PDA

View Full Version : சில தடயங்கள்



shibly591
24-06-2008, 09:08 AM
யுத்தம் பற்றி
எதுவுமே
பேசப் போவதில்லை நான்
அது விட்டுச் சென்ற
சில தடயங்களைத் தவிர…

பற்றி எரியும்
பெற்ற வயிறுகளின்
ஆறாத ரணங்கள்

கைக்குழந்தையின்
கதறலில்
தன் சோகத்தை
புதைக்க விளையும்
இளம் விதவைத்தாயின்
கண்ணீர் நாட்கள்


தேடலின்
கடைசி நுனியில்
அமர்ந்தபடி
திக்கற்றுத் தவிக்கும்
வாலிப மனங்கள்

அடையாளமிழந்த
சடலங்களில்
பரவிக் கிடக்கும்
சதைத் துகள்கள்

வழிந்தோடும்
இரத்த ஆறுகளை
வழி மறித்து
நிற்கும்
எலும்புக் கூடுகள்

கொஞ்சம்
கொஞ்சமாய்
சுயமிழந்து கொண்டிருக்கும்
மனித நேயத்தின்
மிஞ்சிய எச்சங்கள்

ஆயுதங்களின்
பேரோசை கேட்டு
சேவல்களே திடுக்கிடும்
அதிகாலைப் பொழுதுகள்

அதிகார
நசுக்குதலுக்குள்
நொறுங்கிப்போன
சுதந்திரத்தின்
ஆணி வேர்கள்

இன்னும்
கண்ணீரில் தகிக்கும்
எல்லா மனங்களினதும்
ஏக சாட்சிகளாய்
குருதியினால் வரையப்படும்
கொடூரக் கவிதைகள்

இவை தவிர
யுத்தம் பற்றி
எதுவுமே பேசப்போவதில்லை நான்

ஆதவா
24-06-2008, 09:12 AM
வார்த்தைப் பிரயோகங்கள் அருமை...

கவிதை நன்றாக இருக்கிறது..

வாழ்த்துகள்