PDA

View Full Version : இரவுக் கா(கே)வலன்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2008, 05:39 AM
இரவும் பகலும் தழுவிக்கொள்ளும்
பொன் மாலைப் பொழுதுகளில்
என் காலை புலர்கிறது

ஆடி முடித்து அடங்கும் நேரம்
இரண்டாமாட்ட காட்சியின் துவக்கம்
சில பாவப்பட்ட ஜீவன்களுக்கு மட்டும்

நாலு கால் நாய்களெல்லாம்
பங்களா பளிங்குகளில் படுத்துறங்க
கம்பிக் கதவுகளின் வெளியே
இரண்டு கால் நாயாக நான்.

வாழ்க்கையில் நிமிர்ந்து “நிக்கணும்”
எந்த நேரத்தில் சொன்னாரோ என் ஆசான்
நிற்பதே என் வாழ்க்கையாகி போனது

பொக்கை வாய் காந்தி நோட்டுகளும்
சீமான் வீட்டு ஆபரணங்களும்
வங்கிப் பெட்டகத்தில் கண்ணுறங்க
கொடியில் காயும் துணிகளுக்கும்
செடியில் பூக்கும் மலர்களுக்கும்
இரவுக் காவலன் பணி

தட்டினால் மட்டுமல்ல
குட்டினாலும் எட்டி விழும் என்னை
எதிர்த்து வந்தவர்களை
எப்படியும் பந்தாடி விடுவேனென்ற
ஏகபோக நம்பிக்கைக்கு பாதியும்
எட்டி வாங்கும் சம்பளத்திற்கு மீதியுமாய்
இரவு முழுவதும் மாரத்தான் ஓட்டம்

எல்லோருக்கும் இதமளிக்கும் இரவுகள்
என்னை மட்டும் சுடுகிறது
ஓர வஞ்சனையாய்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmai.com
junaid-hasani.blogspot.com

இளசு
12-07-2008, 07:38 AM
விளிம்புநிலை மனிதர்களுக்காக
கழிவிரங்கும் மனம் உமக்கு!

கூர்க்கா, நைட் வாட்ச்மேன் -
இயற்கை அளித்த உடலுள் கடிகாரத்தை
எதிர்த்தபடியே எப்போதும்!

மருத்தும், தீயணைப்பு, காவல்,பல தொழிற்சாலைகள் , இப்போது மென்பொருள்-
இப்படி இன்னும் பல துறைகளிலும் இரவு விழித்தல் நேர்கிறது.

என்றாலும்,
வெட்டியாய் வெளிவாசலில் நின்றபடியே இருப்பவர் நிலை
இக்கவிதை மூலம் முழுதாய் உணரமுடிகிறது..

பாராட்டுகள் ஜுனைத்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2008, 07:57 AM
பாராட்டுக்கு நன்றி இளசு அண்ணா.

தீபா
12-07-2008, 08:29 AM
எங்க வீட்டு கூர்க்கா, ராத்திரி 2 மணி ஆச்சின்னா தூக்கிடுவாரு.. தெருவுக்கு ஒரு கூர்க்கா போட்டிருப்பாங்க, ராத்திரியானா விசிலடிச்சு யாரையும் தூங்க விடமாட்டாரு. எல்லா கூர்க்காக்களும் இப்படி இல்லல. சில தூங்காதே தம்பி' களும் உண்டு.

எங்க அம்மா எங்கிட்ட வேடிக்கையா சொல்லுவாங்க,

"இந்த கூர்க்காக்கள் அமெரிக்க நேரத்தில தான் வேலையே செய்வாங்கன்னு...

கவிதை சூப்பருங்கோ!!

ஓவியன்
12-07-2008, 09:09 AM
இரவுக்காவலன்
தூக்கம் தொலைத்து
விழித்திருப்பதால்தான் பலர்
தூக்கம் தொலையாது
நிம்மதியாக இருக்க முடிகிறது..!!

உணர்ந்து உருவாக்கிய
அழகுக் கவிதைக்கு
என் சல்யூட் ஜூனைத்..!!

நாகரா
12-07-2008, 11:11 AM
நாலு கால் நாய்களெல்லாம்
பங்களா பளிங்குகளில் படுத்துறங்க
கம்பிக் கதவுகளின் வெளியே
இரண்டு கால் நாயாக நான்.


வார்த்தைகளின் ஆளுமை அபாரம்.

நள்ளிரவில் விழித்திருந்து
மௌனமாகக்
கவிதை ஊளையிடும்
நானும்
ஓர் இருகால் நாய் தான்
இரவுக் காவலனைப் போல்.

நல்லதோர் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஹஸனீ. தொடரட்டும் உம் கவி விருந்து. நன்றி

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2008, 11:40 AM
ஆஹா. நாகரா நானும் உங்க ஜாதிதான்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.

Narathar
12-07-2008, 11:51 AM
பொக்கை வாய் காந்தி நோட்டுகளும்
சீமான் வீட்டு ஆபரணங்களும்
வங்கிப் பெட்டகத்தில் கண்ணுறங்க
கொடியில் காயும் துணிகளுக்கும்
செடியில் பூக்கும் மலர்களுக்கும்
இரவுக் காவலன் பணி



தெளிவான வார்த்தைப்பிரயோகங்களால்
சொல்ல வந்தததை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்....

இப்படி நேர்த்தியாகவும்
யதார்த்தமாகவும் எழுத சிலரால் தான் முடியும். அதில் ஒருவர் நீங்கள் வாழ்த்துக்கள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2008, 12:14 PM
நன்றி நாரதா.