PDA

View Full Version : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆளுமை சூ கீ.!!! (நன்றி : விகடன்)prady
05-07-2008, 06:22 AM
பூட்டிய கதவுக்குப் பின்னே...

மருதன்
-----------------நன்றி : விகடன்------------------------------

இந்த முறையும் பூட்டிய கதவுக்குப் பின்னே தன் பிறந்த நாளைக் கழித்திருக்கிறார் ஆங் சான் சூ கீ. அவருக்கு இது 64வது பிறந்த நாள். கேக், பலூன், ஹேப்பி பர்த் டே பாடல் என எந்த பிறந்த நாள் கொண்டாட்டமும் இல்லை. மின்சாரம் இல்லாத வீட்டில், ஒரே ஒரு மெழுகுவத்தி மட்டும் எரிந்துகொண்டு இருந்தது. கடந்து போன நர்கீஸ் சூறாவளியில், வீட்டின் மேற்கூரைகாணாமல் போய்விட்டது.

வீட்டு வாசலில் ஏ.கே47 துப்பாக்கியைப் பிடித்தபடி முறைத்துக்கொண்டு இருக்கிறார்கள், சப்பை மூக்குராணுவ வீரர்கள். வாக்கிங் போவதற்கு மட்டுமே சூ கீக்கு அனுமதி! அப்போதும்கூட செக்யூரிட்டி வருவார்கள். மற்றபடி, வீட்டுக்குள் உட்கார்ந்து படிக்கலாம்; சாப்பிடலாம்; தூங்கலாம். வெளியாட்கள் அவரை வந்து பார்க்கக் கூடாது. பேசக் கூடாது. குறிப்பாக அரசியல். அதிலும் குறிப்பாக,மியான்மர் அரசியல்!

'நோபல் பரிசு வாங்கி மியான்மருக்கே பெருமை சேர்த்த ஒரு பெண்ணை இப்படி கிரிமினல் குற்றவாளி மாதிரி பூட்டி வைக்கலாமா? என்று கேட்டால், 'உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!' என வள்ளென்று விழுகிறது மியான்மர் அரசாங்கம்.

ஒவ்வொரு ஆண்டும் சூ கீயின் பிறந்த நாள் வரும்போது (ஜூன் 19, 1945) உலக அளவில் இப்படி எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும்; அமெரிக்கா குரல் கொடுக்கும்; ஐ.நா. குரல் கொடுக் கும்; புத்த பிட்சுக்கள் கொடி பிடிப்பார்கள்; லண்டனில் மாணவர்கள் பேரணி நடத்துவார்கள்; உலகத் தலைவர்கள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். எதற்கும் அசைந்துகொடுக்காமல், அமைதி காக்கும் மியான்மர் அரசாங்கம். உள்ளூரில் யாராவது பேரணி என்று கூட்டம் கூட்டினால், ஜீப்புகள் வழிய ராணுவத்தினர் வந்து கட்டம் கட்டுவார்கள். காரணம் சூ கீ... இந்த நூற்றாண்டின் இரும்புப் பெண்மணி சூ கீ.

மியான்மரின் நவீன சரித்திரம் சூ கீயின் தந்தை ஆங் சானிடம் இருந்து தொடங்குகிறது. அவர்தான் மியான்மரின் தேசத்தந்தை! தான், தன் குடும்பம் என்று சுருங்கிவிடாமல் தேச விடுதலைக்காகப் போராட முன்வந்தார் ஆங் சான். அப்போதும் மியான்மரில் ஜனநாயகம் இல்லை. ராணுவ ஆட்சிதான்! மியான்மர் ராணுவம், ஜப்பான் ராணுவம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டன் ராணுவம் என வந்த அத்தனை பேருக்கும் சவா லாக இருந்தார் ஆங் சான். அவர் முதுகுக்குப் பின்னால் அணிதிரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு கதிகலங்கியது பிரிட்டன். ஆள் இருந்தால்தானே எதிர்ப்பு? ஆங் சான் சுட்டுக் கொல்லப் பட்டார்.

சிங்கத்தின் வழி செல்ல சித்தமாக இருந்தது சிங்கக்குட்டி. லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார் சூ கீ. அங்கேயே காதல் திருமணம். ராணுவ ஆட்சியாளர்கள் மியான்மரில் நடத்தும் அக்கிரமங்கள் சூ கீயின் ரத்தத்தை கொதிக்க வைத்தது. மியான்மருக்கு பறந்து வந்துவிட்டார். 1988ம் ஆணடு சூ கீ மியான்மரில் கால் பதித்தபோது, அந்தத் தேசமே கொதித்துக்கொண்டு இருந்தது. பஞ்சம், பட்டினி, கலவரம், படுகொலைகள்... முழு மூச்சில் துவம்சம் செய்துகொண்டு இருந்தது ராணுவம். ஆட்சியாளர்க ளுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் சிறை, சித்ரவதை, மரணம்!

சூ கீயைப் பார்த்ததும், அவர் வீட்டு வாசலுக்கு ஓடி வந்தார்கள் மக்கள். 'வா! உன் அப்பாவுக்கு அடுத்து எங்களை வழிநடத்த யாரும் இல்லை. எங்களைக் காப்பாற்று!' என ஒரு தேசமே அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று 'நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' என்னும் கட்சியைத் தொடங்கினார். ராணுவத்துக்கு எதிராக, அதிகாரத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக பிரசாரத்தை ஆரம்பித்தார். முதலில் பெண்தானே என்று அலட்சியம் செய்த ராணுவம், பின்னர் சுதாரித்துக்கொண்டது. 'கலகக்காரரின் வாரிசு! ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்று கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். கூட்டம் நடத்துகிறார். அப்பா சென்ற இடத்துக்கே இவரையும் அனுப்பி வைத்தால் என்ன? செய்யலாம். அதற்கு முன் அவரை ஓரிடத்தில் முடக்க வேண்டும்' என்று முடிவு செய்தது. ஜூலை 20, 1989ம் ஆண்டு முதன்முறையாக சூ கீ கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவல்! நீதிமன்றம், விசாரணை ஒரு மண்ணும் கிடையாது. 'நாங்கள் சொல்லும்வரை வாயை மூடிக்கொண்டு உள்ளேயே கிட!' என்று தீர்ப்பு சொன்னார்கள். அன்று ஆரம்பித்தது சிறை வாழ்க்கை. பெயரளவுக்கு எப்போ தாவது விடுதலை செய்வார்கள். செருப்பு மாட்டிக்கொண்டு வீதி யில் இறங்குவதற்குள், கப்பென்று பிடித்து மறுபடி உள்ளே தள்ளி விடுவார்கள்.

இரண்டே இரண்டு வாக்குறுதி களைக் கொடுத்தால், நிரந்தர விடுதலை என்று நரிப்பல் காட்டி, புளிப்பு மிட்டாய் நீட்டியது மியான்மர் ராணுவம். 'மக்கள் என்னைச் சந்திக்க மாட்டார்கள்; நானும் மக்களைச் சந்திக்க மாட்டேன்!' என்று சூ கியைச்சொல் லச் சொன்னது. 'முடியாது' என்று மறுத்துவிட்டார் மக்கள் தலைவி சூ கீ.

உலக நாடுகளின் தொல்லை தாங்க முடியாமல், 1990ம் ஆண்டு மியான்மரில் தேர்தலை நடத்தியது ராணுவம். 3 கோடியே 80 லட்சம் மக்கள் உள்ள மியான்மரில் 93 கட்சிகள் மட்டுமே தங்கள் வேட்பாளர்களை முன்நிறுத்தின. சூ கீயின் கட்சி 485 தொகுதிகளில் போட்டியிட்டது. 392 இடங்களில் அமோக வெற்றி! இத்தனைக்கும் சூ கீ அப்போதும் வீட்டுக் காவலில்தான் இருந்தார். முடிவைப் பார்த்ததும் 'இந்தத் தேர்தல் செல்லாது' என்று சொல்லிவிட்டது ராணுவம். எதிர்க் கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். மியான்மர் முழுவதும் சித்ரவதைக் கூடங்கள்திறக் கப்பட்டன. கைதிகளின் காயங்களில் உப்பைத் தேய்த்தார்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பரப்பி, ஊர்ந்து போகச் சொன்னார்கள். வார்த்தைகளில் விவரிக்க முடியாத பெருங்கொடுமை! இன்றைய தேதியில் மியான்மர் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் சுமார் 8,000 பேர். இவர்களில் சூ கீயின் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம்!

இதோ, ஜூலை 20 வந்தால், சூ கீக்கு இருபதாம் ஆண்டு சிறை வாழ்க்கை தொடங்கப்போகிறது. இன்று வரை சூ கீ கலங்கிய தில்லை. 1999ல் கணவர் மைக்கேல் ஏரிஸ் லண்டனில் புற்றுநோய் வந்து காலமானார். தகவல் கேள்விப்பட்டதும் கலங்கி நின்றார் சூ கீ. 'கடைசியாக இறந்துபோன என் கணவரின் உடலைப் பார்த்து விட்டு வரவா?' என்று அனுமதி கேட்டார் சூ கீ. 'போ! ஆனால், மீண்டும் இந்தப் பக்கம் வராதே!' என்றது ராணுவம். 'அப்படிஎன்றால் நான் போகவில்லை!' என்று சொல்லிவிட்டார் சூ கீ. 'என் கணவர் எனக்கு முக்கியம்தான். அதைவிட முக்கியம் என் தேசம்! இறந்துவிட்ட என் கணவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, இறந்துகொண்டு இருக்கும் என் தேசத்தை மீட்க முயற்சி செய்வேன்!' இது சூ கீ சொன்னது.

'இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் தள்ளுங்கள்; என்ன சித்ரவதை வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தேசத்தை விட்டு நான் அகல மாட்டேன்!' சொல்லும்போது சூ கீயின் குரலில் துளி பிசிறில்லை; தடுமாற்றம் இல்லை.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆளுமை சூ கீ. புரட்சி என்னும் சொல் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்ட இந்தக் காலத்தில், சூ கீயின் ஆவேசமும் துடிப்பும் கொண்ட வாழ்க்கை, அதன் அர்த்தத்தை மீட்டெடுத்துத் தருகிறது.

---------------------------------
நன்றி : விகடன்

Narathar
05-07-2008, 07:12 AM
கணவர் மைக்கேல் ஏரிஸ் லண்டனில் புற்றுநோய் வந்து காலமானார். தகவல் கேள்விப்பட்டதும் கலங்கி நின்றார் சூ கீ. 'கடைசியாக இறந்துபோன என் கணவரின் உடலைப் பார்த்து விட்டு வரவா?' என்று அனுமதி கேட்டார் சூ கீ. 'போ! ஆனால், மீண்டும் இந்தப் பக்கம் வராதே!' என்றது ராணுவம். 'அப்படிஎன்றால் நான் போகவில்லை!' என்று சொல்லிவிட்டார் சூ கீ. 'என் கணவர் எனக்கு முக்கியம்தான். அதைவிட முக்கியம் என் தேசம்! இறந்துவிட்ட என் கணவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, இறந்துகொண்டு இருக்கும் என் தேசத்தை மீட்க முயற்சி செய்வேன்!' இது சூ கீ சொன்னது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு விடுதலை விடுதலை என்று கூக்குரலிடும் நம் அன்பர்களுக்கு இந்த வாக்கியத்தை சமர்ப்பணமாக்குகின்றேன்...................

நாராயணா!!!!!!

இளசு
05-07-2008, 08:17 AM
1) இது படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தப் பட்டது.
(பொதுவிவாதம் பகுதியில் இருந்து...)

2) அன்பு நாரதரே... ஒவ்வொருவர் சூழலும் தனித்தனி... தன்னுயிர், குடும்பம், தெரு, ஊர், தேசம் - என பல அலைகளாய்ப் பரவும் உணர்வு -
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வட்டங்கள்.
எனவே ஒன்றை ஒப்பிட்டு, பொதுவாய்த் ''தூண்டி'' கேட்பது இங்கே துரதிர்ஷ்டமான ஒன்று..

இது பொது விவாதமாக இங்கே வளராமல் இருப்பதே என் விருப்பம்.

Narathar
05-07-2008, 08:25 AM
இது பொது விவாதமாக இங்கே வளராமல் இருப்பதே என் விருப்பம்.

தங்களின் விருப்பம் அதுவாக இருக்குமானால்.....
என் விருப்பத்தையும் அதுவாக்கிக்கொள்கின்றேன்......... நாராயணா!!!!

இளசு
05-07-2008, 08:29 AM
தங்களின் விருப்பம் அதுவாக இருக்குமானால்.....
என் விருப்பத்தையும் அதுவாக்கிக்கொள்கின்றேன்......... நாராயணா!!!!

முதல் ஏழு வார்த்தைகள் சரீஈஈஈஈஈ!
எட்டாவது வார்த்தைதான் கொஞ்சம் இன்னும் உறுத்துகிறது!!!!!!!:)