PDA

View Full Version : நான் - முட்செடிசெல்வா
18-07-2008, 03:36 AM
நான் – முட்செடி

செடிஎன்று என்னை இப்போதுச் சொல்லமுடியாது
வெட்டப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறேன்
நட்டு வளர்த்ததில்லை யாரும் என்னை
பாத்தி கட்டி நீரிறைத்துப் பார்த்து இரசித்ததுமில்லை
என்னை விதைத்த அன்னை எங்கோ இருக்கிறாள்
எங்கிருக்கிறாள என இன்றுவரைத் தெரியாது .. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை

வான் கொடுக்கும் எனது வயிற்றுக்குணவு
நானாக யாரிடமும் கையேந்தியதில்லை
ஏந்தினாலும் எனைத் தேற்றிப் பார்ப்பவர்களும் இல்லை

ஆனால் என்னைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் எப்போதும் பொறாமை
சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் செடிகளெல்லாம்
நோஞ்சானாக நோய்ப் பற்றியிருக்கும் போது
பாதையோரத்தில் கிடக்கும் நான் மட்டும் எப்படி நன்றாகச் செழிப்பாக இருக்கிறேன் என…
இதில் நான் செய்த பிழை என்னங்க?
தன்செடி ஏன் வளரவில்லை எனக் கவலைப்படுவதை விட்டு விட்டு
இவன் ஏன் இப்படி வளர்கிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

எனக்கோ என்னைப் பற்றியும் கவலையில்லை
பிறரைப்பற்றியும் கவலையில்லை
இல்ல இல்ல தப்பாதான் சொல்லிட்டேன்
கவலையில்லாமல் தான் இருந்தேன் …. நேற்று வரை

கவலை மட்டுமென்ன ஆசையும் தான்.. எனக்கு எந்த ஆசையுமில்லை அந்த மரம்போல் வளர வேண்டுமென்றோ இந்தக் கொடி போல் படரவேண்டுமென்றோ.. எந்தவொரு ஆசையுமில்லை…
எல்லாம் நேற்றுவரை தான்…

ஆடிக்காற்றில் அம்மி பறக்குமாமே…
அம்மி பறக்குமோ என்னவோ… ஆனால் நேற்றடித்தக் காற்றால் என் உயிர்க்காற்று இப்போது பறக்கப் போகிறது…

நேற்றையக் காலை நன்றாகத்தான் விடிந்தது… பின்னிரவில் லேசாகப் பெய்திருந்த பனியின் ஈரத்தால் காலை உணவும் நன்றாகவே முடிந்தது…
உடலும் மனமும் உற்சாகம் பெற காலை மஞ்சள் வெயிலில் உடலுக்குச் சக்தி சேர்த்துக் கொண்டிருந்தேன்…

அப்போது தான் வந்துச் சேர்ந்தது அந்தப் பாழாய்ப்போனக் காற்று…
இப்படி நான் திட்டினாலும் காற்றுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் பெரும் பகையில்லை…
நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…
அன்றும் அப்படித்தான் காற்றுப்பட்டதும் உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தேன்.. வந்தவன் என்னை விளையாடக் கூப்பிட்டான். இருவருமாக ஓடிப்பிடித்து விளையாடத் துவங்கினோம் … விளையாட்டு வினையாகப் போவதுத் தெரியாமல்..
(இந்த விளையாட்டும் வினையும் விடவே விடாது போலருக்கே… என்ன கொடுமை அமரன் இது…)

அவன் போகும் இடமெல்லாம்.. அவனோடு கூட நானும் போனேன்… சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம் இருவரும்… நான் நின்ற படியேச் சுற்ற… அவன் என்னைச் சுற்றிச் சுற்ற… சுற்றிச் சுற்றி.. ஒருவழியாக சுற்றியது போதும் சற்று ஓய்வெடுக்கலாம் எனச் சுற்றுவதைச் சற்று நிறுத்தினேன்.
(சுத்து கொஞ்சம் அதிகம் தான்…. தலை சுத்திராமப் படிங்க…)

அப்போது வந்து என்னைச் சூழ்ந்தது அந்த அருமையான வாசம். காற்றிலாடியபடியே.. என்னை உரசிச் சென்றது அந்தச் சேலை…
அதன் மென்மை எனக்குப் பிடித்திருந்தது… எனது முள் நிறைந்த உடலை ஆதரவாய் வருடியது அது. என் மனமும் உடலும் ஒரு சேர நிறைந்தது.. புது மகிழ்ச்சி புது இரத்தம் உடலெங்கும் பாய.. சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலெல்லாம் எனக்குக் குளிர்வது போன்றுத் தோன்றியது.

அவ்வப்போது உரசிச் சென்றுகொண்டிருந்தச் சேலை… சற்று அழுத்தமாகப் பதிந்தது.. தடவிச் செல்லும் சேலையை நழுவவிட மனதில்லை.. நானும் தழுவிக்கொண்டேன் எனது முட்கரங்களால்.
சேலையின் மென்மையோடு காற்றும் சேர்ந்துக் கொள்ள என்னைச் சுற்றி நன்றாகப் படர்ந்தது சேலை…
காற்றிற்குப் பயந்ததோ… என நினைத்து நானும் நன்றாக பற்றிக் கொண்டேன். இறுக்கிப் பிடித்துக் கொண்ட சேலையால் சூரியனின் குளிரும் சுடவில்லை என்னை.

காற்று நின்றது…

அதுவரை என்னோடு அமைதியாகவிருந்தச் சேலை சட்டெனக் குரலெடுத்து அழவாரம்பித்தது…

சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தனர். தங்களுக்குள் ஏதேதோப் பேசிக்கொண்டனர்.

என்னிடமிருந்து சேலையைப் பிரிக்கத் துவங்கினர்.

“மெதுவா பக்குவமா எடுங்க சேலை கிழிஞ்சிடப்போகுது…” யாரோ சொன்னார்கள் சேலையின் சொந்தக்காரர்கள் போலிருக்கிறது.

எனக்குச் சேலையை விடமனதில்லை… அவர்கள் பிரிக்கும் போது அழுகையாக வந்தது.. அதுவரை நான் அழுததில்லை.. வாடியிருக்கிறென் உணவில்லாமல் பலநாள். அப்போது கூட அழுததில்லை. அழுதேன் ஆனால் என்னைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை… எல்லோர் கண்ணும் சேலையின் மீதே…

எனக்கோ சேலையைப் பிரிவதே பெருந்துயராக இருந்தது. இன்னும் வலிந்துப் பற்றிக் கொண்டேன்.

“நல்லாச் சிக்கிக்கிச்சு கிளைய உடச்சாத்தான் எடுக்க முடியும் போலருக்கு…”
என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுச் சுதாரிப்பதற்குள். மளுக் என உடைந்தது ஒருக் கிளை.
தாங்கமுடியாத வலி.. கத்தவில்லை நான்.
கத்தினாலும் யார்காதிலும் கேட்கப் போவதில்லை…

எங்கேச் சேலையை எடுத்து விடுவார்களோ என உடைந்த கிளையோடுச் சேர்த்து இன்னும் பலமாகப் பற்றினேன்.
விடவில்லை அவர்கள். ஒன்றிரண்டு பேராக இருந்தவர்கள் பலராயினர்… ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு இழுத்ததில் சேலைக் கிழிந்து என் மனதிலிருந்து இரத்தம் வடிந்தது.

அதற்கு மேல் நான் பிடிக்கவில்லை.. விட்டு விட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை… அதற்குள் எனது கிளைகள் பலவற்றை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டனர்.

அதோடு விட்டிருக்கலாம். சேலையைத் தான் எடுத்து விட்டார்களே.. போக வேண்டியது தானே… ஆனால் போகவில்லை திரும்ப திரும்ப அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புதிது புதிதாக கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளைக் கேட்கும் என்வலிகூட மரத்துப் போய் புன்முறுவல் வர ஆரம்பித்து விட்டது… அடடா இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு கற்பனைச் சக்தி…

கூடிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல்…
“ இந்தச் செடி இங்கருக்கிறதால தானே பிரச்சனை முதல்ல இத வெட்டி போடுங்கப்பா…”
வெட்டி விட்டனர் என்னை அடியோடு… இதோ மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
வீழ்ந்து கிடந்த என்னைப் பார்க்கக் கூட வரவில்லை சேலை… கூட்டத்தோடு போனது.. போகும் போது யாரோ சொன்னார்கள்..

“நல்லவேள லேசாத்தான் கிழிஞ்சிருக்கு… தச்சிட்டு வெளியத் தெரியாத மாதிரிக் கட்டிக்கலாம்”

சேலையைத் தைக்கலாம் மண்ணில் வீழ்ந்த என்னைத் தைப்பது யார்..?

யாரோ என்னை மிதிக்கிறார்கள்… என்னால் மூச்சு விட முடியவில்லை… ஒரு முட்கரம் உடைகிறது… கவலையெதற்குக் கரத்தைப்பற்றி.. உயிரே போகப் போகிறது.
ஏதோப் பேசுகிறார்களே என்ன அது…

“ஸ்….ஸ்…. ஆ அம்மா…”

“என்னப்பா ஆச்சு….”

“முள்ளு குத்திருச்சும்மா….”

உயிர் போகும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது… வந்து மிதிச்சுட்டு முள்குத்திடுச்சுண்ணு என்மேலேயே பழி போடுறாங்க.

சூரியன் மறுபடியும் வந்து விட்டான்… அதோ காற்றும் வந்து விட்டது…
இப்போதுக் காற்று என் நண்பனாக வரவில்லை...
இந்தக் காற்றுப்பட்டதும் என்னுடல் சிலிர்க்கவில்லை.. சூரியனோடு சேர்ந்து கொண்டு என் இரத்தத்தை உறிஞ்சுகிறான். நான் இறந்து கொண்டிருக்கிறேன்.
நான் இறந்து விடுவேன் ஆனால் என்னை வெட்டும் போது என்னிலிருந்து சிதறிய விதைகள் இதோ என்னிலிருந்து உறியப்பட்ட இரத்தத்தால் மழைபொழியும் போது... மறுபடி முளைக்கும்.
முடிந்தால் அவற்றையாவது காப்பாற்றுங்களேன்... வெட்டுப்படாமல்.

mukilan
18-07-2008, 03:43 AM
அசத்தல் செல்வா! முள்மரம் தன் வரலாறு கூறுதல். முள்மரம் வரலாற்றைக் கூறுவதன் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை அல்லவா கூறுகிறது. மிதித்து விட்டு குத்துகிறதாம்.. எப்பொழுதும் பழியை அடுத்தவர் மீது போட்டே பழக்கமான நமக்கு எப்பொழுதுதான் தெளியப் போகிறதோ. நல்ல கரு செல்வா. பாரதியார் கயிறு தன் வரலாறு கூறுவது போல கவிதை எழுதியுள்ளார். அந்தக் கயிறுக்கு காதலி கூட உண்டு. மீண்டும் என் பாராட்டுக்கள்.

நாகரா
18-07-2008, 04:02 AM
முட்செடியிலும்
மெல்லிய இருதயமா!
செல்வரே!
கவி நயத்தோடு எழுதிய கதையில்
முட்செடிக்கு வந்தது அமர வாழ்வு!
உம் சொல் முட்கள் தைத்ததால்
என் நெஞ்சில் இன்ப வேதனை!

வாழ்த்துக்கள் செல்வா!

சிவா.ஜி
18-07-2008, 05:42 AM
முட்செடியின் கதையா...புலம்பலா...அங்கலாய்ப்பா...? எதுவாய் இருந்தாலும் சொன்னது நன்றாகவே இருக்கிறது.

முள்மீது சேலை பட்டாலும், சேலைமீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தானென விவரம் புரியாதவர்கள் சொல்லி வந்தார்கள். இங்கே சேலையால் தன் வாழ்வையே இழந்த முட்செடியைப் பார்த்தபின் சொன்னதைத் திருத்திக்கொள்வார்களோ.

மிக அருமை செல்வா. அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.

மதுரை மைந்தன்
18-07-2008, 01:21 PM
நண்பர் செல்வா

மிக அருமையான கதை. உங்க கற்பனை அபாரம். இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க. வாழ்த்துக்கள்

தீபா
18-07-2008, 02:21 PM
அருமை செல்வா. சொல்ல வந்த கருத்தினை அழகாய் எடுத்தாண்டமை பாராட்ட வைக்கிறது. இடைச்செறுகலான சில கலாய்ப்புகளைத் தவிர்க்க, கதை இன்னும் பலம் பெறும். அத்தோடு, முடிவு வரிகள் அழுத்தமாக இல்லை. அப்படிக் கொண்டு சென்று அழுத்தமின்றி முடித்தமை சற்று சப்பென்று இருக்கிறது. அந்த இறுதி வரிகளை நீக்கிவிட்டு வேறு வரிகள் கொடுக்கலாம். செடி தன் வரலாறு கூறுவது போன்றவை புதுமையாக சொல்லமுடியாது என்றாலும் அதைச் சொல்லுவதற்கும் திறன் வேண்டும் அல்லவா.. அது வாய்த்திருக்கிறது உங்களுக்கு.

இவ்வகையில் பாரதியார் கயிறுக்கு காதலி வைத்து பாடிய பாடலும் (காற்றடிக்குது....) கலைஞர் கருணாநிதி குப்பைத் தொட்டி கதை சொல்லுவது போலவும் எழுதியிருக்கிறார்.. இன்னும் பல இருக்கலாம். அவ்வகையில் இது போன்ற கதைகள் வரவேற்கத்தக்கது.
பாராட்டுக்கள் திரு.செல்வா

Keelai Naadaan
18-07-2008, 02:29 PM
முள்செடியாக மாறி.... உங்கள் கற்பனை அபாரம்.
ஆனால் அதுவும் பெண் ஸ்பரிசத்தில் பூ மனமாகி புலம்புவதுதான் என்னவோ போல் இருக்கிறது

பாரதி
18-07-2008, 03:46 PM
சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை..!
வாடிய பயிரைக்கண்டு வருந்திய வள்ளலாராய் செல்வா...!!
தொடர்ந்து உங்கள் எழுத்துக்களின் முன்னேற்றத்தை அளவிலா மகிழ்வுடன் பார்த்து வருகிறேன். இந்த முள் பட்டதில் இன்பவேதனை மட்டுமே செல்வா.

செல்வா
19-07-2008, 07:22 AM
முட்செடியின் கதையா...புலம்பலா...அங்கலாய்ப்பா...? எதுவாய் இருந்தாலும் சொன்னது நன்றாகவே இருக்கிறது.
முள்மீது சேலை பட்டாலும், சேலைமீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தானென விவரம் புரியாதவர்கள் சொல்லி வந்தார்கள். இங்கே சேலையால் தன் வாழ்வையே இழந்த முட்செடியைப் பார்த்தபின் சொன்னதைத் திருத்திக்கொள்வார்களோ.
மிக அருமை செல்வா. அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.
நன்றி அண்ணா.... என்ன உங்களுக்கு முதல் நன்றி என்று பார்க்கிறீங்களா?
கதையின் உள்ளே புகுந்து எழுதியவனின் மனத்தைப் படித்த உங்களுக்கு தனிப்பட்ட நன்றிச் சொல்லவில்லையென்றால் தகுமா?
எல்லாம் உங்கள மாதிரி ஜாம்பவான்களிடமிருந்துக் கற்றுக் கொண்டது தானே அண்ணா.

செல்வா
19-07-2008, 07:40 AM
மீண்டும் என் பாராட்டுக்கள்.
நன்றி அண்ணா.... தங்களைப் போன்ற கதாசிரியர்களின் பாராட்டு என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கும். மிக்க நன்றி.


முட்செடியிலும்
மெல்லிய இருதயமா!
செல்வரே!
வாழ்த்துக்கள் செல்வா!
எல்லா முட்செடிக்குள்ளும் கனிந்த மனமிருந்கும் அண்ணா. காலத்தின் கோலத்தால் தான் கடினப்பட்டுவிடுகிறது.
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.


நண்பர் செல்வா
மிக அருமையான கதை. உங்க கற்பனை அபாரம். இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க. வாழ்த்துக்கள்
நன்றி ஐயா... தங்கள் பாராட்டுக்களுக்கு.


அருமை செல்வா. சொல்ல வந்த கருத்தினை அழகாய் எடுத்தாண்டமை பாராட்ட வைக்கிறது. இடைச்செறுகலான சில கலாய்ப்புகளைத் தவிர்க்க, கதை இன்னும் பலம் பெறும். அத்தோடு, முடிவு வரிகள் அழுத்தமாக இல்லை. அப்படிக் கொண்டு சென்று அழுத்தமின்றி முடித்தமை சற்று சப்பென்று இருக்கிறது. அந்த இறுதி வரிகளை நீக்கிவிட்டு வேறு வரிகள் கொடுக்கலாம்.
பாராட்டுக்கள் திரு.செல்வா
மன்றத்திற்கு ஒரு அருமையான கதை விமர்சகர் கிடைத்துள்ளார். உங்களதுப் பின்னூட்டங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
தங்கள் பின்னூட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக என்போன்று புதிதாக கதைஎழுத முயலும் கத்துக் குட்டிகளுக்கு மிகுந்த ஊக்கம் கொடுக்கும். அதோடு தவறுகளையும் திருத்திக் கற்றுக் கொடுக்கும் மிக்க நன்றி தென்றல் அவர்களே.
நீங்கள் கூறியது போல் இறுதி வரிகள் நச்சென்று முடியவில்லை தான். இப்போது சிறிது மாற்றியிருக்கிறேன்.
இடைச் செருகலான கலாய்ப்புகள் தனிக் கதையாகப் பிரிக்கும் போது இருக்காது. மன்றத்திற்கு மட்டும் தான் :)
விமர்சனத்திற்கு மிக்க நன்றி தென்றல் அவர்களே...


முள்செடியாக மாறி.... உங்கள் கற்பனை அபாரம்.
ஆனால் அதுவும் பெண் ஸ்பரிசத்தில் பூ மனமாகி புலம்புவதுதான் என்னவோ போல் இருக்கிறது
ஹா...ஹா... நன்றி கீழை நாடன். உங்களது தேடல் கதையைப் படித்துவிட்டு இன்னும் வியப்பிலிருந்து வெளிவரவில்லை என்மனம். அப்படிப்பட்ட அருமையானக் கதையைக் கொணர்ந்த தங்களிடமிருந்து பாராட்டுக்கிடைத்தது மிக மகிழ்ச்சி.
முட்செடிக்கு மனம் பொருத்தியது தான் இந்தக் கதையே...
சிவா.ஜி அண்ணாவின் பின்னூட்டத்தை சற்று வாசியுங்கள். அது தான் கதையே...


சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை..!
தொடர்ந்து உங்கள் எழுத்துக்களின் முன்னேற்றத்தை அளவிலா மகிழ்வுடன் பார்த்து வருகிறேன். இந்த முள் பட்டதில் இன்பவேதனை மட்டுமே செல்வா.
ஆஹா.... இந்தப் பாரதி அண்ணாவின் பாராட்டை அந்தப் பாரதியின் பாராட்டாகவேக் கொள்கிறேன்.
மிக்க நன்றி அண்ணா.

இளசு
20-07-2008, 07:03 AM
சமூக அடித்தட்டு இளைஞன்... ''அநாதை''!
''அந்தஸ்து'' மிக்க பெண்ணின் பார்வை அவன் மேல்..!

பொறுக்குமா சமூகம்?
நொறுக்கியது அவனை!
இருப்பதே தவறாம்..
மயக்கியதும் அவனாம்..

சபையில் ஏறாத சொற்கள் மட்டுமே உள்ளவர்கள் -
ஒரு வகையில் மரம், செடி போல் ஊமைகளே!

மிக நல்ல படைப்புக்கு சிறப்பான பாராட்டுகள் செல்வா!

நாகரா
20-07-2008, 07:37 AM
சமூக அடித்தட்டு இளைஞன்... ''அநாதை''!
''அந்தஸ்து'' மிக்க பெண்ணின் பார்வை அவன் மேல்..!

பொறுக்குமா சமூகம்?
நொறுக்கியது அவனை!
இருப்பதே தவறாம்..
மயக்கியதும் அவனாம்..

சபையில் ஏறாத சொற்கள் மட்டுமே உள்ளவர்கள் -
ஒரு வகையில் மரம், செடி போல் ஊமைகளே!

மிக நல்ல படைப்புக்கு சிறப்பான பாராட்டுகள் செல்வா!

செல்வரின் கதையின் குறியீட்டுப் பரிமாணத்தை உணர வைக்கும் இளசு அறிஞர்!

Keelai Naadaan
20-07-2008, 12:23 PM
முட்செடிக்கு மனம் பொருத்தியது தான் இந்தக் கதையே...
சிவா.ஜி அண்ணாவின் பின்னூட்டத்தை சற்று வாசியுங்கள். அது தான் கதையே...
உண்மை தான் செல்வா.
சிவா.ஜி அவர்களின் பின்னூட்டமும், இளசு அவர்களின் பின்னூட்டமும் கதையின் பொருளை விவரிக்கிறது.
சரியான பின்னூட்டம் எழுத தனி திறமை வேண்டும் என புரிகிறது. வாழ்த்துக்கள்

ஆதி
23-07-2008, 12:22 PM
தழுவும் காற்றில்
தவழ்ந்து வந்து
விழுந்த சேலையால்
விழுந்தது முட்செடி..

முக்காடிட்ட
வர்க்க உறழ்வுகளை
முட்செடி
வைத்து விளக்கிவிட்டாய்..

வெறுமென நல்லா இருக்குடா என்று மட்டும் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை..

பாராட்டுக்கள் டா..

செல்வா
13-05-2010, 10:30 PM
நறுக்கென்று நாலு வரிகளில் மொத்தக் கதையுமே அடக்கிவிட்டாயே..

அருமை ஆதன்...

மிக்க நன்றி பாராட்டுக்கும் கவிதைக்கும்.

govindh
13-05-2010, 10:51 PM
முட்செடி - உயர்திணையாகி...
உயிர் பிரியும் வலியை....
காரண காரியங்களுடன்
மனம் தொட்டுப் பேசுகிறது...!

அருமையாக அமைத்திருக்கிறீர்கள்...!
வாழ்த்துக்கள்...

DREAMER
14-05-2010, 02:28 AM
முட்செடியின் கண்ணோட்டத்திலிருந்து கதையைச் சொன்னவிதம் அருமைங்க... கடைசியில் முள் வெட்டப்படும்போது அதன் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பும் அருமை... வாசிக்க சுவாரஸ்யமான ஒரு கதையைக் கொடுத்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

-
DREAMER

aren
14-05-2010, 03:45 AM
செல்வா, ஒரு இலக்கியத்தைப் படித்த உணர்வு என்னுள் ஏற்படுகிறது இந்தக் கதையைப் படித்தவுடன்.

யாரோ செய்த தப்பிற்கு தான் அடிபடுவதுபோல் அவர்கள் செய்த தப்பிற்கு இந்த முட்செடி அநியாயமாக உயிர்விட்டிருக்கிறது.

நானும் இந்த மாதிரி மரத்தை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், ஆனால் தோதான நேரம் இன்னும் வரவில்லை.

நீங்கள் நிறைய எழுதவேண்டும் செல்வா. ப்ளீஸ் எழுதுங்கள்.

Akila.R.D
14-05-2010, 08:58 AM
இந்தக்கதையை இத்தனை நாளாக படிக்காமல் இருந்துவிட்டேனே...

அருமையாக உள்ளது செல்வா...

வாழ்த்துக்கள்...

கலையரசி
14-05-2010, 01:59 PM
"தன்செடி ஏன் வளரவில்லை எனக் கவலைப்படுவதை விட்டு விட்டு
இவன் ஏன் இப்படி வளர்கிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.."

சிந்தனையைத் தூண்டும் வரிகள். நான் வைத்து வளர்க்கும் செடிகளின் வளர்ச்சியைத் தானாகக் கிளம்பும் முட்செடிகளோடு ஒப்பிட்டு நானே இவ்வாறு பலமுறை புலம்பியிருக்கிறேன்.
சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் நம் பிள்ளைகளின் வளர்ச்சியை (கல்வி, அறிவு, உடல் வளர்ச்சி என எது வேண்டுமானாலும் இருக்கலாம்) ஊரார் பிள்ளைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏங்கும் பெற்றோரின் செய்கையைக் குறிக்கும் ஒரு குறியீடாகவும் இதைக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றுகிறது.
ஒரு முட்செடிக்கும் மனமுண்டு. இவ்வுலகில் வாழ உரிமையுண்டு. நாமாகப் போய் அதில் காலை வைத்துக் குத்திக் கொண்டு அதனைக் குறை கூறுவது முறையா? அதைப் பிடுங்கி எறிய நமக்கு என்ன அதிகாரம்? என்பன போன்ற எண்ணங்களை என்னுள் ஏற்படுத்திச் சிந்திக்க வைத்த கதை.
உங்கள் மற்ற கதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய எழுத்து நடை. பாராட்டுக்கள் செல்வா அவர்களே!

செல்வா
14-05-2010, 02:37 PM
அருமையாக அமைத்திருக்கிறீர்கள்...!
வாழ்த்துக்கள்...
நன்றி கோவிந்த்.

செல்வா
14-05-2010, 02:41 PM
வாசிக்க சுவாரஸ்யமான ஒரு கதையைக் கொடுத்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
DREAMER

நன்றி டிரீமர்.நீங்கள் நிறைய எழுதவேண்டும் செல்வா. ப்ளீஸ் எழுதுங்கள்.

மிகுந்த ஊக்கம் தரும் பின்னூட்டம். கண்டிப்பாக எழுத முயற்சிப்பேன் அண்ணா.வாழ்த்துக்கள்...

நன்றி அகிலா அவர்களே...


பாராட்டுக்கள் செல்வா அவர்களே!

இது ஒரு குறியீட்டுக் கதை முயற்சிதான்.
பாராட்டுகளுக்கு நன்றி கலையரசி அவர்களே.

த.ஜார்ஜ்
14-05-2010, 03:12 PM
அடடா செல்வா இந்த திறமைகள் எங்கே ஒளிந்து வைத்திருந்தீர்கள்.அருமையான முயற்சி. மாற்று பரிமானத்தோடு ஒரு கதை. படிக்கிறவர்களின் மன நிலைக்கொப்ப வெவ்வேறு பொருளை வழ்ங்கும் சாத்தியமுள்ள கதை.தொடருங்கள்.[ஆனால் தொடர்கதை வேண்டாம்]

செல்வா
14-05-2010, 07:55 PM
தொடருங்கள்
நன்றி அண்ணா.... :)[ஆனால் தொடர்கதை வேண்டாம்]

:eek::eek: :D:D:D

கீதம்
16-05-2010, 12:35 AM
முட்செடி இங்கு அழகாய்த் தெரிகிறது எனக்கு. இனி தளதளவென்று வளர்ந்துநிற்கும் முட்செடியைப் பார்க்கும்போதும், முள்மேல் காலைவைத்துக் குத்திக்கொள்ளும்போதும்(?) உங்கள் நினைவு கட்டாயம் வரும். ஆனால் அதற்கு சிலகாலம் நான் காத்திருக்கவேண்டும். (அதாவது இந்தியா போகும்வரை..:))

மிகுந்த பாராட்டுகள், செல்வா. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கதையும் எழுதுங்கள். (ஜார்ஜ் என்மீது கோபிக்காமல் இருக்கக் கடவதாக!)

அக்னி
04-06-2010, 05:48 PM
எந்தப் பறவையின் எச்சம் அடைகாத்து உயிர்தந்ததோ...
எச்சத்துக்குள்ளிருந்து வந்ததாலோ, எச்சத்துமில்லாமலே அசுர வளர்ச்சி...

உரம்போட்டு வளர்க்கும் செடிகள் வளராது போனாலும்,
ஓரமாய் வளரும் செடிமீதேன் பழி...

சேலையைக் கடத்தி வந்த காற்று,
கைவிட்டதானாற்தானே,
செடி தாங்கிகொண்டது சேலையை...

பற்றியது செடியானாலும்
தழுவியது சேலையல்லவா...

கடிந்துகொள்ளவேண்டிய காற்றையும் சேலையையும் விட்டு,
மரணதண்டனை செடிக்கா...

‘முள்ளுக் குத்தியது’
செத்துப்போனபின்னும் பழி செடிமீது...

அபாரம் செல்வா...
‘காதல்’ படம் நினைவில் வந்து குத்தியது...

nambi
04-06-2010, 08:46 PM
தன் செடி ஏன் வளரவில்லை.....இந்த இடம் ந்ன்று. முட்செடி குத்துவது நன்றாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!