PDA

View Full Version : தெருநாய்...........



Nanban
18-07-2003, 08:55 PM
நான் விரும்பியவன் அல்ல நீ
என்றாலும்
உன்னைப் பிடித்தது எனக்கு -
நீ என்னைப் பிடித்தது
என்று சொன்னதால்.

பதிவாளர் அலுவலகத்தில்
காக்க வைத்தவன் வராத பொழுது
வீட்டிற்கே வந்தவன் நீயென்பதால்
உன்னை எனக்குப் பிடித்தது.

ஏமாற்றத்தில் இருந்த என்னை
ஊர் தூற்றிய பொழுதும்,
என்னை விரும்பிய உன்னை
இளிச்சவாயனாகப் பார்த்து
ஊரார் சிரித்த பொழுதும்
உன் மௌனம்
எனக்குக் காதலைக் காட்டியது.

முதலிரவுக் கட்டிலில் விரித்த
வெள்ளைத் துணியை மடிக்க
நாங்கள் தான் வருவோம்
என்ற மூத்த நாத்தனாரின்
மனதை ரசித்தேன் நான் -
என்னைப் பரிசோதிக்கிறாள்!

இத்தனைக் காதலையும்
உனக்குத் தர விரும்பியே
உன்னை முத்தமிட்டேன்
ராஜகுமாரனாய் நினைத்து....

போகம் முடித்து ஓய்ந்த ந்
புகையை ஊதிக் கொண்டே
என் காதில் கிசுசிசுப்பாய்
நான் தேவலையா அவனுக்கு
என்ற பொழுது உணர்ந்தேன் -
நீ ராஜகுமாரன் அல்ல,
எச்சில் இலைக்குக் காத்திருந்த
தெருநாய் என்பதை.

Tamil_Selvi
18-07-2003, 09:09 PM
இனிமை Nanban :P

- Tamil Selvi

rambal
19-07-2003, 05:19 AM
முகத்தில் அடிக்கும் கவிதை..
முக்கால்வாசி ஆண்களின் மேல் சாவனிஸ்ட் போக்கை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்..
பாராட்டுக்கள்..

anbu
19-07-2003, 05:43 AM
சபாஷ் ! நண்பனே பெண்களை எச்சில் இலையாக நினைக்கும்
ஆண்களுக்கு சரியான சவுக்கடி உங்கள் கவிதை ! பாராட்டுக்கள்.

இளசு
19-07-2003, 06:27 AM
கவிதை..
கவிதைக்குள் கதை..
கதை சொல்வது...
ஆண்களின் ஆழ்மனப்பிழை...

அறிஞர் -கவிஞர் நண்பனுக்கு
பிரமிப்புடன் பாராட்டுகள்!

Nanban
19-07-2003, 06:42 AM
நண்பன் என்ற பட்டப் பெயரே நன்றாக இருக்கும் பொழுது, அறிஞன், கவிஞன் என்பதெல்லாம் - சற்று ஓவர் தான். என்றாலும், இளசுவைப் போல எல்லோரையும், மனம் திறந்து, உளப்பூர்வமாக பாராட்டும் குணத்தை எனக்கும் தருவாயாக என்று தான் இறைவனை இரைஞ்சுகிறேன் - அந்த குணம் ஒரு வரப்பிரசாதம்.

மிக்க நன்றிகள் இளசுவிற்கு.......

இளசு
19-07-2003, 06:56 AM
நண்பன் என்ற பட்டப் பெயரே நன்றாக இருக்கும் பொழுது, அறிஞன், கவிஞன் என்பதெல்லாம் - சற்று ஓவர் தான்.
.......

புதுசாய் வருபவர்களை வரவேற்க, ஊக்க
அதீத உற்சாக வார்த்தைகள் வருவது இயல்பே..

உங்களைப் போன்ற வைரம் பாய்ந்த மரத்துக்கு
பதில் எழுத வந்தால்
பொருத்தமான, ஏன் கொஞ்சம் அடக்கமான
வார்த்தைகளே வரும் எனக்கு!

என் கருத்து ஓவரல்ல... அண்டரே! :wink:

இன்னொரு தன்னிலை விளக்கம்...

என் கருத்து பதியாத படைப்புகள்...
நான் மதிக்காதவை - படிக்காதவை அல்ல!
என் "மண்டைக்கு" விளங்காதவை. :lol:
இன்னும் வளருவேன் என்ற நம்பிக்கை மட்டும்
இன்னும் குறையவே இல்லை!! :D

kavitha
21-01-2004, 05:11 AM
விவரிக்க முடியவில்லை பாராட்டுகளை வார்த்தைகளினால்..
அதிலும் ஒரு ஆண் பெண்மையை இழிவுப்படுத்தவதை சாட்டையடியாய்
விமரிசித்திருப்பது.... அதீதம்!

natchatran
21-01-2004, 05:44 AM
அன்பு நண்பா,
உங்களுக்கு மிக இயல்பான கவிதாமொழி சாத்தியமாகியிருக்கிறது...இப்படிப்பட்ட அருவிபோன்ற நடை உங்களை மிகுந்த உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.ஆனால், கவிதையின் பொருள்-சப்ஜெக்ட்- ஒரு கதையாக உள்ளது. இதே நடையைக்கொண்டு உங்கள் அக உணர்வுகளை கவிதையாக்கப் பாருங்கள்...தெருநாயை ஒரு சிறுகதையாக்கிக்கொடுங்கள்.சரியா நண்பா...(நீங்களோ இதர நண்பர்களோ என் விமர்சனங்களை ஒரு பெரிய ஆளின் விமர்சனமாக எடுத்துக்கொள்ள
வேண்டாம்...எனக்குத் தோணுவதை மட்டுமே நான் சும்மா சொல்லிவைக்கிறேன்,உங்களுக்கு அது உதவக்கூடும் என்ற நம்பிக்கையில்)

kavitha
23-01-2004, 06:49 AM
நட்சத்திரன் அவர்களே,
இந்த கவிதையையே 'தண்டனை' எனும் தலைப்பில் சிறுகதையாக எழுதி இருக்கிறார்.


இதில் தெருநாய் என்பது தான் தண்டனை என்ற உரைனடைக் கதையாய் பின்னர் உருவாகியது...... http://www.tamilmantram.com/board/viewtopi...6e5b9f1d3fa4eaa

தேடி படித்துப்பாருங்கள்..

சிறு துரும்பும் பல் குத்த உதவும்... சரியான விமர்சனங்கள் தான் ஒரு கலைஞனின் நிஜ வெகுமதி.... எனவே தயவுசெய்து விமர்சிப்பதை நிறுத்தாதீர்கள்.

Nanban
01-02-2004, 10:17 AM
ஆனால், கவிதையின் பொருள்-சப்ஜெக்ட்- ஒரு கதையாக உள்ளது. இதே நடையைக்கொண்டு உங்கள் அக உணர்வுகளை கவிதையாக்கப் பாருங்கள்...தெருநாயை ஒரு சிறுகதையாக்கிக்கொடுங்கள்.சரியா நண்பா...(நீங்களோ இதர நண்பர்களோ என் விமர்சனங்களை ஒரு பெரிய ஆளின் விமர்சனமாக எடுத்துக்கொள்ள
வேண்டாம்...எனக்குத் தோணுவதை மட்டுமே நான் சும்மா சொல்லிவைக்கிறேன்,உங்களுக்கு அது உதவக்கூடும் என்ற நம்பிக்கையில்)

மிக்க நன்றி நட்சத்திரன் அவர்களே...

இதை நானும் உண்ர்ந்து தான் இருக்கிறேன் - அந்த நடைமுறையை நான் மாற்றிக் கொண்டும் இருக்கிறேன்... இப்பொழுது கவிதையினுள் கதையைத் திணிப்பதில்லை.

அப்படிப்பட்ட கவிதைகளைப் படித்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்... (இந்த மாற்றம் நிழற்பட பார்வை எழுதியதற்குப் பின் ஏற்பட்டது.....)

Nanban
06-03-2004, 06:27 PM
சமீபத்தில் ஒரு இதழில் படித்தது - புதுக் கவிதைகள் வெறும் குறுங்கவிதைகளாக முடங்கிக் கிடக்கிறது - அது நெடுங்கதைகள் பக்கமும் திரும்ப வேண்டும் - காவியங்களாக பரிணமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.....

ஆக, கவிதையினுள் கதை வைப்பதை யாரும் வெறுக்கவில்லை. ஆனால் அது வீச்சு மிக்கதாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் தேவை....

அன்புடன்....

poo
07-03-2004, 05:17 AM
உங்களை காண்பதில் மகிழ்ச்சி நண்பரே..

அனைவரும் நலம்தானே?!!

மிக நல்ல கருத்து சொன்னீர்கள்.. புதுக்கவிதை என்றாலே சிக்கனம் என்ற நிலைப்பாடுதான் இப்போதெல்லாம்..

அசன் பசர்
07-03-2004, 04:26 PM
என்ன ஒரு வீச்சு கவிதையில்
உறுதியாக
அறுத்துத்தள்ளியிருக்கும்
அப்படிபட்ட ஆண்களை
வாழ்த்துக்கள் நண்பரே