PDA

View Full Version : யுத்த வாழ்வுஆதி
01-07-2008, 12:38 PM
கவிந்த பின்பனியிரவில்
மேகங்கள் மட்டும் நகர்ந்திருந்த வானில்
புகுந்து பறந்தன
மரணப் பறவைகள்..


உடன்பேச யாருமற்ற
ஒற்றை மரகங்கள்
இடம் பேசியிருந்த காற்றின்
சிறகுகள் படபடத்தன..

இமைகளை நொடிக்கும் பொழுதில்
கண்ணகியின் தீமுலைகளை
எச்சமிட்டன..
அந்த பறவைகள்

நாளை விரிவதற்காக
காத்திருந்த பூ..

காலை குடிப்பதற்காக
வைத்திருந்த கஞ்சி பானை..

ஓட்டை திறந்து அன்றே
உயிர்த்த குருவி குஞ்சு..

சற்று முன் காற்றோடு
சரசமாடி இருந்த மரம்

உணர்வாலும் உதிரத்தாலும்
உருவாக்கிய வீடு
தாத்தா படுத்திருந்த முந்திண்ணை
விளையாடி மகிழ்ந்த முற்றம்

என எல்லாம்
வெடித்த குண்டுகளில்
வெந்து கருகின
சிதைந்து சிதறின..

அழுவதற்கு
அடுத்த வீட்டுக்காரனும்
மிஞ்சாமல் நிகழ்ந்துவிட்டது
அந்த அழிவு..

கனவு கூடுகளாய்
இருந்த வீடுகள்
கல்லறைகளாய் பிணங்களை
மூடிகிடந்தன..

இடிபாடுகளில் இருந்து
சிதறிய
ரத்த தெறிப்புக்களில்
தூக்க வாடையும்
துக்க வாடையுமடித்து
கொண்டிருந்தது…

ஆதவா
01-07-2008, 12:46 PM
வாவ்.... அழகு... (பிறகு எழுதுகிறேன் விமர்சனம்..)

Keelai Naadaan
01-07-2008, 01:12 PM
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பற்றிய அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள்.
சம்பந்தபட்டவர்கள் மனம் மாறுவார்களா...?

pasaam
01-07-2008, 01:17 PM
ஆமா! ஆதி இந்த அவலவாழ்வு என்றுதான் மறையுமோ? ஆண்டவனும் கைவிட்டு விட்டானே.
பாசம்
(தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்)

சிவா.ஜி
01-07-2008, 01:21 PM
பூவும், கஞ்சிப்பானையும், குஞ்சுப்பறவையும், மரமும் மற்றும் மனிதர்களும் என்று....அழவும் ஆளில்லாமல் அத்தனையும் அழிந்ததில் உயிர்கள் மட்டுமா கருகின...?
உறவுச்சங்கிலியின் இணைப்புகள் இற்றுப்போயின, சந்ததி சரத்தின் சரடு முறிந்தது.....நாளைய கனவுகள் விளையாமலேயே வீழ்ந்தது...

மரணப்பறவைகளுக்கு உயிர்களின் சுவை விருப்பம் போல் இருக்கிறது.
ஏன் இருக்காது உள்ளிருப்பதும், உடலாயிருப்பதும் உலோகம்தானே....

வார்த்தைகளின் கோர்வை அசத்துகிறது, வலியை உணர்த்துகிறது. வாழ்த்துகள் ஆதி.

நாகரா
01-07-2008, 05:01 PM
இரவிலும் பட்டப்பகலாய் ஒளிருமொன்று
யாருமற்ற வெறுமையிலும் ஆதரவாய்ப் பேசுமொன்று
இமையாது விழித்திருக்குமொன்று
வாடாது பூத்திருக்குமொன்று
தீராப்பசி தீர்க்குமொன்று
குருவியும் மலையும் உறவாய்ப் பேணுமொன்று
உற்ற நோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யா மரம் போல் உயர்ந்தவொன்று
சுவர்களை விட்டதால் சேர்ந்த வீடொன்று
பெருவெளியே முற்றமாய் விளையாடும் முதிர்ந்த குழந்தையொன்று
வெந்து கருகாத சிதைந்து சிதறாத உயிர்ப்புள்ள மூலமொன்று
அழியா இன்பத்தின் அமரச் சிரிப்பொன்று
பொய்க்கனவு கலைக்கும் மெய்ச்சுடரொன்று
கல்லறைகளால் மூடமுடியாத நித்திய ஜீவனொன்று
முடைநாற்றப் பிணங்களையும் உயிர்த்தெழுப்பும் சுத்த சமரச சன்மார்க்க சக்தியொன்று
இடிபாடுகளில் இடியாத சிறந்தவொன்று
சிதறல்களில் தெறிக்காத சிவந்தவொன்று
தூக்கத்திலும் விழித்திருக்குமொன்று
துக்கத்திலும் சுகித்திருக்குமொன்று
மூளையின் மறைகள் முழுவதுமாய்க் கழன்று விழ
இருதய குகையில் பெருந்தயவாய் வாழுமொன்று
யுத்த பூமியின் இரணகளத்தில்
சமாதான அணுகுண்டாய் வெடிக்கும்
அன்பெனும் ஆதியொன்றைப் போற்றுவோம்
நவயுக சித்தராய் அவனியில் இன்றே எழுவோம்
சம்மதமா ஆதி!
சம்மதமென்றால்,
"எனக்கு முன்னர் சித்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்!"
என்று அமரகவி பாரதி போல் முழங்க ஏன் தயக்கம்?
"இதை விடப் பெரிய கிரியைகளை என் தந்தையின் கிருபையால்
நீங்களும் செய்வீர்கள்!"
என்ற குருநாதர் இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கு நிறைவேறும்
ஞான யுகம் மலர்வதற்கு
"எனக்கு முன்னர் புத்தர் பலர் வந்தாரப்பா!
நானும் வந்தேன் ஒரு புத்தன் இந்த நாட்டில்!"
என்றுமல்லவா முழங்க வேண்டும்!
முழங்குவீரா ஆதி!
யுத்த வாழ்வின் அவலத்தைப் பாடுவதொன்றே போதுமென்று
புத்தி மழுங்கிச் செத்த பிணமாய் நடப்பதொன்றே விதியென்று
மொத்தமாய் உம் ஆன்மாவை மாயைக்கு விற்று விட்டு
மேலான ஒன்றை மறந்து வீழ்வீரோ ஆதி!
காட்டமான கேள்வி தான்
கேட்டதற்காய் மன்னிப்பீர்
சுரணையேற்றவே சுடுகிறேன்
உம்மை மட்டுமல்ல
என்னையுந்தான்
அன்பின் மிகுதியால் செய்த என் வன்செயலைப் பொறுப்பீர்!
சுரணையோடு எழுவீர்
மேலான ஒன்றை இப்போதே நினைவு கூர்வீர்!

ஆதி
01-07-2008, 06:23 PM
வாவ்.... அழகு... (பிறகு எழுதுகிறேன் விமர்சனம்..)


பொறுமையாய் வந்தெழுதுங்கள் ஆதவா..

செழியன்
01-07-2008, 08:28 PM
நாங்கள் பட்டதை நீங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டியுள்ளீர்கள் ஆதி,
நன்றி

அக்னி
01-07-2008, 10:13 PM
பின்பனியிரவில் உலகு...
எல்லாமே எங்குமே அழகு...
எல்லாமே புதியதாக, புத்துணர்ச்சியாக...

மெல்லிய கருமை படர்ந்த, அவ்வழகை,
எப்படிக் கருக்க முடிந்தது...

அசையும் அசையா அனைத்தும்
கருகிய வாசம் தாங்கிய காற்று
என்னையும் சூழ்கின்றது...

பாராட்டுக்கள் ஆதி...


அழுவதற்கு
அடுத்த வீட்டுக்காரனும்
மிஞ்சாமல் நிகழ்ந்துவிட்டது
அந்த அழிவு..

ஆறு ஆகஸ்ட் 1945
நினைவுக்கு வருகின்றது...

யாருமில்லை என்ற சேதி சொல்லவும்,
யாருமில்லை...

தீபன்
02-07-2008, 03:51 AM
இமைகளை நொடிக்கும் பொழுதில்
கண்ணகியின் தீமுலைகளை
எச்சமிட்டது..


கண்ணகியின் சீற்றம் நியாயமானது... இங்கு வீசப்படுவது கண்ணகியின் தீ முலைகளென்றால் வீசும் செயலை நியாப்படுத்துகிறீர்களா...?

யோவ், ஆதவா, எதைத்தான் அழகு என்பதில்லையா... ரசனை இருக்க வேண்டியதுதான்... அதற்காக அவலங்களை சித்தரிக்கையிலும் அதை காண்பதை விட்டுவிட்டு கவிதையை மட்டும் கண்டு அழகென்றால் அங்கு அந்த படைப்பை ஆக்கியவன் தோற்றுப்போய்விடுவானே...!

Narathar
02-07-2008, 04:31 AM
நாளை விரிவதற்காக
காத்திருந்த பூ..

காலை குடிப்பதற்காக
வைத்திருந்த கஞ்சி பானை..

ஓட்டை திறந்து அன்றே
உயிர்த்த குருவி குஞ்சு..

சற்று முன் காற்றோடு
சரசமாடி இருந்த மரம்

உணர்வாலும் உதிரத்தாலும்
உருவாக்கிய வீடு

தாத்தா படுத்திருந்த முந்திண்ணை
விளையாடி மகிழ்ந்த முற்றம்

என எல்லாம்
வெடித்த குண்டுகளில்
வெந்து கருகின
சிதைந்து சிதறின..
அமைதியான வாழ்வை........ அறுத்தொழிக்கும் யுத்த ராஜாவின் கொடுமையை விளக்கியவிதம் அருமை...

உங்கள் கவிதையின் நேர்த்தியை பாராட்டுவதா?
யுத்ததின் அகோரத்தை நினைத்து வேதணைப்படுவதா????/

ஆதி
02-07-2008, 11:01 AM
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பற்றிய அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள்.
சம்பந்தபட்டவர்கள் மனம் மாறுவார்களா...?

பின்னூட்டத்திற்கு நன்றி கீழைநாடன்..


ஆமா! ஆதி இந்த அவலவாழ்வு என்றுதான் மறையுமோ? ஆண்டவனும் கைவிட்டு விட்டானே.
பாசம்


மறையும் விடியும் காலம் அருகில்தான் உள்ளது..

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் பாசம்..

ஆதி
02-07-2008, 03:27 PM
வார்த்தைகளின் கோர்வை அசத்துகிறது, வலியை உணர்த்துகிறது. வாழ்த்துகள் ஆதி.

நன்றி சிவா அண்ணா.. நம் உடன் பிறப்புகளின் இந்த வலிகள் என்று தீருமோ அந்த நாளே தமிழரின் திருநாள் அண்ணா..

இளசு
02-07-2008, 08:06 PM
யுத்தம் எங்கு யாருக்கு நேர்ந்தாலும் வலிதான்
நம் ரத்தங்களுக்கு என்றால் கூடுதல் வலி..

வலிக்கச் சொன்ன வரிகளுக்கு பாராட்டுகள் ஆதி..

கண்ணகி வரி எனக்கும் பொருந்திப் புரியாத நெருடலே தீபன்..

ஆதவனிடம் இன்னும் பொறுமையான தொனியில் கேட்கலாமே!
யாருமில்லை என்ற சேதி சொல்லவும்,
யாருமில்லை...

வலிக்கும் முரண் அக்னி!

ஆதவா
03-07-2008, 06:24 AM
கண்ணகி வரி எனக்கும் பொருந்திப் புரியாத நெருடலே தீபன்..

ஆதவனிடம் இன்னும் பொறுமையான தொனியில் கேட்கலாமே!அதற்கு என்னிடம் பதில் இருக்கீறது.... ஆனால்................

ஆதவன் தான் எதையும் தாங்கும் இதயம் ஆச்சே அண்ணா
(வேலைப்பளு... பதில் விரைவில்.)

அக்னி
03-07-2008, 08:32 AM
பயங்கரவாதம் செய்தவரோடு, அக்கிரமம் செய்தவரோடு, விரோதமானவரோடு மட்டும் நிறுத்தப்படவில்லையே அழிவு...
இவர்களனைவரோடும்,
பாலர் முதல் வயோதிபர் வரை, செடி முதல் மரம் வரை, பறவைகள் முதல் விலங்குகள் வரை, கட்டிடங்கள் முதல் காடுவரை
என அனைத்துமல்லவா அழிவில்...

ஒரு வகையில் கண்ணகி தீய்த்ததும் இப்படித்தானே...

இமைகளை நொடிக்கும் பொழுதில்
கண்ணகியின் தீமுலைகளை
எச்சமிட்டன..
அந்த பறவைகள்

என் அறிவுக்கெட்டிய வரையில்... நான் விளங்கியவரையில்...

அமரன்
03-07-2008, 08:43 AM
காட்சிகளை கண்ணுற்றாலும் ஆத்மார்த்தமாக நோக்கும் ஒருவனால்தான் இந்தமாதிரி எழுதமுடியும். பராட்டுகள் ஆதி.

நான் கேள்விப்பட்டவரையில் கண்ணகி நெருப்பில் வேகாததும் உண்டாம். அவர்கள் சிறார்களும் பெண்களும். ஈழத்தின் நிலமை அப்படியா? அங்கே நான் இருக்கும் வரை முதியோர் பள்ளியைக் கண்டதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டோர் படிக்கும் முன்பள்ளிகள் வன்னி நில மயில்கள் போல நிறைந்திருக்கும். அகோரமான கொடூரமான யுத்த தீக்கு நாக்குகளால் இரையாடப்பட்ட சொந்தங்களின் நினைவுகளை தலைக்கு அணையாக்கி உறங்க எத்தனிக்கும் பிஞ்சுகளின் ஆலயங்கள் பல கண்டேன்.

கண்ணகி நெருப்புக்கு காரணம் கண்டறிய முயல்வோம்.

அக்னி
03-07-2008, 08:51 AM
கண்ணகி நெருப்பில் வேகாததும் உண்டாம். அவர்கள் சிறார்களும் பெண்களும்.
அப்படியா...
மதுரை முழுமையும் பற்றி எரிந்தது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆதவா
03-07-2008, 11:37 AM
கவிதையில் வலிகளைப் புகுத்தி எழுத முடியுமா என்றால் முடியும் என்கிறது கவிதை. நமக்கு நேராத ஒன்றை நேர்ந்ததாக காட்சி பிடிப்பது கவிதையிலும் சாத்தியமாகிறது. இக்கவிதையின் வார்த்தை கோர்ப்பு அதனை உறுதிபட கூறுகிறது.

யுத்த கவிதைகள் பல படித்தாலும் ஏதாவது ஒருவித சலிப்பு படர்ந்து இருக்கும். அந்தப் போர்வையை விலக்கிவிட்டு படிக்க நம்மால் இயல முடிவதில்லை.

முதல் வரியில் காட்சிப் படுத்தியவரிகள் புதுமை இல்லை என்றாலும் நளினமாக படிப்பவர்களைத் துளைக்கிறது. மரணப்பறவைகள் போர் விமானங்கள். இறகு வளையா பறவைகள். மனிதனின் மரணத்திற்காக மனிதன் பயன்படுத்தும் வாகனம். இங்கு 'புகுந்து மறைந்தன' என்பது மேகத்தை ஊடுறுவுவதாக இருப்பதோ அல்லது மழை பொழிய இடம்பார்ப்பதாக இருப்பதோ என்பது வாசகனின் ஊகத்தில் அமையலாம். 'மேகங்கள் மட்டும் நகர்ந்திருந்த' என்ற வரிகள் மேகங்களோடு அமைந்த வெறுமையைப் புலப்படுத்துகிறது,

மரகங்கள் என்றால் என்ன என்பது தெரியவில்லை. அது தெளிவாகும் போது அதனோடு இணைந்த மற்ற வரிகள் வீரியம் என்ன என்பது தெளிவாகும்.

கண்ணகியின் தீமுலை? இது இருவகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்னால். குண்டுகளை தீமுலைகளாக ஒப்பிட்டமை சிறப்பு. முதலாவதாக, கண்ணகியின் பெருங்குற்றம் மரணப்பறவையின் வாயிலாக எச்சமிட்டது எனலாம். கண்ணகி பத்தினி என்பதைவிட கொலைகாரி என்பதைவிட யுத்தவெறிகொண்ட அரசனையும் மீறும் உள்ளம் படைத்தவள் என்பதே தெளிவு. எவ்வாறு அரசனுடைய தீர்ப்பு அவளை வெறித்தூண்டி மக்களை அழித்தாளோ அதே போலத்தான் நாட்டு அதிபர்/பிரதமர் அல்லது நாட்டு பிரச்சனையில் மக்கள் சாவதும்... கண்ணகியின் தீமுலை என்ற வரிகள் மிக மிகச் சரியான வரிகள்...

இதற்குப் பிந்தைய வரிகள் கவிஞருக்கே உண்டான திறனோடு அமைக்கப்பட்டிருக்கிறது. உதிரத்தால் உருவாக்கப்பட்ட வீடு உதிரம் சிந்திய பிணங்களோடு பிணங்களாகக் கிடப்பதாகக் காணப்படும் வரிகளும் ரணத்தை கொஞ்சமேனும் எட்டிப்பார்க்கச் செய்கிறது.

அந்தவகையில் கிட்ட இருந்து எழுதிய கவிதையாகத் தோணுகிறது... அமரன் சொல்வதைப்போலவே!!!

நாகரா அவர்களே! உங்கள் பின்னூட்டமும் அருமை... ஆனால் ஆதி ஏதோ நிதமும் யுத்த புலம்பலை எழுதுவதாக அல்லவா உங்கள் எழுத்து இருக்கிறது? நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை இன்னும் ஆதி தராத நிலையில் அது அவருக்குப் புரிந்ததா அல்லது மற்றவருக்குப் புரிந்ததா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது நண்பரே!

அக்னி!!! என்ன சொல்வது நண்பா? அந்த வரிகள்.... நிசமாகத்தான் சொல்கிறேன். அந்த நிலையில் என்னை இருத்தி நினைத்துப் பார்த்தால்... சரி விடுங்க,, உங்கள் மக்கள் நினைவுகளைக் கிளற விரும்பவில்லை..

தீபன்.. உங்கள் கேள்விக்கான எனது பதிலும் இந்தப்பதிவிலேயே இருக்கிறது.. மேலதிக சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். முடிந்தவரை பதில் சொல்லக் காத்திருக்கிறேன்.

நாகரா
03-07-2008, 06:28 PM
யுத்த வாழ்வின் இரணங்களில்
என் இதயம் இறைச்சித் துண்டுகளாய்ச்
சிதறிக் கிடக்கின்றன.
அவை இருதய ஒருமையில்
ஒன்று சேரும்
உயிர்த்தெழலின் அதிசயம்
மனித மிருகம்
தேவ மனிதமாகும்
பரிணாமப் பாய்ச்சலில் மட்டுமே
நிகழ முடியும்
வள்ளலே!
உலக உயிர்த்திரளின்
நரக வேதனை
என் மெய்யெங்கும் தாங்கி
மரணக் குழியுள்
குற்றுயிரும் குலையுயிருமாய்
நடக்கிறேன்.
உமதருள் வெள்ளம் பாய்ச்சி
சமாதானப் பெருவாழ்வைத்
தாரீரோ!

அன்பு மகனே!
கருத்த மனத்தை
வெளுக்கும் என் வெள்ளங்கி
வேகமாய்
உலகெங்கும் விரிகிறது.
இருதய ஒருமையில்
சமாதானப் பெருவாழ்வின்
அதிசயம் நிகழ்கிறது.
யுத்த பூமியில்
உன் இருதய வாய் திறந்து
இரு தயவாய்
என் மெய் வழி அதுவே!
மரணப் படுகுழியிலும்
ஜீவித்திருக்கும்
என் மெய் வழி அதுவே!
இரு தயவாய்!

ஆதி
08-07-2008, 01:41 PM
யுத்த வாழ்வின் அவலத்தைப் பாடுவதொன்றே போதுமென்று
புத்தி மழுங்கிச் செத்த பிணமாய் நடப்பதொன்றே விதியென்று
மொத்தமாய் உம் ஆன்மாவை மாயைக்கு விற்று விட்டு
மேலான ஒன்றை மறந்து வீழ்வீரோ ஆதி!
காட்டமான கேள்வி தான்
கேட்டதற்காய் மன்னிப்பீர்
சுரணையேற்றவே சுடுகிறேன்
உம்மை மட்டுமல்ல
என்னையுந்தான்
அன்பின் மிகுதியால் செய்த என் வன்செயலைப் பொறுப்பீர்!
சுரணையோடு எழுவீர்
மேலான ஒன்றை இப்போதே நினைவு கூர்வீர்!

அன்பின் மிகுதியால் சொல்லப்படுகிற சிந்தனைகளில் இதயத்தை தொட்டு சொல்லுமே தவிர சுட்டு செல்வதில்லை ஐயா.. பிறகெதற்கு பொறுப்பீர் மன்னிப்பீர் என்ற பெரிய வார்த்தை எல்லாம்.. இருட்டை தெளியவைத்தமைக்கு நன்றி ஐயா.. மேலான அமைதி மீதூர்ந்து அவனியில் பவனி வழிசெய்வோம்..

சுருக்கென்று சுரணைதரும் சூரிய பின்னூட்டத்திற்கு நன்றிகள் ஐயா..

ஆதி
08-07-2008, 01:49 PM
நாங்கள் பட்டதை நீங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டியுள்ளீர்கள் ஆதி,
நன்றி

நன்றி செழியன்
ஆறு ஆகஸ்ட் 1945
நினைவுக்கு வருகின்றது...

யாருமில்லை என்ற சேதி சொல்லவும்,
யாருமில்லை...


விண்மீனகளாய் எரிகிறது
விழிகளில் கோபம்

இயலாமை இதழ்களில்
கெட்ட வார்த்தைகளாகிறது..

கிராமத்து கிளவிகளாய்
மண்வாரி தூற்றத்தான்
தோன்றுகிறது அந்த
கொடுமைகாரர்கள் மீது..

வேறொன்றும் சொல்ல தெரியவில்லை அக்னி எனக்கு..

ஆதி
08-07-2008, 02:03 PM
கண்ணகியின் சீற்றம் நியாயமானது... இங்கு வீசப்படுவது கண்ணகியின் தீ முலைகளென்றால் வீசும் செயலை நியாப்படுத்துகிறீர்களா...?நெருப்பு பலுன், நெருப்பு பம்பரம் என்றுதான் எழுத நினைத்தேன் கண்ணகியின் தீமுலை பொருந்துவதாய் தோன்றவே.. இதை பயன்படுத்தினேன்..

ஆதவா அழகு என்று சொன்னதற்கு அர்த்தமிருக்கிறது கவிதையில் வலிகளைவிட வர்ணிப்புகள் அதிகம்..


அமைதியான வாழ்வை........ அறுத்தொழிக்கும் யுத்த ராஜாவின் கொடுமையை விளக்கியவிதம் அருமை...

உங்கள் கவிதையின் நேர்த்தியை பாராட்டுவதா?
யுத்ததின் அகோரத்தை நினைத்து வேதணைப்படுவதா????/

பாராட்டுக்கள் தேவையில்லை நாரதரே வேதனைக்கு ஆறுதல்தான் தேவை..