PDA

View Full Version : பிடிபடாத அர்த்தம்!



நாகரா
26-06-2008, 04:21 PM
புற்களிடையே பட்டாம்பூச்சி
சொற்களிடையே மௌனம்
பிடிபடாத அர்த்தம்!

இளசு
26-06-2008, 05:57 PM
சொற்களும் மௌனமும் வேறு வேறு வர்க்கங்கள்..
ஆனாலும் சொற்களுக்கிடையிலான மௌனங்களின் அர்த்தத்தை
முன் - பின் சூழ்ந்த சொற்கள்தாம் தீர்மானிக்கின்றன..

புற்களின் பின்புலத்தால் பட்டாம்புச்சி பளிச்சிடுவதைப்போல..


வாழ்த்துகள் நாகரா அவர்களே!

சிவா.ஜி
26-06-2008, 07:49 PM
உங்கள் கவிதைகளின் பிடிபடாத அர்த்தங்களால்தான் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை நாகரா அவர்களே. அறிவுகுறைந்த எங்களுக்கு புரியும்படி கவிதை எழுதினால் ரசிக்க முடியும் நாகரா அவர்களே.

நாகரா
29-06-2008, 04:42 PM
உம் தெளிவான பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி பல இளசு.

நாகரா
29-06-2008, 04:57 PM
உங்கள் கவிதைகளின் பிடிபடாத அர்த்தங்களால்தான் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை நாகரா அவர்களே. அறிவுகுறைந்த எங்களுக்கு புரியும்படி கவிதை எழுதினால் ரசிக்க முடியும் நாகரா அவர்களே.

பிடிபடாத அர்த்தமாய்
உம்மில் ஓடும் வாசியில்
கவனம் பிடிக்க
அன்பெனும் சிவா
ஆர்க்கும் சமமாய்
அளந்த அறிவின்
உண்மை உமக்குப்
புரியும் சிவா!
என் கவிதைகள்
மூளையின் மறை கழன்ற
பித்தனின்
அர்த்தமற்ற பிதற்றல்களே!
அவற்றை ரசிப்பதிலும்
உயிர் மூச்சாம்
உம் வாசிக் கவிதையை ரசிப்பீர்.
வாசிக்குப் பின்னூட்டமாய்
உம் கவனம் இடுவீர்.
உமக்குள் உறையும்
அன்பெனும் சிவா
அங்கையில் கனியெனப்
பிடிபடும் புரியும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
உம் அறிவின் ஊற்றாம் வாசியைப் போற்றி வாழ்வீர்!

நாசியில் ஓடும்
வாசியில் கவனம் நிற்க
சிவாவின் அருள்
உம்மை
அமரருள் உய்க்கும்

ரு(Ruh, Holy Spirit, Adishakthi)எனும் அல்லாவின் அருண்மூச்சு
இதயமென்னும் இரத்த இயந்திரத்தை
இருதயமென்னும் தயவின் இருப்பாம்
அன்பெனும் பொன்னாய்ப் புடம் போடும்

வாசியின் பெருமை பற்றி
என்னை எழுதத் தூண்டிய
உம் பின்னூட்டத்துக்கு
நன்றி பல சிவா.ஜி.

kavitha
30-06-2008, 08:40 AM
புற்களிடையே பட்டாம்பூச்சி
சொற்களிடையே மௌனம்
பிடிபடாத அர்த்தம்!

சொல்லால் புனையப்பட்ட வார்த்தைக்கும் வார்த்தைக்கும் உள்ள இடைவெளியே (மௌனமே) அர்த்தம்.
பட்டாம்பூச்சி பிடிபடுதலும்=மௌனத்தின் அர்த்தம் விளங்கலும்
அழகிய ஒப்புமை!

---------------------


என் கவிதைகள்
மூளையின் மறை கழன்ற
பித்தனின்
அர்த்தமற்ற பிதற்றல்களே! இப்படி சொல்லி பின்னூட்டமிடுகிறவர்களையும் பித்தர்கள் ஆக்கிவிடுகிறீர்களே.
சிவா அண்ணா கேட்டதற்கு உரைநடையில் விளக்கம் அளித்திருக்கலாமே. அவர் மீண்டும் காத தூரத்திற்கு ஓடிவிடுவார் போல... உங்களின் பதில் கவிதை அப்படி இருக்கிறது.

ரு - இன்னும் கொஞ்சம் உரைநடை விளக்கம் தேவை. மரையை இறுக்கி, மறை கூற வருவீரோ?

ஆதவா
30-06-2008, 09:37 AM
புற்களிடையே பட்டாம்பூச்சி
சொற்களிடையே மௌனம்
பிடிபடாத அர்த்தம்!

அழகு............ இளசு அண்ணாவின் பதிவு கவிதையின் ஆழத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது...

நாகரா
30-06-2008, 10:20 AM
இப்படி சொல்லி பின்னூட்டமிடுகிறவர்களையும் பித்தர்கள் ஆக்கிவிடுகிறீர்களே.
சிவா அண்ணா கேட்டதற்கு உரைநடையில் விளக்கம் அளித்திருக்கலாமே. அவர் மீண்டும் காத தூரத்திற்கு ஓடிவிடுவார் போல... உங்களின் பதில் கவிதை அப்படி இருக்கிறது.

ரு - இன்னும் கொஞ்சம் உரைநடை விளக்கம் தேவை. மரையை இறுக்கி, மறை கூற வருவீரோ?

கவிஞன் ஒவ்வொருவனு(ளு)ம் ஒரு வகையில் மூளையின் மறை கழன்றவனே(ளே), அவன்(ள்) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். பித்தன் என்பது சிவனின் பெயர்களில் ஒன்று, "பித்தா பிறை சூடி" என்ற நாயன்மார் சுந்தரரின் பாடல் உமக்கு நினைவிருக்கும்!

"மூச்சில் கவனம்" அதுவே பதில் கவிதையின் உட்கரு. கவிதை எளிமையாகவே இருக்கிறது, உமது கவனம் மூச்சைத் தவிர வேறெங்கெங்கோயோ ஓடுவதால், அதன் எளிமை உமக்குப் பிடிபடாமலிருக்கலாம். இறையாற்றலை, அருட்சத்தியைப் பரிசுத்த ஆவியை, அரபிய மொழியில் "ரு" என்பர். அல்லா அருட்தந்தையென்றால், ரு அருட்தாய். அந்த அருட்தாயாம் 'ரு'வே மூச்சாகி நம் மெய்யை உயிர்ப்பிக்கிறாள். இந்த 'ரு'வாம் வாசி நம்முள் ஓடவில்லையென்றால், நாமெல்லாம் சவங்களாகி விடுவோம் என்பதை ஞாபகங்கொண்டு, மூச்சின் மீது கவனம் வைப்போம், அல்லாவை ஒவ்வொரு மூச்சிலும் உணர்வோம்.

உம் பின்னூட்டத்துக்கு நன்றி கவிதா.

நாகரா
30-06-2008, 10:21 AM
அழகு............ இளசு அண்ணாவின் பதிவு கவிதையின் ஆழத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது...

ஆம் ஆதவா,,, நன்றி.

நாகரா
30-06-2008, 01:06 PM
திடமாய் நிற்கும் மெய்
திரவமாய் ஓடும் உயிர்ப்பில் கரைய
பிடிபடும் பெருவாழ்வின் அர்த்தம்

உயிர்ப்பில் கரைய மறுக்கும் மெய்
மரணம் கவ்வப் பொய்யாகும்
பிடிபடாமல் போகும் பெருவாழ்வின் அர்த்தம்

கவனம் சிதறி
உயிர்ப்பை மறந்த அவலம் போக
உயிர்ப்பில் வை கவனம்

திரும்ப மறுக்கும் மனத்தால்
தோன்றும் பிறப்பும் இறப்பும்
திரும்பி மனம் உயிர்ப்பைக் கவ்வப்
பிடிபடும் மெய்யின் அர்த்தம்

வாழ வைக்கும் மூல ஒன்றில்
கவனம் ஒரு சிறிதும் இன்றித்
தேய்வதா உன் விருப்பம்

கவனமாய் 'ரு'வை உள்வாங்கின்
இதயம் இருதயமாய் மாறும்

'ரு'வின் பெருந்தயவே
மெய்யைக் கரைத்துப்
பொய்யை வெல்லும் உபாயம்

கவனமாய் உள்வாங்கிய 'ரு'வைத்
தயவாய் வெளிவிட்டு
உலக உயிர்த்திரள் அனைத்தையும்
நிபந்தனையின்றி நேசித்தால்
'ரு'வின் பெருந்தயவு வாய்க்கும்

அல்லாவின் அருளால்
இல்லாமல் போகும் மரணம்
அதற்கு
அல்லாவின் அருளாம் 'ரு'வெனும்
உயிர்ப்பாம் மூச்சின் மேல் வை கவனம்
பிடிபடாத அர்த்தம் பிடிபடப்
பிடிபடும் மெய் பிடிபடாமல் கரைய
வாய்க்கும் பெருவாழ்வின் பேரின்பம்

பி.கு: கவிதா அவர்களின் 'ரு'வைப்பற்றி மேலும் அறிய விரும்பிய பசியே, எனக்கும் இக்கவி உணவைப் பரிமாறுகிறது, உமக்கும் பரிமாற வைக்கிறது, நன்றி பல கவிதா உமக்கே!

நாகரா
01-07-2008, 12:28 PM
வந்து போகும் அர்த்தகனம்
சற்றும் அறியாது
வெந்து புதையும் அனர்த்தம்.
இதுவே வாழ்வெனும் மனப்பிரமையில்
மெய்யும் பிடிபடும்
பொய்ம்மரணப் பிடியுள்.

வாசிக்க அவகாசமில்லை வாசியை.

நாசித் துளைகள் உள்ளே கசியும்
அமுத உயிர்ப்பைப்
பூசிக்க மனமுமில்லை.

சிவா வசிக்கும் மெய்யை
நேசிக்க இருதயமில்லை.

"நாம் அச்சிவாயம்"
ஒப்ப விருப்பமின்றி
உதடுகள் முணுமுணுக்கும்
நமச்சிவாய மந்திரம்.

புழுவாய் நெளிந்தது
வண்ணக் கோலமாய்ப்
பிடிபடாது பறந்தது

இருண்ட மனித மிருகம்
அமர தேவமாய்
விடிவது எப்போது?!