PDA

View Full Version : உடைந்த வாளுடன் ஒரு சாம்ராஜ்யம்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2008, 06:32 AM
ஆறுமாத அவசரத்தில்
பாதி சதைப்பிண்டமாய்
தொப்பென்று
பூமியில் விழும் குழந்தை
உங்களுடையதென்றால்
நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்
என் மனநிலையை.
பாதிக்கவிதையில் இன்னல்கள்
வந்து தொலைக்கும் போது
அப்படித்தானிருக்கிறது எனக்கு.

வெடுக்கென்று பிடுங்கப்பட்ட
குழந்தையின் பொம்மை

பல நாள் பட்டினி
கிடந்தவனிடம்
தட்டிப் பறிக்கப்பட்ட சாதம்

ஒரு நம்பரில்
ஒரு கோடி கோட்டை விட்ட
பரிசுச்சீட்டு வாடிக்கையாளன்

இரவில் கோபித்துக்கொண்டு
திரும்பிக்கொண்ட மனைவி

இவைகளெல்லாம்
என் மனநிலையின்
பாதியென்றால்
கணக்கிட்டுக்கொள்ளுங்கள்
மீதியை

கண்ணில் விளக்கெண்ணெயிட்டு
கவனிப்பதாய் தோணும்
எப்போது பேனா பிடிப்பேனென்று
நானிருக்கும் தைரியத்தில்
வாடிக்கையாய்
ஒரு சமையல் சாமானை
மறந்து வரும் அம்மாவும்
உணவை விட அதிகமாய்
வெற்றிலை தின்று
உயிர் வாழும் பாட்டியும்
ஆக்ஸிஜனை விட அதிகமாய்
சிகரெட் புகை சுவாசிக்கும்
அப்பாவும்

நொண்டிக்குதிரையில்
உடைந்த வாளுடன்
ஒரு நோஞ்சான் படை
துணைகொண்டு
ஒரு பெரும் தேசத்தை
வென்ற படைத்தளபதியின்
மகிழ்ச்சி எழும்பும்
உள்ளத்திற்குள்
பல இன்னல்கள் தாண்டி
ஒரு கவிதை
முற்றுப்பெறும் பொழுது.

இதயம்
21-06-2008, 07:00 AM
ஆறுமாத அவசரத்தில்
பாதி சதைப்பிண்டமாய்
தொப்பென்று
பூமியில் விழும் குழந்தை
உங்களுடையதென்றால்
நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்
என் மனநிலையை.
பாதிக்கவிதையில் இன்னல்கள்
வந்து தொலைக்கும் போது
அப்படித்தானிருக்கிறது எனக்கு.


ஆஹா.. உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை ஜுனைத்..!! உங்கள் கவிதையின் சிறப்பு தலைப்பிலிலிருந்தே தொடங்குகிறது. அது தான் உங்கள் கவிதையை காண தூண்டி என்னை இங்கே கொண்டு வந்தது. நல்ல பல கவிதைகளை நான் இழந்திருக்க தலைப்பு பலவீனம் காரணமாய் இருந்திருக்கலாம். உங்கள் தலைப்பு கண்டு இங்கே வந்தால் படைப்பு என்ற பெயரில் உங்கள் கவிதையெங்கும் கருத்து மாணிக்கங்கள் சிதறி கிடப்பதை கண்டு சிலிர்த்துப்போனேன். உங்கள் கவிதைகள் இனி எங்கிருந்தாலும் இரும்புத்துகளை கவரும் காந்தமாய் என்னை இழுக்கத்தொடங்க இன்னொரு காரணமாய் அருமையான கவிதை. உங்கள் கவியில் நீங்கள் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள், சொல்லாடல், கருத்துக்கள் மிக இனிமை மற்றும் எளிமை என்பதால் மனசில் பெவிகால் போட்டு "பச்சக்" என்று ஒட்டிக்கொள்கிறது. அதிலும் குறிப்பாய் முத்தாய்ப்பாய் முடித்த இறுதி வார்த்தைகள் அருமையிலும் அருமை.!

உங்கள் கவிதையில் வேண்டுமானால் உடைந்த வாளுடன் ஒரு சாம்ராஜ்யத்துடன் இருக்கலாம். ஆனால் நீங்கள் செங்(எழுது)கோலுடன் கவி சாம்ராஜ்யத்தை ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை..!! என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உங்களுக்காக ஜுனைத்..!! :icon_b:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2008, 07:30 AM
மிக்க நன்றி இதயம் உங்கள் பதிலுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும். நீங்கள் கூறிய வாக்கு பலித்துவிட்டால் கண்டிப்பாய் ஒரு பிடி சர்க்கரையுடன் உங்களை ஏமாற்ற மாட்டேன் இதயம். பெருசா பார்ட்டி வச்சு ஜமாய்ச்சுடலாம்.

சிவா.ஜி
21-06-2008, 07:47 AM
ஒரு கவிதையின் பிரசவத்தை, அசத்தலான எடுத்துக்காட்டுகளுடன் வெகு எளிமையான அதே சமயம் மிகச் சிறப்பான வார்த்தையாடலுடன் அளித்திருக்கிறீர்கள். பிசிறில்லாத தெளிவான வரிப்பின்னல்கள்.

பேறுகால வலிகளைத் தாங்கி அழகான மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்ததைப்போல மின்னுகிறது உங்கள் கவிக்குழந்தை. வாழ்த்துகள் ஜுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2008, 09:02 AM
உங்கள் கருத்து என் தன்னம்பிக்கைக்கு நல்ல விருந்து சிவா அவர்களே. என் ஒவ்வொரு படைப்பிற்கும் தங்களின் கருத்துக்களை விரும்பி எதிர்நோக்குகிறேன். மிக்க நன்றி தங்களுக்கு.

நேசம்
21-06-2008, 03:26 PM
ஒரு படைப்பாளியின் மனநிலையை கூறும் அழகான கவிதை.வாழ்த்துகள் மாகசின்

ஆதவா
21-06-2008, 04:27 PM
உடைந்த வாள், சாம்ராஜ்யம் என்றதும் ஏதோ அரசியல் கவிதையாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் இது மனநிலை சம்பந்தப்பட்ட கவிதை என்று தெரிந்துகொண்டேன்.

ஆரம்ப வரி முதல் இறுதிவரையிலும் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் இது ஒரு கவிதையை மட்டும் குறிக்கும் கவிதையாக எனக்கு விளங்கவில்லை. நீங்கள் உபபொருளாக அதனை எடுத்துக் கொண்டாலும் பின்புலத்தில் மறைந்திருக்கும் வலி'யே மேலிடுகிறது.

ஆரம்ப இறுதி வரிகள் ஒரு படைப்பை மையப்படுத்தியிருந்தாலும் உள்ளே எழுதப்பட்டவை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை, அல்லது அப்படி இருப்பதாக எழுதவில்லை.

ஒவ்வொரு எடுத்துக்காட்டுகளிலும் உச்சகட்ட ஏமாற்றத்தைக் காட்டமுடிந்த உங்களின் மனநிலையை பாதியெனக் கணக்கில் கொள்ள, உங்களின் எண்ண வட்டம் குறுகியது என்று எடுத்துக் கொள்ளலாமா?


///கண்ணில் விளக்கெண்ணெயிட்டு
கவனிப்பதாய் தோணும்
எப்போது பேனா பிடிப்பேனென்று
நானிருக்கும் தைரியத்தில்
வாடிக்கையாய்
ஒரு சமையல் சாமானை
மறந்து வரும் அம்மாவும்
உணவை விட அதிகமாய்
வெற்றிலை தின்று
உயிர் வாழும் பாட்டியும்
ஆக்ஸிஜனை விட அதிகமாய்
சிகரெட் புகை சுவாசிக்கும்
அப்பாவும்/////

இந்த பத்தியில் ஏதோ ஒன்று விடுபட்டது போன்று இருக்கிறது. இருப்பின் அதைக் களையாலாம் அல்லது வாசிப்பின் பிழையாக இருக்கலாம்.

உடைந்த வாளுடன் பெருந்தேசத்தை ஆட்கொள்ளும் மனநிலைக்கு முன்னேறியிருக்கும் நீங்கள் சில வாளில்லா மன்னர்களை விடவும் அதிகம் தெரிந்தவர்தானே@

குறிப்பாக, கவிதையில் ஏமாற்ற வரிகள் மிக அழகான எதார்த்தம்.

தொடர்ந்து எழுதுங்கள்