PDA

View Full Version : புல்நுனி மேல் பனித்துளி



நாகரா
19-06-2008, 03:39 PM
பூமியில் ஊன்றி நில்
வானம் வசப்படும்
பார்...புல்நுனி மேல் பனித்துளி!

இரவின் மரணத்துக்கு
நட்சத்திரங்கள் சிந்திய கண்ணீரா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவில் விண்ணும் மண்ணும் புணர்ந்ததைக்
காட்டிக் கொடுக்கிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

திருடிச் சென்றான் சூரியன்
மண்ணில் விளைந்த முத்தை
புல்நுனி மேல் பனித்துளி!

இரவுப் பறவை
இட்டுச் சென்ற எச்சமா
புல்நுனி மேல் பனித்துளி!

இரவு பூசிய கருமையிலிருந்து
புல் செய்த அதிசய வெண்துகளோ
பனித்துளி!

கையில் நீர்ப்பந்தத்தோடு
விடியலில் விண்ணைத் துழாவுதோ மண்
புல்நுனி மேல் பனித்துளி!

கதிர்க் குழாயிட்டு
சூரியன் உறிஞ்சும் இளநீரோ
புல்நுனி மேல் பனித்துளி!

விடியற் குழந்தை அழுகிறது
அதைத் தாலாட்டி மண் மகிழ்கிறது
புல்நுனி மேல் பனித்துளி!

மண்ணுக்கு இத்தனை மார்ச்சளியா
ஒவ்வொரு விடியலும் மூக்கு சிந்துகிறதே
புல்நுனி மேல் பனித்துளி!

அறிஞர்
19-06-2008, 04:20 PM
புல் மேல் பனித்துளி

வித்தியாசமான கற்பனைகள்....

ஒவ்வொன்றும் பனித்துளி போல்
முத்தாய் ஜொலிக்கின்றன..

இளசு
19-06-2008, 05:17 PM
ஒவ்வொன்றும் அழகிய காட்சிப்பா..
மொத்தமாய்ப் பார்த்தால் பாமாலை!

பனித்துளிகள் நாகரா பார்வை பட்டு
தமிழ்த்தேன் துளிகளாய்..

சிறப்பான பாராட்டுகள் நாகரா அவர்களே!

பூமகள்
19-06-2008, 05:23 PM
பூமியில் ஊன்றி நில்
வானம் வசப்படும்
பார்...புல்நுனி மேல் பனித்துளி!
மிகப் பிடித்த வரிகள்..
தன்னம்பிக்கை பொங்க தட்டிக் கொடுக்கும் துளிப்பா..!!
அசத்தல் நாகராஜன் அண்ணா..!!
எதை விடுத்து எதை சொல்வதென்று புரியவில்லை..

புல்லின் பனித்துளிக்கு இத்தனை பரிமாணங்களா??
பனித்துளிக்குள் அழகாக உலகம் காட்டினீர்கள்....!!

பாராட்டுகள் அண்ணா. :)

kavitha
20-06-2008, 04:48 AM
கதிர்க் குழாயிட்டு
சூரியன் உறிஞ்சும் இளநீரோ
புல்நுனி மேல் பனித்துளி!
வித்தியாசமான பார்வை. ஒவ்வொன்றும் அருமை

ஓவியன்
20-06-2008, 04:59 AM
சாதாரண ஊனக் கண்ணுக்கு சாதாரண புல் மேற் பனித்துளிதான்...
ஆனால் உங்களைப் போன்ற ஒரு கவிஞனின் கண்ணுக்கு....
எத்தனை அழகான தோற்றப்பாடுகளாக கவிப் பிரவாகமெடுக்கிறது
இந்த புல் ஏற் பனித்துளி...!!

பாராட்டுக்கள் அண்ணா, சில நாட்களாக மன்றத்தில் உங்கள் கவிதைகளைக் காணவில்லையே என நினைத்தேன், மீள கவிதைகளுடன் வந்தமைக்கு நன்றிகள் பல...!!

சிவா.ஜி
20-06-2008, 06:09 AM
இரவெல்லாம் தன் குழந்தைகளைத் தூங்க வைக்க தாலாட்டுப் பாடிய பூமித்தாயின் தேக வியர்வையோ புல்லின் மேல் பனித்துளி?

ஒவ்வொன்றும் மிக அருமையான உவமானங்கள் நாகரா. பனித்துளிகள் ஒரு கவிஞனின் பார்வைபட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. அருமை. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

நாகரா
20-06-2008, 06:53 AM
அறிஞர், இளசு, பூமகள், கவிதா, ஓவியன், சிவா.ஜி, உம் பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

கலைவேந்தன்
20-06-2008, 07:20 AM
மிக அழகிய கற்பனை நாகரா அவர்களே!

நாகரா
30-06-2008, 06:31 AM
கற்பனையை ரசித்ததற்கு நன்றி கலைவேந்தரே!