PDA

View Full Version : வேரை உணர்ந்த விழுதுகள்!சிவா.ஜி
19-07-2008, 02:00 PM
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...."

தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த கவியரசரின் அமர வரிகள் செவிக்குள் நுழைந்து, மூளையை உசுப்பி இதழோரம் குறுநகையை விளைவித்தது. ஆனால் சற்றே கோணியிருந்த வாயால் அதை வெளிப்படுத்தமுடியாமல் கட்டிலில் கிடந்தார் கவுதமன்.

இருபத்தி மூன்று வருடங்கள்.....இளமையையை, மகிழ்ச்சியைத் தின்ற வருடங்கள். வருடம் ஒருமுறை விருந்தாளியாய் வந்து குடும்பத்துடன் இருந்து போன வருடங்கள். ஆரம்பத்தில் கண் கலங்கினாலும், அடுத்தடுத்த வருடங்களில், அவருடைய சமாதானங்களும், பிள்ளைகளுக்காகத்தானே என்ற அவரது செயலில் இருந்த நியாயமும், புரிந்ததால் எந்த உணர்வும் இல்லாமல் பெட்டியைத் தயார் செய்த கமலா, அப்பா போனால் அடுத்தமுறை என்னென்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்ட பிள்ளைகள் என அனைத்திலும் அவரை, இழந்தவனாக்கிய இருபத்திமூன்று வருடங்கள்.

இரண்டு மாதத்துக்கு முன்னர்தான் போதும் என்று உறுதியாக முடிவெடுத்து நாடு திரும்பியிருந்தார். எல்லாம் நன்றாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது, அன்றைக்கு மாலை கமலா செய்து கொடுத்த சூடான பலகாரத்தை சாப்பிட்டு முடிக்கும்வரை. சிறிது நேரத்திலேயே எந்த பிடிமானமுமில்லாமல் தரையில் சரிந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இத்தனை வருடங்களாக பெட்ரோலியத்துறையில் பணிபுரிந்ததால், தொடர்ச்சியான அந்த இரசாயனக் காற்றை சுவாசித்ததால்...அதன் நச்சு, மூளையின் ஒரு பகுதியைத் தாக்கி அதனை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லி உடலின் இடது பக்கம் இயங்காத நிலையில் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதனோடு தொடர்ச்சியாய் இரண்டுமுறை வலிப்பும் வந்ததால், அவரை படுக்கையில் சாய்த்துவிட்டிருந்தது. மீண்டும் மழலைக்கு மாறியவரைப் போல குழறிய சொற்களையே பேச முடிந்தது.இப்போது அவருடைய நல்ல துணை அவரது விடுபட்ட வாழ்க்கையின் நினைவுகள்தான்.

அப்பாவைப் பற்றி ஒரு கவிதை வாசித்துவிட்டு தன்னை அதில் பொருத்திப் பார்த்து எந்த விதத்திலும் பொருந்தாதைப் பார்த்து தூக்கம் வரா இரவுகளைக் கழித்திருக்கிறார். மகன் முதல் வகுப்புக்கு போகத் தொடங்கியதுமே பயணம் மேற்கொண்டவர். இப்போது அந்த மகனுக்கே ஒரு மகன் இருக்கிறான். மூன்று வயது. துரு துருவென்று கொள்ளை அழகு.

மகனை நினைக்கும் போதெல்லாம் தன் இயலாமையை நினைத்து நெஞ்சம் பதறும். வளரும் பருவத்தில், அவனுடைய வளரும் அறிவுத் தினவுக்கு அவரால் எந்த பங்கும் அளிக்க முடியவில்லை. வந்துபோகும் கொஞ்ச நாட்களில் பாதியை அவருக்காகவே காத்திருக்கும் வேலைகளே காலி பண்ணிவிடும். மீதி நாட்களில் வீட்டிலேயே இருந்தாலும் ஓய்வெடுக்கவே விரும்புவார். ஏதேனும் ஒரு கேள்வியுடன் அவரை அவன் அணுகும்போது ஆயாசமாய் அம்மாவிடம் கேள் என்று கை காட்டி விடுவார்.

மகனுக்கு ஐந்து வருட இடைவெளியில் பிறந்த மகளின் மழலையைக் கூட அருகிருந்து அனுபவிக்க முடியவில்லை. முதல் இரண்டு வருடங்களில் இவர் அருகில் சென்றாலே அலறினாள். மனம் வெறுத்துப் போவார். ஆனால் வளர வளர அப்பாவிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள். ஆனால் மகன் சற்று விலகியே இருந்தான். இப்போதும் அதே இடைவெளியை பின்பற்றுகிறான்.

ஒருமுறை அவனை அழைத்துக்கொண்டு கடைக்குப் போனபோது, பொருள்களை வாங்கும் சுவாரசியத்திலிருந்தவன் இவரைத் தாத்தா என்று அழைத்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். அப்பாவைவிட அதிகமாய் தாத்தாவிடம் இருந்தவன். பாவம் அவனும் என்ன செய்வான்.

கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரையும் துடைக்க மனமில்லாமல் படுத்திருந்தவரின் பார்வையில் கமலா கடந்து போவது நீர்த்திரைகளுக்கிடையில் தெரிந்தது.

இத்தனை வருடங்களில் அவர் சம்பாதித்த சொத்துக்களிலெல்லாம் மிகப் பெரிய சொத்தாக கமலாவை நினைத்தார். தான் அருகில் இல்லாத குறை தெரியாமல், வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு அவள் பட்ட கஷ்டங்கள் தான் பட்டதைவிட அதிகம் என்று எப்போதுமே நினைப்பார். ஆனால் அவளையும் காயப் படுத்தியிருக்கிறார்.

பக்கத்து தெருவில் அமைத்திருந்த பஞ்சமுகவிநாயகர் ஆலயத்தில் விநாயகச் சதுர்த்தியில் சிலை வைக்கும் அந்த ஒன்பது நாட்களும் காலையில் விசேஷ அர்ச்சனையும், அபிஷேகமும் நடை பெறுமென்றும், முன் கூட்டியே பணம் கொடுத்து பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களின் பெயரில் அவர்கள் முன்னிலையில் அபிஷேகம் நடத்தப்படுமென்றும் அறிவித்திருந்தார்கள். அதற்கு பணம் செலுத்தப் போனவரைப் பார்த்து அந்த கோவில் நிர்வாகி

"வாங்க சார்...என்ன வேணும்?" என்றதும், தயங்கி...

"அபிஷேகத்துக்கு பணம் கட்ட வந்திருக்கேன்....."

' சார் நீங்க..............." என்று நிர்வாகி இவர் யாரெனத் தெரியாமல் இழுத்ததும்,

'பக்கத்துல அம்மன் நகர்ல இருக்கேன்..."

"அம்மன் நகர்லயா? அங்க எந்த வீடு?"

"அதாங்க செகெண்ட் கிராஸ்ல இருக்கே அந்த மாடி வீடு"

" செல்வரத்தினம் வீடா?"

"இல்ல சார்...மனைவி பெயரை சொல்லவிடாமல் இதுவரைத் தடுத்து வந்த அவரது ஈகோவை விட்டு, தயக்கத்துடன், கமலா...." என்று சொன்னவுடன்,

"அடடே நீங்கதான் கமலா மேடத்தோட கணவரா? நீங்கதான் துபாய்ல இருக்கீங்களா? எப்ப சார் வந்தீங்க? "

அவர் வரிசையாய் எழுப்பியக் கேள்விகளாலும், என்னைவிட என் மனைவியை அதிகமாகத் தெரிந்திருக்கிறதே என்ற எரிச்சலிலும் அவருக்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு,

"ஆமா சார். ஒரு வாரம் ஆச்சு. இந்தாங்க புதன் கிழமைக்கு புக் பண்ணிடுங்க" என்று மேலும் பேச விருப்பமில்லாதவராக காசைக் கொடுத்துவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் கமலாவைப் பார்த்து,

"மேடம் இந்த ஏரியாவுல ரொம்ப பிரபலம் போல இருக்கு. ரெண்டுதெரு தள்ளி இருக்கிற கோவில்ல இருக்கிற ஆளுங்களுக்குக் கூட உன்னை நல்லா தெரிஞ்சிருக்கு?"

அவரது நக்கல் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் கமலாவும் எதார்த்தமாக,

'அப்படியெல்லாம் இல்லைங்க. நான் அடிக்கடி கோவிலுக்குப் போவேன். பசங்கப் பேர்ல அர்ச்சனை செய்யப் பணம் கொடுப்பேன் அதான் தெரிஞ்சிருக்கும்"

"இல்லையே நான் இன்னாருன்னு சொன்னா தெரியல, ஆனா உன்னோட புருஷன்னு சொன்னதும் உடனே தெரிஞ்சிக்கிட்டாங்களே" விஷமமாய் அவர் கேட்டதையும் விஷமமாக எடுத்துக்கொள்ளாமல்,

" யார்ன்னு கேட்டா துபாய்ல இருக்கிறவர்ன்னு சொல்லியிருந்தீங்கன்னா டக்குன்னு தெரிஞ்சிகிட்டிருப்பாங்களே. இந்த ஏரியாவுல நீங்க மட்டும்தானங்க துபாய்ல இருக்கீங்க' என்று சாதரணமாய்ச் சொன்னாள்.

அதானே அப்படி முதலிலேயே சொல்லியிருக்கலாமே என்று அவள் சொன்னதில் உள்ள நியாயம் புரிந்தாலும், தன் சுயத்துக்கு நேர்ந்த அடியாக அந்த நிகழ்வை நினைத்த அவர் அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு கமலாவிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.

படுக்கையிலேயே நிகழ்ந்துவிடும் தன் இயற்கை கழிவு வெளியேற்றத்தையும் சின்ன முகச் சுழிவு கூட இல்லாமல் சுத்தம் செய்யும் அவளை, அவரது சைகையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அவரது தேவைகளை பூர்த்தி செய்யும் அவளை, நினைத்து மீண்டும் கண்ணீர் முட்டியது. நான் பாவிம்மா. பணம் மட்டுமே பாக்கத் தெரிஞ்ச நான், உங்க மனங்களைப் பாக்கத் தவறிட்டேனே. என்று மனதுக்குள் மருகினார்.

மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் தங்கள் வீட்டிலிருந்து விட்டு புகுந்த வீடு போவதாக இருந்தார்கள். ஆனால் அவரது விடுமுறை அவர்கள் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே முடிவதால் அவரால் வழியனுப்புமன்று இருக்க முடியாது என்று சொன்னதும், மகள் அழுதுகொண்டே,

"அப்பா இன்னும் ரெண்டு நாள்தானே. லீவை ஒருநாலு நாளைக்கு நீட்டிக்க முடியாதா?" என்று கேட்டதற்கு,

'அதான் கல்யாணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடிச்சில்ல. நல்ல நாள்ங்கறதால நாளன்னக்கிப் போகப் போறீங்க. நான் எதுக்கும்மா. என்னால விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தமுறை மகளுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் வருத்தப்பட்டுப் பேசினாள். இதோ அந்த செல்ல மகளும் தன் மகளுடன் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். தாய்க்கு தான் கொஞ்சமும் சலைத்தவளல்ல என்று சொல்வதைப் போல எனக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவள் எப்படி வளர்ந்தாள், யாரிடம் கதை கேட்டாள், கதை சொன்னாள்....என்று எதுவுமே அவருக்குத் தெரியாது.

நான் ஒரு ஆதர்ச அப்பாவாய் என்றுமே இருந்ததில்லை. ஆனால் எனக்குக் கிடைக்காத எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டும் என்ற வெறியில் பணம் சேர்த்தேன். ஆனால் சேர்ந்திருந்து மகிழலாம் என்று நினைத்து வந்த நேரத்தில் இந்த நிலையில் ஆண்டவன் என்னை வைத்துவிட்டான்...எண்ணங்களின் இட வலமில்லா பலமுனைத் தாக்குதலில் உள்ளமும் சோர்வாகி கண்களை இறுக மூடிக் கொண்டார்.

பேச்சுக் குரல் கேட்டது. மகனிடம் மருமகள் பேசுவது கேட்டது.

" என்னங்க..வாசல்ல இருக்கிற உங்க அப்பாவோடப் பெயர்ப் பலகையை மாத்திட்டு உங்கப் பேரை வெய்யுங்கன்னா கேக்க மாட்டேங்கறீங்களே. என் பிரண்ட்ஸ்செல்லாம் கேக்கறாங்க. என்னடி உங்க கணவருக்கு எதுவும் முக்கியத்துவம் இல்லையான்னு?"

" இங்க பாரு குமுதா....இது அவர் கட்டின வீடு. அவர் வாழற வரைக்கும் மட்டுமில்ல, அவர் போன பிறகும் அந்த போர்ட் அங்கதான் இருக்கும். எங்களுக்காக அவர் இழந்ததெல்லாம் போதும். இதையும் அவர் இழக்கவேண்டாம். எங்களோட இருக்க முடியலையேன்னு அவர் எவ்வளவு வருத்தப் பட்டிருப்பார்? அது மட்டுமில்ல குமுதா, அவர் சின்ன வயசுல ஆசைப்பட்ட எதுவும் அவருக்குக் கிடைக்கல. அந்த நிலைமை எங்களுக்கும் வந்துடக்கூடாதுன்னுதான் இவ்ளோ கஷ்டப்பட்டார். அந்தக் கஷ்டத்தோட பலன் தான் இப்ப நாங்க நல்லா இருக்கறதும், அவர் நல்லாயில்லாம இருக்கறதும். ஸோ இனி இதைப் பத்தி பேசாதே. தெரியுதா?"


மகன் சொன்னதைக் கேட்டதும் கவுதம் மனம் லேசானது. இதுவரை மனதைப் பிறாண்டிய சுயகழிவிரக்கம் அகன்றுவிட்டது. என் விருந்தாளி வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் என் செயல் அவர்களுக்கு என்னை ஆதர்ச அப்பாவாய்க் காட்டியிருக்கிறது. அவர்களை நான் புரிந்து கொண்டதை விட என்னை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோதும் எனக்கு. என் மிச்சமுள்ள வாழ்நாளை நிம்மதியாய்க் கழித்துவிடுவேன்......

மனதெல்லாம் சந்தோஷத்துடன் எழுந்து அமர முயன்றார். அவரால் எழ முடிந்தது.

பூமகள்
19-07-2008, 02:24 PM
அப்பாவின் உள்ளக் குமுறல்...

திரைகடல் ஓடி திரவியம் தேடிய பலன்...

பொருளாதாரத்தில் பாசத்தில் நிமிர்ந்த குடும்பம்..
பெட்ரோலிய புகையால் சுருங்கிய நரம்பகம்..

தந்தையின் மாண்பு தெரிந்த மகன்..
கேட்டறிந்ததும் தான் தந்தைக்கு வந்தது பலம்..

இனி தந்தை எழ மட்டுமல்ல... மகிழ்வோடு வாழவும் செய்வார்..

மனம் நிறைந்தது... காட்சிகள் கண்களில் வட்டமடித்தன... கண்கள் கலங்கிவிட்டன..

இதயப்பூர்வமான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சிவா அண்ணா. :)

சிவா.ஜி
19-07-2008, 02:34 PM
அடடா...பின்னூட்ட நாயகிங்கற பேருக்குத் தகுந்த மாதிரி சுருக்கச் சொற்களில் சிறந்த பின்னூட்டம். அருமை தங்கையே. மனம் நிறைந்த நன்றிகள்.

அமரன்
19-07-2008, 03:37 PM
நடைமுறை வாழ்க்கையில் கண்டெடுத்த கதை. என்னதான் கற்பனை கலந்து எழுதினாலும் எதார்த்தத்திற்கு ஆழம்பாயும் வீரியம் அதிகம் என்பதை நிரூபித்த இன்னொரு கதை. யாருக்கும் சொந்த வாழ்க்கையில் இந்த நிலை நேராதிருக்ககவும் நேர்ந்தால் அப்பழுக்கற்ற ஆதரவு கிடைக்கவும் எனது தூய்மையான பிரார்த்தனை

கூர்மையான பதிவு. வைரப்படிமங்களை பிளந்து கொதிநிலையிலிருந்தவற்றை பீறிட வைத்துவிட்டது.

நாட்டு நிலமை சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்த்த அவல வாழ்க்கை. தாய் வழி, தகப்பன் வழி நிலையான சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட நிலை. ஆசிரியப்பணி ஊதியமும், தகப்பனின் கணிசமான சேமிப்பும் வறுமையை நெருங்க விடவில்லை. ஆனால் இரண்டு வயது மகனின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வை புலம்பெயரவைத்தது.

காகித வாழ்க்கையும் தொலைபேசி வாழ்க்கையும் தொடர்ந்த வருடங்கள் முடிவுக்குவர மகனுக்கு 8 வயதாகியது. பொதுவாக பதினெட்டு வயதில் ஆரம்பிக்கும் தகப்பன் மகன் பனிப்போர் எட்டு வயதிலேயே துவங்கியது. எதிரும் புதிருமாக அப்பாவும் மகனும்.. மகனின் பக்கம் அம்மா.. சொல்லொணா வருத்தத்தில் அப்பா.. விரும்பத்தகாத இந்த நிலைக்கு விதை தாயின் வளர்ப்பு என அறிந்த போது அளவிறந்த அதிர்ச்சி.

அப்பா சிறுவயதில் மகனை விட்டுப் பிரிந்தது காசுக்காக என்று தாய் சொல்லிச் சொல்லி வளர்த்ததன் விளைவு இப்போதும் அறுவடை செய்யப்படுகின்றது.

இல்லறம் சிறக்க சிறந்த வழி புரிதலும் புரிவித்தலும்.
இந்தக்கதையில் அதைக்கண்டதில் எனக்குள் புளகாங்கிதம்.

கொஞ்ச நெருடலாக தலைவனின் தலைவணங்கா தன்மை.

மனமார்ந்த பாராட்டுகள் சிவா
வாழ்க்கை சொல்லியாக மீண்டும் பரிணமித்தமைக்கு.

பிள்ளைகளை விழுதுகளாக உருவகப்படுத்திய தலைப்பில் பொருத்தப்பாடு குறைவோ என்ற எண்ணம் எனக்குள்.

சிவா.ஜி
20-07-2008, 11:36 AM
உங்களின் அருமையான இந்த பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி அமரன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த குடும்பத்தில், தந்தைக்கும் மகனுக்கும் அவனுடைய எட்டாவது வயதில் தோன்றிய எட்டாப் பொருத்தத்துக்கு, தாயின் வளர்ப்புமுறையும் கொஞ்சம் பங்கெடுத்துக்கொள்கிறது.

காசுக்காக மட்டுமே அப்பா நம்மை விட்டுப் பிரிந்து வேலை செய்கிறாரென்று சொல்லாமல், தங்களின் நோக்கத்தை, தியாகத்தை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் உணருவார்கள்.

உங்களுக்கு உறுத்தலாக இருக்கும் அந்த தலைவனின் தலை வணங்காதன்மை...வருடக்கனக்காக தனிமை வாழ்க்கை வாழும் இவரைப்போல பலர் இந்த வகை குணங்கள் தங்களுக்குள் நுழைந்ததே தெரியாமல் வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அதே போல வேர்களுக்கு பலமிழந்த பிறகு மரத்தைத் தாங்குவது விழுதுகள்தானே என்ற அர்த்தத்தில் இந்த தலைப்பில் அவற்றை உவமானமாக்கினேன்.

மிக்க நன்றி அமரன்.

இளசு
20-07-2008, 02:39 PM
பல இழப்புகள் = சில ஈட்டல்கள் - இது வாழ்க்கைக் கணக்கு..

எந்த இழப்பையும் ஈடுகட்ட ஒரே வழி - தாயின் வளர்ப்பு..

இங்கே கமல பாதங்கள் - வணங்கத் தக்கவை!


சிவா வடித்த கவுதமனின் கதை புலம்பெயர்ந்த எவருக்கும் நேரலாம்..
கமலா இருந்தால் சிவா சொன்ன கதை முடிவாய்
இல்லையேல் அமரன் தந்த மேற்கோள் முடிவாய்..

மனதைக் கீறி உள்தேட வைத்த கதை!

பாராட்டுகள் சிவா..!

mukilan
20-07-2008, 04:43 PM
முதலில் முத்தான கருவை எடுத்துக் கதை படைத்ததற்கு பாராட்டுக்கள் அண்ணா. புலப்பெயர்ந்து பொருள் தேடும் தந்தைகளுக்கு மட்டுமல்ல, மகன்களுக்கும் அந்த வேதனை உண்டு என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தந்தையின் ஐம்பதுகளில் அவர் தோளின் பாரம் குறைக்க புலம் பெயரும் மகன்கள் தனக்கென ஒரு குடும்பத்தை அங்கே அழைத்துச் சென்றாலும் தாய்க்கும் தந்தைக்கும் பணிவிடை செய்ய முடியாத அவலத்தை எங்கு சொல்ல. அப்படியே அவர்களை அழைத்துச் சென்றாலும் இளைய தலைமுறைக்கே ஒட்டாத இந்த மேற்கத்திய நாகரீகம் கரிசல்காடுகளில் வேறூன்றி வளர்ந்தவர்களுக்கு ஒப்பவா போகிறது.
சில கதைகள் நெஞ்சின் ஓரம் உறங்கிக்கொண்டிருக்கும் சில உணர்வுகளை தூண்டி விடுவது உண்டு. சில பின்னூட்டங்களும். விடை தெரியாத கேள்வி அல்ல இது. விடை எப்பொழுது?
இறைவா எனக்கு எப்பொழுதும் உறுதியான முடிவெடுக்கும் ஆற்றல் கொடு.
வேரை உணர்ந்த விழுதுகள், விழுதுகள் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்த வேர்கள். இதுதானே நம் கலாச்சாரத்தின் உயிர்ப்பு. கவிப்பேரரசு போல கதைப்பேரரசு என உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் அண்ணா.

பென்ஸ்
20-07-2008, 05:42 PM
சிவா...

கதையை வாசித்து முடித்தவுடன்
மனதில் எதோ ஒரு பாரம்...
கண்ணருகில் ஒரு ஈரம்...

எழுத்தில் ஒரு வரி கூட அவசியம் இல்லாமல் இல்லை...
ஒரு வார்த்தைகள் கூட கூடுதலாக இல்லை...
தாய் வளர்ப்பாய் இருந்தாலும் மனைவியிடம் கடுமையாக இருக்கவேண்டிய இடத்தில் மகனும்... தந்தையுமான கமலா...

வாழ்த்துகள் சிவா....

எல்லா விழுதுகளும் வேர்களை அறியட்டும்....

சிவா.ஜி
21-07-2008, 04:14 AM
பல இழப்புகள் = சில ஈட்டல்கள் - இது வாழ்க்கைக் கணக்கு..

எந்த இழப்பையும் ஈடுகட்ட ஒரே வழி - தாயின் வளர்ப்பு..

இங்கே கமல பாதங்கள் - வணங்கத் தக்கவை!வாழ்க்கைக் கணக்கை ஒற்றை வரியில் செம்மையாய் சொல்லியிருக்கிறீர்கள் இளசு. அந்த பலவற்றிலும், சிலவற்றிலும்தான் விகித வித்தியாசம் பலருக்கு.
நீங்கள் சொன்னதைப் போல தாயின் வளர்ப்பு நிச்சயம் அந்த விகிதாசாரத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

குடும்பத்துடன் சேர்ந்து வாழவியலா தந்தைகளின் முக்கியத்துவம் உணர்த்துவது தாய்தான். அன்பு செலுத்துதலும், புரிந்துணர்வும்தான் இப்படியான ரணங்களை சீராக்கும் மருந்துகள்.

மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
21-07-2008, 04:27 AM
விடை தெரியாத கேள்வி அல்ல இது. விடை எப்பொழுது?


எதார்த்தமான உண்மையை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் முகிலன். ஐம்பதுகளில் வேர்களுக்கும், விழுதுகளுக்கும் ஏற்படும் அந்த சங்கடமான சூழ்நிலை...அதை தவிக்க முடிந்தாலும் பல சமயம் தவிக்கவியலா நிலை. எப்படி சரி செய்ய? கேள்வி எப்போதும் தொக்கி நிற்கிறது. பதில்தான் மறைந்து நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது வெளிப்படும். அதுவரை வேர்கள் விழுதுகளைப் புரிந்து கொள்ளும்.

ஒரு கதைசொல்லியாக உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி முகிலன். ஆனாலும் உங்கள் பட்டத்துக்க்கு தகுதியானவனாக நான் இன்னும் வளரவில்லை. என்னுடைய சிறந்த எழுத்தை நான் இன்னும் எழுதவில்லை. அந்த திருப்தி எனக்கு என்றுமே கிட்டக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். நன்றி முகிலன்.

சிவா.ஜி
21-07-2008, 04:30 AM
தாய் வளர்ப்பாய் இருந்தாலும் மனைவியிடம் கடுமையாக இருக்கவேண்டிய இடத்தில் மகனும்... தந்தையுமான கமலா...

எல்லா விழுதுகளும் வேர்களை அறியட்டும்....
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பென்ஸின் பாராட்டைப் பெற்றதில்.

ஆம் பென்ஸ் எல்லா விழுதுகளும் வேர்களை அறிந்து, புரிந்து கொண்டால் வேர்களின் முதுமை சாபமாக இல்லாமல் வரமாக இருக்கும். நன்றி பென்ஸ்.

விகடன்
21-07-2008, 04:56 AM
தமது குடும்பத்தை ஊரோடு விட்டு விட்டு கடல் கடந்து சம்பாதிக்கும் ஒருவரது பிற்பட்ட காலத்தில் அமைந்த எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் குமுறல்கள் என அனைத்தையும் கலந்து கதையாக தந்திருக்கிறீர்கள். யதார்த்தமாக இருந்ததுமில்லாது, குடும்பத்தை பிரிந்து பணியிலிருப்போர் மீது ஒரு கரிசனையும் ஏற்படுத்திவிட்டது.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவா. ஜி .
பாராட்டுக்கள்.

சிவா.ஜி
21-07-2008, 05:02 AM
நான் பார்த்ததை, நான் உணர்ந்ததை எழுத்தில் கொடுத்திருக்கிறேன்.
இழப்புகள் ஈடு செய்யப்படும் தருணங்களை காட்ட நினைத்தேன். உணர்ந்து எழுதிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி விராடன்.

meera
21-07-2008, 06:10 AM
சிவா அண்ணா, என்ன சொல்ல தெரியலை.எனக்கு முன்னே சொன்னவர்களை போல், கண்கள் குளமாயின என்பதே உண்மை. விரையும் நாட்களை பணம் தேடுவதில் விறையமாக்கிவிட்டு, வேண்டுமென்று வேண்டும் பொழுது மீழ்வதில்லை கடந்துவிட்ட நாட்களும், இழந்துவிட்ட சந்தோஷமும். தான் பெற்ற குழந்தையின் முகம் பார்க்க கூட சில வருடம் காத்திருக்கும் தந்தையரின் நிலையை இங்கே கண்ட போது சொல்ல முடியாத வேதனை.

இதை எழுத்தாய் பார்க்க முடியவில்லை. பலரின் ஏக்கமாய் காணுகிறேன். சுருக்கமாய் ஆனால் அழமாய் மனதை தைத்த நல்லதோர் கதை கரு.

சிவா.ஜி
21-07-2008, 07:39 AM
வேண்டுமென்று வேண்டும் பொழுது மீழ்வதில்லை கடந்துவிட்ட நாட்களும், இழந்துவிட்ட சந்தோஷமும்.

ரொம்ப சிறப்பான வரிகள்ம்மா. கதையின் சாராம்சத்தை சொல்லும் அழகிய வரிகள்.

உணர்வுகளைப் புரிந்த பின்னூடத்திற்கு ரொம்ப நன்றிம்மா.

செல்வா
21-07-2008, 08:06 AM
அருமையான நடை... மனதைப் பிழிந்த கதை... ரொம்ப நல்லாருக்கு அண்ணா....
மற்றவை நேரில்....
வாழ்த்துக்கள் அண்ணா....

aren
21-07-2008, 08:32 AM
அருமையான கதை சிவா. படித்து முடித்தவுடன் மனதில் ஏதோ ஒன்று குத்துவது போன்ற உணர்வு. இந்தக் கதையில் உங்கள் எழுத்துக்களின் வீரியம் தெரிகிறது, யதார்த்தம் புரிகிறது. ஒரு முன்னனி எழுத்தாளனாகும் திறமை நிறைய வெளிப்படுகிறது உங்கள் எழுத்துக்களில். தொடருங்கள்.

தாயின் வளர்ப்புமுறை மகன் மகள் வாயிலாக தானாகவே வெளிப்படுகிறது. ஒரு தாய் ஒவ்வொருவரின் வளர்சிக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.

தொடருங்கள். உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
21-07-2008, 11:47 AM
ரொம்ப நன்றி செல்வா. பேசுவோம்.

சிவா.ஜி
21-07-2008, 11:49 AM
தாயின் வளர்ப்புமுறை மகன் மகள் வாயிலாக தானாகவே வெளிப்படுகிறது. ஒரு தாய் ஒவ்வொருவரின் வளர்சிக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.

ஆமாம் ஆரென். அப்பாவும் அம்மாவும் அருகிருந்து வளர்க்கும்போது தாயின் பங்கு 50 சதவீதமென்றால் இப்படிப்பட்ட சூழலில் 80 சதவீதம் தாயின் பங்குதான். பாராட்டி மதிக்கப்படவேண்டியவர்கள் அந்த தாய்மார்கள்.

உங்கள் பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி ஆரென்.

மதி
21-07-2008, 12:44 PM
முன்பே படித்திருந்தாலும் பின்னூட்டமிட முடியவில்லை. அழகான வரிகளில் வலிகள்...

திரவியம் தேடி திரைக்கடலோடும் போது இழப்புகள் நிறைய. அதை உணர்ந்த உங்கள் போன்றாரால் மட்டுமே இதை எழுத முடியும். இறுதியில் விழுதுகள் வேரை உணர்ந்தது மிக்க மகிழ்ச்சி...

சிவா.ஜி
22-07-2008, 04:42 AM
இறுதியில் விழுதுகள் வேரை உணர்ந்தது மிக்க மகிழ்ச்சி...
இந்த உணர்தல் அவசியம் தேவை. இழந்தவைகளை மீட்டெடுக்க முடியாது ஆனால் இருப்பவைகளை நலமாக்க இந்த உணர்தல் அவசியமாகிறது, ரணத்துக்கு மருந்தாக.

நன்றி மதி

அறிஞர்
30-07-2008, 08:14 PM
அப்பாவின் குமுறல்...
பாபுலரான மனைவி...
பாசமிக்க.. விட்டுக்கொடுக்காத மகன்...
மனதை கனக்க வைக்கிறது.. சிவா.ஜி.

சிவா.ஜி
31-07-2008, 05:11 AM
பெற்றவர்களைப் புரிந்துகொள்ளும் பிள்ளைகள் இருந்துவிட்டால், வாழும் வாழ்க்கையில் நிம்மதி நிலைத்திருக்கும். ஒவ்வொரு மகனும், மகளும் இப்படி இருக்கவேண்டுமென்ற என் ஆசையே இந்தக் கதைக்குக் காரணம். மிக்க நன்றி அறிஞர்.

MURALINITHISH
26-08-2008, 08:46 AM
இழந்தவைகள் எல்லாம் இழப்புகள் ஆக நம்முடைய இழப்புகளும் பிள்ளைகளின் பாசத்தால் இழந்தவை ஆகா
ஆம் ஒன்றை இழந்துதானே ஒன்றை பெற முடியும் இளமையில் சுகங்களை இழந்து முதுமையில் பிள்ளைகளின் பாசத்தை பெற்றுள்ளான்

சிவா.ஜி
26-08-2008, 06:37 PM
பிள்ளையிடமிருந்து கிடைக்கும் இந்த பாசம் இவன் இட்டு வைத்த வைப்புநிதியின் வட்டி. துணையின் வளர்ப்பு மகிமை. முதுமையின் வரம். எல்லோருக்கும் இவை கிடைத்திட வேண்டுமென்பதே எல்லோரின் விருப்பமும். நன்றி முரளிநிதிஷ்.