PDA

View Full Version : காமராசர்: கவிஞர்களின் பார்வையில்..ராஜா
15-07-2008, 07:13 AM
கவிஞர் மு. மேத்தா

ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்…
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!

நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுந்திருக்கும்!

நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.
நிஜத்தைச் சொல்லுகிறேன்
நேரு குடும்பத்தின் மீது நீ
பாசம் வைத்திருத்திருந்தால்
இந்தியாவின் பாரிணாமமே வேறு!

கருப்புதான் நீயும்…
கருப்புக் காந்தி!
மகாத்மா காந்தியோ
சிரிக்கும் நெருப்பு.

நீ
சிரிக்கத் தெரியாத
நெருப்பு.
அந்த நெருப்பு
திருநீறாகி விட்டது.
உன் சாம்பலுக்குள்ளும்
தணல் தகிக்கிறது.

பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
‘பச்சைத் தமிழன்’ எனும்
பட்டம் பெற்றவனே!

இன்று நீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்த தமழர்களைக்
கண்டித்திருப்பாய்!

இன உணர்வு
தமிழனுக்கு இருந்திருந்தால்
இந்தியாவின் ஸ்டாலினாய்
இருந்திருக்க வேண்டியவன் நீ!

மணி முடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால் நீ
காளிக்குத்
தலையை வெட்டித் தந்த
கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!

ராஜா
15-07-2008, 07:15 AM
கவிஞர் பா. விஜய்


காமராஜர்!

இந்திய அரசியலில்
தமிழனின் ஒரே ஒரு
தலைக்கிரீடம்!

கருப்பு மனிதன்
ஆனால்
வெள்ளை மனம்!

கதர்ச் சட்டை அணிந்து வந்த
கங்கை நதி!
செங்கோட்டை வரை பாய்ந்த
திருநெல்வேலி தீ!
ஆறடி உயர
மெழுகுவர்த்தி!

பாமரன்தான்
ஆனால் இந்தப் பாமரனின்
ஆட்காட்டி விரலுக்குள்
பிரதமர்களை உருவாக்கும்
பிரவாகம் இருந்தது.!

படிக்காதவர் தான்!
ஆனால் இந்தப் பட்டமில்லாதவரின்
அகத்துக்குள் இருந்தது
ஒரு பல்கலைக் கழகத்தின்
அறிவு!

இந்த நூற்றாண்டில்
சராசரி மனிதனாலும்
சந்திக்க முடிந்த
ஒரே ஒரு முதலமைச்சர்!

இந்திய அரசியல் கப்பல்
கரை தெரியாமல்
கதிகலங்கிய போது
தமிழகத்தில் தோன்றிய
கதர்ச்சட்டை
கலங்கரை விளக்கம்!

காமராஜர்!

கடவுளுக்காக வாதம் நடந்த
காலகட்டத்தில்
மக்களுக்காக வாதம் செய்த
முதல் வக்கீல்!

முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த
காவல் துறை மத்தியில்
பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த
முதல் போலீஸ்!

ஓட்டு வேட்டைக்காக
உழைத்த
அரசியல் வாதிகளுக்கு மத்தியில்
மக்களின்
ஓட்டு வீடுகளுக்காக உழைத்த
முதல் அரசியல்வாதி!

மூன்று வேட்டி சட்டை
முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும்
வாழ்ந்து முடித்து விட்ட
முதல் ஏழை!

எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

ராஜா
15-07-2008, 07:17 AM
கவிதாயினி. நா. ஜெயிமா பேகம்

அரசியல் பூந்தோட்டமாய் இருந்தது
நீங்கள் வேராய் இருந்ததால்.
அரசியல் மாளிகையாய் நிமிர்ந்தது
நீங்கள் அடித்தளமாய் இருந்ததால்.

அரசியல் மக்களின் ஒளியாய் இருந்தது
நீர், வழங்குவதில் பாரியாய் இருந்ததால்.
அரசியல் புனிதமாய் இருந்தது
நீர், மனிதமாய் இருந்ததால்.

அரசியல் தூய்மையாய் இருந்தது
நீர், கதராடையை உடுத்தியிருந்ததால்.
அரசியல் இமயமலையாய் இருந்தது
நீர், பண்பின் இமயமாய் இருந்ததால்.

அரசியல் ஏழையின் கோவிலாய் இருந்தது
நீர், இலவசக்கல்வியின் தீபமாய் இருந்ததால்.
அரசியல் விண்மீனாய் இருந்தது
நீர், வானமாய் இருந்ததால்.

அரசியல் வைரமாளிகையாய் இருந்தது
நீர், வாடகைவீட்டில் இருந்ததால்.
அரசியல் பொற்காலமாய் இருந்தது
நீர், சொக்கத்தங்கமாய் இருந்ததால்.

ராஜா
15-07-2008, 07:20 AM
தமிழாசிரியர் சு. சுப்பையா பந்தல்

அன்னையவள் சிவகாமி
பெற்ற எங்கள்
அருளாளன் அறிவாளன்
காமராசன்
சின்னஞ்சிறு வயதினிலே
உரிமை வேட்கை
சிந்தையிலே தேக்கிட்ட
கருப்பு காந்தி
இன்னமுதத் திருமணத்தை
உறவு தன்னை
இந்நாட்டு உயர்வுக்காய்
இழந்த மேலோன்
தன்னொத்த தலைவரிலே
வேறு பட்டுத்
தமிழகத்தில் நல்லாட்சி
ஏற்ற முதல்வன்

கழனியிலே வளம்பெருக்கிக்
காட்ட எங்கும்
கணக்கற்ற நீர்த்தேக்கம்
கண்ட வல்லோன்
உழவனவன் உயர்வுறவே
ஊர்கள் தோறும்
உன்னதமாய்க் கூட்டுறவுச்
சங்கம் ஈந்தோன்
தொழிற்சாலை பலவாக்கித்
துறைகள் தோறும்
தொலைநோக்குத் திட்டங்கள்
வகுத்த தூயோன்
எழிலான இந்தியத்தில்
ஏற்றம் பொலிய
எந்நாளும் உழைத்திட்ட
ஏழைப் பங்காளன்;

அரசோச்சும் அமைச்சர்க்கு
நேர்மை எளிமை
அடக்கத்தை அணிகலமாய்த்
தந்த அறிஞன்
விரல்காட்டும் தகவோர்க்கே
பதவி என்னும்
விந்தையினை அரசியலில்
விதைத்த தீரன்
தரித்திரத்தில் சுழல்வோர்க்ம
தாழ்வுற் றோர்க்கும்
தரமான கல்வியோடு
உணவும் வழங்கிச்
சரித்திரத்தில் இடம்பெற்ற
சாவாத் தலைவன்
சமநீதி ஓதிட்ட சமுதாயத்
தொண்டன்;
பொன்நாடிப் பொருள்நாடிப்
போன தில்லை
புகழுக்காய் பொய் வேடம்
புனைந்த தில்லை
தன்னலத்தை ஒருபோதும்
விழைந்த தில்லை
தன்மானம் எப்போதும்
இழந்த தில்லை
பன்னலமும் பதவிகளும்
வந்த போதும்
பண்பாட்டை பாரதத்தை
மறந்த தில்லை
இந்நாட்டில் இவர்போலும்
படிக்காத மேதை இனி ”யாரும்”
பிறப்பதில்லை!

பாலகன்
15-07-2008, 07:50 AM
நான்கு கவிதைகளும் நான்கு முத்துக்கள் ராசா அண்ணே

முதலாமவர் கவிதை அதிகம் மிளிர்கிறது
அடுத்தவர் இளையவர் வேகம் அதிகம்
மற்றவர்களும் சளைத்தவர்கள் அல்ல

எதுவும் ஈடாகாது அந்த மாமனிதரின் புகழுக்கு...........................

நன்றி

அன்புடன்

ஆதி
15-07-2008, 10:38 AM
நானும் தோற்பதுதான்
ஜனனாயகம் என்றவனே..

அன்றைய தேர்தல் களத்தில்
உன்னாட்சியை குறை சொன்னவர்கள்
இன்றைய தேர்தல் களத்தில்
வாக்குறுதியாய் சொல்கிறார்கள்
"காமராஜராட்சியை கொணர்வோம்"

-----------------------------------------

பகிர்தலுக்கு நன்றி ராஜா அண்ணா..

இளசு
15-07-2008, 10:44 PM
பெருந்தலைவரின் தாள்தோய் தடக்கைகளுக்கு ஏற்ற
தமிழ்க்கவிதைப் பூச்செண்டுகள்..

கொணர்ந்த ராஜா அவர்களுக்கும்
சொல் மலர்கள் கொய்து தொடுத்த கவிஞர்களுக்கும்

நன்றி.. நன்றி..நன்றி!

Keelai Naadaan
16-07-2008, 02:19 AM
ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஒருமுறை (1993-ல்) திருச்சியில் வழக்காடு மன்றத்தில்,
ஒரு தெலுங்கு கவிஞரின் கவிதை என, பட்டிமன்ற பேச்சாளர் அறிவொளி அவர்கள் சொன்னது.

மேலுலகத்தில் பிரம்மா சொன்னான்
எனக்கு பிடித்தமான ஒரு மகனை
பூமியில் படைக்க போகிறேன்
சரஸ்வதி சொன்னாள்
நான் அவனுக்கு அளவில்லா கல்வியை தருவேன்
லட்சுமி சொன்னாள்
நான் அவனுக்கு அளவில்லா செல்வத்தை தருவேன்
மன்மதன் வந்தான்
நான் அவனுக்கு அழகை தருவேன்

பிரம்மா சொன்னான்
நீங்கள் யாரும் தர வேண்டாம்
நான் அவனை நேர்மையாலும்
தன்னலம் கருதாத உள்ளத்தாலும் படைப்பேன்
அவர் தான் காமராஜ்

ராஜா
16-07-2008, 04:49 AM
நன்றி நண்பர்களே..!

நம்ம ஆதி போல, மற்ற கவிஞர்களும் ஒரு நாலஞ்சு வரி கவிதை சொல்லலாமே..!

mgandhi
16-07-2008, 06:03 PM
ஆதி யின் கவிதைக்கு வாழ்த்துக்கள்