PDA

View Full Version : உறவுப் பச்சோந்திகள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-07-2008, 07:02 AM
விட்டுப்போன உறவுகள்
வந்து விட்ட வரவுகளில்
வலிய வந்து ஒட்டிக்கொள்கின்றன

வெறும் பயலென்றும்
வெட்டிப் பயலென்றும்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய
சுற்றமும் நட்பும்
சுற்றி வளைக்கின்றன

எனக்குத் தெரியாதவாறு
முதுகில் வேல் பாய்ச்சிய
தெரிந்த முகங்களெல்லாம்
யாருன்னு மட்டும் சொல்லு
பிரிச்சு மேஞ்சுடலாமென்று
கிலு கிலுப்பை ஆட்டுகின்றன

சின்னஞ்சிறு வயதில்
சீராட்டி பாராட்டி வளர்த்ததை
மேடைபோட்டு பிரசிங்கிக்கின்றன
நாலணா தந்ததாய் நினைவில்லாத
எத்தனையோ விட்ட சொந்தங்கள்

எதார்த்தமாய் பார்த்தாலும்
என்னைத்தான் குறு குறுவென்று பார்ப்பதாய்
எல்லாரிடமும் சொல்லித்திரிகின்றன
என் மாமன்களும் மாமிகளும்
சேர்ந்து செய்த கலவைகள்

விரோதிகள் வீடு தேடிச்சென்று
கட்டித்தழுவலாம் போலிருக்கிறது
என் இருந்த நிலையிலும்
என் வறண்ட நிலையிலும்
ஒரே நிலையில் இருந்ததற்காய்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
www.junaid-hasani.blogspot.com

பூமகள்
06-07-2008, 07:52 AM
அற்புதம் அபாரம்..!! :icon_b::icon_b:

வறுமையில்..
வாவெனழைக்க
யாருமில்லை...

செழுமையில்..
சிவப்பு கம்பள
வரவேற்பு...

வித்தியாசங்கள்..
விளங்கியும்..

புன் சிரிப்போடு
நடைபோடுகிறோம்..

உள்வலிகள்
இன்னும் காயாமல்
அப்படியே..!

------------------------------------
எப்படிப் பாராட்டவென்று தெரியவில்லை...
மிகச் சிறந்த கரு..!! மனம் தொட்டுவிட்டீர்கள்..!!

பாராட்டுகள் ஜூனைத் அண்ணா. :)

இளசு
06-07-2008, 12:02 PM
ஈரம் கண்ட இடம் மொய்ப்பதில்
ஈக்கள் மேல் என்ன குறை?

வாழ, நிலைக்க - இயற்கை
உயிர்களுக்கு அளித்த கொடை!

மனிதர்கள் எல்லாம் மிருகங்கள்..
சமூகம் ஒரு நவீன காடு!

புரிந்து கொண்டால் துன்பமில்லை!
வரித்து, வடிவம் மாறும் போது துடித்து
துவண்டு போகத் தேவையில்லை!

--------------------------------

யதார்த்த நிகழ்வுகளைத் தைக்கும் கவியூசிகளாய் ஏற்றும்
சமூகக் கவி ஜூனைத்துக்கு பாராட்டுகள்!

Keelai Naadaan
06-07-2008, 12:36 PM
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உறவுகள் இல்லையேல் வாழ்வில் பிடிப்புகள் இல்லை.
வசதி இல்லாதவருக்கு கிடைக்கும் மரியாதை எல்லோரும் அறிந்ததுதான். உறவுகளைப் பற்றி குறை சொல்லி என்ன செய்ய..?
யதார்த்த கவிதை. பாராட்டுகள்

மன்மதன்
06-07-2008, 12:38 PM
கவிதையின் கரு மனித வாழ்க்கையின் மாற்ற முடியாத விதி.

ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு..அவர்களை
இனம் கண்டு கொள்வதே உங்கள் பொறுப்பு..


இளசு அண்ணா சொன்ன மாதிரி ..வாழ்க்கையை
புரிந்து கொண்டால் துவண்டு போக தேவையில்லை.

அருமையான கவிதை..

கவிஞர் ஜூனைத்திற்கு பாராட்டுகள்..

சிவா.ஜி
06-07-2008, 01:10 PM
வறண்ட குளத்தருகே யாரும் வருவதில்லை, நிறைந்துவிட்டால்...வழிப்போக்கரும் வந்து நீரருந்தவே விரும்புவர்.

இதை நன்கு உணர்ந்தவன் நான். என்னுடைய ஒரு கவிதையில் எழுதியிருந்தேன்....
நேற்று என்னிடம் எதுவுமில்லை
உறவுகள் உட்பட
இன்று எல்லாமே இருக்கிறது
உறவுகள் உட்பட

இதுதான் உலகம். அருமையான வரிகளில் உண்மைகளைச் சொல்லும் உங்கள் கவிதை அருமை ஜுனைத். அதிலும் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் எதிரிகளே மேல் என்ற நிதர்சனம்...வெகு அருமை. வாழ்த்துகள்.