PDA

View Full Version : வியர்வைத் துளிகள்



நாகரா
21-06-2008, 01:45 PM
விடியலின்
ஈர விதைகள்

கனவுப் படகுகளை
யதார்த்தக் கரை
சேர்க்கும் நதிகள்

முயற்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
இடையே உள்ள தூரம்

வாழ்க்கை என்னும்
கவிதை எழுத
மெய்
தன்னிலிருந்தே
தயாரிக்கும்
மை

உழைப்பு உளி
உடம்பைச் செதுக்கும் போது
சிதறும் சில்லுகள்

வசந்தப் புரட்சியை
வரவழைக்க
உதித்த
ஒரே புள்ளி கொண்ட
ஆய்த எழுத்துகள்

உடம்பு வில்
உழைப்பில் வளையும் போது
சோம்பலைக் கொல்லும்
அம்புகளைத்
தானே
தயாரித்துக் கொள்கிறது

உயிரின் முடக்கத்துக்கு
உடம்பு இடும்
முற்றுப் புள்ளிகள்

உழைப்புச் சூட்டில்
உடம்பு உலை
உற்பத்தி செய்யும்
நீர்த் துளிகள்

பென்ஸ்
24-06-2008, 02:40 AM
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்குகள்...

நாகரா...
மனிதன் இருக்கும் மனநிலைக்கு ஏற்ப்ப தன் மனதில் எழும் கேள்வியை தன் திறமையால் கவிதையாய் கொடுக்கிறான்....
ஆனால்... தன் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பல முகம் கொடுத்து பல நிலையில் இருந்து சிந்திக்க எத்தனை பேரால் முடியும் என்பது தெரியாது...
அப்படியே சிந்தித்தாலும் அதை வார்த்தைகளால் இவ்வளவு அருமையாக கொடுக்க உங்களால் நிறையவே முடியும்....

உங்கள் கவிதைகள் இதே சாயலில் நிறைய வருவது போல் ஒரு உணர்வு.... இந்த சாயலுக்கு பழக்கப்பட்டு போகிறீர்களோ...!!!???

மதுரகன்
24-06-2008, 05:12 AM
அற்புதமான கவிதை நாகராஜ்..
பென்ஸ் அவர்களே ஹைக்கு பற்றி கூறினீர்களே ஹைக்கு இற்கு இலக்கணம் என்னவென்று கூற முடியுமா ?

இளசு
24-06-2008, 06:15 AM
பென்ஸ் விமர்சனத்தை முழுதும் ஆமோதிக்கிறேன்.

( நான் எழுத வந்ததை முன்னாடியே அவர் எழுதிட்டுப் போயிட்டா,
வேற என்ன நான் எழுதுவது?)

மிக அழகாக தம் பல்விதப் பார்வைகளை நாகரா அவர்கள் தரும் பாணி -அருமை!

மதுரகன்,
மன்றத்தில் ஹைக்கூ பற்றி பாரதியார் விளக்கத்தில் தொடங்கி இரு பெரிய திரிகள் இருக்கின்றன..

தேடி எடுத்துத் தர முயல்கிறேன்.

பூமகள்
24-06-2008, 06:51 AM
பனித்துளியை அடுத்து வியர்வைத் துளிகளா??!!

ஆயினும் இவற்றைச் செதுக்கிய நாகராஜன் அண்ணாவின் வியர்வைக்கு மதிப்பு அதிகமே..!!

பல கோணங்களில் யோசிக்க மிகச் சிலரால் தான் முடியும்...!! அவ்வகையில் இக்கவி.. அரிது அரிது..!!

பாராட்டுகள் நாகராஜன் அண்ணா. :)

ஆதவா
24-06-2008, 07:10 AM
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹைக்குகள்...

உங்கள் கவிதைகள் இதே சாயலில் நிறைய வருவது போல் ஒரு உணர்வு.... இந்த சாயலுக்கு பழக்கப்பட்டு போகிறீர்களோ...!!!???

நான் நென்சேன் நீ(ங்க) சொல்டே!!

கலைவேந்தன்
24-06-2008, 07:59 AM
கவிதை அருமை நாகரா அவர்களே! தங்கள் வார்த்தை நயம் மிக அருமை!

நாகரா
29-06-2008, 04:31 PM
பென்ஸ், மதுரகன், இளசு, பூமகள், ஆதவா, கலைவேந்தன், உம் பின்னூட்டங்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி பல.