PDA

View Full Version : கடவுளும் காளியப்பனும்மதுரை மைந்தன்
23-06-2008, 03:16 PM
காளியப்பன் புதிய அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்டன. அமைச்சராவதற்கு முன் அவர் சென்னை அண்ணா சாலையில் ஒரு ஆடியோ காஸெட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். காஸட் விற்பனை பெருக சொந்தமாக கே-சீரீஸ் என்று தானே காஸட்களை வெளியிட்டு பணக்காரர் ஆனார். பணம் சேர்ந்தவுடன் அரசியலிலும் ஈடுபாடு பெருகியது. சட்டசபை தேர்தலில் நின்று ஜெயித்து முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்று இன்று அமைச்சராகி நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார்.

அன்று தனது அலுவலகத்தில் கோப்பைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அவரது உதவியாளர் வேகமாக ஓடி வந்து " அய்யா நம்ம பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி தலையில் பலமாக அடிபட்டு பக்கத்து ஆஸ்பத்திரில் உசிருக்கு போராடிக் கிட்டு இருக்காராம்" என்று கையும் காலும் பதற கூறினார்.

காளியப்பன் உதவியாளருடன் பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் வெகு நேரமாக காத்திருந்தனர். வெகு நேரத்திற்கு பிறகு வயதான ஒரு டாக்டர் வெளியே வந்து " பையனுடய சொந்தக்காரங்களா நீங்க?" என்று காளியப்பனிடம் கேட்ட பின் சொன்னார் " பையனுக்கு தலையில ரொம்ப மோசமா அடிபட்டிருக்கு. எங்கலாளானது அத்தனையும் செஞ்சுட்டோம். இனிமே பையன் பொழைக்கணும்னா அது கடவுள் கையில தான் இருக்கு".

காளியப்பன் " நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. எவ்வளவு செலவானாலும் என் பையனை எப்படியாவது காப்பாத்தணும்" என்று அவர் கையைப் பிடித்து கேட்டார்.

டாகடர் காளியப்பனிடம் " உங்க ஆதங்கம் எனக்கு புரியது. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு" எனறார்.

காளியப்பன் கோபமுற்றவராய் " கடவுள் தான் காப்பாத்தணும்னா நீங்க எல்லாம் ஏன் மருத்துவம் படிச்சுட்டு தொழில் பண்றீங்க? உங்க மருத்துவக் கல்விக்கு வேண்டி அரசாங்கம் எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா? கல்வி அமைச்சரான எனக்குத் தான தெரியும். நீங்க எல்லாம் இங்கே படிச்சுட்டு அமெரிக்கா ஆஸ்திரேலியானு சம்பாதிக்க போயிடறீங்க. இங்கே யார் உயிர்களை காப்பாத்தறது?".

டாக்டர் காளியப்பனின் உதவியாளரைத தனியே அழைத்து " அமைச்சர் கோபமாக இருக்கிறார். பிள்ளைப் பாசத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார். அருகாமையில் ஒரு கோயில் இருக்கு. அங்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து கடவுளைப் பிராரத்திக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.

உதவியாளர் சொன்னதைக் கேட்டு காளியப்பன் வெகுண்டார். " என்னது நான் கோயிலுக்குப் போறதா? . கட்சிக் காரங்க யாராவது என்னை கோயில்ல பார்தாங்கனா என்னோட அமைச்சர் பதவி போறது மட்டுமில்லை கட்சியிலிருந்தும் என்னைத் தூக்கிடுவாங்க". அவர் சார்ந்திருந்தது ஒரு நாத்திகவாத கட்சி.

உதவியாளர் பணிவோடு சொன்னார் " ஆபத்துக்கு தோஷமில்லை. எங்கிட்ட துண்டு இருக்கு. அதிலே ஒரு முண்டாசு கட்டிக்கிட்டீங்கனா ஒருத்தருக்கும் தெரியாம சமாளிச்சுடலாம். காரிலே போக வேண்டாம் பின் பக்க வாசல் வழியா போகலாம் காளியப்பன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார்.

கோயிலில் அதிக கூட்டம் இல்லை. உதவியாளர் அர்ச்சனைத் தட்டு சீட்டு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு காளியப்பனுடன் சுவாமி சன்னதிக்குச் செனறார். அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்ட அர்ச்சகர் வைத்தி " பேர் நட்சத்திரம் ராசி கோத்ரம் எல்லாம் சொல்லுங்கோ" எனறார். காளியப்பன் அவற்றை சொல்லும்போது வைத்தி அவரை உற்று பார்த்தார். பிறகு "செத்த நாழியாகும். இங்கேயே நில்லுங்கோ" என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே சென்றார்.

கர்பக்ரஹத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த பெரிய அர்ச்சகரிடம் போய் " அண்ணா வெளில யாரு வந்திருக்கா தெரியுமா? நம்ம அம்பிக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு பத்து லட்சம் பணம் கேட்டு அட்மிஷன் தர மறுத்தானே அந்த கிராதகன் வந்திருக்கான். அம்பி மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணினதுக்கு காரணமான கொலைகாரன் அமைச்சர் காளியப்பன் வந்திருக்கான். அவனோட பிள்ளை ஆக்ஸிடென்டுல அடிபட்டு உசிருக்கு போராடிக்கிட்டு இருக்கானாம். அவன் பொழைக்கிறதுக்கு சுவாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணனுமாம். எனக்கு வந்த கோபத்தில போடா கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் உனக்கு வேண்டி அர்ச்சனை பண்ண மாட்டோம். நீ பண்ண பாவத்துக்கு உன் பிள்ளை அனுபவிக்கட்டும்னு சொல்லத் தோணிச்சு".


பெரியவர் எழுந்தார். கை கால் பதற " வைத்தி சுவாமி சன்னிதானத்தில இப்படியெல்லாம் பேசக்கூடாது. காளியப்பன் நமக்கு தீங்கு செஞசிருக்கலாம். ஆனால் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிற சமயத்தில நம்மாலானதை செய்யலேனா சுவாமி நம்மை மன்னிக்க மாட்டார். பகைவருக்கும் அருள் செய்வாய் இறைவா என்கிறதுதான் தமிழ் பண்பாடு. போ அர்ச்சனையை முழு மனசா பண்ணு. நான் இங்கே உட்காரந்து அந்த பிள்ளைக்கு சரியாறவரைக்கும் பாராயணங்கள் பண்ணப் போறேன்".

வைத்தி வெட்கி தலை குனிந்தவராய் சென்று அர்ச்சனை பண்ணினார். அர்ச்சனை முடிந்து பிராசத தட்டுடன் வந்து காளியப்பனிடம் அதைக் கொடுத்து சொன்னார் " கவலைப் படாம போங்கோ. பிள்ளை பொழைச்சுக்குவான். உள்ளே பெரியவர் அவனுக்காக பிரார்த்தனை செஞசுட்டிருக்கார்".

காளியப்பன் தலை குனிந்தவராய் அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு " சாமி உள்ளே நீங்க பேசிக்கிட்டது என் காதில் விழுந்தது. அந்த பெரியவர் பாதங்களை என் கண்ணீரால் கழுவ வேண்டும்" என்று நாத் தழுக்க கூறி விட்டு உதவியாளருடன் ஆஸ்பத்திருக்கு விரைந்தார்.

வெகு நேரம் காத்திருந்த பின் அய்.சி.யூ விலிருந்து வெளி வந்த டாக்டர் காளியப்பன் கைகளைப் பற்றி " உங்க பையன் பிழைத்து விட்டான். மருத்துவ உலகத்தில் இது ஒரு அதிசயம். இது நிச்சயம் அந்த கடவுள் செயல் தான்" எனறார். டாக்டர் கைகளைப் பற்றிய காளியப்பன் கூறினார் " உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு நீங்கள் தான் கடவுள்".

அங்கிருந்து நேராக அரசின் தலமை செயலகம் சென்ற காளியப்பன் முதலமைச்சரிடம் தனது அமைச்சர் பதவியைத் துறக்கும் கடிதத்தைக் கொடுத்தார். ஆச்சரியமுற்ற முதலமைச்சரிடம் நடந்தவைகளை விளக்கிக் கூறிய காளியப்பன் கூறினார் " எனக்கு திடீரென்று கடவுள் பக்தி வரவில்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் கடவுள் இல்லை எனறு கூறிய நாம் மனித நேயத்தை மறந்து சில பாவங்களை செய்கிறோம். உதாரணமாக கல்வித் துறையில் லஞ்சம் வாங்கி அட்மிஷன் தருகிறோம். கடவுள் என்று ஒருவர் நம்மை தண்டிக்க இல்லை என்ற மமதையால். கடவுள் பக்தியை விட மனித நேயம் மேலானது என்று ஒரு பெரியவர் மூலம் உணர்ந்தேன். இனி என் வாழ் நாட்களை மனித சேவையில் கழிக்க விரும்புகிறேன்".

SivaS
25-06-2008, 10:44 AM
எல்லோருமே காளியப்பனை போல் திருந்தினால் எவ்வளவு நல்லா இருக்கும்

அருமை வீரரே தொடர்ந்து எழுதுங்கள்

மதுரை மைந்தன்
25-06-2008, 11:32 AM
எல்லோருமே காளியப்பனை போல் திருந்தினால் எவ்வளவு நல்லா இருக்கும்

அருமை வீரரே தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி சிவா அவர்களே

செல்வா
25-06-2008, 12:51 PM
கடவுளை நம்புகிறவர்களிலும் இத்தகைய புல்லர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுளை நம்பாதவர்களிலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல்... குறளை நினைவு படுத்தும் கதை..

வாழ்த்துக்கள் வீரரே..

இறைநேசன்
25-06-2008, 01:54 PM
நல்ல அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள்.

மனித நேயத்தின் மூலம் ஒருவரை நல்வழி திருத்த முடியும் என்ற நல்ல கருத்து
மேலும் உங்களை துன்பபடுத்துபவர்களுக்காக கூட பிரார்த்தனை பண்ணுங்கள் என்று சொன்ன இயேசுவின் வார்த்தையையும் நினைவு கூற வைக்கிறது.

பதித்தமைக்கு நன்றி

மதுரை மைந்தன்
25-06-2008, 04:04 PM
கடவுளை நம்புகிறவர்களிலும் இத்தகைய புல்லர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுளை நம்பாதவர்களிலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல்... குறளை நினைவு படுத்தும் கதை..

வாழ்த்துக்கள் வீரரே..


அருமையான திருக்குறளை மேற்கோள் காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பர் செல்வா அவர்களே!

மதுரை மைந்தன்
25-06-2008, 04:10 PM
நல்ல அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள்.

மனித நேயத்தின் மூலம் ஒருவரை நல்வழி திருத்த முடியும் என்ற நல்ல கருத்து
மேலும் உங்களை துன்பபடுத்துபவர்களுக்காக கூட பிரார்த்தனை பண்ணுங்கள் என்று சொன்ன இயேசுவின் வார்த்தையையும் நினைவு கூற வைக்கிறது.

பதித்தமைக்கு நன்றி

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் மனித நேயத்தையும் மறந்துவிட கூடும் என்று கதையில் சுட்டிக் காட்டியுள்ளேன். தங்களின் அருமையான கருத்துக்களுக்கு என் நன்றி.