PDA

View Full Version : அடை முட்டைகள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-07-2008, 10:37 AM
எதிர் பாராதவாறு
காதுகளில் அறையப்படும்
எதிராளிகளின் சில வார்த்தைகள்
அப்படியே புடம் போட்டு
அமர்ந்து கொள்கின்றன

அவ்வப்போது வலியைக் கூட்டி
இருத்தலை உணர்த்தும் ரணங்களாய்
உடற்கூறுகளில் ஊடுருவிப் போய்
உறுத்திக்கொண்டே இருக்கின்றன

இருந்த போதும் நொந்து கொண்டு
இல்லாத போது வெந்து கொண்டு
இப்படியாய் சராசரி வாழ்க்கை
ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பினும்
அந்த வார்த்தைகள் மட்டும்
சற்று முன் மூட்டிய தணலாய்
கொட்ட கொட்ட விழித்திருக்கின்றன

அவ்வப்போது வாழ்வில் நிகழும்
பெருத்த ஏற்றங்களுக்கு கூட
அவ்வார்த்தைகள் சமாதானமடைவதில்லை

வீறிட்டு அழும் குழந்தையை
தேற்றும் கிலுகிலுப்பைகளாய்
தற்சமய சரிகட்டுதல்களுக்கெல்லாம்
அதன் வீரியம் குறைந்து போவதில்லை

கர்ப்ப காலம் கழிந்த
கருவறைக் குழந்தையாய்...

பூமியைப் பிளந்து பீய்ச்சியடிக்கும்
எரிமலைக் குழம்புகளாய்...

எதிராளியின் முன் தோன்றும்
முழு உருவம் அடையும் வரை
உடலின் உஷ்ணத்திற்குள்
அடை முட்டைகளாகவே
அடங்கிக் கிடக்கின்றன

எவருடைய ஏடாகூட
எக்குத்தப்பான வார்த்தைகளுக்காக
நுனி மூக்கு கோபத்தில்
அவசர வார்த்தைப் பிரயோகம் செய்து
அதை குறை பிரசவமாக்கி விடாதீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

நாகரா
21-07-2008, 12:36 PM
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரையை நினைவுறுத்தும் உம் கவிதை தம் நா காவாத எதிராளியின் முன்னும் நாம் நா காக்க வேண்டிய அவசியத்தையும் அழகான வார்த்தைப் பிரயோகங்களால் வலியுறுத்துகிறது.

மன்னிக்கும் மனோபாவம் நமக்கு எஞ்ஞான்றும் வேண்டும். மன்னிக்க முடியாததாலேயே எவருடைய ஏடாகூட எக்குத்தப்பான வார்த்தைகளுக்காக நுனி மூக்கு கோபம் நமக்கு வருகிறது, நா காக்க மறந்து, விஷ வார்த்தைகளை
நம்மைக் கக்க வைக்கிறது. விஷ வார்த்தை உடனே உமிழாமல், அக்கோப முட்டையை மன்னிப்பெனும் அருண்வெப்பத்தால் அடைகாத்து, எதிராளிக்கு அன்பெனும் அழகுக் குஞ்சாய்ப் பரிசளிப்பதே நமக்கழகு.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற வள்ளுவ உபதேசத்தின் படி, எச்செயல் செய்தாலும் எதிராளிக்கு அன்பையே அடை காத்துத் தருவோம்!

இன்னுமொரு அருங்கவிக்கு நன்றி ஹஸனீ.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-07-2008, 12:04 PM
அருமையான விளக்கத்திற்கு நன்றிகள் பல1.

பூமகள்
22-07-2008, 03:38 PM
எப்படி பாராட்டவென்றே தெரியவில்லை ஜூனைத் அண்ணா...

அபாரம்.... அசத்தல்..

மெல்ல மெல்ல நம்மில் விழுந்த நெருப்பு வார்த்தை சூடுகள் தான்...
அதன் கனலில் நம்மைப் புடம் போடும்..

சாதனைகள் பிறக்குமிடம் அந்த நெருப்பு தனலுக்குள் ஒளிந்திருக்கிறது..

அடுத்தவர் தந்த சுடும் வார்த்தைகள் நம்மை மேல் எழ வைக்கும் முக்கிய காரணிகள்..

அவை நமக்குள் இருக்கும் வரை.. நம் முன்னேற்றம் எவர் தடுத்தாலும் தடைபடாது..

எனக்குள்ளும் இருக்கிறது இப்படியான வெம்மை...

சில நல்லவை நடக்க.. சுடு சொற்களும் தேவைப்படவே செய்கின்றன...
உளி வலியறியா கல் சிலையாவதில்லை..

நெருப்பின் வெப்பத்தில் அடித்து புடம் போடாத தங்கமும் நகையாவதில்லை..

பாராட்டுகள் ஜூனைத் அண்ணா. :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 07:13 AM
பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி.

இளசு
23-07-2008, 07:29 AM
ரௌத்திரம் பழகு - புதுப்பார்வையில்!
இம்முட்டைகளை அக்கினிக் குஞ்சுகளாக்கச் சொல்லும் புது வேதம்!

பாராட்டுகள் ஜூனைத்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 09:05 AM
மிக்க நன்றி இளசு அவர்களே.

ஷீ-நிசி
23-07-2008, 03:01 PM
நன்றி கெட்ட மனிதனின் நாக்கு
அப்படி இப்படி புரளத்தான் செய்யும்!
அவனுக்கும் ஒரு கூட்டம்
எப்படி எப்படியோ திரளத்தான் செய்யும்!

போகட்டும்,
அவர்களிடம் இல்லாத
ஆனால் உன்னிடம் இருக்கும்

ஒரே ஆயுதம் மன்னிப்பு...

காலம் கண் போன்றது - அது
கவனித்துக்கொண்டேயிருக்கிறது...

(என்னுடைய 'போர்க்களமா வாழ்க்கை' என்ற கவிதையிலிருந்து)

நான் எந்த உணர்வுகளுடன் எழுதினேனோ அதே உணர்வை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை...

வாழ்த்துக்கள் தோழரே!

shibly591
23-07-2008, 03:05 PM
அற்புடமான விளக்கம் அழகான ஒரு கவிதையாய் மலர்ந்துள்ளது...

பாராட்ட என்னிடம் வார்த்தைகளேயில்லை நண்பரே..

இன்னும் இதுபோல ஏராளம் எதிர்பார்க்கிறோம்...

தொடர்க

இளசு
23-07-2008, 05:42 PM
அவர்களிடம் இல்லாத
ஆனால் உன்னிடம் இருக்கும் ஆயுதம்

... மன்னிப்பு...

!

பொருத்தமான மேற்கோளைத்
தம் சொந்தக்கவிதையிலிருந்து தந்த
அழகுக்கவி ஷீ-க்கு சபாஷ்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 06:34 PM
கச்சிதமான மேற்கோள். நன்றி நிசியாரே.

சுகந்தப்ரீதன்
24-07-2008, 02:08 PM
சுனைத் அண்ணா...வாழ்த்துக்கள்..!!

கவிதைக்கு பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறீர்கள்..!!
கோபம் கூடினாலும்(தேவையில்லாத விடத்து) குறைந்தாலும்(தேவையான விடத்து) ஆபத்து அம்முட்டையை அடைகாத்து வைத்திருப்பவருக்குதானே..!!

தேக்கிவைத்த கோபத்தை வடிகாலாய் சிலநேரம் வடிக்கத்தான் வேண்டியிருக்கிறது வார்த்தைகளாய்...வாய்விட்டு..!! ஆனாலும் வடிந்தபின் வலிக்க தொடங்கும் அதை கொட்டியவனுக்கும் கொட்டுப்பட்டவனுக்கும்...!!

நம்வலியை நம்முடன் அடைக்காத்துக் கொள்வதுதான் சரியென்று சொல்கிறீர்கள்..உங்கள் வரிகளில்..!! நன்றியண்ணா.. அதை உணர்த்தியமைக்கு..!!

ஷீ-நிசி
24-07-2008, 04:53 PM
பொருத்தமான மேற்கோளைத்
தம் சொந்தக்கவிதையிலிருந்து தந்த
அழகுக்கவி ஷீ-க்கு சபாஷ்!

நன்றிகள் இளசு ஜி!

அமரன்
25-07-2008, 01:16 PM
ஈழத்து சகோதரர்களுக்கு தெரிந்திருக்கும்.. கோவில் திருவிழாக்களில் விளையாட்டுப் படகு விற்பனைக்கு வரும். உள்ளங்கை அளவு படகு. அதன் பிற்பகுதியில் ஒரு சோடாமூடி.. அதற்குள் எண்ணை விட்டு திரியிட்டு கொளுத்தி விட்டு தண்ணீரில் விட்டால் முன்னோக்கி நீந்தும்.. தீ நாக்குகள் அடங்கிவிட்டால் தண்ணீரின் ஆட்டத்துக்கு அமைவாக தள்ளாடும் தோணி.

சில வார்த்தைகளும் அந்த ரகத்தவைதான்..
தீ ஆனாலும் யாருக்கும் தீங்கிழைக்காத வார்த்தைகள்..
தீந்தமிழிம் வாயிலாக சுனைத் கசனி சொல்லும்போது சுவையே தனி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-07-2008, 03:14 PM
மிக்க நன்றி அமரன்.