PDA

View Full Version : ரேஷன் அரிசி



சிவா.ஜி
19-06-2008, 12:26 PM
த்......தேரி....ஸ்ஸூ....டே சுரேசு...அந்த மாட்ட முடுக்குடா...எழவெடுத்தது....பிஞ்சையெல்லாம் எப்படி கடிச்சி வெச்சிருக்குப் பாரு....

அவிழ்ந்து விழுந்த வேட்டியை ஒரு குத்துமதிப்பாக தூக்கிக் கட்டிக்கொண்டு தரையில் விழுந்த, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்த அந்த துண்டைத் தூக்கி கொடியை ஆட்டுவதைப்போல வேகமாக அசைத்துக்கொண்டே வெங்கட்ராமனும் அந்த "சுரேசு' வோடு சேர்ந்து மாட்டைத் துரத்தினார். மாடு மிரண்டு ஓடி வரப்பில் தடுமாறி விழுந்து எழுந்து மறுபடியும் ஓடியது.

மாட்டை விரட்டி விட்டுத் திரும்பி தன் தோட்டத்தைப் பார்த்தார். வெண்டைச் செடிகள் அப்போதுதான் பிஞ்சு விடும் பருவத்தில் இருந்தன. அரைகுறையாய் மாடு கடித்து விட்ட இலைகளையும், பிஞ்சுகளையும் துண்டித்து தூர எறிந்துவிட்டு, பக்கத்தில் இருந்த வயலைப் பார்த்தார். விளைந்து நின்ற நெற்பயிர்கள் பாரம்தாங்காமல், முதல் முறை பெண்பார்க்க வருபவர்கள் முன் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப்போல தரை நோக்கியிருந்தன.

போன போகமே விதைக்க முடியவில்லை. மூத்தமகள் முதல் பிரசவத்துக்கு வந்தவள், உடல் நலம் குறைந்து ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இருக்கும் ஒரு ஏக்கர் கழனியில் இரண்டு போகம் விளைந்து கொண்டிருந்தார். வானம் பார்த்த பூமிதான். அதனால் கடனை உடனை வாங்கி ஒரு கிணறு வெட்டினார். அதற்கு இதுவரை மின்சார இணைப்பு கிடைக்கவில்லை. டீஸல் வாங்கி இயந்திரத்தை இயக்கி தண்ணீர் இறைத்து வந்தார். அவரது வயலுக்குப் போக பக்கத்து நிலங்களுக்கும் இறைத்ததில் டீஸல் செலவுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது.

இந்த முறை விதைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். விவசாய கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. வந்தாலும் டவுன் ஆட்களைப் போல குறிப்பிட்ட நேரம்தான் வேலை செய்வோம், சாப்பாடு போடவேண்டும், இவ்வளவு கூலி வேண்டுமென்று கறாராகப் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள். முன்பெல்லாம் அவர்களே வந்து கேட்பார்கள். வேலை முடிய எவ்வளவு நேரமானாலும் முகம் சுளிக்க மாட்டார்கள். அரசாங்கம் இலவசங்களும், இரண்டு ரூபாய் அரிசியும் கொடுக்க தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் வேலைக்கே போகிறார்கள். கேட்டால்,

"கிலோ ரெண்டு ரூபாய்க்கு அரிசி கிடைக்குது மாசமானா எங்க வூட்டுக்கு 40 கிலோ போதும். எங்க கூப்பனுக்கு(ரேஷன் அட்டை) 20 கிலோ கெடைக்குது. பேட்டையில(டவுனில்) இருக்கிற மவராசங்க வூட்டு கூப்பன் எதானா ஒண்ணு கெடைச்ச அதுல 20 கிலோ கிடைக்குது. 80 ரூபாயில சாப்பாட்டுப் பிரச்சனை தீந்துச்சி...மேல் செலவுக்கு வாரத்துக்கு ரெண்டு நாள் வேலை செஞ்சாலே போதும்"

என்று சொல்கிறார்கள்.

வெங்கட்ராமனின் மனைவி கூட சொல்லிப் பார்த்தாள்.

'இந்த ஒரு ஏக்கர்ல நெல்லு விதைக்கறதுகுள்ள தாவு தீந்துடுது. எதுக்கு இத்த கட்டிக்கினு மாரடிக்கிறே பேசாம கூப்பன் அரிசி வாங்கி திங்கலாமில்ல. இதுல பூவாச்சும் போட்டா வண்டிக்காரன் வந்து வாங்கிட்டுப் போவான்"

என்று எவ்வளவோ சொல்லியும்,

'கழனி இருக்கும்போது கூப்பன் அரிசி சாப்பிடனுன்னு எதானா தலையெழுத்தா கம்முனு இருடி.இன்னொரு வாட்டி கூப்பன் அரிசியப் பத்திப் பேசுன....தலைமுறை தலைமுறையா சொந்த நெலத்துல வெளைஞ்சி சாப்பிட்டவங்கடி நாங்க "

என்று இவர் தன் மனைவியை சும்மா இருக்கச் சொல்லிவிட்டு அந்த ரேஷன் அரிசியையும் இப்படி கூலி வேலைக்கு வருபவர்களிடம் கொடுத்துவிடுவார்.

நெற்பயிரையே பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு பெரு மூச்சுடன் " அறுப்புக்கு ஆள் தேட இன்னும் எவ்ளோ கஷ்டப்படனுமோ அந்த பச்சம்மா சாமிக்குத்தான் வெளிச்சம்" என்று நினைத்துக்கொண்டு பம்ப்செட் தொட்டியிலிருந்த நீரை எடுத்து கை கால்களைக் கழுவிக்கொண்டு அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்தார். ஏரி ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நாணல் புற்களால் வேய்ந்த கூரை. அதை அந்தப் பகுதி மக்கள் போதப்புல் என்று சொல்வார்கள். மண் சுவர். சாணம் மெழுகிய தரை. உள்ளே சென்று முட்டுக்காக கொடுக்கப்பட்டிருந்த தென்னை மரத்தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

வெங்கட்டம்மா கையில் பித்தளை குவளையில் தண்ணீரோடு அவரை அணுகி, அதை அவர் கையில் கொடுத்துவிட்டு,

'எப்ப அறுக்கலானு கீற?'

"ரெண்டு நாள் போட்டும், தாசப்பனும் அவன் வூட்டுக்காரியும் வரன்னு சொல்லியிருக்காங்க...அப்படியே இன்னும் ரெண்டு பேரைப் பாத்து கூட்டியாரனும். எவனும் வரலன்னா நீயும் நானுந்தான் அறுக்கனும்" என்றதும்,

" அதுக்குத்தான் நான் தலப்பாடா அடிச்சுக்கறேன்..." என்று ஆரம்பித்தவளைப் பார்த்து,

"நிறுத்துடி! இவளுக்கு இதே ரோதனையாப் போச்சி. அதான் அந்த தாசப்பன் வரன்னு சொல்லியிருக்கனில்ல...வுடு"

சொல்லிக்கொண்டிருந்தவர் வாசலில் நிழலாடுவதைக் கவனித்துவிட்டு பார்வையைத் திருப்பினார். மூத்தமகள் கைக்குழந்தையுடன் வந்து கொண்டிருந்தாள். மகளையும் பேத்தியையும் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ச்சியுடன்,

வாடி சாந்தி, உங்க வூட்டுக்காரன் வர்ல? கேட்டுக்கொண்டே கைக்குழந்தையை வாங்கி புகையிலை மணக்கும் வாயால் பேத்தியை முத்தமிட்டாள்.

கேட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கொண்டு வந்த துணிப்பையையை கீழே வைத்துவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.

அந்த செயலைப் பார்த்ததுமே வெங்கட்ராமனுக்கு திக்கென்றாகிவிட்டது. இந்த முறை எதை எதிர்பார்த்து வந்திருக்கிறாளோ மகள் என்ற அச்சம் தோன்றிவிட்டது. எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்த அப்பனைப் பார்த்து முகத்தில் சுரு சுருவென்று ஏறிய கோபத்தோடு,

"என்னான்னு ஒண்ணும் கேக்க மாட்டியா? ஒரலாட்டம் ஒக்காந்துனுக்குறதப் பாரு. உங்களுக்கென்னா...மவளக் கட்டிக்குடுத்துட்டா..வுட்டுதுடா ஏழ்றநாட்டு சனின்னு கம்முன்னு இருப்பீங்க. எங்க வூட்டுக்காரன்கிட்டயும், மாமியாக்காரிக்கிட்டயும் தெனம் பேச்சு வாங்கறது யாரு. பொட்டப்புள்ளையை பெத்து எடுத்துக்கினு வந்திருக்க, எங்கடி உங்கப்பன் போடறாதா சொன்ன ஒரு பவுனு சங்கிலின்னு இந்த ஆறு மாசமா என்ன நோவடிச்சிக்கினே இருக்காங்க. இன்னைக்கு அந்த ஆளு எந்த எழவையோ குடிச்சிட்டு காலங்காத்தால வந்து எட்டி ஒதைக்குறான். அதான் புள்ளைய தூக்கிகிட்டு வந்துட்டேன். ஒரு பவுனு போட்டாத்தான் நான் திரும்பி அந்த வூட்டுக்குப் போவேன் ஆமா..." உறுதியாய் சொல்லிவிட்டு அதற்குள் சிணுங்க ஆரம்பித்த மகளை தாயிடமிருந்து வாங்கி மடிமீது போட்டுக்கொண்டு சுவர் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

"ம் கதுரு வெளைஞ்சிருக்கே குருவி வரலியேன்னு பாத்தேன். வந்துட்டா நான் பெத்த மகராசி. சரி அறுப்பு முடிஞ்சதும் அந்த ஒரு பவுனைப் போட்டுத் தொலைச்சிடலாம்" என்று நினைத்துக்கொண்டே மனைவியைப் பார்த்து சோறாக்கிட்டியா? என்றார்.

" ம்...சாறு மட்டும்தான் காச்சனும். நீ போய் கிருஷ்ணன் கடையில ஒரு பாக்கெட் போட்டி(குழல்போல இருக்கும் திண்பண்டம்) வாங்கிக்கினு வந்துடு. உன் மவளுக்கு இல்லன்னா சோறு எறங்காது."

அடுத்த நாள் தாசப்பனைத் தேடி அவன் வீட்டுக்குப் போனார். உள்ளே தரையில் பாயைப் போட்டு தலையணையை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். டே தாசா என்னாடா டிவிபொட்டியெல்லாம் வாங்கிட்டியா? கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்துகொண்டே வா மாமா. ஒக்காரு. நான் எங்க மாமா வாங்கறது. கவுர்மெண்ட்டு குடுத்தது. ஏன் மாமா உனக்கு குடுக்கலையா?

இல்லியேடா...


நீ அப்ப இந்த கட்சியில்லியா?

நான் எந்த கட்சியும் இல்லியேடா...

அது சரி. நான் கூடத்தான் இல்ல. வந்து கேட்டானுங்க இந்தக் கட்சியான்னு...ஆமான்னேன்...முன்சீப் ஆபீசாண்ட வந்து கை நாட்டு வெச்சுட்டு டிவி பொட்டி வாங்கிட்டு போடான்னானுங்க. போய் வாங்கியாந்துட்டேன்.

சரி வுட்றா எனக்கு என்னாத்துக்கு இந்த கருமம். நாளானன்னைக்கு நீயும் உங்க பொண்டாட்டியும் வந்துடுங்கடா. காத்தால ஆரம்பிச்சாத்தான் வெயில் ஏற்றதுக்குள்ள அறுப்பு முடியும்.

மாமா...வந்து.... அவன் இழுப்பதைப் பார்த்ததும் இவருக்கு பகீரென்றது. வரமாட்டானோ...?

என்னடா இலுக்கிற....

அதில்ல மாமா...வூட்டுக்காரி அவங்கம்மா வூட்டுக்கு போகனுன்னு சொன்னா? கொழுந்தியாளுக்கு நிச்சயம் பண்றாங்க அதுக்கு கண்டிசனா போகனுன்னு சொல்லிட்டா...அதான்....நீ வேற யாரையாவது பாத்துக்கறியா?

அடப்பாவி...இப்ப வேற எவனைப் போய் தேடச் சொல்றடா? எவனும் வர மாட்டேங்கறானுங்களே....சிறிது யோசனைக்குப் பிறகு,

சரி நான் போய் அந்த நாகனைப் பாக்குறேன்....என்று சொல்லி விட்டு...கொஞ்சம் தொலைவில் இருந்த நாகன் வீட்டுக்குப் புறப்பட்டார்.

அவர் தலை மறைந்ததும்,

"நல்ல வேல பண்ணய்யா...நாளான்னைக்கு காத்தால ஏலு மணியிலருந்து செறப்பு நிகழ்ச்சிங்கன்னு டிவியில சொன்னாங்க. புது படம் பதினோரு மணிக்கே போடறாங்களாம். அத்தப் பாக்குறத வுட்டுட்டு அறுப்புக்கு வா கறுப்புக்கு வான்னா...?

நாகனும் வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட, தனக்குத் தெரிந்த அத்தனைப் பேரிடமும் போய்க் கேட்டும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தளர்ந்துபோய் திரும்பி வந்தார். வீட்டில் மகளைப் பார்த்ததும் அந்த ஒரு பவுனின் நினைவு வர என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

அடுத்த நாள் மனைவியைத் துணைக்கு வைத்துக்கொண்டு அறுப்பு வேலையை மேற்கொள்ளலாம் என்று இருவரும் வயலில் இறங்கினார்கள். ஒரு ஏக்கர்தான் நாளைக்கு முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு வேகமாக அருவாளை வீசினார்கள். சர சரவென்று முன்னேறிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் மகளின் அலறல் கேட்டது. தூக்கி வாரிப்போட இரண்டு பேரும் வீட்டை நோக்கி ஓடினார்கள். அறுபட்ட பயிரின் முனைகள் வெறுங்காலை பதம் பார்த்தது. அதையும் சட்டை செய்யாமல் விழுந்தடித்து ஓடினார்கள். குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.

"நைனா...புள்ளைய தேள் கடிச்சிடிச்சி. பெரிய தேளு...கஞ்சி காச்சிக்கினு இருந்தேன் புள்ள அழற சத்தம் கேட்டு ஓடியாந்தேன்..இதா இந்த சனியன் புடிச்ச தேளு பக்கத்துல இருந்திச்சி." என்று நசுக்கிய தேளைக் காட்டிக்கொண்டே கதறினாள். உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலைக்கு வந்தவர்கள் அந்தப்பக்கமாய் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வேண்டிக் கேட்டுக்கொண்டு மகளையும் குழந்தையையும் அவருடன் பெரியாஸ்பத்திரி என்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வேகமாக நடந்து முக்கிய சாலைக்குப் போய் நகரப் பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்தார்கள்.

நல்லவேளையாக சரியான சமயத்தில் கொண்டு வந்தததால் குழந்தையின் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று சொல்லிவிட்டார்கள். மருத்துவமனையில் இருக்கும்போதே வெளியே மழை கொட்டும் சத்தம் கேட்டு ஓடி வந்த வெங்கட்ராமன்...பொத்துக்கொண்டு ஊற்றும் மழையைப் பார்த்ததுமே "அய்யோ கடவுளே என் பயிருக்கு என்னா ஆச்சோ' என்று கதறினார். வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் இந்த மழை கன மழையாகத் தொடரும் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்துவிட்டார்.

குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் அங்கிருந்து பேய் மழையால் நிரம்பிய நீரில் தாழ்ந்துபோயிருந்த பயிரைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். கண்ணிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையால் அவரால் பயிரைக் காப்பாற்றமுடியவில்லை. அழுதுகொண்டே போன மகளை ஆறுதல்படுத்தவும் முடியாதவராக வாசலில் அமர்ந்துவிட்டார். வீட்டில் அரிசி தீர்ந்துவிட்டிருந்தது. வெங்கட்டம்மாள் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள். பள்ளி விடுமுறையால் வீட்டிலிருந்த சின்னவள் களைப்போடு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள். மனைவியையும், சின்ன மகளையும் பார்த்துக்கொண்டே இருந்தவர்..திடீரென்று எழுந்து வெளியே போனார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் வெங்கட்டம்மா அந்த கூப்பனை எட்றி. போய் அரிசி வாங்கிகினு வரேன். கிருஸ்ணன்கிட்ட 50 ரூபா கடன் வாங்கினேன். ஒரு 20 கிலோ அரிசி வாங்குனா இந்த மாசத்துக்கு சரியாப் போய்டும்.

சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அந்த குடும்ப அட்டையை எடுத்துக்கொடுத்தாள். கடைக்குப் போகும்போது நின்று அந்த வயலைப் பார்த்தவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பூச்செடி வெச்சிட வேண்டியதுதான்..............

ஆதவா
19-06-2008, 01:00 PM
நல்ல கதை அண்ணா. சிலர் இப்படித்தான்... தனியாகத் தொழில் செய்வார்கள் கொஞ்சம் கையைக் கடித்ததும் வேலைக்குப் போவார்கள். தனியே தொழில் செய்பவனுக்கே உண்டான மிடுக்கு பொருளாதாரப் புயலில் காணாமல் போய்விடும்.

அங்கங்கே அடிபட்ட வெங்கட்ராமனை இயற்கையும் சேர்த்தே பழிவாங்கிவிட்டது....

///////விளைந்து நின்ற நெற்பயிர்கள் பாரம்தாங்காமல், முதல் முறை பெண்பார்க்க வருபவர்கள் முன் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப்போல தரை நோக்கியிருந்தன./////////

ஒரு கவிஞருக்கே உண்டான அழகான வரிகள்..

அறிஞர்
19-06-2008, 01:40 PM
இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையால் அவரால் பயிரைக் காப்பாற்றமுடியவில்லை. அழுதுகொண்டே போன மகளை ஆறுதல்படுத்தவும் முடியாதவராக வாசலில் அமர்ந்துவிட்டார். வீட்டில் அரிசி தீர்ந்துவிட்டிருந்தது. வெங்கட்டம்மாள் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள். பள்ளி விடுமுறையால் வீட்டிலிருந்த சின்னவள் களைப்போடு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள். மனைவியையும், சின்ன மகளையும் பார்த்துக்கொண்டே இருந்தவர்..திடீரென்று எழுந்து வெளியே போனார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் வெங்கட்டம்மா அந்த கூப்பனை எட்றி. போய் அரிசி வாங்கிகினு வரேன். கிருஸ்ணன்கிட்ட 50 ரூபா கடன் வாங்கினேன். ஒரு 20 கிலோ அரிசி வாங்குனா இந்த மாசத்துக்கு சரியாப் போய்டும்.

சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அந்த குடும்ப அட்டையை எடுத்துக்கொடுத்தாள். கடைக்குப் போகும்போது நின்று அந்த வயலைப் பார்த்தவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பூச்செடி வெச்சிட வேண்டியதுதான்..............
ஒரு விவசாயின் நிலையை தெளிவா எடுத்துரைக்கும் கதை...
இந்நிலை மாறி... விவசாயின் சிரித்த முகத்தை காண ஆசை...
அருமை சிவா....

மதி
19-06-2008, 01:55 PM
அண்ணா... கையை குடுங்க..
நல்ல கதை... கதையை கொண்டு சென்ற விதமும் வழக்காடல்களும் அருமை... சிறந்த ஒரு கதாசிரியர் ஆகிட்டீங்க.. உங்க மேல் எங்க எதிர்பார்ப்புகளும் கூடுது.

கதையில் ஒரு ஏழைவிவசாயின் நிலையைத் துல்லியமாக படம் பிடித்துள்ளீர். அன்றாடம் மக்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இறுதியில் சில வைராக்கியங்கள் நம் சுற்றத்தாரின் நலனுக்காக விடுதலும் நல்லது தான்.

பாராட்டுக்கள்.

சிவா.ஜி
19-06-2008, 03:30 PM
நல்ல கதை அண்ணா. சிலர் இப்படித்தான்... தனியாகத் தொழில் செய்வார்கள் கொஞ்சம் கையைக் கடித்ததும் வேலைக்குப் போவார்கள். தனியே தொழில் செய்பவனுக்கே உண்டான மிடுக்கு பொருளாதாரப் புயலில் காணாமல் போய்விடும்.

..

ஆனா தலைமுறை தலைமுறையா வயல்ல விளைஞ்சி சாப்பிட்ட விவசாயி ரேஷன் அரிசி சாப்பிடற நிலை கொடுமைதான் ஆதவா. நிறைய நடக்கிறது இதுபோல இப்போது.

பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா.

சிவா.ஜி
19-06-2008, 03:32 PM
ஒரு விவசாயின் நிலையை தெளிவா எடுத்துரைக்கும் கதை...
இந்நிலை மாறி... விவசாயின் சிரித்த முகத்தை காண ஆசை...
அருமை சிவா....

நிச்சயம் அந்த நாள் வரவேண்டும். விவசாயி சிரித்தால் அனைவரும் சிரிக்கலாம். நன்றி அறிஞர்.

சிவா.ஜி
19-06-2008, 03:34 PM
கதையில் ஒரு ஏழைவிவசாயின் நிலையைத் துல்லியமாக படம் பிடித்துள்ளீர். அன்றாடம் மக்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இறுதியில் சில வைராக்கியங்கள் நம் சுற்றத்தாரின் நலனுக்காக விடுதலும் நல்லது தான்.

பாராட்டுக்கள்.

ஆமாம் மதி. சில வைராக்கியங்கள் வலுவிழந்துவிடுவது சுற்றத்தாலும், சூழ்நிலைகளாலும்தான். பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

செல்வா
19-06-2008, 06:23 PM
தலைப்பைப் பாத்ததுமே இத ஆற அமர வாசிச்சு உடனே பின்னூட்டம் போடணுங்கிறதாலதான் உடனே வாசிக்கல....
இது மாதிரி பல கதைகள் ஊரிலுள்ள சிறு சிறு விவசாயிகள்கிட்ட கேக்கலாம் அண்ணா.

நெல்லு போட்டுருப்பாங்க மழையே பெய்யாம காஞ்சு பொகும்...
என்னடா வம்பா போச்சுணு வாழை போடுவாங்க... நல்லா செழிப்பா வளந்து அடுத்த வாரத்தில வெட்டிடலாம்னு இருப்பாங்க...
புயல் வந்து ஒட்டு மொத்தமா ... அழிச்சுடும்..

வெதைக்கிறதுக்கு முன்னால உழுது மரமடிச்சு தழைஉரம் போடுறதிலருந்து அறுத்து வீடு கொண்டு சேக்கிறது வர தினம் தினம் குழந்தைய பாத்து பாத்து வளக்குற மாதிரி தான் வளக்கணும்.

பிரச்சனை இப்படி கூட வரும் பக்கத்து வயல்காரன் தென்னை வச்சிருப்பான் அதனால கூட சரியான ஒளி இல்லாம பாதி வயல் போய்டும்.
ம்....... இப்படி எத்தனையோ....இன்னும் ஒரு பசுமைப்புரட்சி தேவைப்படுற நாள் தூரத்தில இல்ல..

சிவா.ஜி
20-06-2008, 05:58 AM
ஒரு சிறு விவசாயி எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான் என்ற உங்கள் பட்டியல் வேதனையளிக்கிறது செல்வா. எத்தனை மாணியங்கள், சலுகைகள் கிடைத்தும் எல்லாமே விழலுக்கிறைத்த நீராகி விடுகிறதே. ஏக்கர் கணக்கில் நிலமுள்ள பெரிய பண்ணைக்காரர்கள் எப்போதும் நஷ்டமடைவதில்லை. ஒன்றில் போனால் மற்றொன்றில் கிடைத்துவிடும். ஆனால் இந்த சிறு விவசாயிகளின் நிலை வேதனைக்குரியது. அதோடு இப்போதெல்லாம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

நன்றி செல்வா.

kavitha
20-06-2008, 07:59 AM
'ரேஷன் அரிசி" ஒரு கதையாகவே தெரியல. நிஜத்தில் நடந்த உண்மையான சம்பவம்போலவே இருக்கிறது அண்ணா. கதை கொண்டு சென்ற விதமும், கிராமத்து நடையும் மிக இயல்பாக இருக்கிறது. இது போன்ற கதைகள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு சராசரி மக்களும் வாசிக்கப்படவேண்டியவை.


அதோடு இப்போதெல்லாம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது.
டிவி சீரியல் சமைக்கறத மட்டுமல்ல, சமைக்க விளைக்கிற அரிசியையும் பதம் பார்க்குதுங்கறத கேட்கும்போது மக்களின் அறிவீனத்தை நினைத்து வருத்தமாக இருக்குதுண்ணா.

காலத்திற்கும், இருப்பிடத்திற்கும் ஏற்றபடி பயிர் செய்து நன்றாக உழைத்து சம்பாதிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வள்ளுவரின் குறளில் வரும் கொக்கு போன்றவர்கள். பெரும்பான்மையானோர் தங்கள் சோம்பலினாலும், எந்த பருவத்தில் எந்த பயிரிடவேண்டும் என்று அறியாமலும், பக்கத்து வயலின் ஒத்துழைப்பு இன்றியும் தோல்வியுறுவது கண்கூடாகக் காண்பது தான்.


பிரச்சனை இப்படி கூட வரும் பக்கத்து வயல்காரன் தென்னை வச்சிருப்பான் அதனால கூட சரியான ஒளி இல்லாம பாதி வயல் போய்டும்.
இதனால் எங்கள் ஊரில் எல்லோரும் பேசி வைத்துக்கொண்டு பயிரிடுவார்கள். விற்பதிலும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்வார்கள்.



ம்....... இப்படி எத்தனையோ....இன்னும் ஒரு பசுமைப்புரட்சி தேவைப்படுற நாள் தூரத்தில இல்ல..
சரியாச் சொன்னீங்க செல்வா.

முதல்வரியை வேறு மங்கல(?) வாக்கியமாக்கி பத்திரிகைக்கு அனுப்பலாமே சிவா அண்ணா?

சிவா.ஜி
20-06-2008, 08:11 AM
அழகான ஆழமான விமர்சனம். நீங்கள் சொல்வதைப்போல சில விவசாயிகள் பழமையிலிருந்து வெளிவர மிகவும் தயங்குகிறார்கள். ஆனால் அதே சமயம், நெல் விளைந்த நிலமெல்லாம் மாற்றுப்பயிர்களை விளைவிக்கத்தொடங்கினால் நாளைய சமுதாயத்துக்கு அரிசி கிடைக்காமல் போய்விடுமே?

இப்போது எங்கள் பகுதியில் நடந்து வருவதுதான் இது. என் கிராமத்தில் நெல் விளைந்த வயல்களில் தற்சமயம் 90 சதவீதம் முல்லைப்பூவும், ரோஜாப்பூவும்தான் பயிரிடுகிறார்கள். நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் நெல் விளைச்சல் குறைந்து விட்டதே. காலங்காலமாக சொந்த நிலத்தில் விளைந்த அரிசியை சாப்பிட்டு வந்தவர்கள் இன்று கடையில் வாங்கி உண்ணும் நிலை. அந்த மீதியுள்ள பத்து சதவீதத்தினரில் ஒருவர்தான் இந்த வெங்கட்ராமன். ஆனால் அவரும் ரேஷன் அரிசி சாப்பிடும் நிலை வந்துவிட்டது. இதற்கான முக்கிய காரணம் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததுதான்.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிம்மா. ஆனாலும் எனக்கு இது போதும். பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்புவதில்லை. எனக்கு இந்த மன்றமும், மன்ற உறவுகளே போதும்.

SivaS
20-06-2008, 08:43 AM
நெல் விளைந்த நிலமெல்லாம் மாற்றுப்பயிர்களை விளைவிக்கத்தொடங்கினால் நாளைய சமுதாயத்துக்கு அரிசி கிடைக்காமல் போய்விடுமே?.

உண்மைதான் சிவா.ஜி
அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.:eek:
உலகெங்கும் பசுமை புரட்சி வர வேண்டும்
பசுமை நிலையில் மட்டும் நாம் 100 வருடங்கள் பின்னோக்கி போகலாம் தப்பில்லை;)


உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிம்மா. ஆனாலும் எனக்கு இது போதும். பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்புவதில்லை. எனக்கு இந்த மன்றமும், மன்ற உறவுகளே போதும்.

இதயத்தை தொட்டு விட்டேர்களே மாம்ஸ் (தப்பென்றால் மன்னிக்கவும்)

சிவா.ஜி
20-06-2008, 08:54 AM
நன்றி சிவா. தப்பில்லை. உறவு என்று சொன்ன பிறகு முறை வைத்துக்கூப்பிடுவதில் என்ன தவறு?

SivaS
20-06-2008, 09:43 AM
நன்றி சிவா. தப்பில்லை. உறவு என்று சொன்ன பிறகு முறை வைத்துக்கூப்பிடுவதில் என்ன தவறு?

மாம்ஸ் நான் நினைக்கிறேன் நீங்கள் ஏதும் குளிர் நாட்டில் இருக்கிறீர்களோ என்று நீங்கள் இப்படி:ernaehrung004: சொன்ன உடனும் எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது.:080402cool_prv:

பூமகள்
21-06-2008, 05:13 PM
இன்றைய சூழலில் மிக அவசியமான கதை.. இல்லையில்லை வாழ்வியல் வடிவ மாற்றத்தின் விழிப்புநிலை...

அற்புதமாக புனையப்பட்ட கதை...!

சிவா அண்ணா... நான் இதிலும் உங்களோடு ஒரே சிந்தனையில் இருக்கிறேன்... வியக்கிறேன்...

கதை மேலோட்டமாக சொல்லும் கருத்தை விட... ஆழ் கருத்து... எல்லார் மனதையும் கவலையுறச் செய்யும் என்பது திண்ணம்...

அரிசி பயிரிடாமல் விளைநிலமெல்லாம் மாற்று பயிர்களுக்கு போனால்.. உணவுப் பஞ்சத்தில் இன்னொரு உலகப்போர் வரும் அபாயம் உள்ளதாகப் படுகிறதே...!!

பயமாக இருக்கிறது சிவா அண்ணா.. மனமார்ந்த பாராட்டுகள்..!! வட்டார வழக்கு அசத்தலாக பொருந்தியிருக்கிறது... கவி அக்கா சொன்னது போல.. முதல் வரியில் ஒரு வார்த்தை மாற்றம் மட்டும் போதும்..

கண்டிப்பா பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள் அண்ணா.. எங்கள் அண்ணாவின் புகழ் எட்டுத்திக்கும் பரவ வேண்டும்.. இணையத்தில் தமிழ் மன்றம் என்றால்.. இணையம் வராத பாமரர்களுக்கு எப்படி இது போன்ற நல்ல விசயங்களை சொல்லிக் கொடுப்பது...?? ஆகவே.. எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்றுத்தான் ஆக வேண்டும்..!! இது தங்கையின் அன்புக் கட்டளை..!! :)

நல்ல கருத்தாழம் மிக்க கதை எழுதிய எங்கள் முன்னோடி கதாசிரியர் சிவா அண்ணாவுக்கு ஆயிரம் பொற்காசுகள் தங்கையின் பரிசாக..!!

சிவா.ஜி
22-06-2008, 04:35 AM
நன்றிம்மா பூ. நியாயமான கவலை. இப்போதே நெற்பயிர்கள் காணாமல் போய் மற்ற பயிர்கள் நிலங்களை நிறைக்கத்தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் நாமும் வெங்கட்ராமனைப் போல வெளியில், அதாவது இந்தியாவுக்கு உணவு இன்னொரு நாட்டிலிருந்து வந்து அதை வாங்கி உண்ணும்படியான நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

உன்னுடைய அன்பார்ந்த பின்னூட்டத்திற்கும், பொற்காசுகளுக்கும் இந்த அண்ணனின் மனம் நிறைந்த நன்றிகள் பூம்மா.

பாரதி
22-06-2008, 06:47 AM
மிக நல்ல கதை சிவா. மனம் நிறைந்த பாராட்டு.
விவசாயிகள் மட்டுமே நிறைந்திருந்த எங்கள் ஊரில் இப்போது கிட்டத்தட்ட விவசாய வேலைகள் செய்பவர்கள் யாருமே இல்லை..!
உங்கள் அச்சமும் கவலையும் நியாயமானவையே.
உலகமயமாக்க மாயையில் மூழ்கி இருக்கும் வரைக்கும் இதை அரசியல்வாதிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

தொடரட்டும் உங்கள் சமூக படைப்புகள்.

சிவா.ஜி
22-06-2008, 11:41 AM
ஆம் பாரதி. மாயையில்தான் மூழ்கியிருக்கிறார்கள் இவர்கள். முற்று முழுக்க விவசாய பூமியாய் இருந்த இந்தியா அதில் பாதியை நகரமயமாக்கலுக்கு தாரை வார்த்துவிட்டது. மீதியுள்ள பாதியிலும் கஷ்டப்பட யாருமின்றி தரிசாக வீணாகும் நிலம், பணப்பயிர்கள் என அனைத்துக்கும் பிறகு மிஞ்சியிருப்பதில் நெல் விளைந்தது. இப்போது அதற்கும் பிரச்சனை வந்துவிட்டது.

எல்லோருக்குமே கஷ்டப்படாமல் காசு வேண்டும். என்ன செய்வது. இன்று இலவசங்களை நம்பி சும்மா இருந்துவிட்டு நாளை சோற்றுக்குகூட வழியில்லாமல் கஷ்டப்படும்போது உணருவார்கள். ஆனால் அப்போது மிகத் தாமதமாகிவிட்டிருக்கும்.

பின்னூட்ட உற்சாகத்திற்கு நன்றி பாரதி.

இளசு
23-06-2008, 09:35 PM
வணிக மயமாய், ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல்
நெல் விவசாயமும் மாறினால் ஒழிய..

இவ்வகை நிகழ்வுகள் மாறா..


நாள்தோறும் நாடெங்கும் நடக்கும் இந்த அவலச்சுவையை
அன்று வைரமுத்து கவிதையாய் தந்தார்..

அன்பு சிவா அருமையான அவர் நடையில் கதையாய்த் தந்தார்..

விவசாயம் ஒரு ''பெருந்தொழிலாய்'' மேநாடு போல் மாற வேண்டியது
காலத்தின் கட்டாயம்..

யோசித்து வருமுன் திட்டமிட வேண்டியவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்????

சிவா.ஜி
24-06-2008, 04:07 AM
பயிர் விளையா பாலைவனத்திலும், பணத்தை இறைத்து தானியம் விளைவிக்கிறார்கள் இங்கு(சவுதி அரேபியாவில்). பூமித்தாயின் வளமான ஆசீர்வாதம் கிடைத்தும் அதை சிறப்பாகச் செய்ய ஏதுவான சூழ்நிலை இல்லாததால் நம் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதே நிலை நீடிக்குமானால்...அந்த கண்ணீரின் உப்பாலேயே நிலங்கள் தரிசாகிவிடும். உணவுக்குக் கையேந்தும் நிலமை வந்துவிடும்.

நீங்கள் சொன்னதைப்போல விவசாயம் ஒரு பெருந்தொழிலாய் மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இளசு.

mukilan
24-06-2008, 04:11 AM
சரியான சமயத்தில் சமூகத்தின் அவலத்தை உரித்துக்காட்டியிருக்கிறீர்கள் சிவா. சமூக நோக்குச் சிந்தனையுடனான உங்கள் சிறுகதைக்கு தலை வணங்குகிறேன். இதை சிறு'கதை' என சொல்லவே முடியாத படி கதையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு வரி விடாமல், இதே வரிசையில் அல்லாமால் இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஆனால் அனைத்தும் நிகழ நான் கண்டிருக்கிறேன்.

விவசாயி இன்றைக்குச் சந்திக்கும் பிரச்சினையை என் தந்தை ஒரு விவசாயி என்ற முறையிலும், வேளாண் கல்லூரியில் கற்றவன் என்கிற முறையிலும் நான் நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கான தீர்வு காணக் கூடிய அளவில் என் அறிவு வளரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. என்னை ஏற்றி விட்ட ஏணி என விவசாயத்தைக் குறிப்பிட்டால் அது மிகையில்லை!

மேலை நாடுகளில் விவசாயம் என்பது ஒரு வியாபாரம். ஒவ்வொரு விவசாயியும் 1000 ஏக்கர் வைத்திருப்பார்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மனைவி, குடும்பத்தலைவர் மற்றும் ஒரு நபர். மூன்றே பேர் பல்வேறு இயந்திரங்களைக் கொண்டே விவசாயம் செய்து விடுவர். விதை விதைப்பதில் துவங்கி அறுவடை வரை அனைத்துமே இயந்திரங்கள்தான். ஒவ்வொரு பண்ணையும் ஒரு தொழில் அங்கமாகத்தான் (Farm Enterprise- சரியான தமிழ்ப்பதம் அளியுங்களேன்!) பார்க்கப்படுகிறது. சராசரியாக மக்கள் தொகையில் 2% மட்டுமே விவசாயம் சார்ந்த தொழில் பார்க்கிறார்கள். தவிரவும் அவர்கள் மக்கள் தொகை மிகவும் குறைவு. நம் நாடு அப்படியல்ல. வளரும் மக்கள் தொகைக்கு ஏதுவாக நாம் நமது உற்பத்தியைப் பெருக்க வேண்டும். கோதுமையை ஒரு காலத்தில் உற்பத்தி மிகுதியினால் கடலில் கொட்டிய அமெரிக்கா இப்பொழுது உயிர் எரிபொருள் தயாரிக்க மக்காச் சோளம் பயிர் செய்யத் தயாராகி விட்டது. எனவே அமெரிக்காவிலேயே கோதுமை தட்டுப்பாடு நிலைதான். இது மிகவும் ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நாம் செல்வதன் அறிகுறிதான்.

புதிய தொழில்நுட்பங்கள், வீரிய விதைகள், வறட்சி தாங்கி வளரும் ரகங்கள் என மரபு சார்ந்த பயிர் இனப்பெருக்கவியலைத்தாண்டி, தற்பொழுது மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளும் வந்து விட்டன.

பிரான்சு நாட்டில் பாலாடைக்கட்டிகள் தயாரிக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட yeastகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதே ஐரோப்பிய யூனியன் தான் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பயிர்கள் வேண்டாமெனத் தடுப்பதும்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் (Transgenic Plants) அனைத்துமே ஆபத்தானவை அல்ல. ஆனால் அதில் தெளிவு செய்யப் படாத விசயம் எது போன்ற தீங்குகளை அவை விளைவிக்கும் என்பதுதான். சிலர் ஒவ்வாமை வருமென வாதிட்டாலும் வேர்க்கடலை அமெரிக்கர்களில் பெரும்பாலானோர்க்கு ஒவ்வாமையை அளிக்கும் என்பதால் அதை தடை செய்தா விட்டோம். கண்மூடித்தனமாக ஒரு புதிய தொழில் நுட்பத்தை எதிர்ப்பதும் பழைய பசுமைப் புரட்சிக்கு காரணாமானவர்களை குறை கூறுவதுமே ஒரு சில கட்சியைச்சார்ந்தவர்கட்கு இங்கே பிழைப்பு நடத்தத் தேவையாயிருக்கிறது. அதைவிடுத்து ஆரோக்கியமான பார்வையோடு அதில் என்ன நன்மை தீமைகள் இருக்கின்றன என்று ஆராய வேண்டும் என்ற பொறுமை கூட இங்கே கிடையாது. பென்சிலின் போன்ற பூஞ்சானத்தை மருந்தாக நாம் ஏற்றுக்கொள்ளும் தெளிவு ஏற்பட்டது போல இதிலும் ஒரு தீர்வு விரைவில் கிட்டுமென நம்புவோம்.

உடனடியாகத் தீர்க்கக் கூடிய பிரச்சினையல்ல இது. கணிப்பொறியாளர் ஒருவர் உருவாக்கும் ஒரு மென்பொருளுக்கோ, பிணி போக்கும் மருந்துக்கோ, கட்டப் படும் கட்டிடத்திற்கான கூலியோ, சிமெண்ட்டிற்கோ நான் விலை நிர்ணயிக்க முடியுமா? ஆனால் வியர்வை சிந்தி பாடுபட்டு மண்ணைக்கிளறி பொன்னை விளைவிக்கும் விவசாயியின் விளை பொருளுக்கு வியாபாரி விலை நிர்ணயிக்கும் கொடுமைதான் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. பணத்தை தின்ன முடியாது என்று நமக்குப் புரியுமோ அன்றுதான் உழவன் தலைவன் எனக் கொண்டாடப் பட முடியும்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை- தெய்வப்புலவர் பாடியதற்கு விளக்கவுரை போட நாம் காட்டும் அவசியத்தை சற்றேனும் விவசாயத்தை வளர்க்க நிதியுரையிலும் காட்டினால் சரி.

(மிக நீஈஈஈஈண்ண்ண்ட பதிவிற்கு மன்னிக்கவும்!)

சிவா.ஜி
24-06-2008, 04:54 AM
முதலில் உங்களின் கடைசி வரிக்கு என் செல்ல கண்டனங்கள்.

அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் கட்டுரையாக வெளியிடத்தகுதி பெற்ற இந்த பதிவை...சாதாரனமாக ஒரு நீண்ட பதிவு என்று சொன்னதற்கு.

ஆழமான சிந்தனை முகிலன். பிரச்சனையின் ஆணிவேரை புரிந்து கொள்ளாமல் வெறும் கோஷம் எழுப்பும் அரசியல்வாதிகளாகட்டும், சங்கப்பிரதிநிதிகளாகட்டும் சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். விவசாயம் என்பதை வாழ்வாதர தொழிலாக அனைவரும் மதித்து அதற்கு செய்ய வேண்டியதை காலதாமதமில்லாமல் உடனடியாகச் செய்யவேண்டும்.

நீங்கள் சொன்ன அந்த பண்ணை நிறுவனங்கள்(Farm Enterprise) முறை வழக்கத்துக்கு வருமானால், தற்சமயம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள், இரும்புக்கம்பி உற்பத்தியாளர்கள் எல்லாம், அவரவர் உருவாக்கும் பொருளுக்கு அவரவரே விலை நிர்ணயம் செய்வதைப்போல விவசாயியும் செய்ய முடியும். அதற்கான வேலைகளை இப்போதிருந்தே தொடங்கினால்தான்...கூடியசீக்கிரமாவது நல்ல நிலைமை உருவாகும்.

மிக மிக அருமையான இந்த பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி முகிலன்.

இளசு
24-06-2008, 06:03 AM
அன்பு சிவா

முகிலனை மன்றில் கண்டால்
முகில் கண்ட மயில்போல்
நான் அகவுவது ஏன் என விளங்கியதா?

நம் நாட்டை வழிநடத்துவோர் வாசித்து நடக்கவேண்டிய பதிவு முகிலனுடையது...

சிவா.ஜி
24-06-2008, 06:25 AM
உண்மை..உண்மை...இளசு. வழி நடத்துவோரையே வழிநடத்தும் கருத்துக்கள் முகிலனுடையது.

நானும் உங்களோடு இணைந்து முகிலை எதிர்நோக்கும் மயிலாகிவிடுகிறேன்.

பூமகள்
24-06-2008, 06:41 AM
முகிலன் அண்ணாவின் ஒவ்வொரு பதிவுகளுமே ஒரு பாடம் தான்.. சிலரின் பதிவுகள் பதில்கள்.. ஆவணப்படுத்தி பத்திரப்படுத்த வேண்டியவை.. அந்த வரிசையில் இவரின் பெயர் முதன்மைப் பட்டியலில் இருக்கிறது.
பாராட்டுகளும் நன்றிகளும் முகில்ஸ் அண்ணா. :)

முகில் கண்ட மயில்போல் நான் அகவுவது ஏன் என விளங்கியதா?பெரியண்ணா,
நம் இல்லம் அருகில் மயில்கள் விளையாடி அகவும்.. தினமும்.. இனி மயில் அகவுகையில் எல்லாம் உங்கள் நினைவு தான் வரும்..!! ;)

mukilan
24-06-2008, 03:21 PM
நண்பர்களே நான் இந்தப் பாராட்டுக்கும் அன்பிற்கும் கொடுத்து வைத்திருக்கிறேன்.

Keelai Naadaan
01-07-2008, 11:43 AM
நல்ல சிந்திக்க தூண்டும் சிறுகதை.
விவசாய விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்த நேரத்தில் உங்கள் சிறுகதை மனதை கனக்க செய்கிறது.

சிவா.ஜி
01-07-2008, 11:54 AM
நல்ல சிந்திக்க தூண்டும் சிறுகதை.
விவசாய விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்த நேரத்தில் உங்கள் சிறுகதை மனதை கனக்க செய்கிறது.

விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும்....உயிரினத்துக்கே வேட்டு வைக்கும் அபாயகரமான தொழிற்சாலைகளாகவும் மாறி வருவது வேதனைப் பட வேண்டிய ஒன்றுதான். விவசாயத்துக்கு என்று அதன் உண்மையான மரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்கிறதோ அன்று உழவரும்...சிரிப்பார், உலகமும் சிரிக்கும்.

நன்றி கீழைநாடன்.

MURALINITHISH
22-09-2008, 09:23 AM
ஒரு விவசாயியின் குமறல்களை அழகாக விளக்கியது பயிடுபவனே அரிசியை வெளியே வாங்கினால் எங்கே போகிறது கிராமம் வெளிச்சத்தை தேடி அவர்கள் வெளிச்சம் தேடினால் நாம் இருளில் முழ்கி விடுவோம் நல்ல கதை இப்படியே சென்றால் மாத்திரையும் டானிக்கும் நம் உணவாகி போகும்

தாமரை
22-09-2008, 09:52 AM
ரேஷன் கடையில் அரிசி ஸ்டாக் இல்லை என்ற போர்டையும் காட்டியிருந்தால்..

கதையின் கனம் கூடியிருக்குமோ சிவாஜி?

சிவா.ஜி
22-09-2008, 10:26 AM
ஒரு விவசாயியின் குமறல்களை அழகாக விளக்கியது பயிடுபவனே அரிசியை வெளியே வாங்கினால் எங்கே போகிறது கிராமம் வெளிச்சத்தை தேடி அவர்கள் வெளிச்சம் தேடினால் நாம் இருளில் முழ்கி விடுவோம் நல்ல கதை இப்படியே சென்றால் மாத்திரையும் டானிக்கும் நம் உணவாகி போகும்

ரொம்ப சரி முரளி. நாளைய உலகில் உணவுதாணியம் வைத்திருப்பவர்கள்தான் மிகப்பெரும் பணக்காரர்கள் என்ற நிலை வரப்போகிறது. அப்படி பணக்காரர்களாக நிறைய சந்தர்ப்பமிருந்தும்...இப்படி விவசாயத்தை அலட்சியம் செய்வதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.

நல்லதொரு பின்னூட்டக்கருத்துக்கு மிக்க நன்றி முரளிநிதிஷ்.

சிவா.ஜி
22-09-2008, 10:28 AM
ரேஷன் கடையில் அரிசி ஸ்டாக் இல்லை என்ற போர்டையும் காட்டியிருந்தால்..

கதையின் கனம் கூடியிருக்குமோ சிவாஜி?

நிச்சயம் கூடியிருக்கும். நான் இதைப்பற்றி சிந்திக்கவேயில்லை. வெங்கட்ராமன் பட்ட கஷ்டங்களே போதுமென்று நினைத்துவிட்டேனோ என்னவோ. நன்றி தாமரை.

இராஜேஷ்
22-09-2008, 10:48 AM
இன்றைய சுழலில் ஒரு விவசாயி என்னன்ன கஷ்டங்களை எதிர் கொண்டு நமக்கு உணவளிக்கின்றான் என்பதை படம் பிடித்துக் காட்டியது. இந்த அரசியல்வாதிகளால் இலவசம்,இலவசம் என்ற புற்று நோயால் மக்கள் தங்கள் சுய மரியாதையை அடகு வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் உண்னும் உணவில் விவசாயிகளின் வியர்வை மட்டுமல்ல, அவர்களுடைய கண்ணிரும் உள்ளன.

விவசாயிகள் என்ற இனத்தை பற்றி நம் பிள்ளைகள் வரலாற்று புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அரசியல்வாதிகளுக்கு ஒர் வேண்டுகோள்!!!!!!!1

1. விவசாயிகளுக்கு மானியம் தேவையில்லை, விளை பொருட்களை விற்க மார்கேட் தேவை.

2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தேவையில்லை, தடையின்றி மின்சாரம் தேவை.

3. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வேண்டாம், குறைந்தவட்டியில் தடையில்லா கடன் தேவை.

4. சேமிப்பு கிடங்கு, நவீன விளை கருவிகள், தரமான விதைகள், நவீன சாகுபடி முறைகள் இவைகளை தந்தாலே போதுமானது. அவர்கள் தடையின்றி விளைவிப்பார்கள்.