PDA

View Full Version : முன் யோசி பின் செய்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-07-2008, 05:47 AM
கடந்து வந்த பாதைகளை
முதலிலிருந்து துவங்குவதைப் போல்,

சப்பி எறிந்த கொட்டைகளை
தட்டில் ஏந்தி தருவதைப் போல்,

கொஞ்சம் விவரமாகவும்
கொஞ்சம் விகாரமாகவும் வேண்டுமானால்
தொண்டை கக்கிப்போட்ட உணவுகளை
திரும்ப உள்ளுக்கனுப்பவதைப் போல்,

இப்படித்தானிருக்கிறது
இதை விட்டு அதைச் செய்திருக்கலாம்
இதற்கு பதிலாய் அதை படித்திருந்திருக்கலாம்
இவளை விட்டு அவளை கட்டியிருக்கலாம்
இப்படியாய் கழிந்து போன
கால நீட்சிகளை கட்டளைகளுக்கேற்ப
வளைத்துக்கொள்ள முயல்வதும்.

காலச் சக்கர சுழல்களில்
எட்டி விழும் திசைகளும்
ஒட்டி இருக்கும் துணிகளும்
சுற்றி கிடக்கும் சூழ்நிலையும்
கேட்டுப் பெறம் வரமில்லை.

விதைகளை உற்பத்திப்பது
மரங்களாயினும்
விளையும் நிலங்களை
காற்றுதான் நிர்ணயிக்கிறது.

முட்டி நிற்கும் பாதைகளில்
வந்த வழியை வசையாமல்
வெட்டி எடுத்து பாதை படைப்போம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

இளசு
14-07-2008, 06:55 AM
எண்ணித்துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு..

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே!

பலருக்கும் ஏற்படும் மன அழற்சி -
நடந்ததையே நினைத்திருந்து
அமைதி என்றுமில்லை என அல்லாடுவது..

அப்படி நடந்திருந்தால்?

என்னை மானாமதுரை ஜமீன் மாப்பிள்ளைக்குக் கேட்டாங்க..
என பொக்கை வாயான பின்னும் பாட்டிகள் புலம்புவது உண்டுதானே!

காலகால சமூக நோய்களுக்கு மருத்துவம் செய்யும் கவிதைகள் அளிக்கும்
ஜூனைத்துக்குப் பாராட்டுகள்!

பூமகள்
14-07-2008, 07:00 AM
கிடைத்த வாழ்வில்..
நிம்மதி தேடுவதும்..

கிடைக்காத வாழ்வை
நினைத்து
அங்கலாய்க்காமலிருப்பதும்..

மனம் நிறைந்த வாழ்வை தரும்...!!

சொல்லாமல் சொல்லிய பல விசயங்களில் இதுவும் ஒன்று..

பாராட்டுகள் ஜூனைத் அண்ணா. :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-07-2008, 11:21 AM
தாமதாமான நன்றிக்கு மன்னிக்கவும் இளசு அண்ணா.

உங்கள் கருத்து மிகச்சரியானது. கணவன் மனைவி சண்டையில் பெரும்பாலும் மனைவிகள் கூறத் தொடங்குவது என்னை அங்க கேட்டாக இங்க கேட்டாக என்னோட கெரகம் உங்ககிட்ட வந்து வாக்கப்பட்டு இருக்கேனென்று. அப்புறம்தான் தெரியும் அவுங்கல்லாம் வீட்டு வேலைக்கு கூப்பிட்டு இருப்பாங்கன்னு
உங்களோட கருத்துக்கவிதைக்கும் நன்றி சகோதரி பூ மகள்.

நாகரா
14-07-2008, 03:34 PM
"சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனுங்
குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
என்ற எண்ணமதைத் திண்ணமுற
உள்ளமதில் இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்"

என்ற மகாகவி பாரதியின் பாட்டை நினைவுக்கு வரவழைத்த
உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஹஸனீ.

இளசு
15-07-2008, 07:02 PM
பொருத்தமான மகாகவி பாடல் இட்ட
கருத்தாளர் நாகரா அவர்களுக்கு சபாஷ்!