PDA

View Full Version : மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-4



mukilan
18-07-2008, 02:55 AM
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் நன்மைகள்-தீமைகள்.

நன்மைகள்:

1. வேதிப்பொருட்கள் பயன்பாட்டின் குறைப்பு மற்றும் எதிர்ப்புத்திறன் உண்டாவதை தள்ளிப் போடுதல்


பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாழ்படுவது நாமறிந்த விடயமே. சுற்றுச் சூழல் பாழ்படுவது மட்டுமில்லாமல் பயிர் பாதுகாப்பிற்கு அதிகம் செலவு ஆவதும் உண்மை. பூச்சிகளையோ, களைகளையோ தொடர்ந்து ஒரே விதமான வேதிப்
பொருட்கள் கொண்டு அழிக்க முனைந்தால் அவை தங்கள் உடலமைப்பில் மாறுதல் ஏற்படுத்திக் கொண்டு அந்த கொல்லிகளை எதிர்க்கும் திறன் பெற்று விடுகின்றன. பல களைக்கொல்லிகளை களைகள் தாங்கி வளர ஆரம்பித்து விட்டன. பல பூச்சிகளும் பூச்சிக்கொல்லிகளின் நச்சைத் தாங்கி வளர ஆரம்பித்து விட்டன.அது மட்டுமல்ல பயிர்களுக்கு நன்மை செய்யும் தேனீ போன்ற பூச்சிகளும் பூச்சிக்கொல்லி தெளிப்பினால் குறைந்து விட்டன.

கனடாவிலும், அமெரிக்காவிலும் மேற்கொண்ட சோதனைகளின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மூலம் வேதிப் பொருள்களின் தேவை 40% சதவிகிதம் குறைக்கப்படுவது கண்டறியப்பட்டது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் 10% அதிகம் மகசூல் தந்ததும் தெரிய வந்துள்ளது.

2. களர்நிலங்கள் மற்றும் உற்பத்தித் திறன் குறைந்த நிலங்கள் மேலாண்மை

சில பாக்டீரியாக்களால் நிலத்தில் உள்ள கன உலோகங்களின் தனிமங்களை கிரகித்துக் கொண்டோ அல்லது அசையாமல் நிலை நிறுத்தவோ முடியும்.அவ்வாறு அந்த கன உலோகங்களைக் கிரகிக்கச் சுரக்கும் சுரப்பிற்கான மரபணுவைத் தாவரங்களில் ஏற்றினால் அத்தகைய தாவரங்களை பிரச்சினைக்குரிய நிலங்களில் பயிர் செய்து அந்த நிலங்களில் உள்ள கன உலோகங்களை வெளியேற்ற முடியும்.

3. மருந்துப் பொருள் உற்பத்தி

இளசு அண்ணா சுட்டிக்காட்டிய படி இன்சுலின் சுரப்புக்கான மரபணுக்களை பன்றிகளிடம் இருந்து பெற்று அதைத் தாவரங்களில் செலுத்தி,அத்தாவரங்களின் பெருக்கத்தின் மூலம் இன்சுலினை உற்பத்தி செய்யலாம். வீணாகப் பன்றிகளை அழிக்க வேண்டியது இல்லை. அதோடு மட்டுமில்லாமல் பன்றியில் உள்ள கிருமித் தொற்றுதல்களும் தவிர்க்கப் படலாம். இன்சுலின் மட்டுமல்ல ஏராளமான மருந்துப் பொருட்களைத் தாவரங்களின் மூலமாகவே உற்பத்தி செய்யலாம். ஏற்கனவே நான் கூறியுள்ள வைட்டமின் அரிசி அப்படித்தான். வைட்டமின் குறைபாட்டை குறைக்கலாம். உணவே மருந்து.:D

4. பயிர்மேம்பாடு


சில வகைத் தாவரங்களுக்கு மற்ற தாவரங்களின் மரபணுகொண்டு
சுவை கூட்டவோ,உற்பத்தி பெருக்கவோ செய்ய மரபணுமாற்றம் பெரிதளவில் உதவுகிறது.வளர்ச்சி தாங்கி வளரக்கூடிய, களர், உவர் நிலங்களில் வளரக்கூடிய, நீர்த் தேவை குறைந்த எனப் பல தாவர வகைகளை உண்டாக்க முடியும்.

தீமைகள்.

1. ஒவ்வாமை:

ஒவ்வாமை என்பது இந்தியாவில் பெரிய பிரச்சினையாக இல்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேர்க்கடலையால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. வேர்க்கடலையால் செய்த தின்பண்டங்கள் பள்ளிக்குள் கொண்டு வரக்கூடாது என்பன போன்ற சட்டங்கள் உள்ளன. வேர்க்கடலையில் இருந்து பெறப்பட்ட மரபணு வேறு செடிகளுக்கு மாற்றப்படும் பொழுது அந்தச் செடியும் ஒவ்வாத பொருட்களை உற்பத்தி செய்யலாம். எல்லாமே ஒரு ஊகம்தான்.யாரும் இன்னமும் அப்படி நடந்ததற்கான ஆதாரம் காட்டவில்லை. அபப்டி நடக்காது என்பதற்கான உத்திரவாதமும் இல்லை.

2.இயற்கையான மரபணு மாற்றம்??

மரபணுமாற்றத்தினால் வரக்கூடிய மிகப் பெரிய தீமை இதுவாகத்தான் இருக்க முடியும்.

இங்கே, களைக்கொல்லி கொண்டு களையைக் கட்டுப்படுத்துவது பற்றிய விளக்கம் கொடுத்தால் நன்றாக விளங்கும். களைக்கொல்லிகள் தாவரங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சுரப்பிகளைக்(hormones responsible for regular physiological processes) கட்டுப் படுத்தவோ அல்லது ஊடுருவிச் சென்று அந்தச் சுரப்பியின் செயல் திறமையை குறைப்பதன்(reducing the activity or binding to that hormone) மூலமோ அந்தச் செடிகள் அழியக் காரணாமாகின்றன. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்களில், புதிய மரபணுவின் மூலம் அன்றாடம் சுரக்கும் சுரப்பிகள் மட்டுமில்லாமல் அதிகமாக வேறொரு சுரப்பியும் சுரக்க வைக்க முடியும். அந்தப்புதிய பொருள் தெளிக்கப்படும் நச்சின் மூலப்பொருளோடு வினை புரிவதன் மூலம் அந்த நச்சு மூலப்பொருள் அந்த்ச் சுரப்பியை அழிக்கவோ அல்லது சிரப்பியின் செயல்திறன் குறைக்கவோ முடியாது அல்லவா? ஆக அந்த நஞ்சானது செடிகளைக் கொல்ல முடியாது. இப்பொழுது களைக்கொல்லியைத் தெளித்தால் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்கள் தவிர மற்ற அனைத்து தாவரங்களும் அழியவேண்டியதுதான். ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் எல்லாக் களைக்கொல்லிகளையும் அந்தத் தாவரத்தால் எதிர்த்து வாழமுடியாது. புதிய மரபணுவால் உற்பத்தி செய்யப்படும் அந்தப் புரதமானது சில குறிப்பிட்ட வேதிப்பொருள்களோடு மட்டுமே
வினைபுரிய முடியும். ஒரு உதாரணம் சொல்லலாமா?

அமெரிக்காவின் மான்சாண்ட்டோ(Monsanto) நிறுவனம் தயாரிக்கும் களைக்கொல்லியின் பெயர் Round Up. அதன் மூலப்பொருள்(தாவரத்தின் செயல்பாட்டைக் குறைக்கும் வேதிப்பொருள்) கிளைஃபோசேட் (Glyphosate). மான்சாண்ட்டோ நிறுவனம் கண்டுபிடித்துள்ள கனோலா வகை இந்தக் களைக்கொல்லியை மட்டுமே எதிர்க்க முடியும் (Round-up ready Canola). மற்றொரு நிறுவனமான ஜெர்மனியின் பேயெர்(Bayer Crop Sciences-நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனம்) தயாரிக்கும் களைக்கொல்லி Liberty. அதன் மூலப்பொருள் குளுஃபோசினேட்(Glufosinate). இந்த மூலப் பொருள் தாவரத்தின் வேறு சுரப்பியைத் தாக்கி அழிப்பது. பேயெரின் கனோலா வகை Liberty-Link Canola. இது பேயெரின் களைக்கொல்லியை மட்டுமே தாங்கி வளரமுடியும். விதையையும், களைக்கொல்லியையும் பிரித்து வாங்க முடியாது. விதை விற்கும் நிறுவனமே களைக்கொல்லியையும்
விற்கும். அதுதான் வியாபார தந்திரம். ஒரு நிறுவனத்திடம் வாங்கிய விதையில் மற்ற எந்த நிறுவனத்தின், ஏன் அதே நிறுவனத்தின் வேறு
களைக்கொல்லி தெளித்தாலும் செடிகள் இறந்து விடும்.

அப்படியானால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட கனோலாவின் மகரந்தம் காற்றில் பறந்து மரபணு மாற்றம் செய்யப்படாத மற்ற கனோலாக்களைகருவுறச்செய்வதன் மூலம் அந்தச் செடிகளையும் மரபணுமாற்றம் செய்யலாம். களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட கனோலா நிலத்தில், கடுகு வகைகள் களையாக வளரும். கனோலாவும் கடுகும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. களைக்கொல்லி அடித்தால் கனோலா தவிர அனைத்துமே இறக்கவேண்டியதுதான். களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட மரபணுமாற்றம் செய்யப்பட்ட கனோலா தன் மகரந்தத்தின் மூலம் கடுகையும் மரபணுமாற்றம் கொண்டதாக மாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் கனோலா சிறிய செடியாக இருக்கும் பொழுதே களைக்கொல்லி தெளிப்பதன் மூலம் கடுகைக் கொன்று விடுவதால் அது பூவே பூக்காதே! பின்னர் எப்படி மகரந்தச் சேர்க்கை எல்லாம் என்கின்றனர் மரபணுமாற்றத்தை ஆதரிப்போர் . அப்படியெல்லாம் எளிதாக சொல்லிவிடமுடியாது. நீங்கள் தெளிக்கும் களைக்கொல்லி தன் மேல் படாமல் தப்பி வளரக்கூடிய ஒன்றிரண்டு கடுகுச்செடிகள் அந்த மகரந்தச் சேர்க்கையின் மூலம் கருவுற்றால் பின்னர் அந்தக் கடுகும் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்று விடும். இன்று ஒரு செடியாக இருப்பது நாளை 4000 ஆகும் என்கின்றனர் எதிர்ப்போர். அப்படி மகரந்தம் மூலம் மரபணுமாற்றம் பெற்று மரபணுமாற்றப்படாத கனோலா களைக்கொல்லியை தாங்கி வளர்ந்த கதையும் கனடாவில்தான் நடந்தது.


பேயெரின் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்ற கனோலாவின் படம் கீழே.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/DSC03458.jpg

3. பாக்டீரியாவின் டி.என்.ஏவை உண்ணும் அபாயம்

பாக்டீரியாவின் டி.என்.ஏ மரபணுமாற்றப்பட்ட தாவரத்தில் இருப்பதால் அந்த தாவரத்தின் விதைகளிலும் அந்த டி.என்.ஏ இருக்குமே. அதையும் சேர்த்து நாம் உண்ணும் அபாயம் இருக்கிறதே? என்பது எதிர்ப்பவர்கள் வாதம்.
இல்லை. பாக்டீரியாவின் டி.என்.ஏ என்பது முதலில் சமைக்கும் பொழுதே சிதைந்து விடலாம். அப்படியே சமைக்காமல் உண்டாலும் உணவுக்குழாய்க்குள் சென்று விட்ட டி.என்.ஏ என்பது நம் உணவுக்குழாய்களில் சுரக்கப்படும் அமிலங்களினால் செயலிழக்கச் செய்ய முடிகின்ற வாய்ப்பும் இருக்கிறது. அப்படியே அது செய்யாது என எடுத்துக் கொண்டோமானாலும் நாள்தோறும் நாம் உண்ணும் உணவுகளில், சமைக்காத மரபணுமாற்றம் செய்யாத காய்கறிகளிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. வழி வழியாக இத்தகைய நுண்ணுயிரிகளைக் கொல்ல நமது உடல், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் புரதங்களைக் கொண்டுள்ளது அவை இது போன்ற டி.என்.ஏக்களைக் கொன்று விடும். ஒரு வாதத்திற்கு எதிர்ப்பாளர்கள் சொல்வது உண்மை எனக் கொண்டாலும் நம் உடலில் இது நாள் வரை நாம் உண்ட உயிரினங்களின் மரபணு இருக்க வேண்டுமல்லவா. அப்படியானால் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்துக்கான மரபணு ஒரு ஆப்பிரிக்கரையாவது மஞ்சளாக மாற்றி இருக்கலாமே? பூச்சிகளை உண்ணும் மனிதர்களில் யாருக்கேனும் இறக்கைகள் இருக்க வேண்டுமே? என்பது ஆதரிப்போர் வாதம்.

ஆனால் அவ்வளவு எளிதாக நாம் இதை விட்டு விட முடியாது. இன்றைக்கு ஆபத்தில்லாத ஒன்று திடீரென ஆபத்து எனத் தெரிய வருகையில் காலம் கடந்து போயிருக்கும். அன்றைக்கு நாம் இதை சரி செய்ய முடியாது. எனவே இந்த ஆபத்தான விளையாட்டுக்கள் எல்லாம் வேண்டாம் மூட்டை கட்டி வையுங்கள் என்பது எதிர்ப்போர் வாதம்.


4. மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிருக்கும் பூச்சிகள் எதிர்ப்புத் திறன் உருவாக்கலாம்.

இப்படியான ஒரு வாய்ப்பு இல்லை என்றும் மறுத்து விட முடியாது. ஆனால் பூச்சிகள் வேதிப்பொருட்களுக்கும் இயற்கை இடுபொருளான வேப்பம் புண்ணாக்கிற்கும் கூட எதிர்ப்புத்திறன் வளர்க்கும் சாத்தியம் உண்டு. அப்படியானால் இந்த தீமையானது இந்தத் தொழில் நுட்பத்தை மட்டும் குறிப்பதல்ல.

5. சரி நீங்கள் ஒரு புதிய மரபணுவைப் புகுத்துவதால் மரபணுக்கட்டமைப்பில் மாறுதல் ஏற்படுத்துகிறீர்கள். அப்படியானால் அந்தச் செடியில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள் மரபணுமாற்றம் செய்யப்படாத தாவரங்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களிலிருந்து மாறுபட்டு இருக்குமே?

இருக்கலாம். ஆனால் சந்தைக்கு வரும் ஒரு தாவர ரகத்தின் சத்துக்கள், கனிம உப்புக்கள் போன்றவற்றின் விகிதம் எந்த விதத்திலும் மரபணு மாற்றப்படாத தாவரத்தின் விகிதத்தில் இருந்து வேறுபடக்கூடாது என்பது விதி. எனவே அந்த பயம் தேவையில்லை.

இன்னமும் சில நன்மைகளும் தீமைகளும் இருந்தாலும், நான் மேற்கூறியவை மிக முக்கியமானவை. மரபணு மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் நன்மையும் தீமையும் கலந்த சிக்கலான விளைவுகள். இது வேண்டுமா வேண்டாமா? எந்த இடத்தில் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இந்தச் சிக்கல்களைக் களைய என்ன வழி? அடுத்த பகுதியில்

மாற்றம் தொடரும்.

பென்ஸ்
18-07-2008, 04:08 AM
அன்பு முகில்ஸ்...

நன்மைகளை வாசிக்கும் போது சந்தோசமாக இருந்தாலும், தீமைகளை வாசிக்கும் போது... சிறு கலக்கம் வருவது தவிற்க்கமுடியவில்லை.

ஒரு பயிரை உருவாக்கும் போது நடக்கும் ஆராய்ச்சி வியபாரத்தின் காரணமாக அதை சந்தைக்கு கொண்டுவர வேண்டி அதன் குனநலன்களை மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகின்றன... ஆனால் அந்த தாவரத்தாலோ அல்லது அதன் கனியாலோ மனிதனுக்கோ அல்லது இயற்க்கைகோ இருக்கும் மாற்றங்களை படிக்கிறார்களா.. இல்லை அதற்க்கு நேரமிருக்கிறதா????

மரபணு மாற்றம் செய்யபட்ட உணவை உன்னுவதால் மனிதனுள் வரும் மாற்றங்களை நமது உடம்பே எதிர்கொள்ளலாம், அல்லது அதற்க்காக மருந்தும் கண்டுபிட்டிக்கபடலாம்....

ஆனால் மரம் நட கல்லறைகள் தோண்டபடவேண்டுமா..!!!!!

மனிதனின் ஆசைகள் கெடுதல் இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிடுமே....
ஆனால் நம் சந்ததியினருக்கு...
காலம் பதில் சொல்லட்டும்...

பூமகள்
18-07-2008, 04:13 AM
தெளிவான விளக்கம் முகில்ஸ் அண்ணா..!

எனக்கு ஆங்காங்கே எழுந்த சந்தேகங்கள் எல்லாம் தாங்களே கேட்டு தெளிவாக்கிய பாங்கு மிகக் கச்சிதம்.

என் குட்டி மூளையில் ஏற்பட்ட சில சந்தேகங்கள்..

1.மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகளை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து வாங்கும் போது... மீண்டும் அடுத்து பயிருவதற்கு அவர்களிடமே கை ஏந்தும் நிலை வருமா?? அதாவது விதை உருவாகாத பயிர்..

2. மரபணு மாற்றத்தால் உருவான பயிர்.. அதற்கான களைக் கொல்லி இப்படி எல்லாமும் சேர்ந்து.. ஒரு புதிய பல பூச்சியினங்களை அதாவது எல்லா எதிர்ப்புச் சக்தியையும் பெற்று உருவாகி வருவதாக சொல்கிறார்களே.. அது உண்மையா?

3. இப்போதெல்லாம் ஹைபிரிட் எனும் முறையில் பெருமளவு விளைவிக்கப்படும்.. பெரிய நெல்லிக்காய்(கசப்பான நெல்லிக்காய்) வெகு சில நாட்களிலேயே.. கெட்டுப் போய்விடுகிறதே..

இன்னும் சில காய்கறிகளுக்கும் இதே நிலை தான்.. சாதாரண காய்கறிகள் இருக்கும் வாழ்நாளை விட இவை குறைவான நாட்களே அழுகாமல் இருக்கிறது..

இதற்கு காரணம் என்ன முகில்ஸ் அண்ணா?

இன்னும் ஐயப்பாடோடு வருகிறேன். (நல்லா பூவிடம் மாட்டீட்டீங்க பாருங்க முகில்ஸ் அண்ணா.. :D:D)

உங்களின் இந்தத் தொடர்.. பல தெளிவான பார்வைகளை பலரிடம் ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. :)

mukilan
18-07-2008, 04:44 AM
மரபணு மாற்றம் செய்யபட்ட உணவை உன்னுவதால் மனிதனுள் வரும் மாற்றங்களை நமது உடம்பே எதிர்கொள்ளலாம், அல்லது அதற்க்காக மருந்தும் கண்டுபிட்டிக்கபடலாம்....

ஆனால் மரம் நட கல்லறைகள் தோண்டபடவேண்டுமா..!!!!!

மனிதனின் ஆசைகள் கெடுதல் இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிடுமே....
ஆனால் நம் சந்ததியினருக்கு...
காலம் பதில் சொல்லட்டும்...
உங்கள் புரிதலும், வினாக்களும் மிக அருமை பென்ஸ். நீங்கள் கூறியபடி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா,பிரேசில் சீனா ஆகியவைதான் இத் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன் படுத்துபவை. அங்கு இத்தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவின் பக்க விளைவுகளை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
முதன்முதலில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த வேளாண் அறிவியலாளர்கள் குழு இவ்வாறான புற விளைவுகள் இருக்கும் என்று எதிர்பார்த்து இருப்பார்கள் என்றே கருதுகிறேன். அத்தகைய புற விளைவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிகள் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறன. ஆனால் அதற்கு முன்பாகவே சந்தைப்படுத்தப் பட்டுவிட்டது சரக்கு. புதிய மற்ற மரபணுமாற்றும் ஆராய்ச்சிகள் நடந்தாலும் இப்போதைக்கு அவர்களின் ஆராய்ச்சி சந்தையில் பொருளாக வராது .

மரபணுமாற்றப்பட்ட பயிர்கட்கு உலகளாவிய பொதுக் கோட்பாடுகள் இல்லை. ஐரோப்பாவின் நிலைப்பாடு வேறு. அமெரிக்காவின் நிலைப்பாடு வேறு. கனடா வழக்கம் போல குழப்பம்தான். கனடாவின் கொள்கைகள் சிரிப்பு வரவழைப்பனவாக இருக்கின்றன. ஆதரிக்கும் மாநிலங்களும் எதிர்க்கும் மாநிலங்களுமாக ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்குள்ளேயே கருத்து பேதம். பிரான்ஸிலோ மரபணுமாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் கொண்டு பாலாடைக்கட்டி தயாரிக்கலாமாம் ஆனால் பயிர் செய்யக் கூடாதாம். நாட்டின் முதுகெலும்பாம் கிரிக்கெட்டை முன்னேற்ற முற்படுவதால் இந்தியாவிற்கென கொள்கை வகுக்க எல்லாம் நம் சரத்பாவாருக்கு நேரமில்லை.

நல்ல தொழில் நுட்பம்தான். ஆனால் நான் கூறிய சில சிக்கல்கள் இருப்பதால் அந்தச் சிக்கல்களுக்கான விடைகளை அறிந்தால் நாம் நிச்சயம் இத்தொழில் நுட்பத்தின் பயனை முழுமையாக அடைய முடியும்.

மரபணுப் பரவலைத் தடுக்க வேண்டும். அதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிய வேண்டும். அந்த முயற்சிதான் "டெர்மினேட்டர் ஜீன்ஸ்". ஆனால் அதில் லாபமுயற்சியை புகுத்தியது வியாபார யுக்தி. மரபணுமாற்றப்பட்ட பயிர்கட்கும் மற்ற பயிர்கட்கும் இடை வெளி விடலாம்.

உணவாக மரபணுமாற்றப்பட்ட பயிர்களில் இருந்து பெறப்பட்டவைகளை உண்ணலாமா?

இது வரை யாருமே அதில் எந்த தீங்கும் உள்ளதாக நிருபணம் செய்யவில்லை. சீனாவின் சோயா பொருள்களையும், அமெரிக்காவின் சோயாவையும். மாட்டிறைச்சியையும் (மாடுகளுக்குத் தீவனமாக மரபணு மாற்றிய சோளம் கொடுக்கிறார்கள்), கனடாவின் கனோலா எண்ணெயையும் நீங்கள் உண்டிருந்தால் மரபணுமாற்றப்பட்ட தாவரப் பொருட்களை நீங்கள் உண்டதாகக் கொள்ளலாம்.

மெக்ஸிகோ நாட்டின் குற்றவியல் சட்டப்படி குற்றம் சாற்றப்பட்டவர், தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர் குற்றவாளிதான். அது போன்ற நிலையில்தான் இத்தொழில்நுட்பம் இருக்கிறது. விடைகள் வருமென நம்புவோம்.

mukilan
18-07-2008, 05:11 AM
தெளிவான விளக்கம் முகில்ஸ் அண்ணா..!

எனக்கு ஆங்காங்கே எழுந்த சந்தேகங்கள் எல்லாம் தாங்களே கேட்டு தெளிவாக்கிய பாங்கு மிகக் கச்சிதம்.

என் குட்டி மூளையில் ஏற்பட்ட சில சந்தேகங்கள்..

1.மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகளை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து வாங்கும் போது... மீண்டும் அடுத்து பயிருவதற்கு அவர்களிடமே கை ஏந்தும் நிலை வருமா?? அதாவது விதை உருவாகாத பயிர்..

மலட்டுத்தன்மையை வரவழைக்கும் அத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் "டெர்மினேட்டர் ஜீன்ஸ்" தொழில்நுட்பம். அத்தொழில் நுட்பத்தை இந்தியா இன்னமும் அனுமதிக்கவில்லை. இந்தியா மட்டுமல்ல எந்த நாடும் இதை அனுமதிக்கவில்லை. அனைவற்றுக்கும் மேலாக இத்தொழில் நுட்பத்தைக்கான காப்புரிமை வைத்துள்ள மான்சாண்ட்டோ எக்காலத்திலும் அத்தகைய தொழில் நுட்பத்தை வெளியிடாது என்று அறிவித்துள்ளது.

ஆனால் மரபணுமாற்ற விதைகளை விவசாயி எடுத்து வைத்துப் பயன் படுத்த முடியாது. அந்த தொழில்நுட்பத்திற்கான கட்டணமாக குறிப்பிட்ட தொகையை விதை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்(Technology User Agreement). கனடாவில் ஏக்கருக்கு $15.00.

ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் (கலப்பினப் பெருக்கம்) உருவான விதைகளை அடுத்த வருடம் விதைக்கும் பொழுது அந்த விதைகள் கலப்பினமாக இல்லாமல் சாதாரண விதைகளாகி விடுகின்றன. எனவே விளைச்சல் கடந்த வருடம் போல் இருக்காது. அதிக விளைச்சல் வேண்டுமென்பதாலேயே விவசாயிகள் அந்த விதை நிறுவனங்களை நாடுகிறார்கள்.



2. மரபணு மாற்றத்தால் உருவான பயிர்.. அதற்கான களைக் கொல்லி இப்படி எல்லாமும் சேர்ந்து.. ஒரு புதிய பல பூச்சியினங்களை அதாவது எல்லா எதிர்ப்புச் சக்தியையும் பெற்று உருவாகி வருவதாக சொல்கிறார்களே.. அது உண்மையா?

சற்றே மிகைப்படுத்தப்பட்டுள்ளது. கால காலமாக பூச்சிகளும், பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் தங்களைக் காத்துக்கொள்ள தங்களை மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பிரச்சினை இத்தொழில்நுட்பத்தினால் மட்டும் வந்ததல்ல. சொல்லப் போனால் அதீத பூச்சிக்கொல்லி உபயோகத்தினாலேயே வந்தது.



3. இப்போதெல்லாம் ஹைபிரிட் எனும் முறையில் பெருமளவு விளைவிக்கப்படும்.. பெரிய நெல்லிக்காய்(கசப்பான நெல்லிக்காய்) வெகு சில நாட்களிலேயே.. கெட்டுப் போய்விடுகிறதே..

இன்னும் சில காய்கறிகளுக்கும் இதே நிலை தான்.. சாதாரண காய்கறிகள் இருக்கும் வாழ்நாளை விட இவை குறைவான நாட்களே அழுகாமல் இருக்கிறது..

இதற்கு காரணம் என்ன முகில்ஸ் அண்ணா?

இன்னும் ஐயப்பாடோடு வருகிறேன். (நல்லா பூவிடம் மாட்டீட்டீங்க பாருங்க முகில்ஸ் அண்ணா.. :D:D)

உங்களின் இந்தத் தொடர்.. பல தெளிவான பார்வைகளை பலரிடம் ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. :)

ஆங்கிலத்தில் Shelf life எனச் சொல்லும் அந்தக் குணம் உயிர் வேதிப் பொருட்களின் பண்பைப் பொறுத்தது. மேம்படுத்தப்பட்ட பல காய்கறிகள் எல்லாம் முன்பை விட அதிக நாட்கள் தாங்கக் கூடியனவாகத்தான் இருக்கின்றன. அத்தகைய காய்கறிகளின் அளவு பெரியதாக இருக்கிறதல்லவா? அதனால் வேதிப்பொருட்களின் அமைப்பிலும் மாறுதல் இருக்கும். அந்த கூட்டுப் பொருள்கள் சிதைந்து எளிய தனிமங்களாக மாறுவதால் ஏற்படலாம் என்பது என் யூகம். ஏதேனும் விளக்கத்தோடு பின்னர் கொடுக்க முயல்கிறேன்.

தொடர்ந்து என்னுடன் வருவதற்கு நன்றி தங்கையே! உன் கேள்விகள் இத்தொடருக்கு மிகவும் பலம் சேர்க்கின்றன. மேலும் கேள்விகள் கேட்கலாம்.

பூமகள்
18-07-2008, 05:20 AM
தெளிவான விளக்கம் முகில்ஸ் அண்ணா... கடைசி கேள்விக்கு இன்னும் தெளிவாக விளக்கம் எதிர்பார்க்கிறேன்..

மலட்டுத்தன்மையை வரவழைக்கும் அத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் "டெர்மினேட்டர் ஜீன்ஸ்" தொழில்நுட்பம். அத்தொழில் நுட்பத்தை இந்தியா இன்னமும் அனுமதிக்கவில்லை. இந்தியா மட்டுமல்ல எந்த நாடும் இதை அனுமதிக்கவில்லை. அனைவற்றுக்கும் மேலாக இத்தொழில் நுட்பத்தைக்கான காப்புரிமை வைத்துள்ள மான்சாண்ட்டோ எக்காலத்திலும் அத்தகைய தொழில் நுட்பத்தை வெளியிடாது என்று அறிவித்துள்ளது.
இங்கு சில மாதங்கள் முன்பு..
அவ்வகை டெர்மினேட்டர் விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து பயிரிட வைத்த வேளாண் அலுவலகம் முன்பு.. போராட்டம் நடந்ததையும் செய்திகளின் மூலம் அறியப் பெற்றேன்..

(ஆராய்ச்சி நோக்கில் என்ற போர்வையோடு..)இந்தியாவிற்கு அவ்வகை விதைகள் வந்துவிட்டன முகில்ஸ் அண்ணா..

அப்போது.. விதைகளுக்கான விலை நிர்ணயம்.. அவ்வகை நிறுவனங்களிடம் மட்டுமே தான் இருக்கும்.. என்பது உண்மை தானே அண்ணா?

இதில் காப்புரிமையும் வாங்கியாகிவிட்டது..

"வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. யாருக்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி?" - என்ற கட்டபொம்மன் வசனங்கள் தான் நினைவுக்கு வருகிறது.

இன்னும் தெளிவாக்க கேள்விகள் தொடுக்க வருகிறேன் முகில்ஸ் ஜி.
நன்றிகளும் பாராட்டுகளும். :)

mukilan
18-07-2008, 03:41 PM
நானறிந்த வரையில் ஹைப்ரிட் காய்கறிகள் சாதாரண காய்கறிகளை விட அதிக நாட்கள் சிதையாமல் இருக்கக்கூடியன. காய்கறி கலப்பினப் பெருக்கத்தில் அதிக நாட்கள் இருக்கக்கூடிய தன்மை மிக முக்கியம்.

எப்படியாயினும் காய்கறிகள் சிதையக் காரணம் என்ன வாக இருக்கும்?

முதலில் காய்கறிகளில் அதிகப்படியான நீர் இருக்கிறது. பறிக்கப்பட்ட பின்னும் பழங்கள், காய்கறிகளின் செல்களில் சுவாசம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.மெல்ல மெல்ல சுவாசிக்கும் வேகமும் அளவும் குறைந்து விடும். மிகுந்த தண்ணீர் உள்ள ஒரு காய்கறியானது சுவாசிக்கும் பொழுது ஆக்ஸிஜன் ராடிகல்ஸ் அந்த உயிர்வேதிப் பொருட்களுடன் வினைபுரிதல் நடக்கும். அவ்வாறான வினைபுரிதலின் போது கூட்டு சர்க்கரைகள் எளிதான சர்க்கரையாக சிதைகின்றன (ஸ்டார்ச் என்பது கூட்டு சர்க்கரை, குளுகோஸ் என்பது எளிதான சர்க்கரை). அறை வெப்பத்தில் வைத்தால் இத்தகைய வேதிவினைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் முதலில் தண்ணீர் ஒரு வித இருக்கமான நிலையை அடைவதால் வேதி வினையின் வேகம் குறைக்கப் படுகிறது. அதனால் சிதைவுகள் தள்ளிப் போடப்படுகின்றன.

சூரிய வெப்பத்தில் காய வைப்பதன் மூலமும் தண்ணீர் ஆவியாக வெளியேற்றப் படுகிறது. அதனால் செல்களுக்குள் நடக்கும் வேதிவினைகளின் அளவு குறைக்கப் படுகிறது. அதனால்தான் வெயிலில் காய வைத்த தக்காளிகள், வெயிலில் காயவைத்த இறைச்சி (உப்புக் கண்டம், கருவாடு) ஆகியன நீண்ட நாட்கள் இருக்கின்றன.

ஆப்பிள் பழங்களின் மேல் மெழுகுப் பூச்சு பூசுவார்கள். அதன் மூலம் ஆப்பிளின் துளைகள் மூடப்பட்டு சுவாசம் நிறுத்தப் படும். அதனால் அந்தப் பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கும். நான் குறிப்பிட்ட மெழுகு, தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உண்ண ஏதுவான மெழுகுதான்.

பூமகள்
18-07-2008, 03:50 PM
ஆழ்ந்து ஆராய்ந்த பதில்..!!

அகம் நிறைந்தது முகில்ஸ் அண்ணா..

நன்றி கலந்த பாராட்டுகள்..!! :)

mukilan
18-07-2008, 03:57 PM
தெளிவான விளக்கம் முகில்ஸ் அண்ணா... கடைசி கேள்விக்கு இன்னும் தெளிவாக விளக்கம் எதிர்பார்க்கிறேன்..

இங்கு சில மாதங்கள் முன்பு..
அவ்வகை டெர்மினேட்டர் விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து பயிரிட வைத்த வேளாண் அலுவலகம் முன்பு.. போராட்டம் நடந்ததையும் செய்திகளின் மூலம் அறியப் பெற்றேன்..

(ஆராய்ச்சி நோக்கில் என்ற போர்வையோடு..)இந்தியாவிற்கு அவ்வகை விதைகள் வந்துவிட்டன முகில்ஸ் அண்ணா..




1999ம் ஆண்டிலேயே மான்சான்ட்டோ தனது டெர்மினேட்டர் ஜீன்ஸ் ஆராய்ச்சிகளை நிறுத்தி விட்டது. இந்தியாவில் நடந்த போராட்டங்கள் மரபணு மாற்றப் பட்ட பயிர்களை எதிர்த்துதான். டெர்மினேட்டர் ஜீன்ஸ் என்பது மரபணுமாற்றத் தொழில்நுட்பத்தோடு சேர்ந்ததுதான் என்றாலும் மலட்டுத்தன்மைக்கான எந்த காரணிகளும் இந்தியாவில் தற்போது பயிர்செய்யப்படு வரும் அல்லது ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் தாவரங்களில் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மரபணுமாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிக்கான அனுமதி இந்திய அரசின் உயிர்தொழில் நுட்பத் துறை கொடுக்க வேண்டும். என் அளவில் இந்தப் போராட்டங்கள் உணர்ச்சி வயப்பட்ட போராட்டங்களாகத்தான் கருதுகிறேன். உணர்ச்சி வசப்பட அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். தமிழக அரசில் (எல்லா மாநில அரசுகளிலும்) வேளாண்மை அலுவலர் என்ற பதவி இருக்கிறது. அவர்கள் வேலை செய்யாத அலுவலர்கள்தான். முதலில் ஒரு புதிய தொழில் நுட்பம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு தவறி விடுகிறது. பின்னர் இது போன்ற போராட்டங்களை தவறான தகவல்கள் கொடுத்து ஊதிப் பெரிதாக்கும் பொறுப்பற்ற ஊடகங்களும்.

மறுபடியும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். டெர்மினேட்டர் ஆராய்ச்சிகள் எங்குமே நடக்கவில்லை... இந்தியா உட்பட.

இளசு
20-07-2008, 07:26 AM
அன்பு முகிலன்

இந்த பாகம் மிகச் சிறப்பாகவும்..
பின்னூட்டங்கள் அதற்கான உன் மேல்விளக்கங்கள் என ஆழமாகவும்...

என் அன்பும் வாழ்த்தும்..

ஆதியன் வேரைப் பிடுங்கி அப்படியே உண்டான் -
அதில் இல்லாத நுண்ணுயிரிகளா?

10 பில்லியன் செல்களால் கட்டப்பட்ட உடம்பு = மனிதன்
அந்த மனிதனுக்குள் இருக்கும் குடல் பாக்டிரீயாக்கள் தொகை = 100 பில்லியன்..

மனிதனுக்குள் பாக்டீரியாவா?
பாக்டீரீயாவை ஒட்டிச் சுற்றி மனிதனா?

இந்த ட்ரில்லியன் பாக்டிரியா என்பது கடல்..
அதில் உணவு பாக்டீரியா என்பது கை உப்பு..

தப்பான உப்பு என்றாலும் - வயிற்று அமிலத்துக்குத் தப்புமா?
தப்பி கலந்தாலும், அதனால் கடல் தன்மை மாறுமா?

எத்தனை நுட்பமான கேள்வி!
விடை - கடினம்..
நீண்ட நாள் அவதானம் மட்டுமே விடை தரும்..

----------------------------------

இயற்கையை மிஞ்சிய சோதனையாளன் இல்லை!
வேப்பம்புண்ணாக்கையும் கபளீகரம் செய்ய பயிர்ப்பூச்சிகளுக்கு வரம் அளிக்கும் விநோத விஞ்ஞானி - இயற்கை!

இயற்கையுடன் போட்டி போட்டு மனிதன் செயற்கையாய்
அதை ஒட்டியும் மாற்றியும் செய்த சோதனைகள் ஒன்றா இரண்டா..

இயற்கை அளித்த ஈர்ப்பு சக்தியை வெல்ல நினைக்கவில்லையா?

இயற்கை உணவின் வாழ்க்கை - சில நாள்!
கருவாடும், உப்புக்கண்டமும், காய்ந்த காயும், ஊறிய காயும் -
நீடித்து இருக்க வைக்க நாம் செய்த சோதனைகள்.. வென்றோம்.

குளிரூட்டி, உறையவைத்து இன்னும் நீட்டினோம் - வென்றோம்.

மரபணு மாற்றி அடிப்படையையே நமக்கு வசதியாய்ச் ''செப்பனிடும்'' மகா முயற்சி - மரபணு மாற்றம்..

என்னைப்போன்ற பாமரர்களின் நிலை -
காமிக்ஸ் வில்லன்கள் போல் இந்த ஆயுதம்
பொறுப்பற்ற வில்லன்களிடம் உள்ளது போலவும்
உணர்ச்சிமய பொதுமக்கள் போராட்டம் - நாயக பாவத்திலும்
ஊடகங்கள் சித்தரிக்க
இந்த ''மாற்றப்பட்ட'' ஊடக உணவை தினமும் உண்டு கொதிப்பதுதான்!

உண்மைகளை உரக்கச் சொல்லி ஒரு ஊரில் நிலைக்க வைப்பதற்குள்
பொய்ப்பந்தல் உலகம் முழுதும் தானே படர்ந்து அடர்ந்து விடுகிறது..

தொடரட்டும் உன் நற்பணி..

சிவா.ஜி
20-07-2008, 10:47 AM
பதித்ததுமே வாசித்துவிட்டேன். இன்னும் உள்வாங்கிக்கொள்ள மீண்டும் படித்தேன். தெரியத் தெரிய ஆச்சர்யமும் பல கேள்விகளும் எழுகிறது. அதற்குத் தகுந்தார்போல நம் உறவுகளால் இங்கு பல கேள்விகளும் கேட்கப்பட்டன. அதற்கான விளக்கங்கள் இன்னுமோர் கட்டுரையாய் பிரகாசிக்கிறது.

ஆப்பிளின்மேல் பூசப்படும் மெழுகை நாம் சாதாரணமாய் உபயோகிக்கும் மெழுகென்றே இதுநாள்வரை நினைத்திருந்தேன். அது தாவர மெழுகுதான் என்று நீங்கள் சொல்லியிருப்பது புதிய மற்றும் ஆறுதலான செய்தி. இந்த மெழுகை உட்கொள்வதால் எந்த விபரீதமும் இல்லையா முகிலன்? பிறகு ஏன் தொலைக்காட்சி செய்திகள் உட்பட இவற்றை ஆபத்தானவையாகவே காண்பிக்கிறார்கள்?

இந்த அருமையான கட்டுரையை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் நீங்கள். நிச்சயம் அற்புதமானதொரு புத்தகமாய் இருக்கும்.

தெரியாதவைகளைத் தெரியவைத்துத் தெளிவாக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், மனம் நிறைந்த வாழ்த்துகளும்.

பாரதி
05-10-2008, 06:23 PM
அன்பு முகிலன்,

இன்று மீண்டும் பொறுமையாக நான்கு பகுதிகளையும் வாசித்தேன். மிகவும் நன்று. நான் முன்பே வேண்டுகோள் விடுத்ததைப் போல நான்கு பகுதிகளையும் பி.டி.எஃப் கோப்பாக மாற்றி நண்பர்களுக்கு அனுப்ப உங்கள் அனுமதி தேவை.

மேலும் இந்தத் தொடரை தொடருமாறும் வேண்டுகிறேன்.

உங்கள் அரிய பணிக்கு மிகவும் நன்றி.

mukilan
06-10-2008, 02:34 PM
அண்ணா இதற்கெல்லாம் என் அனுமதியா?

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதில் எனக்கு மிகுந்த சந்தோசம். தொடர்கிறேன்.

பாரதி
06-10-2008, 03:18 PM
மிக்க நன்றி முகில். நமது கூகிள் குழு நண்பர்களுக்கும் இதை அனுப்புகிறேன்.

தொடரட்டும் உங்கள் தொண்டு.

இளசு
17-10-2008, 08:30 PM
தொகுப்பு கிடைத்தது பாரதி.. பணிக்கு நன்றி..

முகிலனுக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக் கொத்து!