PDA

View Full Version : அனாதையாய்போன அக்கறைஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2008, 07:25 AM
கை வீசிக்கொண்டு வா
அப்புறமிருக்கு வேட்டு
நக்கலோடு நக்கலாய்
வாழைப்பழத்தில் ஊசியேற்றினாள் அக்கா

இருபத்திநாலுமணிநேரமும்
மாமா புராணம்தான்
தன்னோடு தன் குழந்தைக்கும் சேர்த்து
அடியிட்டாள் தங்கை

பார்த்ததையெல்லாம்
பளிச்சென்று படம் பிடிக்கும்
நவீன ரக கைபேசி வேண்டுமாம்
வெறும் பயல்களுடன்
வெட்டியாய் வெறுங்கையுடன்
ஊர் சுற்றி அலுத்துப்போன
என் தம்பிக்கு

மச்சானுக்கான விசாவை
மறக்காமல் எடுத்துவரச்சொன்னாள் அம்மா
ரூபாய்க்கு நாலென்று
தெருவில் எவனோ
கூவி விற்பதைப்போல்

அப்பாவிற்கேதாச்சும்.....
என் வார்த்தை முடிவதற்க்குள்
அவர் கூறி முடித்துவிட்டார்
அவன பத்திரமா வரச்சொல்லு.எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

சிவா.ஜி
26-06-2008, 08:00 AM
காய்க்கின்ற மரத்துக்குத்தான் எத்தனை கல்லடிகள்..? எதிர்பார்ப்புகளும், தேவைகளும் கழுத்தை நெருக்க...காசு மட்டுமே பாசங்களுக்குத் தேவையா என்ற எண்ணத்தில் வெறுத்துப்போனவனுக்கு....பிரகாசமான ஒளியாய், நிஜமான பாசமாய் வந்த அப்பாவின் அக்கறை நெகிழச் செய்கிறது. இப்படிப்பட்டவர் இருக்கும்போது அக்கறைகள் அனாதையாவதில்லை.

தந்தை என்பவர் கண்டிப்பு மட்டும் காட்டும் காவலதிகாரி அல்ல....பாசம் காட்டும் உறவு என்று காட்டியிருக்கும் கவிதை மிக அருமை.

வித்தியாசமான கருக்களை அழகாய் கையாளும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஜுனைத்.

இதயம்
26-06-2008, 08:02 AM
பாசத்தை பணம் விலைக்கு வாங்கிய கதையை மிக நாசூக்காக கூறியிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான, பொருள் பொதிந்த தலைப்பு உங்கள் கவியை இன்னும் உயர்த்துகிறது. பொருள் புரியாமல், சந்த அழகுக்காகவும் எழுதும் கவிதைகளை விட கருத்தை அழுத்தமாகச்சொல்லும் கதை வடிவில் இருந்தாலும் கூட அந்த கவிதை உயர்ந்தது என்பது என் கருத்து.

பொருள் திரட்ட கடல்கடக்கும் ஒவ்வொருவரின் உள்ள வேதனையை அழகாக சொல்கிறது உங்கள் கவிதை..!! உங்கள் கவி வரிகள் கடைசியில் வந்த பிறகு நம் மேல் அன்பிற்குரிய அக்கறைக்குரிய உயிராக அங்கீகாரத்தை தந்தையிடம் கொடுத்தது எனக்கு கொஞ்சம் அதிருப்தி.!! அதை தாய்க்கு கொடுத்திருந்தால், தாயின் தன்னிகரற்ற குணத்தோடு பொருந்துகிறது என்று உங்கள் கவிதையை இன்னும் புகழ்ந்திருப்பேன். ஒருவேளை இது உங்கள் அனுபவமோ... என்னவோ.!! அது என்னவாக இருந்தாலும் உண்மையை சொன்ன உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள்..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2008, 08:18 AM
மிக்க நன்றி இதயம் பாராட்டுக்களுக்கு. எல்லாக்கவிதைகளிலும் கதைகளிலும் அன்னையின் புகழே மிஞ்சி நிற்கிறது. சினிமா பாடல்களில் கூட அன்னையின் புகழ் பாடல்கள்தான் அதிகம். தந்தைக்கென்று எவரும் களத்தில் குதிக்க தயாராக இல்லை. ஆதலால் நான் என்னால் முடிந்தஅளவில் கொஞ்சம் பரிந்துரைத்திருக்கின்றேன். என்றாலும் தம்பி அக்கா தங்கையைப்போல் தன் சுயநலத்துக்காய் அலையும் ஜுவனாய் அன்னையை காட்டவில்லை. கவிதையிலும் கூட பிறர்க்காக தேடும் ஒரு ஜுவனாய் அன்னையை காட்டியிருக்கிறேன். நானும் அயல்நாட்டு வாழ்க்கைதான் வாழ்கிறேன். என்றாலும் இது எனது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. எனக்கு வாய்த்தவர்கள் நல்லவர்கள். (இப்டி எழுதலன்னா என்னைய வீட்டுல கொன்னு பூடுவாங்கப்பா)

இளசு
26-06-2008, 07:20 PM
சூழல் மாறும்போது மாறும் நிர்ப்-பந்தங்கள்..
ஆனாலும் மாறாமல் சில நிஜ பந்தங்கள்..
எல்லாம் கலந்த வண்ணமாலை வாழ்க்கை!
சொன்ன விதம் அருமை ..பாராட்டுகள்!

சிவா சொன்னதுபோல் நயமான கருக்களைக் கொண்டு நீங்கள் வடிக்கும் கவிதைகள்... தைக்கின்றன.. நிற்கின்றன!