PDA

View Full Version : மோதிக்கொள்ளும் மோதல்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
20-07-2008, 01:25 PM
எல்லா மோதல்களும்
அழிவின் அஸ்திவாரங்களென்று
வலுக்கட்டாயமாய்
கொடி பிடிக்கப்படும்
அவசியங்களிலிருந்து
சில மோதல்கள்
தப்பித்துக் கொள்கின்றன.

முள் சூழ்ந்த ரோஜாவாய்
கல்லுக்குள் அமர்ந்த ஈரமாய்
இன்னும் கூட சில மோதல்கள்
ஆத்மார்த்தப் பணிகளில்தான்
தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன

இரண்டு பூத உடல்களின்
வெப்ப வேட்கைகள்
முட்டிக் கொள்கையில்தான்
ஜனனம் ஜனிக்கிறது

ஏற்க மறுக்கும்
மூளையின் பிடிவாதங்களும்
இதய வற்புறுத்தல்களும்
மோதிக்கொள்ளும்
ஓற்றைப் புள்ளியில்தான்
யோசனை தரிக்கிறது

இரண்டு இமைகளின்
விடாக்கண்ட மோதல்களில்தான்
காட்சி நிலைக்கிறது

சீரிய சிந்தனைகளும்
ஒவ்வாமைச் சீர்கேடுகளும்
அவ்வப்போது முரண்படுவதில்தான்
கவிதை பிரசவிக்கப்டுகிறது

ஆதிக்கப் பார்க்கும்
மனித மேம்பாடுகளும்
அடங்க மறுக்கும்
கால ஏவல்களும்
மோதுகின்ற மைதானங்களில்தான்
சூழ்நிலைகள் தோற்றமெடுக்கின்றன.

சாதல்களைப் போல்
இப்படியான
சில மோதல்களும்
தவிர்க்க முடியாதவைகள் பட்டியலில்
தங்கிப் போய் விடுகின்றன.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

நாகரா
20-07-2008, 02:03 PM
உயர் காதல்
ஆன்மக் காதலிக்கும்
கடவுட் காதலனுக்கும்
இடையே பிரசவிக்கும்
அர்த்தமுள்ள காம மோதல்களால்
கடவுளில் ஆன்மாவின் ஏற்றம்
ஆன்மாவில் கடவுளின் இறக்கம்
ஏறி இறங்கி...
ஏறி இறங்கி...
ஏறி இறங்கி...
........
........
........
உருவாகும் முடிவான ஐக்கியத்தில்
பூமியில் சொர்க்கம்

இன்னொரு அர்த்தமுள்ள கவிதை, வாழ்த்துக்கள் ஹஸனீ.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-07-2008, 06:17 AM
நல்ல கவிதை நாகரா. பாராட்டுக்கள்.

நாகரா
21-07-2008, 06:46 AM
நல்ல கவிதை நாகரா. பாராட்டுக்கள்.

முதலில் மோதினீர் நீர்
பதிலாய் மோதினேன் நான்
நம் மோதல்களால் மிளிரட்டுங் கவிதை

உம் பாராட்டுக்களுக்கு நன்றி ஹஸனீ.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 09:39 AM
முதலில் மோதினீர் நீர்
பதிலாய் மோதினேன் நான்
நம் மோதல்களால் மிளிரட்டுங் கவிதை

.

இதற்கு மேல் மோதுமளவிற்கு எனக்கு விவரம் பத்தாது நாகரா. மிக்க நன்றி உங்கள் பதில் மோதலிற்கு.

ஓவியன்
27-07-2008, 10:07 AM
விளைவது விலைமதிக்க முடியாதெனின்
மோதல்களும் சுபமே..!!

வேறுபட்ட தளத்தில் நின்று வரைந்த கவிதை
அழகோ அழகு ஜூனைத்..!! :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 03:22 PM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஓவியா.