PDA

View Full Version : தீ....அவைகள்!!!சிவா.ஜி
14-07-2008, 03:12 PM
செல்லரித்த புத்தகத்தின்
உளுத்துப்போன பக்கங்களாய்
உதிர்கிறது அவன் நாட்கள்!

என்றோ ஒருநாளில்
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
சாத்தானின் ஆதிக்கத்தில்
சபிக்கப்பட்ட வேளையில்
அவன் விரல்களில் ஒட்டிக்கொண்ட
வெள்ளை அரக்கனும்,

சிறு மிடறலாய்
ஆரம்பத்தில் இடறலாய்
வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்ட
திரவ ராட்சஷனும்,

வாழ்நாள் சேமிப்புக்கு
வட்டி ஈந்து வருகிறார்கள்!

இது உனக்கு அது எனக்கு என
பங்கு பிரித்துக்கொண்டு
தங்குதடையின்றி
உருக்குலைக்கிறது உறுப்புகளை!

சற்று நேர சுய மறத்தலுக்காக
கற்றுக்கொண்ட கெட்டவைகள்
அவனது நிறை வாழ்வை
குறை நாட்களாக்கி
கொள்ளி வைக்க காத்திருக்கும் தீயவைகள்
அவன் உடலுக்கு
அவனே வைத்துக்கொண்ட தீ அவைகள்!

Narathar
14-07-2008, 03:34 PM
மிக நிதர்சணமான உண்மை!
ஒரு சில மணித்துளி இன்பத்துக்காக
முழு வாழ்க்கையையுமே செல்லரிக்கத்தான் வைக்கின்ரார்கள்!!!

நல்ல கவிதை

வெள்ளை அரக்கணைப்போலவே
சாராயத்துக்கும் ஏதாவது பட்டம் கொடுத்திருக்கலாம்.

( நமக்கு சொல்லத்தான்பா வரும் , இப்படியெல்லாம் எழுத வராது )

சிவா.ஜி
14-07-2008, 03:46 PM
உங்கள் ஆலோசனைக்கு நன்றி நாரதர். மாற்றியிருக்கிறேன்.

சரியாகச் சொன்னீர்கள். அல்ப சந்தோஷத்துக்காக ஆயுளைக் குறைத்துக்கொள்ளும் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஷீ-நிசி
14-07-2008, 03:54 PM
நல்ல கவிதை சிவா....

புகை பழக்கம், குடி பழக்கம்...
உயிர்கள் பலியானதோ...
எண்ணிக்கைக்கு அடங்காத இலக்கம்!

உங்கள் கவிதையை
கண்ட பின்பாவது...
உள்ளத்தில் பிறக்கட்டும் கலக்கம்!

வாழ்த்துக்கள் சிவா!ஜி

நாகரா
14-07-2008, 04:02 PM
உள்ளூறும் அருட்தீயின்
தண்மையில் நனைந்து
உள்ளெழும் அமுதநீரின்
கதகதப்பில் ஒளிர்ந்து
பெருவாழ்வுப் பெரும்பேற்றை
அடைவதை விட்டுவிட்டு
வெளியே
வெள்ளை அரக்கனுக்கும்
திரவ ராட்சசனுக்கும்
வாழ்வைப் பலியாக்கும்
கயமையைச் சாடும்
உம் சுடுகவிதை
அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் சிவா

ஆதி
14-07-2008, 04:17 PM
நெருப்பரிக்கும்
வெண்சுருளில் இருந்து
உதிர்வது
உன் மூச்சுக்காற்றின்
சாம்பல் துகளென்று
நீ அறியாயோ ?

வெறி நாய்ப்பல் முளைத்த
எரி நீர்
உன்றன் குடலை குதறுவதை
நீ அறியாயோ ?

சாராயத்தை உட்கொண்டு
சிகெரட்டால் தீமூட்டி
எரித்துக் கொல்ல
உன் வாழ்கை
ஒன்றும் சுள்ளி அல்ல..


இன்றைய இளைய சமுதயாத்துக்கு தேவையான ஒரு கவிதையண்ணா..

வெள்ளை அரக்கன் அழகிய உவமை..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா..

கண்மணி
14-07-2008, 04:23 PM
உனக்குள் ஊற்றிக்
கொள்ளி வைத்துக் கொண்டாய்
எரிந்தது
உன் குடும்பம் முழுதும்!!!

சிவா.ஜி
14-07-2008, 04:23 PM
கவிஞரின் கவித்தனமான பின்னூட்டம். இலக்கம், கலக்கம்....அருமை. திருந்த வேண்டுமே...?

மிக்க நன்றி ஷீ.

சிவா.ஜி
14-07-2008, 04:26 PM
மிக்க நன்றி நாகரா. சூட்சுமங்கள் புரியாமல், சூழ்ச்சிகளில் சிக்கி சீரழியும் அறியாதவர்கள். உங்கள் வரிகள்....அருமையாய் அதை தெரிவிக்கிறது.

சிவா.ஜி
14-07-2008, 04:29 PM
ஆதி....அடடா.....அற்புதமான உங்கள் பின்னூட்டக்கவிதையைப் பார்த்து...சற்றே வெட்கப்படுகிறேன். வான்கோழிக்கு, மயிலின் பாராட்டுப் பத்திரமா என்று. அதே சமயம் இத்தனை அழகான கவிதையைக் கொண்டுவந்த கவிதையை எழுதினேன் என்று சற்றே ஆறுதல். மிக்க நன்றி ஆதி.

சிவா.ஜி
14-07-2008, 04:31 PM
கண்மணியின் கருத்து செறிவுள்ள சிக்கனக் கவிதை சொல்லிச் சென்றது மிகப் பெரிய உண்மையை. அருமை கண்மணி.

நாகரா
14-07-2008, 04:43 PM
உனக்குள் ஊற்றிக்
கொள்ளி வைத்துக் கொண்டாய்
எரிந்தது
உன் குடும்பம் முழுதும்!!!

உன் வாய்க்கு வெளியே
நீண்ட வெண்ணாவு
உன்னையே விழுங்குகிறது

உன் வாய்க்கு வெளியே
நீண்ட வெண்ணாசி
உன் மூச்சை உண்கிறது

mukilan
14-07-2008, 04:53 PM
வெள்ளைப் புடவை கட்டிய விதவை என்று அடைக்கலம் கொடுத்த மனிதர்களின் மனைவிகள் வெள்ளைப் புடவை கட்ட வைத்துவிடும் அரக்கன். மன திடம் குலைக்கும் திரவ ராட்சசன்....
திருந்துங்கள் தோழர்களே என்ற உங்களின் சமூக அக்கறை. அருமை! அருமை!

பூமகள்
14-07-2008, 05:01 PM
####################
புகை இடை நகை
வகை நடை பகை..
#####################

@@@@@@@@@@@@@@@@
வடு வலி மருந்து..
சுடு குழி விருந்து..
@@@@@@@@@@@@@@@@

பாராட்டுகள் சிவா அண்ணா..!!
திருத(ந்)த வேண்டும் சமுதாயம்..!!

சிவா.ஜி
14-07-2008, 05:05 PM
அருமையாச் சொன்னீங்க முகிலன். வெள்ளை அரக்கனால்...வெள்ளைப்புடவை தரிக்க வேண்டுமா அந்த மாதரசிகள்? விட்டொழிக்க முடிந்ததுதான்....ஆனால் மனமில்லாமல்.....மரணத்தை எதிர்நோக்கி எத்தனை மனிதர்கள்?
நன்றி முகிலன்.

ஆதி
14-07-2008, 05:10 PM
ஆதி....அடடா.....அற்புதமான உங்கள் பின்னூட்டக்கவிதையைப் பார்த்து...சற்றே வெட்கப்படுகிறேன். வான்கோழிக்கு, மயிலின் பாராட்டுப் பத்திரமா என்று. அதே சமயம் இத்தனை அழகான கவிதையைக் கொண்டுவந்த கவிதையை எழுதினேன் என்று சற்றே ஆறுதல். மிக்க நன்றி ஆதி.

என்னை போன்றவர்கள் என்றுமே வியந்து பார்க்கும் உயரத்தில்தான் நீங்கள் இருக்குறீர்கள் அண்ணா.. பெரிய பெரிய கதைகளையும், அழகழகான கவிதைகளையும் படைக்கும் தங்களின் அசாத்திய திறமை மலைக்கு முன் நான் அடிவாரத்தில் இருக்கும் சின்ன கல்தான்..

சிவா.ஜி
14-07-2008, 05:53 PM
ஆதி...உண்மையைச் சொல்லவேண்டுமானால்....கவிதை என்பது நீங்கள் எழுதுவது. நான் எழுதுவது கவிதை மாதிரி...... . அதேப்போல கதையும். மின்னிதழுக்குக்கூட தகுதியில்லாத கதைகளும் கவிதைகளும் எழுதும் நான்....அதிகமா ஆசைப்படக்கூடாதுப்பா. எண்ணங்களை மட்டும் பதிக்கிறேன். அதற்கான அன்பான பின்னூட்டங்களை விரும்புகிறேன். மதிக்கிறேன். அது போதும்ப்பா.

இளசு
15-07-2008, 06:46 PM
நம் சந்ததியர் பழகவே கூடாது என நான் தபசிக்கும் இவற்றை
நம் சிவா அழகிய கவிதை ஆக்கிய நற்பணிக்கு என் வந்தனம்..

சிகரெட் - தவணையில்
தனக்குத்தானே கொள்ளி..

மது -
அழிவுக்கடலில் ஆழம் செல்ல
நல்லதொரு கட்டுமரம்..
மூழ்குதல் மட்டுமே முடிவு..!

சிவா.ஜி
15-07-2008, 07:06 PM
நம் சந்ததியர் பழகவே கூடாது என நான் தபசிக்கும் இவற்றை
நம் சிவா அழகிய கவிதை ஆக்கிய நற்பணிக்கு என் வந்தனம்..

சிகரெட் - தவணையில்
தனக்குத்தானே கொள்ளி..

மது -
அழிவுக்கடலில் ஆழம் செல்ல
நல்லதொரு கட்டுமரம்..
மூழ்குதல் மட்டுமே முடிவு..!

தவனையில் தனக்குத்தானே கொள்ளி........................மூழ்குதலை மட்டுமே காட்டும் கட்டுமரம்............அடடா........எப்பேர்க்கொத்த வார்த்தையாடல்......வழக்கம்போல் வியக்கிறேன் இளசு.

சிவா.ஜி
15-07-2008, 07:13 PM
####################
புகை இடை நகை
வகை நடை பகை..
#####################

@@@@@@@@@@@@@@@@
வடு வலி மருந்து..
சுடு குழி விருந்து..
@@@@@@@@@@@@@@@@

பாராட்டுகள் சிவா அண்ணா..!!
திருத(ந்)த வேண்டும் சமுதாயம்..!!

மன்னிச்சுக்கம்மா......எப்படியோ தவறவிட்டுவிட்டேன் உன் பின்னூட்டத்திற்கு நன்றியை. அழகான இருவரி கவிதைகளால் என் கவிதையை அழகு படுத்திய பாமகளுக்கு நன்றிகள்.

நம்பிகோபாலன்
15-07-2008, 07:45 PM
" புகைத்தேன் புதைத்தார்கள் " ....அருமையான் கவி சிவான்னா...
" வெள்ளை அரக்கன் " அழகான சொல்லாடல்....

சிவா.ஜி
15-07-2008, 07:47 PM
கச்சிதமான சுருக்கப் பின்னூட்டம். அருமை தம்பி. நன்றிப்பா.

இளசு
15-07-2008, 07:53 PM
மன்னிச்சுக்கம்மா......எப்படியோ தவறவிட்டுவிட்டேன் .

அன்பு சிவா,
ஒவ்வொருவரின் பின்னூட்டத்துக்கும் உங்கள் அழகான ஏற்புரையைத்
தவறாமல் வாசிப்பவன் நான்..

இப்படி அடிக்கடி தவறவிட்டால், மன்னிக்கமாட்டேனாக்கும்!:)

(சின்ன தம்பி - வெந்நீர் சிறுகதையில் அவர் பின்னூட்டத்தைத் தவறவிட்டதுக்காக இளசு இப்படிச் சொல்லலீங்க சிவா...;) )

பிச்சி
16-07-2008, 09:18 AM
ரொம்ப நல்ல கரு அண்ணா. இந்தமாதிரி நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். தனக்கு இன்பம் தருகிறது என்று சொல்லிக் கொண்டு சுயநலமாய் குடும்பத்தை அழிப்பவர்கள். நல்ல சாடல்.

சிவா.ஜி
16-07-2008, 09:32 AM
அதேதாம்மா. விளைவுகள் என்ன என்பதை சற்றும் சிந்திக்காமல் செயல்படுவதால் ஒரு குடும்பமே சிக்கலில் ஆழ்ந்துவிடுகிறது. நன்றி பிச்சிம்மா.

(இணைய இணைப்பு எடுத்தாகிவிட்டதா?)

பிச்சி
16-07-2008, 09:36 AM
அதேதாம்மா. விளைவுகள் என்ன என்பதை சற்றும் சிந்திக்காமல் செயல்படுவதால் ஒரு குடும்பமே சிக்கலில் ஆழ்ந்துவிடுகிறது. நன்றி பிச்சிம்மா.

(இணைய இணைப்பு எடுத்தாகிவிட்டதா?)

இல்லை அண்ணா. அலுவலகத்தில் இருக்கிறேன். அறிஞரின் மேல் ஆலோசனையின் கீழ் எனக்கு இணைப்பு கிடைத்தது.

இதயம்
16-07-2008, 09:44 AM
உங்களிடமிருந்து இப்படி ஒரு கவிதை வந்தது மிகச்சிறப்பு..! அற்ப இன்பத்திற்காக ஆயுளுக்கே கொள்ளி வைப்பது கொடுமையானது. உங்கள் கவிதையில் இருக்கும் கருத்தை உணர்ந்தால் எழுச்சி மிக்க இளைய சமுதாயம் உருவாகும். அது நம் தேசத்தை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும். நிறைய எழுதி என் பாராட்டு, நன்றியை சொல்ல மனம் ஒத்துழைக்கும் அளவுக்கு இணையம் ஒத்துழைக்கவில்லை. என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.!!

சிவா.ஜி
16-07-2008, 11:54 AM
நல்ல கருத்துடன் வந்த உங்கள் பின்னூட்டத்திற்கு உளமார நன்றி இதயம்.