PDA

View Full Version : கௌஸ்துபம்



அகத்தியன்
18-06-2008, 07:11 PM
ஆனந்த விகடனில் சாரு ஆன்லைன் இணைய தளம் பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது. விகடன் நிறுவனத்தினருக்கு நன்றி. முதல் முதலாக இந்தக் கோணல் பக்கங்களை விகடனில்தான் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். விகடனில் இணைய தளம் அறிமுகமான பிறகு பல புதிய வாசகர்கள் எனது எழுத்துக்களைப் படிக்க ஏதுவாகியுள்ளது. ஆனால் என்னுடைய நண்பர்கள் யாருமே இது பற்றி எனக்குத் தெரிவிக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது. நானேதான் போன் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுப்பாகி விட்டு விட்டேன். விகடனில் வந்துள்ளது பற்றி மற்றவர்கள் எனக்குச் சொல்ல வேண்டும். என் விஷயத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கிறது. தங்கவேல் கூட எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார். ஒன்னேகால் லட்சம் ஹிட்ஸ் கொண்ட இந்த இணைய தளத்தின் ஒரு வாசகர் கூட இவ்விஷயத்தை - என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் - தங்கவேலிடம் கூடப் பகிர்ந்து கொள்ளாதது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒரு வேளை 75 லட்சம் பேரை வாசகர்களாகக் கொண்ட ஒரு பத்திரிகையில் இந்த இணைய தளம் பற்றிய அறிமுகம் வருவது பொருட்படுத்தக் கூடிய விஷயம் அல்ல என்று நினைத்து விட்டார்களோ என்னவோ ? தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரை எது நடந்தாலும் அது கிணற்றில் போட்ட கல் மாதிரிதான் ஆகி விடுகிறது.
***
கேள்வி: உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று நினைக்கிறேன். பங்குச் சந்தைக்கான ஆலோசனை தொடர்பான என்னுடைய வலைத்தளத்துக்கு ஏற்ற பெயர் தெரிந்தால் சொல்லவும். பங்குச் சந்தை தொடர்பான வார்த்தையாக இருந்தால் நல்லது.(ஆர்.சீனிவாசன்,மும்பை)
பதில்: இம்மாதிரி கேள்விகளுக்குக் கட்டணம் வாங்காமல் சொல்ல இயலாது. எனவே முதலில் மேற்கண்ட வங்கிக் கணக்குக்கு ரூ. 1000/- ஐ அனுப்பி விடுங்கள். இதோ பதில்:
காஞ்சனா (தங்கம்)
அர்த்தா (பணம் , மதிப்பு , அர்த்தம்)
கஜானா
ஆமாத்ய (ஆலோசகன்)
தனா
ஆத்யா (செல்வந்தன்)
கௌஸ்துபம் விஷ்ணு தனது மார்பில் அணிந்திருக்கும் ஆபரணம்.
இவற்றில் என்னுடைய தேர்வு , கௌஸ்துபம்.
***
கௌஸ்துபம் பற்றிய கதை:
ஒரு காலத்தில் அசுரர்களும் , தேவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இரண்டு பக்கமும் நிறைய இழப்புகள். பிரளயம் வந்து பூமியைச் சூழ்ந்தது. சாகாவரம் தரக் கூடிய அமிர்தமும் பிரளயத்தில் அழிந்தது. தேவர்கள் பிரும்மாவிடம் சென்று , பாற்கடலைக் கடைந்து அந்த அமிர்தத்தை எடுத்துத் தரும்படி முறையிட்டனர். இத்தனை பெரிய பிரம்மாண்டமான பாற்கடலை எப்படிக் கடைவது ? தேவர்களோ எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். எனவே இந்திரன் அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் ; அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு கொடுத்து விடலாம் என்றான். அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். மந்தார மலையைப் பிய்த்தெடுத்து அதை மத்தாகக் கொண்டு , சர்ப்பங்களின் ராஜாவான ஆயிரம் தலை கொண்ட வாசுகியைக் கயிறாகக் கொண்டு அசுரர்களும் , தேவர்களும் வாசுகியின் தலையையும் வாலையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது மந்தார மலை கடலில் மூழ்கப் பார்க்கிறது. தேவர்கள் இதை விஷ்ணுவிடம் சென்று முறையிட விஷ்ணு கூர்ம (ஆமை) வடிவம் கொண்டு கடலினுள்ளே சென்று மந்தார மலையைத் தன் முதுகிலே சுமந்தார். அசுரர்களின் அரசன் மஹாபலி. இவன் ஒரு தீவிர விஷ்ணு பக்தன். இப்படி ஆயிரம் ஆண்டுகள் கடைந்த பிறகு கடலிலே காலஹால விஷம் தோன்றுகிறது. அது
தேவர் , அசுரர் உட்பட எல்லாவற்றையும் அழித்து விடும் சக்தி கொண்டது ஆகையால் பிரும்மாவும் , விஷ்ணுவும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த விஷத்தைக் குடிக்கிறார். அப்போது அந்த விஷத்தால் சிவனுக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்று பார்வதி அவருடைய கழுத்தைப் பிடிக்க , விஷம் தொண்டையோடு நின்று விடுகிறது. இதனாலேயே சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் கடைந்த போது மேலும் பல விஷயங்கள் தோன்றுகின்றன.
காமதேனு - கேட்ட வரத்தைத் தரும் பசு. வசிஷ்ட முனிவருக்கு அளிக்கப் பட்ட பசு.
குதிரைகளின் ரத்னம் (ஹய ரத்னம்) எனப்படும் உச்சீஸ்ரவம்.
கல்பதாரு.
அப்ஸரஸ்கள்.
ஐராவதம் என்ற வெள்ளை யானை. இதுவே பின்னர் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு வாகனம் ஆனது.
இவர்களை தேவர்களிடம் அளித்த விஷ்ணு , அடுத்து வந்த கௌஸ்துபம் என்ற ரத்ன மாலையைத் தனது மார்பிலே அணிந்து கொண்டார்.
அடுத்து வந்தது மஹாலக்ஷ்மி. செல்வத்தின் கடவுளான இவள் விஷ்ணுவையே மணந்து கொண்டாள்.
அடுத்து வாருணி தேவி. மதுவின் தேவதை. இவளை அசுரர்களிடம் அவர்களின் கவனத்தைச் சிதறடிப்பதற்காக அளித்தார் விஷ்ணு.
கடைசியில் வந்தார் அமிர்த கலசத்தோடு தன்வந்தரி. அமிர்தம் தங்களுக்குக் கிடைக்காமல் போக ஏதோ சதி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அசுரர்கள் தேவர்களோடு சண்டையைத் துவங்க , விஷ்ணு அவர்களை மயக்க மோகினி ரூபம் கொண்டார். அமிர்தத்தை இரண்டு பிரிவினருக்கும் சமமாகப் பகிர்ந்து தருவதாகக் கூறினார். மோகினியில் அழகில் மயங்கி அதற்கு ஒப்புக் கொண்டனர் அசுரர்கள். ஆனால் , எல்லா தேவர்களுக்கும் கொடுத்து முடிப்பதற்கும் கலயத்திலிருந்த அமிர்தம் தீர்ந்து போவதற்கும் சரியாக இருந்தது.
இதற்கிடையில் தன்னை தேவர்களாக மாற்றிக் கொண்ட அசுரர்களான ராகுவும் , கேதுவும் அமிர்தத்தை வாங்கிக் குடித்து விடுகின்றனர். சூரியனும் , சந்திரனும் இதைப் பார்த்து விட்டு விஷ்ணுவிடம் சொல்லி விட , விஷ்ணு தனது சுதர்ஸன சக்கரத்தைக் கொண்டு அமிர்தம் அவர்களின் தொண்டையைத் தாண்டி கீழே செல்வதற்குள் அவர்களின் தலையைத் சீவி விடுகிறார். அதனால் அந்த இருவரின் தலை மட்டும் சாகாவரம் பெற்று விடுகிறது. இப்படித் தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டதால் ராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களோடு தீராப் பகை கொள்கின்றனர்.
தங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போனதால் தேவர்களோடு மீண்டும் சண்டையிடுகிறார்கள் அசுரர்கள். ஆனால் தேவர்கள் அனைவரும் அமிர்தத்தை உட்கொண்டிருப்பதால் அசுரர்களை வீழ்த்தி விடுகின்றனர்.
இப்படியாக முடிகிறது விஷ்ணுவின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரம். இது பற்றி மகாபாரதம் , ராமாயணம் , அக்னி புராணம் , கூர்ம புராணம் , விஷ்ணு புராணம் , பத்ம புராணம் , பாகவதம் போன்றவற்றில் விரிவாக சொல்லப் படுகிறது.

சாருஒன்லைன்.கொம்

இளசு
18-06-2008, 10:47 PM
இந்த புராணக்கதை பல காரணங்களால் அடிக்கடி என்னால்
நினைக்கப்படும் ஒன்று!

எத்தனை பேர் கூடி ஒரு பொதுக்காரியத்தில் இறங்கினாலும்
அங்கே பாதகத்தை ஏற்க ஒரு பரிவு மனம் இருக்கும்..
விடமுண்ட சிவன் மனம் போல்!

இருவர் முனைந்த ஒரு கூட்டுச் செயல்
ஒருவருக்கு வைரமாலை, செல்வமனைவி!
இன்னொருவருக்கு விஷம்!

------------------------------------------

பகிர்ந்தமைக்கு நன்றி அகத்தியன்!