PDA

View Full Version : என் முதல் மனைவி - தங்கவேல்



தங்கவேல்
09-07-2008, 02:56 AM
மீண்டும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி. பள்ளியில் 11 மணி வாக்கில் லட்சுமி என்ற 55 வயது ஆயாம்மா ஆசிரியர்கள் அனைவருக்கும் தினமும் டீ கொண்டு வந்து கொடுப்பார்கள். சின்ன டம்ளர். நான்கு சிப் தான் வரும். எனக்கும் தினமும் கொண்டு வந்து கொடுப்பார்கள். திடீரென்று ஒரு நாள் , கம்யூட்டர் சார் நாளைக்கு வரும்போது டீக்கு காசு கொண்டு வந்து தாருங்கள் என்று சொன்னார். காசா ? எதுக்கு என்று கேட்டேன். அப்போது தான் சொன்னார்கள் விஷயத்தை. பார்ஸல் டீ வாங்கி வந்து அதைச் சின்ன டம்ளரில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பாராம். ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்கும். எனது முறை வருவதற்கு 20 நாட்கள் ஆகுமாம். சரி ஆயாம்மா. நாளைக்கு கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

நான் தங்கியிருக்கும் ஆஸ்ரமத்தின் கணக்காளர் ஒரு சாமியார். அவருக்கும் எனக்கும் அறவே ஆகாது. ஏனெனில் நான் நேரடியாக தலைமைச் சாமியாரிடம் தான் தொடர்பு கொள்வேன். தினமும் தல சாமியாரிடம் இரண்டு மணி நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்பேன். அது இவருக்குப் பிடிக்காது. தல சாமியாருக்கு அடுத்த பொசிஷன் இந்த கணக்காளர் சாமியார்தான். ஆஸ்ரமத்திற்கு வரும் அனைத்துப் பெரிய மனிதர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவரைச் சந்தித்து, அனுமதி வாங்கிய பின்னர் தான் தல சாமியாரை பார்க்க இயலும். என்னிடம் சொல்லிவிட்டுதான் பெரிய சாமியை ( தல சாமியை இப்படித்தான் அழைப்பார்கள்) சந்திக்கனும் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி பெரியசாமியிடம் சொல்லியபோது, அவருக்கு வேறு வேலை இல்லை. நீ எப்போது வேண்டுமானாலும் எனது அறைக்கு வரலாம் என்று சொல்ல, கணக்காள சாமியாரிடம் பெரிய சாமி இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று சொல்ல அவருக்கு என் மேல் சரியான கடுப்பு. அந்தக் கடுப்பை என்னிடம் காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் போல.

லட்சுமி டீக்கு காசு கேட்கும்போது பெரிய சாமி வெளியூரில் இருந்தார். அந்த நேரம் பார்த்து என்னிடம் பைசா கிடையாது. வேறு வழி இல்லாமல் கணக்காள சாமியிடம் சென்று இப்படி இப்படி என்ற விபரத்தை சொல்லி காசு கேட்டால், அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. வேனுமென்றால் டீ குடிக்காமலிரு என்று சொல்லிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லட்சுமி அதைக் கேட்டபடி நின்றிருந்தார். நான் தர்மசங்கடமாக அறைக்கு திரும்பி விட்டேன்.

மறு நாள் காலையில் கிச்சாவிடம் காசு வாங்கி வைத்திருந்தேன். லட்சுமி வந்தார். டீ கொடுத்தார். வடை ஒன்றினையும் கொடுத்தார். என்ன ஆயாம்மா கவனிப்பு பலமா இருக்கு என்றேன். ஒரு முறை முறைத்தார். அந்த மொட்டை சாமிகிட்டே எதுக்குபோய் காசு கேட்டீங்க. எனக்கிட்டே சொல்ல வேண்டியது தானே என்றார். பெரியசாமி இல்லை ஆயாம்மா. அதான் என்றேன். அவனும் அவன் மூஞ்சியும் என்று கண்டபடி திட்டினார். வேண்டாமென்று தடுத்தேன். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கும் அரசியல் எனக்கு மட்டும்தானே தெரியும். லட்சுமிக்கு எங்கே தெரியும் என்று நினைத்துக் கொண்டு விடுங்க ஆயாம்மா, இந்தாங்க காசு என்று கொடுக்க முறைத்து விட்டு காசு வாங்காமல் சென்று விட்டார். நான் பலமுறை வற்புறுத்தியும் வாங்க மாட்டேன் என்றார்.

மாலையில் கிச்சாவிடம் காசினை திரும்பக் கொடுத்தேன். என்ன தங்கம் விஷயம் என்று கேட்க லட்சுமி காசு வேண்டாமென்று சொல்லிவிட்டார் என்று சொன்னேன். படுபாவி கிச்சா அதன் பின் செய்த வேலைதான் பெரியது.

ஆசிரிய ஓய்வறைக்குள் டீ கொடுக்க சென்ற போது கிச்சா, லட்சுமி தங்கத்துக்கு கிட்டே மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேன் என்கிறாய். அவர் என்ன உன் வீட்டுக்காரரா என்று கேட்க , லட்சுமியும் ஆமா அப்படித்தான் வச்சுக்கங்க. என் உசிரு இருக்கும் வரைக்கும் அவரிடம் காசு வாங்க மாட்டேன் என்று சொல்ல கிச்சா பள்ளியில் இருக்கும் அனைவரிடமும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து பள்ளியிலிருக்கும் அனைவரும் என்னை லட்சுமி வீட்டுக்காரர் என்றழைக்க ஆரம்பித்து விட்டனர்.

லட்சுமி ஆயாம்மாளிடம் என்னைப் பற்றி உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கிறார் என்று தான் விசாரிப்பார்கள். பிரின்ஸிபாலும் அப்படித்தான் விசாரிப்பாராம். என்னிடம் வந்து எங்கே தங்கம் உன் மனைவி என்பார்கள். நானும் சிரித்துக் கொண்டே சொல்வேன். பசங்ககிட்டே லட்சுமி ஆயாம்மாவை அழைச்சுட்டு வாங்கடா என்று சொன்னால் அவர்களும் உங்க வீட்டுக்காரர் கூப்பிடுகிறார் என்று போய் சொல்வார்கள். அந்த நேரத்தில் பிரின்ஸ்பால் ஏதாவது வேலை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு என் அறைக்கு ஓடி வருவார்கள். வீட்டுக்காரரே, இந்தாங்க டீ என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே கொண்டு வந்து தருவார்கள்.

இதற்கிடையில் பெரிய சாமி வெளியூரில் இருந்து திரும்பி வர, நான் அவரிடம் விஷயததைச் சொன்னேன். அன்றிலிருந்து ஆஸ்ரமத்தில் இருந்து ஐந்து பேர் குடிக்கும் அளவுக்கு சுத்தமான பாலில் பள்ளிக்கு டீ அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து விட்டார் பெரியசாமி. கணக்காள சாமிக்கு ஆப்பு அடித்தேன் அந்த விஷயத்தில். அதிலிருந்து கணக்காள சாமி என்னிடம் எந்தப் பிரச்சினையும் செய்வதில்லை.

ஒரு நாள் லட்சுமியைக் காணவில்லை.டீச்சர் ஒருவர் அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, லட்சுமி வீட்டுக்கு சென்றேன்.
அங்கு என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார்.என்ன சாரு.. ஏன் இங்கேயெல்லாம் வந்தீங்க என்று கடிந்து கொண்டார். எங்க உன் வீட்டுக்காரர் என்றேன். அதான் நீங்க இருக்கீங்களே என்றார். அவருக்கு சின்ன வயதிலேயே கணவர் இறந்து விட்டதும் அவருடைய பையனும் நோயில் இறந்துவிட்டதும் பின்னர் தான் தெரிந்தது.

பெரிய சாமியும் நானும் காரில் சென்னை சென்று கொண்டிருந்த போது “உன் மனைவி எப்படிப்பா இருக்கிறார்கள்?” என்று கேட்க நான் விழித்தேன். சுதாரித்துக் கொண்டு ”நல்லா இருக்காங்க சாமி” என்றேன். ”என்ன ஒரு அன்பு” என்று உரக்கச் சொல்லியபடி சிரித்தார்.”ஆமாம் சாமி” என்றேன் நான்.

எனது மனைவி (காதலி) ஒருமுறை பள்ளிக்கு என்னைச் சந்திக்க வந்தபோது அவளிடம் என் முதல் மனைவி என்று லட்சுமியைத்தான் அறிமுகம் செய்து வைத்தேன். லட்சுமிக்கு எனது காதலியைப் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி. என்னைப் பற்றி ஆகா ஒகோவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

முதல் மனைவி, எனது இரண்டாவது மனைவியாக வரப்போகிறவளிடம் கணவனைப் பற்றி புகழ்ந்துரைப்பதை எங்காவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா ?????

mukilan
09-07-2008, 03:12 AM
புரிதலும் நம்பிக்கையும் இருந்தால் முதல் மனைவி என்று இல்லை என் முன்னாள் மனைவிகள் என்று சொன்னாலும் சந்தேகம் வராது. சுவாரசியமான நினைவுகள். அதைவிடச் சுவாரசியமான மனிதர்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி தங்கவேல்.

aren
09-07-2008, 03:15 AM
வித்யாசமான உறவுமுறை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நடந்த்தை அருகில் இருந்து பார்த்ததுமாதிரி இருந்தது.

தொடருங்கள்.

சாலைஜெயராமன்
09-07-2008, 03:24 AM
புனிதமான உறவுகளை வாழவைத்த லட்சுமியும் அதைவிட அந்த உறவை கொச்சையாகக்ாமல் மதித்து உங்கள் மனைவிக்கே அறிமுகப்படுத்தியதும் மனித நேயத்தின் மற்றொரு மைல்கல்.

இதில் பாராட்டுக்குரியவர் நீங்களா, உங்கள் முதல் மனைவியா அல்லது மனைவி(காதலியா) யார் முதல் பரிசுக்குரியவர் என்பதுதான் என்னுடைய குழப்பம்.

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க

இந்தப் பாடல் வரிதான் ஞாபகம் வந்தது திரு தங்கவேல்.

Narathar
09-07-2008, 03:32 AM
அற்புதமான சில உறவுகள் கடவுள் கொடுத்த வரம்..........

அந்த வரம் உங்களுக்கு(ம்) கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்கின்றேன்.

இன்னும் எழுதுங்கள்

ஓவியன்
09-07-2008, 03:36 AM
அற்புதமான உறவுகள்
அழகான புரிதலுடன்
சேர்ந்தே அமைவது
வாழ்வின் பாக்கியம்...!!

அந்த வகையில் நீங்கள் பாக்கியசாலி தங்கம் அண்ணா..!! :icon_b:

சிவா.ஜி
09-07-2008, 08:03 AM
55 வயதுடைய மாது...மனைவி ஸ்தானத்திலா....அதுவும் திருமணமாகாத வாலிபருக்கு....என்னக் கொடுமை சரவணன்...?

இதயம்
09-07-2008, 08:31 AM
இந்த பதிவை படித்ததில் எனக்கு ஆன்மீகக்கூடங்களில் நடக்கும் அரசியலும், தங்கவேல் சொன்ன தகவல்கள் மூலம் தெரிந்த கலாச்சாரமும் தந்த அதிர்ச்சிகள் தான் மிச்சம்..!! இந்த பதிவால் பலருக்கு குழப்பம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. பொண்டாட்டி என்று தங்கவேல் அடிக்கடி குறிப்பிட்டிருக்கும் இடத்தில் தாய் என்பது பொருத்தமான சொல்லாக கருதுகிறேன். நாம் யாரையும் "இவர் என் தாய் போன்றவர்கள்" என்று சொல்லலாம். ஆனால், மனைவியை தவிர வேறு யாரையும் "இவர் என் பொண்டாட்டி போன்றவர்கள்" என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படி சொன்னால் அது கலாச்சார சீரழிவு..!! வியாபார நோக்கை அடிப்படையாக கொண்ட ஜோடி நம்பர் -1 என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுவோர் ஜோடி மாற்றி ஆடுவதை மிக கடுமையாக விமர்சிக்கும், நாட்டில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள் பற்றி அடிக்கடி வேதனையுடன் மன்றத்தில் பதிவிடும் தங்கவேலுவிடம் இப்படி ஒரு அனுபவமா என்று எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது..!

அடுத்து, தங்கவேலு குறிப்பிட்டிருக்கும் இந்த ஆசிரமத்திற்கு சொந்தமான ஒரு கல்லூரி தொடர்பான ஒரு அனுபவத்தை "பெண்கள் கல்லூரி" என்ற தலைப்பில் தந்திருந்தார். அதில் ஆசிரமங்கள் ஏன் பெண்கள் கல்லூரியை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற மற்றவர்களின் நையாண்டிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முடிந்திருந்தார். ஆனால், தங்கவேலு இருக்கும் ஆசிரமத்தில் பெரிய சாமி, சிறிய சாமி இருவருக்கிடையேயான அரசியல் அல்லது சிறிய சாமியின் தீய குணம் ஆகியவற்றையெல்லாம் பார்த்தால் ஒரு ஆன்மீக ஆசிரமத்தை வழக்கம் போல் சந்தேக கண்ணோடே பார்க்க வைக்கிறது. தங்கவேலின் கருத்துப்படியே சிறிய சாமியார் தீயவர் என்றால் அவரை சாமியாராக மதிக்கும் மனிதர்களின் நிலை என்ன..? அவரை கணக்காளராக கொண்ட ஆசிரமத்தின் தகுதி என்ன..? ஆன்மீகத்தில் ஈடுபடும் துறவிக்கும், பணத்தை கொண்டு நிர்வகிக்கும் கணக்காளர் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்..? ஒரு வேளை இது தான் ஆன்மீக வியாபாரமோ..?

தங்கவேலுவுக்கு கணவன், மனைவி உறவின் அர்த்தம், புனிதம் தெரியுமா..? சம்பந்தமில்லாத காரணங்களுக்காக மற்ற பெண்ணை மனைவி என்பதும், மற்ற ஆணை கணவன் என்பதும் அத்தனை எளிதில் நம் கலாச்சாரத்தில் ஏற்கக்கூடிய விஷயமா..? இவர் என்ன சொல்கிறார்..? எனக்கு நிச்சயம் புரியவில்லை. 55 வயதுடைய ஒரு வயதான பெண்மணி தங்கவேலுவிற்கு மனைவி என்பதை மனம் எப்படி ஜீரணிக்கிறது..?! என் கேள்விக்கான விடைகளை திரியை எழுதிய தங்கவேலோ அல்லது தெரிந்தவர்களோ சொல்லுங்களேன்..!!

தங்கவேல்
09-07-2008, 08:49 AM
இதயம் உங்களின் கேள்விக்கு நன்றிகள்.

முதலில் சாமியார் விஷயத்துக்கு வருகிறேன். கணக்காள சாமியார் தீயவர் அல்ல. அவரை மீறிய ஒரு செயலைச் செய்யும் ஒருவனிடம் நார்மலாக மற்றவர்கள் காட்டக்கூடிய எதிர்ப்பினைத் தான் அவர் காட்டினார். அவர் நன்கு படித்தவர். வேதங்களில் கரை கண்டவர். அன்பான உள்ளம் கொண்டவர் இந்தக் கணக்காள சாமியார். என்னிடம் ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவார். எனது கேள்விகளுக்கு விளக்கங்களும் தருவார். நான் அவரை தீயவர் என்று சொல்லவில்லை. ஆப்பு அடித்தேன் என்ற பதமும் அவரின் அகங்காரத்துக்குத்தான் என்று பொருள் படும் படிதான் எழுதி இருக்கிறேன்.

அடுத்து லட்சுமி ஆயாம்மா விஷயம். சமூகத்தில் புரையோடி இருக்கும் கலாச்சார சீர்கேட்டினிடையே வாழ்ந்து வரும் நம்மைப் போன்றவர்கள் ஆண் ஒருவன் மற்ற பெண்ணிடம் பேசினாலே அதை தவறாகத் தான் பார்ப்பார்கள் என்பதும் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை என்று நம்புகிறேன். அதன் காரணமாகத் தான் அம்மா என்று சொல்லாமால் மனைவி என்று சொன்னார் போலும் எனது நண்பர் கிச்சா.

எனது நண்பர் கிச்சா விளையாட்டாக கேட்க போய் அதுவே லேபிளாய் அமைந்து விட்டது. இதில் பல சமாச்சாரங்கள் இருக்கின்றன. அதீத அன்பின் காரணமாக அந்த லட்சுமி அம்மா என் மீது காட்டும் அன்பிற்காக மனைவி என்று லேபில் கொடுத்தார்கள். அதை தவறு என்று சொல்ல இயலுமா என்ன ???

இதெல்லாம் அதீத அன்பின் காரணமாக விளைந்தது.

தங்கவேல்
09-07-2008, 08:55 AM
இன்னும் ஒரு விஷயம் இதயம். கிராமங்களில் பேரனை பாட்டி என்னைக் கல்யாணம் கட்டிக்கிறியாடா என்று கேட்பார்கள். அது எதன் காரணமாக கேட்பார்களோ அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

சீரியஸா பேச என்ன இருக்கிறது எனது இந்தப் பதிவில் என்று தெரியவில்லை.

சாமியார்களிடம் இருக்கும் அரசியல் பற்றி விரைவில் ஒரு திரி எழுதுவேன். அப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு : நான்கு வருடம் அந்த ஆஸ்ரமத்தில் பணி செய்தேன். பத்து பைசா காசு வாங்கவில்லை. 600 கம்யூட்டர் அசெம்பிள் செய்து, நெட்வொர்க்கிங்கில் இணைத்து எம்சிஏ, பிசிஏ, பிஎஸ்சி மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திருக்கிறேன். என்னிடம் ஏறக்குறைய 250 கல்லூரி மாணவிகள் படித்திருக்கிறார்கள். இந்த ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறி துறை எனது கட்டுப்பாட்டில் இருந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் ஆஸ்ரமத்தில் என்ன செய்தேன் என்று நீங்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆன்மீக வியாபாரம் பற்றி எழுதி இருக்கின்றீர்கள். இந்தக் கல்வி நிலையங்களை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் 200 அனாதைக் குழந்தைகளுக்கு உணவும், உடையும் கொடுத்து படிக்க வைத்து பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார் பெரிய சாமி.

இதயம்
09-07-2008, 09:48 AM
தங்கவேல்.. உங்களின் உடனடி மற்றும் விளக்கமான பதிலுக்கு என் நன்றிகள். என மனசுக்குள் எழுந்து கேட்ட அதே கேள்விகள் மற்றவர்கள் மனதிலும் எழுந்து தொக்கி நின்று விடக்கூடாது என்ற நோக்கம் தான் என் கேள்விகளுக்கு காரணம்.

நீங்கள் உங்கள் பதிவில் அந்த பெண்மணியை அம்மா என்றோ, பாட்டி என்றோ ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தாலும் இந்த கேள்விகளுக்கு வாய்ப்பே இருந்திருக்காது. கலாச்சார சீரழிவு மலிந்து விட்ட இந்த காலகட்டத்தில் நமக்குள் அரக்க குணம் அழியாமல் உறங்கி கொண்டிருந்தாலும், அதை நமக்குள் அடக்கி வைத்திருப்பது உறவுகளின் புனிதம் தான். அதை காயப்படுத்துவதை தாங்க முடியாமல் தான் எழுத நேர்ந்தது தான் என் பதிவு.

பொதுவாக பாட்டி, தாத்தாவை மணம் முடிப்பது பற்றி விளையாட்டாக பேசுவது நம்மில் வழக்கம் தான். அதற்கான காரணம், திருமணம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இரு தலைமுறைகளுக்கிடையில் இல்லை என்பதும், அவர்களுக்கு இடையேயான மிக நெருக்கமான பாசப்பிணைப்பும் தான். ஆனால், உங்கள் அனுபவத்தில் இலட்சுமி அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த உறவென்பது தொழில் முறையில் ஏற்பட்டது தான். எது எப்படியாகினும் உங்கள் இருவருக்கும் இடையேயான உறவை தாய்-மகன், பாட்டி-பேரன் என்று சொல்வது தான் சிறப்பே தவிர, கணவன்-மனைவி என அழைப்பதல்ல..! அதீத அன்பிற்காக மனைவி என்று லேபிள் கொடுத்தார்கள் என்று சொல்லாதீர்கள், காரணம்.. அதீத அன்பு என்றாலே அது அன்னையைத்தான் எப்பொழுதும் குறிக்கும்..!! அப்படி அவர்கள் அழைக்க உங்களுக்கு சொல்லாத வேறு ஏதேனும் காரணமும் இருந்திருக்கலாம்.!! (இந்த இடத்தில் இளசு அண்ணா பாடகி திருமதி. சுசீலா அவர்களின் மேல் கொண்ட அதீத அன்பால் "சுசீலா - என் இரண்டாம் தாய்" என்ற தலைப்பில் திரி தொடங்கியதை நினைவூட்ட விரும்புகிறேன்..!!)

அடுத்து சாமியார்..! இதை சாமியார் என்பதை விட ஆன்மீகவாதி என்று பெயரிட்டு சொல்லி எல்லா மதங்களை சார்ந்தவர்களையும் பற்றி பொதுவாக பேசலாம். ஆசைகளை துறந்து, ஆண்டவனை நோக்கி செல்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள். உண்மையான ஆன்மீகவாதிகள் இவ்வுலக இன்பங்களிலும், அதற்கு தேவையான பணத்தின் மீதும் ஆசை கொள்வதில்லை. ஆனால், அதுவா இங்கே நடக்கிறது..? ஆன்மீகம் என்ற பெயரில் வியாபாரம், அரசியல் எல்லாமே நடக்கிறது. கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கு ஒருவருக்கு இருந்தால் அவர் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, சாதாரண சமூக சேவகராக கூட இருக்கலாம். சரி.. கல்வி தருவது தான் ஆன்மீக அமைப்புகளின் நோக்கம் என்றால் பெரும்பாலான கல்வி நிலையங்களில் அவர்கள் சார்ந்த மதத்தை தவிர மற்ற மதத்தவரை ஏன் சேர்த்துக்கொள்வதில்லை.? ஆக, ஆன்மீக அமைப்புகளின் கல்வி சேவை என்பது மதம் வளர்ப்பது மற்றும் பணம் உள்ளிட்ட வேறு சில ஆதாயங்களை பார்ப்பது போன்ற இரண்டில் ஏதோ ஒன்றையோ அல்லது இரண்டையுமே குறி வைத்து நடத்தப்படுகின்றன.

ஊதியம் பெறாமல் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பணம் பற்றிய ஆவல் இல்லாதவர் நீங்கள் என தெரிகிறது. அதே போல் மதம் தொடர்பான ஆர்வமும் இல்லாமல் அதை ஒரு சேவையாக நினைத்து செய்திருந்தால் நிச்சயம் உங்களை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இப்பொழுதெல்லாம் வியாபாரத்திற்கு விளம்பரம் மிக அதிகம். அந்த விளம்பர யுக்தியில் சமூக சேவையும் ஒன்று. இதற்கு எல்லோரையும் ஒட்டு மொத்தமாக குற்றப்படுத்த முடியாது என்றாலும் பெரும்பாலானவை இது போன்ற இலாப உள்நோக்கம் கொண்டவையே.! உங்கள் பெண்கள் கல்லூரி பதிவின் பெண்களை வைத்து நடத்தும் ஆன்மீக அமைப்புகள் அனைத்தும் குற்றமற்றவை என்று சொல்ல விரும்பியிருக்கிறீர்கள். பள்ளிக்கூடங்களை, ஆன்மீக கூடங்களை பாலியல் கூடங்களாக்கிய ஆசிரமங்கள், ஆன்மீக அமைப்புகள் உங்களுக்கு பட்டியலை தரட்டுமா..? சமூகத்தில் நன்மை, தீமை அனைத்தும் கலந்திருக்கிறது. அதை இனங்கண்டு எச்சரிக்கையோடு நடக்கவேண்டியது நம் கடமை..!!

தீபா
09-07-2008, 09:57 AM
உங்க அனுபவம் அருமை தங்கம். கைதேர்ந்த எழுத்தாளர்களைப் போல இருக்கு.. உங்க கையெழுத்து. லயித்தேன்...

aren
09-07-2008, 09:57 AM
இதயம் அவர்களே,

மிஷின் பள்ளிகள் (கிருஸ்தவ மிஷின், ராமகிருஷ்ணா மிஷின்) அனைத்திலும் அனைத்து மதத்தினரையும் சேர்த்துக்கொள்கிறார்களே. தலைசிறந்த சென்னை கல்லுரிகள் லயோலாவும், விவேகானந்தா கல்லூரியும் மற்ற மதத்தினரை சேர்த்துக்கொள்ளவில்லையா.

எனக்குத் தெரிந்த பல ஜாம்பவான்கள் சென்னை லயோலா கல்லூரியில் பயின்றவர்கள் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் கிருஸ்த்தவர்கள் கிடையாது.

அவர்கள் மதத்தினரை மற்றும் சேர்த்துக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனத்தை நீங்கள் சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இந்தியாவில் இருக்காது.

இதயம்
09-07-2008, 10:15 AM
அவர்கள் மதத்தினரை மற்றும் சேர்த்துக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனத்தை நீங்கள் சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இந்தியாவில் இருக்காது.
அன்பு ஆரென்,
எல்லா மதங்களில் இருந்தும் இதற்கு நிறைய உதாரணம் சொல்லலாம். குறிப்பாக முஸ்லீம் அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் பெரும்பாலும் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் அனுமதி..! அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சிறுபான்மையினரை தூக்கி விட அரசு உள்ளிட்ட எதுவும் ஆதரவாக இருப்பதில்லை என்பது தான். அதே போல் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் பயிலும் மாற்று மத மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ போதனைகள் போதிக்கப்படுவதாக பெரும் குற்றச்சாட்டும் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனால் தான் சொன்னேன், மதம் வளர்த்தலும் ஒரு காரணம் என்று..!!

ஆரென் கேட்ட கேள்விக்கு பொருத்தமான உதாரணம் வேண்டுமென்றால் இந்த திரியின் நாயகர் தங்கவேல் வேலை பார்த்த ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியில் மற்ற மதத்தினருக்கு அனுமதி உண்டா என்று சொல்ல வேண்டும்..!! (ஆசிரத்தின் பெயரை அல்லது பள்ளியின் பெயரை கொடுப்பீர்களா தங்கவேல்..?)

aren
09-07-2008, 10:23 AM
தங்கவேல் அவர்கள் விவேகானந்தா பள்ளி என்று சொல்வதால் அது ராமகிருஷ்ணா மிஷின் பள்ளியாக இருக்கக்கூடும். நான் படித்ததும் ராமகிருஷ்ணா மிஷின் பள்ளிதான். என்னுடைய டெஸ்கில் மூன்று இருக்கைகள். ஒன்றில் நான், என்னுடன் அடுத்த இருந்தவர் ஹாதி ஒரு முஸ்லீம், அடுத்தவர் அகஸ்டின் ஆனந்த்ராஜ் ஒரு கிருஸ்தவர். என்னுடைய வகுப்பில் இன்னும் இரண்டு கிருஸ்தவர்களும் ஒரு முஸ்லீமும் இருந்தார்கள். ஆகையால் ராமகிருஷ்ணா மிஷின் பள்ளியில் அனைத்து மதத்தினரையும் சேர்த்துக்கொள்வார்கள்.

இதயம்
09-07-2008, 10:38 AM
உண்மை தான் ஆரென். கல்விக்குள் மதம் என்ற பேயை நுழைக்காத எத்தனையோ நல்ல அமைப்புகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆசிரம், சாமியார்கள், உள் அரசியல் போன்றவை தான் யோசிக்க வைத்தது.!

விவேகானந்தர் பெயரில் ஏகப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. உதாரணத்திற்கு கூகிள் அம்மனிடம் நான் கேட்ட வரத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் பொருந்தி வந்தவை கீழே..

விவேகானந்தா மெட்ரிக் பள்ளி - ஊத்துக் கோட்டை
விவேகானந்தா மெட்ரிக் பள்ளி - அன்னூர்
விவேகானந்தா மெட்ரிக் பள்ளி - பல்லடம்
விவேகானந்தா மெட்ரிக் பள்ளி - சீர்காழி

இவற்றில் எது தங்கவேல் பணிபுரிந்தது..? அல்லது வேறு பள்ளியா..? தங்கவேல் வரும் வரை காத்திருப்போம்..!!

ஓவியா
09-07-2008, 02:56 PM
தங்கவேல் அண்ணா எந்தப்பள்ளியில் பணிப்புரிந்தார் என்பதை கேட்பதினால் அவருடைய 'சொந்த தகவலை ('பர்சனல்') விசயத்தை கேட்பது போல் அல்லவா உள்ளது. :redface:

இங்கு பலர் தன்னை பற்றிய தகவல்களை மட்டும் ரகசியமாகவே வைத்துக்கொள்கின்றனர். எந்தப்பள்ளி என்று சொல்லவேண்டுமென்றால் முதல் பதிவிலே சொல்லியிருக்கலாமே!!! அதுபோல் தங்கமண்ணாவும் அதை சொல்லாமல் பதிவை நகர்த்தியுள்ளார்.

ஆரேன் அண்ணா மற்றும் இதயம் அண்ணா, (என் கண்களுக்கு பட்டதை சொல்கிறேன்.) தவறாயின் மன்னிக்கவும். (திட்டாதீங்க மக்கா).. இந்த கேள்வி சற்று பாதை விட்டு விழகி செல்வது போல் என்று எனக்கு தோன்றுகிறது.

:redface::redface:

தங்கவேல்
09-07-2008, 04:24 PM
இதயம் உங்களுக்கு என்ன ஆச்சு ? இனிமேல் சுவாரசியமான விஷயம் எழுதவே மாட்டேன். போதும்மய்யா போதும் இன்று நான் பட்ட பாடு. கொடுமைடா சாமி...

இதயம்
10-07-2008, 06:10 AM
தங்கவேல் அண்ணா எந்தப்பள்ளியில் பணிப்புரிந்தார் என்பதை கேட்பதினால் அவருடைய 'சொந்த தகவலை ('பர்சனல்') விசயத்தை கேட்பது போல் அல்லவா உள்ளது. :redface:

சகோதரி ஓவியா..!. ஒருவருடைய அந்தரங்கத்தின் எல்லையை நாம் தீர்மானிக்க வேண்டியது அவசியமல்ல..! அது சம்பந்தப்பட்டவர்களின் மீது அவர் கொண்டிருக்கும் புரிதலை அடிப்படையாக கொண்டது. ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ள ஆதாரமென்பது அவசியம். அதை சம்பந்தப்பட்டவர் தராதிருக்க இரு காரணங்கள் இருக்கலாம். 1. அவருடைய அந்தரங்க பாதுகாப்பு 2. கொடுத்த தகவலின் நம்பகத்தன்மை குறைவு. இதில் எதை தேர்ந்தெடுத்து அவர் பதில் தரவில்லை என்றாலும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. இதை தீர்மானிக்க உங்களுக்கோ, எனக்கோ உரிமையில்லை. சம்பந்தப்பட்ட அவரே செய்யட்டும்..!!

அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவரானால் பள்ளியின் பெயரை ஏன் குறிப்பிட வேண்டும்..? அதனால் தான் கூடுதல் விபரத்திற்காக அவரை எதிர்பார்த்தேன்..!!

இதயம்
10-07-2008, 06:16 AM
இதயம் உங்களுக்கு என்ன ஆச்சு ? இனிமேல் சுவாரசியமான விஷயம் எழுதவே மாட்டேன். போதும்மய்யா போதும் இன்று நான் பட்ட பாடு. கொடுமைடா சாமி...
என்ன தங்கவேல் இதுக்கே இப்படி ஆயிட்டீங்க..? நீங்க எத்தனை பேரை பதிவுகளில் விமர்சனம் பண்ணியிருக்கீங்க..?

ஆனால், நான் ஒரு தகவலை தெரிந்து கொள்ள கேட்கக்கூடாதா..? சரி..நீங்கள் சொல்லாவிட்டாலும் நான் கட்டாயப்படுத்தப்போவதில்லை. அதுவும் ஆரென் என்னிடம் மற்ற மத மாணவர்களை சேர்க்காத கல்வி நிலையங்களை பற்றி கேட்டதால் உங்களிடம் விபரம் கேட்க வேண்டியதாகிவிட்டது. நம் மன்றம் ஒரு குடும்பம் போல்..! நாமெல்லாம் சகோதர, சகோதரிகள். நமக்குள் பகிர்ந்து கொள்ள சம்பிதாயங்களை எதிர்பார்ப்பதோ, தவறாக புரிவதோ கூடாது. வேண்டாம் என்றால் விடுங்கள்..!! மற்றபடி உங்களை மனம் கோண வைப்பது என் நோக்கமல்ல..! அப்படி உங்களுக்கு தோன்றியிருந்தால் என் வருத்தங்கள்..!

aren
10-07-2008, 06:23 AM
ஓவியா நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மைதான், நான் ஒப்புக்கொள்கிறேன். நானும் இதயம் அவர்களும் சேர்ந்து இந்தப் பதிவை திசை திருப்புகிறோம். நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
10-07-2008, 08:49 AM
சகோதரி ஓவியா..!. ஒருவருடைய அந்தரங்கத்தின் எல்லையை நாம் தீர்மானிக்க வேண்டியது அவசியமல்ல..! அது சம்பந்தப்பட்டவர்களின் மீது அவர் கொண்டிருக்கும் புரிதலை அடிப்படையாக கொண்டது. ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ள ஆதாரமென்பது அவசியம். அதை சம்பந்தப்பட்டவர் தராதிருக்க இரு காரணங்கள் இருக்கலாம். 1. அவருடைய அந்தரங்க பாதுகாப்பு 2. கொடுத்த தகவலின் நம்பகத்தன்மை குறைவு. இதில் எதை தேர்ந்தெடுத்து அவர் பதில் தரவில்லை என்றாலும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. இதை தீர்மானிக்க உங்களுக்கோ, எனக்கோ உரிமையில்லை. சம்பந்தப்பட்ட அவரே செய்யட்டும்..!!

அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவரானால் பள்ளியின் பெயரை ஏன் குறிப்பிட வேண்டும்..? அதனால் தான் கூடுதல் விபரத்திற்காக அவரை எதிர்பார்த்தேன்..!!

சரி அவரே தீர்மானிக்கட்டும். :) அந்தரங்கத்தை தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லைதான், ஆனாலும் தவறினை சுட்டிக்காட்டலாம் தானே அண்ணா!!

விளக்கவிரைக்குப்பின் தெளிந்தேன். நன்றி அண்ணா.



ஓவியா நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மைதான், நான் ஒப்புக்கொள்கிறேன். நானும் இதயம் அவர்களும் சேர்ந்து இந்தப் பதிவை திசை திருப்புகிறோம். நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா தவறினை பெரியமனதோடு ஒப்புகொண்டுமைக்கு நன்றிகள். நான் நீங்க இல்லையென்று வாதாடுவீர்கள் என்றுதான் எதிர்ப்பார்த்தேன்..... தப்பாக நினைத்தமைக்கு மன்னிக்க அண்ணா..:). உங்களை கண்டு பெருமைப்படுகிறேன். :)

விகடன்
10-07-2008, 11:18 AM
படித்துக்கொண்டே வந்த எனக்கு இறுதியிலிருந்த அந்த இரண்டு வரிகளிலும் குழம்பி விட்டது.
அவற்றை மீள ஒரு தடவை படித்தேன் புரிந்துகொண்டேன்.

முதல் மனைவி இரண்டாவது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். அதுவும் நீங்கள் அறிமுகப்படுத்திய பின்னர்...
இதை தவறாக புரிந்துகொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோரிற்கும் வந்துவிடுவதில்லை. அந்த வகையில் உங்களின் இரு மனைவிமார்களும் குணத்தில் சிறப்பே.

நல்லதோர் புரிதலுடனான கதை (என்று சொல்லலாந்தானே? ).

பாராட்டுக்கள் தங்கவேல்.

தங்கவேல்
10-07-2008, 12:22 PM
விராடன் இது என் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி. வேண்டுமானால் கரூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நீங்க செக் செய்துகொள்ளலாம். எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை... கட்டுக்கதைகளை எழுத வேண்டிய அவசியம் எனக்கு இன்னும் நேரவில்லை.

அறிஞர்
10-07-2008, 01:55 PM
உண்மையான நிகழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி... தங்கவேல்.
------------
மன்றத்தின் விதிமுறைகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
முறையற்ற வாதங்கள்...
தாக்குதல்கள்....
மதம் தொடர்பான பதிவுகள்..
கலாச்சார அழிவுக்கு காரணமான பதிவுகள்...
போன்றவற்றை நாம் அனுமதிப்பதில்லை.

இந்த பதிப்பில் ஏற்பட்ட வாதமும் முற்றுவதால்.... இந்த பதிவை பூட்டுகிறேன்..., நாளை இடம் மாற்றப்படும்.