PDA

View Full Version : ஒரு கவிதையைத்தேடி



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-06-2008, 05:59 AM
நடுநிசிவரை உறக்கமின்றி
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்
சிந்தனைகள் தீர்ந்தபாடில்லை
அதிகாலை அடைந்தபின்
இரவுச்சிந்தனைகளின் மிச்சம்
மீண்டுமொரு முறை மையம் கொள்கிறது

காலைக்கடன்
காக்கைக்குளியல்
அம்மா சுட்ட தோசை
அலுவலகப்பணி
இவைகளுக்கெல்லாம்
நியாயமாய் ஒதுங்கிக்கொண்டு
சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம்
விக்கிரமாதித்தனின் வேதாளமாய்
சரீரத்திற்குள் உட்புகுந்துகொள்கிறது
தோழனின் புன்னகைக்கு புன்னகைத்து
மாலைத்தேநீர் அருந்தி
முகவரி தேடி அலைந்த ஒருவருக்கு
விலாசம் காட்டி
இப்படி அனிச்சையாய் செயல்கள்
நடந்தேறினாலும்
கவனம் மட்டும்
இரவுச்சிந்தனையில்தான்
குத்திட்டு நிற்கிறது
இரவு வந்தால் உறங்கியாகவேண்டும்
என்ற மானுடவிதிக்காய்
கட்டிலில் சாய்ந்து
நடுநிசிவரை உறக்கமின்றி
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்………..

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

kavitha
19-06-2008, 06:14 AM
இயல்பான ஒரு சுயத்தேடல் கவிதை ஹஸனி. பாராட்டுகள்.



மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்
சிந்தனைகள் தீர்ந்தபாடில்லை

மனமடங்கும் கருவி கண்டவர் சொன்னதில்லை. சொன்னவர், அதன்படி கேட்டதில்லை. கேட்டவர்கள் அதன்படி நடந்ததில்லை.


"தியானம் செய்....
எல்லாம் கட்டுக்குள் வரும்" என்றனர்.
எப்படி செய்ய?
கண்ணை மூடு.
வெறுமையை நினை.
புருவங்களின் கிடுக்கில் நிலைப்படுத்து.
அரை நிமிடம்.... கூட இல்லை.
அது அடங்கவில்லை
எங்கோ பறக்கிறது

எங்கோ போகிறாயே...
எங்கே என
நானும் பின் தொடர்ந்தேன்
நேற்றைய காயங்கள்
நாளைய கனவுகள்
எச்சங்களும் மிச்சங்களும்
காணச் சகிக்கவில்லை...
தூர எறிந்து
அட.... இன்றைக்கு என்ன கிழித்தேன்?
எடுத்தமர்ந்தேன் நாட்குறிப்பை
நீ ஓடிய பாதையை விட்டு
ஓட வேண்டிய பாதை
தெளிவடைந்து வந்தமர்ந்தது
அப்பாடா...
இன்று நிம்மதியான உறக்கம்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-06-2008, 06:39 AM
நேற்றைய காயங்கள்
நாளைய கனவுகள்
எச்சங்களும் மிச்சங்களும்
காணச் சகிக்கவில்லை...

என்ன பண்றது கவிதா. சகிக்கவில்லைதான். நேற்றைய லட்சோப லட்ச நினைவுகளும் நாளைய எண்ணிலடங்கா கனவுகளும் ஒவ்வொருத்தனின் நிகழ்காலத்தை கருக்கிக்கொண்டுதான் இருக்கிறது. யோசித்து பிரயோஜனமில்லையென்றறிந்தும் சொந்த செலவில் சு10னியம் வைத்துக்கொள்ளும் அந்த வேலையை எவரும் விடுவதாக இல்லை. தக்க தருணத்தில் தரமான கருத்தை தந்தது தன்னிறைவைத்தருகிறது. நன்றி கவிதா அவர்களே.