PDA

View Full Version : நிலமகள் பரமபதம் ( அ.மை - 32)இளசு
03-07-2008, 07:48 PM
நிலமகள் பரமபதம்

அறிவியல் மைல்கல் - 32

ஜேம்ஸ் ஹட்டன் -James HUTTON ( 1726-97)

----------------------------------


அ.மை. - 31 புனல் - இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14955

--------------------------------------------

நிலத்தாயை முதன்முதலாய் ஆழமாய் புரியத் துணிந்த
முதல் மகன் ஜேம்ஸ் ஹட்டன்.

அதனாலேயே நவீன நிலவியலின் ( Geology) முதல் மாணவன் ஆனார் ஹட்டன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
பிரான்ஸ், நெதர்லாந்து என பல தேசங்களில் படித்தார்.
அம்மோனியம் குளோரைடு உப்பு செய்து விற்றுப் பிழைத்தார்.
வாய்க்கால்கள், விவசாய புது உத்திகள், நீராவி இயந்திரம் என பல கலைகளில் ஆர்வம் கொண்டார்.
ஆனாலும், பல்கலைக்கழகம் எதிலும் பதவியில் இருந்தவர் அல்லர் ஹட்டன்.

பல்துறை பரிச்சயம், ஆர்வம் கொண்ட ஹட்டனின் முதல் கவனம் -
நாம் தினம் மிதிக்கும் நிலத்தாய் மீதே!

நாம் அனைவரும் காட்சித்தெறிப்பில் ரசிக்கும் நிலப்பரப்பை
ஹட்டன் யோசித்து, யூகித்து - அகழ்ந்து அறிய முயன்றார்..

புயல், வெள்ளம், பூமி அதிர்ச்சி, எரிமலை.....
இயற்கையின் சீற்றங்கள் எல்லாம் பேரிடர், பேரழிவு சக்திகளே...!

அரித்து, அழித்து, புரட்டி, இழுத்துப்போடும் வில்லன்களாய்த்தான் முதல் பார்வையில் அவை தோன்றும்..
ஆனாலும் அவையின்றி, தாவரம் வளரும் சத்துமண் உருவாகாது.
தாவரங்கள் இல்லையென்றால், மிருகம், மனிதன் வாழ்வது இங்கேது?

இப்படி இயற்கையின் அழிச்சாட்டியங்கள் எல்லாம் -
எப்போதும் ஒருவழி நிகழ்வே என்றால்.....
எல்லா நிலமும் கடலுக்குள் ஒருநாள்..
எல்லா உயிர்களுக்கும் முடிவாய் அந்நாள்..!

அப்படி ஒரு வழியாய் இயற்கை பயணித்து
ஒருவழியாய் உயிர்கள் அழியாது இருக்க
இயற்கையோ, இறையோ ஓர் உள்திட்டம் - உன்னதத் திட்டம் வைத்திருக்கவேண்டும்!

அத்திட்டப்படி, அரிபட்டு அழிந்து ஒரு வழியாய் கடலுக்குள் போன நிலமெல்லாம்
மறுவழியாய் மீண்டு நிலமாகி, சுழற்சிக்கு வர வேண்டும்..
அப்படி வந்தால்தான் உயிர்ப்பயணம் நிலப்பரப்பில் தொடர முடியும்..

ஆம், நிச்சயம் நிலச்சுழற்சி பயன்பாட்டில் இருக்கிறது.
அப்படியானால் அச்சுழற்சியின் சுவடுகளும் தேடினால் தென்படவேண்டும்..

இதுதான் ஹட்டனின் நிலச்சுழற்சிக் கோட்பாடு!

மண்ணாய், மணலாய் மழைவெள்ளம் அரித்து ஆற்றோடு கொண்டுபோய்
கடல் மடியில் கொட்ட.....
ஆழ்மடியில் அம்மண் கெட்டிப்பட்டு, படிமங்களாகி, பாறைகளாய் இறுக...

இறுகிய பாறை நிலங்கள் மறுபக்கம் கடல்மீறி மீண்டும் நிலமாக..

யுகம் யுகமாய் நிகழும் நிலம்-கடல் பற்று-வரவுக் கணக்கு இது!

அது சரி..


அடிக்கடலில் அடுப்பு மூட்டி, அழுத்தமும் கொடுத்தவர் யார்?
யார் உலை வைத்து கொதிக்கவைத்து அழுத்தி மூடி
இந்தச் சர்க்கரைத் துகள்களை மைசூர்பாகுகளாக்கினார்கள்?

ஹட்டனின் இக்கோட்பாடு -
இன்னோர் உண்மைக்கு நம்மை இட்டுச்சென்றது..

பூமியின் உட்சுளை ஓர் அக்கினிக் குழம்பு..
அங்கே சூரியனை விடவும் வெப்பம் உண்டு..
பொங்கும் அழுத்தம் உண்டு..
இப்படி மணலைப் பாறையாக்குவது மட்டுமன்றி,
எரிமலை, நிலநடுக்கம், தனிம ஆறு என இன்னும் பல பிரமாண்டங்களுக்கும்
பூமியின் உட்கொதிப்பே ஆதாரம் என்ற உண்மை பின்னாளில் உறுதியானது..


எனவே கண்டங்களை கடலுக்குள் இழப்பதும்,
மீண்டும் வேறு புதிய கண்டங்களை மீட்பதுமாய்
ஒரு '' பரிபூரண'' சுழற்சி பரமபதமாய் ஆடுகிறாள் நிலமகள்..

ஆங்கிலத்தில் சொல்வார்கள்:
'' No vestige of a beginning; No prospect of an end''.
ஆதியின் சுவடுகளும் இல்லை, அந்தத்தின் அறிகுறியும் இல்லை!

என்றோ தொடங்கி, இன்றும் தொடர்ந்து,
என்று முடியும் என எவரும் அறியா பிரம்மாண்ட பரமபதம்..

இதை அன்றே யூகித்துச் சொன்ன ஹட்டனை
இம்மைல்கல் நாயகராக்கியது சாலப்பொருத்தமே.. இல்லையா நண்பர்களே?

mukilan
03-07-2008, 08:51 PM
ஒரு தொடருக்கு தலைப்பிடுவது என்பது ஒரு அரிய கலை. தலைப்பைப் பார்த்ததுமே படிக்கத் தூண்டுமே! உங்களுக்கு மட்டுமே உரித்தான கைவந்த கலை அண்ணா.
அதிலும் உப தலைப்புக்களின் அழகு இன்னும் அற்புதம். கலைச்சொற்களை காணுகையில் பேரானந்தம்.ஏன், எதற்கு, எப்படி என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்பவர்கள்தான் பல விடயங்களுக்கு விடை கூறிச்சென்றிருக்கிறார்கள். அதிலும் இந்தச் சகலகல வல்லவர்... நிச்சயம் நாம் அடைந்திருக்கின்ற அறிவின் மைல்கல்தான்.
காடும் மலையும் கடலாகும்.. கடலே ஒரு நாள் மலையாகும். ...மலை மணலாகும். ......ஏறி இறங்கும் இந்த நிலமகளின் சுழற்சிக்கு பரமபதம் என்ற பதம் மிகப் பொருத்தமானது.மற்ற அறிவியல் மைந்தர்களையும் உங்களால் முடியும்பொழுது அறிமுகப் படுத்துங்கள் அண்ணா.

பாரதி
04-07-2008, 01:37 AM
நிலசுழற்சியை குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்ந்த ஜேம்ஸ் ஹட்டன் குறித்த விபரங்களும் அறியத்தந்த அண்ணனுக்கு அன்பு.
மைல்கற்கள் கூட மயிலிறகுகளாகின்றன உங்கள் வார்த்தைகளால்!
அத்தனை பணிப்பளுவிற்கிடையிலும் மைல்கற்களை தொடர்ந்து நட்டு வரும் உங்களைக்கண்டு வியக்கிறேன் அண்ணா!!

பாலகன்
04-07-2008, 02:14 AM
எங்கோ வாழ்க்கை பயணம்,
அது எங்கோ எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ மறைவார்
வருவதும் போவதும் தெரியாது

உங்கள் பரமபதத்தை படித்தவுடன் நினைவுக்கு வந்த பாடல் வரிகள்

இதை தானே நான் இங்கே தேடிக்கிட்டிருந்தேன்.......... மேலும் லெமுரியா பற்றிய தகவல்களும் இன்றைய கடலுக்கடியில் பண்டைய தமிழகம் பற்றியும் படங்களுடன் தகவல் கிடைத்தால் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன், அதை அறிந்துகொள்வது என்பது என் வாழ்வின் லட்சியமாக கொன்டிருக்கிறேன்

வாழ்த்துக்கள் இளசு என்கிற இளசு,,,,,,,,,,,

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

அன்புடன்
பில்லா

கண்மணி
04-07-2008, 02:31 AM
பில்லா கலக்கிட்டீங்க நல்லா

எங்கே வாழ்க்கைத் தொடங்கும் - அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்குத் தெரியாது

ஆயிரம் வாசல் இதயம் - அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோவருவார் யாரோ போவார்
வருவதும் போவதும் தெரியாது..

இரண்டுச் சரணத்தையும் ஒரு மிக்ஸியில போட்டு கலக்கிட்டீங்க...

இளசு தசாவதாரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே?....

aren
04-07-2008, 02:44 AM
அருமை இளசு!!! எப்படி எப்படி உங்களால்!!! இப்படி எழுத உங்களால் மட்டுமே முடியும்.

எல்லாம் எங்கே ஆரம்பிக்கிறதோ அங்கே முடிந்து மீண்டும் தொடங்கும். பரமபதம் சரியான பெயர்ப்பொருத்தம். ஒரு நாள் ஏறினால் மறுநாள் இறங்குவார்கள். அப்படியே கடலுக்கடியில் இன்றிருந்தாலும் நாளை கடலுக்கு மேலே.

உங்களைவிட யாராலும் இவ்வளவு எளிமையாக எழுதி புரியவைக்கமுடியாது.

இந்தத் தொடர் ஒரு பொக்கிஷம் என்பதை ஓவ்வொரு தடவையும் நீங்கள் நிரூபித்துவருகிறீர்கள்.

தொடருங்கள். அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
04-07-2008, 05:22 AM
சமூக அறிவியலில் எனக்கு எப்போதுமே ஒரு கண். குறிப்பாக புவியியல். ஒருமுறையாவது விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.. அது சிறிது நிறைவேறியது. ஆனால், இந்த மண்ணையும் அந்த விண்ணையும் குடைந்து ஆராய்தல் என்பது என் சிறுவயது ஆசை/கனவு.. அது கனவாகவே போயிற்று.. தமிழ் பாடமுறைகளில் உள்ள பெரும் ஓட்டைக்குள் தொபுகடீர் என்று விழுந்து காயத்தோடு இன்று மன்றாடிக்கொண்டிருக்கிறேன்... நாளை ஒரு ஜென்மம் கிடைத்தால், இளசு என்ற ஆசிரியர் கண் வாழ்ந்து, அந்த லட்சியத்தை அடைய எளிதான வழியைத் தேடவேண்டும் என்பதே!

தலைப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இன்று வரையிலும் எனக்கு கைக்கு வராத ரகசியம்.. தலைப்பிடுதல். இந்தத் தலைப்பைப் பார்த்த பொழுது என்னால் பொறாமைப் படுவதைத்தவிர வேறேதும் செய்யமுடியவில்லை.

ஹட்டன்.. எனக்குப் புதியவர்... அவரைப் பழக்கிய பெருமை.. அண்ணா உங்களையே சாரும்,.... தொடர்ந்து எழுதுங்கள்.

இளசு
04-07-2008, 05:44 PM
பின்னூட்டங்களால் ஒரு பதிவு எத்தனை அழகு பெறும் என்பதற்கு
சான்று - இங்கே நம் சொந்தங்கள் இட்ட பதிவுகள்..

முகிலா, கலைச்சொற்களைத் தேடி நான் வருமிடமே நீதானே!

பாரதி - உன் அன்புக்கு எல்லை இல்லை. 50 பாகங்கள் ஆனதும் தொகுக்கும் பொறுப்பு உனக்கே!

அன்பின் ஆரென், உங்கள் உற்சாக மொழிகளைக் கேட்டுத்தான் இந்த பாகம் சில நிமிடங்களில் நேற்று எழுதி முடித்தேன்.. முழு பொறுப்பும் உங்களுடையதே!

அன்பு பில்லா, லெமூரியா பற்றி கவியரசர் நாவல் வாசித்திருக்கிறேன்.
உங்களைப்போலவே எனக்கும் ஆவல் - அதை முழுதாய் அறிய

கண்மணி - உங்க கவுண்ட் டவுன் படித்து கவுந்தவன் நான்... தசாவதார ஜூரம் இன்னும் விடலையா நம்ம மக்களை?

ஆதவா, உன் புரிதலுடனான பின்னூட்டம் கண்டு கொஞ்சமாய் பெருமிதம்.. தொடரட்டும் உன் ஆதரவு..

அனைவருக்கும் என் விழி பனித்த நன்றிகள்!

சிவா.ஜி
05-07-2008, 06:23 AM
அச்சின்றி அனுதினம் சுற்றும், அண்டத்தின் ஒரு துண்டம். ஓரணு உயிரினத்திலிருந்து கோடியணு உயிரினம் வரை வாழ்ந்து மடியும் பூமி.
அதிகபட்சம் கிணறு வெட்ட மட்டுமே ஆழம் அகழ்ந்தவர்கள் மத்தியில்...நிலத்தின் நிஜமறிய அகழ்ந்தவர் ஹட்டன்.

அவர் தொடங்கி வைத்த தோண்டலின் தூண்டல்....இன்றுவரை தொடர்ந்து எத்தனையோ ஆழ உண்மைகளை வாரி வெளிக்கொட்டினாலும், தொடங்கிய ஹாட்டன்தான் இவர்களுக்கெல்லாம் பாட்டன்.

இளசுவின் காந்த வரிகளில் அறிவியல் உண்மைகளை வாசித்து மகிழும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. எத்தனை பெரிய விஷயங்களையும்...எளிய தமிழில் இனிக்க இனிக்க இளசு வழங்குவதை இன்பமோடு இன்னும் எதிர்பார்க்கிறேன்.

இளசு
05-07-2008, 06:56 AM
அச்சின்றி அனுதினம் சுற்றும்
அண்டத்தின் ஒரு துண்டம்
.ஓரணுவிலிருந்து கோடியணு உயிர் வரை
வாழ்ந்து மடியும் பூமி.
கிணறு வெட்ட மட்டுமே அகழ்ந்தவர்கள் மத்தியில்...
நிலத்தின் நிஜமறிய அகழ்ந்தவர் ஹட்டன்.

அவர் தொடங்கி வைத்த தோண்டலின் தூண்டல்....
இன்றுவரை தொடர்ந்து எத்தனையோ
ஆழ உண்மைகளை வாரி வெளிக்கொட்டினாலும்,
தொடங்கிய ஹாட்டன்தான் இவர்களுக்கெல்லாம் பாட்டன்.

.

கவிஞன் கண்டாலே கவிதை!

கவியரசன் வரிகளுக்கு உதாரணம் கண்டேன்!

பின்னூட்டம் கண்டு மனதில் துள்ளாட்டம்!


நன்றி சிவா!

meera
05-07-2008, 08:57 AM
அண்ணா, இன்றே இந்த பதிவை படிக்க முடிந்தது. எனக்கு எப்பவுமே புரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அறிவியல் பற்றி எது கிடைத்தாலும் படிப்பேன். உங்களின் இந்த திரி என் மனதின் ஆழத்தில் புதைந்து போன ஆசையை மீண்டும் மீட்டு கொடுக்கிறது. இன்னும் நிறைய தாருங்கள் அண்ணா தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறது. அழகாய், பிசிறின்றி எழுதும் உங்கள் கை வண்ணம் கண்டு வியப்பாய் இருக்கிறது அண்ணா.

பூமகள்
05-07-2008, 09:17 AM
சில படைப்புகள்..
ஒரு முறை மட்டுமே படிக்கத் தோன்றும்..
சில பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கத் தோன்றும்..
பல படைப்புகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்..

ஆனால் ஒரு சில படைப்புகளே..
காலத்தை வெல்லும்
மனம் கவரும்..

அவ்வகை படைப்புகள் தரும் பெரியண்ணா....
உலகத்தின் எத்தனை அதிசயங்கள் வந்தாலும்...
முதலாம்
அதிசயமானவர்..
அற்புதமானவர்..

நிலமகளோடு ஆடும்
பரமபதம்...
நிலவியலை அதிகம்
உணர்த்தியது..
என்னில் உணர்ந்ததை
இன்னும்
உணர்ப்பித்தது...

நன்றிகளோடு தலை வணங்குகிறேன்..!!

ஆயிரம் மைல் கல்களையும் கடக்க உங்கள் பின் தங்கை பூவும் நடந்தே பின் தொடர்கிறேன்..!!:icon_rollout:

அன்பினிய சுவை பாராட்டுகள் அண்ணலே..!!:icon_b::icon_b:

இளசு
08-07-2008, 05:21 AM
இனிய தங்கைகள் மீரா, பூ - இருவருக்கும் என் கனிந்த நன்றிகள்..

இந்த வகை ஊக்கம் இருக்க, என்ன குறை அண்ணனுக்கு?

விரைவில் அடுத்த மைல்கல் நாயகர் - ''தடுத்தாண்டவர்'' !

பூமகள்
08-07-2008, 05:25 AM
''தடுத்தாண்டவர்'' என்றால் தடுத்து ஆண்டவரா பெரியண்ணா??:icon_ush::icon_ush:

ஆவலோடு இருக்கிறோம்... :icon_rollout:
விரைந்து வாருங்கள்..!!:icon_b:

Narathar
29-09-2008, 10:31 PM
அருமையான ஒரு தொடரை இவ்வளவுகாலம் தவற விட்டதற்காக வருந்துகின்றேன்...

முதல் பின்னூட்டத்தில் முகிலன் சொன்னதுபோல அறிவியலை உங்கள் கலா ரசணை எழுத்துக்களால் இன்னும் சுவாரஷ்யம் நிறைந்ததாக ஆக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்