PDA

View Full Version : தானயத்தலைவர்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 05:30 AM
மாணிக்கங்களும் வைடூரியங்களும்
கண்ணாடிச்சிதறல்களாய் வழி நெடுக,
வலது புறத்தல் வருபவனும்
இடது புறத்தில் செல்பவனும்
கண்டுங்காணாமல்
அவரவர் பாதையில் தொடர்கின்றனர்

நேற்யை சண்டைக்காரர்கள்
நாளை மறுநாள் நினைவு கூற இருக்கும்
நாளைய சண்டைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள
கறுப்பு சிவப்பு வெள்ளையென்றும்
மஞ்சள் பச்சை நீலமென்றும்
நிறத்தால் பிறத்திரியப்பட்டவர்களின்
உண்மை நிறம் வெளுக்கத்தொடங்குகிறது

ஏசியே புழுத்துப்போன நாவுகள்
ஆச்சரியமாய் குசலம் விசாரிக்கின்றன
நேற்று இவன் திட்டிய
அவன் கூட்டாளியைப்பற்றியும்
நேற்றைக்கு முன்பு
அதை விட கேவலமாய் அவன் திட்டிய
இவன் கூட்டாளியைப்பற்றியும்
நலம் விசாரிப்புகள் சொச்சமாய்.

ஏய்க்க புதிதாய் இறங்கியிருப்பவனுக்கு
ஏய்ப்பதில் பழம் தின்று கொட்டைபோட்டவன்
ஏய்ப்பதில் மிச்சமிருக்கும் சாகசத்தை
ஏகத்துக்கும் வழங்குகிறான் அறிவுரையாய்.
ஏன்னை ஏய்க்கத்தான் இந்தக்கூப்பாடென்பதை
அறிந்தோ அறிந்தும் அறியாமலோ
பானம் பரிமாறிக்கொண்டிருக்கிறான்
நாளை ஏய்க்கப்பட இருப்பவன்.

இத்தோடு என்சிரச்சேதம்
பதினான்கை தாண்டினாலும்
இன்னும் சிரம் வளர்ந்துகொண்டிதானிருக்கிறது
என்றவனின் கழுத்துக்கு
மாலையணிவிக்கிறான் ஒருவன்
இத்துறைக்கேற்ற துரை நீதானென்று

மெதுவாய் கூட்டம் நகர
மன்னிக்கவும் நகர்த்த ஆரம்பிக்கிறது
சுண்டெலியாய் உட்புகுந்தவர்கள்
பெருச்சாளிகளாய் மாறி
உருள ஆயத்தமாகிறார்கள்
மாணிக்க வைடூரியங்கள்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன.
இதெல்லாம் போதாதென்று
விழுந்த முப்பத்தாறு மாலைகளில்
இரண்டை காணவில்லையென்று
தங்கள் வலதுகைகளிடம்
தர்க்கித்துக்கொண்டிருப்பதாக ஒரு கேள்வி.

எல்லாம் ஓய்ந்திருந்த மயான அமைதியில்
வெளியே ஊசலாடிக்கொண்டிருந்த
நாய்கள் ஜாக்கிரதை பலகையில்
நாய்களை அடித்துவிட்டு
அரசியல்வாதிகள் என்று எழதிச்சென்றான்
ஒரு வழிப்போக்கன்.
அந்த எச்சரிக்கை மனிதப்பயல்களுக்கா
அல்லது அந்த பலகைக்கா?
என்பதில்தான் எனக்குச்சிக்கல்.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in[/COLOR]

ராஜா
24-06-2008, 05:37 AM
சடையர் என்ற வகையிலான சவுக்கடிக் கவிதை.. சபாஷ் கசனி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 06:01 AM
மிக்க நன்றி ராஜா. நல்லவேளையாக பிழையை சுட்டிக்காட்டிவிட்டீர்கள். திருத்திவிட்டேன். இது எந்த வகையிலான கவிதை என்று எனக்கே தெரியவில்லை. அதன் வகையையும் கூறியதற்கு மிக்க நன்றி ராஜா அவர்களே.

சிவா.ஜி
24-06-2008, 06:31 AM
கட்சித் தாவுதலும், நேற்றைய எதிரி இன்றைய நன்பன், இன்றைய நன்பன் நாளைய எதிரி என்ற கேவலமான கொள்கையும் வைத்துக்கொண்டு "இதெல்லாம் அரசியலில் சகஜமய்யா" என்று கூச்சமே இல்லாமல் சொற்பொழிவாற்றும் அரசியல்வியாதிகளுக்கு நல்ல சுளீர்.

வாழ்த்துகள் ஜுனைத். வார்த்தைகளை வெகு லாவகமாக பயன்படுத்துகிறீர்கள் பாராட்டுகள்.

பூமகள்
24-06-2008, 01:37 PM
சரியான இடி..!!
எத்தனை திட்டினாலும் திருந்தாத ஜென்மங்கள் பற்றியொரு நல்ல கவிதை..!!

திருந்துவார்களென நம்புவோம்..!!
இன்னொரு உலகம் தோன்றுவதற்குள்ளாவது...!

பாராட்டுகள் சகோதரரே..!!
வார்த்தைகள் நழுவி அதுவாக விழுந்திருப்பது கவிதையின் ப்ளஸ்..!
ஆனால்.. பெரிய கவிதை.. கொஞ்சம் நீளம் குறைத்தால் நலமாக இருக்கும்..!!

நல்ல படைப்புக்கு பாராட்டுகள் சகோதரரே..!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 02:15 PM
கருத்துக்கு நன்றி சகோதரி. சுத்தமாய் புரியமுடியா லெவலில் கவிதை உள்ளது என்று என் நண்பர் கூறியிருந்தார். அதுதான் ஓரளவிற்கு நெருடலைத்தந்தது. இப்பொழுது தெளிவடைந்து இருக்கிறேன். மீண்டும் ஒரு நன்றி.