PDA

View Full Version : சம்பிரதாய அழைப்பு!!சிவா.ஜி
05-07-2008, 01:59 PM
நெருங்கிய சொந்தம்தான்...
செல்வத்தில் உயர்ந்ததால்
நெருங்க முடியாத சொந்தமும்தான்!
பத்தோடு பதினொன்றாக
பத்திரிக்கை வைக்கப்பட்டது.....
திருமணம் பெரு மண்டபத்தில்..
பன்னீர் சொம்புகளும்
பாதி உயர்ந்துதான் தயக்கத்தோடு
துளிகளைத் தெளித்து வரவேற்றது!

உதடு மட்டும் வாவென சொன்னாலும்
கண்கள் ஏன் வந்தான் இவனெனக் கேட்டது
பட்டும் பகட்டும் நிறைந்திருந்த இடத்தில்...
பட்டும் படாத வரவேற்பு வலித்தது..
குடிக்கப்போகும் கணவனைக்
காலைப்பிடித்து தடுக்கும் மனைவியாய்
தயக்கம் கால்களை தடுத்தது!

முடிந்தவரை விரல்விரித்து...
முடிந்துகொண்டு வந்த பரிசை
மறைத்துக்கொண்டது கைகள்...
பளபளக்கும் சொந்தங்கள்
பார்த்து நகைக்குமுன்
பரிசளித்து வெளியேற விரும்பியது
வந்தவனின் நொந்த நெஞ்சம்!

தானாய் தவிர்த்த சந்தர்ப்பங்கள் பாதி..
தடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மீதியாய்
மணமேடையணுகி, மணமகனை நெருங்கி
கொண்டு வந்ததைக் கொடுத்துவிட்டு-அது
சென்று சேர்ந்த இடத்தையும் பார்த்துவிட்டு
உண்டு போகலாமென உணவுக்கூடம் வந்தவன்..
உடைப் பார்த்து, அழைக்க ஒருவருமில்லாமல்
உறவு சொல்லி உண்ண விருப்பமுமில்லாமல்
அரைநாள் வேலைக்காவது போனால்
அடுத்தநாள் அடுப்பெரிக்கலாமென....
வாய் நிறைய வாழ்த்திவிட்டு
வயிறு நிறையாமல் வெளியேறினான்!

இதயம்
05-07-2008, 02:10 PM
ஒருவனின் மனம் காணாமல், அவனின் பணம் காணும் ஊன உள்ளங்களுக்குள் சாட்டையாய் சொடுக்கும் கவிதை இது. ஒரு கதையாக எழுதினாலும் கூட உள்ளம் உருக்கி விடும் சக்தி படைத்தது அவர் எடுத்துக்கொண்ட இந்த கருவும், அவரின் நடையும். அதுவும் கதை, கவிதை என இரண்டு மட்பாண்டங்களையும் மிக இலாவகமாய் வடிவமைக்கத்தெரிந்த கைதேர்ந்த குயவனுக்கு (சிவா) சொல்லியா தர வேண்டும்? பாண்டம் அழகாய் ஒளிர்கிறது, அதன் கருத்தோ உலக மனிதர்களின் உள்ள அழுக்கை ஒளிக்காமல் சொல்கிறது.!

பாராட்டுக்கள் சிவா..!

சிவா.ஜி
05-07-2008, 02:13 PM
கவிதையின் கருவை அழகாய் உணர்ந்து, சிறப்பான பின்னூட்டத்தால் கவிதையை சிறப்பித்தற்கு மனமார்ந்த நன்றி இதயம்.

இளசு
05-07-2008, 02:42 PM
ஒரு கைதேர்ந்த இயக்குநர், ஒரு பிறவி நடிகர், நல்ல ஒளிப்பதிவாளர் - மூவர் இணைந்து உருவாக்கும் காட்சியை

தனியொருவராய் படம் பிடித்து பதித்தார் சிவா!

தொண்டையில் சிக்கிய முள்ளாய் சில நிர்ப்பந்தங்கள்
வாழ்க்கையில் வாய்த்துவிடுகின்றன - எல்லாருக்குமே!


இவன் விழுங்கினானா? துப்பினானா?

இப்போதைக்கு இது இடைவேளை வெளியேறல்!
அடுத்த முள் காத்திருக்கிறது -எங்கோ என்றோ!பாராட்டுகள் சிவா!

mathura
05-07-2008, 02:47 PM
யதார்தமான வார்தைகள்.வலுவாக சொல்லி வளமாக புரியவைக்க வலிய வந்து விழுந்த வார்தைகள்.
ஏழை உள்ளத்தின் எதிரொலி. அழியா கவிதை. வாழ்க

சிவா.ஜி
05-07-2008, 02:51 PM
தொண்டையில் சிக்கிய முள்ளாய் சில நிர்ப்பந்தங்கள்
வாழ்க்கையில் வாய்த்துவிடுகின்றன - எல்லாருக்குமே!


இவன் விழுங்கினானா? துப்பினானா?

இப்போதைக்கு இது இடைவேளை வெளியேறல்!
அடுத்த முள் காத்திருக்கிறது -எங்கோ என்றோ!


மிகச் சரியான வார்த்தைகள். அடுத்த முள் அவனுக்காய் காத்திருக்கிறது. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..:icon_b:

மிக அழகான பின்னூட்டம் இளசு. மனம்நிறைந்த நன்றி.

சிவா.ஜி
05-07-2008, 02:54 PM
யதார்தமான வார்தைகள்.வலுவாக சொல்லி வளமாக புரியவைக்க வலிய வந்து விழுந்த வார்தைகள்.
ஏழை உள்ளத்தின் எதிரொலி. அழியா கவிதை. வாழ்க

ஏழை உள்ளத்தின் ஒலி இப்படிப்பட்ட நேரங்களின் இரைச்சலில் எதிரொலிக்காமலேயே அடங்கிவிடுகிறது. எதார்த்தமாய் இருந்தாலும் வலிக்கிறது.

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி மதுரா.

மன்மதன்
05-07-2008, 02:57 PM
கதை, கவிதை என இரண்டு மட்பாண்டங்களையும் மிக இலாவகமாய் வடிவமைக்கத்தெரிந்த கைதேர்ந்த குயவனுக்கு (சிவா) சொல்லியா தர வேண்டும்?


ஒரு கைதேர்ந்த இயக்குநர், ஒரு பிறவி நடிகர், நல்ல ஒளிப்பதிவாளர் - மூவர் இணைந்து உருவாக்கும் காட்சியை
தனியொருவராய் படம் பிடித்து பதித்தார் சிவா!


இதயம், இளசு அண்ணா இருவரின் பின்னூட்டத்தை விடவா நான் எழுதிவிட முடியும்..

கவிதை வெகு சிறப்பாக இருக்கிறது.

முத்திரை கவிதை..!!

சிவா.ஜி
05-07-2008, 03:02 PM
உங்கள் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கு மகிழ்வுடன் நன்றி மன்மதன்.

பூமகள்
05-07-2008, 03:09 PM
இல்லாத கொடும் பேதை.. (பேதைக்கு ஆண் பால் என்னங்க??:icon_ush:)
இருப்போரின் கொல் பார்வை...

கூன்குறுகி... ஒளிந்தொளிந்து
பகட்டு நகை மின்னல்களின்
வெட்டு தாண்டித் தப்பித்து..

கடைசியாய் மேடையேறி..
கதவோரம் ஒதுங்கி
வெளியேறிய பொழுதுகள்..

நெறிக்கும் நிமிடங்கள் தான்..

மீண்டுமொரு நெறிப்புக்குத்
தயாராகும் மனம்..!!

---------------------------------------------------------
சில கவிதைகள் நம்மை கவி நாயகராக்கி உறையச் செய்துவிடும்..
உங்கள் கவிதைகள் அவ்வண்ணமே...!!

நினைவுகளைப் பின்னோக்கி ஓட வைத்துவிட்டீர்கள் சிவா அண்ணா...!! எதையும் மறப்பதில்லையே நம் நெஞ்சம்...!

வார்த்தைகள் லாகவகமாக வந்து அமர்ந்திருக்கின்றன..
நல்ல எழுத்து நடை.... கரு எப்படின்னா கிடைக்குது உங்களுக்கு மட்டும்???!!

கலக்குறேள் போங்கோ..!!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் சிவாண்ணா. :)

சிவா.ஜி
05-07-2008, 03:14 PM
அசத்திட்ட பூம்மா! அருமையான வரிகளில் அமைந்த பின்னூட்டக் கவிதை. இதைப் போன்ற பின்னூட்டங்களைப் பெறுவதற்காகவே இன்னும் எழுதலாமென்று எண்ண வைத்த எழுத்துகள்.

ரொம்ப நன்றிம்மா.

இளசு
05-07-2008, 03:18 PM
[COLOR=Indigo]

இருப்போரின் கொல் பார்வை...

கூன்குறுகி... ஒளிந்தொளிந்து
பகட்டு நகை மின்னல்களின்
வெட்டு தாண்டித் தப்பித்து..

கடைசியாய் மேடையேறி..
கதவோரம் ஒதுங்கி
வெளியேறிய பொழுதுகள்..

நெறிக்கும் நிமிடங்கள் தான்..

மீண்டுமொரு நெறிப்புக்குத்
தயாராகும் மனம்..!பின்னூட்ட நாயகி!

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=362842#post362842நன்றாகத்தான் சொன்னார் நம் நாகரா!

பூமகள்
05-07-2008, 03:23 PM
எல்லாம் தங்கள் சட்டை நுனி பிடித்து நடக்கப் பழகிய பண்பால் தானே பெரியண்ணா??!!

பாராட்டும் புகழும் மன்றத்துக்கே..!

கோடிட்டுக் காட்டிய மன்னருக்கு அன்புகள்..!!
பெயரிட்டு கட்டியமிட்ட நாகரா அண்ணனுக்கு நன்றிகள்..!

ஆதவா
05-07-2008, 06:22 PM
வார்த்தைகளில் நெய் கடையும் சிவா.... உண்மைதான். ஒரு சாதாரண விருந்து... ஆனால் ருசி?

சம்பிரதாய அழைப்பு.. எவ்வளவு பொருத்தமாய்... அதன் வலி எவ்வளவு வருத்தமாய்!!


நெருங்கிய சொந்தம்....
செல்வத்தால் நெருங்கமுடியா சொந்தம்..

அழகிய முரண். நெருக்கமான சொந்தம் என்பது எதை வைத்துப் பின்னப்படுகிறது? பணத்தை வைத்தா? இன்றைய பிளாஸ்டிக் உலகம் அப்படித்தான் ஒட்டாமல் திரிகிறது.. இல்லை. திரிய வைக்கப்பட்டிருக்கிறது. நாவில் எச்சில் இல்லா மனிதர்கள் தங்களின் உறவு பாசங்களை ஒதுக்கிவிட்டு நெருங்க முடியாத முனையில் நிற்கிறார்கள்...

உறவுகளின் நெருக்கம் மன சந்தோசம்
பணத்தின் நெருக்கம், மன அழுத்தம்.

நெருக்கம் காரணமாய்.. பத்தோடு பதினொன்றாய்.. பத்திரிக்கை. ஆனால் இங்கே கவனியுங்கள்.. ஒவ்வொரு வரியிலும் அந்த அழைப்பு சொந்தக்காரனின் ஆடம்பரமும் பகட்டுத்தனமும் அதேசமயம் இவனின் தயக்கமும் தெரிகிறது.


பன்னீர் சொம்புகளும்
பாதி உயர்ந்துதான்
மணமண்டபத்தில் வந்தவர்கள் அந்த ரகத்தையே சார்ந்தவர்கள்.. பன்னீர் தெளிப்பவரும் கூட தயக்கமாய்..


பட்டும் பகட்டும் நிறைந்திருந்த இடத்தில்...
பட்டும் படாத வரவேற்பு வலித்தது

இருவகை 'பட்டும்' வார்த்தை உபயோகம் பிரமாதமான அதேசமயம் தேவையான நேரத்தில் அழகாய் பொருத்தப்பட்டுள்ளது. அதன் இறுதி வரி வலித்தது போல நமக்கும்...

கால்களைத் தடுக்கும் தயக்கம். - இதற்கு உவமை குடிக்கப்போகும் கணவனைத் தடுக்கும் மனைவி. முற்றிலும் புதிய சிந்தனை அந்த நிலையை கண்ணால் யோசிக்க கவிஞர் தரும் வாய்ப்பு இது. பாராட்டுகள் சிவா.ஜி அண்ணா.

முடிந்து கொண்டு வந்த பரிசு - கொடுத்தே ஆகவேண்டிய நிர்பந்தம். ஆடம்பர பந்தலுக்குள் கைகாட்டி பொம்மமயேனும் தந்தாகவேண்டுமே! கையில் கொண்டுவர பெரிதாய் வாங்கவேண்டும். பரிசு சிறிது என்றால் முடிந்துதானே வரவேண்டும்!! ஆனால்???? பரிசை வெறும் பொருளாகப் பார்க்கும் சொந்தங்களிடையே வாழ்த்தை அடக்கிய சிறு பரிசை தந்தால் ஏளனம் செய்யமாட்டார்களா? செய்வார்கள்... பொருளைப் பொருளாகப் பார்ப்பதற்கும் பொருளுள் அடங்கியிருக்கும் அன்பைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

இறுதிவரையிலும் தயக்கம். தன்னை யாரேனும் ஏளனச் சிரிப்பால் அறைந்துவிடுவார்களோ என்று... 'போகாத இடந்தன்னில் போகவேண்டாம் 'என்பது மொழி. போய்விட்டால்? சந்தர்ப்பங்களைச் சாதகமாக்கத் தெரியாதவர்கள் என்று ஏழையைச் சொல்வார்கள்.. உண்மையா?

முற்றிலும் ஏழை (நாயகன்) மனதின் உணர்வுகளை நன்றாக பிசைந்து சாதம் படைத்திருக்கிறீர்கள். அவனுள் போக என்னால் முடியும்.. ஏனெனில் அப்படி ஒரு நெருக்கடியான சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் கூட வாய்ந்திருந்தது.. வயிறு மட்டுமல்ல மனம் கூட கனத்து நிறைவேறாமலே வெளியேறினேன்.

உறவுகள்?
உறவுகள் இன்று பணம் எண்ண ஆரம்பித்துவிட்டன. தனக்கென்று ஒரு அந்தஸ்து வைத்துக்கொண்டு ஆட்டம் போட ஆரம்பிக்கின்றனர்.

உணர்வுகளைப் படம்பிடித்த அண்ணன் சிவாவுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்...

(உண்மையிலேயே கண்ணீர் தளும்பிய பாராட்டுகள் அண்ணா... வெல்டன்./)

செழியன்
06-07-2008, 12:05 AM
ஆதவாவே எல்லத்தையும் சொல்லி விட்டார். நன்றாக உள்ளது அண்ணா,

சிவா.ஜி
06-07-2008, 05:33 AM
முற்றிலும் ஏழை (நாயகன்) மனதின் உணர்வுகளை நன்றாக பிசைந்து சாதம் படைத்திருக்கிறீர்கள். அவனுள் போக என்னால் முடியும்.. ஏனெனில் அப்படி ஒரு நெருக்கடியான சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் கூட வாய்ந்திருந்தது.. வயிறு மட்டுமல்ல மனம் கூட கனத்து நிறைவேறாமலே வெளியேறினேன்.ஆதவா....என்ன சொல்வது? கவிதை எழுதும்போது இருந்த வலியைவிட உங்கள் பின்னூட்டம் படிக்கும்போது ஏற்பட்ட வலி அதிகம்.

நானே அவனாக இருந்த நாட்களுண்டு. திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழித்து என் நெருங்கிய தோழியின் திருமணம். மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் நானிருந்த நேரம். பரிசு வாங்கக் கூட பணமில்லாமல் என் திருமணத்தில் எனக்கு கிடைத்த இரண்டு மேசை விளக்குகளில் ஒன்றை துடைத்து புதிதாக்கி 50 பைசாவுக்கு அலங்காரத் தாள் வாங்கி அதில் பொதிந்து கொடுத்தேன். அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த மண்டபத்துக்குள் நான் நுழைந்த நிலை....இன்னும் வலிக்கிறது.

உறவுகள் பல சமயங்களிலும், நட்பு சில சமயங்களிலும் பணம் பார்த்து மனதைக் காயப்படுத்தி விடுகின்றன.

வரிக்கு வரியான உங்கள் விமர்சனம் என்னைப் பெருமைப்படுத்துகிறது. மனம் நிறைந்த நன்றிகள் ஆதவா.

சிவா.ஜி
06-07-2008, 05:34 AM
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி செழியன்.

ஓவியன்
06-07-2008, 05:47 AM
அனுபவித்திருக்கிறேன்
பணம் இல்லாவிடின் சுற்றமே
குற்றம் சுமத்துவதை....

அனுபவித்திருக்கிறேன்
பணம் வந்ததும் குற்றமே
சுற்றமாவதை....

உங்கள் கவிதையிலும்
எனது வாழ்க்கையிலும்
பாராட்டுக்கள் சிவா...!!

Keelai Naadaan
06-07-2008, 06:01 AM
அருமை..அருமை..அருமை சிவா..
அற்புதமான படைப்பு.
மனங்களை விட பணமே அதிக முக்கியத்துவம் பெறும் அவலத்தை நீங்கள் சுட்டி காட்டியுள்ள விதம் அருமை.
இதயம், இளசு, பூமகள், ஆதவன், ஓவியன் ஆகியோரின் பின்னூட்டம் அருமை.

சிவா.ஜி
06-07-2008, 06:12 AM
அனுபவித்திருக்கிறேன்
பணம் வந்ததும் குற்றமே
சுற்றமாவதை....

உங்கள் கவிதையிலும்
எனது வாழ்க்கையிலும்


அனுபவித்தவருக்கு அந்த வலி புரியும் ஓவியன். சக பயணிகளே நாம்.

பாராட்டுக்கு நன்றி ஓவியன்.

சிவா.ஜி
06-07-2008, 06:14 AM
மனங்களை விட பணமே அதிக முக்கியத்துவம் பெறும் அவலத்தை நீங்கள் சுட்டி காட்டியுள்ள விதம் அருமை.
இதயம், இளசு, பூமகள், ஆதவன், ஓவியன் ஆகியோரின் பின்னூட்டம் அருமை.

மிக்க நன்றி கீழைநாடன். நீங்கள் சிலாகித்த இப்படிப்பட்ட அற்புதமான பின்னூட்டங்கள்...இங்கின்றி எங்கு கிடைக்கும்?

மீண்டும் நன்றி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-07-2008, 06:34 AM
அற்புதமான கவிதை. இது போன்ற கவிதைகள் பொதுவாய் என் மனதை சிறிது நேரம் எதையும் யோசிக்கவிடாமல் பாதிக்கும். ஆனால் உங்கள் கவிதை எனக்கு ஒரு கருவையும் அள்ளிக் தெளித்திருக்கிறது. விரைவில் அதை கவிதையாய் மலரச்செய்கிறேன். வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
06-07-2008, 06:47 AM
அற்புதமான கவிதை. இது போன்ற கவிதைகள் பொதுவாய் என் மனதை சிறிது நேரம் எதையும் யோசிக்கவிடாமல் பாதிக்கும். ஆனால் உங்கள் கவிதை எனக்கு ஒரு கருவையும் அள்ளிக் தெளித்திருக்கிறது. விரைவில் அதை கவிதையாய் மலரச்செய்கிறேன். வாழ்த்துக்கள்.

தங்கை பூமகள் இந்தக் கவிதையின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...உங்களுக்கு கரு எப்படி கிடைக்கிறது என்று...வாழ்க்கையிலிருந்தும், மன்றத்திலிருந்தும்தான் என்று சொல்ல நினைத்தேன். அதையே இங்கு உங்கள் பின்னூட்டத்திலும் காண்கிறேன் ஜுனைத். நன்றி மற்றும் உங்கள் அடுத்த கவிதைக்கு முன் வாழ்த்துகள்.

ஆதவா
06-07-2008, 07:02 AM
அற்புதமான கவிதை. இது போன்ற கவிதைகள் பொதுவாய் என் மனதை சிறிது நேரம் எதையும் யோசிக்கவிடாமல் பாதிக்கும். ஆனால் உங்கள் கவிதை எனக்கு ஒரு கருவையும் அள்ளிக் தெளித்திருக்கிறது. விரைவில் அதை கவிதையாய் மலரச்செய்கிறேன். வாழ்த்துக்கள்.

எனது ஒவ்வொரு பின்னூட்டமும் எனது சுயநலம். எப்படியெல்லாம் அந்தக் கவிதை எனக்கு வாய்ப்பு அளிக்கிறதோ அப்படியெல்லாம் எடுத்துக்கொள்வேன்... இதை 'தாக்கம்' என்று சொல்லலாம். சில சமயங்களில் நாம் யோசித்திருக்கும் கருவை வேறு ஒருவர் கொடுத்திருக்கலாம்.. அதனால் இங்கே வேகமும் முக்கியம். சில சமயங்கள் கவிதையினால் கரு கிடைக்கலாம்.. அதனால் வாசிப்பும் முக்கியம்...

உங்களது எளிய கவிதைகள் கண்டும், உங்களது விமர்சனங்கள் கண்டும் அகம் மகிழ்ந்தோம் ஜுனைத்.. விரைவில் கவிதை பதியுங்கள்...