geißenklösterle குகை, மற்ற குகைகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இது மற்ற குகைகளைப் போன்று ஆழமாக இல்லை. பார்வையிடுவதற்கும் சுலபமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இங்கே ஓவியங்கள் நிலைத்திருக்கவில்லை. வர்ணக்கலவைகள் மட்டுமே இருக்கின்றன. சீதோஷ்ண நிலையும் இயற்கை அமைப்பும் ஓவியங்களை அழித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கே சதுரக் கல்லொன்றில் முப்பக்கம் மூன்று வேறு வர்ணங்கள் தீட்டியிருக்கிறார்கள் சிவப்பு, கருப்பு, மற்றும் மஞ்சள். இவை ஜெர்மன் கொடியில் இருக்கும் அதே வர்ணங்கள்.. இக்குகை பண்டைய ஜெர்மன் பற்றிய சிறுகுறிப்புகளை மட்டுமே விட்டிருக்கிறது.

Domboshowa

ஜிம்பாப்வேயில் அமைந்திருக்கும் Domboshowa கல் மற்றும் குகைகள், கல்லோவியங்கள் ரகத்தினைச் சார்ந்தது (Rock Art) இங்கே மனித முகங்கள் வேட்டையாடும் வகையில் வரையப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு வர்ண ஓவியங்கள் சுமார் இரண்டாயிரம் வரை இருக்கின்றன. இதன் காலம் 13000 வருடங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Pileta

பலநூறு ஓவியங்கள் கொண்ட பைலடா ஸ்பெயினில் இருக்கிறது. பெரும்பாலானவை கோடுகளாகவும் மாதிரியோவியங்களாகவும் (Patterns) இருக்கின்றன. சில மனித முகங்கள் விலங்குகளும் காணப்படுகின்றன. பிரதானமாக கருப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. குகையின் ஆழத்தில் சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில் மீன் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இது இங்கே பிரசித்தி. இக்குகையின் பாதை இரு கிளைகளாக விரிந்து இருக்கிறது. இடது கிளையில் கண் விரிக்கும் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன.

Grottes d'Arcy

சிறுசிறு குகைகள் அடங்கிய இவை ப்ரான்ஸின் க்யூர் (Cure) ஆற்றருகில் அமைந்திருக்கிறது. இவற்றில் பெரிய குகை மட்டுமே பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏனையவை மூடிவைக்கப்பட்டுள்ளது. இக்குகையில் சுமார் ஐம்பது ஓவியங்கள் உள்ளன. சாவெட்டுக்குப் (Chauvet ) பிறகு வரையப்பட்டிருக்கலாம். கைப்பிரதிகள், கரடிகள், காட்டுமான்கள், மாயானைகள் என்று பலவும் நிறைந்திருக்கின்றது.

மேலும் சில :

Chinhoyi - ஜிம்பாப்வே
Alistrati, Alepotrypa - க்ரீஸ்
Vasco , Dunbar, Pictograph - அமெரிக்கா
Viking - தாய்லாந்து
Gruta Rei do Mato - பிரேசில்
Margate , Creswell Crags, Fingal's - இங்கிலாந்து
Cueva de Gualicho - அர்ஜெண்டினா
Schillathöhle - ஜெர்மனி
Cosquer, de Font-de-Gaume, Grotte de Bédeilhac - பிரான்ஸ்
Refsvikhula - நார்வே
KainHitam, Batu - மலேசியா
Juxtlahuaca, Oxtotitlan, Cataviña - மெக்ஸிகோ
Għar Hasan - மால்டா
Kapova - ரஷ்யா
Beldibi Magarasi, Koca*n Mağarası - துர்க்கி
Cueva de Santimamiñe, Cueva Pintada, Ekain, Cueva de Sopeña, La Cueva de Nerja, La Cuevona de Ardines - ஸ்பெயின்
Wonderwerk, Cango - தென்னாப்பிரிக்கா
Naj Tunich - கவுதமாலா
Uluru, Bates, Weebubbie, Yourambulla - ஆஸ்திரேலியா
Tassili n'Ajjer - அல்ஜீரியா
Laas Gaal - சோமாலியா
Temiya - ஜப்பான்
Qala Qala - பொலிவியா
Gruta do Escoural - போர்ச்சுக்கல்
Cueva de las Manos - அர்ஜெண்டினா
Mogharet el Kantara - லிபியா
Cueva del Guácharo - வெனிசுலா
Long Men Dong - சீனா
Magharet Qadisha - லெபனான்
Dambulla - இலங்கை
Mladecske jeskyne - செக் குடியரசு

இந்தியக் குகைகள் பற்றி, இந்திய ஓவியங்கள் பிரிவில் பார்ப்போம்

தொடரும்...

mukilan
24-08-2008, 01:35 AM
ஆதவாவின் ஆய்வுக்கட்டுரையாளன் என்றொரு மற்றொரு பரிமாணம் அழகாக மிளிர்கிறது. குகைகளில் காட்சிகளை சக மனிதர்களுக்கு விளக்கவும், அல்லது அறிந்தே தன் எதிர்கால சந்ததியினர் பேசுவதற்கும் இப்படி ஆதிமனிதன் தன் ஓவியங்களை விட்டுச் சென்றிருக்கிறான். இயற்கையாகக் கிடைக்கும் பூச்சாறுகள் இலைச்சாறுகளின் கலவைகள், கரித்துண்டுகள், சுண்ணாம்புக்கட்டிகள் என மனிதனின் வண்ணக் கலப்பிற்கு இயற்கையும் பேராதரவு கொடுத்திருக்கிறது.

Mammoth என்பது யானைபோன்ற ஆனால் மிகப் பெரிய என்பதால் அதற்கு மாயானை எனப் பெயர் சூட்டியிருப்பது வெகு பொருத்தம் ஆதவா. மாமோத் களை Woolly Mammoths என்றும் சொல்வார்கள். அந்த யானைகள் குளிர்பிரதேசங்களில் வாழ்ந்ததால் உடலில் அதிக ரோமங்கள் கொண்டிருந்தன.

கண்டங்கள் பெயர்ச்சியான Tectonic தியரியின் படி மனிதனின் ஓவியங்கள் மட்டுமல்ல தாவரங்கள்,விலங்குகள் கூட கண்டம் விட்டு கண்டம் மாறி இருக்கின்றன.

சுவாரசியமாகச் செல்கிறது ஆதவா. இத்தகவல்களுக்குப் பின் இருக்கும் உழைப்பைப் பார்த்து வியக்கிறேன். பாராட்டுகளும் நன்றியும்.

ஆதவா
25-08-2008, 09:53 AM
மிக்க நன்றி முகிலன். இத்தொடர் எழுத எழுத புதுப்புது விசயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் விளக்கமாக நன்றாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகின்றது. சலிப்புதட்டாத வரைக்கும் இக்கட்டுரை வெற்றிப்பாதையில் செல்கிறது என்று நினைத்துக்கொள்கிறேன்.

உழைப்பென்னங்க உழைப்பு? உட்கார்ந்த இடத்திலிருந்து தகவல் திரட்டுவது அத்தனை கடினமாகத் தெரியவில்லை.. ஆனால்... பல தகவல்கள் போலியாக இருக்கின்றன. சரியான தகவல் எது என்று தேடுவதற்குள் மண்டை குழம்பிவிடுகிறது. சரியான ஆங்கிலம் தெரியாத எனக்கு, பல வார்த்தைகள் புரியாமலே இருக்கின்றன. முக்கிய தளங்களில் பல தகவல்கள் இருப்பதே இல்லை. உதாரணத்திற்கு லாஸ்காக்ஸ் மற்றும் அல்டமிரா பற்றி புத்தகங்கள் கிடைக்கவில்லை. தகவல்களும் அவ்வளவாக இல்லை. சாவெட் குறித்து பெரிய புத்தகமே இருக்கிறது. இவற்றைவிட, ஒவ்வொரு பீரியடாக எடுத்துச் செல்வதும் சிரமமாக இருக்கிறது..

ஆனால் இணையம் ஒரு வரம். தோண்டத் தோண்ட சுரந்துகொண்டே இருக்கின்றது. இப்பொழுது மெசொபொடாமியா கலை வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முழுவதுமாக முடிந்த பின்னரே எனது அடுத்த பதிவும் வரும். இடையிடையே கொடுக்க இயலாது. அதுவரையிலும் ஒரு சின்ன இடைவெளி விட்டு வருகிறேன்.

உங்கள் ஆர்வத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி முகிலன்

இளசு
25-08-2008, 10:10 AM
விட்ட இடத்திலிருந்து வாசிக்க இன்றுதான் நேரம் அமைந்து, நிறைவாய் வாசித்தேன் ஆதவா.

முற்றிலும் புதிய தகவல்கள் கற்றேன். உன் முயற்சிக்கும் இத்தொடருக்கும் என் ஊக்கமும் பாராட்டும்.

ஸ்பெயின் போனால் அலடாமிரா போக முயல்வேன்.

முகிலன் சொன்ன மாம்மோத்கள் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் குளிர்ப்பிரதேசம் என்பதை கேள்விப்பட்டதில்லை.

ஆல்ப்ஸ் மலை அடிவாரம் வெப்பநாடாய் இருந்ததும், அக்கடற்ககரைகள் இந்தியக்கடற்கரை போல் ஒரு Tropical பூமியாய் இருந்ததும், தென்னை, வாழை அங்கே விளைந்ததும், ஊடே மாம்மோத்கள் விளையாடுவதுமாய் -

கண்டங்கள் நகரும் முன் இருந்த காட்சி என ஓவியம் கண்டேன் -
ஸ்விட்சர்லாந்தின் லுசெர்ன் அருங்காட்சியகத்தில். என் ஐயம் களைய முகில்ஸ் உதவ வேண்டும்.

ஆதவா
02-09-2008, 03:09 PM
விட்ட இடத்திலிருந்து வாசிக்க இன்றுதான் நேரம் அமைந்து, நிறைவாய் வாசித்தேன் ஆதவா.

முற்றிலும் புதிய தகவல்கள் கற்றேன். உன் முயற்சிக்கும் இத்தொடருக்கும் என் ஊக்கமும் பாராட்டும்.

ஸ்பெயின் போனால் அலடாமிரா போக முயல்வேன்.

முகிலன் சொன்ன மாம்மோத்கள் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் குளிர்ப்பிரதேசம் என்பதை கேள்விப்பட்டதில்லை.

ஆல்ப்ஸ் மலை அடிவாரம் வெப்பநாடாய் இருந்ததும், அக்கடற்ககரைகள் இந்தியக்கடற்கரை போல் ஒரு Tropical பூமியாய் இருந்ததும், தென்னை, வாழை அங்கே விளைந்ததும், ஊடே மாம்மோத்கள் விளையாடுவதுமாய் -

கண்டங்கள் நகரும் முன் இருந்த காட்சி என ஓவியம் கண்டேன் -
ஸ்விட்சர்லாந்தின் லுசெர்ன் அருங்காட்சியகத்தில். என் ஐயம் களைய முகில்ஸ் உதவ வேண்டும்.

மிக்க நன்றி இளசு அண்ணா. உங்களைப் போன்றவர்ர்களின் ஊக்கமே இத்தொடரின் முதுகெலும்பு,.

ஆதவா
02-09-2008, 03:27 PM
http://farm4.static.flickr.com/3187/2821882706_5d7c45217c.jpg?v=0

இரு நதிகளுக்கு இடைப்பட்ட நாடு என்று கிரீக் மொழியில் செல்லமாக அழைக்கப்பட்ட மெசொபொடாமியா கி.மு ஐயாயிரம் முதல் கி.பி 539 வரை இன்றைய சிரியா, ஈரான், ஈராக் ஆகிய நாட்டுப்பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. டைகிரிஸ், யுப்ரேட்ஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தையே மெசொபொடாமியா என்று வழங்குகிறார்கள். இப்பகுதி செழிப்பு மிகுந்த வண்டல்மண் நிறைந்த பகுதியாகும். மெசொபொடாமிய நாகரீகம் உலகில் தோன்றிய நாகரீகங்களுள் முதன்மையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மெசொபொடாமியா புவியியல் ரீதியாக இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. வடக்குப் பகுதி மலைகளாலும் குன்றுகளாலும் தெற்குப்பகுதி சமவெளிகளாலும் சூழப்பட்டு காணப்படுகிறது. பழைய கற்காலத்தில் பண்டைய மக்கள் மலைக்குகைகளிலும் வடகிழக்குப்பகுதிகளிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தெற்குப்பகுதிகளில் இயற்கை எதிரிகளான, வெள்ளம், புயல், கனமழை ஆகியன அந்நாட்டு மக்களை அதகளம் செய்தது. மெசொபொடாமிய ஓவியங்கள் இத்தகைய சீற்றங்களின் பாதிப்புகளாகவும் இருக்கின்றன. மெசொபொடாமியா கலைகளைப் பொறுத்தமட்டில் கட்டிடக்கலையையும் சேர்த்து எழுத வேண்டியிருக்கிறது. அவர்களது கலை உணர்வுகள் கட்டிடங்களில் பெரும்பான்மை வரையப்பட்டுவிட்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.

மெசொபொடாமிய கட்டிடங்களில் மிக முக்கியமானதாக கோவில்களும் அரசமாளிகைகளும் இருந்தன. இதன் ஆரம்பம் முதன்முதலில் கோவில்களிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஏனெனில் அன்றைய மனிதர்கள் கடவுளுக்கு பயந்தவர்களாகவும் அவர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகவும் கடவுள் உருவெடுத்ததும் காரணம். மேலும் தெற்கு மெசொபொடாமியாவின் இயற்கை சீரழிவும் ஒரு காரணமாக இருக்கலாம். இறைவன் இயற்கையை வலுவாக எதிர்க்கும் காரணியாக நம்பப்பட்டார். கோவில்கள் இதனால் பக்தியுடனும் கலையுடனும் கட்டப்பட்டது. இன்றைக்கு பழைய மெசொபொடாமிய நகரங்களைக் கவனிக்கையில் போருக்குத் தகுந்தவாறு பலப்படுத்தப்பட்ட நகரங்களாக கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு நகரங்களும் முறையான திட்டத்தின் கீழும் அல்லது செயல்படுத்தப்படாத திட்டத்தின் கீழும் கட்டப்பட்டிருக்கின்றன. வீதிகள் வளைந்து நெளிந்து Maze அமைப்பில் காணப்படுகின்றன. அந்தந்த நாட்டு மக்கள் எளிதாக எதிரிகளைத் தாக்கும் வண்ணம் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. வளமான மண்வளம், கட்டிடக்கலை செழிப்பதற்கு உதவிற்று.

மெசொபொடாமியக் கலையை இருவகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவுகளின் எதிரொளி இரண்டாவது புராண இலக்கியம். மெசொபொடாமியக்கலை கோவில்கள் மற்றும் மன்னர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் சிற்சில பொருட்களில் பிரதிபலிக்கிறது. மெசொபொடாமிய மண்வளம், மண்பானைகள், அலங்காரப்பூச்சட்டிகள் மற்றும் காகிதக் கற்றைகள் செய்ய ஏதுவாக இருந்தது. மரத்தால் செய்யப்பட்ட சில கலைப்பொருட்களும் இன்றும் காணக்கிடைக்கின்றன. ஆனால் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட கலைப்பொருட்கள் மிக அரிதாகவே உள்ளன. சிற்பக்கலைகளுக்கு அந்நாட்டில் கிடைத்த பல்வேறு மண்படிமங்களை அழகாக உபயோகித்திருக்கிறார்கள். உலோக வகையில் செம்பு, வெள்ளி, தங்கம், ஆகியவையும், நுணுக்கம் மிகுந்த சிற்பங்களுக்கு சிறப்பு மிக்க கற்களும் உபயோகப்பட்டுள்ளது.

http://farm4.static.flickr.com/3286/2821947028_73f56da4d7.jpg?v=0

உருளை பதிப்பியில் (Cylinder Seal) களிமண் கற்றைகளிலும் புராணக்காட்சிகள் பொதிக்கப்பட்டிருக்கின்றன. உருளை பதிப்பி என்பது உருளை வடிவிலான மரத்தாலோ இரும்பாலோ சித்திரங்கள் செதுக்கப்பட்ட ஒரு பொருளாகும். இதனை ஈரமான மண் கற்றைகளில் வைத்து உருட்ட, உருளையில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் கற்றையில் பொதியப்பட்டு ஒரு நிகழ்வை விவரிக்கும். இவ்வுருளை பதிப்பிகள் வியாபார பரிமாற்றத்திற்குப் பயன்பட்டன.

முன்னதாக, ஆரம்பகால மெசொபொடாமிய கலை வளர்ச்சி சிறிய அளவிலேயே இருந்தது. ஏனெனில் ஓவியத்திற்குத் தேவையான இயற்கைப் பொருட்களை வழங்குவதற்கு அந்நாட்டு இயற்கை வளம் அவ்வளவாக அமைந்திருக்கவில்லை. சில உலோகங்கள், கற்கள் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர் அசிரியன் மாளிகைகள் இக்கற்களால் அலங்கரிக்கப்பட்டன. சிற்பங்கள் விலங்குகளின் தலையைக் கொண்ட பெரும் வாசற்கதவுகள் அல்லது பயங்கரமான உருவங்கொண்ட கதவுகள் தயாரிக்கப்பட்டன. இருப்பினும் பழைமையானதும் நிலையானதுமான மெசொபொடாமியக் கலை உருளை பதிப்பிகளே ஆகும். இதைப் போன்ற பல படிமங்கள் நிறைந்தது மெசொபொடாமியக் கலை. அவையனைத்தும் எழுதுவதற்காகவே பயன்பட்டன. மேலும் மெசொபொடாமியர்கள் முத்திரை குத்துவதையும் பழக்கத்தில் கொண்டிருந்தார்கள்.

மெசொபொடாமிய கலை மற்றும் கட்டிடக்கலைகளை அந்தந்த காலத்திற்கேற்ப பிரிக்கலாம். வரலாற்றுச்சான்றுகள், அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள், அகழ்வாராய்வுகள் யுத்தவியல் மற்றும் கணிப்புகள் சார்ந்து இப்பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்கள் அதாவது பழைய கற்கால மெசொபொடாமியம் குறித்த தகவல்கள் பல முரணாக உள்ளன. கால அளவுகள் தெளிவாக உள்ளவற்றிலிருந்து மட்டுமே கணிக்கப்படுகின்றன.

சரி, இனி நாம் காணப்போகும் பகுதிகள் இவை :

1. வரலாறு அறியாத காலம்
2. அரசு தோன்றிய காலம்
3. அக்கடியன்
4. புதிய சுமேரியன்
5. பாபிலோனியன்
6. ஹிடிடி
7. எலமைட்
8. அசிரியன்
9. புதிய பாபிலோனியன்

தொடரும்...

அறிஞர்
02-09-2008, 03:44 PM
அருமையான தொகுப்பு.. ஆதவா...

இதற்கு இந்திய ஓவியங்கள்... சித்தன்னவாசல் ஓவியங்களை முடிந்தால் கொடுங்கள்.

இளசு
05-09-2008, 05:11 PM
ஓவியம் அறிய வந்தால், உடன் வரலாறு,பண்பாடும் சேர்த்து..!

ஊட்டும் ஆதவக் கரங்களுக்கு வந்தனம்.

உலக நாகரீகத்தின் தொட்டில் அல்லவா மெசபடோமியா..
சொல்ல நிறையவே இருக்கும். தொய்வின்றி தொடர்க ஆதவா!

ஆதவா
14-11-2008, 08:54 AM
அருமையான தொகுப்பு.. ஆதவா...

இதற்கு இந்திய ஓவியங்கள்... சித்தன்னவாசல் ஓவியங்களை முடிந்தால் கொடுங்கள்.

மிக்க நன்றி அறிஞரர!

படிப்படியாக ஓவிய வரலாறை எடுத்து வருகிறேன். இப்பொழுது மெசொபொடாமியா, அடுத்து எகிப்து, கிரீக், ரோமன் பின்னர் இந்தியா வருகிறேன்.. ஓவிய வரலாறோடு, இசங்களையும் அது எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்ந்து முடிந்தவரை தருகிறேன்.....


ஓவியம் அறிய வந்தால், உடன் வரலாறு,பண்பாடும் சேர்த்து..!

ஊட்டும் ஆதவக் கரங்களுக்கு வந்தனம்.

உலக நாகரீகத்தின் தொட்டில் அல்லவா மெசபடோமியா..
சொல்ல நிறையவே இருக்கும். தொய்வின்றி தொடர்க ஆதவா!

இடையே ஏற்பட்ட தொய்வுக்கு மன்னிக்க வேண்டும் அண்ணா... கொஞ்சம் வேலைப்பளு இருந்தது... நாளை இன்னொரு பாகம் கொடுத்து சரிசெய்து கொள்கிறேன்.

நன்றி அனைவருக்கும்..