PDA

View Full Version : ரோ(ல்)(தனை) மாடல்..!அக்னி
24-06-2008, 05:15 PM
உன் வளர்ச்சி
அபாரம்...
எங்களுக்குத்தான்
பாரம்...

உன் வளர்ச்சியைப்
பார்க்கப் பார்க்க
வயிறு எரிகிறது...

எரிச்சலில்
உன்னை எரித்தாலும்,
எரிந்துகொண்டே
ஏறிப்போகின்றாய்...

எரிப்பதும் நீதான்...
எரிவதும் நீதான்...
எரிய வைப்பதும் நீதான்...

வளர்ச்சிக்கு
ரோல் மாடல்..,
என்றால்,
அது நீயேதான்...
வளர்ச்சியால்
ரோதனை மாடல்..,
என்றாலும்,
அதுவும் நீயேதான்...

நீ...
பெட்ரோல்..!

பூமகள்
24-06-2008, 05:58 PM
நீ
எரிச்சலும்
எரிதலும்
செய்து
விலையேறியதால்..

குளுமையிலும்
கண்டுவிட்டோம்..
எரிசக்தி...

ஆமாம்..
நீராதாரத்தில்
மகிழுந்து..
எண்பது கி.மீ
வேகமாம்..

இனி
பெட்ரோல்
உன் ரோல்
சுழியம்..!!

அழகான கவிதை..!!
அடிக்கடி எழுதுங்க 'தல'... அப்பத்தான் இங்க மூளை வேலை செய்யுது...!! :D:D

பாராட்டுகள் அக்னி அண்ணா. :)

அக்னி
24-06-2008, 06:13 PM
நீர் மகிழுந்து...
மகிழ்ச்சி உந்துகிறது... (நன்றி: பாரதி அண்ணா)

வெளிவரட்டும் பார்ப்போம்...

விலையின் பின்னே
சுழியம் அதிகரிக்காதவரை,
நன்று நீரில் மகிழுந்து...

அதிகரித்தால்,
கானல்நீரில் மகிழுந்து...

நீர் வாங்கலாம்...
மகிழுந்து வாங்கலாமோ...
நாம் வாங்கலாமோ...

அழகிய அர்த்தம் பொதிந்த பின்னூடத்திற்கு நன்றி பூமகள்...

பூமகள்
24-06-2008, 06:17 PM
கலக்கிட்டீங்க போங்க..!!

விலையில்
பின் வரும் சுழியங்கள்
தீர்மானிக்கும் நம்
கைகடியளவு..!!

அப்போது வீட்டுக்கு வீடு..
குழாயில் பெட்ரோல் வருமோ
நீருக்கு பதில்...??!!

நன்றிகள் அக்னி அண்ணா..
அறிவுப் பின்னூட்டத்தை நன்கு ரசித்தேன்..!

அக்னி
24-06-2008, 10:07 PM
நீரா காரா பார்ப்போம் அப்புறம்...

எரிபொருள் விலையேற்றம்...

நீராக ரம் குடிப்போரே அடைகின்றனராம் சேதாரம்...

நீராகாரம் மட்டுமே கொள்வோர் வாழ்வாதாரமோ,
பெரும் போராட்டம்... கடும் திண்டாட்டம்...

ஆதாயம் தேடுவது யாரோ...
ஆயம் போடுவது யாரோ...
ஆம் போட்டே ஆகவேண்டும் நாம்...
வேறு வழி...?

கச்சா எண்ணெய் விலையேற்றம்...
கச்சை வரைக்கும் பெரும்தாக்கம்...

இளசு
24-06-2008, 10:12 PM
அக்னி பெட்ரோல் ஊற்ற
பூ மலர்ந்த விந்தை!

இரசித்தேன் கவிச்சமர் விள்ளலை..!

நம்பிகோபாலன்
25-06-2008, 03:57 AM
அருமையான கவிதை...

இன்றைய சூழலில்
பற்றாமலே பற்றி எகிறுது பெட்ரோலின் விலை..

கண்மணி
25-06-2008, 04:17 AM
பெட் - ரோலை -செல்லப் பாத்திரத்தை
பேட் - ரோலாக்கிய =வில்லப் பாத்திரமாக்கிய
அக்னியே:icon_b:
பற்ற வைப்பதும் நீர்தான்:icon_b:
எரிவதும் நீர்தான்:icon_b:

நீர்த்துப் போன நீர்தானே
பெட்ரோலும்
பேட்ரோலும்!

(பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு புதைப்பட்ட உயிரிகள்தான் எண்ணையாயின..)

சிவா.ஜி
25-06-2008, 04:19 AM
ரோல்மாடல்...இப்படி எகிடு தகிடாக உயர்ந்தால் ரோதனை மாடலாகிவிடுகிறது. அக்னியின் வித்தியாசப்பார்வை அழகாக இருக்கிறது. வாழ்த்துகள் பிரிச்சி மேயும் புலியாரே.

mukilan
25-06-2008, 05:16 AM
அருமையாகச் சொற்களைக் கையாடத்தெரிந்த அக்னி!
புலம்பெயர் வாழ்வின் சோகம் தாங்கிய எஃகு நீ!
தலையாய பிரச்சினை ஒன்றினை குறித்த தெளிவான கவிதை! எளிதாக இருந்தாலும் சொற்களை மாலையாகக் கட்டும் வித்தை தெரிந்திருக்கிறீர்கள்.

ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும், விளிப்பு எத்தகையதானதாக இருந்தாலும் அன்பை மட்டுமே குறிக்குமென்பதால்.

அனுராகவன்
25-06-2008, 05:17 AM
நன்றிகள் அக்னி,:nature-smiley-002:மகள்!!

ஆதவா
25-06-2008, 06:13 AM
உன் வளர்ச்சி
அபாரம்...
எங்களுக்குத்தான்
பாரம்...

எனக்கு இந்தக் கவிதையில் உடன்பாடில்லை நண்பா! (மன்னிக்கவும். இது என் கருத்து மட்டுமே!)

பெட்ரோல் வளர்ச்சியடைகிறதா? இல்லை குறைகிறதா? பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தி பல உயிர்களும் மரங்களும் புதையுண்டு உருவானதுதானே பெட்ரோல்.. அதன் அளவு எடுக்க எடுக்க குறையுமா கூடுமா? (இதைப்பற்றி யாரேனும் சொல்லுங்கள்..)எரிச்சலில்
உன்னை எரித்தால்....

பெட்ரோலை எரிச்சலோடு பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் ஏன் பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தாதீர்கள்.. சேவ் ஆயில் சேவ் இண்டியா.


எரிப்பதும் நீதான்...
எரிவதும் நீதான்...
எரிய வைப்பதும் நீதான்...

எரிப்பது மனிதன், எரிவது பெட்ரோல், எரிய வைப்பதும் (?) மனிதன்

பெட்ரோலைத் தோண்டியெடுத்து நாட்டுக்கு நாடு பகிர்ந்து இயற்கையைக் கொள்ளையடித்த நாடுகளையோ மனிதர்களையோ குறை சொல்லாமல் எப்போதோ புதைந்த இயற்கையைப் பழிப்பது நியாயமா அக்னி?

பெட்ரோலியம் பொருட்கள் இல்லாமல் போனால் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

(கண்ணுவின் பின்னூட்டம் சொல்வது ஆயிரம். :) )

அக்னி
25-06-2008, 11:41 AM
இரசித்தேன் கவிச்சமர் விள்ளலை..!
நன்றி அண்ணா...

பற்றாமலே பற்றி எகிறுது பெட்ரோலின் விலை..
உண்மைதான்...
இன்றைய நிலையில் அனைத்தினது விலை உயர்வுக்கும், அடிப்படைக் காரணம் எரிபொருள் விலை உயர்வுதானே...

பெட் - ரோலை -செல்லப் பாத்திரத்தை
பேட் - ரோலாக்கிய =வில்லப் பாத்திரமாக்கிய

:icon_b:
மிகவும் ரசித்தேன் கண்மணி...
பேட் ரோலாக நான் எங்கே மாற்றினேன்...
அதுவாக மாறிடுத்து...

வாழ்த்துகள் பிரிச்சி மேயும் புலியாரே.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிவா.ஜி...

அக்னி
25-06-2008, 12:04 PM
ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும், விளிப்பு எத்தகையதானதாக இருந்தாலும் அன்பை மட்டுமே குறிக்குமென்பதால்.
முகில்ஸ் அண்ணலே...
ஒருமை எனக்கு இனிமையையே தருகின்றது. இப்பதிவோடு நிற்கட்டும் மன்னிப்பு. இனியும் தொடரவேண்டாமே...
பாராட்டுக்களுக்கும், அன்புக்கும் நன்றி...
மனதை மகிழ்விக்கும் அழகிய பின்னூட்டம்...

நன்றிகள் அக்னி,:nature-smiley-002:மகள்!!
நன்றி அனு...

எனக்கு இந்தக் கவிதையில் உடன்பாடில்லை நண்பா! (மன்னிக்கவும். இது என் கருத்து மட்டுமே!)

மன்னிப்புக் கேட்க என்ன இருக்கின்றது ஆதவரே...
செதுக்கல்களை நான் எப்போது தட்டிக் கழித்திருக்கின்றேன்.?
செதுக்கல்களால் நான் களிப்படைகின்றேன்...

நான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லத் தவறிவிட்டேனா..?

உண்மையில், நான் கொண்ட கரு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் மீதானதே அன்றி பெட்ரோலியம் மீதானதல்ல...

பெட்ரோல் விலை ரூ.71 (http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=16262) இந்தத் திரிக்கு போட நினைத்த பின்னூட்டம், கொஞ்சம் பெரியதாகிட, கவிதையாகப் பதிந்து விடுவோம் என்று பதிந்துவிட்டேன்.

நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டுமோ, நான் சாடுவது விலையேற்றத்தை என்று...

எரிச்சலில் எரிப்பது, என்று நான் நினைத்தது,
எரித்தே ஆகவேண்டும், ஆனால் விலையேற்றத்தினால் எரியும் மனத்தோடு என்று...

எரிப்பதும் நீதான் - எரிப்பது எரிபொருள் என்று(ம்) சொல்லலாமல்லவா...
எரிவதும் நீதான் - எரிந்து போவது
எரிய வைப்பதும் நீதான் - வயிறெரிய வைப்பது

இவையே நான் நினைத்த அர்த்தம்...

விலையேற்றம் என்ற பதத்தைக் குறிப்பிட்டால், பொருந்தாது போய்விடுமோ என்று எண்ணினேன்...

ஆதவர் என்னைத் தெளிவுறுத்த வேண்டுகின்றேன்...

நன்றி ஆதவா... :)

ஆதவா
25-06-2008, 02:26 PM
அக்னி, இதுவரையிலும் முழு கவிதையில் உடன்பாடில்லை என்று உங்களைப் பார்த்து சொல்லக் காரணமே நீங்கள் எனது உற்ற நண்பர் என்பதால் மட்டுமே! மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் என்னுடன் உண்டு. அதோடு, அப்படி ஒரு கவிதையை பிழை சொல்லும் அளவுக்குத் தகுந்தவனா என்ற தாழ்வு மனப்பான்மையும் உண்டு.. என்றாலும் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல்தான் எழுதினேன்... எங்கே இந்த பதிவினால் பதிவர் சோர்ந்து போய் எழுதாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் தான் அதிகம் மேவியிருக்கிறது அக்னி.

நீங்கள் பெட்ரோல் விலையேற்றத்தைக் குறிப்பிட்டு எழுதியமை என்றும் நான் அறிவேன். ஆனால் கவிதை அப்படி போகாத காரணத்தினால் அது தவறு என்று சொன்னேன். ஆனால் நீங்கள் விலையேற்றத்தையும் பெட்ரோலையும் கலந்து கவிதையில் சாடிவிட்டீர்கள். அதுதான் சிறு குழப்பம்,/

பெட்ரோல் விலையின் வளர்ச்சி என்று கவிதையின் வரிகளைப் பார்த்தால் அது மிகச் சரியே!

ஆனால்


எரிச்சலில்
உன்னை எரித்தாலும்,
எரிந்துகொண்டே
ஏறிப்போகின்றாய்...

எரிச்சலில் உன்னை எரிப்பது என்ற வரியில் " உன்னை" என்பது பெட்ரோலையே குறிக்கிறது. அன்றி பெட்ரோல் விலையேற்றத்தை அல்ல... "உன்னை" என்ற பதம் விலையேற்றத்தைக் குறிப்பதானால் எரிப்பது எப்படி? (to burn)


எரிப்பதும் நீதான் - எரிப்பது எரிபொருள் என்று(ம்) சொல்லலாமல்லவா...

அப்படி என்றால் நீ என்பதற்கு டெஃபனிசன் பெட்ரோல் அப்படித்தானே!! அப்படியென்றால்

எரிய வைப்பதும் நீதான் - வயிறெரிய வைப்பது - வயிறு எரிய வைப்பது பெட்ரோல் என்பது அர்த்தமாகிறது.... நீங்கள் உங்கே விலையேற்றத்தைக் குறிப்பிட ஒருவரியும் தென்படவில்லை.

கண்மணியின் பின்னூட்டத்தில் சொன்னது போல, பெட்ரோலை bad role ஆக சித்தரித்து விட்டீர்கள்...

உங்கள் உள்ளார்ந்த கருத்து சரியே! அதன் வெளிப்பாடாக வந்த கவிதை சற்றே இடறலைச் சந்தித்துவிட்டது உண்மையே!!

புரிதலுக்கு நன்றி
ஆதவன்

அக்னி
25-06-2008, 02:54 PM
உங்கள் உள்ளார்ந்த கருத்து சரியே! அதன் வெளிப்பாடாக வந்த கவிதை சற்றே இடறலைச் சந்தித்துவிட்டது உண்மையே!!

புரிந்து கொண்டேன் ஆதவா...

தெளிவான விளக்கம். அதனால் நான் விட்ட தவறுகள் நன்றாகத் தெரிகின்றன.

நான் எப்போதுமே என் மீதான எந்தவொரு விமர்சிப்பையும், தவறாகக் கொள்வதில்லை.
அவை என்னைச் சீராக்கத்தான் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
அந்தவகையில் உங்கள் செதுக்கல்கள் தொடரட்டும். அழகுற நான் தயாராகத்தான் உள்ளேன்.

நவரசக்கவிக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது. நான் வியக்கும் மன்றக் கவிகளில் நீங்களும் ஒருவர்.
மன்றத்தில், சமகாலத்தில், அதுவும் நல்ல நட்போடு பயணிப்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.

kavitha
27-06-2008, 08:08 AM
அழகிய கவிதையும், அருமையான உரையாடல்களும், பின்னூட்ட கவித்துளிகளும்..... கவிதைப்பயணிக்க இந்த எரிபொருள்களும் தேவை தானே! தொடர்ந்து எழுதுங்கள் அக்னி. வாழ்த்துகள்.

ஓவியன்
28-06-2008, 02:02 AM
அழகான கவிதை
அழகான பின்னூட்டங்கள்
உண்மையான விமர்சனங்கள்
கற்றுக் கொண்டேன்
நிறைய விடயங்கள்
அனைவருக்கும் நன்றிகள்...!! :)