PDA

View Full Version : மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-3



mukilan
16-07-2008, 02:56 AM
மரபணுமாற்றத் தொழில்நுட்பம்

சென்ற பகுதியில் காலம் காலமாகச் செய்து வரப்படும் கலப்பினப் பெருக்கம் பற்றிக் கண்டோம். கலப்பினப் பெருக்கத்தாலேயே எல்லா நன்மைகளையும் அடைய முடியாதா? மரபணுமாற்றத்திற்கான தேவை என்ன?

1) கலப்பினப் பெருக்கம் செய்வதற்கு ஆண்டுகள் பல ஆகும். சுமார் 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆகும்.

2) தேவையான அனைத்துப் பண்புகளும் நெருங்கிய சிற்றினங்களிலேயே (Species) கிடைத்து விடுவதில்லை.

3) வேறு சிற்றினத்தில் அல்லது தூரத்து உறவினர்களிடம் இருந்து (Distant relates species)இருந்து மரபணுக்களை மாற்ற வேண்டுமாயின் அந்தச் சிற்றினத்தின் மகரந்தம் நாம் மேம்படுத்த நினைக்கும் சிற்றினத்தின் சூலகத்தை கருவுறச் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

4) அவ்வாறான சிக்கல்களை கடந்து நாம் நினைப்பதை அடைய கருவினை மீட்டுக் காத்தல் வேண்டும் (Embryo Rescue). அதற்கு நிறைய பொருள், மனித வளம், நேரம் செலவாகும்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய கரு மீட்டுக் காத்தல் தொழில்நுட்பத்தினால்தான் உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தாவரம் உருவானது. கோதுமையையும் "ரை" எனப்படும் மற்றொரு தானியத்தையும் கலப்பினப் பெருக்கம் செய்ததில் உருவானதுதான் ட்ரிட்டிக்கேல் (Triticale)

5. மிக முக்கியமாக வேறொரு உயிரினத்தில்(பாக்டீரியா, ஜெல்லி மீன்) உள்ள மரபணுக்களை தாவரங்களில் புகுத்த கலப்பின முறையால் முடியாது!

ஏன் வேறொரு உயிரினத்தில் இருந்து தாவரத்திற்கு மரபணுவை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? சொல்கிறேன்.

பருத்தி உற்பத்தியினை காய்ப்புழுக்கள் (Boll worms) அடியோடு அழிக்கக் கூடிய சாத்தியம் உண்டு.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/ABWirrigted_cot.jpg
காய்ப்புழுவினைக் கட்டுப்படுத்த குடம் குடமாகப் பூச்சிக்கொல்லிகளை (பூச்சி மருந்து என்ற பதம் வெகுநாட்களாகவே தவறாகப் பயன் படுத்தப் படுகிறது. அது உண்மையிலே பூச்சியைக் கொல்லும் நச்சு) தெளிக்க வேண்டும். அப்படியும் விட்டேனா பார் எனச் சில காய்ப்புழுக்கள் டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படி தன் உடலமைப்பில் சில மாறுதல் களைச் செய்து கொண்டு அந்தப் பூச்சிக்கொல்லிகளை ஏதோ கொக்கோ-கோலா குடிப்பது போல குடித்து கும்மாளமிட ஆரம்பித்தன. இயற்கையாகவே மண்ணில் காணப்படும் பாக்டீரியா பாஸில்லஸ் துருண்ஜியன்ஸிஸ்- Bacillus thurungiensis. செல்லமாக BT. இந்த பாக்டீரியாக்கள் சுரக்கும் ஒருவித புரதம் அந்தக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்(கொல்லும்). இதைக் கவனித்த பூச்சியியல்(Entomology) வல்லுனர்கள் அந்தப் புரதச் சுரப்புக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்தனர்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/GM-crop.gif
இந்த மரபணு தாவர மரபணுவுடன் ஒட்டிக்கொண்டால் அந்தத் தாவரமும் குறிப்பிட்ட அந்தப் புரதத்தைச் சுரக்கும் அல்லவா?. பணம் மிச்சமாகும். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்கேடு இல்லை. இது இயற்கையாகவே உள்ள புரதம் என்பதால் பூச்சிகளால் அவ்வளவு எளிதாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியாது(பூச்சிகள் அப்படியும் எதிர்த்து நின்றது பின்னர் நடந்த கதை). பருத்தியின் காய்ப்புழு பிரச்சினை மட்டுமல்ல. களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் (Herbicide resistance), வைட்டமின் சத்து கொண்ட அரிசி( தங்க அரிசி- Golden rice), வாடாமல் இருக்கும் தக்காளி (Flavr Savr Tomato) போன்ற இன்னபிற விடயங்களைச் சமாளிக்கவும் பிற உயிரினங்கள் மரபணுக்களைக் கொண்டிருந்தன.

சரி இந்த மரபணுக்களை எப்படித் தாவர மரபணுவுக்குள் ஒட்ட வைப்பது?. அங்கேதான் முதன் முதலாக மரபணுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பாக்டீரியாவின் குரோமோசோம் டி. என்.ஏ வட்டமாகவோ அல்லது நீளமாகவோ (ஒற்றைக் கம்பி போல) இருக்கும்.அது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்கள் Ti-பிளாஸ்மிட் எனப்படும் குரோமோசோம் சாராத டி.என்.ஏக்களையும்(ஆம் ஒன்றுக்கும் மேல்) கொண்டிருக்கும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/320px-Plasmid_englishsvg.png
இந்த பிளாஸ்மிட் தன்னிச்சையாகவே பெருக்கிக் கொள்ளும் ஒரு அபூர்வத் திறன் கொண்டது. இந்த பிளாஸ்மிட்களை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதற்கும் பல வழிகள் இருக்கின்றன். பிளாஸ்மிடை மட்டும் தவிர்த்து விட்டு பாக்டீரியாவின் செல்லை கரைக்க பல வேதிப் பொருட்கள் இருக்கின்றன.இந்தப் பிளாஸ்மிட்கள்தான் நமக்கு வேண்டிய மரபணுவைச் சுமந்து மற்றுமொரு பாக்டீரியாவுக்குள் கொண்ட செல்லும் வாகனம்(Vector).

அதே போன்று நமக்கு வேண்டிய மரபணு தரும் பாக்டீரியாவில், பாக்டீரியாவின் செல்லில் உள்ள மற்ற பொருட்களை வேதிப்பொருள் கொண்டு கரைத்து அதன் டி.என்.ஏவை மட்டும் தனியாக எடுக்க இயலும்.

சரி நம்மிடையே இப்பொழுது நமக்குத் தேவையான மரபணு தரும் டி.என்.ஏ இருக்கிறது. அதை சுமந்து செல்ல வாகனம் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தால் மற்றுமொரு பாக்டீரியாவின் தோலைக் கிழித்து உட்புகமுடியுமே தவிர தாவர செல்லின் தடித்த சுவற்றினை ஒன்றும் செய்ய முடியாதே!. அப்படியானால் அதை தாவரத்திற்குள் சுமந்து செல்வது யார்?

விடுவானா மனிதன்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டாயிற்று. அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் (Agrobacterium tumifaciens) எனப்படும் ஒரு பாக்டீரியா தாவரச் செல்லின் சுவற்றைத் துளைத்து உட்புக முடியும். ஆனால் அது எந்த இடத்தில் தாவரத்தின் உட்புகுகிறதோ அந்த இடத்தில் ஒரு பெரிய கட்டி போன்ற வீக்கம் (Crown gall) ஏற்படும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Gall.jpg
அது நமக்குத் தேவையில்லாத குணமாயிற்றே? விட்டு விடுவோமா? கட்டிக்கு காரணமான அந்த மரபணுவைக் கண்டறிந்து அதை நீக்கம் செய்து விட்டோம்!

ஆமாம் நான் அடிக்கடி சொல்கிறேனே வெட்டுவது! ஒட்டுவது என்று? அது எப்படி? அதற்கும் வழி கண்ட விடாக்கண்டர்களல்லவா நாம். ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் அல்லவா? அந்த ....ATGCGCTTAGGTAG.... என்ற டி. என். ஏ அமைப்பு. அதில் CGCTTAGG மட்டும் ஒரு குறிப்பிட்ட பண்பிற்குக் காரணமாய் இருக்கும். அதை மட்டும் வெட்டலாம். மற்றொரு இடத்தில் கொண்டு ஒட்டலாம். அதற்கு Restriction Endonucleases எனப்படும் ஒரு புரதம் உதவுகிறது. A க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை. G க்கும் Tக்கும் இடையில் வெட்ட ஒரு வகை என அதில் பலவகை. அதை மரபணுக் கத்திரிக்கோல் எனச் சொன்னாலும் பொருந்தும். வெட்டுவதற்கும் அதுதான் ஒட்டுவதற்கும் அதுதான்.

இப்பொழுது நமது மரபணுக் கத்திரிக்கோல் கொண்டு நம் வாகனம் பிளாஸ்மிட்டில் ஒரு வெட்டு. தேவையான நமது மரபணு ஆரம்பத்தில் பார்த்தோமே BT அதையும் தனியாக வெட்டு. இப்பொழுது பிளாஸ்மிட்டையும் மரபணுவையும் ஒட்டு! இப்படிச் சேர்த்த நமது வாகனம் அக்ரோபேக்டீரியம் டூமிஃபேசியன்ஸ் வரை மட்டும்தான். அதன் பின்னர் இந்தப் பாக்டீரியா கொண்டு தாவரத்தின் செல்லின் உள் புகச் சொல்லலாம். அப்படி உட்புகுந்ததும் இந்தப் பிளாஸ்மிட்டுடன் சேர்ந்த நமக்கு விருப்பமான மரபணு தனியாக கழன்று கொண்டு தாவரத்தின் டி.என். ஏவுடன் ஒட்டிக் கொள்ளும். அதற்கும் வழி இருக்கிறது.இப்படியாக பாக்டீரியாவின் மரபணு தாவர செல்லின் மரபணுவிற்குள் செலுத்தியாகிவிட்டது. நாம் எதிர்பார்த்த பண்பு வந்து விட்டதா என சோதனை செய்ய வேண்டும். சோதித்த வெற்றி அடைந்த செல்களை சேகரிக்கலாம். முறையான உணவு மற்றும் சூழல் அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு தாவர செல்லுக்கும் ஒரு முழுமையான செடியாக உருவாகக் கூடிய திறன் இருக்கிறது. அதற்கு ஆங்கிலத்தில் Totipotency எனப்பெயர். அந்தக் குணத்தின் படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட செல் திசு வளர்ப்பு முறையில் (Tissue culture) முழுச் செடியாக உருவெடுக்கிறது.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/1929223432.jpg
பின்னர் அந்தச் செடி ஆய்வகத்தில் இருந்து மெதுவாக இயல்பான வளர்ச்சி சூழலுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட செடிகளின் விதைகள் கொண்டு விளைநிலங்களில் பயிரிடப்படுகின்றன.மரபணுமாற்றத் தொழில் நுட்பத்தின் எளிய விளக்கப்படம் கீழே!
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/plasmidexpression.gif
இன்று சற்று நீண்ட பதிவாகப் பதிவிட வேண்டிய அவசியம். ஒரு தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் என்பதால் அதைப்பற்றி முழுமையாகக் கொடுக்க முனைந்தேன். கேள்விகள் இருந்தால் விளக்கச் சித்தமாயிருக்கிறேன்.:icon_b:

--வளரும்:icon_rollout:

SathyaThirunavukkarasu
16-07-2008, 03:38 AM
தொடர் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது
வாழ்த்துக்கள்!! தொடருங்கள்!!

mukilan
16-07-2008, 03:43 AM
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சத்யா திருநாவுக்கரசு அவர்களே! இப்பயணத்தில் தொடர்ந்து வாருங்கள்.

சிவா.ஜி
16-07-2008, 06:39 AM
மரபணு மாற்றப் பயணத்தில் அடுத்த கட்டம். நிறைய அறிவியல் விஷயங்களை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அதுவும் தெளிவாக. புரிந்துகொள்ள ஏதுவாக....எல்லாவற்றிற்கும் மேலாக சுவையாக....இப்படி அனைத்து "ஆக"க்களையும் ஆஹாவாக அளிக்கும் மூகிலனின் எழுத்துக்கு என் வந்தனங்கள். படித்தேன், தெளிந்தேன், பரவசமானேன். நன்றி முகிலன்.

இளசு
16-07-2008, 07:02 AM
அன்பு முகில்ஸ்..

இந்த அளவுக்காவது நீளம் இந்த பாகத்துக்கு அவசியமே!

இந்த பாகத்திலும் விஞ்சி விட்டாய் - உன் விளக்கும் திறன் மெய்மறக்க வைக்கிறது முகிலா..

பின் ஒரு காலத்தில் இன்சுலின் தட்டுப்பாடு ( பசு,பன்றி கொல்லாமல்)
செயற்கை முறையில் எப்படி சமாளிக்கப்பட்டது என விளக்க வந்தால்,
இக்கட்டுரையினை சுட்டிக்காட்டி எளிதாய் விளக்கலாம்..இல்லையா?

ஸ்ப்ளைசிங் -( Splicing)ஐ நீ விளக்கிய விதமே ஒரு பானை சோற்றுக்குப் பதம்!

ப்ளாஸ்மிட்கள் - நல்லர்களா கெட்டவர்களா? பாதிப் பாதி..

ஆண்டிபயாடிக் எதிர்ப்பை நோய்க்கிருமிகள் உருவாக்கி, காத்துக்கொள்வதும்
இந்த பிளாஸ்மிட்களால் அல்லவா?

அடித்தளம் உறுதியாய் அமைத்ததால் மீதிக் கட்(டடம்)டுரை
மிக நல்லபடி எழும்பும் என நம்பிக்கை முழுதாகிவிட்டது.

படங்களும், கலைச்சொல் தூவிய உன் தமிழுமாய் -
கண்படும் எனும் அளவுக்கு களைகொஞ்சும் பதிவு!

வாழ்த்துகள்... வாழ்த்துகள்!

பூமகள்
16-07-2008, 07:36 AM
படிக்கும் போது சோர்வு எழுந்தால் சின்ன பதிவும் நீளமாக தெரியும்.. உங்கள் பதிவுகள் எப்போதுமே.. அவ்விதம் அமைவதில்லை..

ஆங்காங்கே... சுவையோடு கொக்கோ கோலா குடிக்கும் பாக்டீரியா என கலாய்த்து எழுதியது ரசிக்க வைத்தது.. அறிவியலை இத்தனை சுவையாக வேறு யார் கொடுக்க இயலும்??!!

பாக்டீரியாவின் டி.என்.ஏ உட்புகுத்திய தாவரமா??!! :eek::eek:

திசு வளர்ப்பு முறை பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன்.. இன்னும் கற்க முதல் பென்ச்சில் அமர்ந்திருக்கிறேன்...

சீக்கிரம் அடுத்த பாடத்தோடு வாருங்கள் முகில்ஸ் அண்ணா...!!

பொக்கிசமாக பாதுகாக்க வேண்டிய படைப்பு. :)
வாழ்த்துகளும் பாராட்டுகளும் முகில்ஸ் அண்ணா.

mukilan
16-07-2008, 05:21 PM
நன்றி சிவா அண்ணலே. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என சிறு விளக்கமளித்தால் தானே விவாதிக்க ஏதுவாக இருக்கும். உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் வந்தனங்கள்.

அன்பு இளசு அண்ணா.. நான் அறிவியல் கட்டுரை எழுத ஊக்கம் பெற்றது உங்கள் அறிவியல் மைந்தர்களிடம் இருந்து அல்லவா? படங்களும் எளிய விளக்கங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நான் செய்ததெல்லாம் பல இடங்களில் சேகரித்த அந்தத் தகவல்களை குறுக்கி தமிழில் கொடுத்ததுதான். ஆதரவிற்கு நீங்கள் எல்லாம் இருக்க என்னால் முடிந்ததைக் கொடுக்கிறேன்.

பாசமிகு தங்கை பாமகள். தொடர்ந்து நீ தரும் உற்சாகத்திற்கு நன்றி. ஆனால் நான் செல்லமாகக் குட்ட வேண்டிய நேரமோ? ஒரு வேளை எல்.கே.ஜி. கடைசிப் பெஞ்ச் டெரர் குரூப் தொந்தரவு செய்தார்களோ? :eek: கொக்கோ கோலா குடித்தது யார் என மறுபடியும் பார்க்கவும்.
ச்சும்ம்மா...:D:D

உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

இளசு
16-07-2008, 05:30 PM
அன்பு முகில்ஸ்,

முழுமையான பின்னே -

விகடன் போன்ற பிரபல இதழ்களுக்கு இத்தொடரை நீ அனுப்ப நான் விரும்புகிறேன்...

பென்ஸ்
17-07-2008, 02:57 AM
முகில்ஸ்... வழக்கம் போல கச்சேரி அமர்களம்....

அதில் இளசுவின் தாளமும்....

முழுவதும் வரி விடாமல் வாசித்து வருகிறேன்....

mukilan
17-07-2008, 03:03 AM
பென்ஸ் உங்களின் வருகைக்கும் ஆதரவான விமர்சனத்திற்கும் நன்றி. கச்சேரி கேட்கவந்தவர் சுப்புடு போல கிழி கிழியென்று கிழிக்கலாம்:D:D

பென்ஸ்
17-07-2008, 03:11 AM
இதில் கிழிக்க எதுவுமில்லை.... மனதில் ஒட்டிவிட்டதே.

வகுப்பில் அதிகம் கேள்வி கேட்க்கும் மாணவன் நான்.
ஆனால் கேள்விகள் பாடம் புரியாத போது மட்டுமே கனையாய் வரும்....

பள்ளியில் படிக்கும் போது நான் பாடத்தை ரசித்து படித்தவன் அல்ல...
மனப்பாடம் செய்ய சொல்லி கொடுத்தவர்கள், ஏன்.. எதனால் என்று சொல்லி கொடுக்கவில்லை.
புரியாததை படிக்கவும் விரும்பவில்லை.

அன்று விட்டதை, அன்றும் படிக்கமுடியாததை இன்று படித்து தெரிந்து கொள்வது எத்தனை பாக்கியம்....

நாம் ஒவ்வொருவரும் குருவாக, மாணவனாக மாறி, மாறி படிக்கும், பாடம் எடுக்கும் போது... நமது பள்ளியிலும் இதுபோல் நல்ல விளக்கவுரையில் பாடம் சொல்லும் நாள் என்று வரும் என்ற ஏக்கம் மட்டுமே.....

இங்கு நான் உங்கள் மாணவன்.. சொல்லி தாருங்கள், மகிழ்ச்சியோடு தெரிந்து கொள்கிறேன்... சந்தேகம் வரும் போது கேள்வியோடு வருகிறேன்....

mukilan
17-07-2008, 04:37 AM
இதில் கிழிக்க எதுவுமில்லை.... மனதில் ஒட்டிவிட்டதே.
உங்கள் சொல்லாடலை மிகவும் ரசித்தேன் பென்ஸ்.:icon_b:



நாம் ஒவ்வொருவரும் குருவாக, மாணவனாக மாறி, மாறி படிக்கும், பாடம் எடுக்கும் போது... நமது பள்ளியிலும் இதுபோல் நல்ல விளக்கவுரையில் பாடம் சொல்லும் நாள் என்று வரும் என்ற ஏக்கம் மட்டுமே.....

இதுதான் உண்மை பென்ஸ். எனக்கு தெரிந்ததை சொல்லித்தருவதற்கும் தெரியாததை அறிந்து கொள்வதற்கும் மன்றம் சிறந்த களமாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய முயற்சியின் போதும் ஏகப்பட்ட சந்தேகங்களுடனும், தயக்கத்துடன் ஆரம்பிக்கிறேன். ஆனால் அதைப் படித்து விமர்சிக்கும் நம் நண்பர்களின் பின்னூட்டங்கள் கண்டால் நான் நினைத்தது ஒரு வகையில் நடந்து கொண்டிருப்பது கண்டு ஆனந்தப் படுகிறேன். அடுத்து நம்மிடையே என்ன எதிர்பார்க்கிறார்கள் என மேலோட்டமாகவது எனக்குப் பிடிபட ஆரம்பித்திருக்கிறது. வெகுஜன ஊடகங்களின் வாசகர் வட்டம் மிகப் பரந்து விரிந்தது என்பதாலும், மன்றத்து வாசகர்கள் பலர் நம் நண்பர்கள் என்பதாலும் வாசகர்களின் நாடி பிடித்துப் பார்த்தல் மன்றத்தில் மட்டுமே சாத்தியம்.

அனைவருக்கும் என் நன்றி. அடுத்தடுத்த பகுதிகள் விவாதப் பகுதிகளாக இருக்க வேண்டுமென எண்ணுகிறேன். பார்க்கலாம்.

பூமகள்
17-07-2008, 11:09 AM
ஆனால் நான் செல்லமாகக் குட்ட வேண்டிய நேரமோ? கொக்கோ கோலா குடித்தது யார் என மறுபடியும் பார்க்கவும்.
ச்சும்ம்மா...:D:D
:traurig001::traurig001:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. குட்டு வலிக்குதுனா...:icon_ush::frown:
காய்ப்புழு பண்ணின அலிச்சாட்டியத்தை பாக்டீரியா அண்ணாத்தே மேல போட்டுட்டேன்.. பாவம்... என் மேல கோவிச்சிக்க போகுது... பாக்டீரியா.. :icon_ush:
இனி கவனமா கவனிக்கிறேன் அண்ணா... ஆன குட்ட மட்டும் செய்யாதீங்க.. பாருங்க.. இப்பவே பெரியண்ணா உங்க காதை திருக வர்றாரு...!! :D:D

சுட்டி குட்டியமைக்கு நன்றி முகில்ஸ் அண்ணா.:)

தீபா
17-07-2008, 02:17 PM
பொறுமையாகப் படித்து பல தெளிந்தேன்.

ஒரு சந்தேகம். ரோஜாவுக்கு விதை இல்லை என்றூ கேள்விப்பட்டேன் உண்மையா?

mukilan
17-07-2008, 03:00 PM
பொறுமையாகப் படித்து பல தெளிந்தேன்.

ஒரு சந்தேகம். ரோஜாவுக்கு விதை இல்லை என்றூ கேள்விப்பட்டேன் உண்மையா?

ரோஜாச் செடியால் பழங்கள் கொடுக்கவும் விதை உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் சந்தைப் படுத்தப் படும் பொருளாக பூக்கள் இருப்பதால் நாம் ரோஜாவினை காய், கனி எனக் காண விரும்புவதில்லை. ஆனால் முக்கிய காரணம் இதுவல்ல.

ரோஜாவின் விதைகளை முளைவிப்பது அதிகச் சிரமங்களைக் கொண்டது. அதன் விதைகள் மிகச் சிறியதாக இருக்கும். அதை மண்ணில் தூவி விதைத்து விட்டு செடி முளைக்கும் என் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான். விதைகளுக்கு மெல்லிய ஈரப்பதம் மட்டும் போதும். அவை முளைத்து சின்னதாக முளை விடும்பொழுது மிக மெல்லிய அந்தச் செடிகளைக் கவனமாக மண்ணிற்கு மாற்றி அறை வெப்பத்தில் வளர்க்க வேண்டும். அப்படியும் பல முறை மண்ணை மாற்ற வேண்டிய சூழல். ஒவ்வொரு முறை மாற்றி நடும் பொழுதும் அந்தச் செடி ஒருவித அதிர்ச்சியை தாங்கி வளர வேண்டி இருப்பதால் பல நேரங்களில் இறந்து போக வாய்ப்புகள் அதிகம்.

மரபியல் ரீதியான காரணம். குறிப்பிட்ட ஒரு ரோஜா ரகத்தின் விதைகள் அந்த ரகத்தைச் சார்ந்த செடிகளை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது அந்த ரகத்திற்கான அத்துனை குணங்களோடும் இருப்பதில்லை. நிறம் மாறலாம், மணம் மாறலாம். ஏன் மாறுகிறது என்பதை விளக்க இன்னொரு திரிதான் துவக்க வேண்டும். :D:D

ஆனால் ஒட்டுக்கட்டும் முறையிலோ, அந்தச் சிக்கல் இல்லை. மரபணுக் கட்டமைப்பு அப்படியே இருக்கும். சிறிதளவும் மாறாது.

மேற்கூறிய காரணங்களால்தான் பெரும்பாலான தோட்டக்கலைப் பயிர்கள் ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல் போன்ற முறைகளினாலேயே பெருக்கம் செய்யப் படுகின்றன.

உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி தென்றல்.

பாரதி
17-07-2008, 03:07 PM
அன்பு முகில்ஸ்,

முழுமையான பின்னே -

விகடன் போன்ற பிரபல இதழ்களுக்கு இத்தொடரை நீ அனுப்ப நான் விரும்புகிறேன்...

என் எண்ணம் அண்ணனின் வார்த்தைகளில்....!!!!!

மிகவும் அருமை முகில். தொடருங்கள்.

mukilan
17-07-2008, 03:13 PM
அன்பு காட்டிய என் இரு அண்ணல்களுக்கும் நன்றி!

ஆனந்த விகடன் போன்ற வர்த்தக ரீதியான பொதுஜன ஊடகத்திற்கு இதை வெளியிட என்ன அவசியம் இருக்கும் அண்ணா?

அதோடு மட்டுமில்லாமல் பரந்த வாசகர் வட்டத்தைச் சேரும் வகையில் என் தொடர்கள் இல்லையென்பது என் கருத்து. என் மீதுள்ள அன்பின் மிகுதியால் உங்களுக்கு என் குறைகள் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.

மீண்டும் உங்கள் அன்புக்குத் தலை வணங்குகின்றேன்.

பாரதி
17-07-2008, 03:35 PM
அன்பு முகில்...

முக்கிய தகவல்கள் சுவாரசியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத்தொடர் நீங்கள் விரும்பியபடி முழுமை பெறட்டும். அதன்பின் நீங்கள் அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது ஒரு புறமிருக்க, இதை கோப்பாக்கி, இணைய நண்பர்களுக்கு வழங்க உங்கள் அனுமதி வேண்டும்.

நீங்கள் கற்றதை மன்ற உறவுகளுக்கும் கற்றுத்தரவேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு முன்னர் எங்களின் வார்த்தைகள் வசமிழந்து போகின்றன.

தொடரட்டும் மாற்றம்!

mukilan
17-07-2008, 03:53 PM
இதற்கெல்லாம் என் அனுமதி எதற்கு அண்ணா? இத்தொடரால் யாருக்கேனும் பயன் இருக்கும் என்றால் அதனால் நான் மிகவும் மனம் மகிழ்கிறேன்.