PDA

View Full Version : பாழாய் போன வெற்றிடம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-06-2008, 05:37 AM
உனக்கும் எனக்குமான
இடைவெளிக்குள் அமர்ந்து
பேய்ச்சிரிப்பு சிரிக்கிறது வெற்றிடம்

அன்றொரு நாள்
யாருமற்ற அரவெளியில்
அன்னியோன்மாய் நாமிருவரும்
கிடக்கையில் இதே வெற்றிடம்
தூரத்தில் நின்று
முறைத்துக்கொண்டிருந்தது

நீ அமர்ந்தாடிய
ஊஞ்சலில்
குடித்து வைத்த
தேநீர் குவளையில்
இதெல்லாம் கல்யாணத்துப் பின்னாடி
என்று சொல்லியும் கேளாமல்
அவசர அவசரமாய்
அம்மா வருவதற்கு முன்பாய்
கூட்டிப் பெருக்கிய வீட்டின்
பளிங்குத்தரையில் எல்லாம்
வெற்றிடம் நர்த்த நாட்டியம்
புரிந்துகொண்டிருக்கிறது.

கண்ணுக்குத்தெரியும் ஒரு புவியையும்
தெரியாத ஏழு புவிகளையும்
ஆக்கிரமித்தும்
ஏதோ நாம்தான் அதற்கு
குந்தகம் செய்தோமென்று
வரிந்துகட்டிக்கொண்டு
என்னிடம் மல்லுக்கட்டுவதைத்தான்
புரியமுடியவில்லை
என்பதையாச்சும்
அதற்குணர்த்த என்னிடம்
மொழியுமில்லை.

முன்பைப் போல்
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்
சடாரென்று கட்டிலில் சாய்ந்து
ஜன்னல் கதவு திறந்து
ஆடை மாற்றி
வீட்டுத்தொலைபேசி உட்பட
அனைத்தையும் செயலிழக்கி
தனிமையில் இனிமையெல்லாம்
காண முடிவதில்லை
மூன்றாவது கையாய்
சதா என்னுடன் அது
தொங்கிக்கொண்டிருக்கும் பயத்தில்

ஓராயிரம் பாட்டிற்குப்பின்
ஒரு வழியாய்
நம் திருமணத்திற்கான
நிச்சயத்தாம்பூலம்
பரிமாற்றப்படும் போது
அது இன்னும் ஆனந்தம் கொண்டிருந்ததை
அப்போதைக்கு புரியமுடியா புத்தி
சின்னஞ்சிறு விஷயத்திற்கெல்லாம்
பெட்டியைத் தூக்கிக்கொண்டு
நீ நின்ற பொழுது
புரிந்து கொண்டது.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.com

இளசு
05-07-2008, 11:29 AM
மனம் இட்டு நிரப்பிவிடும் இடம்..
முடியாதபோது பிரமாண்ட வெற்றிடமாய்..

ஒரு கருவை மிக விசாலமாய்ச் சிந்திக்கும் ஆற்றல் கண்டேன்..
அசந்தேன்.. பாராட்டுகள் ஜூனைத் அவர்களே!

பூமகள்
05-07-2008, 11:46 AM
வெற்றிடம் நிரப்பிய
வெறுமை தினங்கள்..!

நிரப்பும் சொந்தம்
நெஞ்சிருக்கையில்..
வெற்றிடமில்லை..

நிரப்பியது குறைகையில்..
குறுநிலமும்..
பேரண்ட வெற்றிடம் தான்..!!

நிரப்பத் தேவை..
புரிந்துணர்வு..

பொடியாக்கட்டும்
இப்படியான வெற்றிடங்கள்..!!

-------------------------------------------------------------
பாராட்டுகள் ஜூனைத் அண்ணா..!!
பெரியண்ணாவின் விமர்சனம் சாதப் படையலில் சுவையூறும் குறுந்தொக்கு..!!

பாராட்டுகள் பெரியண்ணா. :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 12:07 PM
என் கவிதைக்கு விரிவுரை எழுதியது போல் இருக்கிறது உங்கள் கவிதை பூமகள். கவிதை புரியப்படமுடியாமல் போய் விடுமோவென்று பயந்து கொண்டிருந்தேன். இளசு அண்ணாவின் பின்னூட்டத்தையும் உங்கள் கவிதையையும் பார்த்த போது பயம் நீங்கியது. நன்றி உங்கள் இருவருக்குமே.

ஆதவா
06-07-2008, 02:19 AM
வெற்றிடம்.. என்ன ஒரு அருமையான கரு.. (நமக்கு ஏன் ஆதவா
இதெல்லாம் தோணமாட்டேங்குது?)

வெற்றிடத்தின் பின்புலத்தில் வெறுமை இருக்கிறது. வெறுமையை சூன்யம்
என்று சொல்வார்கள். வெற்றிடத்திற்கும் வெறுமைக்கும் என்ன
வித்தியாசம். வித்தியாசம் ஒன்றுதான், வெறுமை உணர்தலால் உண்டான
அகவுணர்ச்சி, வெற்றிடம் புறவுணர்ச்சி அஃது கண்கள் மட்டுமே
கண்டறிந்து உணரும் காட்சி.

வெற்றிடத்தில் நம்மை நிரப்பினால் அது தனிமை. தனிமையின் இனிமை
நாம் நம்மை வெற்றிடத்தில் எப்படி இருத்தி வைக்கிறோமோ
அப்படித்தான் இனிமையும் இருக்கும்.. பெரும்பாலான தனிமை
இனிமையைத் தருவதில்லை..

இருவருக்குமான இடைவெளி வெற்றிடம், இங்கே மெளனங்களால் நிரப்பப் பட்டிருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் இருவருக்குமிடையேயான வெற்றிடம் உருவாக, வார்த்தைகள் வேண்டும்.. வார்த்தைகளின் முடிவு, மெளனம்.

அதே இடவெளி நெருக்கமாக இருக்கும்போது இந்த வெற்றிடம் காணாமல் போயிருந்தது.. ஆனால் அது கூப்பிடு தொலைவு. சூன்யத்தை நெருக்கி முத்தமிடத் தெரிந்த அன்றொருநாளை வெற்றிடம் முறைத்துக் கொண்டு நின்றுகொண்டிருப்பது ஆச்சரியமல்ல..

வெற்றிடத்தை எப்படியெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அப்படியெல்லாம் எழுத்து கொண்டு செல்கீறது. குறிப்பாக இறுதி வரிகள் வெற்றிடத்தைத் தொடவில்லை என்றாலும் அதற்கான நிமித்தங்களைச் சரியாகச் சொல்லி முடிக்கிறது.

சுருங்கச் சொன்னால்... இது மிக அழகான ஆழமான தெளிவான, எளிமையான புதுமையான கவிதை...

வாழ்த்துகள் ஜுனைத்