PDA

View Full Version : கடவுளும் கிச்சாமியும்



மதுரை மைந்தன்
20-06-2008, 07:39 PM
கிருஷ்ணமூர்த்தி என்ற கிச்சாமி அவனது பெற்றோர்களுக்கு ஒரே பையன். பல வருடங்கள் குழந்தையில்லாமல் தவமிருந்து பெற்ற பிள்ளையாதலால் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தனர் அவனது பெற்றோர்கள். அவனை பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு விமரிசையாக பூஜை நடத்தி திறந்த காரில் புது சொக்காய் கழுத்தில் மாலை சகிதம் அழைத்துச் சென்றனர். ஆனால் அவனுக்கோ படிப்பு சுத்தமாகத் தலையில் ஏறவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியடம் சொல்லி அவனைத் தூக்கி தூக்கிப் போட்டு பத்தாம் வகுப்பு வரை அவன் முன்னேறினான். பத்தாம் வகுப்பில் பத்து தடவை கோட் அடித்து தனக்கும் கல்விக்கும் வெகு தூரம் என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

கடவுள் பக்தி மிகுந்த அவனது பெற்றோர்கள் " நாராயணா நீ தான் அவனை எப்படியாவது கரை சேர்க்கணும்" எனறு வேண்டிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராய் இறைவனடி சேர்ந்தனர்.

கிச்சாமியின் அம்மா காலமானவுடன் துக்கம் விசாரிக்க வந்த மாமா அவனிடம் சொன்னார் "கிச்சாமி உனக்கோ படிப்பு இல்லை. அதனாலே வேலை எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. உங்க அம்மாவோட பெட்டியிலே ஒரு கிருஷ்ணர் விக்ரஹம் இருக்கு. அதுக்கு தினசரி பூஜை பண்ணு. கிருஷ்ணர் உனக்கு ஏதாவது வழி விடுவார்".

மாமா சென்ற பின் கிச்சாமி தனித்து விடப் பட்டான். அம்மா காலமாகி ஒரு வருடத்திற்கு கோயிலுக்குச் செல்வதோ பூஜைகள் பண்ணுவதோ கூடாது என்று காத்திருந்தான். கிராமத்திலிருந்த நிலத்தின் விளைச்சலாக வந்த நெல்லைக் கொண்டும் வங்கியில் அப்பா விட்டுப் போயிருந்த பணத்தைக் கொண்டும் காலட்சேபம் பண்ணினான். சரியாக ஒரு வருடம் கழிந்தபின் ஒரு நாள் அம்மாவின் பெட்டியிலிருந்து கிருஷ்ணர் விக்ரஹத்தை எடுத்து பூஜை பண்ண ஆரம்பித்தான். தினசரி பூஜைக்குப் பின் தான் சாப்பிடுவான். முதலில் ஒரு பயனும் அவனுக்குத் தெரியவில்லை.

ஓரு நாள் கிச்சாமி கோயிலுக்குச சென்று திரும்பி வரும் வழியில் அவனது பள்ளித் தோழனின் தந்தை எதிரில் வந்தார். அவர் கிச்சாமியிடம் " ராமு பெரிய கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் முடிச்சிருக்கான். ஆனா ஒரு வேலை தான் கிடைக்க மாட்டேங்கிறது" என்று அஙகலாய்த்துக் கொண்டார். கிச்சாமி உடனே மனதுக்குள் விக்ரஹ கிருஷ்ணரை தியானம் செய்து " ராமுவை சென்னைக்குச் சென்று ஒரு கம்பெனியில் விசாரித்தால் வேலை கிடைக்கும்" என்றான். சில நாடகள் கழித்து ராமுவின் அப்பா கிச்சாமியிடம் வந்து ராமுவுக்கு வேலை கிடைத்து விட்டது என்று கூறி நன்றி சொல்லி விட்டுப போனார். அதே மாதிரி இன்னும் சிலருக்கு கிச்சாமி உதவ அவனது பெயர் ஊரில் பரவத் தொடங்கியது. எல்லோரும் கிச்சாமிக்கு ஜோசியம் தெரியும் என்றும் அவன் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்றும் பேசிக்கொள்ளவே பலர் அவனைத் தேடி வீட்டிற்கு வந்து ஜோசியம் கேட்டார்கள். கிச்சாமி விக்ரஹ கிருஷ்ணரை மனதில் தியானித்து அவர்களுக்கு பதில் கூற அவை பலித்தன.

கிச்சாமிக்கு ஜோசியத் தொழிலில் நல்ல வருமானம் வர அவனது மாமா தனது பெண்ணை அவனுக்கு கல்யாணமும் பண்ணிக் கொடுத்தார். கிச்சாமியிடம் சிலர் வாஸ்து ஜோசியமும் கேட்டனர். அவர்களை அவன் சாமர்த்தியமாக சமாளித்தான். ஒருத்தர் கேட்டார் " எங்க வீட்டில காத்தோட்டமே சரியில்லை. வாஸ்து சாஸ்திரத்தில இதுக்கு என்ன பரிகாரம்?". கிச்சாமி யோசித்துக் கூறினான் " தெற்கை பார்த்து இரண்டு பெரிய ஜன்னல்களை வைங்க. காத்து பிச்சுக் கிட்டு போகும்".

இப்படியாக அவனது ஜோசியத் தொழில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு தொழிலாளி அவனிடம் வந்தான். கையில் வைத்திருந்த கசங்கிய காகிதத்தை கிச்சாமியிடம் கொடுத்து " சாமி இது என் பெஞ்சாதியோட சாதகம். அவ முழுகாம இருக்கா. நல்லா பாத்து சொல்லுங்க என்ன கொழந்தை பொறக்கும்னு" என்றான்.

கிச்சாமி " இது எத்தனையாவது குழந்தை?" னு கேட்டான். அதற்கு அந்த தொழிலாளி " கணக்கெல்லாம் வைச்சுக்கலீங்க" எனறான். அடப்பாவி என்று மனசுக்குள் சொல்லி கிச்சாமி கேட்டான் " ஏம்பா? இந்த நிரோத்னு கருத்தடை சாதனம் பத்தி கேள்விப்பட்டதில்லையா?". தொழிலாளி சொன்னான் " நான் எங்க ஊர் கீத்துக் கொட்டாயிலே அதோட விளம்பரத்தைப் பார்த்தேன். ஒண்ணும் விளங்கலை. விளம்பரத்தில முதலில் நிரோத் கிடைக்கிறது சுலபம்னு ஒருத்தர் பெட்டிக் கடைல வாங்கறதைக் காட்டினாங்க. அப்புறம் அதை வைச்சுக்கறது சுலபம்னு சட்டைப் பையில வைச்சுக்கறதை காட்டினாங்க. இதெல்லாம் புரிஞ்சுச்சு. ஆனால் கடைசியில அதை உபயோகிக்கறது சுலபம்னு சொன்னாங்களெ ஒழிய எப்படி சுலபம்னு காட்டலை". இதைக்கேட்டு கிச்சாமி விழுந்து விழுந்து சிரித்தான்.

கிச்சாமி ஜாதகத்தை வைத்துக் கொண்டு கை விரல்களை நீட்டி மடக்கி கணக்குப் போடுவது போல நடித்த பின் சொன்னான் " உனக்கு தங்க விக்ரஹம் போல ஆண் குழந்தை பிறக்கும்". அதற்கு அந்த தொழிலாளி " அட போங்க சாமி. நல்ல சேதியா பெண் குழந்தை பிறக்கும்னு நீங்க சொன்னா அது பலிக்கும்னு உங்க கிட்ட வந்தேன். இப்படி ஏமாத்திப்பிட்டீங்களே" என்றான். கிச்சாமிக்கு ஒரே ஆச்சரியம். "எல்லோரும் பெண் குழந்தை வேணாம்னு அது பிறந்தவுடனே கள்ளிப் பாலை கொடுத்து கொலறாங்க. நீ பெண் குழந்தை வேணும்னு சொல்றயே எப்படி" என்று கேட்டான். அதற்கு அந்த தொழிலாளி " முதல்ல பிறந்த ஆம்பளைப் பசங்க இந்த தீப்பெட்டி தொழிற்சாலை பீடி தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிடறாங்க. வீட்டல சம்சாரம் தனியாக் கிடந்து அல்லாடுது. ஒரு பொம்பளைக் குழந்தை இருந்தா அதுக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கும் இந்த தண்ணிக் கொடம் தூக்கறதுக்கு சாணி அள்ளி எருவாட்டி தடடறது அப்புறம் அடுப்புக்கு வேணும்கிற சுள்ளி பொறுக்கறதுக்கு" என்றான். கிச்சாமி கேட்டான் "ஏம்பா இப்படி சின்னப் பசங்களை வேலைக்கு அனுப்பற? அவங்களை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினா அங்கே சத்துணவெல்லாம் தறாங்க. பசங்களை படிக்க வை. அதுவும் குறிப்பா பெண் குழந்தைகளை படிக்க வை. அவங்க தான் நாளைக்கு உனக்கு கஞ்சி ஊத்துவாங்க. சரி போ உன் இஷ்டப்படியே உனக்கு பெண் குழந்தை பிறக்கும்" னு சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.

அவன் சென்ற பின் வெகு நேரம் கிருஷணர் விக்ரஹத்துக்கு முன் நிஷ்டையில் அமர்ந்திருந்தான். அவன் மனம் சஞ்சலமுற்றிருந்தது. பிறகு திடீரென்று கிளம்பி பக்கத்து அம்பாள் கபே முதலாளி முன் போய் நின்றான். அவர் " வா கிச்சாமி ஏதாவது சாப்பிடறயா?" என்று கேட்டார். கிச்சாமி அவரிடம் " எனக்கு ஏதாவது வேலை போட்டுத் தறேளா?" என்றான். ஆச்சரியமுற்றவராய் அவர் " என்னது உனக்கு வேலையா? ஏன்?" என்று கேட்டார்.

கிச்சாமி கண்களில் நீர் தளும்ப " படிக்க வேண்டிய வயதில் படிக்க வசதி இல்லாமலும் குடும்பத்திற்கு உதவவும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் சிறுவர் சிறுமியரை பார்த்து நான் வெட்கி தலை குனிகிறேன். படிக்க எல்லா வசதிகளிருந்தும் படிப்பை உதறித் தள்ளினதற்கு வேதனைப் படுகிறேன். தெய்வத்தை வைத்து தொழில் பண்ணாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்று உணருகிறேன்" என்றான். இதைக் கேட்டு மனம் உருகிய முதலாளி " கிச்சாமி உன்னப் பார்த்து பெருமையா இருக்கு. உனக்கு சரக்கு போடத் தெரியும்னா இன்னியிலிருந்து சரக்கு மாஸ்டருக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலையில் சேரு. ஆமாம் ஜாதகத் தொழிலை விட்டுடப் போறயா?" என்றார். கிச்சாமி அதற்கு " இல்லை இங்கே வேலை செஞ்ச நேரம் போக மீதி நேரத்தில அதைத் தொடர்வேன். அதிலிருந்து வரும் பணத்தை கல்வி அறக் கட்டளைக்கு கொடுத்து ஏழை மாணவர்களுக்கு உதவுவேன்" என்றான். வீட்டிலிருந்த கிருஷ்ணர் விக்ரஹத்தின் முகதிதில் புன்னகை தவழ்ந்தது.

இளசு
20-06-2008, 08:54 PM
பருவத்தே பயிர் செய்!

படிக்க வேண்டிய வயதில் படி!
உழைக்க முடிந்த வரை உழை!

நீதிபோதனைக் கதை!

பாராட்டுகள் மதுரை வீரன்!

ஓவியன்
21-06-2008, 02:16 AM
மதுரை வீரன் தமிழ் மன்றத்தின் சிறுகதைகள் பகுதியில் சொந்த ஆக்கங்களை மாத்திரம் பதிவிட வேண்டுமென்பது மன்ற விதி....

ஆனால் உங்களது இந்த ஆக்கங்கள் இணையத்தில் பலவிடங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவுகளாக்கப் பட்டிருக்கின்றன...

http://tamildownunder.blogspot.com/

http://www.indusladies.com/forums/indian-stories/28644-2965-2975-2997-3009-2995-a.html

இவை இரண்டும் உங்களுடைய பதிவுகள் தானா...??

இல்லையெனின் கூறுங்கள், இந்தப் பதிவினைப் படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தலாம்....

மதுரை மைந்தன்
21-06-2008, 02:52 PM
பருவத்தே பயிர் செய்!

படிக்க வேண்டிய வயதில் படி!
உழைக்க முடிந்த வரை உழை!

நீதிபோதனைக் கதை!

பாராட்டுகள் மதுரை வீரன்!


தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி இளசு அவர்களே

மதுரை மைந்தன்
21-06-2008, 03:01 PM
மதுரை வீரன் தமிழ் மன்றத்தின் சிறுகதைகள் பகுதியில் சொந்த ஆக்கங்களை மாத்திரம் பதிவிட வேண்டுமென்பது மன்ற விதி....

ஆனால் உங்களது இந்த ஆக்கங்கள் இணையத்தில் பலவிடங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவுகளாக்கப் பட்டிருக்கின்றன...

http://tamildownunder.blogspot.com/

http://www.indusladies.com/forums/indian-stories/28644-2965-2975-2997-3009-2995-a.html

இவை இரண்டும் உங்களுடைய பதிவுகள் தானா...??

இல்லையெனின் கூறுங்கள், இந்தப் பதிவினைப் படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தலாம்....

ஓவியன் அவர்களே,

தாங்கள் குறிப்பிட்டவை முற்றிலும் சரியே. இந்த கதை முற்றிலும் எனது சொந்த படைப்பே.

இந்த கதையை தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதிக்கு மாற்றம் செய்வதில் எனக்கு சம்மதமே. எந்த பகுதியில் வெளியிட்டாலும் மன்றத்தது உறுப்பினர்களுடன் இந்த கதையை பகிர்ந்து கொள்வதுதான் எனது நோக்கம்

ஓவியன்
22-06-2008, 02:33 PM
ஓவியன் அவர்களே,

தாங்கள் குறிப்பிட்டவை முற்றிலும் சரியே. இந்த கதை முற்றிலும் எனது சொந்த படைப்பே..

மதுரைவீரன், இந்த பதிவு உங்கள் சொந்தப் பதிவாக இருக்குமிடத்து இதனை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தும் அவசியம் ஏதுமில்லை...

தொடர்ந்து உங்கள் பொன்னான பதிவுகளை இங்கே தாருங்கள், உங்களை எனது மேற்படி பதிவு இடையூறு செய்திருந்தால் என்னைப் பொறுத்தருள்க....