PDA

View Full Version : வினை விதைத்தவன்....சிவா.ஜி
29-06-2008, 01:43 PM
நேற்று இரவு தோழியுடன் 'சாட்'டிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் தடைபட்டு எரிச்சலில் விசைப்பலகையைக் குத்தியதில்..ஆல்ட் பொத்தான்
சரியாக வேலை செய்யவில்லை. இன்று மீண்டும் அலுவலகம் முடிந்ததும், அரக்க பரக்க வீட்டுக்கு வந்த வித்யா..அம்மாவின் காஃபியை அறைக்கே கொண்டுவரும்படி கூறிவிட்டு அவசரமாய் முகம் கைகால் கழுவிக்கொண்டு கணிணியியை உயிர்ப்பித்தாள். அவள் அவசரத்துக்கும் காரணமிருக்கிறது. நேற்றிரவு மின்சாரத் தடை ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்புதான் சாட்டில் வந்த தோழி "டீ வித்யா...உனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லப் போறேன்....இல்ல இல்ல.....காட்டப்போறேன்...என்று உரையாட ஆரம்பித்த உடனேயே தட்டச்சிக் காட்டியதும்....அதிர்ந்து போய்விட்டாள்..என்ன ஏது என்று கேட்பதற்குள் மின்சாரம் பழிவாங்கிவிட்டது.

அன்று முழுவதும் அது என்ன அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்று யோசித்து யோசித்துக் களைத்துப்போய்விட்டாள். மரணச் செய்தியிலிருந்து...அத்தனைக் கோணங்களிலும் யோசித்தும் பிடிகிட்டவில்லை.
அலுவலகத்தில் கணிணி வசதியிருந்தும் அதை தன் அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே உபயோகிப்பதைக் கொள்கையாகக் கொண்டவள். அதனால்தான் மாலையில் அவசரமாய் வீடு திரும்பியதும் கணிணியை திறக்க இத்தனை பரபரப்பு. உரையாடல் சாளரத்தைத் திறந்து தோழி இருக்கிறாளா என்று ஆர்வத்துடன் பார்த்தாள்.

இருக்கிறாள். உடனே அவளை அழைக்க தட்டச்சினாள். உடனடியாக அவளது பதில் மின்னியது.

"கொஞ்சம் காத்திரு....ஒரு படத்தை இணைக்கிறேன். ஆர்குட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்...என்று....சொல்லிவிட்டு...அதிகம் காக்க வைக்காமல் சுட்டியைத் தட்டிவிட்டாள். உள்ளுக்குள் பயந்துகொண்டே அந்த சுட்டியை தொட்டதும்.....அதிர்ந்துவிட்டாள். அந்த நேரம் பார்த்து மிகச் சரியாக அவளுடைய அம்மாவும் காபியுடன் ஆஜராக...அவரும் அதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தார். ஒரு படமும்...அதன்கீழ் சில வரிகளும் இருந்தது. படத்தில் அரைகுறை ஆடையுடன் வித்யா ஒரு வெளிநாட்டு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பதைப்போல கிராஃபிக்ஸில் அமைத்திருந்தார்கள். அந்த வரிகளில்...வித்யாவே அழைப்பதைப்போல சில வாசகங்களை அமைத்து....அவளை ஒரு கால்கேர்ளாக காட்டியிருந்தது. இதில் இன்னொரு கொடுமையும்....அவளுடைய உண்மையான முகவரியும் கீழே கொடுத்திருந்தது.

வித்யாவுக்கு மயக்கமே வரும்போல ஆகிவிட்டது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளை எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அம்மாவின் பார்வை வேறு அவளை சிதைத்துக்கொண்டிருந்தது.

"என்னடிக் கன்றாவி இது....அதான் ஆபீஸ்லருந்து வந்ததும் வராததுமா இத்தனைநாளா இதுல உக்காந்துக்கறயா? அய்யோக் கடவுளே...இன்னும் என்னக் கொடுமையெல்லாம் பாக்க வேண்டியிருக்குதோ...? பொண்ணு பாத்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் சொல்லிட்டுப் போய் நாலுநாள்கூட ஆகலியேடி. இந்தக் கன்றாவியை அவங்களோ...இல்ல அவங்க சொந்தக்காரங்க யாராவதோ பாத்தாங்கன்னா நம்ம மானம் மரியாதையெல்லாம் வீதிக்கு வந்துடுமேடி...பாவிப்பொண்ணே....என்னடி இதெல்லாம்" ஆவேசமாய் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் வித்யாவின் அம்மா.

யார் இதை வெளியிட்டது என்று பார்த்தாள். கீர்த்தி என்று பெயர் இருந்தது. 'அடப்பாவி இவனா...?' என்று அலறினாள் வித்யா.

"'யாருடி அவன்?"

'அம்மா இந்த ராஸ்கல் நான் உறுப்பினரா இருக்கற அமைப்புல உறுப்பினனா இருந்தான். இதை மாதிரி சில வேண்டாத பதிவுகளைப் போட்டதால அவனை அந்த அமைப்புலருந்தே வெளியே அனுப்பிட்டாங்க. அந்த பதிவுக்கு என்னோட கண்டனத்தை சொல்லியிருந்தேன். பாவி அதுக்குப் பழிவாங்க...நான் தெரியாம எப்பவோ இணையத்துல போட்ட இந்தப் படத்தை இப்படி பண்ணிருக்கான்...."

" அடிப்பாவி பொண்னே...இதை பொய்ன்னு எத்தனை பேர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியுண்டி? உன் தலையில நீயே மண்ணைவாரி போட்டுக்கிட்டியே..." அரற்றிக்கொண்டு புலம்பிய அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த வித்யா...சட்டென்று எழுந்து நின்று,

" அம்மா...பொலம்பாத....எத்தனை பேர்கிட்ட சொல்ல முடியுன்னு கேட்டியே...அதுக்கெல்லாம் அவசியமில்ல. ஒரே ஒருத்தர்கிட்ட சொன்னா போதும். இரு இதோ வந்துடறேன். " என்று சொல்லிவிட்டு....அம்மாவின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், ...வெளியேறி தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சற்றுத்தொலைவில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டாள்.

கவுதம்மை அலைபேசியில் அழைத்தாள். தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லிவிட்டு அவனுக்காக அந்த ப்ரௌஸிங் செண்டரில் காத்துக்கொண்டிருந்தாள். கவுதம் வந்ததும், உள்ளே போவதற்குமுன் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள். அனைத்தையும் கேட்ட கவுதம் அவளது களங்கமில்லா முகத்தைப் பார்த்து உறுதியோடு சொன்னான்.

"வித்யா...உன்னை எப்ப பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டு வந்தேனோ அன்னையிலருந்து...இல்ல...அந்த நிமிஷத்துலருந்து நீதான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது எனக்கும்தான். நீ சொல்ற இந்த விஷயங்கள் இப்ப நிறைய நடந்துகிட்டிருக்கு. அந்த கீர்த்தி மாதிரியான இணைய பொறுக்கிகள் நிறைய இருக்காங்க. நீ எதார்த்தமா போட்ட படத்தை அவன் கீழ்த்தரமா உபயோகப் படுத்திக்கிட்டான். இப்ப என்னை நீ இந்த இடத்துக்கு கூப்பிட்டது கூட அந்தப் படத்தை எனக்குக் காட்டனுங்கறதாலத்தான்னு எனக்குத் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்ல. உன்னை நான் முழுசா நம்பறேன். நீ கவலைப் படாம வீட்டுக்குப் போ. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்." தீர்க்கமாய் சொன்னவனை கண்களில் கண்ணீர் மல்க பார்த்தவள் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பினாள்.

வீட்டுக்கு வந்தவள் தன் அம்மாவிடம் நடந்ததையெல்லாம் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாகி..பகவானே நல்ல ஒரு மனுஷனை எங்களுக்கு மாப்பிள்ளையாக்கியிருக்கே...அதுக்கு உனக்கு ஆயிரம் நமஸ்காரம்" என்று நெக்குருகி சொல்லிவிட்டு மகளை உச்சிமோந்தாள்.

அந்த சமயம் தோழியின் அழைப்பு பளிச்சிட்டது. என்ன என்று பார்த்தவள் சந்தோஷமா அதிர்ச்சியா எனத் தெரியாத உணர்வை அடைந்தாள்

"வித்யா...ஒரு ஷாக்கிங் நியூஸ்...அந்தக் கீர்த்தியோட மனைவி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். இவன் தன் நன்பனுக்கு அனுப்பின கல்யாண போட்டோவுல இருந்த அவனுடைய மனைவியின் படத்தை ரொம்ப அசிங்கமா இன்னொரு ஆள்கூட இணைச்சி அதே ஆர்குட்ல யாரோ போட்டிருக்காங்க...அதைப் பாத்த அவனோட மனைவி..அவமானத்துல விஷத்தைக் குடிச்சிட்டாங்களாம்."

அந்த அப்பாவிப் பெண்ணுக்காக பரிதாபப்படுவதா...இல்லை வினைவிதைத்தவன் அதை அறுவடை செய்ததற்கு
சந்தோஷப்படுவதா....குழப்பமாய் அம்மாவைப் பார்த்தாள் வித்யா. அந்த செய்தியைப் படித்த அவரும்...அர்த்தம் நிறைந்த பார்வையால் வித்யாவைப் பார்த்தார்.

விகடன்
29-06-2008, 03:12 PM
பொதுவாக இது இணையத்தில் நடக்கும் விடயந்தான். அதனால்த்தான் “எந்த ஒரு பொது இடங்களிலும் உங்களது படங்களை பிரசுரிக்க வேண்டாம்” என்று சொல்வார்கள். மிக மிக தெரிந்த, அறிந்தவர்கள் இருக்கும் பட்சத்தில் படங்களை பிரசுரிக்கலாம். அதையும் தரம் குறைத்து பிரசுரிக்க வேண்டும்.
இது கதையில்லை சிவா.ஜி. நிஜம்.

உங்கள் கற்பனை, நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை..

சிவா.ஜி
29-06-2008, 03:33 PM
சரிதான் விராடன். இணையத்தில் நடக்கும் இதைபோன்ற அசிங்கங்களால் எத்தனைப்பேர் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்படவர்களைப் பார்த்து மற்றவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்....பாதிப்பை உண்டாக்குபவர்கள் அதே அஸ்திரம் தங்களையும் தாக்குமென்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பின்னூட்டத்திற்கு நன்றி விராடன்.

அன்புரசிகன்
29-06-2008, 07:39 PM
என்னவென்று சொல்ல. அதுதான் உங்கள் தலையங்கத்திலேயே கூறிவிட்டீர்கள்....

தங்கள் திறமைகளை தீயவற்றிற்கு பயன்படுத்துபவர்களை என்னவென்று சொல்ல? உண்மையில் இவர்களின் திறமை அசாத்தியமானது. ஆனால் அதை பயன்படுத்தும் விதம் தான் மனதை துன்புறுத்துகிறது...

அழகான படிப்பினை தந்த சிவா அண்ணலுக்கு வாழ்த்துக்கள்.

mukilan
29-06-2008, 10:59 PM
எனக்கு இது புனைவா நிஜமா என்ற குழப்பம் இருக்கிறது. திருமணப் பேச்சுவார்த்தை மற்றும் முடிவு தவிர அனைத்துமே நடக்கக் கண்டிருக்கிறேன். நல்லதொரு படிப்பினை அண்ணா. அனைவரும் முக்கியமாக பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

arun
30-06-2008, 01:59 AM
இணைய தளத்தில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது

சிவா.ஜி
30-06-2008, 05:57 AM
தங்கள் திறமைகளை தீயவற்றிற்கு பயன்படுத்துபவர்களை என்னவென்று சொல்ல? உண்மையில் இவர்களின் திறமை அசாத்தியமானது. ஆனால் அதை பயன்படுத்தும் விதம் தான் மனதை துன்புறுத்துகிறது...

ஆம் அன்பு. நல்ல திறமையை கள்ளத்தனத்திற்கு பயன்படுத்துவதால் இன்னொருவர் வாழ்க்கை கெடுவது மட்டுமல்லாமல்....திறமை தீய காரியத்துக்கு துணை போவது மன்னிக்கமுடியாத குற்றம்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அன்பு.

சிவா.ஜி
30-06-2008, 06:00 AM
எனக்கு இது புனைவா நிஜமா என்ற குழப்பம் இருக்கிறது. திருமணப் பேச்சுவார்த்தை மற்றும் முடிவு தவிர அனைத்துமே நடக்கக் கண்டிருக்கிறேன். நல்லதொரு படிப்பினை அண்ணா. அனைவரும் முக்கியமாக பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முகிலன்....இது முழுக்க புனைவு என்று சொல்ல முடியாது. நீங்கள் சொன்னதைப்போல அந்த திருமணமும், முடிவும் மட்டும் தான் என் கற்பனை. இன்றைய இளைஞர்கள் எதார்த்த உண்மைகளைப் புரிந்துகொண்டு கவுதம் போல இருக்கவேண்டும் என்ற என் ஆவலை இதில் வெளிப்படுத்தினேன்.

நன்றிகள் பல அன்பு தம்பிக்கு.

சிவா.ஜி
30-06-2008, 06:03 AM
இணைய தளத்தில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது

நிச்சயம் சகோதரிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். வித்யாவுக்கு அமைந்ததைப் போல அனைவருக்கும் ஒரு கவுதம் அமைய மாட்டார்கள். அதனால் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

நன்றி அருண்.

ஆதவா
30-06-2008, 06:29 AM
இது ரொம்ப சீரியஸான பிரச்சனை சிவா அண்ணா. இணையம் நல்லதா கெட்டதா என்று கேட்டால் நிச்சயம் கெட்டது என்றே சொல்வேன். இணையம் என்பது மக்களுக்கு புழங்க ஆரம்பித்ததே கடந்த பத்துவருடங்களாகத்தான். எளிதான நாட்டுத் தொடர்பு, கடிதத்தொடர்பு, படங்கள் பகிர்தல் அதன்மூலம் பிரச்சனை என்று.... முன்பு சில வருடங்க்ளுக்கு முன் எனக்கும் இதே ஒன்று நேர்ந்தது. அன்றைய சூழ்நிலையில் நான் மிக மோசமானவனாக இருந்திருந்தால் அந்த ரஷ்யா நாட்டு நடாஷா என்னால் புண்பட்டிருக்கக் கூடும்.

இணையத்தின் மூலமாக நல்ல தொடர்புகள் என்று பார்த்தால் தமிழ்மன்றம் தவிர வேறு எங்கும் நான் கண்டதில்லை... ஆனால் எல்லாமே எல்லாம் அல்ல என்பது போல, தமிழ்மன்றத்திலும் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது... குறிப்பாக சகோதரிகள்..

இணையத்தில் சுலபமாக மாட்டுவது யார்? கொஞ்சம் கூட யோசிக்கத் திராணியற்ற பெண்களே! இதனால் இந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் தனது முகவரி முதல்கொண்டு எல்லாம் தந்துவிடுவது,, பிறகு குய்யோ முறையோ என்று கத்துவது.... முதலில் அப்படிப்பட்ட பெண்கள்தான் இந்த பிரச்சனைக்கே காரணமாக இருப்பது... இந்த வித்யா போன்றவர்கள்.....

வினை விதைத்தவன் என்பது தற்செயலானது.. பொதுவாக இந்தமாதிரி தவறு செய்பவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட மறுப்பார்கள். தனது தோழி, மனைவி என்று அத்தனை பேர் முகத்திற்கும் வேடம் போட்டு விட்டிருப்பார்கள்.. ஆனால் கதைப்படி, அவன் ஒரு குழுவில் இருப்பதால் தன்னை அறியாமல் தன் மனைவியின் படம் கொடுத்திருக்க வாய்ப்புண்டு..

இப்படி குழு விட்டு விலக்கப்பட்டவர்கள் இப்படிக் கேவலமான குரோதத்தை வெளியிட்டு கொள்வார்கள்... அதை நான் அனுபவித்தும் உள்ளேன்.

இதே கருத்தை வலியுறுத்தி முன்பு ஒரு கவிதையும் எழுதி வைத்தேன்

அழகான அதேசமயம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள கதை..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-06-2008, 06:46 AM
ஓஹோ இதுக்குத்தான் குதிரை படத்த போட்டுவச்சிருக்கீங்காளா! இப்ப புரியுது சிவா உங்க கைங்கர்யம்.

ஆதவா
30-06-2008, 06:50 AM
ஓஹோ இதுக்குத்தான் குதிரை படத்த போட்டுவச்சிருக்கீங்காளா! இப்ப புரியுது சிவா உங்க கைங்கர்யம்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

சிவா.ஜி
30-06-2008, 07:20 AM
தமிழ்மன்றத்திலும் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது... குறிப்பாக சகோதரிகள்..

வினை விதைத்தவன் என்பது தற்செயலானது.. பொதுவாக இந்தமாதிரி தவறு செய்பவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட மறுப்பார்கள். தனது தோழி, மனைவி என்று அத்தனை பேர் முகத்திற்கும் வேடம் போட்டு விட்டிருப்பார்கள்.. ஆனால் கதைப்படி, அவன் ஒரு குழுவில் இருப்பதால் தன்னை அறியாமல் தன் மனைவியின் படம் கொடுத்திருக்க வாய்ப்புண்டு..

..
நல்ல கருத்துக்கள் ஆதவா. இந்த விஷமிகள் சுயத்தை மறைத்துதான் விஷத்தை விதைக்கிறார்கள். ஆனால் எங்கோ ஒரு இடத்தில்....அடிபடத்தான் செய்கிறார்கள்.

நீங்கள் சொன்னதைப்போல சகோதரிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

ஆழமான விமர்சனத்திற்கு நன்றிகள் ஆதவா.

சிவா.ஜி
30-06-2008, 07:21 AM
ஓஹோ இதுக்குத்தான் குதிரை படத்த போட்டுவச்சிருக்கீங்காளா! இப்ப புரியுது சிவா உங்க கைங்கர்யம்.

எனக்கும் புரியவில்லை....!!!:confused:

இளசு
30-06-2008, 07:24 AM
பெண்கள் ஒரு முரண்தொடர்!

அதீத எச்சரிக்கை உள்ளுணர்வும் அதிகம்..
அதீத நம்பிக்கை -அது தரும் நெகிழ்ச்சி,தளர்தலும் அதிகம்..

உலகெங்கும் தகுதியற்றவர்களிடம் தம்மை ஒப்படைத்த பெண்களைக் காண்கிறோம்..

அது - முன்னுவந்து வழங்கும் தாய்மையா, இல்லை ஏய்க்கப்படும் இயலாமையா?

இங்கே இணையம் என்னும் தகுதியறியா இடத்தில் தடுமாறி காயம்பட்ட பெண்..

(ஆண்களும் காயம்படும் இடம்தான் அது..)

அவளைப்போல் இனி யாருக்கும் நேராமல், கவனம் காக்க!
அப்படி நேர்ந்தால், புரிந்தவன் அவனைப்போல் அமைக!

எச்சரிக்கைக் கதைக்கு நன்றி சிவா..

சிவா.ஜி
30-06-2008, 07:34 AM
அது - முன்னுவந்து வழங்கும் தாய்மையா, இல்லை ஏய்க்கப்படும் இயலாமையா?மிக அருமையான கேள்வியில் பொதிந்திருக்கும் உண்மை, அக்கறை.

ஆண்களும் காயப்படும் இந்த உலகில் மென்மையான பெண்களின் எச்சரிக்கை உணர்வின் அவசியத்தேவையை அழகாச் சொன்ன இளசுவின் பின்னூட்டம் அருமை.

நன்றி இளசு. காயம்பட்டவர்களை நானும் அறிவேன். என்னுடைய படத்தையே இந்த மன்றக்குடும்பத்தில்கூட இடக்கூடாது என்று எனக்கு அறிவுரை சொன்னபோதுதான் உருவானது இந்தக் கரு.

மதி
30-06-2008, 08:03 AM
எச்சரிக்கை மணி ஒலிக்கும் கதை. இணையத்தால் நன்மையும் உண்டு.. தீமையும் உண்டு.. நன்மையை விட தீமைகளே..அதிகமுண்டு...

தன்னைப் பற்றி தகவல்களோ புகைப்படமோ கொடுப்பதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற செய்தி... அவசியமானது. அத்யாவசியமானது..

சிவா.ஜி
30-06-2008, 12:36 PM
அவசியமான ஒன்றுக்காக ஒருகுரலில் சேர்ந்ததற்கு நன்றி மதி.

செழியன்
30-06-2008, 05:05 PM
உண்மையை கதையாக்கிய அண்ணணுக்கு நன்றி,
மக்கள் ,குறிப்பாக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய இடம்.

சிவா.ஜி
01-07-2008, 12:28 PM
உண்மையை கதையாக்கிய அண்ணணுக்கு நன்றி,
மக்கள் ,குறிப்பாக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய இடம்.

உண்மைதான் செழியன். சகோதரிகள் மிக மிக எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

MURALINITHISH
23-08-2008, 07:31 AM
மிகவும் தேவையான கதை அதிலும் புத்தங்கள் வடிவில் வருவதை விட இந்த மாதிரி இணைய தளங்களில் பதிக்க வேண்டிய கதை பதித்த நண்பருக்கு நண்றிகள் பலபல ஆனாலும் தவறு செய்தவன் தானிருக்கு அவன் மனைவிக்கு தண்டனை சரியா பெண்களுக்கு அதிலும் இணையத்தில் வலம் வரும் பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய இல்லை இல்லை மனதில் பதிக்க வேண்டிய படைப்பு மீண்டும் ஒரு முறை நண்றி

poornima
23-08-2008, 07:52 AM
இதை ஏன் நீங்கள் ஒரு வெகு ஜன இதழ் பிரசுரத்திற்கு அனுப்பக் கூடாது?

சிவா.ஜி
23-08-2008, 08:15 AM
மிக்க நன்றி முரளி நிதிஷ். தவறு செய்தவனுக்கு நேரிடையாக கிடைக்கும் தண்டனையைவிட இதைப்போன்ற தண்டனைகள் அதிக வலியையும், உணருதலையும் தரும். இனி ஒரு பெண்ணின் வாழ்வு இப்படிப்பட்ட கயவர்களால் சூறையாடப்படக்கூடாது.

சிவா.ஜி
23-08-2008, 08:16 AM
இதை ஏன் நீங்கள் ஒரு வெகு ஜன இதழ் பிரசுரத்திற்கு அனுப்பக் கூடாது?
உங்கள் மேலான கருத்துக்கு நன்றி பூர்ணிமா. அனுப்ப முயற்சிக்கிறேன்.

அமரன்
23-08-2008, 10:13 AM
அதிசிறந்த கதைஞன் சிவாவின் கைங்கரியத்தை சிலாகிக்க இன்னொரு மேடை கிடைத்திருக்கிறது. அந்த சிலாகிப்பில் தூங்கிக்கொண்டும் இணையவாசிகள் சிலிர்த்தெழவும் முடியும்.

இணையத்தில் முகம் காட்டாதீர்கள்.. உங்கள் இணைய நண்பர் ஆணாகினும் சரி பெண்ணாகினும் சரி.. நிழல்படத்தை வாங்கவோ கொடுக்கவே கூடாது. நட்பு அறுவதுக்கு அது காரணமாகலாம். இங்கே கீர்த்திதான் செய்தான் என்பதால் பிரச்சினை இல்லை. யார் செய்தது என்று தெரியாவிட்டால்... நட்பு வட்டாரமே சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்டும்.. மன உளைச்சல் அதிகமாகும்....

கவுதமைப் போன்ற நல்லவர்கள் தோன்றட்டும்...நல்லவர்களாகவே இருக்கட்டும்..

சிவா.ஜி
23-08-2008, 12:19 PM
சரியான கருத்து அமரன். யாரென்று தெரிந்ததால், அதிக பிரச்சனையில்லை.. ஆனால் முகம் தெரியாத பல கயவர்களால் எத்தனைபேர் பாதிக்கப்படுகிறார்கள்? சற்று எச்சரிக்கையாகவே இருப்பது நலம்.

நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அமரன்.