PDA

View Full Version : நான் நானேதான்...!!



சிவா.ஜி
23-06-2008, 01:23 PM
"ஹலோ வர்ஷாவா...?"

"எனக்குப் போன் பண்ணிட்டு இதென்ன கேள்வி..? மாத்துங்கடா கேள்வியை."

"சரி சரி....ஒரு அமெண்ட்மெண்ட் போட்டு மாத்திடலாம்...அத விடு...டொட்டொடொய்ங்....என் கையில என்ன இருக்கு சொல்லு..?'

"ம்...இது ஒரு பைத்தியக்காரத்தனம்...சார்லஸ்...நான் தெரியாமத்தான் கேக்கறேன்..நாம என்ன வீடியோ போன்லயா பேசிக்கிட்டிருக்கோம்..?"

""அதுல பேசினாத்தான் என் கையில இருக்கறதை கரெக்ட்டா சொல்லிடுவியே...நான் கேட்டது உன்னால கெஸ் பண்ண முடியுதான்னு பாக்க"

"எனக்கு வேலை இருக்கு. கான்ஸண்டன்ட்ரேட் பண்ண முடியல...நீயே சொல்லித் தொலை"

"தசாவதாரத்துக்கு இன்னிக்கு ஈவினிங் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட்"

" வாவ்......எப்படி கிடச்சது?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சதும் வெளியில வெய்ட் பண்ணு நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்"

"இப்ப என்ன பண்றது......அதான் மூணு வருஷத்துக்கு முன்னாலயே பிக்கப் பண்ணிட்டியே....சரி சரி...இந்த வேலையை முடிச்சிட்டு டாண்னு வெளியே வந்துடறேன்..லேட் பண்ணாம சீக்கிரம் வா"

"அவசரத்தைப்பாரு....கரெக்டா வந்துடறேன்..ஓக்கேவா...பைடா...."

அலைபேசித் தொடர்பைத் துண்டித்துவிட்டு தன் வேலையை தொடரும் சார்லஸ் மூன்று வருடத்துக்கு முன் சரியான பொறுக்கி. நிலையான வேலை என்று எதுவுமில்லை. இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்து, அந்தக் கல்லூரியில் கற்றுக் கொண்ட எல்லா கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையாகியிருந்தான்.


வர்ஷாவும் அவனும் அடுத்தடுத்த குடியிருப்புக் கட்டிடங்களில் இருந்தவர்கள். பள்ளித் தோழர்கள். இருவரது தந்தைகளும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். அந்த நிறுவனத்தின் குடியிருப்புப் பகுதிதான் அது. பள்ளிப் படிப்பு முடிந்து வர்ஷா வேறு கல்லூரியிலும், சார்லஸ் வேறு கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாலும், அவனுடைய மூன்றாமாண்டிலிருந்து மாறிவிட்ட அவன் போக்கை அவளும் கவனித்துக்கொண்டுதானிருந்தாள்.

கவலைப் பட்டாள். நன்பனின் சீரழிவு அவளுக்கு வேதனையாக இருந்தது. அடிக்கடி அவனைச் சந்தித்து பேசினாள். எதையும் காதில் போட்டுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை. அவளை பிடித்துத் தள்ளினான். கெட்ட வார்த்தைகளால் திட்டினான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். இவனை எப்படியும் மாற்றிவிடவேண்டுமென்ற உறுதி எடுத்துக்கொண்டாள்

ஒரு இனிப்பான தருணத்தில் காதலர் அவதாரமெடுத்தார்கள். வர்ஷா வீட்டுக்குத் தெரிந்ததும் அந்த பொறுக்கி பின்னாலயா சுத்தறே என்று சொல்லி சத்தம் போட்டார்கள். வர்ஷா உறுதியான பெண். பள்ளியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கெடுத்து வெற்றி பெற்றவள். படிப்பிலும் கெட்டி. தன் செயல்களை தீர்மானத்தோடு செய்பவள்.


அதே உறுதியோடு வீட்டாரை சமாளித்தாள்.

"இன்னைக்குப் பொறுக்கியா உங்க கண்ணுக்குத் தெரியறவனை இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி ஒரு நல்ல பிள்ளையான்னு சொல்ல வெக்கறேன்"

சொன்னவளின் வார்த்தைகளில் இருந்த உறுதி அவர்களையும் அமைதியாக்கியது. இரண்டு குடும்பங்களும் மதம் தாண்டிய நட்புறவுடன் பழகி வந்தார்கள். அதனால் மாற்று மதத்தவன் என்ற வேற்றுமையை அவர்கள் பார்க்கவில்லை.

வர்ஷா சொன்னதை செய்து காட்டினாள். சார்லஸை நிழலாகத் தொடர்ந்து, அவன் போகுமிடமெல்லாம் உடன் சென்று, தன் பூரண அன்பை அவன் உணரும்படி செய்து, சிறிது சிறிதாக அவனுடைய போதைப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாள். தவறான நன்பர்களின் சேர்க்கையை நிறுத்தினாள். அவனை வங்கித் தேர்வு எழுத வைத்து நல்ல வேலையில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

அதுவரை எந்த பொறுப்புமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, தான் பணிபுரியும் வங்கியிலிருந்து கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டினான். அந்த வீடு புகும் விழாவில் அனைவர் முன்னிலையிலும் தன்னுடைய இந்த மாற்றம், வளர்ச்சி எல்லாவற்றுக்கும் வர்ஷாதான் காரணம் என்று அவன் சொன்ன போது....கண்கள் கலங்கிவிட்டாள். யாரும் அறியாமல் அவன் காதருகே மெல்ல ஐ லவ் யூடா என்று கிசுகிசுத்தாள். முகம் நிறைய சிரிப்புடன் ஐ ட்டூ என்று சொல்லி அவள் கைகளை பற்றிக்கொண்டான்.


சார்லஸ் வேலையை முடித்துவிட்டான். வர்ஷாவும் அவனும் அன்றைய முன்னிரவை சிரிப்பும் சீண்டல்களுமாய் தசாவதாரம் பார்த்துக்கொண்டே கழித்தார்கள்.

திரும்ப வரும் வழியில் யாருமில்லாத அந்த சாலையில் கிடைத்த ஏகாந்தத்தில் வர்ஷா மெல்ல தங்கள் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

"இப்படியே சுத்தி சுத்தி போரடிக்குதுடா...சீக்கிரம் உங்கப்பாம்மாகிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு"

"ஹேய்...அதுக்குள்ள போரடிச்சிடிச்சா....அப்ப கல்யாணத்துக்கப்புறமும் இதே ஆள்கூடத்தானே குடும்பம் நடத்தப் போறே...அப்ப போரடிக்காதா...?"

" அது வேற வாழ்க்கை. குடும்பம்ன்னு ஒண்ணு ஆயிடும், பொறுப்பா வீட்டைப் பாத்துக்கனும், ரெண்டு குழந்தைங்களை பெத்துக்கனும்.....முடிஞ்சா நான் வேலையை விட்டுடுவேன்...அப்றம் முழுநேர குடும்பத்தலைவியாயிடுவேன்.."

சொல்லச் சொல்ல அவள் முகம் பூரிப்படைவதைப் பார்த்து மனதுக்குள் மகிழ்ந்தான். நாளைக்கே அப்பா அம்மாவிடம் பேச வேண்டுமென தீர்மானித்துக்கொண்டான்.


அன்று அலுவலகம் வருவதற்கு முன்பே வர்ஷாவை அழைத்து மாலையில் சந்திக்க வேண்டும், முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று, வேண்டுமென்றே குரலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொன்னான்.

வர்ஷாவுக்கு குழப்பம்.

"என்னடா ஏதாவது சீரியஸான விஷயமா? நம்ம கல்யாணத்தைப் பத்தி வீட்ல பேசினியா?"

'எதுக்கு அவசரப்படற....அதான் சாயங்காலமா பேசலான்னு சொல்றேனே."

"ஏன் இப்ப சொல்ல மாட்டியியா...சஸ்பென்ஸ் வெக்காத சார்லஸ்...இப்பவே சொல்லு.."

"நோ! சாயங்காலமாத்தான் சொல்லுவேன். வெளியில நில்லு, வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்" என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டான்.

அன்று முழுவதும் வர்ஷாவுக்கு வேலையே ஓடவில்லை. மாலை எப்போது வரும் என்று தவிப்போடு நேரத்தை நகர்த்தினாள்.

மாலையும் வந்தது, சார்லஸும் வந்தான். அடுத்திருந்த பூங்காவுக்குப் போய் காலியான இருக்கையில் அமர்ந்தார்கள். வர்ஷாவின் முகத்தில் தெரிந்த டென்ஷனை சிறிது நேரம் ரசித்துவிட்டு...சொன்னான்

"வீட்ல சம்மதிச்சுட்டாங்களே....என்று சின்னக்குழந்தையைப்போல வர்ஷாவைத் தூக்கிக்கொண்டு தட்டாமாலைச் சுற்றினான்.

'ஏ..விட்றா....தலை சுத்துது...எறக்கிவிட்றா தடியா...'

இறக்கிவிட்டவன் சின்னதாய் மூச்சிரைத்துக்கொண்டே...."நைட்டே பேசிட்டேன் வர்ஷா...அவங்களுக்கு பூரண சம்மதம். இந்த மாசமே கூட கல்யாணத்தை வெச்சிக்கலான்னு சொல்லிட்டாங்க..'

அவன் சொல்வதை சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தவள், அவன் அடுத்து சொன்னதைக் கேட்டதும் முகம் மாறினாள்.

"நீ மதம் மாற வேண்டியது ஒண்ணுதான் பாக்கி...உனக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்டோம். எனக்கு ரொம்ப பிடிச்ச பேர் ரோஸ்லின்....நல்லாருக்கா..."

ஆர்வத்துடன் கேட்டவனை அமைதியாகப் பார்த்தாள். அவளுடைய அமைதி அவன் எதிர்பார்க்காத ஒன்று. குழம்பினான்.

"எதாச்சும் சொல்லு வர்ஷா..."

"முதல்ல ஒண்ணு சொல்லு சார்லஸ் உனக்கு வர்ஷா வேணுமா..? ரோஸ்லின் வேணுமா...?"

"ஹேய்...வாட் ஈஸ் திஸ்..? இன்றைய வர்ஷா தானே நாளைய ரோஸ்லின்..?"

"நோ!..என்னை வர்ஷாவாவே ஏத்துக்க உன்னால முடியுமா...?"

"கம் ஆன் வர்ஷா.....பேர்ல என்ன இருக்கு? எனக்கு எப்பவும் நீ நீதான்.."

" எஸ் அதேதான் நானும் சொல்றேன். நான் நானாத்தான் இருக்க விரும்பறேன். என்னால மதம் மாற முடியாது. இது என்னோட மதத்துமேல இருக்கற பற்றுனால சொல்லல. என்னை என்னையாவே நீ கல்யாணம் செஞ்சிருந்தா, காலப்போக்குல ஒருவேளை நானே மாறியிருப்பேன். ஆனா இதை ஒரு கண்டிஷனா போட்டு அப்பதான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா......ஸாரி...."

"வர்ஷா என்ன சொல்ற? எங்க அப்பா அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க"

"ஐ டோண்ட் கேர்...நீ ஒத்துப்பியா இல்லையா?"

"எங்க அப்பா அம்மா பேச்சை மீறி நம்ம கல்யாணம் நடந்தா...நல்லாருக்காது வர்ஷா"

"ஸோ......நீயும் அதைத்தான் எதிர் பாக்கறே அப்படித்தானே..?"

"இதில என்ன தப்பு இருக்கு? எல்லாரும் செய்யறதுதானே...?"

"ஆனா நான் செய்ய மாட்டேன். இப்பக்கூட நான் உன்னை கேக்க முடியும்...நீ ஏன் எங்க மதத்துக்கு மாறக்கூடாதுன்னு.....ஆனா அப்படிக் கேக்க மாட்டேன். நான் காதலிச்சது உன்னைத்தான். சார்லஸைத்தான். நீயும் அப்படி இருக்கனுன்னுதான் நான் விரும்பினேன். எப்ப நீ என்னை, என் சுயத்தை ஒரு பொருட்டாவே மதிக்கலையோ....ஐயம் ஸாரி....இனி நீ கண்டிஷனை மாத்தறதா சொன்னாக்கூட நான் சம்மதிக்கப் போறதில்லை..காதலுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை நான் காப்பாத்திட்டேன்....நீ.....??....குட் பை'

உறுதியோடு போகும் வர்ஷாவைப் பார்த்தபடியே சார்லஸ் சிலையாக நின்றுவிட்டான்.

கலைவேந்தன்
23-06-2008, 01:57 PM
நெஞ்சைத்தொட்ட கதை சிவா! இன்றைய இளைய தலைமுறை அழகாக சிந்திக்கத் தொடங்கியதையே இக்கதை காட்டுகிறது!

பாராட்டுக்கள் சிவா!

சிவா.ஜி
23-06-2008, 02:03 PM
நன்றி கலைவேந்தன். நிறைய இளையதலைமுறையினர் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்திதான் இந்த வர்ஷாவும்.

அறிஞர்
23-06-2008, 02:19 PM
அருமை சிவா...

தன் வாழ்வை மாற்றியவளின் விருப்பத்தை கணக்கில் கொள்வானா...
வளர்த்த பெற்றோரை கணக்கில் கொள்வானா.....

ரொம்ப கஷ்டம் தான்...

எனக்கு தெரிந்த ஒருவர் இஸ்லாமியர், அவர் மனைவி பிராமண வகுப்பை சேர்ந்தவர்.
பெயர் மாற்றமில்லை..
அவரவர் வழிபாடுகள்.. அவரவர் வழியே....

திருமணமாகி 12 வருடங்கள் சிறப்பாக குடும்பம் நடத்துகிறார்கள்.

மதி
23-06-2008, 02:27 PM
அழகான ஆழமான கதை சிவாண்ணா... சொல்லவந்ததை தெளிவாக கச்சிதமாக சொல்லிவிட்டீர்கள்..
நீங்க சொன்ன மாதிரி இன்றைய இளம்தலைமுறையினர் தெளிவாகவே சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

வாழ்த்துகள்...அண்ணா

சிவா.ஜி
23-06-2008, 02:27 PM
அருமை சிவா...

தன் வாழ்வை மாற்றியவளின் விருப்பத்தை கணக்கில் கொள்வானா...
வளர்த்த பெற்றோரை கணக்கில் கொள்வானா.....

ரொம்ப கஷ்டம் தான்...

எனக்கு தெரிந்த ஒருவர் இஸ்லாமியர், அவர் மனைவி பிராமண வகுப்பை சேர்ந்தவர்.
பெயர் மாற்றமில்லை..
அவரவர் வழிபாடுகள்.. அவரவர் வழியே....

திருமணமாகி 12 வருடங்கள் சிறப்பாக குடும்பம் நடத்துகிறார்கள்.

இதைத்தான் அறிஞர் நான் சொல்ல வந்தேன். மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அவரவராகவே இருந்து இனிய இல்லறம் கண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். நிச்சயம் காதலில் இப்படி நிகழக்கூடாது. கட்டாயங்கள் இருக்கக்கூடாது.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி அறிஞர்.

சிவா.ஜி
23-06-2008, 02:29 PM
அழகான ஆழமான கதை சிவாண்ணா... சொல்லவந்ததை தெளிவாக கச்சிதமாக சொல்லிவிட்டீர்கள்..
நீங்க சொன்ன மாதிரி இன்றைய இளம்தலைமுறையினர் தெளிவாகவே சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

வாழ்த்துகள்...அண்ணா

அந்த தெளிவான சிந்தனைக்கு என் சல்யூட். நல்ல மாற்றத்தையே அது ஏற்படுத்தும். வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மதி.

அன்புரசிகன்
23-06-2008, 04:05 PM
காதல் என்று வந்திட்ட பிறகு பெற்றோரை சாடுவது சுயநலம்... அவனை அவளின் காதலனாக பார்ப்பதிலும் வில்லனாக பார்க்கிறேன்.... வில்லனுக்கு தகுந்த சாட்டையடி....

சூப்பருண்ணா....

சிவா.ஜி
23-06-2008, 05:40 PM
ஆம் அன்பு. காதலனின் சரியான கடமையை அவன் செய்யவில்லை. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்புரசிகரே.

இளசு
23-06-2008, 06:00 PM
இப்படிப்பட்ட காதலர்கள் அவரவராகவே அதிகம் இணைய வேண்டும்..
அப்படியாவது மதங்களுக்கிடையிலான இடைவெளி குறைய வேண்டும்..

நல்ல கருவை அழகாய்க் கையாண்ட சிவாவுக்கு ஒரு ஷொட்டு!

செழியன்
23-06-2008, 08:31 PM
யதார்த்தமான கரு, சிறந்த எழுத்தாழுமை.கொஞ்சம் வருத்தமான முடிவு.சிறப்பாக ஒருங்கினைத்திருக்கின்றீர்கள் அண்ணா. இது போன்ற சந்தர்ப்பத்தில் சில காதல்கள் சேர்ந்தாலும் பல காதல்கள் பிரிவதுதான் உண்மை அண்ணா, ஏனெனில் மதம் மேல் கொண்ட மதம் தான் காரணம்.

சிவா.ஜி
24-06-2008, 04:15 AM
இப்படிப்பட்ட காதலர்கள் அவரவராகவே அதிகம் இணைய வேண்டும்..
அப்படியாவது மதங்களுக்கிடையிலான இடைவெளி குறைய வேண்டும்..


நிச்சயம் அவரவராகவே இணயவேண்டும். அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். மதம் தாண்டிய உறவுகள் செழிக்கும்.

பின்னூட்ட உற்சாகத்திற்கு மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
24-06-2008, 04:19 AM
யதார்த்தமான கரு, சிறந்த எழுத்தாழுமை.கொஞ்சம் வருத்தமான முடிவு.சிறப்பாக ஒருங்கினைத்திருக்கின்றீர்கள் அண்ணா. இது போன்ற சந்தர்ப்பத்தில் சில காதல்கள் சேர்ந்தாலும் பல காதல்கள் பிரிவதுதான் உண்மை அண்ணா, ஏனெனில் மதம் மேல் கொண்ட மதம் தான் காரணம்.

உண்மைதான் செழியன். கட்டாயத்தில் சேரும் காதலின் இல்லறம் இனிப்பதில்லை. உப்புபெறாத விஷயங்களுக்கு கூட பிரிந்துவிடும் அபாயத்தில்தான் இருக்கும்.

காதலிக்கும் இருவருக்கும் நல்ல புரிந்துணர்வும், பக்குவமும் வேண்டும். அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி செழியன்.

mukilan
24-06-2008, 04:22 AM
மறுபடியும் உங்களின் சமூகப்பார்வை வெளிப்படும் சிறுகதை சிவாஜி( மரியாதையா ஜி னு சொன்னேன்). கதாநாயகியின் தெளிவான முடிவைக்கூறும் கதையை ரசித்தேன். சில மதங்களில் உருவ வழிபாடு செய்யும் நபரை திருமணம் செய்யக் கூடாதென் விதிகள் இருப்பதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் மதத்தின் மீது தீவிரப் பற்றுடைய முதிர்ந்த தலைமுறையினருக்கு எப்படிப் புரியவைப்பது?

சிவா.ஜி
24-06-2008, 04:39 AM
மறுபடியும் உங்களின் சமூகப்பார்வை வெளிப்படும் சிறுகதை சிவாஜி( மரியாதையா ஜி னு சொன்னேன்). கதாநாயகியின் தெளிவான முடிவைக்கூறும் கதையை ரசித்தேன். சில மதங்களில் உருவ வழிபாடு செய்யும் நபரை திருமணம் செய்யக் கூடாதென் விதிகள் இருப்பதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் மதத்தின் மீது தீவிரப் பற்றுடைய முதிர்ந்த தலைமுறையினருக்கு எப்படிப் புரியவைப்பது?

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி முகிலன். பணிப்பளுவோ?

நீங்கள் சொன்னதைப்போல விதிகள் அந்த மதத்தில் இருக்கத்தான் செய்க்கிறது. அந்த சந்தர்ப்பங்களில் மதமாற்றுதான் பெரும்பாலும் நடக்கிறது. இளையதலைமுறையினரின் புரிதல், மூத்த தலைமுறையினருக்கு சிறிது குறைவுதான். அவர்களுக்குப் புரியவைக்க ஒரே வழி வாழ்ந்துகாட்டுவதுதான். அறிஞரின் நன்பரைப்போல பனிரெண்டு வருடங்களாக அவரராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஆதர்ச தம்பதிகளைப்போல வாழ்ந்து காட்டி புரிய வைக்க வேண்டும்.

அதற்கு முக்கியத்தேவை இணைபவர்களின் மனத்தெளிவுதான்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி முகிலன். அடிக்கடி வாங்க.

இதயம்
24-06-2008, 04:43 AM
அழகான வர்ணனை, தெளிவான உரையாடல்களுடன் கூடிய கதையோட்டம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது..!!

கதாசிரியரும், பின்னூட்டமிட்டவர்களும் இக்கதையின் அடிப்படையில் இளைய தலைமுறை "தெளிவாக" சிந்திக்கத்தொடங்கி விட்டதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் எதை "தெளிவாக" என குறிப்பிடுகிறார்கள் என எனக்கு விளங்கவில்லை. கதையின் தலைப்பிலேயே கர்வம் மிளிரும் இந்த கதையில் காதலை நான் நிச்சயம் எதிர்பார்த்திருக்க கூடாது. கதாபாத்திரங்களையும், கதையோட்டத்தையும் நம்பி இது அருமையான காதல் கதையோ என நம்பி படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இறுதி முடிவை படித்ததில் கதை சொல்லும் நீதி "காதலை விட மதம் பெரிது" அல்லது "காதலை விட அவரவர் நலன் பெரிது" என்பது தான்..!! தியாகத்தை அடிப்படையாக கொண்ட காதலுக்கு இந்த நீதி எந்த வகையில் பொருந்துமென்று எனக்கு புரியவில்லை. ஒரே மதத்தை, ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பதை விட, காதலுக்கு சவாலாக அமையும் இது போன்ற பேதங்கள் நிறைந்தவர்கள் காதலித்து இணைவது வெகு சிறப்பு என்பேன் நான். காரணம், அங்கே அவர்களுக்கு தங்கள் காதலை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம். அது இன்னும் காதலை வலுப்படுத்தும், உயர்த்தும்..!!

ஆனால், இந்த கதையில் வரும் நாயகனும் நாயகியும் தங்கள் காதலை காட்டிலும் தான் சார்ந்த மதத்தின் மேல் உறுதியாக இருக்கும் போது காதல் அங்கே குற்றுயிராய் துடிக்கிறது. இத்தனை காலமும் காதல் என்ற உணர்வில் மூழ்கித்திளைத்தவர்கள் மதத்தை காரணம் காட்டி பிரிவதாக சொல்லப்படுகிறது. இப்படி பிரிந்தவர்கள் பிறகு அவர்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்து விட்டு இன்னொருவரை காதலிக்க தொடங்கலாம் அல்லது பெற்றோரின் சம்மதத்துடன் நல்ல பிள்ளையாக வேறொருவரை திருமணம் செய்யலாம். மொத்தத்தில் காதல் என்ற பெயரில் ஒருவரையொருவர் ஏமாற்றியிருக்கிறார்களே தவிர காதலிக்கவேயில்லை. ஒரு பொறுக்கியாக இருந்த சார்லஸ் வாழ்க்கையில் உயர காரணம் வர்சா காட்டிய காதலுக்கு அவன் கொடுத்த முக்கியத்துவம். அதற்காக அவள் மதத்தை விட்டுக்கொடுத்திருக்கலாம். தன்னை மனிதனாக மாற்றிய வர்சாவின் காதலுக்கு நன்றியாக சார்லஸ் தன் மதத்தை விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால், இருவருமே சுயநலவாதிகள்..!! சுயநலம் கருதும் பண்பு என்றும் காதலுக்கில்லை. கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும், அதை விட அதிக அளவு மற்றவரிடம் விட்டுக்கொடுக்க தூண்டும் உணர்வு காதல். காதலுக்காக சுயத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதை சொல்ல கதாசிரியர் முயன்றிருக்கிறார். ஆனால், காதலுக்கு முன் சுயம் என்ற சொல்லே அர்த்தமற்றது என் கருத்து.

எப்பொழுதும் இது போன்ற சூழ்நிலைகளில் காதலுக்கு தடையாக இருப்பது மதம் அல்லது குடும்பம். இங்கே சம்பந்தப்பட்ட காதலர்களே தடையாக இருக்கிறார்கள்..!! நல்லவேளை இவர்கள் இணையவில்லை என்ற நிம்மதி ஏற்படுகிறது..!! இந்த கதையின் முடிவை நியாயப்படுத்துவதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. ஒரு விஷயத்திற்காக இக்கதையின் முடிவை பற்றி திருப்தியடையலாம். இக்கால இளைய சமுதாயத்தின் இயல்பை சரியாக சிவா சொல்லியிருக்கிறார்.. அதற்காக அவருக்கு பாராட்டுக்கள்..!!

பூமகள்
24-06-2008, 05:11 AM
சூப்பர் கதை..!!
ஆனால்.. சுயமென்று வருகையில் காதலையும் தூக்கி எறிய நிறைய திடம் வேண்டும்....
அந்த மாதிரியான பொண்ணாக வர்ஷாவைப் பார்ப்பதில் பெருமிதம்... ஆச்சர்யம்.. பூரிப்பு..!!

ரொம்ப நல்ல கதை சிவா அண்ணா..!

எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம் இப்படித்தான் நடந்தது.. ஆனால்.. மதம் மாறி.
காதலிக்கும் போதே... அவரின் மதத்தில் ஏற்பட்ட பற்றால்.. அப்படியே மாறிவிட்டிருந்தார்...! திருமணத்தின் போது ஜஸ்ட் மாறினது உலகத்துக்கு தெரியப்படுத்த அவ்வளவே..!

இந்த மாதிரி வர்ஷாக்கள் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்..!! மதச்சாயம் பூசத் தேவையில்லை.. ஆனால் ஒருவரை அவர் சுயம் மாறாமல் ஏற்கப் பழக வேண்டும்.. இந்த பாயிண்ட் டச்சிங் அண்ணா..!!

எப்படித்தான் இப்படி அசத்துறீங்க..!! நிஜமாவே ஒரு அவார்டு கொடுக்கனும்..

மன்றத்தில் இப்படி தொடர்ந்து நல்ல கதை/பதிவுகள் எழுதுபவர்களுக்கு ஏதும் விசேடமாக விருது வழங்கி புதிய பெயரில் பட்டம் வழங்கலாமே...!!

சிவா.ஜி
24-06-2008, 05:14 AM
இதயம் சொன்ன கோணத்திலும் பார்க்கலாம்.

காதலில் எப்படி சுயநலம் இருக்கக்கூடாதோ அதேபோலத்தான் கட்டாயமும் இருக்கக்கூடாது. காதலிக்கும் காலம் வரை அவளை வர்ஷாவாகப் பார்த்தவன் கல்யாணத்துக்கு மட்டும் ரோஸ்லினாக்க முயல்வது காதலுக்கு காட்டும் மரியாதையா?

இந்த செயலைத்தான் வர்ஷா விரும்பவில்லை. அவனுக்காக எத்தனையோ செய்தவள் மதம் மாறுவதையும் செய்திருப்பாள். அதை அவளே சொல்லவும் செய்கிறாள். ஆனால் அவளுடைய கேரக்டர்படி கட்டாயப்படுத்துவது பிடிக்கவில்லை. காதலிக்கும்போது மட்டும் தெரியவில்லையா அவள் வேறு மதம் என்பது? இது அகங்காரமோ ஆணவமோ இல்லை. சுயமரியாதை. அது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை. நான் சொல்ல வந்தது அதைத்தானே தவிர மதம் மாறுவது என்பது பிரச்சனையே இல்லை. மேலோட்டமாகப் படித்து தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இளைய சமுதாயம் இன்னும் ஆழமாய் யோசிப்பதால்தான் அதை தெளிவான சிந்தனை என்று எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் சுயநலம் என்று எதுவுமில்லை. இவை உணர்வுகள் சம்பந்தப்பட்டது. நீங்கள் சொல்லும் அனைத்து காதல் இலக்கணமும், கண்மூடித்தனமான காதலுக்குத்தான் பொருந்தும். ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
24-06-2008, 05:22 AM
இந்த மாதிரி வர்ஷாக்கள் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்..!! மதச்சாயம் பூசத் தேவையில்லை.. ஆனால் ஒருவரை அவர் சுயம் மாறாமல் ஏற்கப் பழக வேண்டும்..

கருவை அழகாகப் புரிந்துகொண்டு அளித்த அருமையான பின்னூட்டம். பூ....இங்கு மதம் முன்னிலைப் படுத்தப்படவில்லை. அவளுடைய சுயம்தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால் வர்ஷா கர்வம் பிடித்தவள் அல்ல. தன் உணர்வுகளுக்கு மதிப்பு கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஒரு பெண். அவள் காதலுக்கு செய்யும் மரியாதையை செய்துவிட்டாள்..ஆனால் சார்லஸ் கல்யானம் என்று வந்தபோது சராசரி கணவனாக மாறிவிட்டான். அதைத்தான் அவளால் ஜீரனிக்க முடியவில்லை.

உங்க எல்லோருடைய கொட்டுகளும், ஷொட்டுகளும்தான் எனக்கு அவார்ட். பிறகு தனியாக எதற்கு? மிக்க நன்றிம்மா.

இதயம்
24-06-2008, 05:34 AM
இதில் சுயநலம் என்று எதுவுமில்லை. இவை உணர்வுகள் சம்பந்தப்பட்டது. நீங்கள் சொல்லும் அனைத்து காதல் இலக்கணமும், கண்மூடித்தனமான காதலுக்குத்தான் பொருந்தும். ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது.

நான் காதலர்களில் வர்சாவை மட்டும் குற்றப்படுத்தவில்லை. சம்பந்தப்பட்ட இருவரையுமே சொல்லியிருக்கிறேன். காதல் உணர்வுக்கு ஆட்பட்டவர்கள் விட்டுக்கொடுப்பதில் தயங்கமாட்டார்கள், தயங்க கூடாது. அவன் மட்டும் அவளை செய்யச்சொல்வது ஏன்..? அவள் அவன் விருப்பப்படி மாறத்தயங்குவது ஏன் என்ற கேள்விகள் அவர்கள் காதலின் அஸ்திவாரத்தை உலுக்குபவை. இந்த பிரச்சினை வரும் என்பதை அறியாமலேயே காதலை தொடங்கியிருந்தால் பொழுது போக்குக்காக காதலிக்க தொடங்கினார்களா..? அல்லது நம் நம்பிக்கை படி தன் இணை நடக்கும் என்ற நம்பிக்கையா..? ஆனால், அந்த நம்பிக்கையும் வெற்றியடையவில்லை. அதனால் தான் அந்த காதல் வெற்றியடையாமல் சரிந்தது.

காதலின் இலக்கணங்கள் என்று நான் சொன்னவற்றை சொல்லிவிட்டு பிறகு அது கண்மூடித்தனமான காதல் என்று சொல்லியிருப்பது முரண்பாடு. காதலில் இருவருக்குமிடையேயான காதலுக்கு மரியாதை என்பது அத்தனை அவசியமா..? ஏட்டுச்சுரைக்காயா இது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அது உண்மையென்றால் அதுவும் கறிக்கு உதவுகிறது... பலர் வாழ்க்கையில்..!!! (உதா. அறிஞரின் நண்பர்) கற்பனைகளை விட அனுபவங்கள் என்றும் மதிப்பு மிக்கவை.. உண்மையானவை..!!

என் குறை தீர்க்க, என்னை கவரும் இனிய கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்..!! நன்றி..!!!

ஆதவா
24-06-2008, 05:46 AM
காதல் கதை என்றாலே எனக்கு மிகவும் பிடித்தமானது.. கதையில் இளமையும் காதல் சீண்டல்களும் இருக்குமல்லவா.

அப்படி ஒரு இளமை மாறாத கதை. கதையின் ஆரம்பத்தை விடுங்கள், கதையின் இறுதிதானே கருவைத் தாங்கிப் பிடிக்கும் வயிறு. மதத்தை மாற்றிவிடு என்று அவன் இயல்பாகக் கூறுவது அவன் சொல்வதை அவள் செய்திடுவாள் என்ற நம்பிக்கையில்,. அவளோடுண்டான புரிதலில் சற்று சருக்கல் அவனுக்கு. உண்மையில் மத மாற்றம் அவனுக்கு சாதாரணமாக இருந்திருக்கக் கூடும். அல்லாவிடில் இத்தனை சாதாரணமாக வர்சாவிடம் கேட்டிருக்கமுடியாது.

இன்னொன்று கவனிக்கவேண்டியது. பொறுக்கியாக இருந்தவனையே மாற்றியவள் எனும் போது, அதிலும் எல்லா பழக்கங்களையும் தன்னகத்தே வைத்தவனையே நல்ல மனிதனாக மாற்றீயவள் இந்த மத எண்ணத்தை நிச்சயம் எளிதில் மாற்றியிருக்க முடியும். அவளின் குடும்பத்தாரோடு பேசியிருக்கலாம். கதை அந்தளவோடு முடிந்துவிடுவதால் யதார்த்த நிலைக்குக் கொண்டுவந்து விவாதிக்க முடியாது..

ஒருவேளை சார்லஸ் சொல்வதைப் போல பேர்ல என்ன இருக்கு என்று சொன்னதும், வர்சா திருப்பி ஒரு ரிவிட் அடித்திருக்கலாம். நீயும் ஒரு ஆதவனா (?) மாறிவிடு என்று சொல்லி ஆப்பு வைத்திருக்கலாம்.. வர்சாவின் புத்திச்சாலித்தனத்திற்கான வாய்ப்பாக அந்த காட்சி இடம்பெற்றிருக்க முடியும்.

இயல்பான கதையோட்டம். வசனங்கள் மிக யதார்த்தமாக ஒட்டி வருகிறது. சென்ற கதையில் (ரேசன் அரிசி) ஒருவித சோகத்தைச் சொன்ன போதும் சரி, இப்போது ஒரு அறிவுரையைச் சொல்லும்போதும் சரி, தேர்ந்த கதாசிரியரின் திறமைகள் பளிச்சிடுகின்றன.

அவளின் கர்வம்? இல்லை. அது கர்வமில்லை. அவள் ஆணுக்கு நிகராகப் பேசுகிறாள். அது கர்வமாகத் தெரிகிறது.. அதேசமயம், (கர்வமில்லா) ஒத்த வசனங்களாக இருந்தால் அதில் புதுமை இருக்கவும் வாய்ப்பில்லை.. இன்றைய காலகட்ட காதல் இப்படி இருக்கவே அதிக வாய்ப்புகள்...

மதம் கடந்தது காதல். அப்படி ஒரு மத வேறுபாடுகள் ஆரம்பத்திலேயே தெரிவதானால், அக்காதலைத் தூக்கி எறிவதில் தவறே இல்லை...........

இதயம்,

மனசாட்சிக்குத் துரோகமாக எதை நினைக்கிறீர்கள்? ஒரு காதலியோ காதலனோ தனது காதல் நினைவுகளை அழிக்காமல் தன் கணவனோடோ, மனைவியோடோ வாழ்தலே மனசாட்சிக்குத் துரோகமான ஒன்றாகக் கருதப்படும். ஒருவரைக் காதலித்துவிட்டு மற்றவரைக் கலியாணம் முடித்தால் அது துரோகம் ஆகிவிடுமா என்ன? மனத் தூய்மை மட்டுமே ஒரு மனிதனின் தூய்மை... மனத்தெளிவிருந்தால் மனதில் நல்லெண்ணம் இருந்தால் ஒரு வேசியைக் கூட திருமணம் முடிக்கலாம்...

சிவா.ஜி
24-06-2008, 06:13 AM
ஏட்டுச்சுரைக்காயா இது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அது உண்மையென்றால் அதுவும் கறிக்கு உதவுகிறது... பலர் வாழ்க்கையில்..!!! (உதா. அறிஞரின் நண்பர்) கற்பனைகளை விட அனுபவங்கள் என்றும் மதிப்பு மிக்கவை.. உண்மையானவை..!!

மன்னிக்கவும் இதயம். ஏட்டுச்சுரைக்காய என்று நான் குறிப்பிட்டது...புதினங்களில் காண்பிக்கப்படும் காதல் தியாகங்கள், ரத்தக் கையெழுத்து, யுகங்களாக காத்திருப்பது...இத்யாதி...இத்யாதிகளை. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுமளவுக்கு எழுதாதது என் தவறுதான்.

நீங்கள் உதாரனம் காட்டிய அறிஞர் அவர்களின் நன்பர் குடும்பத்தையே எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கும் இந்தக் கதையில் வந்ததைப்போன்ற ஒரு சந்தர்ப்பம் உண்டாகியிருக்கும். அன்று அவரும், அவருடைய மனைவியும் அவரவராகவே வாழ்வது என்று முடிவெடுத்ததால் இன்று ஆண்டுகள் கடந்தும் நல்ல இல்லறம் நடத்த முடிகிறது.

அதே சமயம்...காதலனின் விருப்பத்துக்கேற்ப காதலியோ, அல்லது காதலியின் விருப்பத்தால் காதலனோ மதம் மாறி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக குடும்பம் நடத்துபவர்களும் அநேகம்.

நான் இந்தக் கதையில் சொல்லியிருப்பது, அவளது விருப்பத்தை ஒரு சம்பிரதாயத்துக்காவது கேட்காமல், அவளைக் கலந்தாலோசிக்காமல், ஏற்கனவே முடிவெடுத்துவிட்டு அதை அறிவிக்கும் விதமாக அவன் பேசியதுதான் அவளைக் காயப்படுத்தியது. அதுதான் அவளை அந்த முடிவெடுக்கும்படி தூண்டியது. இதற்கே இப்படி செய்தவன் நாளை என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பானா? என்ற ஐயம் விளைந்த காரணத்தாலும், காதலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் ஆனால் சுயத்தை விட்டுக்கொடுத்து, அதனால் இல்லறத்தில் கிடைக்கப்போகும் நிம்மதியையும் விட்டுக்கொடுத்து....அப்படி என்ன அந்த வாழ்க்கை அவசியம்? என்று யோசித்ததில் எடுத்த முடிவு அது.

கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி இதயம்.

சிவா.ஜி
24-06-2008, 06:22 AM
அன்பு ஆதவா...எப்போதும் போல அருமையான அலசலுடன் உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் சொன்னதைப்போல அவளும் அவனுக்கு ரிவிட் அடித்திருக்கலாம்...ஆனால் அதை அவள் செய்ய விரும்பவில்லை என்று அவளே சொல்கிறாளே. அதே போல அவள் நிச்சயம் ஒத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் முடிவெடுத்தவனுக்கு, இத்தனைக்காலம் பழகிய காதலியின் குணத்தை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லையே? இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது இதுதான் நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது என்ற திணிப்பைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

விளவு...பிரிவு. மனதில் வலி உண்டாக்கிய நினைவுகளை களைந்துவிட்டு புது வாழ்க்கை தொடங்கத்தான் இப்படிப்பட்ட சுயசார்பு பெண்கள் நினைப்பார்கள். அதனால் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் அவர்களுக்கு எந்த உறுத்தலும் இருக்காது. நீங்கள் சொன்னது மிகச் சரி.
மிக்க நன்றி ஆதவா.

aren
24-06-2008, 09:46 AM
அருமையான கதை. நானும் கல்யாணத்திற்காக மதம் மாறுவதை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இது அவரவர்களின் சொந்த விஷயம்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் அவர் கிருஸ்தவர், தமிழ்ர். அவர் குஜாராத்தைச் சேர்ந்த ஒரு பிராமின் பெண்னை மணந்துள்ளார். அவர்கள் இல்லத்தில் இரண்டு மதங்களுமே உண்டு. இருவரும் இரண்டு பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள். அந்தப் பெண் இன்றும் நெற்றியில் திலகம் வைத்திருக்கிறார். அந்தப் பெண் சுத்த சைவம், இவர் அசைவம். வீட்டில் தினமும் இரண்டுவிதமான சமையல்கள். அந்த இரண்டு சமையலையும் செய்பவர் இந்தப் பெண்தான்.

இருவரும் கல்யாணமாகி கடந்த 18 வருடங்களாக மிகவும் அன்போடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நான் அவர்கள் வீட்டில் பலமுறை உணவு உண்டிருக்கிறேன். அருமையான குடும்பம் அவர்களுடையது.

காதலில் மதம் ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

இந்தக் கதையில் சார்லஸ் செய்ய நினைத்தது தவறு. அவர் அவருடைய பெற்றோர்களை எதிர்த்து போராடியிருக்கவேண்டும். அல்லது மதம் மாறும் விஷயத்தை வர்ஷாவிடமே விட்டிருக்கவேண்டும்.

சிவா.ஜி
24-06-2008, 11:57 AM
காதலில் மதம் ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

இந்தக் கதையில் சார்லஸ் செய்ய நினைத்தது தவறு. அவர் அவருடைய பெற்றோர்களை எதிர்த்து போராடியிருக்கவேண்டும். அல்லது மதம் மாறும் விஷயத்தை வர்ஷாவிடமே விட்டிருக்கவேண்டும்.
என்னுடைய கருத்தும் இதேதான் ஆரென். நீங்கள் சொல்வதுபோல சார்லஸ் செய்தது தவறு. வர்ஷாவுடன் கலந்தாலோசிக்காமல் அவனாக எடுத்த முடிவுதான் வர்ஷாவின் இந்த நிராகரிப்புக்குக் காரணம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் பார்த்து மகிழ்ந்தேன் ஆரென். மிக்க நன்றி.

SivaS
25-06-2008, 10:23 AM
நச்சென்று நடப்பை நயம்பட உரைத்தீர்

MURALINITHISH
25-06-2008, 11:28 AM
மதங்களை தாண்டி மனதை நேசிக்க தெரிய வேண்டும்
அழகான உங்கள் கதை இதை உணர்த்தி விட்டது

சிவா.ஜி
25-06-2008, 11:49 AM
பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி சிவா.

முரளிநிதிஷ் உங்கள் முதல் பின்னூட்டம் என்கதைக்கு. கதை ரசித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி.

கண்மணி
01-07-2008, 01:23 PM
மூன்று வருடத்துக்கு முன் சரியான பொறுக்கி. நிலையான வேலை என்று எதுவுமில்லை. இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்து, அந்தக் கல்லூரியில் கற்றுக் கொண்ட எல்லா கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையாகியிருந்தான்.

வர்ஷாவும் அவனும் அடுத்தடுத்த குடியிருப்புக் கட்டிடங்களில் இருந்தவர்கள். பள்ளித் தோழர்கள். இருவரது தந்தைகளும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். அந்த நிறுவனத்தின் குடியிருப்புப் பகுதிதான் அது. பள்ளிப் படிப்பு முடிந்து வர்ஷா வேறு கல்லூரியிலும், சார்லஸ் வேறு கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாலும், அவனுடைய மூன்றாமாண்டிலிருந்து மாறிவிட்ட அவன் போக்கை அவளும் கவனித்துக்கொண்டுதானிருந்தாள்.

கவலைப் பட்டாள். நன்பனின் சீரழிவு அவளுக்கு வேதனையாக இருந்தது. அடிக்கடி அவனைச் சந்தித்து பேசினாள். எதையும் காதில் போட்டுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை. அவளை பிடித்துத் தள்ளினான். கெட்ட வார்த்தைகளால் திட்டினான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். இவனை எப்படியும் மாற்றிவிடவேண்டுமென்ற உறுதி எடுத்துக்கொண்டாள்

இத்தனை திருத்திய பின் இன்னொன்றில் திருத்த என்ன தயக்கம் சிவாஜி..?

இதுதான் காதலி மனைவியாகும் சூட்சமமோ?

அன்னை தந்தையரிடம் திருமணம் பற்றிப் பேசியது தவறா?
அவர்கள் தங்கள் இச்சையைச் சொன்னது தவறா?

அவன் செய்த தவறென்ன எனப் பார்க்கையில் அவளிச்சை என்ன என அறிய முயற்சிக்காததும், அவனாய் அவள் ஒப்புக் கொள்வாள் எனக் கற்பனை செய்ததும்தான் இல்லையா?

எத்தனையோ தவறுகளைப் பொறுமையாய் திருத்திய பின், இந்தத் தவறைப் பெரிது படுத்தி தூக்கி எறிவது என்பது குணப்பிரிகை அல்லவா அண்ணா?

சிவா.ஜி
01-07-2008, 01:36 PM
[COLOR="Magenta"]
இத்தனை திருத்திய பின் இன்னொன்றில் திருத்த என்ன தயக்கம் சிவாஜி..?

இதுதான் காதலி மனைவியாகும் சூட்சமமோ?

அன்னை தந்தையரிடம் திருமணம் பற்றிப் பேசியது தவறா?
அவர்கள் தங்கள் இச்சையைச் சொன்னது தவறா?

அவன் செய்த தவறென்ன எனப் பார்க்கையில் அவளிச்சை என்ன என அறிய முயற்சிக்காததும், அவனாய் அவள் ஒப்புக் கொள்வாள் எனக் கற்பனை செய்ததும்தான் இல்லையா?

அவன் செய்ததும், எதிர்பார்த்ததும் தவறில்லை கண்மணி. நீங்கள் கடைசியாய் சொன்னதுதான். அவன் பொறுக்கியாய் இருந்தபோதுகூட அவனை வெறுக்காதவள்....இந்த முடிவுக்கு வரக்காரணம்....அவனுடைய எதிர்பார்ப்பும், தன்னிச்சையான முடிவெடுத்தலும்தான்.

அதாவது....அவனுக்கு மிக சாதரணமான விஷயம் அவளுக்கு பெரிதாகப்பட்டது. இதையெல்லாமா அவளிடம் பேசுவது? கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற உதாசீனத்தைத் தான் அவள் விரும்பவில்லை.

இப்படி சொல்றாங்க....உன்னோட கருத்தென்ன என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தாள் யோசித்திருப்பாள். ஏனென்றால் அவள் சுயத்தில் அதிக அக்கறை கொள்பவள். எதற்காகவும் அதனை விட்டுக்கொடுக்க விரும்பாதவள். அவள் கேரக்டர் அப்படி. என்ன செய்வது.

கண்மணி
01-07-2008, 01:52 PM
அதாவது கெட்டவனாய் இருக்கும்பொழுது தப்பு செய்தால் தப்பில்லை
நல்லவனாய் இருக்கும் பொழுது தப்பு செய்வது மாபெரும் தப்பு.
அப்படித்தானே!!!

அவள் சுயத்திற்கு மதிப்பளிப்பவள் சரி. ஆனால் அந்தச் சுயத்தின் விருப்பம் தானா அத்தனை அவமானங்களையும் சகித்துக் கொண்டு அவனைத் திருத்தியது? அந்த சுயம் வென்ற பரிசா அவன் காதல்? அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும்.

அப்படியானல் அவனைத் திருத்தியது அவளது அன்பா அல்லது நான் திருத்திக் காட்டுகிறேன் என்று மார்தட்டிய சுயமா?

காதலர்களைத் திருத்தும் பெண்கள் அக்காதலர்களைக் குழந்தைகளாகவே காண்பதைக் கண்டிருக்கிறேன். வழிதவறிய வெள்ளாட்டைத் தோளில் சுமக்கும் மேய்ப்பன் போல அன்புக்காதலிகள் தம் காதலர்களை நடத்துகின்றனர்..

உதாசீனம் : மனைவியர்களின் கோபத்திற்கு முழுமுதற்காரணம். (தெரிந்து கொள்ளுங்கள்)

அன்று அவன் அவளின் அன்பை உதாசீனம் செய்த போது அவளுக்கு வலிக்கவில்லை. ஏனென்றால் அவன் நண்பன்.

இன்று அவன் (தெரிந்தோ, தெரியாமலோ) உதாசீனம் செய்த போது வலிக்கிறது. ஏனென்றால் இவன் காதலன்.

அன்றைய நண்பன் வாழ்க்கை முழுவதும் உடனிருப்பான் என்று சொல்ல முடியாது., ஒரு கமிட்மெண்ட் இல்லை.

இன்றைய காதலுக்கு கடமை இருக்கிறது. அதனால் அவனது உதாசீனம் வலிக்கிறது.

ஆக இங்கே சுயத்தினால் கோபமா?
சுயம் தொலைந்ததினால் கோபமா?
அங்கு தோழி.. இங்கு காதலி,,,
அங்கு எதிர்பார்ப்பில்லை, இங்கு எதிர்பார்ப்பு இருக்கிறது,,
அங்கு அவள் எஃகுக் கோட்டை. இங்கு அனிச்சம்

அவள் அவனை மாற்றினாள். அவளும் மாறிவிட்டாள்.

:D:D:D

சிவா.ஜி
01-07-2008, 02:15 PM
அடாடா......அருமையான விளக்கம். மிகத் தெளிவாக கூறிவிட்டீர்கள் கண்மணி. நமக்கெல்லாம் இந்தளவுக்கு சொல்ல முடியாதுங்க. அதான் சில சமயம் வடிவேலு மாதிரி.....இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு சொல்ல வேண்டியதா இருக்கு. நன்றி கண்மணி.

mukilan
01-07-2008, 02:20 PM
உதாசீனம் : மனைவியர்களின் கோபத்திற்கு முழுமுதற்காரணம். (தெரிந்து கொள்ளுங்கள்):D:D:D
டிப்பும்மா டிப்பு:).மதி நோட் திஸ் பாயிண்ட். எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக இம்மன்றம்கிற நல்ல நோக்கம்தான்.

கண்மணி
01-07-2008, 02:54 PM
அப்படியில்லை சிவாஜி. ஒருவனைத் திருத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்த பொழுது அலட்சியங்கள் வலிக்கவில்லை.

அதாவது இலட்சியம் அலட்சியங்களை அலட்சியம் செய்தது.

இலட்சியம் இல்லாத பொழுது அலட்சியங்கள் வலிக்கின்றன.

அதாவது இலட்சியம் உள்ளவரை புதுமைப் பெண். அதன்பின்....

பெண்.

lolluvathiyar
09-07-2008, 08:18 AM
அருமையான கதை சிவா ஜி. அவசரத்தில் அறிவில்லாமல் மதம் பார்க்காமல் காதலித்தார். இறுதியிலாவது புத்தி வந்து பிரிந்து விட்டார்களே. இது உன்மையில் பொருந்தா காதல் என்று அவர்கள் புரிய லேட் ஆகி விட்டது.

காதல் உருவாகும் போதே வேறு மதமாக இருந்தால் அதோடு விட்டு விட வேன்டும். சும்மா ரிஸ்க் எடுக்கெறேன் என்று சமூகத்தில் பந்தா காட்டுவதற்க்காக காதல் செய்து திருமனம் செய்து தோல்வியில் வாழ்வது முட்டாள்தனம். காதலுக்கும் திருமனத்திற்க்கும் வசதியோ தகுதியோ தேவை இல்லை. காதலுக்கு வேன்டுமானால் மதம் தேவை இல்லை ஆனால் திருமனம் செய்து வாழ்கை நடத்துவதற்க்கு மதம் அவசியம். இந்த இருவர் உன்மையாக காதலித்தவர்கள் என்றால் இறுதிவரை காதலர்களாக மட்டுமே இருப்பது நல்லது கனவன் மனைவியாக இருக்க கூடாது. வெவ்வேறு மதங்களில் ஏற்ற தாழ்வு இல்லை ஆனால் வெவ்வேறு இனம் என்பதை மறக்க கூடாது.


ஒருவேலை ஏதோ ஒரு உனர்ச்சிவயபட்டு காதலித்து மறைக்க/மறக்க/மறுக்க முடியாமல் திருமனம் செய்ய வேன்டிய நிர்பந்தம் இருக்கும் பட்சத்தில் உங்கள் கதாநாயகிதான் மதம் மாறுவதில் தவறில்லை. ஆன் ஆதிகத்தால் இப்படி பேச வில்லை. மனைவி தான் கனவன் மதத்துக்கு கன்டிப்பாக போக வேன்டும். குழந்தைகள் நிச்சயம் ஒரே மதத்திராக தான் வாழ வேன்டும்.

ஆனால் மதம் மாறுவதை ஒரு கன்டிசனாக போடுவது நிச்சயம் தவறு.

சிவா.ஜி
09-07-2008, 11:13 AM
உண்மைதான் வாத்தியார். புரிந்துணர்வு உள்ல காதலில் கண்டிஷன்கள் இருக்கக்கூடாதுதான். ஆனால் கண்மணி சொன்னதுபோல மனைவி என்று வரும்போது தனித்து சிந்திக்கிறாள். அவள் சுயத்தை இழக்க மறுக்கிறாள். அதுவும் சரிதானே.
நன்றி வாத்தியார்.

சுகந்தப்ரீதன்
10-07-2008, 11:32 AM
பதினோராம் வகுப்பு படிக்கும்போது இதே போன்ற ஒரு கதையை ஏதோ ஒரு இதழில் படித்ததாக எனக்கு ஞாபகம்..!! எழுதியவர் பெயர் நினைவில் இல்லை..!! அந்த கதையில் மதமில்லை..மாறாக இந்த சுயம் இடம் பெற்றிருந்தது..!!

அதாவது, கல்லூரில் ரவுடியாக படிக்காமல் திரியும் ஒருவன் முதலாமாண்டு மாணவி ஒருத்தியை ரேக்கிங் செய்கிறான்..!! அதில் அவள் மிரண்டு குழந்தை போல அழுகிறாள்.. அது அவனை ஏதோ செய்யவும் அன்றிரவு முழுதும் தூங்காமல் குற்ற உணர்ச்சியால் துடிக்கிறான்..!!

அடுத்த நாளே அவளிடம் சென்று தன்னை மன்னித்து விடுமாறு கேட்கிறான்..!! அப்போது அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியபோதே நீ திருந்திவிட்டாய்.. இனி நான் உன்னை எதற்கு மன்னிக்க வேண்டும் என்கிறாள்..!! அதன்பிறகு இருவரும் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்..!!

அப்போ ஒருமுறை போதையில் திரிந்த அவனை திருத்துவதற்க்கு அவ ஒரு டயலாக் விடுவா.. அது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்குது சிவா அண்ணா..!!

"சிலநேரங்கள்ல நிழலை நிஜமா நினைச்சி அதுவே சந்தோசமா இருக்குன்னு நாம அங்கேயே தங்கிடுறோம் சிவா..(அந்த கதை நாயகன் பேரு இதுதாண்ணா.).. ஆனா கொஞ்ச காலம் கழிச்சி பார்த்தா அது நிழலில்லைங்கிறங்கற நிஜம், நம்மை நீருபூத்த நெருப்பா சுடும்..மேல இருக்குற சாம்பல் தாண்டி உள்ள இருக்குற உண்மை சுடும்..!! ஆனா அப்ப செய்யறதுக்கு நம்ப கையில எதுவுமே இருக்காது சிவா.. கூட இருந்த எல்லோரும் வாழ்க்கையில முன்னாடி போயிருப்பாங்க..நாம மட்டும் பின் தங்கியிருப்போம்..!! நான் உன்னை திருந்த சொல்லவில்லை.. யோசிக்க சொல்லுறேன் சிவா.. உயர உயர பறக்குற ஊர்குருவிக்கூட தான் வாழுற பூமியை மறக்காம தன்கூட்டை பூமியை நோக்கித்தான் கட்டுது..!! நாம ஆறறிவுள்ள மனுசங்க சிவா.. நமக்குன்னு ஒருசுயம் இருக்கு.. அதைநாம் எப்பவும் எதற்காகவும் இழந்துடக்கூடாது சிவா..!! எனக்காக இல்லைன்னாலும் உன்னை நம்பி இருக்குறவங்களுக்காகவாது உன்னை நீ மாத்திக்கனும்..நீ மாறுவங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு..!!"

அவள் இப்படி கூறியதும் அவனுக்கு தன்னோட சுயம் புரிய ஆரம்பிச்சது.. தன்னோட தவறுகளை திருத்திக்கிட்டு நல்லவனா வலம் வர ஆரம்பிச்சான்..!! அவனை கண்டால் முகம் சுளிப்பவர்கள் அதன்பிறகு அவனுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்கள்..!! அவனது தோழியும் காதலியாக மாறிவிட்டிருந்தாள்..!!

அதன்பிறகு கல்லூரி முடித்து கல்யாண பேச்சு வந்தபோது அவளின் பெற்றோர் அவளுக்கு மணம் முடிக்க நினைக்கையில் அவள் தன் மனதுக்கு பிடித்தவனை பற்றி பெற்றோரிடன் சொல்கிறாள்..!! அவர்களும் சரி என்று ஒத்துக்கொள்கிறார்கள் ஒற்றை உத்தரவுடன்..!! அதாவது "நீ எங்களுக்கு ஒரே பெண் ஆகையால் உன்னை கட்டிக்கிறவன் தன்னோட வீட்டை விட்டுட்டு உன்னோட நம்ப வீட்டுக்கு வந்துடனும்னு சொல்கிறார்கள்.. அவளுக்கும் அவர்களின் வேண்டுகோள் சரியாக படவே அதை சிவாவிடம் தெரிவித்து தன்னோடு வந்துவிடுமாறு வற்ப்புறுத்துகிறாள்..!! அதை கேட்ட அவன் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறான்..!!

அதன்பிறகு அன்றிரவு அவளுக்கு கடிதம் எழுதுகிறான்.. அதில் தன்னோட காதலை பற்றி ஆரம்பம் முதல் விவரித்து, இறுதியில் "நான் சுயமின்றி திரிந்துக் கொண்டிருந்த காலத்தில் நீ என்னிடம் இப்படியொரு வேண்டுக்கோளை விடுத்திருந்தால் நான் ஒருவேளை ஒப்புக்கொண்டிருக்க கூடும்..!! ஆனால் இன்று என்னால் அதை செய்ய இயலாது..!! அதற்கு காரணம் நீதான்.. சுயமின்றி திரிந்த எனக்கு, என் சுயத்தை உணர கற்றுக்கொடுத்தவள் நீ.. அதை எந்த கணத்திலும் இழக்காமலிருக்க என்னை வலியுறுத்தியவள் நீ..!! அப்படிபட்ட நீயே இன்று என் சுயத்தை இழக்க சொன்னாலும் அதை செய்ய என்னால் இயலாது..!! என்னை மன்னித்துவிடு..!! இன்று நான் என் சுயத்தை மிகவும் நேசிக்கிறேன்.. அதை உணரவைத்த உன்னை அதைவிட அதிகமாகவே நேசிக்கிறேன்..!! என்று எழுதி முடித்திருப்பான்..!!

சிவா.ஜி
10-07-2008, 12:02 PM
அசத்தலா இருக்கு சுகந்த். அவனோட கடைசி டயலாக் க்ளாஸ். சரிதானே...சுயத்தைக் கற்றுக்கொடுத்தவளே அதை விட்டுவிடச் சொன்னால் எப்படி. அதே போல அவனுக்கு சுயத்தை உணர்த்த அவள் பேசும் வசனங்களும் அருமை.

பதிவிட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி சுபி.

சுகந்தப்ரீதன்
10-07-2008, 12:17 PM
பதிவிட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி சுபி.ஆஹா.. யாரோ எழுதுனதுக்கு எனக்கு நன்றியா..??

ம்.ம்ம்.. கதை எடுத்து சொல்லியவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்து போய்ட்டேன் அண்ணா..!! உங்களின் அருமையான எழுத்தோட்டத்திற்க்கு எனது வாழ்த்தும் பாராட்டும் சிவா அண்ணா..!!

உங்கள் கதையில் வரும் வசனங்கள் எல்லாமே அப்படியே இன்றைய இளைய தலைமுறையில் நடைமுறையில் உள்ளவை..!! ஆனா அது எல்லாம் உங்களுக்கு எப்படி அத்தனை துல்லியமா தெரிகிறது என்பதை மட்டும் இன்னும் என்னால புரிஞ்சுக்கவே முடி....ல்லண்ணா..!!:icon_rollout:

சிவா.ஜி
10-07-2008, 12:30 PM
இளைய தலைமுறையைக் கூர்ந்து கவனிப்பதால் என்னால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது சுபி. அது மட்டுமல்ல...நிறைய படிக்கிறேன். தேவையானதை கிரகித்துக்கொண்டு தேவைப்படும்போது உபயோகிக்கிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் எந்த கதாபாத்திரத்தை வடிவமைக்கிறேனோ அவர்களாய் இருந்து யோசிப்பதால் அவர்களை ஓரளவுக்கு சரியாக காண்பிக்க முடிகிறது.

கடைசியில ஒரு பிட்டைப் போட்டு குசும்பைக் காட்டிவிட்டாயே சுகந்த்.....முடி...............ல.

நன்றிப்பா.

samuthraselvam
18-04-2009, 10:06 AM
சுய மரியாதைக்காக காதலை தியாகம் செய்யும் வர்ஷா மிளிர்கிறாள். காதிளிக்கும் போது மட்டும் காதலியின் எண்ணத்தையே ஒத்துப்போகும் காதலன் கவனாகும் போது மட்டும் மனைவி மீது தன் எண்ணத்தை திணிப்பது எந்த விதத்தில் நியாயம்..?

ஒரே நிமிடத்தில் தூக்கி எரியும் காதல் எத்தனை வலியை ஏற்ப்படுத்தும் என்று தெரிந்தும், காதலை துறப்பது என்பது அந்தப் பாத்திரத்தின் மனவலிமையை உணர்த்துகிறது...

பாராட்டுக்கள் அண்ணா...

சிவா.ஜி
19-04-2009, 07:42 AM
சுயம் இழக்க நேரும்போது காதலும் துச்சமாகிவிடுகிறது. வர்ஷா..தைரியசாலி மட்டுமல்ல...சுய சிந்தனையுள்ளவள்.

நன்றி லீலும்மா.