PDA

View Full Version : பூமிப்புறா



ஷீ-நிசி
05-07-2008, 01:07 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/BoomiPura.jpg

எண்ணங்களுக்கெல்லாம்,
வண்ணங்கள் கொடுத்தாய்!
வார்த்தையிலே.....

வாழ்க்கையிலே?!

பூமிப்புறாவின் கனவுகளில்
வலம் வந்தது, சில காலம் -அந்த
வெண்ணிலவு!

கனவுகளுக்கெல்லாம்
கல்லறையமைத்திட,
பிறந்தது ஒரு விடியல்..

எல்லோருக்கும்,
விடியலென்பது ஒரு வெளிச்சம்...

இந்த பூமிப்புறாவுக்கோ,
அதன் கனவுகளை சிதறடிக்க
வந்த ஒரு இருள்!

காலைபொழுது விடிந்ததும் -தன்
கனவது உடைந்ததும்,
நிலவை தேடியது பூமிப்புறா...

காணக்கிடைக்காமல்,
கண்ணீர் விட்டழுதது!

தான் கண்டதெல்லாம்
வெறும் கனவென்று
நம்ப மறுத்தது...

அழுதது! புரண்டது!! துடித்தது!!

எப்பொழுதும்,
மாலைபொழுதினில் வந்திடும் நிலா
அன்றும் வந்தது!

தன் வெண்ணிலாவை
மீண்டும் கண்டதில்..
இன்பத்தில் மிதந்தது!

சிறகையடித்து,
நிலவருகில் பறந்தது!

நெருங்க முடியாது என்று
தெரிந்தோ, தெரியாமலோ....

உயர உயர பறந்தது புறா!
விலகி விலகி சென்றது நிலா!

உடல் சோர்ந்தது!
உள்ளம் சோர்ந்து!

நா வறண்டு, உடல் சுருண்டு
வேகமாய் வீழ்ந்தது கீழே…

"பூமிப்புறா"

அது கடைசியாய் உச்சரித்தது!
நிலவைப்பார்த்து....

"நீ கடவுள் வரைந்த ஓவியம்!
நான் காற்றில் கரைந்த காவியம்!"

இளசு
05-07-2008, 07:03 AM
அகாலமாய் மாண்டுபோவான் கோவலன் - என
அவல முடிவறிந்தே சிலம்பை எழுதினான் இளங்கோ...
சோகம் தான் முடிவென்று நிச்சயமானபின்னும்
காவியங்கள் எழுதப்படுவது காலந்தோறும் உண்டு...

ஒரு புறா நிலவை நெருங்க முடியாது என அறிந்தும்
அதன் மனதில் ஆசை வந்ததை நாம் அறிந்தால் -?
ஊழ் வினையின் விளையாட்டு - படட்டும் என்பார் பலர்!
பாழும் புறா மனநிலையில் இருந்து பாட்டு படிப்பார் ஷீ!

கண்ணீர் வரைந்த ஓவியம் - கவியரசன் வரி!
காற்றில் கரைந்த காவியம் - கவிஞன் ஷீயின் வரி!

புல்லையும், புறாவையும் காவியமாக்கும் வல்லமை
கவிஞர்களுக்கு மட்டுமே சாத்தியம்!

வாழ்த்துகள் ஷீ!

ஆதவா
05-07-2008, 02:55 PM
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஷீயின் நித்ய கவிதா தரிசனம். இருவேறு அர்த்தங்களோடு.

முதல் வரி முதல் முடிவு வரி வரையிலும் படிப்படியாக செதுக்கிய ஒரு நிலவைக் காணமுடிகிறது. ஏனெனில் அது வலியால் உருவான வார்த்தைகளாக என்னால் உணரமுடிகிறது..

சொல்வார்களே! எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் தெரியும் என்று. அப்படித்தான் எனக்கும்.

சரி இனி விமர்சனம்.

முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.. எழுதிட நல்ல வாக்கியம் என்றாலும் அந்த முயற்சிக்கான எல்லை நமக்குள் அடக்கமானதாக இருக்கவேண்டும். மணல் இல்லாமல் வீடு கட்டும் முயற்சியை எப்படி முயற்சித்தாலும் முடியாது. நமக்கான தேவைக்கு நமது முயற்சி இருக்கவேண்டும். மிகச்சிறு வயதில் எனக்கு ஒரு ஆசை இருந்தது. கண்ணாடித் துண்டுகளை வைத்து வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு... ஒரு வானவியல் ஆராய்வாளனாக வலம் வந்து நிலவில் கால் பதித்து... மண்ணை இந்தியாவுக்குக் கொண்டுவந்து.... இதோ! இந்தப் பறவை போல நானும்.. ஆனால்... முயன்றிருக்கலாம்.. இந்தப் பறவை போல. நீங்கள் விட்டுப் போன கவிதையின் தொடர்ச்சியில்... இப்பறவை மீண்டும் பறந்துகொண்டிருக்கும்.

இயற்கையை நோக்கிய ஒரு கேள்வி. வார்த்தைகளுக்கு வண்ணமிட்ட உனக்கு வாழ்க்கைக்குத் தரவில்லை என்று.,. அதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படி? இயற்கை நமக்கு அளிப்பது எல்லாமே! நமக்குள் இருக்கும் வண்ணத்தை நாமே தேடவேண்டும். ஆம்... இயற்கை நம் வாழ்க்கைக்கும் வண்ணம் கொடுத்தது.

எடுத்துச் செல்லும் பாதை எப்படி இருக்குமோ அப்படித்தான் அதன் பயணமும். அடுத்தடுத்த வரிகள் நம்மை இழுத்துச் செல்வதும் அப்படித்தான்.

கனவுகளுக்குக் கல்லறை - புதிய சிந்தனை. நீண்ட நாட்களாக வாழ்ந்த கனவு, வீழ்ந்ததில் முளைத்தது முயற்சியின் படிக்கல். ஆனால் விடியல் என்பது கதிரவன் எழுச்சியல்ல என்பதை அடுத்த வரிகளோடு இணைந்த இவ்வரியும் உறுதிபடுத்துகிறது. தமிழின் சுவையே இதுதானே! பயிற்சியே சோம்பலின் விடியல், உழைப்பே தரித்திரத்தின் விடியல்.. அதைப்போன்றதொரு உணர்வான வார்த்தை.

பின் மீண்டும் கனவுகளுக்கு பலத்த அடி.. கனவு நம்மை ஆண்டுகொண்டிருந்தால் அதை முறியடிக்கவேண்டும். ஒவ்வொரு நம் கனவுகளும் நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கின்றன. கனவுகள் நுழையும் இருளில் ஒரு விடியல்.. காட்சி முரண்.


காலைபொழுது விடிந்ததும் -தன்
கனவது உடைந்ததும்,
நிலவை தேடியது பூமிப்புறா...

தாமதம். ஒரு செயலை செயற்படுத்தும்போது ஏற்படவேண்டிய காலசூழ்நிலை நமக்குச் சாதகமாக அமையும் படியோ அல்லது அச்செயலை முன்பே கால சூழ்நிலைக்குச் சாதகமாக்கும்படியோ திட்டமிடவேண்டும். ஏனெனில் அடுத்த நொடியின் ரகசியம் யாருக்கும் தெரியாது. பொழுது விடிந்தது.. அதன் கனவு உடைந்தது. பூமிப்புறாவின் புலம்பலும் அருமை.

மீண்டும் ஒரு வாய்ப்பு. புறாவுக்கு. கீழ்கண்ட வரிகள் கவனிக்கத்தக்கவை.


எப்பொழுதும்,
மாலைபொழுதினில் வந்திடும் நிலா
அன்றும் வந்தது!

வாய்ப்புகள் நம்மை விட்டு அகலுவதில்லை.. அது ஒரு வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.. ஒன்று நாம் அதைத் தேடிப்பிடிக்கவேண்டும். அல்லது அது நம் கையில் வரும்போது பிடித்துக்கொள்ளவேண்டும். இப்பொழுது புறாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.... ஷீ! இப்படி வாழ்க்கையோடு பொருந்த ஒரு காட்சிக் கவிதை எப்படி எழுத முடிகிறது?

முயலாமை தோல்வியில் முடியும். புறாவின் இன்பம், அதனுள் ஏற்பட்ட எழுச்சி. நம் கனவு கைகூட நேரம் வந்துவிட்டதென்று ஆழ்மனதில் எழும்பிய துள்ளல். கனவு எப்படிப்பட்டது என்று பாவம் அந்தப் பிராணிக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.


உயர உயர பறந்தது புறா!
விலகி விலகி சென்றது நிலா!

வேறு வழியுமில்லை, உயரத்தில் இருப்பதைக் கனவு காண்பது குற்றமில்லை. ஆனால் கண்டுவிட்டபின் அது நம் கைகூடுமா என்று யோசிக்காததன் விளைவு?


உள்ளம் சோர்ந்து!

உள்ளம் சோர்ந்துவிடக்கூடும்.. நம் கனவுகளுக்கான உயரம் நம் கைக்கு எட்டும்படியாகவே இருக்க்கும்.. அருகே இருக்கும் நிலவை ரசிக்கக் கூட நேரமில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். (நிலவின் அருகாமையைப் பற்றிய கவிஞர் விஜயன் கவிதை ஒன்றும் மிக அழகு மிகுந்த ஆழமான வார்த்தைகள்)

பூமிப்புறாவின் இறுதி வார்த்தைகள்.. யோசிக்கத் தகுந்தவை


"நீ கடவுள் வரைந்த ஓவியம்!
நான் காற்றில் கரைந்த காவியம்!"

காற்றில் கரைந்த எத்தனையோ காவியங்கள் உண்டு ஷீ! . இந்த வார்த்தையின் வலிமை எப்படி இருக்கிறது தெரியுமா? குறிப்பாக பெண்கள்.. எனது அம்மாவின் அக்கா மிக அருமையாக ஓவியம் வரையக்கூடிய திறமை மிக்கவர்.. அவரது பூக்கள் நிறைந்த கோலங்கள், புதுமையான பூவகை ஓவியங்கள்... அவர் மட்டும் ஒரு புத்தகம் போட்டால் நிச்சயம் பல பெண்கள் வாங்கிப் பயன்பெறுவார்கள்.. ஏனெனில் அது உண்மையிலேயே புதுமையானவை.. ஆனால்....... அவர் ஒரு காற்றில் கரைந்த காவியம்.. வாழ்க்கை என்றப் படகில் அமிழ்ந்துபோன ஓவியர்... இந்த சம்பவத்திற்கும் உங்கள் கவிதைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் வார்த்தை அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

சரி... நீங்கள் சொல்ல வந்தது..

ஒரு காட்சிக் கவிதை என்று மட்டும் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். ஒரு வாழ்க்கையும் கனவு காணும் விதத்தையும் நம் கனவின் எல்லையையும் அவ்வெல்லை மீறும் போது ஏற்படும் விளைவுகளையும் சொன்ன கவிதையாகவே எனக்குப் படுகிறது.. புறாவின் சோக முடிவைக் காட்டிலும் அது உயரப்பறந்த முயற்சியே அதன் வெற்றி.. அதனை அம்மனத்தில் இருத்தி கவிதையில் புகுத்தாமல் கவிதாரசிகனின் மனத்தோன்றலில் தோன்ற வைக்கும் உம் கவிதைக்கு... எனது பாராட்டுகள் ஷீ!!

எளிமையாக அதேசமயம் ஆழமான கருத்தைத் தரமுடியும் என்று யாரேனும் கேட்டால் நிச்சயம் உங்களை சொல்லுவேன்... வாழ்த்துகள் ஷீ!!

மன்மதன்
05-07-2008, 03:10 PM
புறாவின் சோக முடிவைக் காட்டிலும் அது உயரப்பறந்த முயற்சியே அதன் வெற்றி..

எளிமையாக அதேசமயம் ஆழமான கருத்தைத் தரமுடியும் என்று யாரேனும் கேட்டால் நிச்சயம் உங்களை சொல்லுவேன்... வாழ்த்துகள் ஷீ!!


ஆதாவாவின் கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்..

என்னால் முடியவில்லை என்றாலும் முயற்சி செய்ததையே பெரிதாக எண்ணுகிறேன்..

இருந்தாலும்... ஒன்றை அடைய முடியவில்லையென்றால் அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால் ஆசைகளை தூர வைத்து விட்டு நம்மால் எதை சாதிக்க முடியுமோ அதில் கவனம் செலுத்தலாம்..

கவிஞர் ஷீக்கு பாராட்டுகள்..!!

இளசு
07-07-2008, 06:13 AM
ஷீயின் இக்கவிதை அரசிக்கு ஆதவனின் விமர்சனம் ஒரு மகுடம்!
என் அன்பும் வாழ்த்தும் ஆதவனுக்கு!

இதைப்போல் நீ பின்னூட்டம் இடுவாயெனில்
நான் கூட நாளும் கவிதை தருவேன் ஆதவா!

மன்மதன்
07-07-2008, 02:41 PM
ஆதவா..நீங்க தயார்னு சொல்லுங்க..
அண்ணாவின் கவிதைகளை சுவைக்கலாம்..

ஆதவா
07-07-2008, 03:18 PM
ஷீயின் இக்கவிதை அரசிக்கு ஆதவனின் விமர்சனம் ஒரு மகுடம்!
என் அன்பும் வாழ்த்தும் ஆதவனுக்கு!

இதைப்போல் நீ பின்னூட்டம் இடுவாயெனில்
நான் கூட நாளும் கவிதை தருவேன் ஆதவா!

ஆஹா... நிச்சயமாய்... ஆனால் நான் சொல்ல வந்த கருத்துக்களை நாற்பது வரியிலிருந்து நான்கு வரிக்கு நீங்கள் சொல்லும் வித்தைக்காக இங்கே பலர் குறிப்பாக நான் எழுதுவது எத்தனை மனமகிழ்ச்சி அண்ணா!!

நீங்கள் வாக்கு கொடுத்துவிட்டீர்கள்... உங்களிடம் இருந்து கவிதை வருவது நிச்சயம்... எனது பின்னூட்டம் என்னால் முடிந்தளவுக்குத் தருவேன் அண்ணா..



ஆதவா..நீங்க தயார்னு சொல்லுங்க..
அண்ணாவின் கவிதைகளை சுவைக்கலாம்..

மன்மி,, நிச்சயமாய்... நீங்களும் எழுதுங்கள்..

இளசு
07-07-2008, 04:43 PM
இந்த வகை நல்ல படைப்புகளையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்க மக்களே!!

சுகமாய் மெலிதான விஷயங்களை அரட்டையாய் பேசி/ எழுதிக் களிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே..

ஆனாலும், அது நல்ல பதிவுகளை மூழ்கடித்து மறைக்கும் அளவுக்கு
அதிகம் ஆகிடாமலும் பார்த்துக்கிட்டா, இன்னும் மகிழ்வேன்..

பூமகள்
07-07-2008, 05:52 PM
தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னியுங்கள் ஷீ மற்றும் பெரியண்ணா..!!:icon_rollout:

சில வேளைகளில்.. சிறப்பான படைப்புகளுக்கு நல்ல ஆழ்ந்த பின்னூட்டம் கொடுக்க வேண்டுமென்ற உத்வேகத்தில் தாமதித்து விடுவதுண்டு...:icon_ush:


ஆனால்.. சிறந்த படைப்புகள் காலத்தை வெல்லும் புகழோடே இருக்கும் என்பது உண்மையல்லவா??!!:icon_b::icon_b:
----------------------------------------------------------------
கனவில் உதிக்கும் லட்சியம்..(கனவில் நிலவு)
லட்சியமடைதலின் இடைவிடா சிந்தனை..(நிலவைக் காணத் தவம்)
குறிக்கோள் கண்டு அதை நோக்கிய பயணம்..(நிலா நோக்கிய பயணம்)
சரியான திட்டமிடல் இல்லாமை..(வானிலிருக்கும் நிலாவினை அடையும் தூரம் அளவிடாமை)
குறிக்கோளடைய உழைப்பு(வானில் நிலவு நோக்கிய பயணம்)
கடும் உழைப்பு.. துவண்டு தோற்றல் (துவண்டு வீழ்ந்து அழுகை)
எட்டா உயரம் அனுபவப் பாடம் (இயற்கையின் படைப்பு -->நிலவு, தன்னிலை உணர்தல்-->அதிக பட்ச தூரம் பறக்கும் தன் திறன்அறிதல்)

இத்தனையும் சொல்லும் வாழ்வியல் பாடம் இக்கவிதை..!!:sprachlos020::sprachlos020:

எப்படி பாராட்டவென்றே தெரியாமல் திகைக்கிறேன்..!:confused::icon_b:
மனமார்ந்த பாராட்டுகள் ஷீ..!!:icon_b::icon_b:

உங்க கவிதைகளில் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றென இதைச் சொல்லுவேன்..!!:rolleyes::)

இக்கவிதையை ஒட்டி வைக்க மன்ற பொறுப்பாளர்களுக்கு என் அன்பான பரிந்துரை..

என் பரிசாக 1000 இ-பண அன்பளிப்பும். :)

மதி
07-07-2008, 06:16 PM
ஷீ-நிசியின் மற்றுமொரு அருமையான படைப்பு...

முயற்சி திருவினையாக்கும்... ஆனால் எல்லா முயற்சியும் திருவினையாகாது.. அனைத்து செயல்களுக்கும் பொருந்தக் கூடியவகையில் எளிமையாக உங்கள் கவிதை அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. கனவில் காணும் யாவும் வாழ்வில் நினைவாகலாம் அது நம் எல்லைகுட்பட்டிருந்தால்...

பாராட்டுகள் ஷீ-நிசி.

நம்பிகோபாலன்
07-07-2008, 06:56 PM
இப்பவே இதை மின்னிதழில் பதிக்கவும்.
நீண்ட காலத்திற்க்கு பிறகு என்னை புலம்ப வைத்துவிட்டீர்கள்...
கண்ணீருடன் சொல்லிகிறேன்... அருமையான கவிதை. வாழ்த்துக்கள்...

டாக்டர் அண்ணாதுரை
08-07-2008, 10:26 AM
கிடைக்காது என்று அறிவு சொன்னாலும்...
மனம் மட்டும் பேயாய்...ஆதிக்கம்!!
அந்த ஆதிக்கத்தின் விளவு தெரிந்தே வருகின்ற வேதனை....!!
தெரிந்தும்....
வளிக்கும் என அறிந்தும்...
பிறகு சுடுகிறதே என்று மனம் புலம்புவது;
மதி மயக்கமா? மனபலவீனமா?
இது மனிதனின் குரங்கு மனதிற்குமட்டும்
தெரிந்தே புறியாமல் போன புதிர்!!!
ஆழமான அழகான வரிகளின்
ஜாலவித்தையில் ஐக்கியமானேன்!

விகடன்
08-07-2008, 11:05 AM
அகாக படிப்படியாக செதுக்கப்பட்ட கவிதை.

பாராட்டுக்கள் ஷி

முடிந்தவரை முயன்று முடிவில் தன்னிலை அறிந்தே வீழ்ந்த புறா.
பலரது வாழ்க்கையும் இப்படித்தான்.

குறிக்கோள் இருக்கும்.
வெற்றிகள் இருப்பதில்லை.
முடியாதென்று தெரிந்திருந்தும்
விடாது தொடர்ந்திருப்பர்.

ஷீ-நிசி
08-07-2008, 02:05 PM
நன்றிகள் அனைவருக்கும்.

சுகந்தப்ரீதன்
08-07-2008, 03:26 PM
நன்றிகள் அனைவருக்கும்.
வளமான உமது வார்த்தைகளுக்கு வாழ்த்துக்கள் கவிஞரே..!!:icon_b:

பிச்சி
08-07-2008, 04:24 PM
வந்த உடனே உங்க கவிதைதான் படிசேன் அண்ணா. ஆரம்பதில எப்படி எழுதினீங்கலோ அதை விட அதிகமா எழுதறீங..
அன்புடன்
பிச்சி

அறிஞர்
21-07-2008, 02:53 PM
"பூமிப்புறா"

அது கடைசியாய் உச்சரித்தது!
நிலவைப்பார்த்து....

"நீ கடவுள் வரைந்த ஓவியம்!
நான் காற்றில் கரைந்த காவியம்!"

பூமிப்புறாவின் காற்றில் கரைந்த காவியம் அருமை.
இளசு, ஆதவா, பூமகளில் விமர்சனங்கள் காவியத்திற்கு அழகூட்டுகின்றன..

ஷீ-நிசி
11-02-2009, 01:26 AM
நன்றி பிச்சி! நன்றி அறிஞரே!