PDA

View Full Version : கற்கண்டழகி..!பூமகள்
24-06-2008, 11:26 AM
கற்கண்டழகி..!


குறிப்பு: கவிச்சமரில் விடுபட்ட சொல்லில் எழுத முற்படுகையில் உதித்த சில வினாடித் துளிகள் வயதுடைய கவிதை இது..!


கலக்கம் தான்
என் பெண்ணுக்கான
அமெரிக்க படிப்பும்
அதன் நாகரீகமும் கண்டு

கண்டு சொல்லாத
கற்கண்டு சிரிப்பை..
உன் மடல்..
காற்றிலாடி பகர்ந்தது..

சிந்திய உன் இதயம்
மையழிய தாளறிய..
மிஞ்சிய வெள்ளைத்தாள்..
உன் வெண் சிரிப்பாய்
காட்டியது..

கடும் குளிரில்
சுடும் போரின்
குமையும் மனத்தோடு
திடம் கொண்டு
படித்தேன்..

முதல் வார்த்தையில்
முத்தச் சத்தச்சோடு..
ஐந்தகவை தாண்டிய
இனிய மகளின்
"அப்பா...!"-வெனும்
எழுத்தழைப்பு...!

நன்றி:சகோதரி தென்றல்

சிவா.ஜி
24-06-2008, 02:22 PM
இராணுவ வீரர்களின் ஒரே ஆறுதல் கடிதங்கள்தான். அதுவும் அந்த கடுங்குளிரில், எதிரிகளின் ஆபத்தான தாக்குதலுக்கு நடுவே தன் பிஞ்சுக்குழந்தையின் கொஞ்சும் எழுத்தைக் காணும் தந்தையின் ஆனந்தம் அளவிட முடியாதது.

அழகாக அதை இந்தக் கவிதையில் வடித்திருக்கும் தங்கைப் பூவுக்கு அன்பு பாராட்டுகள். அதுவும் சில நொடிகளில் எழுதிய திறமைக்கு விசேஷப் பாராட்டுகள்.

பூமகள்
24-06-2008, 02:32 PM
உண்மை தான் அண்ணா..!!
ரொம்ப வருடங்கள் முன்பு.. இதே போல ஒரு கடிதக் கவிதை படித்திருக்கிறேன்..!! ஆனந்த விகடனில் என்று நினைக்கிறேன்.. கார்கில் போர் சமயத்தில். யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை..

"போய் வருகிறேன் மகளே..!!" அப்படின்னு தலைப்பு..
அதில் சில வரிகள் இன்னும் மனப் புத்தகத்தில் பத்திரமாக..!!

".....
......
நள்ளிரவு விழித்திருப்பேன்..
நட்சத்திரம் பார்த்திருப்பேன்..
கனவு போல் என் மனதில்
கண் சிமிட்டி நீ சிரிப்பாய்..

நீ சிரிக்கும் நொடியிலெந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்..
.........
........"

இப்படியாக இடையில் வரும்.. எனக்கு முழு கவிதை மறந்துவிட்டது.. ஆயினும்.. ஒரு குழந்தைக்காக தந்தை எழுதுவதாக அமைந்த இக்கவிதை அழுகையே வந்துவிட்டது இக்கவிதை படித்த உடன்.. எங்கள் நோட்டுப் புத்தகத்தில் பத்திரப் படுத்தி வைத்தோம்..

ஆனால்.. எனது இந்தக் கவிதையில் அத்தனை உணர்ச்சிகளைக் கொட்டவில்லை.. மேலோட்டமாக எழுதிவிட்டதாக உறுத்தல் இருக்கிறது.. அதனால் தான் இத்தனை பார்வையாளர்கள் வந்தும் ஒருவரும் பதிலெழுதவில்லையென நினைக்கிறேன்..

எப்போதும் தங்கைக்கு பக்கபலமாய்.. ஊக்கம் கொடுக்க தங்க தமையன் சிவா அண்ணா இருப்பது கண்டு அகம் மகிழ்கிறேன்..!!

ரொம்ப நன்றிகள் சிவா அண்ணா. :)

kavitha
27-06-2008, 09:14 AM
அதனால் தான் இத்தனை பார்வையாளர்கள் வந்தும் ஒருவரும் பதிலெழுதவில்லையென நினைக்கிறேன்..
தென்றல் - அவர்களின் முதற்கவிதையையும் உனது கவிதையையும் உடனே படிக்கையில் சிறு குழப்பம் இருந்தது. சிவா அண்ணாவின் பதிவு கவிதையைப்புரிய வைக்கிறது.


குமையும் மனத்தோடு
திடம் கொண்டு
படித்தேன்..
இதன் காரணம் சட் டென புரியவில்லை பூமா.

நல்ல கவிதை. பாராட்டுகள்.

சூறாவளி
07-07-2008, 08:15 PM
பூமகளின்..
இதய தோட்டத்தில்
சில வினாடி துளிகளில்
தளிர் விட்ட இக்கவிக் கன்றை
என் மனதில்
மரமாய் நட்டு வைத்து விட்டேன்...

பாராட்டுக்களோடு வாழ்த்தும் வருது பாருங்க புடிச்சிக்கோங்க...:angel-smiley-026:

இளசு
07-07-2008, 08:23 PM
எழுத்தழைப்பை நேரழைப்பாய்
மெய்நிகர் பாவனை
தன்னிழப்பை நாட்டுக்காய்
தந்திட்ட தந்தை

இந்த தந்தை -மகள் -தாய் தியாகங்களில்
தாய்மண்ணின் கண்ணியம் காக்கப்படுகிறது!


பாராட்டுகள் பாமகளே!

ஷீ-நிசி
08-07-2008, 02:33 AM
கவிதையில் வார்த்தைகள் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டும் கொண்டு, கவிதை ஒரு இராணுவ வீரரின் எண்ணவோட்டத்தை ஏந்தி நிற்கிறது. அப்பா என்னும் அந்த மூன்றெழுத்து கடிதத்தை வேண்டுமானால் நிரப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் படிக்கின்ற அந்த அப்பாவின் மனதை எத்தனை நிரப்பியிருக்கும்.

வாழ்த்துக்கள் பூமகள்!

அக்னி
08-07-2008, 02:56 AM
செல்லிடப்பேசிகள்,
குரல் தந்தாலும், உருவைத் தந்தாலும்,
நேரடிப் பார்வைப் பேச்சைத் தந்தாலும்..,
சப்தம் செய்யமுடியாத யுத்தப் பயணத்திலும்,
சன்னம் பறக்கின்ற யுத்தக் கணங்களிலும்..,
பாசம் சுமக்கும் மடல்,
என்னை நிறைவாக்கும் என் இறுதி ஆசை,
ஆகலாம்...

பாராட்டுக்கள் பூமகள்...

ஓவியன்
08-07-2008, 03:00 AM
அத்தனை குளிரும் போரும்
இன்னும் அவனை(ரை)
வாழ வைத்துக் கொண்டிருக்கிறதென்றால்
இத்தகைய அழகான
அற்புதமான நிமிடங்களுக்காகத் தானே

அழகான வரிகள், பாராட்டுக்கள் பூமகள்..!!