PDA

View Full Version : வாழையடி...அன்புரசிகன்
07-07-2008, 07:49 AM
வாழையடி...


ஆலடியில் கத்தரிக்காய் இன்று நல்ல சூடாம். காலை ஐந்து மணிக்கே தறுமு ஒழுங்கை வழியாக சொல்லிக்கொண்டு மிதிவண்டியை விரைவு படுத்தினார். ஆலடியிலேயே நல்ல சூடு என்றால் சுன்னாகம் சந்தையில் இன்னும் அதிகமாக இருக்கும் என்ற அனுமானத்துடன் இன்று கத்தரிக்காய் மூட்டை மற்றும் பறித்து வைத்திருந்த எலுமிச்சை மூட்டை ஆகியவற்றை தனது மிதிவண்டியின் பின் மற்றும் பக்கவாட்டு புறங்களில் கட்டினார் கண்ணு... கண்ணு தறுமு ஆகியோர் அந்த பிராந்தியத்திலுள்ள நடுத்தர விவசாயிகள்... அன்றாடம் விற்கும் மரக்கறிகளில் வரும் வருமானத்தினை வைத்து வயிற்றுப்பசியைப்போக்குபவர்கள். சந்தையில் அவர்களது மரக்கறிகளுக்கு ஓரளவு கிராக்கி வந்தால் அந்த அதிக பணம் அவர்களது சேமிப்பாகி விடும். இது போன்ற சேமிப்புக்களால் தான் அவர்களது வீட்டில் நிகழும் விசேட வைபவங்களுக்கு பணம் ஓரளவாவது கிடைக்கிறது.

டேய் பெரியதம்பி... வாழையிலைய வெட்டி சுருளாக்கி மருதனார்மடம் சந்தைக்கு கொண்டுபோ... ஒரு சுருளுக்கு 20 ரூபாக்கு கீழ குடுக்கவேண்டாம். கொண்டுவந்து லட்சுமிக்கு போடு. அவளாவது பால் தருவாள். என்று அதட்டி கூறிவிட்டு சந்தைக்கு விரைந்தார் கண்ணு. நேய்.... உத நேற்றே சொல்லவேண்டியது தானே ... இப்பதான் உங்கட புருசனுக்கு கண்ணில பட்டதோ? தாயிடம் எரிந்து விழுந்தான் மூத்தவன். டேய் நீ 20 ரூபாய்க்கு மேல வித்தா அவருக்கு இருபத மட்டும் குடுத்துபோட்டு மீதிய உன்ட பொக்கேட்டுக்க போ என்று நகைச்சுவையாக கடுப்பேத்தினான் சிறியவன். அதில்லப்பு... நேற்றே வெட்டினால் வாழையிலை வாடிப்போயிடும்டா... வாடல் இலை அவ்வளவா போகாது என்று அறிவுரை கூறினாள் சரசு... டேய் சின்ராசு... நீயும் வா.. ரண்டுபேரும் வெட்டுவம். வாறதுல ஆழுக்கு பாதி பாதி. என்று பேரம் பேசினான் மூத்தவன். எனக்கு ஒன்டும் வேண்டாம். நீ தந்துட்டு அப்பாட்ட மாட்டீடுவாய். மத்தியானம் கன்டீன்ல எனக்கு 2 கிழங்கு பற்றீசும் 1 ஐஸ்பழமும் பின்னேரம் பள்ளிக்கூட்த்தால வரேக்க 1 தூள் போட்ட மாங்காயும்... ஓக்கே என்றால் சொல்லு. வாறன் என்றான் சிறியவன். டேய்... உது கூட. விக்குறதுல லாபம் வந்தால் தான் உனக்கு... முழுத்தையும் உனக்கு தந்துட்டு நான் என்ன நாக்கே வழிக்கிறது? என்று பொரிந்தான் பெரியவன். சரிடா. ஆழுக்கு பாதி பாதி். ஆனா எனக்கு பற்றீஸ் கட்டாயம் என்று இலஞ்சத்தை பணமாக அல்ல பொருளாக என்ற முடிவுக்கு வந்தனர் இருவரும்.

இருவரும் வீட்டின் முற்றத்திலிருந்த வாழைத்தோட்டத்திலிருந்த இலைகளை மளமளவென வெட்டி அடுக்கினர். தாயார் அவற்றை தகுந்தவாறு ஒழுங்குபடுத்தி நேர்த்தியாக சுருளாக்கி வாழைநாரினால் கட்டி வைத்தாள். ஐந்து சுருள் இருக்கும். அனைத்தையும் நன்றாக அப்படியே கிணற்றடியில் உள்ள நீர்த்தொட்டியில் போட்டுவிட்டு பெரியவன் துலாவினால் 5 வாளி நீரூற்றி அப்படியே தோய்த்தெடுத்தான். சின்னவன் அவற்றை விறாந்தையின் வெளிப்பக்கமாக நீர் வடிந்தோட வைத்தான். டேய் சின்ராசு... சாமிக்கு பூ ஆய்ஞ்சுகொண்டு வா... என்று தாயார் சொன்னாள். பொறுங்கோம்மா... இன்னும் பல்லுத்தீட்டேல... பல்லுத்தீட்டிப்போட்டு கால நனைச்சுப்போட்டு ஆயுறேனே... என்றான். சரி என்றுவிட்டு தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு பூக்களை பறித்தான் சின்னவன். அதற்கிடையி்ல் பெரியவன் குளித்துவிட்டு பெரியறையை சுத்தம் செய்தான். சின்னவனும் குளித்துவிட்டு பெரியறைக்கு வந்து பூக்களை இறைவனுக்கு சாற்றினான். எல்லாக்கடவுளுக்கும் ஒரு பூ வைத்து அவனுக்கு பிடித்தமான முருகனுக்கு மட்டும் மீதிப்பூக்களை அடுக்கினான். டேய் ஏன்டா இப்படி வைக்கிறாய். எல்லாக்கடவுளுக்கும் சமனாக வை. என்றான் பெரியவன். இல்ல... முருகன் மட்டும் தான் வடிவு. மற்றவர்களை பாக்கும் போது எனக்கு பயமாக்கிடக்கு என்றான் சின்னவன். விளக்கேற்றி மனதினுள் தேவாரம் படித்தான் சின்னவன். கடவுளே... இன்டைக்கு நல்ல வில போகவேணும். என்று வேண்டிக்கொண்டான்.

அப்படியே பாடசாலை சீருடைகளை அணிந்துகொண்டு இருவரும் வகுப்பு நேர அட்டவணைக்கு ஏற்றவாறு பாட புத்தகங்கள் அப்பியாசக்கொப்பிகளை அடுக்கினார்கள். அதற்கிடையில் காலை உணவை தயாரித்திருந்த தாய் பாலையும் கறந்து பால் தயாரித்து இருவருக்கும் அவரவர் கோப்பையில் ஊற்றிவைத்தான். பெரியவனாவது பரவாயில்லை. சின்னவன் அவனுடைய கோப்பையினுள் வைக்காவிட்டால் சாப்பிடமாட்டான். குட்டி... சாப்பாடு வைச்சிருக்கன். அண்ணாவுக்கும் சொல்லி இரண்டு பேரும் சாப்பிடுங்கோ... நான் உந்த முத்தத்தை கூட்டப்போறன்.... என்றுவிட்டு முற்றத்தை பெருக்க சென்றாள் சரசு... காலையுணவை முடித்துக்கொண்டு வெட்டிய இலைகளை கட்டிக்கொண்டு இருவரும் சற்றே முன்பாக பாடசாலைக்காக புறப்பட்டனர். அம்மா... போறவழியில சந்தையில குடுத்துட்டு போறம். வந்து காசு தாறன். என்னம்மா.... என சொன்னான் பெரியவன். தாயும் சம்மதிக்கவே இருவரும் பாடசாலை சீருடையுடன் புறப்பட்டனர். சந்தையை அண்மித்ததும் சந்தையின் பின்புறமாக மிதிவண்டியை நிறுத்தியவர்கள் டேய் சின்னவா... முன்பக்கத்தால உள்ளுக்க போய் இந்த மதில் பக்கமா வா.. நான் இந்த இலையை போடுறன். இல்லாட்டி முன்பக்கமா போனா அந்த வீ. சீ க்காரங்கள் (Village Council) வாசலிலேயே ரக்ஸ் அடிக்க நிப்பாங்கள். விக்கிறது இருபதுக்கு. அதுக்குள்ள அவக்கு ரக்ஸூ வேற. என்று புறுபுறுத்தான் பெரியவன்.

சந்தையின் வாயிலால் சென்ற சின்னவன் உள்ளே சென்று அன்றய விலையை விசாரித்தான். செல்வாண்ணை.. என்ன வில போகுது என்று கேட்டான். டேய் சுருளுக்கு 26 போகுதடா... என்ன சொல்றீங்கள் நான் அங்கால கேட்டனான். ஒரு சுருள் 35 க்கு மேல விக்கிறாங்கள். என்ட சுருள்ல 70 துண்டாவது எடுக்கலாம். இண்டைக்கு கல்யாண நாளாம். தெரியும் தானே... என்ன நீங்கள் வாங்கப்போறீங்களா இல்லாட்டி நான் அங்கால போகவா என்றான். சரீடா.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் 28 என்றான் செல்வா... உது சரிவராது. முப்பதென்டா சொல்லுங்கோ... இல்லாட்டி நான் போறன் என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்காக 5 வினாடி காத்திருந்தான். உது சரிவராது. நான் போறன் என்று நடையக்கட்ட சரி தாடா என்றுவி்ட்டு பின்னால வாங்கோ ஐஞ்சு சுருளிருக்கு... நூற்றம்பத கையுல வையுங்க முதல்ல என்றான். அவனை பற்றி நன்கறிந்த செல்வா காசை கையில் வைத்துவிட்டு டேய் அவங்கள் பாக்காமல் கொண்டுவா என்றுவிட்டு பின்தொடர்ந்தான். விற்பவனும் அவர்களுக்கு வரிகட்டியாகவேண்டும். இது வரிகட்டாமல் வாறது... அவனுக்கு அந்த வரிப்பணமே இலாபம் தான். தனது வியாபாரத்தை முடித்துவிட்டு துள்ளியடித்துக்கொண்டு போனான் சின்னவன். பெரியவனிடம் காசைகொடுத்துவிட்டு இந்தா என்ட வேல முடிஞ்சு... மரியதையா மத்தியானம் வந்து நான் கேட்டத தந்திடு. இல்லாட்டி .. என்றிழுக்க சரியடா. உத திருப்பி திருப்பி சொல்லாத. வந்து வாங்கித்தாறன். என்றான்.

இதனிடையில் சந்தைக்குச்சென்ற கண்ணு வீடு திரும்பினார். இன்டைக்கு பரவாயில்ல. நல்ல சூடுதான். ஏதோ ஆண்டவன்ட புண்ணியத்தால இந்த கிழைமையில இப்படி போனா போட்டத எடுத்திடலாம் என்று ஏக்கத்துடன் இறைவனை துதித்தார். இஞ்சரும்... பின்னேரம் பெரியவனிட்ட மெசினை குடுத்து கனகற்ற வளவுக்குள்ள இருக்கிற குப்பைய அள்ளீட்டு வரச்சொல்லு. சின்னவனையும் துணைக்கு அனுப்பு. நல்ல உக்கிப்போய் இருக்கு. ரண்டு மூண்டு நாளில தோட்டத்துக்கு தாக்க வேணும் என்று கூறிவிட்டு காலையுணவுக்கு தயாரானார் கண்ணு... கணவருக்கு அருகிலிருந்தே பரிமாறினாள் சரசு. என்னங்க... இன்டைக்கு மத்தியானம் என்ன சமைக்க? என்று கேட்டாள். கத்தரிக்காயும் தக்காளியும் கிடக்கு. பருப்பும் கிடக்கு. என்றாள். பொறு... தோட்டத்தில கீர போட்டனான். கொஞ்சத்த கொய்ஞ்சு அனுப்புறன் என்றார் கண்ணு. சரீங்க என்றுவிட்டு உங்க அப்பளம் கிடக்கே... சின்னவன் அப்பளம் இல்லாட்டி சாப்பிடமாட்டான் என்று தெரிந்த கண்ணு கேட்டார்.. கிடக்கு. ஆனா முடியப்போது... ஒரு பக்கேட் வாங்கிக்கொண்டுவாங்கோவன் என்றாள்...

மதியம் அவனது தேவையை பூர்த்தி செய்த தமையன் மாலை கல்லூரி முடிந்து வரும் போதும் அவனுக்கு பிடித்தமான உப்புத்தூள் போட்ட மாங்காய் வாங்கிக்கொடுத்தான். இருவரும் ஒன்றாகவே வீடு வந்து சேர்ந்தனர். அப்போது வந்த தந்தையிடம் இந்தாங்கோப்பா...என்று 110 ரூபாயை தந்தையிடம் நீட்டினான். எத்தின சுருள் கொண்டு போனீ என்றார் கண்ணு. ஐஞ்சு என்றுவிட்டு அடுப்படிக்கு சென்றான். தாயிடம் அம்மா 10 தம்பிக்கு வாங்கிக்கொட்டினது. 10 நான் எடுத்தது 20 உங்களுக்கு என்று கணக்கு காட்டினான் பெரியவன். தன் பிள்ளைகளின் நேர்மையை நன்கு அறிந்த தாயவள்... மண்ணுக்கு போற இலை. அவங்களுக்கு போகட்டன் என்பாள்.... மீதி இருபதையும் அவரவர் உண்டியலுக்குள் பிரித்து போட்டாள் சரசு...

அந்த விற்றபணத்தையும் மனைவியிடம் கொடுத்த கண்ணு இந்த முற வருசத்துக்கு பொடியளுக்கு நல்ல உடுப்பா பாத்து எடுக்கவேணும் என்று அவள் காதருகே முணுகினார். டேய்... பின்னேரம் டியூசன் இருக்கோ என்று கேட்டார் கண்ணு... இல்லப்பா ஏன்? என்றான் பெரியவன். தம்பியையும் கூட்டிக்கொண்டு கனகற்ற வளவுக்குள்ள கொஞ்சம் குப்பையிருக்காம். நல்லா உக்கினது. மெசினில அள்ளிக்கொண்டு வாறியோ என்றான். சரீப்பா என்றுவிட்டு சிறியரக உழவு இயந்திரத்தை தயார்ப்படுத்தினான் பெரியவன். டேய். இப்ப வேண்டாம். சாப்பிட்டு ஆறிக்கொண்டு போடா என்றாள் தாய்.

என்னங்க... சங்கக்கடையில நிவாரணம் குடுக்குறாங்களாம். அவங்கள் வாறது தான் பிந்தி. போறதுக்கு முந்தீடுவாங்கள். நாலுமணிக்கு முன்னம் போய் பார்த்து வாங்குங்கோவன்... இன்டைக்கு மத்தியானம் தான் துவங்கினவங்கள். நாளைக்கெண்டா பெரிய கியூவாகிடும். என்று எச்சரிக்கையும் கொடுத்தாள். சரி உந்த பாக்குகளயும் உரபாக்கையும் எடுத்துவை.... கொஞ்சநேரம் ஆறீட்டு போட்டுவாறன் என்றார். பெரியவனும் சின்னவனும் குப்பை அள்ளுவதற்கு தயாரானார்கள். கடகம் மண்வெட்டி போன்றவற்றை எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட தயாராகும் போது சரசின் எச்சரிக்கை இவர்களுக்கும் கிட்டியது. டேய் கனகற்ற வளவு பத்தைக்குள்ள பாம்பு உலாவுறது. கண்டா அடிக்காத.... துரத்திவிடு... உதுகள அடிச்சு அடிச்சு பாவத்த சேர்க்காத. பின்னால நாகதோசம் அது இது என்று சாத்திரியார் சொல்லேக்க மனம் கேட்க்காது. என்று எச்சரித்தாள். பெரியவனிலும் சின்னவன் பாம்பு அடிப்பதில் கில்லாடி... பாம்பின் வாலைப்பிடித்து ஒரு சுத்து சுத்துவான். பாம்பின் முள்ளந்தட்டு பிரிந்து அது நகரமுடியாது இருக்கும் போது அடித்து கொல்லுவான். அவன் அடிக்கும் போது பெரியவன் எங்காவது ஓடிப்போயிடுவான். இவனுக்கு அவனை வெருட்டுவதென்றால் அலாதிப்பிரியம்.

மனைவியிடம் பைகளை வாங்கிக்கொண்டு, இஞ்சரும் அந்த உணவுமுத்திரையையும் நிவாரணக்காட்டையும் தாரும் என்றார் கண்ணு... இலங்கை அரசின் பொருளாதாரத்தடையின் பின் இவ்வாறு கிடைப்பவற்றை வைத்து தான் இவர்களது வாழ்க்கையில் இனிப்பை காண்பார்கள். (சீனியை சொன்னேன்) ஒவ்வொரு மாதமும் திருகோணமலையிலிருந்து வரும் கப்பலில் தான் இந்த பொருட்க்கள் வரும். வரவில்லை எனில் அதோ கெதிதான்.

சகோதரங்கள் இருவரும் கனகரின் வளவில் குப்பை அள்ளுவதில் மும்முரமாய் இருந்தனர். தமையன் அள்ளும் போது ஒரு குச்சியில் நீள சணல் கயிறை தொங்கவிட்டுக்கொண்டு அவனது காலுக்கு அருகில் போட்டுவிட்டு டேய் பாம்படா என்று சொல்லிக்கொண்டு ஓடினான் சிறியவன். இவனும் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடிச்சென்று உழவு இயந்திரத்தில் ஏறினான். பிறகு தம்பி நக்கலடித்து துள்ளும் போது தான் புரிந்தது அவன் செய்தது பயமுறுத்துவதற்காக என்று. காலருகே இருந்த மண்கட்டியால் எடுத்து அவனுக்கு எறிந்தான். அவளோ விலத்தி விலத்தி நின்றுவிட்டு இனி சமாதானம் சரியோ என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து மீண்டும் மும்முரமானார்கள். குப்பையைக்கொண்டு நிரப்பியதும் அவர்களது தோட்டத்தை நோக்கி இருவரும் பயணித்தனர். அங்கு குப்பையை வாரி பறித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இன்டைக்கு விஷேட பேப்பர் வந்திருக்காம் என்று சிலர் கூவிக்கொண்டு கடைகளை நோக்கி விரைந்தனர். அவனும் அதை எப்படியாவது வாங்கிடவேண்டும் என்ற நோக்கோடு வாகனத்தை விரைவுபடுத்தி வீடு சென்று தாயிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடையில் அடித்து பறித்து ஒரு பத்திரிக்கை வாங்கிக்கொண்டான். மண்டைதீவில் விடுதலைப்புலிகளின் அதிரடித்தாக்குதல் என்ற தலைப்பில் ஒரு விஷேட பத்திரிக்கை வந்தது. அதை வாசித்துவிட்டு வீடு திரும்பினான் தமையன்.

டேய் அப்பா சாமான் வாங்கி கஷ்டப்படுவார். நீயும் உதவிக்கு போட்டுவா என்று சரசு கெஞ்சவும் தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சங்கக்கடை நோக்கி இருவரும் விரைந்தனர். அங்கு நின்ற நீண்ட வரிசையில் தந்தையும் நின்றதை கண்ட சின்னவனுக்கு சிரிப்பு. பெரியவனுக்கு எரிச்சல். ஏனிந்த கியூவில நிக்கிறீங்கள். நான் வந்திருப்பனெல்லே... என்றான். இல்லடா... என்றார் கண்ணு. நீங்கள் வீட்ட போங்கோ நான் இவனோட வாங்கிட்டுவாறன் என்றுவிட்டு தந்தையை வீட்டுக்கு அனுப்பினான். இவனது தருணம் வரும் போது தம்பியின் உதவியுடன் அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

கால் கை கழுவிட்டு விளக்கு வையடா என்றாள் தாய். இருவரும் பெரியறையில் விளக்குவைத்துவிட்டு படிக்க மேசைக்கு வந்தனர். வந்திருக்கவும் தான் நேரம்.... வீர் வீர் என எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சாதாரணமாக ஆட்லறி எறிகணைகள் இரண்டு நாடுகளுக்கிடையில் போர்நிகழும் போது பாவிக்கப்படும் பேரழிவு எறிகணை... அவற்றை தான் தமிழீழத்தில் பயன்படுத்துகிறது இலங்கை அரசு. அது ஏவும் போது மிக குறைவான சத்தத்துடன் தான் புறப்படும். இடையில் ஒரு வெடிப்பு வெடித்து அதன் எறிய பாதையைக் கூட்டும். அதாவது ஏறத்தாள இலக்கின் அரைவாசி தூரத்தில் வைத்து அதன் முதலாம்வெடிப்பு நிகழும். அது பேரதிர்வை தரும். சத்தமும் அதிகம். ஆனால் அழிவு குறைவு. பின்னர் இறுதியாக வீழ்ந்து வெடிக்கும் போது இரண்டாவது சத்தம். அது தான் அந்த அழிவை ஏற்படுத்தும். ஏறத்தாள முதலாவது வெடிப்பு கேட்டு 10 வினாடிகளின் பின்னர் தான் இரண்டாவது சத்தம் கேட்கும். ஆனால் வெடித்த அடுத்த கணமே வெடித்தால் எங்காவது அருகில் தான் வீழப்போகிறது என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை. அவ்வாறு தான் அன்று இரவும் கேட்டது. அம்மா செல் பக்கத்தில எங்கயோ விழூது என எச்சரித்தான் சின்னவன். எல்லாரும் புகைக்கூட்டுக்குள்ள போங்கோ என்று என்றுவிட்டு தானும் விரைந்தார் கண்ணு... சின்னவன் ஒவ்வெரு எறிகணைகளையும் எண்ணிக்கொண்டே இருந்தான் வெடிப்பதும் வீழ்வதும் சமனாக இருக்கணும்... திடீர் என இரண்டு எறிகணைகளின் முதல் வெடிப்பு மட்டும் தான் கேட்டது. இரண்டாவது கேட்க்க வில்லை. அதாவது அது வீழ்ந்து வெடிக்கவில்லை என்று அர்த்தம்.டேய் ரண்டு செல் வெடிக்கேல என்று பெரியவனுக்கு கணக்கு காட்டினான் சின்னவன். இவங்கள் பழுதாப்போன செல்ல வாங்கிப்போட்டாங்கள் போல என்று எள்ளி நகையாடினார் சரசு.

சில மணி நேரங்களில் ஊரே அமைதியானது. வீதியிலும் துவிச்சக்கரவண்டிகளில் மணிச்சத்தங்கள் கேட்டன. ஓய்ந்துவிட்டதாக எண்ணி அனைவரும் வெளியே வந்தனர். கண்ணு அந்த 12 அலைவரிசைகள் கொண்ட வானொலிப்பெட்டியுடன் முற்றத்திற்கு சென்றார். தாயார் இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமானார். சின்னவனும் பெரியவனும் அந்த ஜாம் போத்தல் விளக்கு வெளிச்சத்தில் மீண்டும் படிப்பதற்கு தயாரானார்கள். நேரம் இரவு 8.30 ஐ தாண்டியது. தாயார் இரவு உணவுக்காக அழைத்தார். டேய் வாளீக்க குடிக்க தண்ணியில்ல.வாளீக்க தண்ணி எடுத்துக்கொண்டுவாடாப்பு என்று சரசு பெரியவனிடம் கெஞ்சினாள். அவன் பெரிய வாளியை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு டேய் இந்த சின்னவாளியையும் விளக்கையும் கொண்டுவாடா என்று சிறியவனிடம் பணித்தான். போடா மடையா என்றுவிட்டு தந்தையாரிடம் போகவே சின்ராசு அண்ணாவோட போடா என அன்பாக சொல்ல சரி என்று வாளி மற்றும் விளக்குடன் பெரியவனை பின்தொடர்ந்தான். கிணறுக்கு அருகாமையில் இருந்த ஒரு தொகுதி வாழைமரங்களில் ஒரு மரம் சரிந்திருந்தது. சின்னவன் விளக்குடன் அண்மித்து பார்த்தான். பெரிய ஒரு துளைபோன்று வாழை மர அடியில் இருந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த வெடிக்காத எறிகணைகளில் ஒன்று இது என்று.. அம்மா என்று அலறினான் சின்னவன். தந்தையார் பதறியடித்துக்கொண்டு வந்து பார்க்க வந்த ஒரு எறிகணை வெடிக்காது இருப்பதை கண்டதும் ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் இதயம் படபடத்ததென்னமோ உண்மை. டேய் சைக்கிள தூக்கிக்கொண்டு போய் பொறுப்பாளற்ற (த.வி.புலிகள்) காம்பில (CAMP) சொல்லீட்டு ஆக்களையும் கையோட கூட்டீட்டு வாடா என்றார் தந்தையார். பெரியவனும் சொல்லி இருவரை அழைத்துவந்தான்.

வந்தவர்கள் பார்த்துவிட்டு பயப்பிடாதீங்கோண்ணை.... பெருசா ஒன்டுமில்ல. என்றுவிட்டு வந்த சக கூட்டாளிகளிடம் டேய் சாமான தாடா என்றான். அவனும் கொடுத்தான். கொடுத்தது வேறேதுமல்ல. பெரிய வாள்... அண்ணை... கோவிக்காதீங்கோ ரண்டு வாழைமரத்த வெட்டவேணும். என்றார். தனது வீட்டை காத்த மரங்களை பறிகொடுக்க மனம் இல்லை என்றாலும் சரிதம்பி என்று சம்மதம் தெரிவித்தார். அவனும் இரண்டு மரத்தை வெட்டிவிட்டு உள்ளே அந்த துளையை சுற்றி குத்தினான். அப்படியே ஒரு கிளப்பு கிளப்ப வாழை வேர்த்தண்டுகளின் நடுவில் அகப்பட்ட எறிகணை அப்படியே வெளியே வந்தது. அப்போது தான் சின்னவன் ஞாபகப்படுத்தினான். அண்ணா... ரண்டு செல் வெடிக்காம இருந்திருக்க வேணும். ஒன்டு உது. மற்றது எங்க என்டு பாருங்கோ என்றான். அதுதான் இது என்று வந்த போராளியும் எள்ளி நகையாடினார். தம்பியும் படம்பாப்பீங்கள் போல என்று மனதிலிருந்த சுமைகளை நீக்கி நகைச்சுவையாக போராளியிடம் நோக்கினார். சேரமுன்னம் பாத்தனான் அண்ணை... இப்ப எங்க.. என்று விட்டு தன் வேலையில் மும்முரமாக இருந்தான்.அடுத்த எறிகணையும் சற்றே அருகில் வீழ்ந்திருப்பதை கண்டவன் உங்கட வாழமரம் தான் உங்கள காப்பாத்தியிருக்கு என்றான்... காரணம். ஈரலிப்பான நிலம். வாளைமரத்தினடியில் உள்ள தண்டில் எறிகணையின் பருப்பு வெகாது... இரு எறிகணைகளையும் வெளியே எடுத்துவிட்டு இரண்டையும் செயலிழக்க முன் வந்த போராளியில் மற்றவன் சொன்னான். அண்ணை... பிள்ளைகள கூட்டிக்கொண்டு உள்ள போங்கோ. என்றான். ஏன் தம்பி. நீ்ங்களும் தானே என்றான். நாங்கள் பரவாயில்ல. எங்களுக்கு இதுதான் வேல. என்றுவிட்டு உள்ளே அனுப்பினான். பின்னர் கத்தியால் எறிகணையின் கீழ் நுனியை சுற்றி அந்த வாளைத்தண்ணை வெட்டி அப்படியே அந்த ஃப்ளை (fly) ஐ கழற்றினான். அது தான் அந்த வெடிக்கவைக்கும் பொருள். இரண்டு எறிகணைகளையும் செயலிழக்கவைத்துவிட்டு அப்ப அண்ண... நாங்கள் வாறம் என்றுவிட்டு கிளம்பினார்கள். தம்பி நில்லுங்கோ... கொஞ்சம் கோப்பி குடிச்சிட்டு போங்கோ என்றுவிட்டு கோப்பியை நீட்டினாள் சரசு. அன்புடன் சரசு பரிமாறிய அந்த கோப்பியை குடித்துவிட்டு செயலிழக்கப்பட்ட எறிகணைகளுடனும் ஒரு குடும்பத்தை காப்பாற்றிய திருப்தியுடனும் வெளியேறினார்கள் அந்த போராளிகள்... அன்றுடன் அந்த வாழை குடும்பத்தில் ஒன்று எறிகணையின் நச்சுப்பதார்த்தத்தால் பட்டுப்போனது பிந்திய கதை. தன் உயிரை கொடுத்து ஒரு குடும்பத்தை காப்பாற்றியது யாருமல்ல... வாழையடிதான்...


முற்றும்.
ஜாம் குப்பி விளக்கின் மாதிரிப்படம்.

http://img34.picoodle.com/img/img34/4/7/7/f_jambottlelim_6dc1dce.jpg

விகடன்
07-07-2008, 10:59 AM
நன்றாக சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் அன்பு. அதிலேயும் ஒரு தோட்டத்தின் துணை கொண்டு சீவியத்தை நடத்தும் ஒரு கதை. அதிலும் சங்கக் கடை பற்றியும் முத்திரைக்கு உணவு வாங்குவதையும், சொல்லப்பட்டிருக்கும் அழகு தனி.

புகைக்கூட்டிக்கு கீழ (அம்மா) போகச் சொன்னதாக சொல்லி எனது சிறு வயது அனுபவத்தையும் தீண்டிவிட்டீர்கள்.

வாழையடி காத்த கதை அழகு. கதை என்று சொல்வதிலும் பார்க்க சம்பவம் என்று சொல்வதே சிறந்தது எனக் கருதுகிறேன்.


சிக்கன விளக்கில் உப்பு போடுவார்கள். அது மண்ணெய்யின் மடத்திற்கு இருக்கும்.

meera
07-07-2008, 11:11 AM
அண்ணா இது உங்கள் முதல் கதையா??

ரொம்ப நல்லா இருக்கு. சில வார்த்தை புரியவில்லை என்றாலும் யூகிக்க முடிகிறது அதன் அர்த்தம்.

வாழ்த்துகள் அண்ணா.
புகை கூடு என்றால் என்ன? ஏன் அதற்க்குள் போக சொல்கிறார்கள்.

logini
07-07-2008, 11:43 AM
நீங்க இந்த கதையில யாரையும் சாகடித்திட கூடாது என்று கடவுளை வேண்டிகிட்டு படித்தன் அது மாதிரி எதுவும் இல்லாம எழுதி இருக்கீங்க அதுக்கு முதல்ல நன்றி அண்ணா.
அப்பறம் இந்த கதை மிகவும் அருமையாக இருக்கு பேச்சு வழக்கு மாதிரியே எழுதி இருக்கீங்க. இப்படி எல்லாம் நம்ம மக்கள் கஷ்டபடுறாங்களே என்று நினைக்கும் போது மனசு கனக்குது.
கெதியாக விடியட்டும் நமக்கான விடியல்.

விகடன்
07-07-2008, 11:51 AM
புகைக்கூடு:
சமையலறையில் நின்று சமைக்கும் பொருட்டு சீமெந்தால் கம்பிகள் வைத்து கருங்கற்களும் இட்டு (கொங்கிறீட்டு) கிட்டத்தட்ட 400 மில்லி மீற்றர் மொத்தத்திற்கு தட்டு கட்டியிருப்பார்கள். வீட்டின் எந்த ஒரு இடிபாட்டிற்கும் இந்தப்பகுதி மட்டும் இலகுவில் அசைந்து கொடுக்காது.

இது நின்று சமைக்க உருவாக்கப்பட்டிருப்பதால் கீழே போதியளவு இடைவெளி இருக்கும். கிட்டத்தட்ட அரை மீற்றர். இதனுள் விறகு வைப்போம், பெரிய சமையல் பாத்திரங்கள் மண் சட்டிகள் வைப்போம்.

சமைக்கும்போது வெளியேறும் புகையை வீட்டினுள் வராது அப்படியே வீட்டினை விட்டு வெளியே அகற்ற அந்த தட்டிற்கு மேல் புகை போக்கி போல சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த உருவமைப்பையே புகைக் கூடு என்பது.

அன்பு கூறியது போல செல்/ ஆட்லரி அடிக்கும்போது அது எப்படி எங்கே விழும் என்று யூகிக்க முடியாது. அந்த வேளையில் பெற்றோர் தம் பிள்ளைகளை இந்தப் பகுதிக்குள் போய் இருக்கச் சொல்வது வழமை.

சில சமயங்களில் மதிய உணவு தயாரித்தவுடன் போயிருக்க நேரிடும். அப்போது அனல் கூட அடிக்கும்.

எங்களுக்கு அப்போதெல்லாம் இருக்கும் சிந்தனையோ வேறு...
எப்படா இந்த சத்தம் நிக்கும். வெளில சென்று எத்தனை ஏவுகணைத் துண்டுகள் பொறுக்கலாம்... இப்படி...

அன்புரசிகன்
07-07-2008, 02:35 PM
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே...


அண்ணா இது உங்கள் முதல் கதையா??

ரொம்ப நல்லா இருக்கு. சில வார்த்தை புரியவில்லை என்றாலும் யூகிக்க முடிகிறது அதன் அர்த்தம்.

வாழ்த்துகள் அண்ணா.
புகை கூடு என்றால் என்ன? ஏன் அதற்க்குள் போக சொல்கிறார்கள்.

புகைக்கூடு என்பதற்கு விளக்கம் விராடன் தந்துள்ளார். ஆங்கிலத்தில் chimney என்று கூறுவர். இது தான் வெளியிலிருந்து பார்ப்போருக்கு தோன்றுவது... உள்ளே ஒரு விறகு அடுக்குவதற்கு provision இருக்கும். அதற்குள் தான் பதுங்குவோம்....

http://www.schiedel.co.uk/uploads/pics/Prefab-chimney-diagram.gif

அன்புரசிகன்
07-07-2008, 02:42 PM
நீங்க இந்த கதையில யாரையும் சாகடித்திட கூடாது என்று கடவுளை வேண்டிகிட்டு படித்தன் அது மாதிரி எதுவும் இல்லாம எழுதி இருக்கீங்க அதுக்கு முதல்ல நன்றி அண்ணா.
அப்பறம் இந்த கதை மிகவும் அருமையாக இருக்கு பேச்சு வழக்கு மாதிரியே எழுதி இருக்கீங்க. இப்படி எல்லாம் நம்ம மக்கள் கஷ்டபடுறாங்களே என்று நினைக்கும் போது மனசு கனக்குது.
கெதியாக விடியட்டும் நமக்கான விடியல்.

யாரையும் சாகடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கல்ல... ஆயினும் யதார்த்தினை முற்கொணரும் போது அது தவிர்க்கமுடியாது போய்விடுகிறதே...

mukilan
07-07-2008, 02:54 PM
ஈழத்து நடுத்தர விவசாயக் குடும்பத்து வாழ்வின் ஆவணம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த வயதிற்கேயுரிய சின்ன சின்ன ஆசைகள் அந்தச் சிறுவர்கட்கு. குடும்பத்தலைவிக்குரிய பொறுப்புடன் சேமிக்க முற்படும் அந்த தாய்... தலைவர் என்ற முறையில் பிள்ளைகளின் தேவை அறிந்து நிறைவேற்ற முற்படும் அந்த தகப்பன்.....அவசர காலங்களில் உதவிக்கு ஓடி வந்து ஆபத்துக்களை தாம் ஏற்றுக் கொண்டாலும் வாழ வேண்டிய சிறார்கள் வாழட்டும் என்று தன்னலம் பார்க்காத புலிகள் .... இலங்கையில் நடை பெற்று வரும் சந்தை முறை... உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு புகை போக்கியினடியில் தஞ்சம் புக வேண்டிய இக்கட்டான சூழல் என அனைத்தையும் விளங்க வைத்துள்ள இக்கதை.. புனைவென்று சொல்ல முடியாத அளவிற்கு நிகழ்வுகளைப் படம் பிடித்து காட்டியுள்ள அன்புரசிகருக்கு பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
07-07-2008, 03:06 PM
நன்றி முகிலன் அண்ணலே... புனைவென்று இல்லை தான். பல குடும்பங்களின் நிலவரங்களை ஒன்றாக கோத்து விட்ட கதைதான் இது. தவிர இது யாழில் சாதாரணமாக விவசாயியின் ஒரு நாள் வாழ்க்கையை படம்பிடித்து காட்ட முற்பட்டேன். அவ்வளவு தான்.

இளசு
07-07-2008, 07:40 PM
அன்பு அன்பு

எப்போதும் இனிய பென்ஸ்&முகில்ஸ் பின்னூட்டம் இட்டுவிட்டால்
பின்னால் வரும் என்னால் வழிமொழிய மட்டுமே இயலும்..

இங்கும் அதே!

நிஜ நிகழ்வுகளை உனக்கே உரிய நடையில் நேராய்க் கோர்த்து
நீ அளித்த இந்த ஆவணம் - காத்தலுக்குரியது!

அவர்களும், வாழையும் அனுபவித்த அத்தனை உணர்வுகளையும்
வாசிக்கும்போது எனையடைய வைத்ததே கதைத்திறனுக்கு சாட்சி!

என் அன்பு உனக்கு!

அன்புரசிகன்
08-07-2008, 02:25 AM
உண்மையில் பதிந்துவிட்டு வரும் பின்னூட்டங்களை படிக்கும் போது தான் அதன் முழுமை கிடைக்கிறது. நீங்கள் சொன்னபின் தான் அட இப்படியெல்லாம் இருக்கோ என்ற எண்ணம் எனக்கு வருகிறதென்றால் பாருங்கள்....

உங்களின் ஊக்கம் தான் அனைத்திற்கும் காரணம்....

நன்றி அண்ணா...

சிவா.ஜி
08-07-2008, 04:43 AM
தான் பார்த்த, அனுபவித்த, உணர்ந்தவைகளை கதையாக்கும்போது...அது கதை என்ற உருவத்தைக் கடந்து இளசு சொன்னதைப்போல பாதுகாக்கப் படவேண்டிய ஆவணமாகிவிடுகிறது. அன்பு இந்தக் கதையில் அறியத்தந்திருக்கும் அனைத்தும் அவ்வகையைச் சேர்ந்தது.

ஒரு சாதாரண நடுத்தர விவசாயியின் குடும்பத்தைக் கண்முன்னே நடமாட வைத்திருக்கிறார். வெகு இயல்பான சம்பவங்கள், பாத்திரங்களின் எண்ணக்கோர்வைகள். அற்புதம். அபாரம்.

வாழையையும் தென்னையையும் தன் பிள்ளைகளாய் பாவிப்பார்கள் உழவர்கள். அது இங்கே மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. தன்னை வளர்த்து சீராட்டிய குடும்பத்தை தன்னுயிரை ஈந்து காத்திருக்கிறது வாழையடி.

அபாரம் அன்பு. மனம் நிறைந்த பாராட்டுகள்.

pasaam
08-07-2008, 05:51 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - இக்கதையில் பெரியவன் வாழை இலை விற்கிறான். ஆனால் நானோ சிறுவயதில் படிக்கும்போது சுன்னாகம், மருதனாமடம் சந்தைகளில் கீரை விற்பேன். அதன் பின்புதான் பாடசாலை செல்வேன். சிலளைகளில் விலை மலிந்தால், விலைப்படாத கீரையை வீட்டுக்கு திரும்ப கொண்டு போய் ஆடு மாடுகளுக்கு போடுவது வழக்கம். நல்லவேளை இவர்கட்டு அந்த நிலையை ஏற்படுத்தாது, கூடிய விலை வழங்கிவிட்டார் அன்பு ரசிகன்.
மற்றது நாம் அன்று மாட்டு வண்டி கொண்டுபோய் குப்பை அள்ளுவோம். இவர்கள் சற்று முன்னனேறியவர்கள்போலும்.
குப்பி விளக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. என் பிள்ளைகளும் அதே குப்பி விளக்கில்தான் படித்து முன்னேறினார்கள். அடுத்தது புகைக்கூடு - 1983ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு இடப்பெயர்வு வரை தினசரி அடிக்கடி 2 - 3 மணிநேரங்களாவது எனது பிள்ளைகட்கும் எனக்கும் அதே புகைக்சகூடுதான் தஞ்சம். அம்மம்மா அந்த நாட்களை நினைக்கும்போது இப்போதும் மனம் வலிக்கறது. உண்மையிலேயே மனதைத் தொட்ட கதைதான் அன்புரசிகனே.
தமிழ் மக்களது இந்த அவலவாழ்வு எப்போது மாறும்? ஆண்டவன் பதில கூறவேண்டும். கூறுவானா?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - என்று மடியும் இந்த அடிமையின கோலம்.

அக்னி
08-07-2008, 06:45 AM
யதார்த்தக் களநிலை.
பின்னூட்டங்கள் குறிப்பிடுவன போல், நிகழ்ந்த நிகழ்வுகளின் வெளிப்பாட்டு ஆவணம்.
ஒரு சமூக வாழ்வை மையப்படுத்திய கதை, அந்தச் சமூகத்தில் புரையோடிப் போன யுத்தத்தால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களையும்,
அந்த மாற்றங்களினால் உருவாகிய கடினங்களையும்,
மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இதற்கு,

என் பிள்ளைகளும் அதே குப்பி விளக்கில்தான் படித்து முன்னேறினார்கள். அடுத்தது புகைக்கூடு - 1983ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு இடப்பெயர்வு வரை தினசரி அடிக்கடி 2 - 3 மணிநேரங்களாவது எனது பிள்ளைகட்கும் எனக்கும் அதே புகைக்சகூடுதான் தஞ்சம்.
பாசம் அவர்களின் பின்னூட்டமே பெரும் ஆதாரம் ஆகும்.

குப்பி விளக்கில் படிப்பும், புகைக்கூட்டில் தஞ்சமும் அசாதாரண வாழ்வையும், கடினத்தையும் சொல்லி நின்றாலும்,
”குப்பி விளக்கில்தான் படித்து முன்னேறினார்கள்” என்று சொல்வது,
துன்பங்களிலும், உறுதியான உள வைராக்கியம் கொண்ட,
அடக்குமுறைகளிலும், உரம் பெற்று எழுகின்ற,
மக்கட் சமூகத்தை,
ஆதாரப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.

அந்த ஆதார எடுதுக்காட்டைத், தனது பிள்ளைகளின் முன்னேற்றமாக, ஆணித்தரமாகச் சொல்லும் பாசம் அவர்கள்,
தன் பிள்ளைகளைக் காத்து வழிநடத்தியமையில் பெருமைக்குரியவரும்,
முன்னேற்றம் கண்ட தன் பிள்ளைகளினால் பெருமைப்படக்கூடியவரும் ஆகின்றார்.

நுகர்வோரின் வாழ்வின் நிகழ்வுகளை நினைவுறுத்தும் எந்தப் படைப்பும் உயிரோட்டமானதே.
அந்த வகையில் அன்புரசிகனின் ”வாழையடி”,
வாழையடி வாழையாக நிலைக்கப்போகும் படைப்பு எனச் சொல்லலாம்.
பாராட்டுக்கள் அன்புரசிகரே...
யதார்த்தக் கள எழுத்தாளர் அன்புரசிகன் என்று சொல்வது சாலத் தகும் என்று நினைக்கின்றேன்...

ஐந்து நட்சத்திர அந்தஸ்தும், 500 iCash அன்பளிப்பும்...

அன்புரசிகன்
08-07-2008, 11:10 AM
கருத்திட்ட அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.... மறக்கமுடியுமா அந்த குப்பிவிளக்கும் அரிக்கன் லாம்பும்... இன்னும் எத்தனை எத்தனை?

உங்கள் பின்னூட்டங்களை வாசிக்கும் போது ஏதோ அடைந்துவிட்டதாக உணரமுடியாத ஒரு உணர்வு...

மீண்டும் நன்றிகள்.

SivaS
09-07-2008, 12:32 PM
அன்பு அண்ணை ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தின்ர வாழ்க்கய அப்பிடியே படமா காட்டிப்போட்டியள்,வாசிக்கேக்க கண்ணுக்க படமா ஓடிச்சு.:icon_b:
லோஜினி அக்கா சொன்னத போல நானும் வாசிக்கெக்க மனசுக்க ஒரு படபடப்பு இவ்வளவு ஒரு சகோதர பாசம்,குடும்ப பாசம் நிரைந்த குடும்பம் சிதறி விடுமோ எண்டு.அதோட அப்பிடி எத்தனயோ குடும்பங்கள் சிதறி போய்ட்டுது,இருந்தாலும் என்னை கொஞ்சநேரம் பழைய நினைவுகளுக்கு கொண்டு போய்ட்டியள்

அன்புரசிகன்
09-07-2008, 01:20 PM
கண்முன்னே கண்டவற்றை சோடனைகளுடன் எழுதுவதில் ஒரு சுவாரசியம் இருக்கு.... வாசிக்கும் உங்களுக்குத்தான் தலையிடி... :D

கருத்துக்கு நன்றி சிவாஸ்