PDA

View Full Version : அது ஓர் அற்புதமான அனுபவம்...!



தீபன்
06-07-2008, 07:34 AM
(ஆயிரம் ஐந்தாயிரமென பலரும் பதிவுகளை இடுகையில் தத்தி தவழ்ந்து ஒருவளியாக ஐனூறாவது பதிவை எட்டியுள்ளேன். என் இந்த இமாலய சாதனையை நானே மெச்சி சில ஆண்டுகளிற்குமுன் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது என் அனுபவம் மட்டுஅல்ல, ஈழத்து நண்பர்கள் குறைந்தது ஒர்முறையாவது அனுபவப்பட்ட விடயமாகத்தானிருக்கும். - சற்று நீண்ட அனுபவம்தான்... பொறுத்துக்கொள்ளுங்கள்.)



அது ஓர் அற்புதமான அனுபவம்!

05.05.2001
அன்றுங் கூட
சூரியன் கிழக்கில் தான் உதித்தது!
கடிகாரம் வலஞ்சுழியாத்தான் சுற்றியது!
காலையாகாரமாய்
பாணும் மிளகாய்ப் பொரிலும்தான் இருந்தது!
சரவெடிகள் சரமாரியாய்த்தான் வெடித்தன!
அதனால்.
வழமைபோல் புறப்பட்டேன்!

சேறடித்த நீளக்காற்சட்டை
நூல் கிளம்பிய ரீ – சேட்
கையிலொரு கரும்பை – அதனில்
சில காகிதாதிகள்!
பார்க்கையில் ஒரு பரதேசிதான்!

பேரூந்தேறி பல சோலி முடித்து
hardவயர் வகுப்பில்
heart இனை இழந்து
வெள்ளவத்தை மையத்தில்
வெளிவந்து நிற்கையில்
மணி 10.30!

அடுத்து என்ன?
வெளியால பிரச்சின வேளைக்கு வந்து சேர்!
காலையில் கேட்ட அறிவுரை
காதுக்குள் எட்டிப் பார்த்தது!
வீடு திரும்பவென வீதி கடந்து
நடைபாதையோரம் நடந்தவேளை
நண்பனிற்கோர் போன் என
அடிமனது நினைவூட்டியது!

சரி போகுமுன் ஓர் போன் என
போன் பூத்தில் புகுந்த வேளை
முட்டாக்கணிந்த
முஸ்லீம் மோகினிகள்
வாங்கியை வாங்கி காதில் பொருத்த,
பொறுப்போம் சிலவேளை என
வாயிலில் நான்நிற்க,
கருநீல வானில் வந்த
காக்கிச் சட்டை தேவர்கள்
நிற்குமென்னை காரணம் கேட்க,
கொடுத்த விடை புரியாது
புரிந்து கொள்ள விரும்பாது
‘ஏறுபின்னால்’ என்றுரைக்க-
ஏறினேன் நான் தேவரதத்தில்!

சல்மான்கான் சாருக்கான்
மம்தாகுல்கர்னி சூழவிருக்க
தோழரவர் கண்களில் பரிதாபப்பார்வை!
மேலதிகாரி செயலிற்கு
இணக்கமில்லாததன்மை!
ஆயினும்
கடமையின் நிமித்தம்
இணக்கமில்லா நல விசாரிப்பு!

ஏற்றிய வாகனம
வெள்ளவத்தை முழுவதும்
கட்டணமின்றி பட்டணம் காட்டி
தேவலோகத்தில் வந்து ஓய்ந்தது!

“வந்த விருந்தினர் சில நாள் தங்கி செல்லனும்”
அன்பான உபசரிப்பு!
அளவற்ற விருந்தோம்பல்!

மூன்று அறை கொண்ட முன்விடுதி!
முதல்தர அறையெனக்கு!
மொத்தமாய் 4 ½ சதுர மீட்டர் பரப்பு!
அதிலே 1½ சதுரமீட்டர் கழிவறை!
தேவதச்சன் மயனின் சிருஸ்டிப்பல்லவா?
அற்புதமான வேலைப்பாடு!

இந்திரனை காணும் வரை
இரண்டடி கல்லணைமேலிருந்தேன்!
சற்று நேரத்தில்
மாற்று மொழி அதிதிவர
என் அறையில் மாற்றம்!
இரண்டாம் தர அறை எனக்கு ஒதுக்கம்!
முன்னைய அளவீடுதான்!
ஆனாலும்
முன்னையதிலும் வாசம்!

மீண்டும் சிறிது நேரத்தில்
இன்னுமோர் மாற்றுமொழி அதிதி!
‘குடு’ குடுத்த குற்றம் அவரிற்கு!
ஆனாலும் என்னறையில் அவன்!
எனக்கோ
மூன்றாம் தர அறை!

அதுகூட அதேயளவுதான்!
கூடவே
அலங்காரத்திற்காய் சில
இறந்த எலிகள்!
மூன்றறைக்கும் பொதுப்பணியாட்களாய்
பெரியரக பூனைகள்!
அட, அவை பூனைகளல்ல!
எலிகள்!
எப்படித்தான் கதவிடுக்கால்
நுழைகின்றனவோ!
சிறுசிறு பணிசெய்ய
பயிற்சி பெற்ற கரப்பான்கள்!
ஏசி பூட்டாத குறைக்கு
எந்நேரமும் ஈரலிப்பான தரையமைப்பு!

பி.ப 3.30
இந்திரனின் பிரதிநிதியாய்
எம்மொழி குண்டோதரன்
என்னையழைத்து
பேட்டி கண்டான்!

“பெயர்?” சொன்னோன்!
“ஊர்?” சொன்னேன்!
“ஏன்வந்தாய்?” சொன்னேன்!
“எப்போது பிடித்தார்கள்?” சொன்னேன்!
“ஏன் பிடித்தார்கள்?” சொல்லவில்லை!
“எந்த இயக்கத்திலிருந்தாய்?” எதிலுமில்லை!
“இயக்கப்பெயரென்ன?”
‘இயக்கத்திலிருப்பவர்களுக்குதான் இயக்கப்பெயர் இருக்கும்'

பேட்டி சூடானது...
கையைக்காட்டு
காலைக்காட்டு
தோளைக்காட்டு
மனத்திற்குள் நினைத்தேன்,
இவன் மாப்பிள்ளை பார்க்கிறானா...?

இதுவென்ன காயம்?
இல்லாத காயத்தை உண்டாக்கினான்!
சாம்பல் பூசணிக்காய் திருடனை
சாமர்த்தியமாய் பிடிப்பதாய் நினைத்துக் கொண்டான்!
ஆனாலும் நானும்
தமிழனென்பதை அவன்
மறந்து விட்டான்!

பக்கம் பக்கமாய் பதிவு செய்தான்!
பலனின்றி சலிப்படைந்தான்.
மீண்டும் போ அறைக்குள்
ஆதாரம் கிட்டாத ஆத்திரத்தில்
ஆணையிட்டான்!

மாலை வேளை,
சேதியறிந்து சொந்தம் வர
இரவுணவும் சேர்ந்துவர
இதயம் இலேசாகியது!
ஓரிரவு
தனிமைக்கு அமைதிக்கு
தயாரானது!

வெளியிருக்கும் பணியாட்கள்
கொட்ட கொட்ட விழித்திருக்க
சுகமான உறக்கத்திற்கு தயாரானேன் நான்!
ஆடைமாற்றாது
கண்டநேரம் கண்ட இடத்தில்
துயில் கொண்ட பழக்கம்
நேரமறிந்து கைகொடுக்க
கருங்கல்லணையே பஞ்சணையாய்
கண்ணுறக்கம் கண்டேன்!

வெளியே
கடமை மாறும் பணியாட்களின்
கலகலப்பு!
கண்விழித்த போது
கதவிடுக்கால் சிறு ஒளிக்கீற்று!
எழுந்து வந்து நேரம் பார்த்தேன்!
காலை 6.50!
அடடா,
அதிகாலை எழுந்து விட்டேனே!
பல்துலக்கும் செயலிகன்று விடுமுறை!

காலை மீண்டும் வந்தன உறவுகள்
உறிஞ்சும் குழாயும் பைக்கட் ரீயுமாய்!
அருந்தி முடித்து அண்ணாந்தபோது,
“10 மணியாகும் இந்திரன் வர”
அறிவிப்பு காதை தட்டியது!

இதற்கிடையே
இடைப்புகுந்து வேலைபார்க்க
இணக்கம் கண்ட பிரதிநிதி
ஆயிரம் கண்ணனிடம் விடுதலை பெற்றுத்தர
ஆயிரம் ரூபா வாங்கிக்கொள்ள
இந்திரன் வந்து விடுதலைதர
மனமின்றி பிரிந்து வந்தேன்!
மனதார நினைத்து நின்றேன்!

பூலோகம் மீண்ட போது
புன்னகைத்தன பல முகங்கள்!
நானுமொரு காந்தியாய்
நாட்டிற்குழைத்த செல்வாவாய்
நேருவாய் பெரியாராய்
எண்ணிக் கொண்டேன்!

பெட்டியோடு தாள்க்கப்பட்டவன்
பெட்டிதட்டி எழுந்து வந்தால்
எட்டி எட்டிப் பார்க்கும் உலகம் போல்
என்னை நோக்கிப் பல பார்வை!
வேற்றுலகம் சென்று வந்தவன்
நீராகடுமுன்
தீண்டத்தகாதவன் என
தள்ளி நிற்கும் உள்ளங்கள்!

வீடு சேர்ந்து நீராடி
தீட்டுத் தீர்த்து அமர்ந்தபோது
தொல்லைகள்
தொலைபேசி வடிவில் வரலானது!
ஓயாத மணியோசை!
ஓய்ந்து போனது என்தாடை!
தேவலோக விசாரிப்பே
தேவலையென
மனது மறுகிக் கொள்ள
ஆயிரம் அறிவுரையும்
என்னையே தவறாய்க் காட்ட
அலுத்தக் கொண்டது மனது!

தேவலோக சுற்றுப் பயணத்திற்கு
ஆனதென்னவோ ஆயிரம் ரூபாய் தான்!
ஆனாலும்,
அன்பு வைத்த உள்ளங்கள்
தொலைபேசி நிலையங்களில்
தொலைத்த தொகை
அதைவிட அதிகம்!

ஆனாலும்,
இது ஒரு
அற்புதமான அனுபவம்!

Narathar
06-07-2008, 07:46 AM
தீவிரவாதிகள் உருவாவதில்லை
உருவாக்கப்படுகின்றார்கள் என்பதற்கு
உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு....

சோகத்திலும் சுகம் கண்ட
உங்கள் வரிகள் ரசிக்கத்தக்கவை......
அதனுள் இருக்கும் வலிகள்
களையப்படவேண்டியவை

எப்போது?

500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஓவியன்
06-07-2008, 07:55 AM
அண்மையில் ஈழத்து நண்பர்களிருவர் என் காதுபட உரைத்தவை இவை...

நண்பன் 01 - டேய் மச்சான், உனக்கு லீவு எப்ப..??, இலங்கைக்கு எப்ப போறாய்..??
நண்பன் 02 - எப்படிடா போக, அங்கே இருக்கிற நிலையில நான் போனா, உடனே உள்ளே போட்டிடுவாங்கள்...

நண்பன் 01 - உனக்குத்தான் ஒரு பிரச்சினையும் இல்லையே, பிறகேன் பப்பிடுகிறாய்..??
நண்பன் 02 - பிரச்சினை இல்லாததாலத் தான் பயமா இருக்கு, பிடிக்கிறவங்கள் பிரச்சினையான ஆட்களையே பிடிக்கிறாங்கள், பிரச்சினை இல்லாதவங்களையெல்லே தேடிப் பிடிச்சுக் கொண்டு திரியுறாங்கள்...

கேட்டதும் ஒரு ஈழ மைந்தனாக என் இதயம் அழுதது, இப்போது உங்கள் கவிதையைப் பார்த்த போதும்...

ஐநூறு தொட்ட தீபனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
நாளை என்றொரு நாளை வரும்
அந்த நாளுக்காகக் கத்திருப்போம்...

மறத்தமிழன்
06-07-2008, 09:32 AM
அட, நீங்களுமா? சில நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி இருப்பதுபோல நமக்கு கட்டாய சிறைப் பயிற்சி. பரவாயில்லை. இவ்வளவோடு தப்பினீர்களே!

நல்ல, அனுபவம். எல்லோராலும் பெற முடியாத ஒன்று. (நம் நாட்டினரைத்தவிர).
வாழ்த்துக்கள்.

மன்மதன்
06-07-2008, 12:03 PM
500வது பதிவை கவிதையாக அளித்த தீபனுக்கு பாராட்டுகள்..

தீபா
09-07-2008, 06:26 AM
கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கு.. ஆனா புதுமையா இருக்குங்க தீபன். நல்ல அற்புதம்தான். இந்திரலோக அனுபவம்.

எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.