PDA

View Full Version : மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-2mukilan
14-07-2008, 12:22 AM
பரிணாமக் கொள்கையும் கலப்பினப் பெருக்கமும்

சென்ற பாகத்தில் மரபணு என்றால் என்ன? அது எப்படிச் செயல் படுகிறது? மரபணுவின் முக்கியத்துவம் என்ன எனக் கண்டோம். சுருக்கமாக மீண்டும் சொல்வதானால், மரபணு என்பது ஒவ்வொரு உயிரின் குணத்தையும் அமைப்பையும் நிர்ணயிக்கிறது. பெரும்பாலும் ஒரு மரபணு ஒரு குணத்தை நிர்ணயம் செய்யும். சமயங்களில் ஒரு மரபணு பல்வேறு குணங்களைக் கட்டுப்படுத்தும் (ஆங்கிலத்தில் இதனை Pleiotrophy என்பார்கள்). மரபணு பற்றியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றியும் விரிவாகக் காணும் முன் மரபணு மாற்றப் பட்ட பயிருக்கும் கலப்பின பயிருக்கும்(Hybrid) உள்ள வேறுபாட்டினை அறிந்து கொள்வது அவசியம். பரிணாமக் கொள்கையை அறிவதும் மிக்க அவசியமாகும்.

மரபணுமாற்றம் என்றால் ஒரு உயிரினத்தில் உள்ள மரபணுக்கட்டமைப்பில் (Genome) வேறு உயிரினத்தின் மரபணுக்களை (Trans gene) செயற்கையாகப் புகுத்துவது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட உயிரினம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினம் (Genetically modified organism- GMO) எனப்படும். தன்னகத்தே வேற்று மரபணு கொண்ட பயிர் வேற்று மரபணுவேற்றிய பயிர் (Transgenic crop) எனப்படும்.

நான் குறிப்பிட்ட அந்த ஆனந்த விகடன் கட்டுரையில் கறிக் கோழி (Broiler) மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. அதே போல முன்னர் வேறு ஒருவர் வலைத்தளத்தில் பெங்களூர்த் தக்காளிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை எனக் கூறி இருந்தார். ஆனால் மேற்கூரிய இரண்டுமே மரபணு மாற்றத்தால் வரவில்லை. ஆதி காலந்தொட்டே மனிதன் செய்து வந்த, செய்து வருகிற கலப்பின முறையால்தான் வீரியமிக்க ரகங்கள் உருவாக்கப் பட்டன. வேறு பாடுகள் அதிகமுள்ள மரபணுக் கட்டமைப்புகளில் இருந்து ஒரு உயிரினம் உருவாக்கப் படுமானால் உருவாகும் அந்த உயிரினம் மிகுந்த வீரியமிக்கதாக இருக்கும். ஏன்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் (Law of Dominance) என்ற விதியின் படி இரு வேறு பட்ட மரபணுக் கட்டமைப்பு உள்ள உயிர்கள் கூடும்பொழுது அந்த இரண்டு உயிரினங்களிலும் வல்லமை பெற்ற மரபணுக்களே குணங்களைக் கட்டுப்படுத்தும் பதவியைப் பெற்றுக் கொள்கிறது. அதனால் சிறந்த பண்புகள் உருப்பெற்று வீரிய மிக்கதாக புதிதாகப் பிறக்கும் உயிர் இருக்கிறது. மரபணு வேற்றுமைதான் (Genetic diversity) இனப்பெருக்கவியலில் (Breeding) மிக முக்கிய அங்கம். அதனாலேயே சர்வதேச அளவில் மரபணு வங்கிகள்(Gene Bank) இயங்குகின்றன.

எடுத்துக்காட்டாக கலப்பு மணம் புரிந்த தம்பதிகளைப் பாருங்கள். அவர்களின் பிள்ளைகள் பெற்றவர்களை விட புத்திசாலியாகவும், நெருங்கிய உறவில் மணம்புரிந்த தம்பதிகளின் குழந்தைகளை விடவும் அறிவாளிகளாகவும் இருப்பர். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வெவ்வேறு உயிரினங்கள் உறவின் மூலம் பெறும் மகவு(கள்) வீரியமிக்கதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்தது இன்றைய அறிவியலாளர்கள் அல்ல. கி.மு 700ம் ஆண்டுகளில் தலைச் சிறந்த நகரங்களான டிக்ரிஸ்-யூஃப்ரடஸ் (Tigris-Euphroates) ஆகியவற்றில் வாழ்ந்த பாபிலோனியர்கள் தான். இன்றைய இராக் நாட்டின் பகுதிகள்தான் இவை. ஆண்மரம் பெண்மரம் எனத் தனித்து முளைக்கும் ஈச்ச மரங்களுக்கு கலப்புத் திருமணம் செய்வித்தப் பகுத்தறிவாளர்கள் அவர்கள். வேளாண்மைதான் அன்றைய நாகரீகத்தின் முதுகெலும்பாக இருந்தது. நாடோடிகளாகவே வாழ்ந்து கொண்டிருந்த என் தாத்தாவிற்கு தாத்தாமார்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்து வளம்பெருக்க ஏதுவாக விவசாயம் அமைந்தது.

இங்கேதான் பரிணாமக் கொள்கை வகுத்த தீர்க்கதரிசி டார்வினை நினைவு கூறவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினமே உலகில் உய்யும். மாற்றிக்கொள்ளாதவை இருப்பது ஐயம்- என்ற கோட்பாடை வகுத்த அவரே பரிணாம இயலின் தந்தை. அப்படியானால் சூழலுக்கு தக்க மாற்றிக்கொள்ளும் இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் படி மரபணுவிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அம்மாற்றங்கள் ஏதோ செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து டிசம்பரில் முடிந்து விடக்கூடியவை அல்ல. பல தலைமுறைகளைக் கண்டு பின்னரே மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும். மற்ற மாற்றங்கள் எல்லாம் சேராது. எப்படி? எளிய விளக்கம் சொல்கிறேன். தமிழகத்தில் பிறந்த ஒரு நபர் சற்று மாநிறமாக இருப்பார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கனடா போன்ற குளிர்நாடுகளில் வாழும்பொழுது சற்று கூடுதல் வெளுப்பு நிறமாகக் காட்சியளிப்பார். ஒரு மூன்று மாதம் சிங்காரச் சென்னையின் கோடைகாலத்தில் இருந்து விட்டால் பின்னர் அவர் சாயம் வெளுத்த நரி போல தன்னுடைய மாநிறத்திற்கே திரும்ப வேண்டியதுதான். எனவே அந்த மாற்றம் அடுத்த தலைமுறைக்கு சென்று சேராது. தெரிந்தோ தெரியாமலோ பண்டைய விவசாயிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க நல்ல கதிர்மணிகளை மட்டுமே அறுவடை செய்தனர். அதனாலேயே நல்ல கதிர்மணிகளுக்கு காரணமான மரபணுக்கள் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டன. ஆக பயிர் இனப்பெருக்கமும், பயிர் மேம்பாடும் அவர்கள் அறியாமலேயே செய்து கொண்டுதான் இருந்தனர்.

இப்படித் தலைமுறை தலைமுறையாக மாறி வந்து இருக்கும் உயிரினங்கள்தான் நாம் இன்று காண்பவை. இப்படி உருவெடுத்த நல்ல(வல்ல) மரபணுக்கள்தான் நம் தேவை. அந்த மரபணுக்கள் ஒரு தலை முறையில் இருந்து மற்றுமொரு தலைமுறைக்கு இனப்பெருக்கத்தின் போது மாற்றப் படுகின்றன என ஆய்ந்து அறிவித்த மற்றொரு அறிவியல் மைந்தன்(நன்றி: இளசு அண்ணா) மெண்டல். ஆஸ்திரிய நாட்டில் ஒரு கிறிஸ்தவ மதப் பணியாளராக இருந்து கொண்டே 1860 களிலேயே பட்டாணிச் செடியில் ஆராய்ச்சி செய்து இன்றைய வேளாண் புரட்சிகளுக்கெல்லாம் வித்திட்ட மரபியலின் தந்தை.

அமெரிக்காவில் 1930 களில் ஏற்பட்ட ஒரு வித தேக்க நிலையால் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் உத்தியை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் காண முயன்றனர். அதன்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு மக்காச்சோளச் செடிகளை அயல் மகரந்தச் சேர்க்கை (Cross-Pollination) கொண்டு கலப்பினம் உருவாக்க முயன்றனர். அம்முயற்சிக்கு முதல் செயல் வடிவம் கொடுத்தவர் சாம் ஃப்ராண்ட்ஸ். அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். அவர் நினைவாக அவர் ஆராய்ச்சி செய்த நிலத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள நினைவுச் சின்னம்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/OHDUBcorn02.jpg
சரி அறிவியல் தொடரில் வரலாறு இப்போதைக்குப் போதும்.

மக்காச்சோளத்தில் ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியே இருக்கும். ஆண் பூ(Stamens,Tassel-மகரந்தம்) உச்சியிலும் பெண் பூ(Cob-சூலகம்) நடுவிலும் காணப்படும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/Male-Female-Corn-SC-LG.gif
அதன் படி மகரந்தத்துகள்கள் விழும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளும் படி இயற்கையாகவே அமைக்கப் பட்டிருக்கும். மகரந்தத்தை வெட்டி எடுத்து விட்டால்(De tasseled) அந்தச் செடி பெண் செடியாக மட்டுமே கருதப் படும். எடுத்துக்காட்டாக ஆண் பூவை வெட்டிய பிறகு வேறு ஆண் பூவின் மகரந்தத்தைக் கொண்டு சூலகத்தில் தூவினால் அந்தச் சூல் கருவுற்று காய் கொடுக்கும். இதே முறையில் வேறு இரு செடிகளைக் கொண்டு மற்றுமொரு சோளக் கதிரை விளைவிக்க வேண்டும். இந்த இரு செடிகளில் விளைந்த விதைகளை மறுபடியும் முளைக்க வைத்து அவற்றில் ஒன்றின் ஆண் பூவை வெட்டி விட்டு மற்றொன்றின் ஆண் பூ கொண்டு மகரந்தச் சேர்க்கை நடத்தினால் நல்ல வீரியமுள்ள விதை கிடைக்கும். கீழே விளக்கப்படம் காணவும்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/0663.jpg

சரி எப்படி அந்தச் செடிகளைத் தேர்ந்தெடுப்பது. விரும்பபடும் குணமுள்ள செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்புத் திறன், சுவைமிக்க மணிகள் எனப் பல குணங்களை ஆராய்ந்து கலப்பினப் பெருக்கம் செய்தோமானால் ஒவ்வொன்றில் இருந்தும் நல்ல குணங்கள் பெறப்பட்டு மிகவும் பயன் தரக்கூடிய செடி கிட்டும். சரி விரும்பத்தகாத குணமுடைய மற்ற செடிகளின் மகரந்தத் துகள்கள் வந்து கலந்து விட்டால்? அதற்காகத்தான் மகரந்தச் சேர்க்கை முடிந்த்ததும் காகிதப் பை கொண்டு சூலகத்தை மூடி விடுவர்.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/1332_Tropical_Maize_USDA.jpg
மரபணு மாற்றம் பற்றி விளக்காமல் என்ன கதை இது என்கிறீர்களா? பரிணாமவியல் பற்றியும், கலப்பினப் பெருக்கம் பற்றியும் முதலில் புரிந்து கொண்டால் மரபணுமாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் எளிது என்பதால் இந்த நீண்ட பதிவு. ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனுக்குடன் கேளுங்கள்.

பாரதி
14-07-2008, 02:45 AM
அருமையான பதிவு முகில்!
விவசாயத்தில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை (!) விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவது மேல் என்பார்களே, அது போல மரபணு மாற்றம் குறித்து தெளிவாக புரிந்து கொள்ள உங்கள் தொடர் நிச்சயம் உதவும் என நம்புகிறேன். நல்ல, அவசியமான தொடருக்கு நன்றி. தொடருங்கள் முகில்.

பென்ஸ்
14-07-2008, 03:12 AM
எனக்கே புரிந்து கொள்ள முடியும் விதத்தில் விளக்கமுடிகிறதே...

உங்கள் நற்பணி தொடரட்டும் ... ஒவ்வொரு பதிவிற்க்காகவும் காத்திருக்கிறேன்....

mukilan
14-07-2008, 03:26 AM
அன்பு பாரதியண்ணா, அன்பு பென்ஸ் உங்கள் ஆர்வத்திற்கும் எனக்களித்த ஊக்கத்திறகும் மிக்க நன்றி. உங்களின் மேலான ஆதரவோடு நிச்சயம் நான் எடுத்துக் கொண்ட இம்முயற்சியில் வெற்றி பெறுவேன்.

சிவா.ஜி
14-07-2008, 05:24 AM
அறிவியல் கட்டுரையில் தமிழ் சதிராடுகிறது. மரபணு மாற்றத்துக்கும், கலப்பினத்துக்குமான வித்தியாசம் வெகு அழகாக விளப்பட்டிருக்கிறது.
உண்மையிலேயே மிகச் சிறந்த கட்டுரை. பாமரனுக்கும் புரியும் வகையில் முகிலன் அளிக்கும் அற்புதப் படைப்பு. மனமார்ந்த பாராட்டுகள் முகிலன்.

mukilan
14-07-2008, 05:59 AM
தங்களின் மேலான ஆதரவிற்கும் ஊக்க வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா! கலப்பினப்பெருக்கமும் மரபணுமாற்றம் செய்தொழில்நுட்பமும் வெவ்வேறு என விளக்கவே இந்தப்பதிவு. அதை உங்களின் பின்னூட்டமாய்ப் பார்த்ததும் மகிழ்கிறேன்.

இளசு
14-07-2008, 07:30 AM
இனிய பென்ஸ்..

எனக்கும் புரிகிறதே !

அன்பு முகில்ஸ்

கட்டியணைத்துப் பாராட்டுகிறேன்.

நிதானமாய் அறிவியலையும் அழகுத்தமிழையும் பிசைந்து நீ ஊட்டும் பாங்கு பிரமாதம்.

இயற்கையோ, விவசாயியோ - இதுவரை நடத்தி வந்த சோதனைகள் எல்லாமே நன்மையாய் முடிவதில்லை..

ஆனால் நல்லவை/வல்லவை மட்டுமே நீடிக்கும்.

இயற்கையில் நீடிக்கும் வல்லவை எல்லாமே நல்லவையா? எனக்கு ஐயம் உண்டு - எ-டு: மலடான கோவேறுக்கழுதை; ருசி குறைந்து தசை கொழுத்த பிராய்லர் கோழி....

செயற்கையாய் விஞ்ஞானிகள் செய்யும் மாற்றங்கள் எல்லாமே நல்லவையா? உத்தரவாதம் எங்கே?

நல்மணிகளைச் சேகரித்த நம் பழக்கம் - ஒவ்வொரு முறையும் விதை வாங்கியே ஆகவேண்டும் என மாறிவிடுமா?

டிரான்ஸ்ஜெனிக் - இயற்கையில் அரிது; செயற்கையில் சாத்தியம் அதிகம்..

இப்படி பல ஐயங்கள்/அச்சங்கள் உண்டு முகிலா..

அனைத்தையும் இத்தொடர் விளக்கும் என நம்பிக்கை கொள்கிறேன்.

இம்முறையும் நல்ல படங்கள்..

வல்லான் வகுத்ததே வாய்க்கால்.. உய்யும்/ஐயம் -
சில இடங்களில் நான் எழுதினேனா என ஒரு ''கலப்பு மயக்கம்'' வந்தது.

என் மனமார்ந்த பாராட்டுகள்!

பூமகள்
14-07-2008, 07:32 AM
அன்பின் முகில்ஸ் அண்ணா...
உடனே ஓடி வந்து உங்களுக்கு உதவியாளராக சேர்ந்து கொள்ள ஆசைப்படுகிறது மனம்...

கற்கண்டு உண்ண கசக்குமா என்ன??

புரிந்து தெளிந்த.. அறிவியல் செய்திகள் பற்றி இன்னும் ஆழமாய் கற்பதை விட வேறென்ன மகிழ்ச்சி எனக்கு கிட்டிவிடும்??

மிக மிக முக்கியமான கட்டுரை...

ஒவ்வொரு பாகத்தையும் பத்திரப்படுத்த வேண்டும். அறிவியலை அமுத மொழியில் வடிக்கும் உங்கள் புகழ் ஓங்கட்டும்..!!

உங்களோடு இனிதே பயணிக்கிறோம்...

-----------------------------------------------------
டார்வின் கோட்பாடு முதல் மெண்டல் வரை..

பட்டாணி ஆய்வு முதல்.. மக்காச்சோள கலப்பின விதை வரை.. அனைத்தும்... ஆழ்ந்து ரசித்து ரசித்து படித்தவை....

உங்களின் மகத்தான சேவைக்கு எனது பொற்காசுகள் இரு பதிவுகளுக்கும் சேர்த்து... 10,000 வழங்கி மகிழ்கிறேன். :)

mukilan
14-07-2008, 03:31 PM
இளசு அண்ணா உங்களின் விரிவான விமர்சனத்திற்கு என் நன்றி. அடுத்த எப்படி எழுத வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலாகவே உங்கள் கேள்விகள் அமைந்துள்ளன. என்னால் முடிந்த வரையில் அக்கேள்விகளுக்கான விளக்கம் அளிக்க முயல்கிறேன். ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் மாணவனுக்கு வழிகாட்டியாக உங்களின் வழிநடத்தலோடு இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.

உங்கள் அறிவியல் மைந்தர்கள் படித்ததால் வந்த பாதிப்புதான் நீங்கள் மயங்க காரணமான அந்த சொற்றொடர்கள். மீண்டும் உங்கள் அன்பிற்கு என் நன்றி.

mukilan
14-07-2008, 03:42 PM
தங்கையின் தொய்வில்லாத ஆர்வத்திற்கு என் நன்றி.

அதுவும் பத்தாயிரம் பொற்காசுகள் கொடுத்த பாசமிகு பாமகள்.

தான் கற்ற துறையினும் வேறு துறை மீது ஆர்வம் வருவது அபூர்வம். மன்றத்தில் அவ்வாறு மாற்றுத் துறை மீது ஆர்வம் கொண்டோர் ஏராளமானோர் உண்டு. அப்படியொரு ஆர்வம் உன்னிடத்தில் கன்டு மகிழ்கிறேன். உன் போன்று ஆர்வமாய்த் தெரிந்து கொள்ள நண்பர்கள்
இருக்கிறார்கள் என்பதால் எனக்கு இத்தொடரை இன்னும் மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

பென்ஸ்
14-07-2008, 09:22 PM
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.. உய்யும்/ஐயம் -
சில இடங்களில் நான் எழுதினேனா என ஒரு ''கலப்பு மயக்கம்'' வந்தது.
இளசு... உங்கள் எழுத்துகளின் பாதிப்பு எங்கள் எல்லோரிடமும் உன்டே...!!!:)

தீபா
15-07-2008, 01:38 PM
உங்களின் மரபு அணு மாற்றம் குறித்த இரண்டாம் கட்டுரைக்கு வந்தனங்கள்.
மிகத்தெளிவாக கட்டுரையைக் கொண்டு செல்லும் உங்களிடம் என்ன கேள்வி
கேட்பதென்ற எண்ணம் விட்டொழிந்தேன்.

தாவரங்கள் ஒரு உயிரெனக் கருதி, உயிர்களின் பிறப்பிடம் எப்படியெல்லாம் என்று
யோசிக்க வைக்கிறது. முதன்மையாக எல்லா பயிர்களும் எல்லா உயிர்களும் பிணைப்பின்
மூலமே உருவாகிறது; சில அழுகிய, மட்கிய, பொருட்களில் உண்டாவது
அறிந்திருக்கிறேன். கண்டிருக்கிறேன். ப்ரோடிஸ்டா, காளான்கள் போன்றவைகள்
அடக்கம். ஆனால் இவை செயற்கை முறையன்றி இயற்கையாகவே பிறப்பதால்
இவ்வினவகைகளைக் குறித்து எந்தவொரு ஆச்சரியமும் எழுவதில்லை. மாறாக, ஒரு பயிர்
மற்றோர் பயிரில் கருவிதைத்து கர்ப்பம் சுமக்கிறது என்பது செயற்கையானதென்றாலும்
வரவேற்கத்தக்கது அல்லவா?

இதன் எல்லை எத்தனை தூரம் வரை? திரு.இளசு அவர்களின் கேள்வியே
என்னுடையதுமாகி, இந்த மாற்றவியல் நல்லதா அல்லது எவ்வாறு? இன்று மரபணு மாற்றம்
மனிதன் வரையிலும் சாத்தியம் எனும்போது வருங்கால அறிவியல் இன்னும் எத்தனை
புதுமைகள் செய்து இயற்கையைச் சாகடிக்கப் போகின்றனவோ?

முன்புவரையிலும் பயிர்களின் இனப்பெருக்கமோ அல்லது அதன் பரிணாம வளர்ச்சியோ
நீங்கள் சொல்வதைப் போல, மிக வலுவுள்ள அணுக்களின் பரிமாணம் காரணமாகவும், சூழ்நிலைக்கு ஒத்தமாதிரியும் இருந்தன. அன்றைய ஆதி மனிதன் இன்றைக்குக் கிடையாதென்பது அவனின் பரிணாம வளர்ச்சியும் காரணமல்லவா. பின்பு இந்தகைய அணுக்கள் திணிக்கும் செயற்கை விஞ்ஞானம் இன்னும் அசுர வேக பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடும் என்பது உறுதியாகிறது இல்லையா திரு.முகிலன்?

உங்கள் கட்டுரைக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்,
தென்றல்

இளசு
15-07-2008, 08:50 PM
இளசு... உங்கள் எழுத்துகளின் பாதிப்பு எங்கள் எல்லோரிடமும் உன்டே...!!!:)


தவறு பென்ஸ்..

இப்படி எழுதினால் இன்னும் நல்லா இருக்கும் என
இங்கு சிலரைப் பார்த்து நான் பழகி வருகிறேன் -
சிலர் = பாரதி, முகிலன், பென்ஸ் ...............
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

அறிஞர்
15-07-2008, 09:00 PM
அழகிய தமிழில் தெளிவான கட்டுரை...

மரபணுமாற்றத்திற்கு முன் எளிய கலப்பினப் பெருக்கம்.
எளிய முறையில் நல்ல பாடம்.

நன்றி முகிலன்.

mukilan
15-07-2008, 11:59 PM
அறிஞரின் பாராட்டுக்கு அகமகிழ்கிறேன். உங்களின் ஆதரவினால் இரட்டிப்புச் சந்தோஷம். தொடர்கிறேன். நீங்களும் உங்களைத் தொடர்ந்து நல்குங்கள்.

adaiyaalam
27-11-2015, 10:21 AM
அன்புடன் முகிலனுக்கு,

மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் கட்டுரையைப் படித்தேன். இது தொடர்பாக உங்களுடன் பேச விரும்புகிறேன். தொடர்பு எண்ணைத் தர இயலுமா? அல்லது 944 37 68004 எண்ணில் அழைக்க இயலுமா?

சாதிக்